Wednesday, May 29, 2013

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம்

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம் 



நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

இனிமையான சொல் என்ன செய்யும் தெரியுமா ?

நாம் ஒருவருக்கு ஒரு  சொல்லை சொல்கிறோம் என்றால் அது அவர்களுக்கு நல்ல பயனைத் தரவேண்டும். பயன் தருகிறது என்று பண்பில்லாத சொற்களை பேசக் கூடாது...."எருமை, நீ படிகாட்டா நாசமாத்தான் போவ ..." என்பது பயன் தரும் பேச்சாக இருக்கலாம் ஆனால் பண்பில்லாத பேச்சு.

பண்புடனும் இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி பேசினால், நமக்கு என்ன கிடைக்கும் ?

அப்படி பேசுபவர்களுக்கு நல்லதும், அப்படி உங்கள் பேச்சை கேட்டவர்களின் நன்றியும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே, இனிய சொல் தருபவருக்கும் பெறுபவருக்கும் நல்லது செய்யும்.

இன்னும் கொஞ்சம் விரித்து பொருள் பார்க்காலாம்.

இனிய சொற்களை கூறுவோருக்கு இரண்டு பலன் என்று பார்த்தோம்

நயன் ஈன்று நன்றி பயக்கும்.

நயன் என்றால் இலாபத்துக்கு உரியவன் (benefactor ) என்று பொருள். அவனுக்கு நன்மை கிடைக்கும். நன்மை என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் கிடக்கும் நன்மை என்று சொல்லுவார் பரிமேல் அழகர்.

நன்றி பயக்கும் = நன்றி என்றால் என்ன என்று தெரியும். அது என்ன பயத்தல் ? பயத்தல் என்றால் விளைதல், உருவாதல். விதை விதைத்தால் கனி கிடைக்கும் அல்லவா அதற்கு பயத்தல் என்று பொருள்.   ( பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று என்பது கம்ப இராமாயணம். நம்மை பெற்று, காப்பாற்றி வளர்த்தாள் (கைகேயி) அவள் பிழை அன்று.  )

இனிய சொல்லை சொன்னவர்களுக்கு நன்மையையும் (இம்மைக்கும் மறுமைக்கும்), சொல் கேட்டவர்களின் நன்றியும் கிடைக்கும்.

 எந்த மாதிரி சொல் தெரியுமா இதைத் தரும் ?

கேட்பவர்களுக்கு பயன் தரவேண்டும் - பொருள் பயன் என்பது பொதுவாகச் சொல்லப் பட்டாலும், வேறு எந்த விதத்திலாவது பயன் தர வேண்டும். (பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் என்பார் வள்ளுவர் )

பயன் தரும் சொல்லும் பண்போடு பிரியாமல் இருக்க வேண்டும். இந்த பண்பும் பயனும் பிரியாமல் இருக்க வேண்டும்.

அது என்ன பிரியாமல் ?

"நல்ல படிடா....இல்லைனா நாசமாத்தான் போவ " இதில் முதல் பகுதி பயன் தருவது. பண்பு உள்ளது. இரண்டாவது பகுதி பண்பு இல்லாதது, முதலாவதோடு  சேர்ந்து படிக்கும் போது பயன் தரலாம். அது சரி இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஒவ்வவொரு சொல்லும் பயனும், பண்பும் உள்ளதாய் இருக்க வேண்டும்.

பண்பில்லாத சொற்களை சொல்லி அதன் மூலம் பயன் வந்தால் கூட, பயன் பெற்றவர்கள் அதை  பெரிதாக நினைக்க மாட்டார்கள். "என்னை எப்ப பாரு கரிச்சு கொட்டி கொண்டே இருந்தான் " என்று பண்பில்லாத சொற்கள் தான் ஞாபகம் இருக்கும். பயன் உள்ள சொற்கள் மறந்து போகும்.

எனவே எப்போது சொன்னாலும்,பயனையும் பண்பையும் சேர்த்து சொல்லுங்கள்

பாடல்


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்


இரணியன் வதம் - நரசிங்கம் தோன்றுதல்

இரணியன் வதம்  - நரசிங்கம் தோன்றுதல் 


சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....

இந்த தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என்று கேட்டான் இரணியன்.

ஆம், இந்த தூணில் மட்டும் அல்ல, சாணிலும், அணுவை சத கூறிட்ட கோணிலும், நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று  கூறினான் பிரகலாதன்

ஆஹா அப்படியா சங்கதி, அதையும் பார்க்காலாம் என்று தன் பெரிய கைகளால் அந்த தூணை ஓங்கி அறைந்தான் இரணியன்.

தூண் வெடித்து சிதறியது. திசைகளை கிழித்துக் கொண்டு, இந்த அண்டமே அதிரும்படி சிரித்துக் கொண்டு வெளி வந்தது சிவந்த கண்களை கொண்ட ஒரு சிங்கம்

சற்றே இந்த பாடலை உரத்துப் படித்துப் பாருங்கள்...மெய் சிலிர்க்கும்.....குறிப்பாக அந்த கடைசி வரி....


பாடல்


நசை  திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று !" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங் கண் சீயம்.

பொருள் 

Tuesday, May 28, 2013

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன்

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன் 


நட்பு என்பது மிக உயர்ந்த உறவு.

நம் குற்றங்கள் எல்லாம் தெரிந்தும் நம்  அன்பு செலுத்துபவன் நண்பன் / நண்பி.

இறைவனும் அப்படித்தானே ? நம் குறைகள் எல்லாம் தெரிந்தும் நம் மேல் அன்பு செலுத்துபவன் அவன்.

இறைவனை தோழா என்று உரிமையோடு அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

பாடல்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  



பொருள்


இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள்

இரணியன் வதம் - இறைவன் இருக்கும் இடங்கள் 



இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களை கொண்டது இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள்.

உங்கள் வாழ்வில் கொஞ்ச நேரம்தான் படிக்க கிடைக்கும் என்றால் முதலில் இரணிய வதை படலத்தை படித்துவிடுங்கள். மற்றவற்றை அப்புறம் படிக்கலாம்.

இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று

கம்பன் ஏதோ அருள் வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன் என்று பிரகலதான் வாயிலாக சொல்கிறான்.

பிரகலாதன் : ஒரு சாண் அளவிலும் இருக்கிறான். அணுவை நூறாக பிளந்தால் அந்த தூளிலும் அவன் குணம் இருக்கும். மேரு மலையிலும் அவன் இருக்கிறான். இந்த தூணிலும் இருக்கிறான். நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான். நீ இதை விரைவில் காண்பாய்.

பாடல்

' "சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் சொன்னான்.


பொருள் 

Monday, May 27, 2013

இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை


இரணியன் வதம் - கற்கும் கல்வியின் பிரை 


இரணியன் வதை படலம் படிக்கும் போது , எதை  சொல்வது, எதை விடுவது என்றே புரியவில்லை. அத்தனையும் அருமையான பாடல்கள். கம்பனின் கவித்திறம் முழு  வீச்சில் வெளிப்பட்டு நிற்பது இங்குதான் என்று சொல்லத்  தோன்றுகிறது.

வேகமாக முன் சென்று இந்த பாடலை தருகிறேன்.

இரணியன் கேட்கிறான், "நீ சொன்ன அந்த நாராயணா என்ற நாமத்தில் அப்படி என்ன மகிமை " என்று.

பிரகலாதன் சொல்லுகிறான்...அவன் சொல்லும் அத்தனை பாடல்களும் அருமையிலும் அருமை ... எல்லாவற்றையும் எழுத எனக்கு ஆசைதான் .... படிக்க உங்களுக்கு ?

பிரகலாதன் சொல்லுகிறான்...நான் உனக்கு உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. நாராயணா என்ற நாமம் வேதங்களுக்கும் வேள்விகளுக்கும் எல்லை போன்றது, எல்லோரும் கற்கும் பால் என்ற கல்விக்கு பிரை போன்றது என்கிறான்.

கல்வி என்பது பால் போன்றது. கெட்டிப் படாதது. சலனம் உள்ளது. கல்வியோடு இறை உணர்வு சேரும்போது அந்த கல்வி உரை விடப்பட்ட பால் போல கட்டிப் படுகிறது. சலனம் போய் விடுகிறது.

கெட்டிப்பட்ட அறிவை சித்தம் என்பார்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

பாடல்

' "உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,- 
விரை உள அலங்கலாய் ! - வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்:

பொருள் 

திருக்குறள் - இன்சொல் கூறல்


திருக்குறள் - இன்சொல் கூறல் 


மனதிற்கு உவகையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய சொற்களை கூறுவது. விருந்தோம்பலில், இனிய சொற்கள் கூறுவது இன்றியமையாதது. எனவே, இன்சொல் கூறல் என்ற இந்த அதிகாரத்தை விருந்தோம்பல் என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இன் சொல் என்றால் என்ன ? சிரிக்க சிரிக்க பேசுவதா ? ஜோக் அடித்துக்கொண்டே இருப்பதா ? ஒருவரை புகழ்வதா ?

இன் சொல் என்பதற்கு மூன்று முக்கிய விதிகளை கூறுகிறார் வள்ளுவர்:

முதலாவது - அது அன்பு கலந்து இருக்க வேண்டும். வள்ளுவர் ஈரமான சொற்கள் என்கிறார். அன்பு, கருணை, வாஞ்சை இப்படி அத்தனையும் சேர்த்துக் கொள்ளலாம். கேட்பவர்கள் மனம் குளிர வேண்டும். அது ஈரமான சொற்கள்.

இரண்டாவது, உண்மையாக இருக்கவேண்டும். மனம் குளிர வேண்டும் என்பதற்காக இல்லாதையும் பொல்லாததையும் எடுத்து விடக் கூடாது. உண்மை அறிந்து பேச வேண்டும்.

மூன்றாவது, செம்மையான பொருள்களை பேச வேண்டும். செம்மையான பொருள்கள் என்றால் என்ன என்று பரிமேலழகரை கேட்டால் அறம் என்பார். அதுக்காக எப்ப பார்த்தாலும் அறம் பற்றியே பேசிக் கொண்டு இருக்க முடியுமா ? சிறப்பானவை, நன்மை பயப்பவை, உபயோகமானவை என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்றும் இணைந்தது இனிய சொல்.

இதைத்தான் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள்


இரணியன் வதம் - இரணியன் சிறப்பு

இரணியன் வதம்  - இரணியன் சிறப்பு 


இரணியன் எப்பேர்ப்பட்டவன் என்று சொல்ல வேண்டும். கம்பன் கவி விளையாடுகிறது. நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கம்பனின் கற்பனை விரிகிறது.

ஒருவன் மிக பல சாலி என்று சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவீர்கள் ? யோசித்து பாருங்கள் ? நீங்கள் எவ்வளவு தான் அதீதமாக யோசித்தாலும், கம்பன் உங்கள் கற்பனையை பூ என்று ஊதி தள்ளி விடுவான்.


ஒரே ஒரு பாடலை மாதிரிக்கு தருகிறேன்.

திசைகளை காக்கும் யானைகளில் இரண்டை தன் இரண்டு கைகளால் எடுத்து ஒன்றோடொன்று மோதுவான். ஆழம் காண முடியாத ஏழு கடல்களும் அவன் கணுக்கால் அளவு தான் இருக்கும். ஏதோ தரையில் நடந்து போவதைப் போல இந்த கடல்களின் நடுவில் நடந்து போவான்.

பாடல்

'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக் கைப்
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும்.

பொருள்