Tuesday, March 24, 2015

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?


பசி என்றால் என்ன ? எப்போது பசி வருகிறது ? உணவு உண்டவுடன் பசி போய் விடுகிறதே எப்படி ?

நமது இரத்தத்தில் சர்கரையின் அளவு குறைந்தால், பசி  எடுக்கும். நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் வேலை செய்ய ஆதாரமாய் இருப்பது சர்க்கரை (glucose ). இந்த சர்க்கரையை உடம்பில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் கொண்டு செல்வது இரத்தம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், சர்க்கரை கொண்டுவா சர்க்கரை கொண்டுவா என்று சத்தம் போடும். அந்த சத்தம் தான் பசி.

நாம் உணவு உண்ண ஆரம்பித்தவுடன் சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் சேர்கிறது. சர்க்கரையின் அளவு அதிக பட்ச்சத்தை அடைந்தவுடன் பசி உணர்வு நின்று போகிறது.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது , கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கூடும். அது முழுவதும் சேர்வதற்குள் நாம் தேவைக்கு  அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.

நவீன அறிவியல் , சாப்பிட்டு முடிந்து 20 நிமிடம் கழித்துதான் அந்த திருப்தி உணர்வு வருகிறது என்கிறது.

நாம் என்ன செய்கிறோம், அந்த 20 நிமிட இடை வேளையில் இனிப்பு, ஐஸ் கிரீம் என்று மேலும் இனிப்பை உள்ளே தள்ளுகிறோம்.

இரத்தத்தில் ஏற்கனவே உச்ச பச்ச இனிப்பு இருக்கும் போது மேலும் இனிப்பு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேரும்.

எனவே, முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பு, இடையில் மற்ற சுவைகளை சேர்க்க வேண்டும்.


ஆசாரக் கோவை சொல்கிறது,

முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பானவற்றை உண்ண வேண்டும். மற்றவற்றை இவை இரண்டுக்கும் இடையில் உண்ண வேண்டும் ?


பாடல்

கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண்.

பொருள்

கைப்பன = கசப்பது

வெல்லாங்  = எல்லாம்

கடை = கடைசியில்

தலை =  முதலில்

தித்திப்ப = இனிப்பு

மெச்சும் வகையா = புகழும் படியாக

ஒழிந்த = மற்றவைகள்

விடையாகத் = இடையில் 

துய்க்க  = உண்க

முறைவகையா லூண் = இது முறையாக உண்ணும் முறை

eat the desert first


பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள்

பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள் 


இறைவனை யார் அடையலாம் ? அவனை அடைவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ? இந்த குலத்தில் பிறந்திருக்க வேண்டும், இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை கடை பிடித்திருக்க வேண்டும் என்று பட்டியல் இருக்கிறதா ?

அப்படி இருப்பதாய் பல பேர் சொல்லித் திரிகிறார்கள்.

அது போகட்டும், இறைவனை வழிபடும் முறை என்று ஒன்று இருக்கிறதா ? குளித்து, முழுகி, சமய சின்னங்களை உடல் எங்கும் தரித்து, பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று ஏதாவது முறை இருக்கிறதா ?

இல்லை.

இல்லை என்று யார் சொன்னது ?

பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்...வேடன், மந்திரி, சின்னப் பிள்ளை, அரசன், வயதான பெரியவர், குயவன், இரண்டு பெண்டாட்டி கட்டியவன்  என்று யார் யாரோ இறைவனை

அடைந்திருக்கிறார்கள்...அவர்களின் வாழ்கை  தொகுதிதான் பெரிய புராணம். நம் தமிழ் உலகம் அதை பெரிய புராணம் என்று கொண்டாடுகிறது.

யார் வேண்டுமானாலும் இறைவனை அடையலாம்.

எப்படி வேண்டுமானாலும் இறைவனை அடையலாம் என்று எடுத்துச் சொன்ன நூல் பெரிய புராணம்.

பாடியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.

பாயிரத்தில் தான் செய்யும் நூலின் பெயரை கூறுகிறார் சேக்கிழார்.

இந்த உலகில் இரண்டு இருள் உண்டு. ஒன்று இரவு நேரத்தில் வரும் இருள். இன்னொன்று மக்கள் மனதில் உள்ள அறியாமை என்ற இருள். புற இருளை போக்குவது சூரியன். அக இருளை போக்க வந்த இந்த நூலின் பெயர் திருத் தொண்டர் புராணம்

என்று அவர் கூறுகிறார்.


பாடல்

இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்

இங்கு = இங்கு

இதன் = இந்த நூலின்

நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

இவ் உலகத்து = இந்த உலகத்தில்

முன்னாள் = முன்னாளில்

தங்கு இருள் = தங்கிய இருள்

இரண்டில் = இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = மனதில் , புத்தியில்

சார்ந்து நின்ற பொங்கிய இருளை = சார்ந்து நின்ற பொங்கிய இருளை

ஏனைப் = மற்ற

புற இருள் போக்கு கின்ற = புற இருளை போக்குகின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = அக இருளை நீக்கும்

திருத் தொண்டர் புராணம் என்பாம் = திரு தொண்டர் புராணம் என்று சொல்லுவோம்

அக இருளின் தன்மை சொல்கிறார் சேக்கிழார்....

சார்ந்து + நின்று + பொங்கிய இருள்.

இந்த அக இருள் , அறியாமை, ஆணவம் என்பது முதலில் நம்மைச் சார்ந்து நிற்கிறது.  நாம் இல்லாமல் அது இல்லை.

பின்னால், அது நிலைத்து நிற்கிறது. நாளடைவில் இந்த அக இருள் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி  விடுகிறது.

பின், அது பொங்குகிறது. அறியாமை நாளும் வளர்கிறது. முட்டாள் தனத்திற்கு எல்லை ஏது.

இப்படி சார்ந்து, நின்று பொங்கும் அக இருளை நீக்க வந்த நூல் பெரிய புராணம்.

அக இருள் போக வேண்டும் என்றால், இந்த நூலைப் படியுங்கள் என்கிறார் தெய்வப் புலவர்.

அது வெறும் அடியவர்களின் வரலாற்று நூல் அல்ல. நமக்கு வேண்டிய அறிவை அள்ளி அள்ளி   தரும் நூல்.

நேரமிருப்பின், படித்துப் பாருங்கள்.

அக இருள் நீங்கும். அறிவு ஒளி வீசும்.



ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள்

ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள் 


மேஜை நாகரிகம் (Table Manners அல்லது table etiquette ) என்பது என்னவோ மேற்கிந்திய நாடுகளில் உள்ள ஒன்று. அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள  வேண்டும் என்று இன்றைய இளைய தலை முறை நினைக்கலாம்.

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உடன் இருந்து உண்பதின் வழி முறைகளை, நாகரிகத்தை சொன்னது நம் தமிழ் பண்பாடு.

நாம் சாப்பிடும்போது நம் கூட பெரியவர்கள் யாராவது சேர்ந்து உண்டால், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பின்னரே நாம் உண்ணத் தொடங்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு எழுந்த பின் தான் நாம் எழ வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், திருமணம் மற்றும் சடங்கு  வீடுகளில் நீ முந்தி நான் முந்தி பந்திக்கு முந்துகிறார்கள். யார் முதல் பந்தியில் இருப்பது என்பதில் போட்டி.

பெரியவர்கள் போட்டி போட்டிக் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். அவர்கள் பசியோடு இருப்பார்கள்.

இவை எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

முதலில் வயதில் பெரியவர்களை பந்தியில்  அமரச் செய்து பின் இடம் இருந்தால் மற்றவர்களை அமரச் செய்யலாம்.

இரண்டாவது, விருந்து என்று வந்து விட்டால், சற்று அளவு இல்லாமல் உண்பது என்பது நடக்கிறது. ஒரு நாளைக்குத் தானே, தினமுமா இப்படி ஒரு விருந்து கிடைக்கிறது என்று கண் மண் தெரியாமல் உண்டு உடலை பெருக்க வைக்க வேண்டியது, பின் அல்லல் பட வேண்டியது.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. உண்பதில் நாகரீகம் வேண்டும். 

பாடல்

முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

சீர் பிரித்த பின்

முன் துவ்வார் , முன் எழார் மிக்கு உறார் ஊணின் கண் 
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மிற் 
பெரியார் தம் பாலிருந்தக் கால் 

பொருள்

முன் துவ்வார் = (பெரியவர்களுக்கு) முன் உண்ண ஆரம்பிக்க மாட்டார்கள்

முன் எழார் = அவர்கள் எழுவதற்கு முன் எழ மாட்டார்கள்

மிக்கு உறார் = அவர்களுக்கு மிக அருகில் போய் அமர மாட்டார்கள்

ஊணின் கண் = உணவு உண்ணும் இடத்தில் (பந்தியில் )

என் பெறினும் = என்னதான் கிடைத்தாலும்

ஆற்ற வலம் இரார் = வலப் புறம் இருக்க மாட்டார்கள்

தம்மிற் = தம்மை விட

பெரியார் தம் = பெரியவர்கள்

பாலிருந்தக் கால் = உடன் இருக்கும் பொழுது


சொல்லித் தருவோம் மற்றவர்களுக்கும். கொஞ்ச கொஞ்சமாக நாம் நல்லவற்றைப்  பரப்புவோம். நல்லது வளர்கிறதோ இல்லையோ, தீயவை வளராமலாவது  இருக்கும். 


Monday, March 23, 2015

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன்

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன் 


சில பேர் சாப்பாட்டுக்கு முன்னால் உட்கார்ந்தால் , அவன் பாட்டுக்கு சாப்பிடுவான், போவான். மத்தவங்க சாப்பிட்டாங்களா, யார் இன்னும் சாப்பிடனும், அதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பான்.

அப்படி இருக்கக் கூடாது. தனக்கு முன்னால் யார் யார் எல்லாம் உணவு உண்டார்கள் என்று கேட்க  வேண்டும். அதற்கு ஒரு பட்டியல் தருகிறது ஆசாரக் கோவை. அந்த பட்டியலில் உள்ளவர்கள் முதலில் உண்ண வேண்டும். அப்புறம் தான் நாம் சாப்பிட வேண்டும்.

முதலில் விருந்தினர் உண்ண வேண்டும். மனைவி மக்கள் கூட இல்லை. முதல் இடம் விருந்தினருக்கு. அமிழ்தாயினும் விருந்து புறத்து இருக்க உண்ணாத பண்பாடு நமது பண்பாடு.

அடுத்தது, வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு தர வேண்டும்.

அடுத்தது, வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்கள்....பசு, கிளி போன்றவற்றிற்கு உணவு தர வேண்டும்.

இவர்களுக்கு உணவு தந்த பின்னரே வீட்டில் உள்ள மற்றவர்கள் உண்ண வேண்டும்.

பாடல்

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள்

விருந்தினர் = விருந்தினர்

மூத்தோர் = வயதில் மூத்தோர்

பசு = பசு

சிறை பிள்ளை = கிளிப் பிள்ளை

இவர்க்கூண்  = இவர்கு ஊண் (உணவு )

கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும் = கொடுத்து + அல்லால் + உண்ணாரே + என்றும்

ஒழுக்கம் பிழையா தவர் = ஒழுக்கம் தவறாதவர்கள்

இன்று வாழ்க்கை நெருக்கடி. அலுவகலம் போக வேண்டும், பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும் என்று முதலில் அவர்களுக்கு உணவு தந்து பின் வீட்டில் உள்ள  பெரியவர்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.

இருந்தும், பண்பாட்டின் உச்சம் தொட்டு வாழ்ந்த இனம் இந்த தமிழ் இனம்.

நம் கலாசாரத்தை கடை பிடிக்க முடியாவிட்டாலும் அறிந்தாவது கொள்வோமே.

மனதின் ஓரம் கிடக்கட்டும். என்றாவது இதில் கொஞ்சமாவது செய்ய முடிந்தால்  கூட நல்லதுதான்.



Sunday, March 22, 2015

ஆசாரக் கோவை - உண்ணும் முறை

ஆசாரக் கோவை - உண்ணும் முறை 


நமக்கு கிடைத்த மாதிரி முன்னோர்கள் யாருக்குக் கிடைப்பார்கள் ?

எப்படி உணவு உண்ண  வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள் நம் முன்னவர்கள்.

உணவினால் இன்று எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது...

அதிகமாக உண்டு அளவுக்கு அதிகமாக எடை போட்டு அவதிப் படுகிறோம், சர்க்கரை அதிகம் உண்டு சக்கரை நோயால் துன்பப் படுகிறோம், கொழுப்பு கூடி கொலஸ்ட்ரால் வந்து சங்கடப் படுகிறோம், acidity , நெஞ்சு எரிச்சல் என்று எத்தனையோ சிக்கல்கள்....

ஏன் என்றால் எதை உண்பது, எப்படி உண்பது என்று தெரியாததனால்.

எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆசாரக் கோவை நமக்கு சொல்லிழ்த் தருகிறது.

இன்று பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் உணவு உண்ணும் போது தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டோ அல்லது  ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டோ , கணனியில் மெயில் அல்லது ஏதோ ஒரு வெப் சைட்டை பார்த்துக் கொண்டோ உணவு உண்கிறார்கள். கிரிகெட் மேட்ச் என்றால் அதை பார்த்துக் கொண்டே உண்கிறார்கள். பெரிய பெரிய உணவு விடுதிகளில் பெரிய தொலைக் காட்சி பெட்டி வைத்து அதில் ஏதோ செய்தி ஓடிக் கொண்டிருக்கும், அதைப் பார்த்துக் கொண்டே உணவு உண்கிறார்கள்.

அதே போல, உணவு உண்ணும்போது, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் மதிப்பெண், போன்றவற்றை விவாதம் செய்வது...

அல்லது, வேறு குடும்ப விவகாரங்களை பேசுவது, செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி  பேசுவது என்று  போகிறது.

வேறு சில குடும்பங்களில் பிரச்சனைகளை பேசுவதே சாப்பாட்டு மேஜையில் தான்.

இது அனைத்துமே தவறு என்கிறது ஆசாரக் கோவை.

உணவு உண்ணும் போது வேறு எதையும் பார்க்கக் கூடாது. உணவை மட்டுமே பார்த்து உண்ண வேண்டும்.

நாளை முதல் சாப்பிடும் போது டிவி யை அணைத்து விடுங்கள். புத்தகமோ, புத்தகமோ இருக்கக் கூடாது.

படித்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது.

எதையும் பேசக் கூடாது. நல்லதும் சரி, கெட்டதும் சரி, ஒன்றையும் பேசக் கூடாது.

குறிப்பாக பெண்கள் வீட்டுப் பிரச்சனைகளை சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பது நல்லது.

உணவை தொழுது உண்ண வேண்டும். உணவு உயிர் தரும் பொருள். உயிர் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு உயர்ந்தது உணவு.

மடியில் ஒரு டப்பாவில் பாப் கார்ன் அல்லது பஜ்ஜி அல்லது பிஸ்கட் என்று எதையோ வைத்துக் கொண்டு டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டோ, சினிமா பார்த்துக் கொண்டோ உண்பது கூடாது.

உணவுக்கு மரியாதை தர வேண்டும்.

தெய்வம் போல நினைத்து தொழுது உண்ண வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை.


இப்போது துரித உணவு விடுதிகள் (fast food ) வந்து விட்டன. நின்று கொண்டே சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். கூடாது. அமர்ந்து தான் உண்ண வேண்டும்.

மேற்கிந்திய காலாசாரம் வந்த பின், bed  காபி என்று வந்து விட்டது. பல் விளக்காமல், படுத்துக் கொண்டே , செய்தித் தாள் வாசித்துக் கொண்டே காபி குடிப்பது என்று வந்து விட்டது. நல்லவற்றை தெரியாமல் விட்டு விட்டோம். கெட்டவற்றை முனைந்து அறிந்து செய்கிறோம்.


உண்ணும்போது கிழக்கு திசையைப் பார்த்து அமர்ந்து உண்ண வேண்டும். உண்ணும் போது தளர்ந்து, தூங்கி விழுந்து கொண்டு இருக்கக் கூடாது. உணவைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. உணவை சிந்தாமல், வீணாக்காமல் உண்ண வேண்டும்.  


பாடல்

உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு.

சீர் பிரித்த பின்

உண்ணுங் கால்  நோக்கும் திசை கிழக்குக் கண் அமர்ந்து 
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிது யாதும்  நோக்கான்  உரையான்  தொழுது கொண்டு 
உண்க உகாமை  நன்கு.


பொருள்

உண்ணுங் கால் = உண்ணும் போது

நோக்கும் திசை  = பார்க்கும் திசை

கிழக்குக் கண் அமர்ந்து = கிழக்காக அமர்ந்து

தூங்கான் = தூங்காமல். அதாவது உணவில் மனம் செலுத்தாமல்

துளங்காமை = அசையாமல்

நன்கிரீஇ - நன்றாக அமர்ந்து

யாண்டும் = எப்போதும்

பிறிது யாதும்  நோக்கான் = வேறு ஒன்றையும் பார்க்காமல்

உரையான் = வேறு ஒன்றையும் பேசாமல்

தொழுது கொண்டு உண்க = உணவை தொழுது கொண்டு உண்க

உகாஅமை நன்கு.= சிந்தாமல், வீணாக்காமல் உண்பது நல்லது.

குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். முடிந்த வரை வீட்டில் இதை நடைமுறை  படுத்த முயலுங்கள். 

நல்லது நடக்கட்டும்.


இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அன்பின்றி ஆக்கம் இல்லை

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அன்பின்றி ஆக்கம் இல்லை 


எல்லா அற நூல்களும் புலனை அடக்கு, புலனை அடக்கு என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்கின்றன.

எல்லா புலன்களையும் அடக்கிய பின் என்ன வாழ்க்கை ? வாழ்க்கை என்பதே அனுபவிக்கத்தானே, புலன்களை எல்லாம் அடக்கிய பின் மரக்கட்டை மாதிரி, கல்லு மாதிரி வாழ்வது ஒரு வாழ்க்கையா என்ற கேள்வி எழும் அல்லவா ?

வசிட்டர் சொல்லுகிறார்....இந்த புலன்களை எல்லாம் அடக்க வேண்டாம்...அன்பு ஒன்றே போதும்....

எதுக்காக இந்த முனிவர்களும், தேவர்களும் இந்த புலன்களை கொல்லுவது எதற்காக ? முன்பும் இனியும் , இந்த மூன்று உலகத்திலும் அன்பை விட சிறந்தது ஒன்று உண்டா ?

பாடல்

என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம் 
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?

பொருள்

என்பு = எலும்பு

தோல் = தோல்

உடையார்க்கும் = உடையவர்களுக்கும் (எலும்பும் தோலுமாக உள்ள முனிவர்கள்)

இலார்க்கும் = இல்லாதவர்களுக்கும் (தேவர்களும் )

தம் = தங்களுடைய

வன் = வலிமையான

பகைப் = பகையான

புலன் = புலன்கள்

மாசு அற  = குற்றம் இல்லாமல்

மாய்ப்பது என்? = கொல்வது ஏன் ?

முன்பு பின்பு இன்றி = முன்பும், பின்பும் இன்றி

மூ உலகத்தினும் = மூன்று உலகத்திலும்

அன்பின் நல்லது = அன்பை விட

ஓர் ஆக்கம் உண்டாகுமோ? = ஒரு சிறப்பு உண்டாகுமோ ? உண்டாகாது என்பது அர்த்தம்.

சரி, அன்பு உயர்ந்ததுதான். அதுக்காக புலனடக்கம் இல்லாமல் கண்டதையும்  செய்யலாமா ?

ஒரே குழப்பமா இருக்கே ?

ஒரு குழப்பமும் இல்லை...

அன்பு முதலில் தன்னில் இருந்து தொடங்க வேண்டும்....தன் மேல் அன்பு உள்ள  ஒருவன் தனக்கு தீமை செய்வானா ? மாட்டான் அல்லவா ?

ஒழுங்காக உண்பது, உடலை பேணி காப்பது, தூய்மையாக வைத்து இருப்பது, ஒழுக்கமான  வழியில் செல்வது உடலின் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு .

தன் உடலைத் தாண்டி, அடுத்து தன் குடும்பத்தை நேசிப்பவன் உண்மையாக உழைப்பான், நேர்மையாக உழைப்பான்.

அதுத்து தன் குடும்பத்தை தாண்டி மற்றவர்களையும் நேசிப்பவன்  அவர்களுக்குத் துன்பம் செய்ய மாட்டான், கொலை, களவு, வன்முறை என்று மற்றவர்களை துன்பம் செய்ய மாட்டான்.

ஆழ்ந்து யோசித்தால் அனைத்து அறமில்லாத செயல்களுக்கும் காரணம் தன் மேலும் , பிறர் மேலும் அன்பு இல்லாததே என்று புரியும்.

இதையே வள்ளுவரும்

அன்பில் அதனை வெயில் போல் காயுமே
அன்பில் அதனை அறம்

என்றார்.

அன்பு கொள்ளுங்கள், அதைவிட பெரிய அறம் ஒன்று இல்லை.



குமர குருபரர் பாடல் - எது பெருமை ?

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?


சில பேர் பெரிய இடங்களுக்கு எளிதாகப் போய் வருவார்கள். அமைச்சரைப் பார்த்தேன், கலெக்டரைப் பார்த்தேன், கம்பெனி சேர்மனை பார்த்தேன், என்று பெருமை பேசுவார்கள்.

மற்றவர்கள் எவ்வளவோ கடுமையாக உழைத்தாலும், அறிவில், திறமையில் உயர்ந்து இருந்தாலும் பெரிய இடங்களுக்கு போக முடியாது.

பெரிய இடங்களுக்கு போவது ஒரு பெருமையா ? அப்படி போக முடியாமல் இருப்பது ஒரு சிறுமையா ?

குமர குருபரர் சொல்கிறார்....

அரண்மனையில், பூனை அந்தப்புரம் வரை சர்வ சாதாரணமாகப் போய் வரும். பட்டத்து யானை வெளியே கொட்டகையில் கட்டி கிடக்கும்.

அந்தப்புரம் போனதால் பூனைக்கு பெருமையா ? அரண்மனைக்கு உள்ளே போக முடியவில்லை என்பதால் யானையின் பெருமை குறைந்து போய் விடுமா ?

பாடல்

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய

கந்துகொல் பூட்கை களிறு.

சீர் பிரித்த பின்

வேந்து  அவைக்கு ஆவார் மிகன் மக்கள், வேறு சிலர் 
காத்து அது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - மாத்தகைய 
அந்தபுரத்து பூனை புறம் கடை 
கந்துக் கொல் புட்டிய கை களிறு 


பொருள்


வேந்து = அரசனின்

அவைக்கு = அவைக்கு

ஆவார் மிகன் மக்கள் = போனால் தான் பெரியவர் என்று எண்ணி இருக்க மாட்டார்கள் பெரியவர்கள்

வேறு சிலர் = வேறு சிலரோ

காத்து அது கொண்டு = காத்து கொண்டு

ஆங்கு உவப்பு எய்தார் = அதனால் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்

 மாத்தகைய = மா + தகைய = பெருமை மிக்க

அந்தபுரத்து பூனை = அந்தப் புரத்து பூனை

புறம் கடை = வெளியில்

கந்துக் கொல் = காவல் கொண்டு

புட்டிய = கட்டப்பட்ட

கை களிறு = கையை உடைய யானை

அந்தப் புரம் செல்வதால் பூனையின் மதிப்பு உயர்ந்து விடுவதில்லை

அரண்மனைக்கு வெளியே இருப்பதால் யானையின் பெருமை குறைந்து விடுவதில்லை.

குமர குருபரர் பல அருமையான நூல்களை எழுதி உள்ளார்.



கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

நேரமிருப்பின், இவற்றைப் படித்துப் பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும் படிக்க தமிழில் ஆயிரம் நூல்கள் உள்ளன.