Sunday, August 31, 2014

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா 


எத்தனை எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கிறோம். யார் யார் சொல்வதேல்லாமோ கேட்கிறோம். எல்லாம் சரி என்று பட்டாலும், நம் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை.

"இதெல்லாம் கேக்க படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சரிப் படுமா " என்று ஒதுக்கி தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.

ரொம்ப ஒண்ணும் படிக்க வில்லை - ஒரே ஒரு வரிதான் படித்தார் பட்டினத்தார் - ஒம்பது கோடி சொத்தை ஒரே நாளில் உதறி விட்டு கிளம்பி விட்டார்.

அவர் வாசித்த  அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே"

ஒரு பொறி பட்டது. கற்பூரம் பற்றிக் கொண்டது.

அவர் பாடிய ஒரு பாடல் கீழே.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் 
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை 
கருப்பையூர் வாராமற் கா

நாம் பாட்டுக்கு பிறந்து விடுகிறோம். நம்மால் எவ்வளவு பேருக்கு வலி, எவ்வளவு  பேருக்கு சங்கடம், அலுப்பு, சலிப்பு.

ஒவ்வொரு முறை நாம் பிறக்கும் போதும் ஒரு அன்னை நம்மை சுமக்க வேண்டி இருக்கிறது. சுமந்து பெற்றால் மட்டும் போதுமா ? பாலூட்டி, கண் விழித்து, வளர்க்க வேண்டி இருக்கிறது. அவளின் உடல் என்ன பாடு பாடும். ஏதோ ஒரு முறை   என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவிகள், எத்தனை தாய் வயிற்றில்  பிறந்து அவளை சங்கடப் படுத்துகிறோம்.

நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் பிரம்மா நம் தலையில் விதியை எழதி  அனுப்பிகிறான். எழுதி எழுதி அவனுக்கும் கை சலித்து போய் இருக்கும். அத்தனை  பிறவிகள்.

பிறந்த பின் சும்மா இருக்க முடிகிறதா. அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிகிறோம்.  நடையாய் நடந்து கால் சலித்துப்  போகிறோம்.

எல்லாம் போதும், இருப்பையூர் வாழும் சிவனே, இன்னும் ஓர் அன்னையின் கருப்பையில்  வாராமல் என்னை காத்தருள்வாய்.


இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 5


அசோக வனத்தில் உள்ள சீதையிடம் இராவணன் தொடர்ந்து பேசுகிறான்.

"அற வழியில் வந்த செல்வம் போன்றவளே. அமிழ்தை விட இனிமையானவளே. என்னை பிறக்காதவன் என்று ஆக்க  வந்தவளே.என் மானம் போக, நான் செய்த பெரிய செயல்கள் எல்லாம் மறந்து போக, நீங்கள் எனக்காக இரங்கும் நாள் வரும் என்ற மருந்தினால் இறந்து இறந்து பிழைகின்றேன். இது யாருக்குத் தெரியும்"

என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்!
                                       என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
"மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்?

பொருள்

அறம் தரும் செல்வம் அன்னீர்! = அறம் தரும் செல்வம் போன்றவளே. அற வழியில் சேர்த்த செல்வம் என்று சொல்லவில்லை. அறம் தரும் செல்வம் என்றான். அறம் செல்வத்தை கொண்டு சேர்க்கும். அறம் அல்லாதது செல்வத்தை அழிக்கும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.

என்பார்  வள்ளுவர்.


அமிழ்தினும் இனியீர்! = அமிழ்தத்தை விட இனிமையானவளே

என்னைப் = என்னை

பிறந்திலன் ஆக்க வந்தீர்;= பிறக்காதவன் என்று ஆக்க வந்தீர்.  அதாவது இராவணன் என்ற ஒருவன் பிறக்கவே இல்லை. அவன் யார் என்று உலகம் அறியாது என்ற நிலையை உண்டாக்கி விட்டீர்கள்.

 பேர் எழில் மானம் கொல்ல, = பெருமை பெற்ற அருமையான மானத்தை கொல்ல


மறந்தன பெரிய = நான் செய்த பெரிய காரியங்கள் எல்லாம் மறந்து போய் விட்டன.


போன வரும் = நீங்கள் இதுவரை என் மேல் இரக்கம் கொள்ளாமல் போனீர்கள். நீங்கள் என் மேல் இரக்கம் கொள்ளும் நாள் வரும். 


மருந்து தன்னால் = அந்த நாள் வரும் என்ற நம்பிக்கையே எனக்கு மருந்து. அந்த மருந்தினால்

இறந்து இறந்து உய்கின்றேன் யான்; = இறந்து இறந்து பிழைக்கின்றேன். 

யார் இது தெரியும் ஈட்டார்? = யாருக்கு இது தெரியும்


காமம் தலைக்கு ஏறும்போது தான் யார் என்பது மறந்து போகிறது.  எண்ணில் அடங்கா  உதாரணங்கள் சொல்லலாம்....பெண்ணின் மயக்கத்தில் தான் யார், தன் நிலை   என்ன அறியாமல் தவறு செய்பவர்கள் ஆயிரம் ஆயிரம்  பேர். 

பெருமைகள் எல்லாம் மறந்து போகிறது. 

காமம் , உயிர் போகும் வலி. 

இல்லையென்றால் அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு  இப்படி நிற்பானா ? 



சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே

சிவ புராணம் - மனம் கழிய நின்ற மறையோனே


பாடல்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

பொருள்

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே = சொல்லும் மனமும் கடந்து நின்ற மறையோனே

கறந்தபால் = அப்போதுதான் கறந்த பாலோடு

கன்னலொடு= கன்னல் என்றால்  கரும்பு. இங்கே  சர்க்கரை

நெய்கலந்தாற் போலச் = நெய் கலந்தார்ப் போல

சிறந்தடியார் = சிறந்து அடியார்

சிந்தனையுள் = சிந்தனையுள்

தேனூறி நின்று  = தேன் ஊற நின்ற

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் = பிறந்த பிறப்பை அறுக்கும் எங்கள் பெருமான்

ஏதோ மாணிக்க வாசகர் சர்கரைப் பொங்கல் செய்வதற்கு சொல்லித் தருவது போல இருக்கிறதா ?

அப்படி அல்ல.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை மாணிக்க வாசகர் அருளிச்  செய்திருக்கிறார்.

எல்லோரும் இன்பம் வேண்டும், இன்பம் வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ?

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

ஆசை புலன்கள் வழி வருகிறது.

புலன்கள் மனதால் செலுத்தப் படுகிறது.

புலன்களை அடக்க வேண்டும் என்றால் மனதை அடக்க வேண்டும்.

மனதை எப்படி அடக்குவது ?

அது தான் சிக்கலான விஷயம்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை கட்டுப் படுத்த நினைக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அது நம்மை மீறிச் செல்லும்.

மருந்து சாப்பிடுவதற்கு முன் குரங்கை நினைக்காதே என்றால் கட்டாயம் நினைக்கும்.

மனதை அடக்குவது என்றால் எது மனதை அடக்கும் ?

மனம் தான் மனதை அடக்க வேண்டும். அது எப்படி மனமே மனதை அடக்க முடியும் ?

மனதை அடக்க இரண்டு வழிகள்.

ஒன்று , மனதை ஒன்றில் இலயிக்க விடுவது. மனம் ஒன்றில் இலயித்து விட்டால் வேறு ஒன்றின் பின்னால் போகாது.

ஆனால் ,  இந்த இலயிப்பு நிரந்தரமாக இருக்காது. இலயிப்பு தீரும்போது, மீண்டும் மனம் அதன் வழியில் தறி கேட்டு ஓட ஆரம்பிக்கும்.

அதற்கு நிரந்திர தீர்வு, "மனோ நாசம்".

மனமே இல்லை என்றால் ?

இதைத்தான் மனோ நாசம் என்கிறார்கள்.

இதைத்தான் இரமண மகரிஷி


பாடல்

இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற

சீர் பிரித்த பின்

இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.


மனம் ஓடுங்கள் மனோ இலயம், மனோ நாசம் என்று இரண்டு உண்டு.
இலையித்துள்ளது (அதாவது இலயித்த மனம்) மீண்டும் எழும்.
மீண்டும் எழாது உரு மாய்ந்தால். அதாவது மனம் நாசம் ஆனால், அது மீண்டும் எழாது.

அதைத்தான் - "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே"   என்றார்.

மனம் கழிந்த பின் நிற்பவன் அவன்.


"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று"

சிற்றின்பம் தாண்டி பேரின்பம் அடையும் போது அந்த இன்பம் பாலோடு, சர்க்கரை சேர்த்து , அதோடு நெய்யும் கலந்து தேன் போல தித்திக்கக் கூடியது.

அந்த பரமானந்தம் பெற்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்.


"அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை " என்பார்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை என்று கரை புரண்டு ஓடும் ஆனந்த  வெள்ளத்தைப் பற்றி கூறுகிறார் அபிராமி  பட்டர்.

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

இராமலிங்க அடிகளார் கூறுகிறார்

தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்த நறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே

பேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றிபத்தைத்தான் உதாரணம் சொல்ல முடியும். 

இது ஒரு சுவை. இதை விட பெரிய சுவை பேரின்பம்.

ஆழ்ந்து படித்து உணர வேண்டிய பாடல்கள். 










Saturday, August 30, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4


அசோகவனத்தில் சிறை இருந்து சீதையிடம் இராவணன் பேசுகிறான்.

"ஈசன் முதல் மானிடர் வரை அனைவரும் அஞ்சும்படி மூன்று உலகும் கட்டி காக்கும் என்னை, வீரர்கள் வரிசையில் உள்ள ஒருவர்க்கும் நான் தோற்றது இல்லை. ஆனால், இன்று ஒரு பெண்ணிடம் வைத்த ஆசை நோய் என்னை கொன்று விட்டது என்று சொன்னால், என் ஆண்மை மாசு அடையாதோ ?"

பாடல்

ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால்
                                        வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான்
                                    மாசுணாதோ?

பொருள்

ஈசனே = ஈசன்

முதலா = முதல்

மற்றை மானிடர் இறுதி ஆகக் = மனிதர்கள் வரை

கூச = அஞ்சிக் கூசும்படி

மூன்று உலகும் காக்கும் = மூன்று உலகையும் காக்கும்

கொற்றத்தென் = என் அரசின்

வீரக் கோட்டி = வீரர்கள் கோட்டில், வீரர்கள் வரிசையில் 

பேசுவார் ஒருவர்க்கு = பேசப்படும் ஒருவர்க்கும்

ஆவி தோற்றிலென் = ஆவி தோற்றது இல்லை

பெண்பால் வைத்த = பெண் மேல் வைத்த

ஆசை நோய் கொன்றது என்றால் =ஆசை நோய் கொன்றது என்றால்

ஆண்மைதான் மாசுணாதோ? = என் ஆண்மை மாசு அடையாதா ?

ஆசை என்பது நோய். அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று ஒன்றுதான் முடிவு.

பேராசை எனும் நோயில் (பிணி) கட்டப்பட்டு (பிணிபட்டு ) என்பார் அருணகிரிநாதர்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.


துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார்  வள்ளுவர்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.

ஒரு பக்கம் ஆசை என்னும் நோய். 

இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி  மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம். 

இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம்.

ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது  என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். 

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை. 

இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக்  காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்வின்  தத்துவங்கள் விளங்கும். 

விளங்கிக் கொள்வோம். 




Friday, August 29, 2014

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை


திருவிளையாடல் புராணம்.

அரசன் குதிரை வாங்கத் தந்த பணத்தில் திருபெருந்துறையில் கோவில் கட்டினார் மாணிக்க வாசகர்.

இறைவன் நரிகளை பரிகளாக்கி  தந்தான். பின் , அந்த பரிகள் மீண்டும் மீண்டும்   நரிகளாகி காட்டுக்குள் சென்று விட்டன.

கோபம் கொண்ட அரசன், மாணிக்க வாசகரை சுடு மணலில் உருட்டும்படி கட்டளை இட்டான்.

மாணிக்க வாசகரின் துயர் தீர்க்கும் பொருட்டு , மாணிக்க வாசகரின் பெருமையை உலகம் அறியும் பொருட்டு சிவன் நடத்திய திருவிளையாடலை காண்போம்.

திருவிளையாடல் என்றால் ஏதோ இறைவன் பொழுது போகாமல் செய்த விளையாடல் என்று நினைக்கக் கூடாது. அந்த கதைகளின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப் பற்றி சிந்திப்போம்.

பாடல்

பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடியார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

சீர் பிரித்த பின்

பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போனபின்
விண் சுமந்த சுர நதி என பெருகுவித்த வையை இது விடையவன்
மண் சுமந்து திருமேனி மேல் அடி வடு ச்சுமந்த கதை ஓதுவாம் 


பொருள்

பண் சுமந்த = இசையோடு கூடிய பாடல்களை கொண்ட

மறை நாடரும் =  மறைகள் ஓதும் நாடார்

பொருள் = பொருள் செறிந்த

பதம் = திருவடிகளை

சுமந்த = சூடிய

முடியார் = தலையினை கூடிய மாணிக்க வாசகரின்

மனம் = மனம்

புண் சுமந்த துயர் தீர வந்த = புண் படும்படி நிகழ்ந்த துயர் தீர வந்த

 பரி நரிகளாய் அடவி போனபின் = குதிரைகள் நரிகளாகி கானகம் போன பின்

விண் சுமந்த = ஆகாயம் சுமந்த

சுர நதி என  = கங்கை என

பெருகுவித்த வையை இது = பெருகி வந்த வைகை இது

விடையவன் = எருதின் மேல் ஏறிய சிவன்  

மண் சுமந்து = மண் சுமந்து

திருமேனி மேல் = தன்னுடைய திருமேனியில்

அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம் = அடி பட்டு வடு சுமந்த கதையைச் சொல்லுவாம்

எவ்வளவு அழகான பாடல் !

மேலும் சுவைப்போம் , சிந்திப்போம்


Thursday, August 28, 2014

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி 


அசோக வனத்தில் சீதையை சந்திக்கிறான் இராவணன். அவளிடம் தன் மனதில் உள்ள காதலை சொல்லுகிறான்.

"எந்த பெண்ணைப் பார்த்தாலும் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. யார் பெயரைக் கேட்டாலும் உங்க பேர் மாதரியே இருக்கு. எந்த கண்ணைப் பார்த்தாலும் உங்க கண்ணைப் பார்ப்பது போலவே இருக்கு. மன்மதனை என் மேல் அம்பு தொடுக்கும்படி செய்து, அந்த அம்பு தைத்து வரும் புண் எல்லாம் எனக்கே என்று ஆக்கி இதுவரை நடக்காத ஒன்றை செய்து விட்டீர்கள் "

என்றான்.

பாடல்

‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.

பொருள்

‘பெண் எலாம் நீரே ஆக்கி = எல்லா பெண்களையும் நீங்களே ஆகி

பேர் எலாம் உமதே ஆக்கி = எல்லா பெயர்களையும் உங்கள் பெயராக ஆக்கிக் கொண்டீர்கள்


கண் எலாம் நும் கண் ஆக்கி = எல்லா கண்களையும்  உங்கள் கண்களாக ஆக்கி

காமவேள் என்னும் நாமத்து = காம வேள் என்ற நாமம் கொண்ட

அண்ணல் = அண்ணல்

எய்வானும் ஆக்கி = என் மேல் குறிவைத்து எய்து 

ஐங் கணை  = ஐந்து மலர் அம்புகளை

அரியத் தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி = இதுவரை இல்லாத புண்களை எல்லாம் எனக்கே ஆக்கி

விபரீதம் புணர்த்து விட்டீர் = விபரீதம் செய்து விட்டீர்கள்

மன்மதனை , காமவேள் என்னும் நாமத்து அண்ணல் என்று மிக மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறான். காதல் படுத்தும் பாடு.

மன்மதனுக்கு வேறு ஒரு வேலையும் இல்லை. முழு நேரமும் இராவணனன் மேல் அம்பு விடுவதுதான் அவன் வேலை. "புண் எலாம் எனக்கே ஆக்கி".

வேறு யாருக்கும் புண் இல்லை. எனக்கு மட்டும்தான்.

பெண் எலாம் நீயே ஆகி என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. நீரே ஆகி  என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறான். 

பெண்ணின் மேல் காதல். 
பெண்ணின் மேல் மரியாதை.
பெண்ணின் அழகின் மேல் மதிப்பு.

அவள் மேல் கொண்ட அன்பால், மரியாதையால், மதிப்பால் அவளிடம் உள்ளத்தை  திறந்து உண்மையை சொல்லும் பாங்கு. 

எல்லாவற்றிற்கும் நடுவில் நின்றது  - அறம்.

Wednesday, August 27, 2014

சிவ புராணம் - பூவில் மணம் போல

சிவ புராணம் - பூவில் மணம் போல


தோற்றம், நிலைப்பு, இறுதி என்ற இந்த மூன்றும் இல்லாதவனே. அனைத்து உலகையும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய். என்னை இந்த உலகில் போக்குவாய். என்னை உன்னுடைய பணியில் புகுவிப்பாய். பூவில் மணம் போல இருப்பவனே. தூரத்தில் இருப்பவனே. அருகில் இருப்பவனே.

பாடல்

ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

பொருள்


ஆக்கம் = தொடக்கம்

அளவு = இருத்தல்

இறுதி யில்லாய் = முடிவு இல்லாதவனே

அனைத்துலகும் = அனைத்து உலகையும்

ஆக்குவாய் = ஆக்குவாய்

காப்பாய் = காத்தருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் = என்னை இந்த பிறவியில் போக்குவாய்

புகுவிப்பாய் நின்தொழும்பின் = உன் பணியில் என்னை புகும்படி செய்வாய்

நாற்றத்தின் நேரியாய் = பூவின் மணம் போல

சேயாய் = தூரத்தில் இருப்பவனே

நணியானே = அருகிலும் இருப்பவனே


சரி. மிக எளிமையான பகுதி. மேலே செல்வோம் என்று அவசரப் படக்கூடாது.

எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு உண்டு. ஒரு நியதி உண்டு.

பிறத்தல், வளர்தல்,அழிதல் என்று ஒரு வரை முறை உண்டு. இதைத்தான் நாம் தினமும்  காண்கிறோம்.

நாம் காணாத  ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள  முடியாது.

பிறக்காத ஒன்றை, இறக்காத ஒன்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா ?

இறைவன் இந்தக்  கணக்கில்   அடங்காதவன்

காலமும் கணக்கும் நீத்த காரணன் என்பார் கம்பர்

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும்,கணக்கும், நீத்த காரணன்-கை வில் 
                                  ஏந்தி,
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும்வெள்ளி்ப்பொருப்பும் விட்டு,-
                         அயோத்தி வந்தான்;

இறைவன் பிறந்து, வளர்ந்து, அழிவது என்ற கணக்கில் வராதவன். அதை எப்படி நாம் புரிந்து கொள்வது ?

"ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்றார்.

ஏன் பூவின் மணம் என்று சொன்னார் ?

பூ தெரிகிறது. ஆனால் அதில் உள்ள மணம் தெரியாது.

கணவனும் மனைவியும் தெரிகிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள அன்பு தெரியாது.

செயல் தெரியும். செயலுக்கு  பின்னால் இருக்கும் அறிவு தெரியாது.

அது போல உலகம் தெரிகிறது. அதற்கு பின்னால் உள்ள இறைவன் தெரியாது.

பூவை நுகர்ந்தவர்களுக்கு அதன் மணம் தெரியும்.

மணி வாசகர் சொல்கிறார் ....அனைத்து உலகையும் ஆக்குவாய், அழிப்பாய், காத்து  அருள்வாய் என்று.

நாம் செய்யும் செயல்களில் எத்தனை சதவீதம் நாம் நினைத்து, முடிவு செய்து நடப்பது.

நாளை என்ன செய்வோம் என்று நமக்குத் தெரியாது.

படுக்கப் போகும் போது திருமகள் போல இருந்த கைகேயி, சிறிது நேரத்தில் கூனி சொல் கேட்டு  கொடுமையிலும் கொடுமையான பெண்ணாக ஆனாள் . நினைத்திருப்பாளா இப்படி தான் செய்வோம் என்று.


என் செயல் ஆவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன் செயல் என்று உணரப்  பெற்றேன் என்றார்  பட்டினத்தார்.

 என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
     உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
     பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
     முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே



நான் இங்கு வந்து பிறந்ததும், இப்படி வளர்ந்ததும், இன்று இப்படி இருப்பதும் இறைவா உன் செயல் என்று அனைத்தையும் அவனிடம் விட்டு  விடுகிறார்.

"போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில் "

 எல்லாம் அவன் செயல்.   சரணாகதி.

"சேயாய் நணியானே" - அறிந்து கொள்ளும் வரை அவன் தூரத்தில் இருப்பவன். அறிந்து கொண்டவ பின் அண்மையில் இருப்பவன்.

யாவர்க்கும் அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பெம்மான் இவன் அன்றே என்றார் திரு ஞான  சம்பந்தர். பெம்மான் அவன் அன்றே என்று   .சொல்லவில்லை.  "இவன்" என்பது அண்மைச் சுட்டு.  "அவன்" என்பது  சேய்மைச் சுட்டு.

மிக மிக நிதானமாக படிக்க வேண்டிய நூல் சிவ புராணம்.