Sunday, July 28, 2013

திருக்குறள் - வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை

திருக்குறள் -  வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை  


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

சந்தேகம் இல்லாத   மனிதன் உண்டா உலகில் ?

யாருக்குத்தான் சந்தேகம்  இல்லை ? எதில்தான் இல்லை ?

இறைவன் இருக்கிறானா இல்லையா ? இந்த உலகைப்     யார் படைத்தது யார் ? 

மறு பிறப்பு  உண்டா ? பாவ புண்ணியம் என்று ஒன்று உண்டா ?

சுவர்க்கம் நரகம்  உண்டா ?

இப்படி    ஆயிரம் சந்தேகம் நம்மை நாளும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன.

இந்த சந்தேகங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?

யாரைக் கேட்டால்  இந்த சந்தேகங்கள் தீரும் ? எதைப்  படித்தால் இந்த சந்தேகங்கள் போகும் ?

இப்படி சந்தேகம் நீங்கி தெளிவு  பெற்றவருக்கு அந்த வானகம் இந்த பூமியை விட   பக்கத்திலேயே இருக்கும்.

ஐயம் நீங்கினால் மட்டும்  போதாது , தெளிவும் பிறக்க வேண்டும்.


பாடல்    

ஐயத்தின் = சந்தேகத்தின் 

 நீங்கித் தெளிந்தார்க்கு = அதை விட்டு நீங்கி, தெளிவு அடைந்தவர்களுக்கு 

 வையத்தின் வானம் = வையத்தை விட வானம் 

 நணிய துடைத்து. = நணிய   என்றால் அருகில் . நணியதுடைத்து  என்றால் அருகில்   வந்தது, இருக்கும், என்று. பொருள் நணிய  என்ற சொல்லில் இருந்து வந்தது நண்பன். 

அவர்கள் இந்த மண்ணிலேயே சொர்கத்தை காண்பார்கள் என்று பொருள். 

சந்தேகத்தை தீருங்கள். தெளிவு பெறுங்கள். வானம்  உங்கள் வசப்படும். 

 வள்ளுவர் கூறுகிறார் அப்படி சிலர் தெளிவு பெற்று இருக்கிறார்கள் என்று.

உங்களுக்கும் அந்த தெளிவு பிறக்கட்டும்.

ஒவ்வொரு நாளும் தெளிவை நோக்கி நீங்கள்  முன்னேறுகிரீர்ளா என்று யோசியுங்கள்.



இராமாயணம் - சோகமே இப்படி என்றால்....

இராமாயணம் -  சோகமே இப்படி என்றால்....


இராவணன் பார்க்கிறான்  ஜானகியை.

 அவள் முகத்தில் ஏதோ ஒரு சோகம். இராமனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை. அந்த சோகத்திலும் அவள் முகம் ஒளி  விடுகிறது. இந்த சோகத்திலும் இவள் முகம் இவ்வளவு ஒளி விடுகிறது என்றால் இவள் சந்தோஷமாய் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சிந்திக்கிறான் இராவணன்.

சீதை, தலை முடியை வாரி முடியவில்லை. அப்படியே விட்டிருக்கிறாள். அது காற்றில் அலை  பாய்கிறது.

அலை பாய்ந்தது அவள் குழல் மட்டுமல்ல, இராவணனின் மனமும்  தான்.

இராவணன் மனதுக்குள்  நினைக்கிறான்...இலங்கைக்கு போனவுடன், இப்படி ஒரு பெண்ணை எனக்கு  காண வழி செய்த என் தங்கைக்கு (சூர்பனகைக்கு) என் இருபது மகுடத்தையும் உருக்கி ஒரே மகுடமாக செய்து அவள் தலையில் வைக்க வேண்டும்...அவளுக்கு முடி சூட்ட வேண்டும் ...

பாடல்

உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான். 


பொருள்


Saturday, July 27, 2013

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

இராமாயணம் - இராவணின் துன்பம் 



சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் 
மேயவள் மணி நிற மேனி காணுதற்கு 
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் 
ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான்.


கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன்  சீதை இருக்கும் இடம் தேடி வருகிறான்.

அவள் அழகைக் காண்கிறான்.

பிரமிக்கிறான். இப்படி ஒரு அழகா ? இப்படி ஒரு நிறமா ?

எவ்வளவோ தவம் செய்து என்னன்னவோ வரம் எல்லாம் வாங்கினோமே, ஆயிரம் கண் வேண்டும் என்று ஒரு வரமும் வாங்கி இருக்கலாமே. இந்த இருபது கண்கள் பத்தாதே இவள் அழகைக் காண என்று மனம் நொந்தான்.


சேயிதழ்த் = சிவந்த இதழ்களை கொண்ட

தாமரைச் = தாமரை மலரின்

சேக்கை = சேர்க்கை

தீர்ந்து = விடுத்து

இவண் மேயவள் = இங்கு வந்தவள் (அதாவது திருமகள் )

மணி நிற மேனி காணுதற்கு = மணி போல் ஒளி பொருந்திய இவள் உடலை காண்பதற்கு

ஏயுமே இருபது? = இருபது கண்கள் போதுமா ? (போதாது )

 இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்  = இமைக்காத கண்கள் . நாட்டம் என்றால் கண்.

ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான் = ஆயிரம் இல்லையே என்று துன்பப் பட்டான்.


இது நேரடியான அர்த்தம். இப்படித்தான் பலரும் எழுதி இருக்கிறார்கள். நான் கொஞ்சம் வேறு  விதமாக யோசித்துப் பார்த்தேன்.

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

என்றால் என்ன ?

சிவந்த தாமரை மலரை விட்டு இங்கு வந்தவள்.

மற்றொரு சிந்தனை.

தாமரை மலரை விட்டு இங்கு இவளிடம் வந்தவை. அவை என்ன ?

தாமரை மலருக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் - சிவந்த நிறம், மேன்மை, குளிர்ச்சி, நறுமணம், சூரியனை கண்டதும் மலரும் இயல்பு...போன்றவை....

இந்த குணங்கள் எல்லாம் தாமரை மலரின் சேர்க்கையை விட்டு இங்கு வந்து விட்டன  (சீதையிடம்).

சீதை அன்றலர்ந்த தாமரை மலர் போல் சிவந்து இருக்கிறாள், குளிர்ந்து இருக்கிறாள், மென்மையாக இருக்கிறாள்.

மேலும், இராமன் என்ற சூரியன் தவிர வேறு யாருக்கும் மலராத கற்பின் கனலி அவள்.

சீதை தாமரை மலர் போல் இருக்கிறாள் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் தாமரையின்  குணங்கள் எல்லாம் சீதையிடம் வந்து விட்டது.

இனி அவள் தான் அவளுக்கு உதாரணம். தனக்கு உவமை இல்லாதவள்

இப்படியும் யோசிக்க இடம் இருக்கிறது. 

ஆயிரம் கண் இல்லையே என்று இராவணன் வருத்தப் பட்டான்.

அப்படி வருத்தப் பட்ட இன்னொருவர் இருக்கிறார். ஆயிரம் கண் அல்ல, நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று வருந்தினார் அவர். 

அவர் யார் தெரியுமா ?




திருக்குறள் - உயர்வடைய

திருக்குறள் - உயர்வடைய 


வாழ்வில் உயர வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள் ? எப்படி வாழ்க்கையில்  உயர்வது.

வள்ளுவர் மிக மிக எளிமையான வழி ஒன்றைச் . சொல்லித் தருகிறார்.


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

அழுக்காறு உள்ளவன் இடத்தில் ஆக்கம் இல்லாதது போல பொறாமை கொண்டவனிடம் உயர்வு இருக்காது.

அவ்வளவுதானா?

இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு.

நாம்: ஐயா, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு  சொல்றீங்களே...நிச்சயமா சொல்ல முடியுமா ?

வள்ளுவர்: நிச்சயமாக சொல்கிறேன்.

நாம்: எவ்வளவு நிச்சயம் ஐயா ?

வ:  பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்பது எவ்வளவு நிச்சயமோ  அவ்வளவு நிச்சயம் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

நாம்: அப்படி இரண்டு விஷயத்தை ஒரே குறளில் சொல்லிட்டீங்க. மிக்க நன்றி ஐயா.  அப்ப நாங்க வரட்டுமா.


வ: கொஞ்சம் இருங்க தம்பி....இன்னும் முடியல. இதுல இன்னொரு விஷயமும்  இருக்கு.

நாம்: அது என்னது ஐயா ?

வள்ளுவர்: ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால், அது அவன் உயர்வை மட்டும் பாதிக்காது, அவன் குடும்பம், சுற்றம் என்று எல்லோரையும் பாதிக்கும்.

நாம்: அது எப்படி ஐயா ?

வள்ளுவர்: இப்ப ஒரு குடும்பப் பெண் கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் ...அது அவளை மட்டுமா பாதிக்கும் ? அவளுடைய பிள்ளைகள்,  அவளுடைய சகோதரான, சகோதரி, பெற்றோர் என்று எல்லோரையும் பாதிக்கும் அல்லவா ?

நாம்: ஆம் ஐயா....ஒரு பெண் ஒழுக்கம் தவறினால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும்.

வள்ளுவர்: அதே போல ஒரு ஆண் ஒழுக்கம் தவறினாலும் அது குடும்பத்தையும்  அவன் சுற்றத்தாரையும் பாதிக்கும். ஒரு ஆண் கொலை செய்து விட்டான்,  திருடிவிட்டான் அல்லது வேறு ஏதேனும் ஒழுக்கக் குறைவான செயலை செய்து விட்டால் .... ஊரார் அவன் பிள்ளையை பார்க்கும் போது என்ன சொல்லுவார்கள் ? கொலை காரன் பிள்ளை , திருடன் பிள்ளை என்றுதானே உலகம் பேசும், ஏசும் ? அவன் பிள்ளைகளுக்கு யாராவது பெண் கொடுப்பார்களா ? அவன் வீட்டில் யாராவது பெண் எடுப்பார்களா ?

நாம்: சரிதான் ஐயா ஒருவன் ஒழுக்கம் தவறினால் அது அவன் குடும்பத்தையே  பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் அந்த அர்த்தம் இந்த குறளில் எங்கே  வருகிறது ?


வள்ளுவர்: நீ அழுக்காறு என்ற அதிகாரத்தில் உள்ள எல்லா குறளையும் படி. கொடுப்பது  அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி கெடும் என்று சொல்லி இருக்கிறேன். அதாவது அழுக்காறு யாரிடம் இருக்கிறதோ, அவன் சுற்றத்தார்  உண்ண உணவும், உடுக்க துணியும் இல்லாமல் கஷ்டப் படுவார்கள்   என்று சொல்லி இருக்கிறேன்.

அப்படி பொறாமை கொண்டவனின் சுற்றமும் கஷ்டப்  படுவது போல,ஒழுக்கம் இல்லாதவனின்  சுற்றமும் உயர்வு இன்றி கஷ்டப்படும்.

 நன்றி ஐயா. 

Friday, July 26, 2013

இராமாயணம் - கண்ணின் மாலை

இராமாயணம் - கண்ணின் மாலை 


முதலிலேயே பாடலை சொல்லி விடுகிறேன். படியுங்கள். படித்து இன்புறுங்கள்.  நான் என்னதான் விளக்கம் எழுதினாலும் கம்பனின் பாடலுக்கு உறை போடக் காணாது என் உரை.


பாடல்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே

மயில் போல் இருக்கும் சீதையை காண்கிறான் இராவணன். அவன் கண்கள் அவள் அழகை இரசிக்கின்றன. நம்மை மாதிரி இரண்டு கண் அல்ல அவனுக்கு. இருபது கண்கள். இருபது கண்களும் கொள்ளாத அழகு.

அவன் கண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

அவளை அங்கே பார்க்கிறான், இங்கே பார்க்கிறான், மேலே பார்க்கிறான், கீழே பார்க்கிறான்.

அந்த சந்தோஷத்தை வர்ணிக்க ஒரு உதாரணம் தேடினான் கம்பன்.

பெரிய சுனை. அதில் நிறைய பூக்கள். அந்த பூக்களில் நிறைய தேன் இருக்கிறது. அவற்றை கண்டால் தேனீக்களுக்கு எப்படி சந்தோஷம் இருக்குமோ அப்படி  அவன் கண்கள் சந்தோஷப் பட்டன என்றான்.

பூ போன்ற ஜானகி. தேன் நிறைந்த பூ போன்ற ஜானகி.

அந்த பூக்களை கண்டு சந்தோஷத்தில் ரீங்காரமிடும் கரிய வேண்டுகள் போல இராவணின்  கண்கள். 20 கண்கள். வண்டுகள் போல அங்கும் இங்கும் அலைகின்றன.

ஒரு பூவை விட்டு இன்னொரு பூவுக்கு தாவுவது போல சீதையின் ஒரு அழகை விட்டு இன்னொரு   தாவுகிறது அவன் கண்கள்.

பார்த்தான் கம்பன், நல்ல உவமைதான், ஆனால் அவன் கண்களில் உள்ள சந்தோசத்தைப் பார்த்தால் அந்தத் தேன் கண்ட வண்டுகளை விட    அதிகமான அதிகமான  சந்தோஷம் உள்ளவை போல இருக்கிறதே  ? உலகிலேயே அதிக பட்ச  சந்தோஷம் உள்ளது எது, அதை அவனின் கண்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அட, இங்கேயே இருக்கே....இதை விட்டு விட்டு எங்கு எல்லாமோ எதுக்கு அலைய வேண்டும்......

சீதையின் அழகை கண்டு சந்தோஷப் பட்ட இராவணின் மனம் போல அவன் கண்கள் மகிழ்ச்சியில் துள்ளின  என்றான்.  அவன் மனதை விட மகிழ்ச்சியான ஒன்று இருக்க முடியாது.

அப்படி மகிழ்ச்சியில் அவள் மேனி எங்கும் ஓடிய அவன் கண்கள் அவளுக்கு கண்ணாலேயே மாலை அணிவித்தது   போல இருந்தது.

இருபது விழிகளால்  மாலை இட்டான்

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே


பொருள் 

Thursday, July 25, 2013

தேவாரம் - நாத்திகம் பேசாதே

தேவாரம் - நாத்திகம் பேசாதே 



நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பெரிய சுனாமி வருகிறது - மனிதனால் ஏதாவது செய்ய முடியுமா ? அதை தடுத்த நிறுத்த முடியுமா ? வேண்டுமானால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.

பெரிய நிலநடுக்கம் வருகிறது - கை கொண்டு தடுக்க முடியுமா ?

சூறாவளி, புயல் காற்று அடிக்கிறது - எதை கொண்டு அதை தடுக்க முடியும்.

இப்படி இயற்கையின் சீற்றங்களை மனிதன் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி  கட்டுப் படுத்த முடியாத இயற்கையின் சக்தியைப் போல இன்னொரு சக்தியும் இருக்கிறது. நாம் அதை சரியாக  வில்லை.

அது தான், நமது ஐந்து புலன்களின் சக்தி.

அவை சீறி எழும் போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது இழுக்கும் பக்கம்  அடித்துச் செல்லப் பட வேண்டியதுதான். தடுத்து எல்லாம் நிறுத்த முடியாது.

இல்லை இல்லை ...கொஞ்சம் பொறுங்கள்...

ஆ...அவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி இருக்கிறது.

அவற்றை தடுத்து நிறுத்தி நம்மை காக்கும்  சக்தி இறை சக்தி.

அப்படி எல்லாம் இல்லை, கடவுள் இல்லை, பாவ புண்ணியம் இல்லை, மறு பிறப்பு இல்லை என்று நாத்திகம் பேசி புலன் வழி சென்று கஷ்டப் படாதீர்கள் என்று   நாவுக்கரசர்  சொல்கிறார்.

பொருள்


இராமாயணம் - தூங்கல் இல் குயில்

இராமாயணம் - தூங்கல் இல் குயில் 



இராமனும் இலக்குவனும் மான் பின் போன பின், இராவணன் வயதான துறவி போல் மாறுவேடத்தில் சீதை இருக்கும் இடம் நோக்கி வருகிறான்.

"இந்த குடிலில் இருப்பவர்கள் யார் " என்று நடுங்கும் குரலில் கேட்க்கிறான்.

சீதை அவனை வரவேற்கிறாள்....


தூங்கல் இல் குயில் கெழு    சொல்லின், உம்பரின் 
ஓங்கிய அழகினாள்    உருவம் காண்டலும், 
ஏங்கினன் மனநிலை    யாது என்று உன்னுவாம்? 
வீங்கின; மெலிந்தன;    வீரத் தோள்களே. 



அவளுடைய குரல் குயில் போல இனிமையாக இருக்கிறது. அதுவும் தூக்கம் இல்லாத குயில் போல என்கிறான் கம்பன்.

அது என்ன தூக்கம் இல்லாத குயில் ?

ஏதோ ஒரு சோகம். சோகத்தால் தூக்கம் வரவில்லை. அதன் குரலில் அந்த ஏக்கம் தெரிகிறது.  சோகம் இழையோடுகிறது.

அவள் தேவதைகளை விட அழகாக இருக்கிறாள்.

இராவணின் ஏக்கம் ஏகத்துக்கு ஏறுகிறது.

அழகு பிரமிக்க வைக்கும். அழகு பேச்சிழக்க வைக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வார்த்தை வராது.

காலம் நின்று போகும். நான் என்பது மறந்து போகும்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்பார் அருணகிரி.

அவன் மனதில் ஆயிரம் எண்ணம் ஓடுகிறது. அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கு என்ன  தெரியும் என்று கேட்க்கிறான் கம்பன்.

அவளைப் பார்த்த உடன் அவனுடைய தோள்கள் விம்மின...அவளை கட்டி    அணைக்கும்  ஆசையால். முடியாது என்பதால் அந்தத் தோள்கள் சோர்ந்து விழுந்தன.