Saturday, October 26, 2013

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

இராமாயணம் - நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

பரதன் உன்னை விட மூன்று மடங்கு நல்லவன் , அவனுக்கு அரசாட்சியை கொடு என்று கோசலை கூறியதை முந்தைய ப்ளாகில்  பார்த்தோம்.

மேலும் கோசலை சொல்கிறாள்

இராமா, மன்னன் இட்ட கட்டளை எதுவாயினும், அது நீதி அல்ல என்று நீ எண்ணக் கூடாது. அதை அப்படியே  ஏற்று செய்வது உனக்கு அறம்.. இந்த அரசை உன் தம்பிக்கு நீ கொடுத்து அவனுடன் ஒற்றுமையாக பல்லாண்டு வாழ்க " என்று வாழ்த்துகிறாள்.


பாடல்

என்று, பின்னரும், ‘ மன்னவன் ஏவியது
அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்;
நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து,
ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள்.


பொருள்

என்று, பின்னரும் = மேலும் சொல்லுவாள்

மன்னவன் ஏவியது = அரசன் இட்ட கட்டளை

அன்று எனாமை =   நீதியின் பாற்பட்டது என்று எண்ணாமல்

மகனே!  = இராமா

உனக்கு அறன் = அரசன்  அப்படியே செய்வது உனக்கு அறன்

நன்று =  நல்லது

நும்பிக்கு =  உன் தம்பிக்கு

நானிலம் நீ கொடுத்து = இந்த அரசை நீ கொடுத்து

ஒன்றி வாழுதி, ஊழி பல’ என்றாள் =  ஊழிக்  ஒன்றாக வாழுங்கள் என்று வாழ்த்தினாள்


 அப்பா  சொன்னது என்று  நினைக்காதே. அரசன் இட்ட கட்டளை என்று .எடுத்துக் கொள் இராமா என்று கூறுகிறாள்.

அப்பா சொன்னார் என்று எடுத்துக் கொண்டால் "போப்பா , உனக்கு வேறு வேலை இல்லை " என்று அதை உதாசீன படுத்த எண்ணியிருக்கலாம்.

அது மட்டும் அல்ல , அதை செய்வது அரச கட்டளை என்பதால் மட்டும் அல்ல , அதை செய்வது உனக்கு அறன் , கடமை என்று கூறுகிறாள்.

தசரதன் இந்த அரசை பரதனுக்கு கொடுத்தான் என்று கொள்ளாதே.

நீ இந்த அரசை அவனிடம் கொடு என்று கூறுகிறாள் கோசலை.

"நீ இதை நல்கு " என்கிறாள்.

சரி அரசை கொடுத்துவிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு இருக்காதீர்கள். ஒன்றாக ஒற்றுமையாக ஆண்டு பல வாழுங்கள் என்று வாழ்த்துகிறாள்.

என்ன ஒரு நிதானம். என்ன ஒரு தெளிவு.

அடுத்து இராமன் மெல்ல அடுத்த ஒரு சேதி சொல்லப் போகிறான்...தான் காடு போக வேண்டிய வரத்தை சொல்லப் போகிறான்.

எப்படி சொல்கிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.





Friday, October 25, 2013

இராமாயணம் - நின்னும் நல்லன்

இராமாயணம் - நின்னும் நல்லன் 


நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ  கேட்ட கோசலையிடம் இராமன் சொன்னான் , நெடு முடி புனைய தடை ஒன்றும் இல்லை. எனக்கு பதில் உன் அன்பு மகன் , பங்கமில் குணத்து என் தம்பி பரதனே துங்க மா முடி சூட்டுகின்றான் என்றான்.

போன ப்ளாகில் சொன்ன மறந்து போனது பரதன் முடி சூட்டுகிறான் என்று இராமன்  சொல்லவில்லை.பரத'னே' முடி சூட்டுகிறான் என்றான். ஏகாரம் உயர்வு சிறப்பு. அவன் மட்டும் தான் முடி சூட்டுகின்றான்.

சரி, இராமன் சொல்லி விட்டான்.

கோசலை அதற்கு என்ன மறு மொழி சொன்னாள் ?

நம் வீட்டில் வந்து "என்னை வேலையை விட்டு போகச் சொல்லி விட்டார்கள்" என்று ஒரு மகனோ, கணவனோ தாயிடமோ, மனைவியிடமோ சொன்னால் என்ன நடக்கும் ?

அவர்களும் கவலைப் பட்டு, அவனையும் கவலைப் படுத்தி, பயப்பட்டு, மற்றவர்களை திட்டி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

ஒருவர் நம்மிடம் ஒரு துக்க செய்தியை சொல்கிறார் என்றால் அவரை மேலும் பயப் படுத்தக் கூடாது.  காயப் படுத்தக் கூடாது.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று அந்த துக்க செய்தியின் தாக்கத்தை குறைக்க முயல வேண்டும்.

கோசலை சொல்கிறாள் ...."முறை என்று ஒன்று உண்டு. அதைத் தவிர்த்துப் பார்த்தால், பரதன் உன்னை விட மூன்று மடங்கு உயர்ந்தவன் , நின்னும் நல்லவன், எந்த குறையும் இல்லாதவன் " என்று கூறினாள் ...

அப்படி கூறியது யார் ? நான்கு சகோதரர்களுக்கும்  அன்பைச் செலுத்தி அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றிய கோசலை என்றான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்


இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி

இராமாயணம் - பங்கம் இல் குணத்து எம்பி


கோசலை இராமனிடம் கேட்டாள் - நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ - என்று.

இராமன் நினைக்கிறான்....என்ன இருந்தாலும் கோசலை  ஒரு பெண், அதிலும் வயதானவள்...தன் மகனுக்கு முடி சூட்டு விழா இல்லை என்றால் வருந்துவாள். உணர்ச்சி வசப் படுவாள். எனவே, அவளிடம்  கொஞ்சம் மெதுவாக நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இராமன் நினைக்கிறான்.

எப்போதும் ஒரு துன்பமான செய்தியை சொல்வது என்றால் , யாரிடம் சொல்கிறோம், அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று  அறிந்து,ரொம்பவும் அதை பெரிது படுத்தாமல் சிந்தித்து சொல்ல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், நாமாக இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் இந்த செய்தியை...

அழுது, ஆர்பாட்டம் பண்ணி, நாமும் கவலைப் பட்டு, கோசலையும் கவலைப் பட வைத்து, பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி இருப்போம்.

இராமன் எப்படி சொல்கிறான் என்று பாருங்கள்....


பாடல்

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,
பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,

துங்க மா முடி சூடுகின்றான்' என்றான்

பொருள்

மங்கை அம்மொழி கூறலும் = கோசலை அப்படி கேட்டவுடன்

மானவன் = பெருமை நிறை இராமன்

செங்கை கூப்பி  = தன் சிவந்த கைகளை கூப்பி

'நின் காதல் திரு மகன், = உன்னுடைய அன்பிற்குரிய திரு மகன்

பங்கம் இல் = குறை இல்லாத

குணத்து எம்பி = குணங்களை கொண்ட

பரதனே = பரதனே


துங்க மா முடி சூடுகின்றான் என்றான் = தூய்மையான முடியை சூட்டுகின்றான் என்றான்


உன் மகனுக்கு முடி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பரதனும் உன் மகன் தானே. அவனுக்கு முடி என்கிறான்.

கோசலை புரிந்து கொண்டிருப்பாள். இராமனுக்கு இதில் வருத்தம் இல்லை என்று. ஒரு வேளை  இராமன், "கைகேயின் மகன் பரதனுக்கு முடி"  என்று சொல்லி இருந்தால் கோசலை வருந்தி இருப்பாள். கோசலையை   வருந்த விடக் கூடாது  என்று மிக மிக பக்குவமாக  சொல்கிறான்.

பரதன் யார் - பங்க மில் குணத்தவன் - குறை ஒன்றும் இல்லாத குணம் உள்ளவன்.

எம்பி - என் தம்பி.

நின் காதல் திருமகன் - உன் அன்பிற்குரிய திருமகன்

எனவே, அரசாங்க காரியமான முடி சூட்டுதல் நிற்கவில்லை. அது நடக்கும். எனக்கு பதில் பரதன் முடி சூட்டுகிறான் என்றான்.

எவ்வளவு பெரிய சிக்கலான, கடினமான ஒரு விஷயத்தை எவ்வளவு பக்குவமாக எடுத்தச் சொல்கிறான் என்று பாருங்கள்.

இப்படி பேசி பழக வேண்டும்.

நாமும் பயப் பட்டு, மற்றவர்களையும் பயப் படுத்தும்படி பேசக் கூடாது.

அடுத்து கோசலையின்  முறை. அவள் எப்படி பதில் சொல்கிறாள் என்று பார்போம்.





Thursday, October 24, 2013

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே

தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே 


பழக்க வழக்கம் என்றொரு சொற்றொடர் உண்டு. பழக்க வழக்கம்  என்றால் என்ன ?

ஒன்றை பழக்கப் படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும்.

நல்ல விஷயங்களைப் நம் உடலுக்கு பழகப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை  மறக்காது.

இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்...எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும் ...

சுந்தரர் சொல்கிறார், "என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும் ..என் நாக்கு நமச்சிவாய  என்று சொல்லிக் கொண்டே இருக்கும்".

சொல்லும் நா நமச்சிவாயவே

பாடல்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

பொருள்

மற்றுப் = மற்ற

பற்று = பற்றுதல்கள்

எனக்கு இன்றி = எனக்கு இல்லாமல்

நின் திரு பாதமே = உன் திருவடிகளையே

மனம் பாவித்தேன் = மனதில் நினைத்தேன்

பெற்றலும் பிறந்தேன் = பெற்றதால் பிறந்தேன்

இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்  = இனி பிறவாத தன்மை
அடைந்தேன்

கற்றவர் = கற்றவர்கள்

தொழுது  = வணங்கி

ஏத்தும்  = போற்றும்

சீர்க் கறையூரிற் = கறையூரில்

பாண்டிக் கொடுமுடி = பாண்டிக் கொடு முடி என்ற ஊரில்

நற்றவா = நல்ல தவத்தின் பலனே

உன்னை  நான் மறக்கினும் = உன்னை நான் மறந்தாலும்

சொல்லும் நா நமச்சிவாயவே = என் நாக்கு சொல்லும் நமச்சிவாயா என்று

"நமச்சிவாயவே" என்று சுந்தரரின் நாக்கு சொல்லும்.

நம் நாக்கு என்ன சொல்லுமோ , யாருக்குத் தெரியும் ....




Wednesday, October 23, 2013

குறுந்தொகை - யாயும் ஞாயும்

குறுந்தொகை - யாயும் ஞாயும் 


தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப் படுகிறார்கள். அவர்கள் உள்ளம் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.

என்ன ஆச்சரியம் !

கலந்தது அவர்கள், ஆனால் அவளின் தாய்க்கும் அவனின் தாய்க்கும் உறவு ஏற்பட்டது. அவர்கள் உறவினர்கள் ஆகி விட்டார்கள். அவனின் தந்தைக்கும் அவளின் தந்தைக்கும் உறவு ஏற்பட்டது. அவர்களும் உறவினர்கள் ஆகி விட்டார்கள். நிலத்தோடு கலந்த நீர் நிலந்தின் தன்மையை பெறுவதைப் போல அவளின் மனம் அவனோடு இரண்டற கலந்து விட்டது.

குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ?

செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு - 2

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 



புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?

கோசலை "இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?" என்று கேட்டாள்.

"நீ" நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ என்று கேட்கவில்லை. 

முடி சூட்டுவது என்பது ஒரு அரசாங்கம் சம்பந்தப் பட்ட விஷயம். இராமன் முடி சூட்டினானா இல்லையா என்பதல்ல கேள்வி. முடி சூட்டுதல் என்ற முறை நடந்ததா , அதில் ஏதேனும் தடை வந்ததா என்று கேட்கிறாள். 

முடி சூட்டு விழா தடை பட்டால் அரசாங்க  காரியம் தடை பட்டு விட்டதாக  அர்த்தம். 

எவ்வளவு நாசூக்காக கேட்கிறாள். 

தாய் மகன் உறவை தள்ளி வைத்து விட்டு கேட்கிராள் ..


அதற்கு இராமன் சொன்ன பதில் இன்னும் சுவாரசியாமானது 


Tuesday, October 22, 2013

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 

புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?