Wednesday, October 16, 2013

இராமாயணம் - விதியும் தருமமும்

இராமாயணம் - விதியும் தருமமும் 


பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான். 

தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள். 

முன்னால் வீசி விரும் கவரி இல்லை. 

பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை. 
 
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள். 

இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது. 

விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது...வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது. 

விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது...இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது. 

பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது. 

இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான். 

பாடல் 

குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

பொருள் 

குழைக்கின்ற கவரி இன்றி = வீசப் படும் கவரி இல்லாமல் 
கொற்ற வெண்குடையும் இன்றி, = வெண் கொற்ற குடையும் இல்லாமல் 
இழைக்கின்ற விதி முன் செல்ல = வரைக்கின்ற விதி முன்னால் செல்ல 
தருமம் பின் இரங்கி ஏக, = தர்மம் பின்னால் இருந்து ஏங்க 
‘மழைக்குன்றம் அனையான் = மழை மேகங்களால் சூழப் பட்ட மலையை போன்ற இராமன் 
மௌலி  = மணி முடி , கிரீடம் 
கவித்தனன் வரும்’ என்று என்று = சூடி வரும் என்று 
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் = மகிழ்வோடு இருந்த (கோசலை யின் முன் 
ஒரு தமியன் சென்றான் = தனியாக சென்று நின்றான் 


குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

Tuesday, October 15, 2013

இராமாயணம் - கணையாழியின் கதை

இராமாயணம் - கணையாழியின் கதை 


இராமன் கணையாழியை சீதையை காணச் சென்ற அனுமானிடம் கொடுத்து அனுப்பினான். சீதை அதைக் கண்டு மகிழ்ந்தாள். பின் , திரும்பி வந்த அனுமன் அந்த கணையாழியை இராமனிடம் திருப்பி தந்ததாக தெரியவில்லை. 

பதிநான்கு வருடம் முடிந்து இராமன் அயோத்தி வர வேண்டும். வரவில்லை. பரதன் தீயில் விழுந்து உயிரை விடுவேன் என்று துணிகிறான். 

எங்கே பரதன் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வானோ என்று பயந்து அனுமானை அனுப்புகிறான். 

அனுமன் நந்தியம்பதியை அடைந்து, பரதனை கண்டு, இராமன் வரும் செய்தியை சொல்லி அவனிடம் கணையாழியை காண்பிக்கிறான். 

பரதன் கணையாழியை கண்டு அடைந்த மகிழ்ச்சியை கம்பன் விவரிக்கிறான்....

பாடல் 


மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

பொருள்

மோதிரம் வாங்கித் = கணையாழியை வாங்கி 
தன் முகத்தின் மேலணைத்து = தம் முகத்தின் மேல் அணைத்து. அணைத்து என்பது இனிய பத பிரயோகம். 
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ = இராமன் நினைவாகவே பரதன் விரதம் பூண்டு இருந்தான். ஊன் உறக்கம் மறந்து, உடல் மெலிந்து காணப் பட்டான். இராமன் வந்தால், அவன் அன்பை பெரும் அளவிற்க்கு இவன் உடல் தாங்குமா என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த சந்தோஷத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான்  

எனா ஓதினர் = என்று கூறியவர்கள் 

நாணுற = வெட்கப் படும்படி 

ஓங்கினான் = மகிழ்ச்சியில் உயர்ந்து பூரித்து எழுந்தான் 
தொழும் தூதனை = தன்னிடம் தொழுது நின்ற தூதனான அனுமானை 
முறைமுறை தொழுது துள்ளுவான் = மீண்டும் மீண்டும் தொழுது துள்ளுவான் 

கணையாழி கடைசியில் பரதனிடம் வந்து சேர்ந்தது. இராமாயணத்தில், அதன் பின் அந்த கணையாழி வேறு எங்கும் போக வில்லை. 

கணையாழி இரண்டாம் முறையாக உயிர் காத்தது....

அது சரி, அந்த கணையாழி இன்றும் பல்வேறு விதத்தில் இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது...அது எது தெரியுமா ?

நாளை அதைப் பற்றி சிந்திப்போம்....




Sunday, October 13, 2013

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?


சீதையை காண அனுமன் போன போது, இராமன் தன் கணையாழியை அனுமானிடம் கொடுத்த்து அனுப்பினான். சீதை அதை கண்டு மகிழ்ந்தாள். அனுமானை வாழ்த்தினாள்....

அது எல்லாம் சரி, அந்த கணையாழி என்ன ஆயிற்று ? அனுமன் அதை இராமனிடம் திருப்பித் தந்தானா ?

அது பற்றி ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 

காப்பிய முடிவில் அந்த கணையாழி பரதனிடம் சென்று சேர்கிறது. 

ஏன் ? எப்படி ?

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும்

நெடுநல் வாடை - விசிறியும் குளிரும் 


நெடு நல் வாடை - பெயரே இனிமையானது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அது வாடைக் காலம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு அது நீண்ட வாடைக் காலமாக இருக்கிறது. தலைவியை சென்று சேரப் போவதால் அவனுக்கு அது நல்ல வாடைக் காலமாக இருக்கிறது. 

இதில் உள்ள பாடல்கள் எல்லாம் வாடைக் காலத்தை பின்னனியாகக் கொண்டு எழுதப் பட்டவை. மிக மிக இனிமையான பாடல்கள். அதிலிருந்து சில பாடல்கள்....

அது ஒரு வாடைக் காலம். மாலை நேரம் தாண்டி முன்னிரவு வந்து விட்டது. குளிர் காற்று சிலு சிலு என்று அடிக்கிறது.  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் குளிருக்கு இதமாக, நீண்ட பிரிவை ஆற்றும் வகையில் கட்டி அணைத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் , பாடல் ஆசிரியர் இதை நேரடியயாகச் சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறார். 

எப்படி ?

அழகான விசிறி ஆணியில் தொங்குகிறது. குளிர் காற்று உள்ளே வராமல் இருக்க பள்ளி அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்கிறார். 

ஏன் படுக்கை அறையின் கதவு தாழிடப் பட்டிருக்கிறது என்பதை நாம் யூகத்திற்கு விடுகிறார். 

சொல்லாமல் சொன்ன கவிதை இது 


கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்பக் 

பொருள்

கைவல் = கை வேலைப்பாடு நிறைந்த 
கம்மியன் = தொழிலாளியின் 
கவின் பெறப் புனைந்த = அழகு நிறைந்த 
செங்கேழ் = சிவந்த விசிறி 
வட்டஞ் சுருக்கிக் = வட்டமான அந்த தோற்றத்தை சுருக்கி, மடக்கி வைத்து 
கொடுந்தறிச் = வளைந்த சுவற்றில் உள்ள ஆணியில் 
சிலம்பி = சிலந்தி 
வான் நூல் = வலை போல 
வலந்தன தூங்க = தூங்க. அதாவது, ஆணியில் மாட்டப்பட்ட விசிறி சிலந்தி வலை போல இருக்கிறதாம். என்ன ஒரு உவமை. 
வான் உற நிவந்த = வானத்தை எட்டும் படி உயர்ந்த 
மேனிலை = மாடி 
மருங்கின் = மாடத்தில் 
வேனில் = வேனில் காலத்தில் 
பள்ளித் = படுக்கை அறையில் 
தென்வளி = தென்றல் காற்று 
தரூஉம் = வரும் 
நேர் வாய்க் கட்டளை = நேராக வரும் வழி 
திரியாது = திரியாமல் , உள்ளே வர விடாமல் 
திண்ணிலைப் = தின்மையான, உறுதியான 
போர் வாய் = பெரிய வாசலை உடைய 
கதவம் =கதவு 
தாழொடு  துறப்பக் = தாழ்பாழை இட்டு கிடக்க 

பாடல் அவ்வளவுதான். அது சொல்லியது அவ்வளவுதான். சொல்லாமல் விட்டது ஏராளம். 

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன்

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன் 



மனையாளை யஞ்சு மறுமையி லாளன் 
வினையாண்மை வீறெய்த லின்று.

மனைவிக்கு பயந்தவனுக்கு இரண்டு தீமைகள் நிகழ்கின்றன. 

ஒன்று , இந்தப் பிறவியில் அவனுக்கு நன்மை கிடையாது. அவன் செய்யும் வினைகளுக்கு வெற்றி கிடையாது. அதாவது, மனைவிக்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு அதன்படி செய்பவனுக்கு காரியம் வெற்றி பெறாது. அவன் தோல்வியே அடைவான்.

இரண்டாவது, அவனுக்கு மறு பிறப்பிலும் அல்லது சொர்கத்திலும் நல்லது நடக்காது. இம்மை பயன் மட்டும் அல்ல, மறுமை பயனும் கிடைக்காது அவனுக்கு. 

பொருள் 

மனையாளை = மனைவியின். மனையாள் என்றால் அது மனைவியை குறிக்காது என்று தமிழ் தெரியாத சிலர் வாதம் புரியக் கூடும். மனையாள், மனை விழைவான் என்பன ஆகு பெயர்கள். அந்த வீடு சொர்கம் போல என்றால் அந்த வீட்டில் உள்ள செங்களும் சிமின்டும் அல்ல. அதில் உள்ள மனிதர்கள், அவர்களின் குண நலன்கள். தமிழில் பல ஆகு பெயர்கள் உண்டு. 

யஞ்சு = அஞ்சுபவன், அவள் சொல்வதை கேட்டு நடப்பவன், அவள் சொல்வதருக்கு மறுப்பு சொல்லாதவன் 

மறுமையி லாளன் = அவனுக்கு மறுமை பயன் எதுவும் இல்லை. வாழ்க்கையே இல்லை என்கிறோமே அது போல  

வினையாண்மை வீறெய்த லின்று = வினை + ஆண்மை + வீறு + எய்தல் + அன்று = அவன் செய்யும் வினைகள் எந்த பயனையும் தராது. 

இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராதது - மனைவி சொல்லை கேட்பது. 

வள்ளுவர் சொல்கிறார். பரிமேல் அழகர் சொல்கிறார்....

Saturday, October 12, 2013

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து 


வீடு உள்ளே எப்படியோ அலங்கோலமாக இருக்கிறது. வெளியே மட்டும் அழகாக வெள்ளை அடித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். 

மன அழுக்கு ஆயிரம் இருக்கு. ஆனால் வெளியே மத சின்னங்கள் ஆயிரம். நெற்றியில், கழுத்தில், கையில், தலையில், தோளில் என்று வித விதமான சின்னங்கள். 

சின்னங்கள் ஒவ்வொவுன்றும் ஒரு சுவர்கள். இந்தியன் என்று சுவர், இந்து என்று ஒரு சுவர், சைவன்/வைணவன் என்று ஒரு சுவர், அதற்க்குள் இன்னும் எத்தனையோ சுவர்கள். இத்தனை சுவர்களையும் தாண்டி அதற்கு பின்னால் நாம் இருக்கிறோம். இப்படி ஒவ்வொருவரை சுற்றியும் பலப் பல சுவர்கள். நம் கவனம் எல்லாம் சுவர்களை அழகு படுத்துவதில்தான். 

என்ன தான் இந்த உடம்பை பல வித மதச் சின்னங்கள் இட்டு அழகு படுத்தினாலும், இது ஓட்டைச் சுவர். ஒரு நாள் விழும். புரண்டு புரண்டு விழும். உயிர் போகும் நாள் ஒன்று வரும். இந்த புற சுவர்கள் நம்மை  எமனிடம் இருந்து காக்க முடியாது என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 

பாடல் 

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

பொருள்

இராமாயணம் - பெண்களால் மரணம்

இராமாயணம் - பெண்களால் மரணம் 


சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிறான். அந்த காலத்தில் ஒருவன் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போகிறான் என்றால் பெரியவர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவது வழக்கம். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிவித்தவுடன் , அவனுக்கு வசிட்டர் அறிவுரை வழங்கினார்.

இங்கே இராமன் வழங்குகிறான்.

மக்களுக்கு பெண்களால் எப்போதும் துன்பம்தான். துன்பம் என்று லேசாக சொல்லவில்லை. பெண்களால் மரணம் வரும் என்கிறான். இதில் சந்தேகமே இல்லை. அவர்கள் கட்டாயம் உயிரை எடுப்பார்கள். வாலியின் வாழ்க்கையும் எங்கள் வாழ்க்கையும் இதற்கு உதாரணம் என்கிறான். 

பாடல் 

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ? 

பொருள் 

மங்கையர் பொருட்டால்  = பெண்களால் 
எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல், = மக்களுக்கு மரணம் வரும் 

சங்கை இன்று உணர்தி;  - சந்தேகம் இல்லாமல் இதை உணர்ந்து கொள் 
வாலி செய்கையால் சாலும்; = இது வாலியின் செய்கையாலும் 
இன்னும் = மேலும் 
அங்கு அவர் திறத்தினானே = அவர்கள் (பெண்களின்) திறமையால் 
அல்லலும் = துன்பமும்
பழியும் ஆதல் = பழியும் வந்து சேர்ந்ததை 
எங்களின் காண்டி அன்றே; = எங்கள் வாழ்க்கையில் இருந்து பார்த்துக் கொள்
இதற்கு  வேறு உவமை உண்டோ = இதற்கு வேறு ஒரு சான்றும் தேவையா 

இது இராமன் சொன்னது. 

இராமன் சொல்லாமல் விட்டது ....

கூனியால் , கைகேயியால் ... சக்ரவர்த்தி தசரதன் இறந்தான் 
சுக்கிரீவன் மனைவியால் வாலி இறந்தான் 
சூர்பபனாகியால், சீதையால் - இராவணன் இறந்தான், கும்ப கர்ணன் இறந்தான், இந்திரஜீத் இறந்தான், மாரிசன் இறந்தான்