Monday, October 27, 2014

திருவருட்பா - மையிட்ட கண்ணியர்

திருவருட்பா - மையிட்ட கண்ணியர் 



நம் கண் எதில் இருக்கிறதோ, மனமும் அதிலேயே  இருக்கும்.

மனம் பூராவும், பெண்கள் பின்னே. மையிட்ட கண்களைக் கொண்ட பெண்களின் பின்னே போகிறது மனம். மனம் பெண்ணின் பின்னால் போனால் எங்கே அவன் அருளைக் காண்பது ? மனம் அதில் இருந்து விடு பட்டால் அல்லவா மற்றவற்றைப் பற்றி நினைக்க முடியும் ?

பாடல்

மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட 
          வாழ்வின் மதிமயங்கிக் 
     கையிட்ட நானும்உன் மெய்யிட்ட 
          சீரருள் காண்குவனோ 
     பையிட்ட பாம்பணி யையிட்ட 
          மேனியும் பத்தருள்ள 
     மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட 
          வேலுங்கொள் முன்னவனே. 

பொருள்

மையிட்ட = மை இட்ட

கண்ணியர் = கண்களை கொண்ட பெண்கள்

பொய்யிட்ட = பொய் நிறைந்த

வாழ்வின் = வாழ்வில்

மதி மயங்கிக் = மதி மயங்கி

கையிட்ட நானும் = அதைக் கையில் கொண்ட நானும்

உன் மெய்யிட்ட = உன் உண்மை நிறைந்த

சீரருள் = சிறப்பான அருளைக்

 காண்குவனோ = பார்ப்பேனா ?

பையிட்ட = படம் எடுக்கும்

பாம்பணி யையிட்ட = பாம்பை அணிகலனாகக் கொண்ட

மேனியும் = உடலும்

பத்தருள்ள = பக்தருள்ளதில்

மொய்யிட்ட = இடம் பெற்ற

காலுஞ் = திருவடிகளும்

செவ் வையிட்ட = சிறந்த கூர்மையான

வேலுங்கொள் முன்னவனே = திரிசூலத்தைக் கொண்ட முதல்வனே


Sunday, October 26, 2014

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம்

திருக்குறள் - விருந்து ஓம்புதல் என்ற அறம் 


விருந்து ஓம்புதலை அறமாகச் சொன்னவன் தமிழன்.

விருந்தினர்களை உபசரிப்பது என்பது அறத்தின் ஒரு கூறு என்று கூறியது தமிழ் கலாச்சாரம்.

விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்கிறது இந்த குறள்.

விருந்தினர்களை கண்டவுடன், கண்ணில் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும். பின் அவர்கள் உள்ளே வந்த பின் அவர்களோடு இனிய சொற்களை கூற வேண்டும்.

பாடல்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.


சீர் பிரித்த பின்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன் சொல்லின் அதே அறம்.

எது அறம் என்று கேட்டால், கண்ட பொழுது முகத்தால் இனிமையாக நோக்கி, அகத்தால் இனிய சொற்களை கூறுவது அறம் .

அது என்ன முகத்தால் இனிமை, அகத்தால் இனிமை ?

இங்கே முகம் என்பதற்கு கண் என்பது சரியான அர்த்தமாக இருக்கும். விருந்தினர்களை  கண்டவுடன் நம் கண் மலர வேண்டும். கண் அந்த இனிமையைச் சென்று சொல்ல வேண்டும்.

சொல் பின்னால் வரும். மனதின் உணர்சிகளை முதலில் காட்டுவது கண்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பார் வள்ளுவர்.

விருந்தினர் வந்த பின், அவர்களோடு இனிய சொற்களை பேச வேண்டும். அதுவும்  உள்ளத்தில் இருந்து வர வேண்டும். ஏதோ உதட்டில் இருந்து வரக் கூடாது.

ஒரு விருந்தினர் வருகிறார் என்றால், அவருக்கு வேண்டிய உதவியை உடனே செய்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும்போதே அவருக்கு வேண்டிய பொருள் உதவியைச் செய்ய முடியுமா ?

முடியாது.

முதலில் முக மலர்ச்சியோடு அவரை வரவேற்று, அவரோடு இனிமையாகப் பேசி, பின் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம்.

இப்போதெல்லாம் பிள்ளைகள், விருந்தினர்களை வரவேற்க,  அவர்கள் இருக்கும் அறையை விட்டு கூட வெளியே வருவது இல்ல. வந்தாலும் கையில் ஒரு கைபேசி, அல்லது, வீடியோ கேம் (video game ) என்று ஏதாவது ஒன்றுடன் வருகிறார்கள்.

விருந்தினரை சரியாகக் கூட பார்ப்பது இல்லை.

நம் பாரம்பரியங்களை, கலாச்சாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

முன்னவர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நாம் தான் சொல்லித் தர தவறி விட்டோம்.

இடையில் சில தலைமுறைகள் நூலறுந்த பட்டம் போல திக்கு திசை இல்லாமல்  தவித்தது, தவிக்கிறது.

இனி வரும் தலை முறைக்காவது சொல்லி வைப்போம்.



Friday, October 24, 2014

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும்

இராமாயணம் - சொன்னவுடன் செய்ய வேண்டும் 


பொதுவாக பிள்ளைகளிடம் ஒரு காரியம் சொன்னால், சொன்னவுடன் செய்ய மாட்டார்கள். ஒன்றிற்கு மூணு தடம் சொன்ன பிறகு, அதுக்கு நாலு கேள்வி கேட்டு, தொண்டைத் தண்ணியை வாங்கி , பின் ஆடி அசைந்து செய்வார்கள்.

இராமனும் இலக்குவனும் எப்படி இருந்தார்கள் என்று இராமாயணம் காட்டுகிறது.

இளைய தலைமுறை படித்து உணர வேண்டும்.

கானகம் போ என்று கைகேயி சொன்னவுடன், "நான் எதுக்குப் போகணும், இப்பவே போகணுமா ? அடுத்த மாதம் போனால் போதாதா " என்றெல்லாம் இராமன் கேட்கவில்லை.

"மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்" என்று அந்த நொடியில் கிளம்பி விட்டான்.


 'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 


கிட்கிந்தா காண்டத்தில், கார்காலம் முடிந்து சீதையைத்  தேட ஆள் அனுப்புகிறேன்  என்று சொன்ன சுக்ரீவன் அனுப்பவில்லை.

இராமனுக்கு கோபம். "சுக்ரீவனை உடனே ஆள் அனுப்பச் சொல் இல்லையென்றால் அவனும் தண்டிக்கப் படுவான் " என்று இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்.

இராமன் சொன்னவுடன் , இலக்குவன், "சரிண்ணா , நாளைக்குப் போகிறேன்" என்று சொல்லவில்லை .

இராமன் சொன்னவுடன் புறப்பட்டு விட்டான். உடனே கிளம்பினான்.

பாடல்

ஆணை சூடி, அடி
     தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர்
      வெரிந் பாழ்படாத்
தூணிபூட்டி, தொடு
      சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் -
      சிந்தையின் நீங்கலான்.

பொருள்

ஆணை சூடி = இராமனின் ஆணையை தலைமேல் சூடி

அடி தொழுது = அவன் திருவடிகளைத் தொழுது

ஆண்டு = அங்கு

இறை பாணியாது = ஒரு நொடி கூட நிற்காமல்

படர் வெரிந் = பரந்த முதுகில்

பாழ்படாத் = குறையாத

தூணிபூட்டி = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை மாட்டிக் கொண்டு

தொடு சிலை தொட்டு = வில்லை கையில் பற்றிக் கொண்டு

அருஞ் சேணின் = நீண்ட பாதையில் 

நீங்கினன்  = செல்லத் தொடங்கினான்

சிந்தையின் நீங்கலான் = இராமனை தன் சிந்தையை விட்டு நீங்காமல் கொண்ட  இலக்குவன்


அண்ணன் சொன்னவுடன் இலக்குவன் உடனே கிளம்பினான். 


Wednesday, October 22, 2014

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை 


பெண் இன்பம் என்பது புரியாத புதிராய்தான் இருந்து இருக்கிறது. அருணகிரிநாதர் புலம்புகிறார்.



கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 


கற் கண்டுமொழி

கொம்பு கொங்கை

வஞ்சியிடை அம்பு

நஞ்சு கண்கள்

குழல் கொண்டல்

என்று

பலகாலும்

கண்டு உளம் வருந்தி நொந்து

மங்கையர் வசம் புரிந்து

கங்குல் பகல் என்று நின்று

விதியாலே

பண்டை வினை  கொண்டு உழன்று

வெந்து விழுகின்றல் கண்டு

பங்கய பதங்கள் தந்து

புகழ் ஓதும்

பண்புடைய சிந்தை அன்பர்  தங்களில் உடன் கலந்து

பண்பு பெற அஞ்சல்  அஞ்சல் என வாராய்

 வண்டு படுகின்ற தொங்கல்

கொண்டு அற நெருங்கி யிண்டு

வம்பினை அடைந்து

சந்தின் மிக மூழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை

செங்கை வந்த அழகுடன் கலந்த  மணிமார்பா

திண் திரல் புனைந்த அண்டர் தங்கள் பயங்கள் கண்டு

செஞ் அமர்  புனைந்து  துங்க  மயில்மீதே

சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம் புணர்ந்து

செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

Tuesday, October 21, 2014

சிவ புராணம் - மாற்றமாம் வையகத்தே 


பாடல்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே  என் சிந்தையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பொருள்

மாற்றமாம் = மாறுதலை உள்ள

வையகத்தின் = உலகில்

வெவ்வேறே = வேறு வேறானவற்றை

வந்தறிவாம் = வந்து அறிவாம்

தேற்றனே = தெளிவானவனே

தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

என் சிந்தையுள் = என் சிந்தனையுள்

ஊற்றான = ஊற்றான

வுண்ணா ரமுதே = உண்பதற்கு அருமையான அமுதம் போன்றவனே 

உடையானே  = எல்லாவற்றையும் உடையவனே

மிக மிக எளிமையாகத் தோன்றும் பாடல் வரிகள்...ஆழமான அர்த்தம் கொண்டவை 

இந்த உலகில் மாறாதது எது ? எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் கூட மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருகிறது.எதுவும் நிரந்தரம் இல்லை.

இது பிடிக்கும், இது பிடிக்கும்,
இவர் நல்லவர், இவர் கெட்டவர்,
அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர்

என்று நினைப்பது எல்லாம் மாறிக் கொண்டே வரும்.

இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் போகும்.

இன்று விரும்புவதை நாளை நாமே வெறுப்போம்.

"மாற்றமாம் வையகத்தே" என்றார்.

நாளும் மாறும் வையகம் இது.

"வெவ்வேறே வந்தறிவாம் "

வேறு வேறாக தெரிவது எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.


இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருந்தால், எப்படி இந்த உலகை நாம் எப்படித்தான்  புரிந்து கொள்வது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் தெளிவு அவன்.

"தேற்றேனே , தேற்றத் தெளிவே"

இந்தத் தெளிவு அவருக்கு சிந்தனயில் வந்தது . எப்படி வந்தது ?

படித்துத் தெரிந்து கொண்டாரா ? யாரும் சொல்லித் தந்தார்களா ? பின் எப்படி அறிந்தார் ?

அவரே சொல்கிறார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்



நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் குணம் தான் நமக்கும் வரும். நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மை போலவே சிற்றின்பங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு சேர்ந்தால் நாமும் அவர்களைப் போலத்தானே ஆவோம்

எனவேதான் பெரியவர்கள் எப்போதும் நல்லவர்கள் மற்றும் அடியார் கூட்டத்தோடு சேரும்படி மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்.

நல்லவர்கள் , அறிவுள்ளவர்கள் கிடைக்கவில்லையா, பரவாயில்லை. கெட்டவர்களோடு சேராமல் இருந்தாலே போதும்.

குலசேகர ஆழ்வார் சொல்கிறார், பெண் இன்பம் தேடி அலையும் இந்த உலகத்தினரோடு நான் சேர மாட்டேன். உலகில் உள்ள ஆட்களை விட்டு விட்டால் பின் யாரோடு தான் சேர்வது ? அரங்கா என்று அவன் மேல் அன்பு கொண்டேன்  என்கிறார்.


பாடல்

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

சீர் பிரித்த பின்

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் அழுந்து ஒழிந்தேன் என்றன் மாலுக்கே


பொருள்


நூலின் நேர் = நூல் போல

இடையார் =  இடையைக் கொண்ட  பெண்களின்

திறத்தே = பின்னே

நிற்கும் = நிற்கும்

ஞாலந் தன்னொடும் = உலகில் உள்ளவர்களோடு

கூடுவது இல்லை யான் = சேர மாட்டேன்

ஆலியா = ஆலியா

அழையா = என்று அழைத்து

அரங்கா என்று = அரங்கா என்று

மால் அழுந்து ஒழிந்தேன் = அன்பால், ஆசையால்  மூழ்கி ஒழிந்தேன்

என்றன் மாலுக்கே = என்றன் திருமாலுக்கே



Monday, October 20, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன் 


தவறு செய்யாதவர்கள் யார் இங்கே ?

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?

செய்த தவறுகளை ஞாயப்படுத்துகிறோமே தவிர அது தவறு என்று ஒப்புக் கொள்வதில்லை.

பெண்கள் பின்னால் அலைந்தேன் என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு பக்கம் வாழ்க்கையில் வருத்தம். துன்பம். இதற்கிடையில் பெண்களோடு சவகாசம். அந்த இளம் பெண்கள் தரும் இன்பமே பெரிதென்று அவர்கள் பின்னால் அலைவது. அப்படி அலையும் நாளில் ஒரு நாள் உண்மை புரிகிறது. இந்த பெண்கள் தரும் இன்பம் நிலையானது அல்ல என்று அறிந்து கொள்கிறார். வாழ்வின் பெரிய நிலையைத் தரக் கூடியது நாராயாணா என்ற நாமமே என்று அறிந்து கொண்டேன் என்கிறார்.

பாடல்

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.


பொருள்

வாடினேன் = வாடினேன். செடி நீர் இல்லாமல் வாடும். நீர் தெளித்தால் மீண்டும் தளிர்க்கும். அது போல, இறைவனின் அருள் இன்றி வான்டினேன். அவன் அருள் கிடைத்தால் வாட்டம் நீங்கும் என்ற பொருள் பட வாடினேன் என்றார். 

வாடி வருந்தினேன் = வாடி வருந்தினேன்

மனத்தால் = மனத்தால். உடல் வருத்தம் மட்டும் இல்லை, மன வருத்தமும் உண்டு.

பெருந்துயரிடும்பையில்  பிறந்து = பெரிய துன்பமான துக்கத்தில் பிறந்து

கூடினேன் = கூடினேன்

கூடி = கூடிய பின்

யிளையவர்த்தம்மோடு = இளமையான பெண்களோடு

அவர்த்தரும் கலவியேகருதி = அவர்கள் தரும் இன்பமே வேண்டும் என்று நினைத்து


ஓடினேன் = அவர்கள் பின்னால் ஓடினேன்

ஓடியுய்வதோர்ப் = ஓடியபின், பிழைக்கும் ஒரு

பொருளால்= பொருளால்

உணர்வெனும் = உணர்வு என்ற

பெரும் பதம் திரிந்து = பெரிய பதத்தை , அலைந்து திரிந்த பின்
,
நாடினேன் = நாடினேன்


நாடி நான் கண்டுகொண்டேன் = நாடி நான் கண்டு கொண்டேன்


நாராயணா வென்னும் நாமம் = நாராயணா என்ற நாமத்தை

.
சிற்றின்பம் சலிக்கும். அதில் சலித்த மனம், பேரின்பத்தை நோக்கி  . தானே நகரும்.

நாடினேன் என்றார். அவரே தேடித் போனார்.

பெண்கள் பின்னால் அலைந்தவர், தானே நாடி கண்டு கொண்டேன் என்கிறார்.

செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது.  வருத்தம்  விலகுகிறது.

மனம் இலேசாகிப் போகிறது.

எல்லோரும் அறிய சொல்லாவிட்டாலும்,  உங்கள் உயிர் நண்பர்களிடம் சொல்லலாம் தானே...

சிந்தித்துப் பாருங்கள்.