Thursday, April 16, 2015

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?



கவிதைகளைப்  படிக்க, அது எழுதப் பட்ட மொழி மட்டும் தெரிந்தால் போதாது. கவிதைக்குப் பின்னால் இருக்கும் கவியின் மனநிலை புரியவேண்டும். அதை உணர வேண்டும்.

தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் படிக்கும் போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

எவ்வளவு ஆழமான நம்பிக்கை, குழைந்த மனம், பொங்கி பொங்கி வரும் சந்தோஷம், உருகும் பக்தி என்று அனைத்தையும் காணலாம்....காணும் மனம் இருந்தால்.

நாம் இறைவனை  வணங்குகிறோம்.சில பல பாடல்களை அவன் முன்னால் பாடுகிறோம். முடிந்த நாட்களில் கோவிலுக்குப் போகிறோம். மற்ற நேரம் எல்லாம், தினசரி வாழ்கை பிரச்சனைகளில் கிடந்து உழல்கிறோம். பிரச்னை மட்டும் இல்லை, வாழ்கை தரும் சந்தோஷங்களையும் அனுபவிக்கிறோம்  ....அப்பப்ப திரைப் படம் , டிவி , நல்ல தின்பண்டங்ள் , கணவன் மனைவியோடு இன்பம் , குழந்தைகளோடு, நண்பர்களோடு, உறவினர்களோடு என்று ஒன்றையும் விடுவது இல்லை.

இது என்ன பக்தி ?

கடவுளையும், வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இறை அருள் கிடைக்குமா ? நாம் செய்வது உண்மையான பக்தியா ?

கிடைக்கும் என்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் சொல்கிறார்...

எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூடஎனக்குத்  தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும்  உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள்.  எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.

பாடல்

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.


சீர் பிரித்த பின்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.


பொருள் 

கையார் = கையில்

சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட

என் கரு மாணிக்கமே = என் கரு மாணிக்கமே

என்றென்று = என்று என்று

பொய்யே கைம்மை சொல்லிப்  = பொய்யாகச் சொல்லி

புறமே புறமே ஆடி = உலக விஷயங்களில் மூழ்கி  (இருந்தாலும்)

மெய்யே பெற்று ஒழிந்தேன் = உண்மையான உன்னை பெற்றேன்

விதிவாய்கு இன்று காப்பார் யார் = உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்

ஐயோ = ஐயோ

கண்ணபிரான் = கண்ணபிரான்

அறையோ இனிப் போனாலே = நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது )

பொய்யாகவேனும் பக்தி செய்து   பாருங்கள்.நாளடைவில் அதுவே உண்மையாக  மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது. 


Wednesday, April 15, 2015

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?


இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? கருப்பா? சிவப்பா ? உயரமா ? குள்ளமா ? 

நமக்கு ஒன்றும் தெரியாது. சிலைகளும் படங்களும் யாரோ கற்பனையில் செய்தவை. நேரில் பார்த்து வந்து யாரும் அதைச் செய்யவில்லை. 

எனவே, இறைவன் நேரில் வந்தால் கூட நமக்கு அவன் இறைவன் என்று தெரியாது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்வோமா என்றால் அதுவும் சந்தேகம்தான். 

உனக்கு  எப்படித் தெரியும் என்று அவர்களை மேல் கேள்வி கேட்போம்.

அப்படி ஒரு முறை நிகழ்ந்தது. 

இறைவன் நேரில் வந்தான். 

அங்கிருத்த பெரியோர்கள் எல்லாம் அவன் இறைவன் என்றே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை. அவர்களில் ஒருவன் சிசுபாலன். 

வந்த இறை கண்ணன். 

ஏற்றுக் கொண்ட பெரியவர்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர்.

நடந்த இடம் தர்மனின் அசுவமேத யாகம் பூர்த்தி அடைந்த மண்டபத்தில், முதல் தாம்பூலம் யாருக்கு தருவது என்ற சிக்கல் எழுந்த போது .

 எல்லோரும் கண்ணனுக்கே முதல் தாம்பூலம் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிசு பாலனுக்கு பொறுக்கவில்லை. 

அரசர்கள் இருக்கும் அவையில் ஒரு இடையனுக்கு முதல் தாம்பூலமா என்று கொதித்து எழுந்தான். 

பாடல் 

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், 
                                புறங்கானில் வாழ் 
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, 
                                கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் 
                                எய்தி, ஏழ் 
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.

பொருள் 

பூபாலர் அவையத்து = பூலோகத்தை காக்கும் அரசர்கள் இருக்கும் அவையில் 

முற்பூசை பெறுவார் = முதல் பூசை (தாம்பூலம்) பெறுவது 
 
புறங்கானில் = ஊருக்குப் புறத்தே காட்டில் 

வாழ் = வாழும் 
 
கோபாலரோ'' = மாடு மேய்பவனோ (கோ என்றால் பசு. பாலர் என்றால் காப்பவன்) 

என்று உருத்து = என்று கூறி 

அங்கு அதிர்த்து = அதிரச் சொல்லி 

கொதித்து = உள்ளம் கொதித்து 

ஓதினான் = கூறினான் 

காபாலி = சிவன் 

முனியாத = கோபம் கொள்ளாத 

வெங் காமன் = மன்மதன் 

நிகரான  = நிகரான , சமமான  

கவின் எய்தி =  அழகு கொண்ட  

ஏழ் தீ பால் = ஏழு தீவுகளிலும் 

அடங்காத புகழ் = அடங்காத புகழ் கொண்ட 

வீர = வீரனான 

கயம் அன்ன = யானையைப் போன்ற பலம் பொருந்திய 

சிசுபாலனே = சிசுபாலனே 


அது கதை. 

அழகு, வீரம், புகழ் இருக்கிறது. ஆணவம் தலைக்கு ஏறுகிறது. என்னை விட உயர்ந்தவன்  யார் என்ற எண்ணம் வருகிறது. 

இறைவனே வந்தால் கூட ஆணவம் கண்ணை மறைக்கிறது. 

திருமாலை இடையன்   என்று சொல்லி அழிந்தான் சிசுபாலன். 

திருமாலை மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

ஆணவம். 

ஆணவம் கண்ணை மறைக்கிறது. அறிவை மயக்குகிறது. அழிவைத் தருகிறது. 

தெளிந்த பார்வை வேண்டுமா ? எங்கேயாவது ஆணவம் இருக்கிறதா என்று பாருங்கள். ஆணவம் இருக்கும்வரை உண்மை தெரியாது. 

இறைவன் அருகில் இருந்தால் கூட உணர முடியாமல் போகும். 

யாருக்குத் தெரியும் ?  இறைவனுக்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்  என்று ?


Tuesday, April 14, 2015

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை 


கணவனுக்கு சர்க்கரை வியாதி. இனிப்புப் பண்டங்களை சுவைக்க முடியாது. அதற்காக மனைவியும் இனிப்பு சாபிடாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் இருக்க முடியும் ?

வாழ் நாள் பூராவும் இருந்தாள் காந்தாரி.

கணவனுக்கு கண் தெரியாது என்று அறிந்ததும், தன் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டாள் . கணவனுக்கு கிடைக்காத காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம் என்று வாழ் நாள் பூராவும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் . கணவன் மேல் அவ்வளவு அன்பு.

காந்தாரிக்கும் திருதராஷ்டினருக்கும் 100 பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படி ? வருடத்திற்கு ஒன்று என்றாலும் நூறு வருடம் ஆக வேண்டுமே ?

காந்தாரியும், குந்தியும் ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். முதலில் குந்திக்கு பிள்ளை பிறந்தது.

இதை அறிந்த காந்தாரி , பொறாமையால், தன் வயிற்றில் கல்லால் இடித்துக் கொண்டாள் . அதனால் அவளின் கர்ப்பம் கலைந்தது. உதிரம் வெளிப்பட்டது. அந்த உதிரத்தை 100 கலன்களில்  சேமித்து வைத்தார்கள். அதனோடு கூட வெளிப்பட்ட திசுக்களையும் தனியாக சேர்த்து வைத்தார்கள். வியாதன் என்பவன்  கை படாமல் அவற்றை வளர்த்து 100 பிள்ளைகளாகச் செய்தான்.

இதைத்தான், பொறாமையில் காரியம் செய்தால் , "காந்தாரி இடித்துக் கொண்டு பிள்ளை பெற்றது போல " என்று சொல்லுவார்கள்.

பாடல்


அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற் 
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே, 
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு 
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.


பொருள்

அற்றனள் துயரம் எல்லாம் =துன்பம் எல்லாம் தொலைத்தாள்

அருந் தவப் பயனால் = தான் செய்த பெரிய தவத்தால்

மைந்தற் பெற்றனள், குந்தி' = மைந்தனைப் பெற்றனள் குந்தி

என்னும் பேர் உரை கேட்ட அன்றே = என்ற பெரிய செய்தியைக் கேட்ட உடனே

உற்றனள் பொறாமை = பொறாமை உற்றாள் (காந்தாரி)

கல்லால் = கல்லால்

உதரம் = வயறு

உள் குழம்புமாறு =உள்ளே குழம்புமாறு

செற்றனள் = இடித்துக் கொண்டாள்

 தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் = தனக்கு நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்காமல்

.
இதில் உள்ள நுண்ணிய பொருளை சிந்திப்போம்:

பொறாமை - மற்றவர்கள் நன்மை அடைவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை. 

பொறாமை கொண்டவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்வான். காந்தாரி  கல்லால் தன்  வயிற்றில் அடித்துக் கொண்டாள் குந்திக்கு என்ன தீங்கு வந்து விடும் ?  துன்பம் காந்தாரிக்குத் தான்.  பொறாமை  யாரிடம் இருக்கிறதோ அது அவர்களுக்குத்தான்  தீமை செய்யும். 

இரண்டாவது, பொறாமை கொண்டவர்கள் எது சரி எது தவறு என்று அறியமாட்டார்கள். "ஆக்கமும் கெடும் சிந்தியாதாள் " என்றார் வில்லிபுத்துராழ்வார்.  பொறாமை அறிவை மறைக்கும். 

மூன்றாவது, பொறாமை கொண்டவனுக்கு தீமை விளைவிக்கும். பொறாமையில்  இருந்து விளைவது ஊருக்குத் தீமை விளைவிக்கும். பொறாமையில் பிறந்தவர்கள் கௌரவர்கள். அவர்களால் அரச குலம் முற்றாக  அழிந்தது. 

நான்காவது, பொறாமை கஞ்சத் தனத்தை  தரும்.யாரும் நன்மை அடைந்து விடக் கூடாது  என்று நினைக்கும். எல்லாம் தனக்கே என்று நினைக்கும். 

பாண்டவர்கள் ஐந்து வீடுதான் கேட்டார்கள்.  ஐந்து வீடு கொடுத்து இருந்தால் சண்டையே இல்லை.  ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கூறினான் துரியோதனன். 35,00,000 பேர் மாண்டு போனார்கள்....ஐந்து வீட்டுக்காக. 

பொறாமை தந்த கஞ்சத்தனம். 

எது வந்தாலும் வரலாம், பொறாமை வரவே கூடாது. 

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை என்ற ஒரு பாவி நம் செல்வத்தை  அழித்து, தீராத துன்பத்தில் நம்மை தள்ளி விடும் என்கிறார்  வள்ளுவர்.

குந்தியின் பெருமை கண்டு பொறாமை கொண்ட காந்தாரியின் செயல் அவளின்  பிள்ளைகளை  கொன்று,அரசை இழந்து, தீராத பழியையும் தேடித் தந்தது. 

ஒரு பாட்டில் இவ்வளவு அர்த்தம் - என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இன்னும் எவ்வளவு  அர்த்தங்களோ. இப்படி எத்தனையோ பாடல்களைக் கொண்டது வில்லிப்புத்துராழ்வார் அருளிச் செய்த மகா பாரதத்தில். 

நேரம் இருப்பின்,  மூல நூலை படித்துப் பாருங்கள். 

பருக பருக திகட்டாத தேன்.  


Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





Sunday, April 12, 2015

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான்

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான் 


முன்பெல்லாம் ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால், யாருக்கு அது நிகழ்கிறதோ அவருக்கு , பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

திருமணம் என்றால் மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் திருமணம், வாழ்க்கை, குழந்தை, சமுதாயப் பொறுப்பு என்பவை பற்றி அறிவுரை, அறவுரை கூறுவார்கள். அது அந்த பையனையும், பெண்ணையும் குடும்ப வாழக்கைக்கு தயார் படுத்தும்.

அதே போல, ஒருவன் முடி சூட்டுகிறான் என்றால் அந்த இராசாவுக்கு மந்திரிகள், சான்றோர் எல்லோரும் அறவுரை சொல்வார்கள்.

சுக்ரீவன் முடி சூட்டப் போகிறான். அவனுக்கு இராமன் அறவுரை சொல்கிறான்.

சுக்ரீவன் குரங்குதான். குரங்குக்குச் சொன்ன அறவுரை என்றாலும் அது நமக்கும் பொருந்தும்தானே.

பாடல்

பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.

பொருள்

பொன் = பொன்னால் ஆன

மா = சிறந்த

மௌலி = மகுடம்

புனைந்து = அணிந்து

பொய் இலான் = பொய் இல்லாத (இராமனின்)

தன் மானக் கழல் தாழும் வேலையில் = சிறந்த திருவடிகளில் விழுந்து ஆசி பெறும் வேளையில்

நல் மார்பில் =பரந்த நல்ல மார்பில்

தழுவுற்று = (அவனை) தழுவிக் கொண்டு

நாயகன் = இராமன்

சொன்னான் = சொன்னான்

முற்றிய சொல்லின் எல்லையான் = சிறந்த சொல்களின் எல்லையில் உள்ளவன்.

கடைசி வரி சிந்தக்கக் தக்கது.

ஒரு வார்த்தை சொன்னால் அது சிறந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு மேல்  அதை சிறப்பாக சொல்ல முடியாது என்று இருக்க வேண்டும்.


சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

என்பார் திருவள்ளுவர். 

ஒரு சொல் சொன்னால், அதை விட இன்னொரு சிறந்த சொல் இல்லை என்று இருக்கும்படி  சொல்ல வேண்டும். 

இராமன் முற்றிய சொல்லின் எல்லையான்.  சிறந்த சொற்களின் எல்லை அவன்தான்.  அவனைத் தாண்டி அந்த சொற்களுக்கு வேறு அர்த்தம் இல்லை. 

அவன் சொன்ன அறவுரைகளை பார்ப்போம். 


Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





Thursday, April 9, 2015

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை 



அது ஒரு சின்ன கிராமம்.

அங்குள்ள மக்கள் காலையில் வயலுக்கு, காட்டுக்கு என்று வேலைக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.

அவளுடைய காதலனும் அவள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் தினமும் வருவான்.

இன்று ஏனோ இன்னும் வரவில்லை. மாலை மங்கிக் கொண்டே போகிறது. இன்னும் வரவில்லை.

ஒரு வேளை வேறு வழியில் போய் இருப்பானோ ?

ஒரு வேளை அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

ஏன் இன்னும் வரவில்லை ?

தவிக்கிறாள் அவள்.

அவன் வருவான், அவனுக்குத் தர வேண்டும் என்று ஆசை ஆசையாக பூக்களைச் சேர்த்து மாலையாக செய்து, அவன் வரும் வழி பார்த்து காத்திருக்கிறாள்.

ஒரு வேளை வர மாட்டானோ ?

இந்த மாலையை என்ன செய்வது ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மாக்கள் = வேலை செய்த பின் மக்கள்

கருவி ஒடுக்கிய = அவர்களின் அரிவாள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு

மம்மர்கொள் மாலை = மயக்கம் தரும் மாலை நேரத்தில்

மலராய்ந்து பூத்தொடுப்பாள் = ஒவ்வொரு பூவாக தேர்ந்து எடுத்து மாலை தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலை

இட்டுக் = தரையில் நழுவ விட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு

இம்மாலை என்செய்வ தென்று = இந்த மாலை என்ன செய்வது என்று

காதல், தவிப்பு, ஏக்கம் என்று அனைத்தையும் நாலு வரியில் அடக்கி பல நூற்றாண்டுகளை தாண்டி உங்களை வந்து அடைகிறது இந்தப் பாடல்.

பெயர் தெரியாத, முகம் தெரியாத அந்த பெண்ணின் சோகம்  நம்மையும் என்னவோ செய்கிறது.

காதல் என்றும் பசுமையானதுதான்.