Saturday, September 13, 2014

விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே

விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே 

காதலியின் வரவுக்காக காத்திருக்கிறான் காதலன்.

தூரத்தில் அவள் வருவது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் இருக்கும் இடம் நோக்கி வருகிறாள்.

கிட்ட வர வர அவன் இதயத் துடிப்பு எகிறுகிறது. உள்ளம் உருகுகிறது.

இன்னும் அருகில் வந்து விட்டாள் .  அவள் கூந்தல் காற்றில் அலை பாய்வது தெரிகிறது. அவள் கரிய  கூந்தல் அவன் மனதை  மயக்குகிறது. மயில் போல சாயல்.  பெரிய தனங்கள். இடையோ  சிறியது. சிறு குழந்தை போன்ற  முகம்.

அவளின் அழகைப் பார்க்கும் போது கை எடுத்து கும்பிடலாம் போல இருக்கும் அழகு.

அப்படி ஒரு தெய்வீக அழகு !

பாடல்

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும் 
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல் 
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ 
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே

Friday, September 12, 2014

இராமாயணம் - நாய் அடியனேன்

இராமாயணம் - நாய் அடியனேன் 

நாய் நல்ல பிராணிதான். நன்றியுள்ள பிராணிதான். இருந்தாலும் நம் சமய நூல்களில் மிக மிக கீழான ஒன்றை சுட்டிச் சொல்ல வேண்டும் என்றால் நாயை உதாரணம் கட்டுகிறார்கள்.

"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்பார்  மணிவாசகர்.

"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து" என்பதும் அவர் வாக்கே.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--

தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே

என்பார் அபிராமி பட்டர்.

ஏன் நாயை உதாரணம் சொல்லுகிறார்கள்.

நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.

அது உணவு உண்ணும். உண்ட பின், தன் உடலுக்கு எது சரியில்லையோ அதை கக்கி  விடும். கக்கிய பின், மீண்டும் அந்த கக்கியதை உண்ணும். வேறு எந்த விலங்கும் செய்யாத அருவருப்பான  செயல் இது.

நாம் என்ன அப்படி செய்கிறோம் ?

தவறு என்று தெரிந்தும் அதே செயலை நாம் மீண்டும் மீண்டும் செய்வது இல்லையா ?

உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் இனிப்பை, எண்ணெய் பலகாரங்களை, அதிகமான உணவை உட்கொள்வது இல்லையா.

உணவு ஒரு உதாரணம். இப்படி பலப் பல தீய செயல்களை நாம் தெரிந்தே செய்கிறோம்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அறிந்த பின்னும் ஆசை  வைக்கிறோம்.

பிறன் மனை நோக்கும் பாவம், பொறாமை, கோபம், அழுக்காறு, அவா, இன்னாச் சொல், என்று நாம் செய்யும் தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரிந்தே செய்யும்  தவறுகள்.

தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் பிறவி  எடுக்கிறோம்.இது ஒரு அருவருப்பான செயல் இல்லையா ?

எனவே தான் நம்மை நாயோடு ஒப்பிட்டுப் பேசினார்கள் நம் சமயக் குரவர்கள்.

வாலி, இராமனின் அம்பு பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான்.

"இராமா, உன்னுடைய  கூரிய அம்பினால் எய்து, நாய் போன்ற அடியவனான என்னுடைய ஆவி போகும் வேளையில் வந்து அறிவு தந்து அருளினாய். மூவரும்  நீ,முதல்வனும் நீ...."என்று  போற்றுகிறான்.

அப்படி என்ன செய்த தவறையே மீண்டும் செய்து  விட்டான் வாலி ?

வாலி இந்திரனின்  அம்சம்.

முன்பு ஒரு  முறை  மாற்றான்  மனைவியான அகலிகையை விரும்பினான். அதற்கு தண்டனை பெற்றான்.

மீண்டும் மாற்றான் மனைவியை (சுக்ரீவனின் மனைவியான ருமையை) பிடித்து வைத்துக் கொண்டான். செய்த தவறை மீண்டும் செய்கிறான்.

அதை அவனே உணர்ந்து சொல்கிறான் "நாய் அடியேனின் ஆவி போகும் வேளையில் நல் அறிவு தந்தாய் "என்று.

இராமன் தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.

வாலி தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.

நீங்கள் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கிறீர்களா? அது தான் கேள்வி. அது தான்  முக்கியம்.

சிந்தியுங்கள். வாலி வதம் நம்மை உயர்த்திக் கொள்ள உதவி செய்தால் அது அது படித்ததின் பலன்.

பாடல்

ஏவு கூர் வாளியால்
      எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
      அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
      முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
      பகையும் நீ! உறவும் நீ!

பொருள்

இதற்கு முந்தைய ப்ளாகில் பார்த்தோம். பார்க்காதவர்கள் அந்த ப்ளாகை  மீண்டும் ஒரு  முறை படிப்பது நலம்.

Thursday, September 11, 2014

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம்

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம் 

பாரதம் ஏன் பாடினேன் என்பதற்கு காரணம் கூறுகிறார் வில்லி புத்துராழ்வார்.

பாரதம் மறை ஓதும் தேவர்களும், முனிவர்களும் , மற்றவர்களும் கூறும் அரிய  பெரிய கருத்துகளை கொண்டது என்பதினால் அல்ல, அதில் இடை இடையே மாதவனான கண்ணனின் சரித்திரம் இடையிடையே வரும் என்ற ஆசையால் இந்த பாரதத்தை நான் எழுதுகிறேன்  என்கிறார்.

பாடல்

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.

பொருள்

முன்னு = அனைத்திற்கும் முன்னால்  இருக்கும்

மாமறை = பெரிய வேதங்களை (கூறும்)

முனிவருந் = முனிவர்களும்

தேவரும் = தேவர்களும்

பிறரும் = மற்றவர்களும்

பன்னு = சொல்லும்

மாமொழிப் = பெரிய கருத்துகள் உள்ளதும்

பாரதப் பெருமையும் பாரேன் = பாரத கதையில் உள்ள பெருமைக்காக இல்லை

மன்னு= என்றும் நிலைத்து நிற்கும்

மாதவன் = கண்ணன்

சரிதமு மிடையிடை வழங்கும் = சரித்திரம் இடை இடையே வரும்

என்னு மாசையால்  = என்ற ஆசையால்

யானும் = நானும்

ஈது = இதை

இயம்புதற் கிசைந்தேன் = சொல்லுவதற்கு ஒத்துக் கொண்டேன்

Wednesday, September 10, 2014

இராமாயணம் - பிறன் பழி - பாகம் 2

இராமாயணம் -  பிறன் பழி - பாகம் 2 

ஒரு வீட்டில் கணவன் காலையில் செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவி காப்பியை கொண்டுவந்து மேஜை மேல் வைத்து விட்டுப் போகிறாள். கணவன் , செய்தித்தாள் படிக்கும் சுவாரசியத்தில் காப்பி கோப்பையை பார்க்கவில்லை. செய்தித் தாளை திருப்பும் போது கை தட்டி காப்பி கொட்டி  விடுகிறது.

அந்த சமயத்தில் ....

நிலை - 1

கணவன்: சனியனே, காப்பிய கைக் கிட்டவா கொண்டு வந்து வைப்ப ? எத எங்க வைக்கிறதுனு தெரியாது...என்று கத்துகிறான்...

மனைவி: கண்ணு என்ன பிடனியிலா இருக்கு ...முன்னாடிதான இருக்கு ? பாக்க வேண்டியது தான ?

இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தம் சொல்லி சண்டை வலுக்கிறது.

நிலை 2

கணவன்:  ஐயையோ ... நீ காப்பிய இங்க வச்சத நான் பார்க்கவே இல்ல. என் தப்புதான்... பாத்து இருக்கணும்.

மனைவி: நீங்க என்ன பண்ணுவீங்க...நான் அங்க வச்சிருக்க கூடாது...இல்லேன்னா வச்சத உங்க கிட்டயாவது சொல்லி இருக்கணும்....என் தப்புதான் ...

இப்படி ஒருவர் மற்றவரின் பழியை ஏற்றுக் கொண்டு மற்றவர் செய்த தவறுக்கு தான் நாணும் போது இல்லறம் இனிக்கும்.

ஒரு அலுவலகத்தில்

ஒரு ரிப்போர்ட்  அனுப்புகிறோம்.அதில் ஏதோ ஒரு தவறு இருந்து விடுகிறது. சரியாக பார்க்காமல் நாமும் அனுப்பி விடுகிறோம்.  மேலிடத்தில் கண்டு பிடித்து நம்மை திட்டுகிறான்.

நிலை 1

நாம் அந்த ரிபோர்டை தயார் செய்த ஆளை கூப்பிட்டு சத்தம்  போடுகிறோம்.அவனும் "சார், நான் தான் தப்பு பண்ணினேன், நீங்களாவது கண்டு பிடிசிருகலாம்ல " என்று நம்மை முறைக்கிறான்...

மாறாக

நிலை 2

நாம் அந்த ரிபோர்ட் தயார் செய்த  ஆளிடம்,"நீங்க தந்த ரிபோர்ட்ட நான்  சரியா படிக்காம அனுப்பிட்டேன்...அதுல ஏதோ தப்பு இருக்காம்...நான் ஒழுங்கா படிச்சிருக்கணும் "என்று  சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்....அவன் என்ன சொல்வான் "சாரி சார், தப்பு என் மேலதான், நான் சரியா செக் பண்ணி இருக்கணும் ...இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன் "என்று சொல்வான்.

அவன் பழியை நாம் ஏற்று அதற்காக நாம் வெட்கப்  படும்போது, அவனும் அதை ஏற்று அவன் வெட்கப்  படுவான்.

அலுவலகம் இனிமையாக  இருக்கும்.

அதை விடுத்து ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால் எதுவும் சரியாக  நடக்காது.

இன்று குடும்பங்களும், சமுதாயமும் சந்திக்கும் சிக்கல் இதுதான். யாரும் எதற்கும் பொறுப்பு எடுக்கத் தயாராக இல்லை. மற்றவனை குறை கூறியே பொழுதை போக்கி  விடுகிறார்கள்.

பிறருடைய பழிக்காக எவன் தான் நாணுவானோ அவன் நாணத்தின் உறைவிடம் என்பார் வள்ளுவர்.....

பாடல்

'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி' என்னும், உலகு.

 பொருள்

'பிறர் பழியும் = மற்றவர்களின் பழியையும்

தம் பழியும் = தன்னுடைய பழி என்றே

நாணுவார் = நாணுவார். நாணம் கொள்வார்

நாணுக்கு = நாணத்தின்

உறைபதி' = உறைவிடம்

என்னும், உலகு = என்று உலகம்

.சான்றோர்கள் மற்றவர்களின் தவறுகளை தங்களின் தவறு என்றே எண்ணி அதற்காக வெட்கப் படுவார்கள்.

மாறாக, முட்டாள்கள் தங்கள் தவறையும் மற்றவர்கள் தவறு என்றே கூறித்  திரிவார்கள்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்று விவிலியம்  கூறும்.

இன்று முதல் உங்கள் கணவனோ, மனைவியோ - அவர்களின் குற்றத்தை உங்கள் குற்றமாக எண்ணி அவர்களிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு பெரிய    மாற்றம்   குடும்பத்தில் நிகழ்கிறது என்று பாருங்கள்.

சரி,இதற்கும் வாலி வதைக்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கே ...

----------------------------------------------------------------------------------------------------------

பாகம் 2

இராமன் மறைந்து இருந்து அம்பு எய்து விட்டான். அந்த அம்பை வாலி தன் உடலில் ஊடுருவிப்  போகாமல் தடுத்து நிறுத்தி விட்டான்.  இது யார் எய்த அம்பு என்று   பார்க்கிறான்.

அது இராமன் எய்த அம்பு என்று தெரிந்து கொள்கிறான்.

அந்த நிலையில் அவனுக்கு என்ன உணர்ச்சி தோன்றியிருக்க வேண்டும் ?

அதிர்ச்சி அல்லது கோபம் அல்லது வலி அல்லது வேதனை அல்லது வருத்தம் என்று  இந்த உணர்சிகள் ஏதாவது தோன்றியிருக்க வேண்டும் அல்லவா ?

இவை எல்லாம் தோன்றவில்லை.

அவனுக்கு வெட்கம் வந்ததாம்.

அதுவும் அந்த வெட்கத்தை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கிக் கொண்டான்  என்கிறார் கம்பர்.

இராமன் செய்த தவறுக்கு வாலி வெட்கப் படுகிறான்.

பாடல்

இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது என்னா,

    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள் 

இல் அறம் துறந்த நம்பி = மனைவியை துறந்த நம்பி 

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக 

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில் அறத்தை துறந்து நிற்கும் வீரன் 

தோன்றலால் = தோன்றியதால் 

வேத நூலில் = வேத நூல்களில் சொல்லப் பட்ட 

சொல் அறம் துறந்திலாத = சொல் அறத்தை துறக்காத 

சூரியன் மரபும் = சூரிய குலத்தின் மரபும் 

தொல்லை = பழமையான 

நல் அறம் துறந்தது = நல்ல அறங்களை துறந்தது 

என்னா = எண்ணி 

நகை வர = சிரிப்பு வர 

நாண் உள் கொண்டான் = நாணத்தை உள்ளே கொண்டான் 

இராமன் செய்த பழிக்கு வாலி நாணுகிறான். நாணத்தை உள் கொண்டான் என்று ஒரு உள் குத்தாக கம்பர் சொல்கிறார்.

உள்ளத்தில் கொண்டான். 
உட்கொண்டான்
வெளியே சொல்ல முடியாமல் விழுங்கினான் என்று பொருள் கொள்ளலாம். 

இப்போது மேலே உள்ள குறளைப் படித்துப் பாருங்கள். 

" பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்"

இப்போது இராமன் செய்த பழிக்கு நாணுகிறான். உலகில் நடக்கும் தவறுகளுக்கு தானும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்று ஆன்றோர் நினைப்பர்.

பின்னால் தான் செய்த பழிக்கும் வாலி நாணுகிறான். 

தான் ஏதோ தவறு செய்து விட்டோம், அதனால் இது நிகழ்ந்தது என்று வாலி நினைக்கிறான். 

அப்படி அவன் செய்த தவறுதான் என்ன ? அதை எப்படி அவன் வெளிப் படுத்துகிறான் என்று மேலும் சிந்திப்போம்.

இராமாயணம் - பிறன் பழி

இராமாயணம் -  பிறன் பழி 

ஒரு வீட்டில் கணவன் காலையில் செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவி காப்பியை கொண்டுவந்து மேஜை மேல் வைத்து விட்டுப் போகிறாள். கணவன் , செய்தித்தாள் படிக்கும் சுவாரசியத்தில் காப்பி கோப்பையை பார்க்கவில்லை. செய்தித் தாளை திருப்பும் போது கை தட்டி காப்பி கொட்டி  விடுகிறது.

அந்த சமயத்தில் ....

நிலை - 1

கணவன்: சனியனே, காப்பிய கைக் கிட்டவா கொண்டு வந்து வைப்ப ? எத எங்க வைக்கிறதுனு தெரியாது...என்று கத்துகிறான்...

மனைவி: கண்ணு என்ன பிடனியிலா இருக்கு ...முன்னாடிதான இருக்கு ? பாக்க வேண்டியது தான ?

இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தம் சொல்லி சண்டை வலுக்கிறது.

நிலை 2
 
கணவன்:  ஐயையோ ... நீ காப்பிய இங்க வச்சத நான் பார்க்கவே இல்ல. என் தப்புதான்... பாத்து இருக்கணும்.

மனைவி: நீங்க என்ன பண்ணுவீங்க...நான் அங்க வச்சிருக்க கூடாது...இல்லேன்னா வச்சத உங்க கிட்டயாவது சொல்லி இருக்கணும்....என் தப்புதான் ...

இப்படி ஒருவர் மற்றவரின் பழியை ஏற்றுக் கொண்டு மற்றவர் செய்த தவறுக்கு தான் நாணும் போது இல்லறம் இனிக்கும்.

ஒரு அலுவலகத்தில்

ஒரு ரிப்போர்ட்  அனுப்புகிறோம்.அதில் ஏதோ ஒரு தவறு இருந்து விடுகிறது. சரியாக பார்க்காமல் நாமும் அனுப்பி விடுகிறோம்.  மேலிடத்தில் கண்டு பிடித்து நம்மை திட்டுகிறான்.

நிலை 1

நாம் அந்த ரிபோர்டை தயார் செய்த ஆளை கூப்பிட்டு சத்தம்  போடுகிறோம்.அவனும் "சார், நான் தான் தப்பு பண்ணினேன், நீங்களாவது கண்டு பிடிசிருகலாம்ல " என்று நம்மை முறைக்கிறான்...

மாறாக

நிலை 2

நாம் அந்த ரிபோர்ட் தயார் செய்த  ஆளிடம்,"நீங்க தந்த ரிபோர்ட்ட நான்  சரியா படிக்காம அனுப்பிட்டேன்...அதுல ஏதோ தப்பு இருக்காம்...நான் ஒழுங்கா படிச்சிருக்கணும் "என்று  சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்....அவன் என்ன சொல்வான் "சாரி சார், தப்பு என் மேலதான், நான் சரியா செக் பண்ணி இருக்கணும் ...இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன் "என்று சொல்வான்.

அவன் பழியை நாம் ஏற்று அதற்காக நாம் வெட்கப்  படும்போது, அவனும் அதை ஏற்று அவன் வெட்கப்  படுவான்.

அலுவலகம் இனிமையாக  இருக்கும்.

அதை விடுத்து ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால் எதுவும் சரியாக  நடக்காது.

இன்று குடும்பங்களும், சமுதாயமும் சந்திக்கும் சிக்கல் இதுதான். யாரும் எதற்கும் பொறுப்பு எடுக்கத் தயாராக இல்லை. மற்றவனை குறை கூறியே பொழுதை போக்கி  விடுகிறார்கள்.

பிறருடைய பழிக்காக எவன் தான் நாணுவானோ அவன் நாணத்தின் உறைவிடம் என்பார் வள்ளுவர்.....

பாடல்

'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி' என்னும், உலகு.

 பொருள்

'பிறர் பழியும் = மற்றவர்களின் பழியையும்

தம் பழியும் = தன்னுடைய பழி என்றே

நாணுவார் = நாணுவார். நாணம் கொள்வார்

நாணுக்கு = நாணத்தின்

உறைபதி' = உறைவிடம்

என்னும், உலகு = என்று உலகம்

.சான்றோர்கள் மற்றவர்களின் தவறுகளை தங்களின் தவறு என்றே எண்ணி அதற்காக வெட்கப் படுவார்கள்.

மாறாக, முட்டாள்கள் தங்கள் தவறையும் மற்றவர்கள் தவறு என்றே கூறித்  திரிவார்கள்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்று விவிலியம்  கூறும்.

இன்று முதல் உங்கள் கணவனோ, மனைவியோ - அவர்களின் குற்றத்தை உங்கள் குற்றமாக எண்ணி அவர்களிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு பெரிய    மாற்றம்   குடும்பத்தில் நிகழ்கிறது என்று பாருங்கள்.

சரி,இதற்கும் வாலி வதைக்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கே ...

Monday, September 8, 2014

இராமாயணம் - பாவம் நீ, தர்மம் நீ - பாகம் 2

இராமாயணம் - பாவம் நீ, தர்மம் நீ - பாகம் 2

வாலி வதை.

அது வாலிக்கு வதை.

நமக்கு வாதை.

தொண்டையில் சிக்கிய முள்ளாக , மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஒரு அவஸ்தை. இராமன் தவறு செய்தானா ? இராமன் தவறு செய்வானா ? இதுவா இராமன் காட்டிய அறம் , இதுவா இராமனின் வழி என்று இராம பக்தர்கள் சங்கடப் படும் இடம்.

காலம் காலமாக பேசப் பட்டு வரும் ஒரு சிக்கலான இடம். வால்மீகியை தழுவி எழுதிய கம்பன் பல இடங்களில் தன் காப்பியத்தில் மாற்றம் செய்திருக்கிறான்.

ஆனால், இந்த வாலி வதையை  மட்டும் அப்படியே எடுத்தாண்டிருக்கிறான்.

கம்பன் விரும்பி இருந்தால், அதில் ஒரு மாற்றம் செய்திருக்க முடியும். இராமன் மறைந்திருந்து கொல்லவில்லை. நேரில் நின்றுதான் போரிட்டான் என்று மாற்றி அமைத்திருக்க வேண்டும்.

ஏன் செய்யவில்லை ?

மாற்றாமல் தந்ததில் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.

அது என்ன காரணம் ? அப்படி அந்த கதையில் என்ன தான் இருக்கிறது ?

வலி மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால், வலி இருந்தால் தான் நாம் அந்த வலியைப் பற்றி சிந்திப்போம், மருத்துவரிடம் போவோம், மருந்து சாப்பிடுவோம்....அந்த வலி போகும் வரை அதற்கு சிகிச்சை செய்வோம்.

வாலி வதை ஒரு வலி. நம்மை அங்கு இங்கு அலைய விடாமல் மீண்டும் மீண்டும் அதை சிந்திக்க வைக்கிறது.

ஏதோ

இராமனின் அம்பால் அடி பட்டு கிடக்கிறான் வாலி.

இராமன் மேல் பல குற்றச்சாட்டுகளை சொல்கிறான், வாதம் செய்கிறான். இறுதியில் இராமனைப்  போற்றுகிறான்.

இராமனை பாராட்டும் போது மூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ, மற்றும் நீ, பாவம் நீ, தருமம் நீ, பகை நீ, உறவு நீ என்று கூறுகிறான்.

ஏதோ ஒன்று அதில் இருக்கிறது. அது என்ன ? அதை அறிந்து கொள்ளும் வரை, இந்த வலி இருந்து கொண்டே தான் இருக்கும்.

மீண்டும் ஒரு முறை வாலி வதம் பற்றி சிந்திப்போம்.

வாலி, இராமனின் அம்பால் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான்.

இராமனை திட்டுகிறான், பழிக்கிறான். வாதம் புரிகிறான். கடைசியில் இராமனே பரம்பொருள் என்று அறிகிறான்.

இராமா, நீயே மூவரும், நீயே முதல்வன், அனைத்தும் நீ, மற்றவைகளும் நீ, பாவம் நீ, தருமம் நீ, பகை நீ, உறவு நீ என்று சொல்கிறான்.

எளிமையான பாடல்

பாடல்

ஏவு கூர் வாளியால்
      எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
      அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
      முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
      பகையும் நீ! உறவும் நீ!

பொருள்

ஏவு கூர் வாளியால் = ஏவப் பட்ட கூர்மையான அம்பால்

எய்து = என் மேல் எய்து

நாய் அடியனேன் = நாய் போன்ற அடியவனான என்னை

ஆவி போம் வேலைவாய் = ஆவி பிரிகின்ற வேளையில்

அறிவு தந்து அருளினாய் = அறிவு தந்து அருள் செய்தாய்

மூவர் நீ! = முமூர்த்திகளும் நீ

 முதல்வன் நீ! = அனைத்திற்கும் மூலம் நீ

முற்றும் நீ! மற்றும் நீ! = அனைத்தும் நீ, அவை இல்லாதவைகளும் நீ

பாவம் நீ! தருமம் நீ! = பாவம் நீ, தர்மம் நீ

பகையும் நீ! உறவும் நீ! = பகையும் நீ, உறவும் நீ

வாலி மிகப் பெரிய அறிஞன். இறக்கும் தருவாயில் அவன் தரும் வாக்கு மூலம் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.

வாலியை கம்பன் " செவி உறு கேள்விச் செல்வன்" என்பான்.

வாலி இராமனை பற்றிக் கூறியதில், எல்லாம் சரி, அது என்ன பாவம் நீ, பகை நீ ?

இறைவனை எப்படி பாவம் என்று சொல்ல முடியும் ? அவன் எப்படி பகையாவான் ?

அந்த கேள்வி அப்படியே இருக்கட்டும். பின்னால் பார்ப்போம் அதன் விடையை.

இராமன் கானகம் வந்தது தவம் செய்ய.

"தாங்கரும் தவம் மேற் கொண்டு பூழி வெங்கானம் நல்கி, புண்ணிய துறைகள் ஆடி"

அதற்குத்தான் வந்தான்.

ஆனால் , வந்த இடத்தில் கவந்தன், வாலி, கும்ப கர்ணன், இராவணன் ஆகியோரை  கொன்றான். இவர்களை கொல்லவா இராமன் கானகம் வந்தான் ? இல்லை. பின் ஏன் இவர்களை கொன்றான் ?

அவர்கள் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொண்டார்கள்.

அவர்களின் பாவம். அவர்களின் அறம் பிறழ்ந்த வாழ்கை முறை அவர்களுக்கு அந்த முடிவை தேடித் தந்தது.

அறம் அல்லாதது பாவம்.

அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

அவர்கள் செய்த பாவம் இராமன் வடிவில் வந்து அவர்களுக்கு முடிவை தேடித் தந்தது.

அவர்கள் செய்த பாவம் இராமனை அவர்களுக்கு பகையாக நிறுத்தியது.

இராமன் அவர்களின்  பாவமாக,அவர்களின் பகையாக  நின்றான்.

பிறன் மனை கவர்ந்த பாவம் இராவணனுக்கு இராமனை அவனின் பகையாக மாற்றியது.

அறம் தவறி நிற்பவர்களை அந்த அறமே  அழிக்கும்.

பாவம் நீ ! பகையும் நீ !

(தொடரும் )

========================================================================

பாகம் 2

இராமன் மறைந்து நின்று அம்பு எய்தான் என்பது குற்றச்  சாட்டு.

இராமன் வந்து மறைந்து நின்று தான் அம்பு எய்ய வேண்டும் என்று  இல்லை.
அவன் இருந்த  இடத்தில் இருந்து ஒரு அம்பை ஏவி இருந்தால் அது வாலியைக்  கொன்றிருக்கும். அப்போது, இந்த மறைந்து இருந்து கொன்றான் என்ற குற்றம் அவன் மேல் வந்திருக்காது.

அது எப்படி இருந்த இடத்தில் இருந்தே ஒருவரைக் கொல்ல முடியும் ?

சுந்தர காண்டத்தில் சீதை, அனுமனிடம் சொல்கிறாள்....

"நாங்கள் கானகத்தில் இருந்த போது ஒரு காகம் என் மேனியைத் தீண்ட நினைத்தது. அப்போது இராமன் அருகில் இருந்த ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக ஏவினான், அதைச் சொல்வாய் "

அம்பு வேண்டாம், ஒரு புல் போதும். 

நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.

அதையே இங்கு வாலியும் சொல்கிறான் 

 "ஏவு கூர் வாளியால் எய்து,"

என்று. 

அதாவது, இராமன் ஏவினால் போதும் அந்த அம்புகள் அதன் இலக்கை சென்று தாக்கும் வலிமை  பெற்றவை.

இராமன் எதிரில் வந்தால், இராமனின் வலிமையில் பாதி அவனிடம் போய் விடும்   என்பதால் பயந்து இராமன் மறைந்து இருந்து அம்பு விட்டான் என்று சொல்வது   பொருந்தாது.

இராமன் நேரில் வர வேண்டிய அவசியமே இல்லை. இருந்த இடத்தில் இருந்தே அம்பை ஏவி  இருக்கலாம்.அதை வாலியே சொல்கிறான். 

பின் ஏன் இராமன் அதைச்  செய்யவில்லை ?

போருக்கு வந்து, பின் மறைந்து இருந்து தக்குவானேன் ? அந்த பழியை தன் மேல் ஏற்றுக் கொள்ள வேண்டும் ?

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். 

அது என்ன காரணம் ?

Sunday, September 7, 2014

இராமாயணம் - பாவம் நீ, தர்மம் நீ