Tuesday, June 11, 2013

திருக்குறள் - இரக்கப்படுவது தவறு

திருக்குறள் -  இரக்கப்படுவது தவறு


என்னது ? இரக்கப் படுவது தவறா ?

இது என்ன புதுக் கதை என்று நீங்கள் வியக்கலாம்.

வள்ளுவர் அப்படிதான் சொல்லுகிறார்.

இரக்கப் படுவது தவறுதான், எது வரை என்றால் நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவன் முகம் மகிழ்ச்சியாகும் வரை.

உங்களிடம் ஒருவன் பசி என்று வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஒரு நாலு இட்டிலி கொடுத்தால் பசி தீரும் என்று கொள்வோம்.

ஐயோ, பாவம்...ரொம்ப பசியா இருக்கியா ..இந்தா 10 பைசா என்று அவனிடம் இரக்கப் பட்டு தருவது தவறு என்கிறார்.

அவன் முகம் இன்முகமாக வேண்டும் ... அதுவரை இரக்கப் படுங்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் இரக்கம் துன்பம் தருவது என்கிறார்.

இன்னா என்றால் இன்பம் அல்லாதது. அதாவது துன்பம் தருவது.

உங்களிடம் பசி என்று வந்தவனுக்கு பத்து பைசா கொடுத்துவிட்டு அவன் முகத்தை பாருங்கள். முதலில் பசி மட்டும் இருந்தது. இப்போதும் ஏமாற்றமும்இருக்கும். அது மட்டும் அல்ல, உங்கள் மேல் வெறுப்பும் , இந்த உலகின் மேல் சலிப்பும், படைத்தவன் மேல் ஒரு கோபமும் உண்டாகும்.

அவன் பசிக்கு உணவளித்துப் பாருங்கள். உங்களை வாழ்த்துவான். மனம் நிறையும்.

ஒண்ணும் இல்லாததற்கு பத்து பைசா நல்லது தானே என்று வாதம் புரியலாம். நல்லதுதான். வள்ளுவர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த இரக்கம் நன்மை பயக்காது என்கிறார்.

யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மனம் மகிழும்படி உதவி செய்யுங்கள்.

வலியும் , ஏமாற்றமும், பயமும் கொண்ட அவர்கள் முகம் இன்முகமாக மாற வேண்டும். அதுவரை, உங்கள் இரக்கம் இன்னாததுதான்

ஒருவன் கேட்பது எல்லாம், நம்மால் கொடுக்க முடியுமா என்று கேட்டால், பிச்சை கேட்பவன் அப்படி கேட்க மாட்டான். இரப்பவன், எவ்வளவு குறைத்து கேட்க்க முடியுமோ அவ்வளவு குறைத்து கேட்ப்பான்.

உலகளந்த பெருமாளே, யாசகம் கேட்க்க வந்தபோது கூனி குறுகி வாமன உருவமாய்த் தான் வந்தான்.

கேட்பவன், கூச்சப் பட்டு மிக மிக குறைத்துத்தான் கேட்பான்.

எவ்வளவு நுண்ணிய பொருள் நிறைந்தது திருக்குறள்.

தானம் செய் என்று அறம் சொல்ல வந்த வள்ளுவர் எப்படி சொல்லுகிறார் பார்த்தீர்களா ?

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்யும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பாடல்  

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


பொருள்


பிரகலாதன் - குளிரும் நெருப்பு

பிரகலாதன் - குளிரும் நெருப்பு 


இதிகாசங்கள்  நம் கற்பனையின் எல்லைகளை விரிவாக்குகின்றன.

பெரிதாக சிந்திக்க வழி கோலுகின்றன. தாடகை மலைகளை தன் கொலுசில் மணிகளாக போட்டுக் கொள்வாள் என்று படிக்கும் போது நம் கற்பனை விரிகிறது....எவ்வளவு பெரிய மலை, எவ்வளவு பெரிய கொலுசு, அதை அணியும் கால் எவ்வளவு பெரிசா இருக்கும், அப்படிப்பட்ட காலை கொண்ட ஆள் எவ்வளவு பெரிசா இருப்பாள் என்று எண்ணத் தலைப் படுகிறோம்.

எண்ணமும் கற்பனையும் நம்ப முடியாத அளவுக்கு விரிவடைகின்றது. அவ்வளவு பெரிய ஆளை நாம் கற்பனை செய்யத் தலைப் படுகிறோம்.

எதற்கு இது எல்லாம் என்றால்....இறைவன் என்பவன் நம் கற்பனையின், அறிவின் எல்லைகளை தாண்டியவன்....இறைவனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் நம் மனமும், எண்ணமும், கற்பனையும் விரிவடைய வேண்டும். மிகப் பெரிய அளவில் விரிய வேண்டும்.

நாம் அறிந்த எல்லாவற்றையும் கடந்து சிந்திக்க பழக வேண்டும்.

நான் படித்த அறிவியலில், நான் படித்த தர்க்க (logic ) சாஸ்திரத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கக்  கூடாது.

நாம் அறிந்தவை, பார்த்தவை, படித்தவை இவற்றை எல்லாம் கடந்து நமக்கு சிந்திக்க  கற்று தருகின்றன இந்த இதிகாசங்கள்.

நரசிம்மம் இவ்வளவு பெரிசா ? இரணியனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவுதானா என்று சிந்திக்கும் போது உங்களை அறியாமலையே உங்கள் கற்பனையின் எல்லை விரிகிறது.

இப்படி பட்ட பாடல்களை நாளும் படிக்கு போது, ஒரு நாள் உங்கள் அறிவின் எல்லைக்கு உட்படாத ஒன்றை உங்களால் சிந்தனை பண்ணி பார்க்க முடியும், உணர முடியும்.

எனவே,  இதிகாசங்களை படியுங்கள்.

பிரகாலதனை ஆயுதங்கள் ஒன்றும் செய்ய வில்லை என்ற உடன், அவனை தீயில் எறியுங்கள் என்று ஆணை இருக்கிறான், இரணியன்......

பாடல்



'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம்தொறும் கொணர்ந்து  எண்ணெய்

இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட;
அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்; "அரி" என்று
தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது, சுடு தீயே.

Monday, June 10, 2013

வாலி வதம் - ஈறு இல் அறம்

வாலி வதம் - ஈறு இல் அறம் 




அறத்திற்கு எல்லை கிடையாது. நாம் படித்தது, நாம் அறிந்ததுதான் அறம் என்று இறுதியாக உறுதியாக கூற முடியாது.

கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு என்று சட்டத்தின் வரைவு விசாலாமகிக் கொண்டே போவது போல அறம் பரந்து பட்டது.

இராமனுக்கு அது தெரியும். நான் அறிந்ததுதான் அறம் என்று அவன் சாதிக்க வில்லை.

விஸ்வாமித்திரன் சொல்கிறான்....

அந்தம் இல்லாத அறத்தை பார்த்து கூறுகிறேன். இவளை பார்த்து கோபம் கொண்டு கூறுகிறேன். நீ கோபப் படாமல் இப்படி சாந்தமாக நிற்பது அருளின் பாற்பட்டது அன்று. இந்த அரக்கியை கொல் என்று அந்தணன் கூறினான்.

ஒவ்வொரு வார்த்தையும் கம்பன் தேர்ந்தெடுத்து கோர்த்த கவிதை

பாடல்

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 

பொருள்


வாலி வதம் - எது அறம் ?

வாலி வதம்  - எது அறம் ?


அறம் என்பது மிக நுட்பமானது.

எவ்வளவு நுட்பமானது என்றால் இராமனுக்கே அது பற்றி இரண்டு எண்ணங்கள் இருந்ததாக கம்பன் காட்டுகிறான்.

பொய் சொல்வதா அறமா என்றால் - இல்லை.

ஆனால் வள்ளுவன் சொல்லுகிறான் - பொய்மையும் வாய்மையிடத்து என்று. பொய்யும் சில சமயம் உண்மையாக மாறும். எப்போது என்றால் சந்தேகத்துக்கு இடம் இல்லாத நன்மை பயக்கும் சமயத்தில்.

தூதரையும் மாதரையும் கொல்லக்  கூடாது என்பது இராமன் கற்ற அறம் .

பெரியோர் சொல்வதை கேட்க வேண்டும் என்பதும் அவன் கற்ற அறம்.

இங்கே விஸ்வாமித்திரன் சொல்கிறான், ஒரு பெண்ணை கொல் என்று.

இராமன் என்ன செய்தாலும், என்ன செய்யாவிட்டாலும் அறம் பிறழ்ந்தவனாவான் .

என்ன செய்யாலாம் ?

இராமனே சொல்கிறான் - அறமே இல்லாவிட்டாலும், ஐயனே நீ சொல்வதை கேட்டு அதன்படி செய்வது தானே அறம் செய்யும் வழி என்கிறான்.

இராமனுக்கு அது வரை கிடைத்தது புத்தக அறிவு. குரு குலத்தில் அப்போது தான்  வந்து இருக்கிறான்.

நான் படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று இராமன் இறுமாப்பு கொள்ளவில்லை. "அய்யன், நீ சொல்வதே அறம் செய்யும் வழி" என்று பெரியவர்கள் சொல்வதை கேட்க்கிறான்.

பாடல்

ஐயன் அங்கு அது கேட்டு. ‘அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.


பொருள்


Sunday, June 9, 2013

கம்ப இராமாயணம் - வாலி வதம் - இன்னொரு கோணம்

கம்ப இராமாயணம் - வாலி வதம் - இன்னொரு கோணம் 


இராமன் வில் அறம் தவறுபவனா ? வாலி வதத்திற்கு முன், இராமன் முதன் முதலில் வில் எடுத்த போது நடந்தது என்ன ?

விச்வாமித்திரனுடன், அவன் வேள்வியை காக்க இராமன் கானகம் போனான்.

இவர்களை (இராமன், இலக்குவன் மற்றும் விஸ்வாமித்திரன்) கண்டவுடன் தாடகை இவர்களை கொல்ல பெரிய சூலாயுதத்தை எடுத்து ஏறிய தயாராய் நிற்கிறாள்.

விஸ்வாமித்திரன் அம்பை விடு என்று இராமனிடம் சொல்கிறான்.

மாதரையும் தூதரையும் கொல்வது  வில் அறம் அல்ல என்று இராமன் அறிவான்..

அவன் அம்பை தொடக்  கூட இல்லை.

இன்னும் சிறிது நேரம் சென்றாலும் தாடகையின் கையில் உள்ள  சூலாயுதம் அவன் உயிரை குடிக்க தயாராய் இருக்கிறது.

இருந்தும் அவன் அசையக் கூடவில்லை

பாடல்


அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.


பொருள்


பிரகலாதன் - சொல்லும் வேலும்

பிரகலாதன் - சொல்லும் வேலும் 




பிரகலாதன் இறைவனை பற்றி மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போகிறான். அவன் சொல்வதை கேட்ட இரணியன் கோபம் கொண்டு அவன் வீரர்களை பார்த்து "அவனை கொல்லுங்கள் " என்கிறான். கூற்றினும் கொடிய அந்த அரக்கர்கள் பிரகலாதனை கொல்ல நினைத்து அவன் மேல் வேல்களையும், வாட்களையும், கூரிய அம்புகளையும் எய்தனர்.

அவை என்ன ஆயிற்று தெரியுமா ?

அவை பிரகலாதனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க வில்லை என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது ?

எறிந்ததோ கொடிய அரக்கர்கள்.

எறியப்பட்டதோ கூரிய ஆயுதங்கள்.

எப்படி இன்னல் விளைவிக்காமல் இருக்கும் ? அதை சொல்ல வந்த கம்பன் ஒரு உதாரணம் சொல்லுகிறான்.

அந்த ஆயுதங்கள் பகைவர்கள் நம் மேல் வீசும் கொடிய வார்த்தைகள் போல பயனற்று போயின என்றான்.

நம் எதிரிகள் நம் எதிரில் நின்று எவ்வளவு கொடிய சொற்களை நம் மீது கூறினாலும் அது எப்படி நம்மை பாதிக்காதோ அப்படி ஆயிற்று என்கிறான் கம்பன்.

பாடல்


'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்
"ஏ" என் மாத்திரத்து எய்தன, எறிந்தன, எறிதொறும் எறிதோறும், -
தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன - அத்துணை மழுவொடு கொலை வாளும்.

பொருள் 

Saturday, June 8, 2013

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற

பிரகலாதன் - இறை உணர்வு - கடல் கரை ஏற 


கடலை நீந்தி கடக்க முடியுமா ?

முடியும் என்கிறான் பிரகலாதன்.

பிறவி என்ற பெருங்கடல். அந்த பெருங்கடலை நீந்தி கரை ஏறி நிற்பார்கள்.

யார் ?

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர்.

அவன் என்றால் யார் ?

அவன் தான் நாம் செய்யும் எல்லா வினைகளும், அவற்றின் பலன்களும், அந்த பலன்களை உயிர்களுக்கு தரும் தலைவனும், தானே எல்லாமாகி நின்றவன்.

அவனுடைய அருமையும், பெருமையும் அறிந்தவர் இம்மை, மறுமை என்று சொல்லும் இந்த பிறவி பெருங்கடலை கடந்து கரை ஏறி நிற்பர்.

பாடல்


' "கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய
தரு முதல் தலைவனும், தானும், தான்; அவன்
அருமையும் பெருமையும் அறிவரேல் அவர்,
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். 


பொருள்