Friday, November 7, 2014

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம்

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம் 


சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அதனால் கோபம் கொண்ட சமணர்கள் திருநாவுக்கரசருக்கு மிகுந்த தொல்லை கொண்டுத்தனர். அரசனிடம் சொல்லி அவரை ஒரு அறையில் இட்டு, அந்த அறையில் நிறைய விறகுகளைப் போட்டு தீ மூட்டச் செய்தனர். தீயில் வெந்து மாளட்டும் என்று.

"விண் வரை அடுக்கிய விறகின் சூடான அழல் ஆனது உண்பதற்கு புகுந்தால் அந்த விறகு ஒன்றுக்கும் ஆகாது. பண்ணிய இந்த உலகில் நாம் பயின்ற பாவங்களை நம்முடன் இருந்து அறுப்பது நமச்சிவாய என்ற நாமமே"

பாடல்

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல் 
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே 

பொருள்


விண்ணுற = விண் வரை

அடுக்கிய  = அடுக்கி வைக்கப்பட்ட

விறகின்  = விறகின்

வெவ் அழல் = சூடான தீ

உண்ணிய புகில் = உண்பதற்கு புகுந்தால்

அவை ஒன்றும் இல்லையாம் = அந்த விறகுகள் ஒன்றும் இல்லாமல் (எரிந்து) போகும்


பண்ணிய உலகினில் = செய்யப்பட்ட உலகில்

பயின்ற பாவத்தை  = பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே = அருகில் இருந்து அறுப்பது நமச்சிவாயவே

இது மேலோட்டமான பொருள்.

சொல்வது நாவுக்கு அரசர்.

ஆழ்ந்து சிந்தித்தால் மேலும் பலவற்றை நாம் உணர முடியும்.


எவ்வளவு பாவங்களை செய்கிறோம். நாம் செய்திருக்கிற பாவங்களுக்கு அளவு உண்டா.

இந்த ஒரு பிறவி மட்டும் அல்ல...முன் எத்தனையோ பிறவிகளில் எவ்வளவோ  பாவங்கள் செய்து வந்திருக்கிறோம்.

அவற்றை எல்லாம் அடுக்கி வைத்தால் அது வானம் வரை உயர்ந்து நிற்கும்.

இந்த பாவங்களை எப்படிப் போக்குவது. அனுபவித்துதான் தீர்க்க வேண்டும் என்றால், அனுபவிக்கும் நேரத்தில் இன்னும் பல பாவங்களை நாம் செய்து விடுவோம்.

இந்த பாவங்களை எல்லாம் ஒரேயடியாக எப்படி போக்குவது.

விறகுகள் எவ்வளவு இருந்தாலும், ஒரு சிறு நெருப்பு பத்திக் கொண்டால் அது அத்தனையும் கருகி சாம்பலாகிப் போகும். அது போல , இந்த சேர்த்து வைத்த அத்தனை   பாவங்களையும் எரிக்கும் ஒரு நெருப்பு "நமச்சிவாய " என்ற ஐந்தெழுத்து .

விறகுகள் இருந்த இடம் தெரியாமல் போவது போல நம் பாவங்களும் மறைந்து போகும்.

சரி, பாவம் என்றால் என்ன ? எது பாவம் ?

இது இயற்கை இல்லையோ அது பாவம்.

பாவங்களை நாம் "பயில்கிறோம்". அதாவது அது இயற்கையாக வராது. நாம் பாவம் செய்ய படிக்கிறோம்.

"பயின்ற பாவத்தை" என்றார்.

பாவத்தை எங்கிருந்து படிக்கிறோம் ? - தீயவர்களிடம் இருந்து, அவர்களின் சகவாசத்தால், அவர்கள் சொல்வதை கேட்பதால், அவர்கள் எழுதியவற்றை படிப்பதால்  நாம் பாவத்தை பயில்கிறோம்.


 பாவம் நம்மை இந்த உலகோடு கட்டிப் போடுகிறது.

நல்ல வலிமையான சங்கிலி அது. அந்த சங்கிலியை அறுப்பது நமச்சிவாய என்ற மந்திரம்.


நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


நண்ணி என்றால் அருகில் இருந்து. 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


என்பது மணிவாசகர் வாக்கு. 



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நம் கூடவே இருந்து அந்த அறம் பாவம் என்ற அரும் கையிற்றை அறுப்பது அந்த மந்திரம். 



இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1


இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் மிக ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஓரிரவில் ஒரு சாம்ராஜ்யத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதிய கூனியாகட்டும் ,

இரண்டே வரத்தால் ஒரு சக்ரவர்த்தியைக் கொன்று, புது சக்ரவர்த்தியை கானகம் அனுப்பி, யாரும் நினைக்காத ஒருவனை சக்ர்வர்த்தியாக்கிய கைகேயியாகட்டும்,

முக்கோடி வாழ் நாள் கொண்ட இராவணனை அற்பாயுளில் முடித்த சூர்பனகையாகட்டும்,

எல்லோரும் மிக மிக வலிமையான ஆளுமை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

வாலியின் மனைவி தாரை.

ஒரு பெண்ணின் ஆளுமையை தாரையின் பாத்திரத்தில் வடிக்கிறான் கம்பன்.

தாரை அரசாங்க விஷயங்களில் மிக மிக ஆழமாக ஈடு பட்டிருக்கிறாள். இன்னும் சொல்லப் போனால் ஒற்றரர்கள் தாரையிடம் பல விஷயங்களை சொல்லி இருக்க வேண்டும். நாட்டில் நடப்பவைகளைப் பற்றி வாலிக்குத் தெரியாத விஷயங்கள் கூட  தாரைக்கு தெரிந்திருக்கிறது.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைக்கிறான்.

இத்தனை நாள் பயந்து ஒளிந்து இருந்தவன் எப்படி இன்று துணிவோடு சண்டைக்கு வருகிறான் என்று சிந்திக்கத் தவறி விடுகிறான் வாலி.

வலி(மை) வாலியைத் தடுமாற வைத்தது.

தாரை தடுத்துச் சொல்கிறாள்.

சுக்ரீவனோடு போருக்குப் போகிறேன் என்று வாலி சொல்லக் கேட்ட தாரை சொல்லுவாள் "அரசனே, சுக்ரீவனுக்கு உயிரினும் இனிய நட்பாக இராமன் என்பவன் கிடைத்திருக்கிறான்; அவன் உன் உயிரை எடுக்க உறுதி கூறி இருக்கிறான். இதை நான் நம் மேல் தூய அன்புள்ளவர்கள் சொல்லக் கேட்டேன் "

பாடல்


அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

பொருள்

அன்னது கேட்டவள் = அதைக் கேட்டவள்

'அரச!'  = அரசனே

ஆயவற்கு = அவர்களுக்கு

இன் உயிர் நட்பு = உயிரினும் இனிய நட்பாக 

அமைந்து = அமைந்த

இராமன் என்பவன் = இராமன் என்பவன்

உன் உயிர் கோடலுக்கு = உன் உயிரை எடுப்பதற்கு

உடன் வந்தான்''  = உடன் வந்தான்

எனத் = என

துன்னிய அன்பினர் = நமக்கு நெருங்கிய அன்புள்ளவர்கள்

சொல்லினார்' என்றாள்.= சொல்லினார் என்றாள்

சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையிலான நடப்பைப் பற்றி வாலிக்குத் தெரியவில்லை. தாரைக்குத் தெரிந்திருக்கிறது.

அது மட்டும் அல்ல, சொன்னது ஒரு ஆள் இல்லை. பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். "சொல்லினார்" என்றாள் .




Sunday, November 2, 2014

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம்

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம் 


இராமயணத்தை ஏதோ ஒரு கதையாகப் பார்க்கக் கூடாது.

கதை என்று பார்த்தால் அது ஒன்றும் பெரிய கதை இல்லை.

இராமாயணம், காலம் கடந்து நிற்கக் காரணம் அது சொல்லும் வாழ்கை அறங்கள் .

மனிதனை நல்வழிப் படுத்த அது சொல்லும் அறங்கள் .


கார் காலம் முடிந்து சீதையைத் தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு மட்டையாகி விட்டான். இலக்குவன் மிகுந்த சினத்தோடு வருகிறான். என்ன செய்வது என்று அறியாத வானரங்கள் அனுமனிடம் சென்று யோசனை கேட்டன.

அனுமன், அறிவில் சிறந்தவன், ஆதித்யனிடம் கல்வி பயின்றவன், சொல்லின் செல்வன் , உலகுக்கு அச்சாணி என்று இராமானால் பாராட்டப் பட்டவன்.

அப்பேற்பட்ட அனுமன், இந்த பிரச்சனையை தாரை தான் தீர்க்க முடியும் என்று அவர்களை  தாரையிடம் அழைத்துக் கொண்டு போகிறான்.


தாரை எல்லாவற்றையும் கேட்கிறாள்.

பின் சொல்கிறாள் ,

"என்ன செய்வது என்று இப்ப வந்து கேட்கிறீர்கள். யாரும் செய்ய முடியாத தீய காரியத்தை செய்துவிட்டு வந்து நிற்கிறீர்கள். நன்றி கொன்ற தீய செயலை செய்துவிட்டு அதை தீர்க்க என்ன வழி என்று திகைக்கிரீர்கள். நீங்கள் பிழைப்பது அரிது " என்கிறாள்

பாடல்

 எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

பொருள்

 எய்தி, = இங்கு வது

 'மேல் செயத்தக்கது என்?' = மேலே என்ன செய்வது

 என்றலும் என்று அவர்கள் கேட்டதும்

'செய்திர், = செய்தீர்கள்

செய்தற்கு அரு நெடுந் தீயன =செய்ய முடியாத பெரிய தீய செயலை

நொய்தில் = அதுவும் மிக எளிதாக 

அன்னவை நீக்கவும் = அதனால் வரும் சிக்கலை நீக்கவும்

நோக்குதிர்;= வழி தேடுகிறீர்கள்

உய்திர் போலும்,= நீங்கள் பிழைத்த மாதிரிதான்

உதவி கொன்றீர்?' எனா, = நன்றி கொன்றீர்.

ஒருவர் செய்த நன்றியை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பதை ஒரு அறமாகவே  நம் முன்னவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நன்றி மறவாமையை  பெரிய அறமாகவும், நன்றி மறப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகவும்  நம் முன்னவர்கள் நினைத்தார்கள்.

சுக்ரீவன் மது அருந்தி மறந்திருந்தாலும், அதை வேலை மெனக்கிட்டு கம்பன் சொல்ல  வேண்டிய அவசியம் என்ன ? அதைச் சொல்லாவிட்டால் காப்பியத்தின்  போக்கில் , கதையின் போக்கில் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், கம்பன் அதை குறிப்பாக சொல்கிறான் என்றால், கம்பன் ஏதோ முக்கியமான  ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கிறான் என்று தான் அர்த்தம்.

அந்த முக்கியமான ஒன்று, நன்றி மறவாமை.


Thursday, October 30, 2014

திருக்குறள் - மலரினும் மெல்லிது காமம்

திருக்குறள் - மலரினும் மெல்லிது காமம் 


அவனுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் சொல்லி அவளோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று ஒரே பரபரப்பாக வருகிறான். வீட்டிற்கு வந்தால் மனைவிக்கு தலைவலி, உடம்பு சரியில்லை. அவன் முகம் வாடிப் போகிறது.

இன்னொரு நாள், மனைவியோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவளருகில் போகிறான். அல்லது கணவனோடு சந்தோஷமாக இருக்கலாம் என்று அவள் அவன் அருகில் போகிறாள். திடீரென்று குழந்தை அழுகிறது.

மனம் வாடிப் போகும் அல்லவா ?

இப்படி காமத்தை அனுபவிப்பதற்கு இடம், காலம், இருவரின் மன நிலை, உடல் நிலை , சுற்று சூழல் என்று எல்லாம் பொருந்தி வர வேண்டும். இதில் ஏதோ ஒன்று குறைவு பட்டாலும், அந்த காமம் சுவைக்காது.

பாடல்

மலரினும் மெல்லிது காமம்; சிலர், அதன்
செவ்வி தலைப்படுவார்.

பொருள்

மலரினும் = மலரை விட

மெல்லிது  = மென்மையானது

காமம்; = காமம்

சிலர், = வெகு சிலரே

அதன் = அதனை

செவ்வி = அறிந்து

தலைப்படுவார் = அனுபவிப்பார்கள்

சரி, இதுக்கும், முதலில் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?

மலர் மென்மையானது. சட்டென்று வாடிவிடும் தன்மை கொண்டது.

சூடு அதிகமானால் வாடும், சூடு குறைந்தாலும் கருகி விடும், நீர் இல்லை என்றால் வாடும், நீர் அதிகமானால் அழுகி விடும்.

காமம் அதை விட  மென்மையானது.

மலர் வாடுவதற்கு சில காரணங்கள் என்றால், காமம் வாடுவதற்கு பல காரணங்கள் உண்டு.  எனவே,காமம், மலரை விட மென்மையானது.

மலரின் வாழ்நாள் மிகக் குறைந்தது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள்  இருக்கும்.

காமம் அதைவிட குறைந்த வாழ் நாள் கொண்டது. ஒரு கணத்தில் மறைந்து விடும்.

கணவனோ மனைவியோ நல்ல மன நிலையில் என்றால் மற்றவரின் காமம் அந்த நொடியில்  மறைந்து விடும்.

இதில் முக்கியமானது என்னவென்றால், இதை வெகு சிலரே அறிவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பொதுவாக, கணவனோ மனைவியோ மற்றவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்காமல்  தங்கள் உணர்சிகளுக்கு வடிகால் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்.

காலம், இடம், சூழ்நிலை, மற்றவரின் மனநிலை என்று அனைத்தையும் கருத்தில் கொண்டு  காமத்தை அனுபவிப்பவர்கள் வெகு சிலரே.

மற்றவர்கள், என் தேவை பூர்த்தியானால் போதும் என்று நினைப்பவர்களாகவே  இருக்கிறார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

சிந்திப்போம்


தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே

தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே 


திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை  கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்கள். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதினார். கல் தெப்பமாக மிதந்தது. அதில் மிதந்து வந்து, கரை ஏறினார்.

பாடல்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்

சொற்றுணை வேதியன் = சொல்லுக்கு துணையான வேத வடிவானவன்

சோதி வானவன் = ஜோதியானவன்

பொற்றுணைத் = பொன் போன்ற

திருந்தடி = உயர்ந்த திருவடிகளை

பொருந்தக் கைதொழக் = பொருந்துமாறு கை தொழ
 
கற்றுணைப் = கல்லோடு

பூட்டியோர்  = கட்டி, ஒரு

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கிப் போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே.= நமச்சியாவே

பாட்டின் மேலோட்டாமான பொருள் இது.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்த பிறவி என்பது பெரிய கடல்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர்.

கடலை சும்மாவே நீந்தி கரை காண்பது என்பது கடினமான காரியம்.

இதில் கல்லை வேறு கட்டிக் கொண்டு நீந்துவது என்றால் ?

பாசம், காமம், கோபம், என்று ஆயிரம் கல்லைக் கட்டிக் கொண்டு நீந்த நினைக்கிறோம்.

"கற்றுணை பூட்டியோர் " கல்லை துணையாக பூட்டி  என்கிறார்.எப்படி பூட்டுவது, அல்லது கட்டுவது ?

நாம் செய்யும் நல்லதும் தீயதும் தான் நம்மை இந்த உலகோடு சேர்த்து கட்டும் கயறு.

அறம் பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

"பொருந்தக் கை தொழ " என்றால் என்ன அர்த்தம் ?

கை தொழும், மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கும். மனமும் கை தொழுதலும் ஒன்றோடு ஒன்று பொருந்த வேண்டும்.

 கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார்.

கை ஒன்று செய்கிறது.
விழி வேறு எதையோ நாடுகிறது
மனம் வேறொன்றை சிந்திக்கிறது
நாக்கு மற்றொன்றைப் பேசுகிறது
உடல் வேறு எதையோ சார்ந்து நிற்கிறது
காது இன்னொன்றை கேட்கிறது

இதுவா பூசை ?


இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு வழியில் ஓடுகிறது.

அல்லாமல், அனைத்து புலன்களும் "பொருந்தக் கை தொழ " என்றார். 

"பொற்றுணை திருந்தடி " என்றால் என்ன ?

அடி,
திருவடி 
துணையான திருவடி 
பொன் போன்ற துணையான திருவடி 

வாழ்வில் எத்தனை சிக்கல்கள், நெருக்கடிகள், உணர்ச்சி கொந்தளிப்புகள்...இத்தனையும் சுமந்து கொண்டு  பிறவி என்ற பேருங்களை நீந்த  நினைக்கிறோம். 

ஒரே துணை , அதுவும் நல்ல துணை நமச்சிவாய என்ற மந்திரம்தான். 

"நற்றுணை ஆவது நமச்சிவாயவே "


நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்

நான்மணிக் கடிகை - இன்பம் பிறக்கும் இடம்  


நான்மணிக் கடிகை என்ற நூல், ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகளை உள்ளடக்கியது.

அதில் இருந்து சில பாடல்கள்.


மணிகள் மலையில் பிறக்கும்
உயர்ந்த இன்பம் காதலியின் சொல்லில் பிறக்கும்
மென்மையான அருளில் இருந்து அறம் பிறக்கும்
அனைத்து இன்பங்களும் செல்வத்தில் இருந்து பிறக்கும்


பாடல்

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.

பொருள்

கல்லிற் = மலையில்

பிறக்குங் = தோன்றும்

கதிர்மணி = ஒளி வீசும் மணிகள்

காதலி = காதலியின்

சொல்லிற் பிறக்கும் = சொல்லில் பிறக்கும்

உயர்மதம் = சிறந்த களி கொள்ளும் இன்பம் (மதம் பிடிக்குமோ )

மெல்லென்று = மென்மையான

அருளிற் பிறக்கும்  = அருள் நெஞ்சத்தில் இருந்து பிறக்கும்

அறநெறி = அற நெறி

எல்லாம் = மற்றைய அனைத்து இன்பங்களும்

பொருளிற் பிறந்து விடும் = செல்வத்தில் இருந்து பிறக்கும்




Wednesday, October 29, 2014

தேவாரம் - கண்டறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டறியாதன கண்டேன் 


கண்டேன் என்ற சொல், ஒரு ஆச்சரியத்தோடு பார்பதை குறிப்பது.

கண்டேன் கற்பினுக்கு அணியினை என்றான் அனுமன் இராமாயணத்தில். சந்தோஷம், ஆச்சரியம், வியப்பு இவை எல்லாம் கலந்தது கண்டேன் என்ற அந்தச் சொல்.

நாவுக்கரசர் உலகைப் பார்க்கிறார். உலகம் எங்கும் இறைவனும் இறைவியும் ஒன்றாக இருப்பது போல தெரிகிறது அவருக்கு.

எதைக் கண்டாலும் இறைவனும் இறைவியும்தான் தெரிகிறது.

இளம் பிறையை தலையில் சூடியவரும்   , வளையல் அணிந்த உமா தேவியோடு ஒன்றாக இருப்பவருமான அவரை , அன்று பூத்த மலர்களைத் தூவி என் தோள்கள் குளிரும் வண்ணம் தொழுவேன். பூங்குயில் பாடும் திருவையாறில் சேவல் தன் துணையான கோழியோடு வருவதைக் கண்டேன். இதுவரை கண்டு அரியாதனவற்றையெல்லாம் கண்டேன். அவனுடைய திருப்பாதங்களை கண்டேன்.

பாடல்


பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொருள்

பிறையிளங் கண்ணியி னானைப் = இளம் பிறையை சூடிய அவனை

பெய்வளை யாளொடும் பாடித் = வளையல் அணிந்த உமா தேவியோடும் கூடி இருப்பதைப் பாடி

துறையிளம் பன்மலர் தூவித் = நீர்த் துறையில் மலர்ந்த மலர்களை தூவி

தோளைக் குளிரத் தொழுவேன் = என் தோள்கள் குளிரும் படி தொழுவேன்

அறையிளம் பூங்குயி லாலும் = இளம் குயில் பாடும் (ஆலும் = பாடும் )

 ஐயா றடைகின்ற போது = திருவையாறை அடைகின்ற போது

சிறையிளம் பேடையொ டாடிச் = இளமையான பெண் ஜோடியோடு

சேவல் வருவன கண்டேன் = சேவல் வருவதைக் கண்டேன்

கண்டே னவர் திருப்பாதங் = கண்டேன் அவர் திருப்பாதம் 

கண்டறி யாதன கண்டேன்.= கண்டறியாதன கண்டேன்

கோழியும் சேவலும் ஒன்றாக திரிவதை இதற்கு முன்னாலும் பார்த்து இருக்கிறார்.

ஆனால் அதன் அர்த்தத்தை அறிய வில்லை.

இப்போது, அதை அறிந்தார்.

"கண்டு அறியாதன கண்டேன்" என்றார்.

உலகம் அனைத்துமே அவளும் அவனுமாக இருப்பதை கண்டு அறிந்தேன் என்கிறார்.