Wednesday, February 5, 2014

நாலடியார் - மலையில் ஆடும் மேகம் போல

நாலடியார் - மலையில்  ஆடும் மேகம் போல 


மேகம்.

அழகழாக தோன்றும். ஒன்று மயில் போல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே யானை போல் மாறும். சிறிது நேரத்தில் மான் போல மாறும்....இப்படி மாறி மாறி கடைசியில் பிரிந்து சிதறி காணாமல் போகும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான்....குழந்தை, சிறுவன்/சிறுமி, வாலிபம், நடு வயது, முதுமை, இறப்பு என்று மாறிக் கொண்டே இருக்கும்.

இளமை மாறிப் போகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இளமை நிலையானது அல்ல.

 இந்த உடம்பு நன்றாக உறுதியாக இருக்கும் போதே இந்த உடல் பெற்ற பயனை அடைந்து விட வேண்டும்.

அப்புறம் செய்யலாம், அப்புறம் படிக்கலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது...

யாருக்குத் தெரியும் அப்புறம் எப்புறம் வரும் என்று ?

பாடல்

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.


பொருள் 

யாக்கையை = உடலை

யாப்புடைத்தாப் = நன்றாக, உறுதியாக, ஒரு குறையும் இல்லாமல்

பெற்றவர் = பெற்றவர்கள் . தங்கள் முன் வினைப் பயனாக நல்ல உடலைப் பெற்றவர்கள்

தாம்பெற்ற = தாங்கள் பெற்ற

யாக்கையா லாய  = உடம்பால் பெறக் கூடிய

பயன்கொள்க = பயனை அடைய வேண்டும்

யாக்கை = உடம்பு

மலையாடு மஞ்சுபோல் = மலைமேல் ஆடும் மேகம் போல

தோன்றி = தோன்றி

மற் றாங்கே = மற்றபடி அங்கே

நிலையாது நீத்து விடும் = நிலையாக இல்லாமல் மறைந்து போகும்


Tuesday, February 4, 2014

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு 


ஒரு மூங்கில் குழாய்.

அதன் நடுவில் உள்ள இரு எறும்பு.

குழாயின் இரு பக்கமும் நெருப்பு எரிகிறது. எறும்பு எங்கே போகும். ஒரு பக்கம் ஓடும். அங்கே சூடு  அதிகம் என்று மறு பக்கம் ஓடும். மாறி மாறி ஓடி முடிவில் நெருப்பில் மடிந்து போகும்.

நமக்கும் தான் எவ்வளவு ஆசை. கண்டதன் பின்னால் ஓடுகிறோம். பின் அது சுடுகிறதே என்று இன்னொரு பக்கம் ஓடுகிறோம். பின் அதுவும் சுடுகிறதே என்று  மறுபுறம்.

துன்பம் இல்லாத இன்பம் இல்லை. சூடு இல்லாத வெளிச்சம் இல்லை. வெளிச்சத்தை நோக்கி எறும்பு ஓடும். சூடு கண்டு பின் வாங்கும்.

 இது தான் என் வாழ்வின் இலட்சியம், இதை அடைந்து விட்டால் பின் வேறு எதுவும் வேண்டாம் என்று ஆசை ஆசையாக அடைந்த எத்தனை விஷயங்கள் பின் துன்பமாக மாறிப் போகின்றன.

மணிவாசகர் சொல்கிறார்....

"இருதலைக் கொள்ளி எறும்பு போல நான் இருக்கிறேன். உன்னைப் பிரிந்து தலை விரி கோலமாய் அலைகின்றேன். மூன்று உலகங்கலுக்கும் தலைவனே, என்னை கை விட்டு விடாதே. திரிசூலம் கையில் ஏந்தி பொலிபவனே"


பாடல்

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!


பொருள் 

இருதலைக்  கொள்ளியின் = இரண்டு பக்கமும் நெருப்பு கொண்ட கொள்ளியின்

உள் எறும்பு ஒத்து = உள்ளே அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போல

நினைப் பிரிந்த = உன்னைப் பிரிந்து

விரிதலையேனை = தலை விரி கோலமாக அலையும் என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் மூவுலகுக்கு = விரிந்த இந்த மூன்று உலகுக்கும்

ஒரு தலைவா = ஒரே தலைவனே

மன்னும்= நிலைத்த

உத்தர கோச மங்கைக்கு அரசே =  உத்தர கோச மங்கைக்கு அரசே

பொரு = போருக்கு

தலை = முன்னிற்கும்

மூவிலை வேல் = திரிசூலம்

வலன் ஏந்திப் பொலிபவனே! = வலக் கையில் ஏந்தி பொலிபவனே




இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்

இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்


இறைவனைத் தேடி அலையாதீர்கள். 

உங்களுக்கு அவனைத் தெரியாது. அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்ற விவரங்கள் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் எப்படி போவது என்ற வழி தெரியாது.

ஆனால், உங்களை அவனுக்குத்  தெரியும்.நீங்கள் யார், எங்கே இருகிறீர்கள், எப்படி இருகிறீர்கள் என்று அவன் அறிவான்.

அவனை உங்கள் இருப்பிடத்திற்கு வரவழைக்க ஒரு வழி இருக்கிறது.

நல்வினை.

நல்லது செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி வருவான்.

சுக்ரீவன் இருந்த இடத்திற்கு இராமன் வந்தான். சுக்ரீவன் இராமனைத் தேடித் போகவில்லை. அவன் வேண்டும் என்று கூட விரும்பவில்லை. இராமனை அடைய எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், இராமன் அவன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

அதற்கு காரணம் என்ன ?

தீவினைகளை தவிர்த்து நல்லது செய்ததனால் என்று அவனே சொல்கிறான்.

பாடல்


ஆயது ஒர் அவதியின் கண்,
     அருக்கன் சேய், அரசை நோக்கி,
'தீவினை தீய நோற்றார் என்னின்
     யார்? செல்வ! நின்னை,
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல்
     ஆம் நலம் மிக்கோயை,
மேயினென்; விதியே நல்கின், மேவல்
     ஆகாது ஏன்'? என்றான்.

பொருள்

ஆயது = அந்த நேரத்தில்

ஒர் அவதியின் கண் = அந்த கூட்டத்தில்

அருக்கன் சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )

அரசை நோக்கி = அரசனாகிய இராமனை நோக்கி

'தீவினை  = தீய வினைகளை

தீய = தீய்ந்து போகும்படி

நோற்றார் = செய்தவர்கள்

என்னின் யார்?  = என்னை விட யார் இருக்கிறார்கள் நின்னை,

செல்வ! = செல்வனாகிய இராமனே

நாயகம் உலகுக்கு எல்லாம் = இந்த உலகுக்கே நாயகனாக. உலக நாயகன். இன்று யார் யாருக்கோ இந்த பட்டத்தை தருகிறார்கள். இராமனுக்கு கம்பன் தந்த பட்டம் "உலக நாயகன்"

என்னல் ஆம் = உன்னை நினைக்கலாம்

 நலம் மிக்கோயை = நலம் மிகுந்த உன்னை

மேயினென் = அடைந்தேன்

விதியே நல்கின் = இதை எனக்கு தந்தது விதியே

மேவல் ஆகாது ஏன்'? என்றான். = அடைய முடியாதது என்ன இருக்கிறது.

தீவினைகளை தவிர்த்தால் நல்லது நடக்கும் என்பது விதி. 

அதை மாற்ற முடியாது. 

இறைவன் நம்மைத் தேடி வருவதாவது ? இராமனுக்கு குடும்பச் சிக்கல். அதனால் வந்தான். வேறு எந்த கடவுளாவது அப்படி வந்து இருக்கிறார்களா ?


நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

என்பார் அருணகிரி.

நீலச் சிகண்டியில் (மயில்) ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன்  வருவான் என்கிறார்.

அவன் மட்டும் அல்ல , கூடவே மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவானாம். 

எப்ப வருவான் ?

எந்த நேரத்திலும் வருவான். எல்லா நேரத்திலும் வருவான். 

அதனால், இறைவனை நீங்கள் தேடி அலையாதீர்கள். நல்லதே செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி  நீங்கள் இருக்கும் இடம் வருவான். 


Monday, February 3, 2014

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் 


ஆசை ஒரு புறம்.

அச்சம் மறு புறம்.

புலன்கள் நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்கின்றன. அப்படி செல்லும் போது அதனால் என்ன தீங்கு  வருமோ என்று அச்சமும் கூடவே வருகிறது.

தலை அங்கும் இங்கும் அலைகிறது. பார்த்தால் ஏதோ இரண்டு தலை இருப்பது மாதிரி தோன்றும். ஆசைக்கு ஒரு தலை. அச்சத்திற்கு ஒரு தலை.

மணிவாசகருக்கு இரண்டு தலை. நமக்கு எத்தனை தலையோ.

அவர் சொல்கிறார்,

"என்  குற்றங்களை யார் பொறுப்பார்கள் ? உன் திருவருள் எப்படியோ என்று பயந்து வேர்த்து நிற்கின்ற என்னை  நீ கை விட்டு  விடாதே, பகைவர்கள் அஞ்சும்படி ஒலி எழுப்புகின்ற மணிகளை உடைய மாலையை அணிந்தவனே, திரு உத்திர கோசமங்கை என்ற ஊரின் தலைவனே, ஐம்புலன்கள் என்னை ஈர்க்கின்றன ஒரு புறம், உன் திருவடியை அதனால் விட்டு விட்டுப் போய் விடுவேனோ என்ற அச்சம் மறுபுறம் என்னை இரு புறமும் வாட்டி எடுக்கிறது"

பாடல்

தீர்க்கின்ற ஆறு என் பிழையை, `நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

பொருள் 

தீர்க்கின்ற  ஆறு = எப்படி தீர்ப்பது

என் பிழையை, = என் பிழைகளை

`நின் சீர் அருள் என்கொல் என்று = உன்னுடைய சிறந்த அருள் என்ன என்று

வேர்க்கின்ற = வேர்த்து இருக்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடுவாயா

விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி

ஆர்க்கின்ற = ஒலி எழுப்பும்

தார் = மாலை அணிந்த

விடை = எருதின் மேல் அமர்ந்த

உத்தர கோச மங்கைக்கு அரசே = உத்தர கோச மங்கைக்கு அரசே

ஈர்க்கின்ற = என்னை ஈர்க்கின்ற

அஞ்சொடு  = ஐந்து புலன்களும்

அச்சம் = அச்சம் மறு புறம் இருந்தாலும்

வினையேனை இருதலையே! = வினை உடைய  நான் இரண்டு பக்கமும் கிடந்து அல்லல் படுகிறேன் 

நாலடியார் - இளமை நிலையாமை

நாலடியார் - இளமை நிலையாமை 


இளமை என்றும் நம்மோடு இருக்காது. போன பின் , ஐயோ உடம்பில் இளமை இருந்த போது அதைச் செய்து இருக்கலாமே, இதைச் செய்து இருக்கலாமே என்று வருந்துவதால் பயனில்லை.

உடலில் இரத்தம் சூடாக இருக்கும் போது, காம வழிப் பட்டு, அதன் பின்னாலே போனவர்களுக்கு மெய் வழி காணும் வழி இல்லை.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள் 

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தை தடுமாறும்.

கோல்ஊன்றிச்= கோல் ஊன்றி. உடல் தளரும்

சோர்ந்த நடையினராய்ப் = மிடுக்கான நடை போய் தளர்ந்த நடை வரும்

பல் கழன்று = பல் விழுந்து

பண்டம் = உடல்

பழிகாறும் = பழிக்கு ஆளாகும்

இல்செறிந்து = வீட்டில் இருந்து

காம நெறிபடருங் = காம வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே

ஏம நெறிபடரு மாறு = உண்மையான மெய் வழியில் செல்லும் பாதை


திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?

திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?


நம் இலக்கியங்கள் எப்போதும் பெண்ணாசை பற்றியே பேசுகிறது. ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள காதல், காமம், ஆசை பற்றியே பேசுகிறது.

பெண்ணுக்கு காமம் , காதல் , ஆசை இவை எல்லாம் இருக்காதா ? பின் ஏன் அது பெரிதாகப் பேசப் படவில்லை ?

பெண்ணுக்கும் இவை எல்லாம் உண்டு. அவர்களும் ஜொள்ளு விடுவார்கள் - மனதுக்குள். வெளியே தெரியாது.

அவர்களுக்குள்ளும் காமம் கடல் போல் கொந்தளிக்கும். அலை வந்து கரை  அரிக்கும்.காமம் நீர் சுழல் போல் மனதை உள் இழுக்கும். கரை காணாமல் தட்டுத் தடுமாற வைக்கும்.

இருந்தாலும் அதை எப்படித்தான் வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே அமுக்கரையாக வைத்துக் கொள்கிறார்களோ தெரியாது.

எவ்வளவு கஷ்டம் மனதில் தோன்றும் காதலை வெளியே சொல்லாமல் இருப்பது.

ஆண்களைப் போல பெண்களால் அன்பை அவ்வளவு எளிதாக சொல்ல  முடிவதில்லை.இதை  ஆண்கள் புரிந்து கொள்வதும் இல்லை. "சொன்னாத் தானே தெரியும் "  என்று அடம்  பிடிக்கிறார்கள்.

பெண்களால் சொல்ல முடிவதில்லை.

அப்படி சொல்லாமல் இருப்பது தான் அவர்களின் பெருமை. அவர்களின் சிறப்பு.

அப்படி ஆசையையும் காமத்தையும் மனதில் அடக்கி வைத்திருக்கும் பெண்ணின் அந்த  குணத்தைப் போல மிகச் சிறந்த குணம் வேறு ஒன்றும் கிடையாது என்கிறார்  வள்ளுவர்.


பாடல்

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். 

பொருள்

கடலன்ன = கடல் போல. கடல் போல என்றால் கடலின் ஆழம், கடலின் மிகப் பெரிய அளவு, கடலின் வற்றாத தன்மை, கடலின் மர்மங்கள், கடலின் சலனம், கடலின் அமைதி, கரை காண முடியாத தூரங்கள்...இப்படி பலப் பல 


காம = காமம்.

உழந்தும் = அடைந்தும் 

மடலேறாப் = மடலேறுதல் என்றால் அந்தக் காலத்தில் ஆண்கள் ஓலையால் செய்த குதிரை மேல் ஏறி காதலியின் வீட்டின் முன்னால் தர்ணா செய்வது...அவளை எனக்கு  கட்டிக் கொடு என்று.


பெண்ணிற் = பெண்ணைப் போல

பெருந்தக்கது இல் = பெரிய (குணம்) இல்லை.

அடக்கம் பெண்ணின் இயல்பு. அவளுக்குள்ளும் காதலும் காமமும் உண்டு. அதை  வெளியே சொல்லாதது அவளின் இயல்பு. அதுவே அவளின் சிறப்பும் கூட.

இங்கே ஒரு காதலன் நினைக்கிறான்....இந்த காதல் என்னை என்ன பாடு படுத்துகிறது. அவளையும் அப்படி படுத்தும் தானே. ஆனால் வெளியே ஒன்றும் சொல்லாமல்  எப்படித்தான் இருக்கிறாளோ என்று வியக்கிறான்....

அவன் மட்டுமா ?



Sunday, February 2, 2014

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று




பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்

கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

சூரபத்மனும் அவன் தம்பிகளும் மூன்று பெரிய மலையை செய்தார்கள். அவை பறக்கும் மலைகள். எங்கெல்லாம் மனிதர்களும் தேவர்களும் கூட்டமாக இருக்கிறார்களோ, அப்படியே பறந்து வந்து அவர்கள் மேல் அமர்ந்து விடும் அந்த மலைகள். அவற்றின் கீழே அகப்பட்டவர்கள் நசுங்கி உயிர் விட வேண்டியது தான். 

முருகன் தன் வேலாயுதத்தால் அந்த மலைகளை பொடிப் பொடியாகச் செய்தான். 

அது ஏதோ கதை என்று நினைத்துத்  தள்ளி விடாதீர்கள். 

நம் மனம் என்ன செய்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

வீட்டில் நாம் அமர்ந்து இருந்தாலும், அது எங்கே நம்மிடம் இருக்கிறது. அது பாட்டுக்கு  ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

கற்பனையில், கனவில், மிதந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் கேட்டு விட்டா அது  போகிறது ? நம்மை விட்டு தப்பித்து ஓடிப் போய் விடுகிறது. 

டிவி யில் ஒரு நல்ல அயல் நாட்டைப் பார்த்தால் அங்கே போய் விடுகிறது, அழகான  பெண்ணை/ஆணைப் பார்த்தால் அவர்கள் கூட இருந்தால் என்ன என்று  அவர்கள் பின்னே போய் விடுகிறது....நல்ல கார், சிறந்த உடை, சுவையான உணவு ...எதைக் கண்டாலும் அதன் மேல் போய் உட்கார்ந்து கொள்கிறது  நம் மனம்....சூரபத்மனின் பறக்கும் மலைகளைப் போல. 

அவன் மலைகளாவது அவன் கட்டுப் பாட்டில் இருந்தது. 

நம் மனம் நம் கட்டுப் பாட்டிலா இருக்கிறது. 

அது பாட்டுக்கு எந்தப் பெண்ணை கண்டாலும் அவர்கள் பின்னால் போய் விடுகிறது. மலையை பொடிப் பொடியாக செய்தது போல என் ஆசை மலைகளைத் தகர்த்து எனக்கு  ஞானம் தருவாய் என்று  வேண்டுகிறார்.


பாடல் 

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.


சீர் பிரித்த பின் 

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போன ஒன்றற்கு 
எட்டாத ஞான கலை தருவாய் இருங் காம விடாய் 
பட்டார் உயிரை திருகி பருகி பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே 


பொருள் 

பொட்டாக = கண்ணுக்குத் தெரியாத  துகளாக.பூச்சி பொட்டு இருக்கப் போகிறது என்று சொல்வார்களே. பூச்சி கண்ணுக்குத் தெரியும். பொட்டு கண்ணுக்குத் தெரியாத சின்ன உயிரினம்.  

ஆசா நிகளம் துகளான பின் பேசா அநுபூதி பிறந்ததுவே 

என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில் 


வெற்பைப் = மலைகளை 

பொருத = சண்டையிட்ட 

கந்தா = கந்தக் கடவுளே 

தப்பிப் போன ஒன்றற்கு = என்னை விட்டு தப்பிப் போன ஒன்றான (என் மனதை )
எட்டாத = அறிய முடியாத 

ஞான கலை தருவாய் = ஞானத்தை தருவாய் 

இருங் = வலிய  

காம விடாய்  = காமம் என்ற தாகம் 

பட்டார் = அடைந்தோர் 

உயிரை  = உயிரை 

திருகி பருகி பசி தணிக்கும் = திருகி, பருகி, பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் = கட்டாரி என்றால் குத்தீட்டி. அது போன்ற வேல் போன்ற விழிகளை கொண்ட பெண்களின் 

வலைக்கே மனம் கட்டுண்டதே  = வலையில் கட்டுப்பட்ட மனதை