Wednesday, October 15, 2014

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய்

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய் 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே


சொல்லாத நுண் உணர்வாய்

இறைவன் என்றால் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ? என்ற கேள்விகள்   ஒரு புறம்  இருக்கட்டும்.

இந்த உலகத்திற்கு வருவோம். 

லட்டு, ஜிலேபி போன்ற பல இனிப்புகளை நாம்  சுவைக்கிறோம். இனிப்பு என்றால் ? அந்த இனிப்பு எப்படி  இருக்கும் ? 

தாய் , தந்தை, அண்ணன் ,  தம்பி, அக்கா,தங்கை, கணவன் , மனைவி என்ற பல உறவுகளை  நாம் அனுபவிக்கிறோம். தாய்மை என்றால் என்ன ? மனைவியின் பாசம்  என்றால் என்ன? குழந்தையின் அன்பு என்றால் என்ன ? 

இவற்றை நம்மால் விளக்க முடியுமா ?

முடியாது.

உணர்வுகளை அனுபவிக்க  முடியும்.  உணர முடியும். ஆனால் விளக்க முடியாது. 

அன்றாடம் அனுபவிக்கும் உணர்வுகளுக்கே இந்த மாதிரி என்றால், இறை உணர்வை  என்ன என்று சொல்லுவது. 

அது இவற்றை எல்லாம் விட மிக நுண்மையானது. 

ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. 

எனவே 

"சொல்லாத நுண் உணர்வு "  என்றார்.

இது வரை யாரும் சொல்லாதது. சொல்லவும் முடியாது. 


உணர்வு அறிய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பார் பிறிதொரு இடத்தில் 

அது சிந்தனை அற்ற இடம். 

Monday, October 13, 2014

திருக்குறள் - சொற்புத்தி, சுயபுத்தி

திருக்குறள்  - சொற்புத்தி, சுயபுத்தி 


வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் எளிமையான வழியைச் சொல்கிறார்.

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் போவார்கள். அவர் ஒரு மருந்தைத் தருவார். அதை ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது. தனக்கும் தெரியாது, மருத்துவர் சொன்னாலும் கேட்பது இல்லை.

உயர்ந்த நூல்களை படிக்க வேண்டியது. ஆனால் அதில் சொல்லி உள்ளது போல நடப்பது கிடையாது. குதர்க்கம் செய்ய வேண்டியது.

அப்படிப் பட்டவர்களின் உயிர் அவர்களின் உடலுக்கு நோய் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் உடலை வருத்துமோ  அது போல அந்த மடையர்களுக்கு உயிர் இருக்கும் வரை  துன்பம்தான்.உயிரே துன்பம் தான்.

பாடல்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் 
போஒ மளவுமோர் நோய்.

சீர் பிரித்த பின்

வவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 
போகும் அளவும் ஓர் நோய் 


பொருள்

ஏவவும் செய்கலான் = சொன்னதைச் செய்ய மாட்டான் 

தான் தேரான்  = அவனாகவும் தேர்ந்து அறிய மாட்டன்

அவ் உயிர் = அவன் உயிர்

போகும் அளவும் = உடலை விட்டு போகும் அளவும்

ஓர் நோய் = ஒரு நோய் போன்றதாகும்

நோய் உடலை வருத்தும். அது போல அறிவற்றகளின் உயிர் அவர்களை வருத்தும்.

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள்.

இன்றும் இதை நாம் காண முடியும். முட்டாள்கள் எவ்வளவு துன்பத்தைத் தருகிறார்கள்.  தாங்கள் கெடுவது மட்டும் அல்ல. மற்றவர்களையும் கெடுத்து துன்பத்தை விதைக்கிறார்கள்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.





இராமாயணம் - அறம் மறந்தனன்

இராமாயணம் - அறம் மறந்தனன் 


வாலி வதைக்குப் பின், சுக்ரீவன்  அரச பதவி பெற்றான். கார் காலம் வந்தது. பின்  சென்றது.

சீதையை தேட உதவி செய்கிறேன் என்று தான் சொன்ன வாக்குறுதியை மறந்தான்.

அந்த நேரத்தில் இராமன் , இலக்குவனிடம் கூறுகிறான்.

"பெறுவதற்கு அரிய செல்வத்தைப் பெற்றான். நாம் உதவி செய்த, நம் திறமையை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஒழுக்கம் தவறி விட்டான். அறத்தை மறந்து விட்டான். நம் மேல் உள்ள அன்பையும் மறந்து விட்டான். அது தான் போகட்டும் என்றால் நம் வீரத்தையுமா மறந்து விட்டான் அந்த வாழ்வில் மயங்கியவன் " என்று

பாடல்


'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.


பொருள்

'பெறல் = பெறுவதற்கு

அருந் = அருமையான

திருப் பெற்று = செல்வத்தைப்

உதவிப் = நாம் செய்த உதவி

பெருந் திறம் நினைந்திலன் =என்ற பெரும் திறமையை நினைக்கவில்லை

சீர்மையின் தீர்ந்தனன் = ஒழுக்கம் குறைந்தவன்

அறம் மறந்தனன்; = அறத்தை மறந்தான்

அன்பு கிடக்க = அன்பு ஒரு புறம் கிடக்க, அதையும் மறந்து விட்டான்

நம் மறன் அறிந்திலன் = நம்முடைய வீரத்தைப்  அவன் சரியாக அறியவில்லை 

வாழ்வின் மயங்கினான் = வாழ்வியல் இன்பங்களில் மயங்கிக்   . கிடக்கிறான்

நன்றி மறப்பது அறம் அல்ல என்று நம் இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நன்றி மறந்ததால் அழிந்தவன் சூரபத்மன்.

எவ்வளவு எளிதாக பிறர் செய்த நன்றிகளை நாம் மறந்து விடுகிறோம்.

இனி மேல் ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள்....உங்களுக்கு யார் யார் என்ன என்ன உதவி செய்தார்கள் என்று. மறக்காமல் இருக்க  உதவும்.

நன்றி மறப்பது நன்றல்ல.

இராமணயம் படிப்பது கதை தெரிந்து கொள்வதற்கு அல்ல. வாழ்கையை தெரிந்து கொள்ள.

இனி என்ன நடந்தது ?

மேலும்  பார்ப்போம்.







பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை

பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை 


இராமனை மனிதன் மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

கண்ணனை இடையன் இடையன் என்று சொல்லி அழிந்தான் துரியோதனன்

இராமனுக்கும், கண்ணனுக்கும்  இந்த நிலை என்றால் நம் நிலை என்ன.

பழி சொல்லும் நாவுக்கு வறுமை என்று ஒன்று கிடையாது. எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.

"பசுக் கூட்டங்களை மழையில் இருந்து காப்பாற்றிய கண்ணனை இடையன் என்று இந்த உலகம் கூறிற்று. தீங்கு சொல்லும் நாவுக்கு தேவர்கள், மனிதர்கள் என்று பாகுபாட்டெல்லாம் கிடையாது. நாவுக்கு வறுமை இல்லை".

பாடல்

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

சீர் பிரித்த பின்

ஆவிற்கு அரும் பனி  தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்று உலகம்  கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

பொருள்


ஆவிற்கு = பசு கூட்டங்களுக்கு

அரும் பனி  = பெரிய மழையில் இருந்து

தாங்கிய = காப்பாற்றிய

மாலையும் = திருமாலையும்

கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்

என்று உலகம்  கூறுமால் = என்று உலகம் கூறியது

தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)

மக்கட்கு = மக்களுக்கு

எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்

தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும் 

நாவிற்கு = நாக்கிற்கு

நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.




Sunday, October 12, 2014

கார் நாற்பது - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து

கார் நாற்பது  - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து 


சங்க காலம்.

காற்றாடி (Fan ), குளிர்சாதன (air conditioner , fridge ) போன்றவை இல்லாத காலம்.

வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மரம் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வானம் நோக்கி கை ஏந்தி மழை வேண்டும் காலம்.

புல் எல்லாம் கருகி விட்டது. மூச்சில் அனல் பறக்கும் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

வெயில் காலம் போய் விட்டது.

கார் காலம் வந்து விட்டது.

வருகிறேன் என்று சொன்னவன் இன்னும் வரவில்லை.

வானம் மின்னல் வெட்டுகிறது. மழைக்கு கறுத்து இருக்கிறது. அது ஏதோ சேதி சொல்வது போல இருக்கிறது அவளுக்கு.

அவன் சொன்ன சேதியை அந்த மின்னல் அவளிடம்  ஏதோ சொல்கிறது  சொல்கிறது.

என்ன என்று அவளுக்குத்தான் தெரியும்....


பாடல்

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

பொருள்

கடுங்கதிர் = கடுமையான வெப்பத்தைத் தரும் வெயில் காலம் 

நல்கூரக் = மெலிவு அடைந்து, குறைந்து

கார் செல்வ மெய்த = செல்வத்தை தரும் கார் காலம் வந்தது

நெடுங்காடு = நீண்ட காடு

நேர்சினை யீனக் = அரும்பு விட

கொடுங்குழாய் = வளைந்த ஆபரணங்களை அணிந்தவளே

இன்னே வருவர் = இப்போதே வருவேன் 

நமரென் றெழில்வானம் = நமர் (நம்மவர்) , என்று  எழில் வானம்

மின்னு -= மின்னும்

மவர்தூ துரைத்து =அவர் தூது உரைத்து



Saturday, October 11, 2014

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற   


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்



------------------------------------//பாகம் 3 //----------------------------------------------------------------------

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற


ஆற்றில் நீர் வரும்போது இரண்டு கரைகளுக்கு உட்பட்டுத் தான் வரும். அதுவே  கரையை உடைக்கும் போது வெள்ளமாகி வரும். 

புலன்கள் மூலம் கிடைக்கும் இன்பம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. சில நாள் இருக்கலாம், சில மணி நேரம் இருக்கலாம், சில நிமிடம் நிலைக்கலாம். எப்படியாயினும்  அதற்கு ஒரு முடிவு, எல்லை உண்டு. 

இறைவனை அறிந்து அதன் மூலம் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. 

இதையே அபிராமி பட்டரும் , களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை  என்றார்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


வெள்ளம் உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் நோக்கிப் பாயும். நாம்  மனதை  ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்றவற்றை இட்டு நிரப்பி வைக்காமல்  காலியாக வைத்து இருந்தால் இறை அருள் என்ற வெள்ளம் தானாகவே  ஓடி வந்து நம் உள்ளத்தை நிரப்பும். 

இதையே அடிகள் பின்னொரு இடத்தில் கூறுவார் 

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

அவன் தலையில் ஆகாய கங்கை இருக்கிறது. அது மேலிருந்து கீழே விழுந்து ஓடி வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த அருள் புனல் நம்மை நோக்கி ஓடி வரும். 

அவன் தலையில் கங்கையை வைத்து இருக்கிறான் என்றால் ஏதோ ஆற்றை தலையில் வைத்து இருக்கிறான் என்று கொள்ளக் கூடாது. அது ஒரு குறியீடு. 

வெள்ளம் சரி. ஆனால் வெள்ளம் வந்தால் அது எப்போதும் நாசத்தையே விளைவிக்கும். வீடு வாசல்களை அடித்துக் கொண்டு போய் விடும். பயிர் பச்சைகளை  அழிக்கும். இறைவனின் அருள் வெள்ளமும் அப்படித்தானோ என்று  கேட்டால் , இல்லை. இது வேறு விதமான வெள்ளம். 

"இன்ப வெள்ளம்" என்றார் மணிவாசகர். 

இன்பத்தை மட்டுமே தரும் வெள்ளம். 


அடுத்த சொல் "அத்தா". 

அத்தா என்ற சொல்லுக்கு அப்பா, தந்தை என்று பொருள். 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

என்பார் சுந்தரர்.

அடுத்த சொல் "மிக்காய்"

மிகுதியாய்.

அனைத்திலும் அவன் இருக்கிறான். அவற்றைத் தாண்டி மிகுதியாகவும் இருக்கிறான். 



 


Friday, October 10, 2014

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?



துரியோதனன் மற்றும் துச்சாதனன் என்ற இருவரையும் போரில் வென்று, அவர்களின் குருதி வழிய , வெற்றி முரசு கொட்டும் நாளில் தான் என் விரித்த குழலை முடிவேன் என்று சபதம் செய்து விட்டால் பாஞ்சாலி


அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி, 
                 அளகம் தீண்டி, 
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர், 
                 தகாதனவே விளம்புவோரை, 
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங் 
                 குருதி பொழிய, 
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி 
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

ஆண்டு பதிமூன்று ஆகி விட்டது. தர்மன் சமாதன தூது விடுகிறான் துரியோதனனிடம்.

பாஞ்சாலி தவிக்கிறாள்.

விரித்த தன் கூந்தலை என்று  முடிவது,தான் ஏற்ற சபதம் என்ன ஆகுமோ என்று தவிக்கிறாள்.

கண்ணன் எல்லோரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்டு அறிந்த பின், கடைசியில்  திரௌபதியிடம் , அவளின் எண்ணத்தையும் கேட்க்கிறான்.

"என் குழலைப் பிடித்து , அந்த கண் இல்லாதவன் பெற்ற மகன் துச்சாதனன், என் உடையை களைய நின்ற போது , பஞ்ச பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள், வெற்றி கொள்ளும் சக்கரத்தை கொண்ட கோவிந்தா , அன்றும் என் மானத்தை வேறு யார் காத்தார்கள்  (உனையன்றி ) "

பாடல்

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

பாடல்

கற்றைக் = அடர்ந்த

குழல் = முடியையைப்

பிடித்து = பிடித்து

கண் இலான் = திருதராஷ்டிரன்

பெற்று எடுத்தோன் = பெற்ற பிள்ளை (துச்சாதனன்)

பற்றித் துகில் உரிய = என் சேலையை பற்றி இழுக்க

பாண்டவரும் பார்த்திருந்தார் = பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள்

கொற்றத் = வெற்றியடையும்

தனித் = தனித்துவமான

திகிரிக் = சக்ராயுதம்

கோவிந்தா! = கோவிந்தா

 நீ அன்றி,= நீ அன்றி
 
அற்றைக்கும் = அன்றும் ("ம்" )

என் மானம் ஆர் வேறு காத்தாரே? = என் மானத்தை யார் காத்தார்கள் ?

இன்றும் என் மானம் நீ காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.