Sunday, June 21, 2015

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும் 


துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.

நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?

மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?

தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?

இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள்  (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.

யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?

துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம்  செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.

எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.

அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.


பாடல்

அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.

சீர் பிரித்த பின்

அறம் கேட்டு அருள் புரிந்து  ஐம்புலன்கள் மாட்டும்
 இறங்காது  இருசார் பொருளும்-துறந்து அடக்கி 
 மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல் 
 பன்னுதற்குப் பாற் பட்டவன்.

பொருள்

அறம் கேட்டு = பல அற நூல்களை  கேட்டு அறிந்து

அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு

 ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்

 இறங்காது = சாராமல்

 இருசார் பொருளும் =   அகப்பற்றையும் புறப் பற்றியும்

துறந்து = துறந்து

அடக்கி = புலன்களை அடக்கி

மன்னுயிர்க்கு  = உயிர்களுக்கு

உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற

வாயில் = வழியை

உரைப்பானேல் = உரைப்பவனே

பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்

பாற் பட்டவன் = நல்லவன்


அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம். 

முதலில் , தெளிந்த அறிவு 

இரண்டாவது, புலனடக்கம் 

மூன்றாவது, உயிர்கள் மேல் அருள் 

நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை 

இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.

பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம்,  அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா  என்று பாருங்கள்.




நள வெண்பா - சேற்றில் வழுக்கிய யானைகள்

நள வெண்பா -  சேற்றில் வழுக்கிய யானைகள் 


இலக்கியங்கள் நமக்கு அழகாக எழுத பேசக் கற்றுத் தருகின்றன.

நிடத நாட்டின் வளம் பற்றி கூற வருகிறார் புகழேந்தி.

ஒரு நாட்டின் வளம் பற்றி நாலு வரியில் கூற வேண்டும்.

அந்த ஊர் செல்வச் செழிப்போடு இருந்தது.

பெண்கள் எல்லாம் அழாக இருந்தார்கள்.

படை பலம் பொருந்தி இருந்தது.

மக்கள் எல்லாம் நன்றாக கல்வி கற்று இருந்தார்கள்.

கலை செழித்து இருந்தது.

கலை செழிக்க வேண்டும் என்றால், அதை பார்த்து இரசிக்க மக்கள் வேண்டும்.  மக்கள் கலை இரசனையோடு இருந்தார்கள்.

ஊரில் சண்டையும் சச்சரவும் இருந்தால் கலையை இரசிக்க நேரம் இருக்காது. ஊர் அமைதியாக இருந்தது.

என்று இத்தனையும் நாலு வரியில் சொல்ல வேண்டும். அதுவும் அழகாக சொல்ல வேண்டும்.

சொல்கிறார் புகழேந்தி....

பாடல்

கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம்  என்றுளதோர்

ஞானக் கலைவாழ் நகர்.


பொருள்

பெண்கள் குளிக்கும் போது குங்குமம், சந்தனம் போன்ற வாசனைப் பொருள்களை  நீரில் சேர்த்துக் குளிப்பார்கள். அப்படி குளித்து விட்டு, உடை மாற்றி, அணிகலன்களை அணிந்து கொண்டு தெருவில் செல்கிறார்கள். அவர்கள் அப்படி செல்லும் போது அவர்களின் கூந்தலில் உள்ள நீர்  சொட்டு சொட்டாக வடிகிறது. அப்படி வடிந்த நீர், தெருவில் உள்ள மணலோடு சேர்ந்து அதை சேறாகச் செய்கிறது. அந்தச் சேற்றில் நடந்து வந்த பெரிய கரிய யானைகள் தொப் தொப்பென்று வழுக்கி வழுக்கி விழுகின்றன. அந்த ஊரில் ஞானமும், கலையும் செழிந்து வாழ்ந்தது.

கோதை = பூ மாலை அணிந்த

மடவார் = பெண்கள்

தம் = தங்களுடைய

கொங்கை = மார்பின் மேல்

மிசைத் = அசைச் சொல்

திமிர்ந்த = பூசிய, தடவிய

சீதக் = குளிர்ந்த

களபச் = கலவை

செழுஞ்சேற்றால் = செம்மையான சேற்றால்

வீதிவாய் = வீதியின் வழியே

மானக் = பெரிய

கரி = யானைகள்

வழுக்கும் = வழுக்கி விழும்

மாவிந்தம் = மாவிந்தம்

என்றுளதோர் = என்று உள்ள


ஞானக் = ஞானம்

கலை = கலைகள்

வாழ் நகர் = வாழுகின்ற நகரம்.

யானைகள் நிறைந்த ஊர் என்பதால் ஊரின் பலம் புலப்படும்.

ஞானமும், கலையும் வாழும் ஊர்.



பிரபந்தமும் , இன்னொரு சேறு செய்வதைப் பற்றி கூறுகிறது.

திருமாலின் பெருமைகளை எண்ணி எண்ணி பக்தர்கள் கண்ணில் இருந்து ஆறாக ஓடிய நீர் திருவரங்கத்து பிரகாரங்களை நனைத்து சேறாகச் செய்து விடுமாம். அந்த சேறே என் என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருமண் என்று உருகுகிறார் ஆழ்வார்.

பாடல்

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே







Friday, June 19, 2015

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே 


காரணம் இல்லாமல் காரியம் இல்லை. வாழ்வில் ஒன்று நடக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அப்படி என்றால் விதி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். விதி ஒன்றை ஏற்றுக்கொன்றால் பின் நம் செயல் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். எதற்கு வேலை செய்ய வேண்டும், எதற்கு இறைவனை வணங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.

நல்ல வினை செய்தால் நல்லது நடக்கும். தீய வினை செய்தால் தீயது நடக்கும் என்று கொண்டால் அதிலும் ஒரு சிக்கல். நல்லது செய்து, அதனால் வரும் நன்மையை அனுபவிக்கும் போது ஏதாவது ஒரு தீமை செய்து விடலாம். பின் , அந்த தீமையை அனுபவிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். இப்படி முடிவு இல்லாமல் போய் கொண்டே இருந்தால் என்ன செய்வது. இதுக்கு ஒரு முடிவுதான் என்ன ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார்.

செடி போல அடர்ந்து வளர்ந்து கிடக்கும் இந்த வலிமையான வினைகளை அவன் தீர்த்து தீர்த்து வைப்பான். அப்படிப்பட்ட திருமாலின் கோவில் வாசலில் பக்தர்கள் நாளும் வந்து போவார்கள். அப்படி அவர்கள் வந்து போகும் வழியில் இருக்கும் படியாக வேண்டுவனே என்று வேண்டுகிறார்.

படியாகக் கிடப்பதில் ஒரு சௌகரியம். பக்தர்களையும் பார்க்கலாம். ஆண்டவனையும்  பார்க்கலாம்.

பாடல்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

பொருள்


செடியாய = செடி போல வளர்ந்து கிடக்கும் 

வல்வினைகள் = வலிமையான வினைகளை

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வல் வினை போகும் என்கிறது விவேக சூடாமணி 

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. 
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

நன்மை தீமை என்று வாழ்வோடு இழையும் வினைகளின் வழியே சென்று வாழ்வு முடியும் போது நீ வந்து அந்தத் துயரில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்பார் அபிராமி பட்டர் 



தீர்க்கும் = தீர்த்து வைக்கும்

திருமாலே = திரு மாலே

நெடியானே = உயர்ந்தவன். உலகளந்தவன்

வேங்கடவா = திருவேங்கட மலையில் இருப்பவனே

நின் = உன்னுடைய

கோயி லின் = கோவிலின்

வாசல் = வாசலில்

அடியாரும் = அடியவரும்

வானவரும் = தேவர்களும்

மரம்பையரும் = அரம்பையுரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் = படிக்கல்லாக

கிடந்துன் = கிடந்து உன்

பவள வாய் = பவளம் போன்ற சிவந்த ஆதாரங்களை

காண்பேனே = காண்பேனே

இது மேலோட்டமான அர்த்தம்.



இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டவனை அடைய முடியாது என்பது வைணவத்தின்  ஆழ்ந்த நம்பிக்கை. ஒரு விதத்தில் அது சரிதான். இறைவனை நமக்கு  யார் அடையாளம் காட்டுவார்கள்.

அப்பாவை , அம்மா அடையாளம் காட்டுவாள். அம்மா சொல்லாவிட்டால் , அப்பா யார் என்று தெரியாது நமக்கு.

குருவை , அப்பா அடையாளம் காட்டுவார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுவது அப்பாவின் கடன். "சான்றோனாக்குவது தந்தைக்கு கடனே".

ஆண்டவனை, குரு அடையாளம் காட்டுவார். கல்வியின் மூலம் கடவுளை அடைய வேண்டும் என்பது கருத்து.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். குரு அறிவைத் தருவார். அறிவு இறைவனிடம் கொண்டு சேர்க்கும் .

எனவே, மாதா, பிதா, குரு , தெய்வம் என்று வரிசைப் படுத்தினார்கள் நம் முன்னவர்கள்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பவர் ஆசாரியன்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பது வாசல் படி. அந்தப் படியைத் தாண்டி தானே  இறைவனை அடைய முடியும் ?

அந்த படியாக நான் இருக்கிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

உங்களை, இறைவனிடம் கொண்டு சேர்கிறேன் என்கிறார்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் , வழியாக இருப்பேன் என்றார். (இந்த ப்ளாகில் போடவில்லை. மூலத்தை தேடிச் சென்று படியுங்கள் ....)

வழியைத் தாண்டி , படியாகவும் இருக்கிறேன் என்கிறார்.

சீக்கியர்கள் தங்கள் கோவிலை குருத்வாரா என்று அழைப்பார்கள்.

த்வாரா என்றால் வழி.

ஹரித்துவார் என்று கூறுவதைப் போல.

குருவே வழி - குருத்வார்...

படியாய் கிடந்து ....

இன்றும் கூட  அனைத்து வைணவத் தலங்களிலும் , கோவில் வாசலுக்கு குலசேகரப் படி  என்றே கொண்டாடுகிறது வைணவம்.

அவர் படியாக கிடக்கிறார் என்பதல்ல பொருள்...அவர் வழியாகவும் இருக்கிறார் என்பது  பொருள்.

பிரபந்தத்தைப் படியுங்கள்...அதுதான் வழி.


நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு

நள வெண்பா - நிடத நாட்டுச் சிறப்பு


எதையும் இரசிக்க எங்கே நேரம் இருக்கிறது நமக்கு.

மழையை, மனைவியின் புன்னகையை, காதோரம் கவிதை பேசும் காற்றை, பிள்ளைகளின் வெகுளித்தனத்தை, புது ஆடையின் மணத்தை , குளிர் காற்று தரும் உற்சாகத்தை, ஜன்னலோரம் கசியும் சூரிய ஒளியை...இப்படி எதையுமே ஒரு நிமிடம் நின்று பார்த்து இரசிக்க நேரம் இல்லை.

இயந்திர கதியாக வாழ்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

புது இடத்துக்கு சுற்றுலா போனால் கூட, அங்குள்ள இடங்களை புகைப்படம் பிடிக்கவும், facebook ல்  போடுவதிலும்தான் எண்ணம் போகிறதே தவிர அவற்றை இரசிக்க நேரம் இல்லை.

இலக்கியங்கள் , வாழ்வை இரசிக்கக் கற்றுத் தருகின்றன.

இலக்கியங்கள் இல்லாவிட்டால் வாழ்கை வெறிச்சோடிப் போய் விடும்.

நளனின் நாடான நிடதை நாட்டை புகழேந்தி வர்ணிக்கிறார்....அடடா என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சொல் வளம், கவிதையின் ஓட்டம்...

வாருங்கள் இரசிப்போம்....

பாடல்

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.


பொருள்

காமர் = அழகான, விருப்பமான. என்ன ஒரு அருமையான சொல். அழகும் விருப்பமும் ஒரே சொல்லில். அழகில்லாத ஒன்றின் மேல் விருப்பம் வருமா ?

கயல் = மீன்கள்

புரளக் = புரள

காவி = சிவந்த

முகை = மொட்டு, அரும்பு

நெகிழத் = மலர

தாமரையின் = தாமரை மலரின்

செந்தேன் = சிறந்த தேன்

தளையவிழப் = மலரில் இருந்து வழிய

பூமடந்தை = திருமகள்

தன் = அவளுடைய

நாட்டம் = பார்வை, இங்கு கண் என்று கொள்ளலாம் 

போலும் = போல

தகைமைத்தே = சிறப்பு உடையதே

சாகரஞ் சூழ் = கடல் சூழ்ந்த

நன்னாட்டின் = நல்ல நாடுகளில்

முன்னாட்டும் நாடு = முன்னால் நிற்கும் நாடு

சரி, இதில் என்ன அப்படி சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா ...பொறுமை, பொறுமை....இது ஒரு முன்னுரைப் பாடல்...இனி வரும் பாடல்களைப் பாருங்கள்...

வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தெரியாமலா சொன்னார்கள் !

Wednesday, June 17, 2015

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி 


பெருமாளை தரிசனம் பண்ண எத்தனையோ பேர் காத்து இருப்பார்கள். எத்தனையோ நாள் காத்து இருப்பார்கள். நாமும் காத்து இருக்க வேண்டி இருக்கும்.

ஆழ்வாருக்கு பொறுமை இல்லை.

உடனே பார்க்க வேண்டும் பெருமாளை.

குருகாய் பிறப்பேன், மீனாய் பிறப்பேன் என்று நினைத்தார்.

குருகு என்றால் பறந்து போகும்.

மீன் என்றால் நீர் வற்றினால் இறந்து போகும்.

பின் எப்படி பெருமாளை தரிசிப்பது.

ஆழ்வார் ஒரு வழி கண்டு பிடித்தார்.

பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் ஒரு ஆளாக போனால் மற்றவர்கள் விலகி வழி  விட்டு விடுவார்கள். நாம் நேராக பெருமாளுக்கு பக்கத்தில் போய் விடலாம். அது மட்டும் அல்ல, ஜர்கண்டி ஜர்கண்டி என்று விரட்டவும்  மாட்டார்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே இருக்கலாம் என்று நினைத்து, பெருமாள் உமிழும் பொன் வட்டில் கொண்டு செல்லும் ஆள் ஆவேனே என்று வேண்டுகிறார்.

பாடல்


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

சீர் பிரித்த பின் 

பின்னல் இட்ட  சடையானும் பிரமனும் இந்திரனும் 
துன்னிட்டு  புகல் அரிய  வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடர் ஆழி வேங்கடக் கோன் தான் உமிழும் 
பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேனாவேனே

பொருள் 

பின்னல் இட்ட  சடையானும் = சிவனும்

பிரமனும் = பிரமனும்

இந்திரனும் = இந்திரனும்

துன்னிட்டு  = நெருங்கி

புகல் அரிய = உள்ளே செல்ல முடியாத

வைகுந்த நீள்வாசல் = நீண்ட வைகுந்தத்தின் வாசலில்

மின்வட்டச்  = மின்னல் வட்டம் இடுவதைப் போன்ற

சுடர் = சுடர் விடும்

ஆழி = சக்கரத்தைக் கொண்ட

வேங்கடக் கோன் = திரு வேங்கட மலையின் தலைவன்

தான் உமிழும் = அவன் உமிழும்

பொன் வட்டில் = தங்க வட்டில் (எச்சில் உமிழும் பாத்திரம் )

பிடித்து = பிடித்து

உடனே புகப் பெறுவேனாவேனே = உடனே உள்ளே செல்வேன்

சரி, அது என்ன சிவன், பிரமன், இந்திரன் போக முடியாத வாசல் ? ஆழ்வாருக்கு  சிவன் மேல் கோபமா ? பெரியவர்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு இருக்குமா ? துவேஷம் இருக்குமா ?  

இருக்கவே இருக்காது.

சரியாகப் புரிந்து கொள்ளமால், பல பேர் வைணவம் படித்தால் சைவம் படிப்பது இல்லை, சைவம் படித்தால் வைணவம் படிப்பது இல்லை ஒரு வெறுப்பு கொள்கிறார்கள். 

சைவ வைணவ சண்டை எல்லோரும் அறிந்ததே. 

ஆழ்வார் என்ன சொல்ல வருகிறார் என்றால் 

சிவன் - எல்லாம் துறந்து சுடுகாட்டில் போய் இருக்கிறான். சிவன் துறவறம்.

பிரமன் - கல்விக் கடவுளான சரஸ்வதியை மணந்தவன். பிரமன் ஞான மார்க்கம். 

இந்திரன் - நீண்ட பல யாகங்களைச் செய்து, அரக்கர்களை வென்று , தேவலோக பதவி பெற்றவன். அது கர்ம யோகம். 


இறைவனை கர்ம யோகத்தாலோ, ஞான யோகத்தாலோ, துறவினாலோ இறைவனை அடைவது என்றால் நீண்ட காலம் ஆகும். நீள் வைகுண்ட வாசல். 

அதை விட பக்தி மார்க்கம் எளிதானது நிரந்தரமானது என்று சொல்ல வருகிறார். 

ஞான மார்கத்தில் சென்றாலும் பின்னால் சந்தேகம் வரும். வெளியே அனுப்பி விடுவார்கள். மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். 

பக்தி அப்படி அல்ல. ஒரு முறை அடைந்து விட்டால், எப்போதும் அவன் கூடவே இருக்கலாம் என்று சொல்ல வருகிறார். 

சிந்திப்போம்.

 

Tuesday, June 16, 2015

அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு 


யாரைப் பார்த்தாலும் அறிவுரை வழங்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வயசு ஆகிவிட்டால் , அதுவே ஒரு தகுதி போல அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

யார் சொல்வதை  கேட்பது ? எதை கேட்பது ? எதை விடுவது ? என்ற குழப்பம் நமக்கு வரும்.

அவர்கள் சொல்வது சரிதானா என்று எப்படி அறிந்து கொள்வது ? இல்லை என்றால் பெரியவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?

அறநெறிச்சாரம் சொல்கிறது.

அற உரைக்கு நான்கு முக்கியமான தேவகைள் இருக்கின்றன.

முதலாவது - சொல்பவன்

இரண்டாவது -   கேட்பவன்


மூன்றாவது - சொல்லப்படுவது

நாலாவது - சொன்னதால் விளையும் பயன்
   
இந்த நான்கிலும் உள்ள குறைகளை நீக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாடல்

 உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.

பொருள்

உரைப்பவன் = சொல்பவன். கண்ட சாமியார் சொல்வதையும் கேட்கக் கூடாது. 

கேட்பான்  = கேட்பவன்

உரைக்கப்படுவது = சொல்லப் படுவது

உரைத்தனா லாய பயனும் = சொன்னதால் ஆன பயனும்

புரைப்பின்றி = குற்றம் இன்றி

நான்மையும் = இந்த நான்கிலும்

போலியை நீக்கி = குறைகளை நீக்கி

அவைநாட்டல் = அவற்றை எடுத்துக் கொள்ளுதல்

வான்மையின் மிக்கார் வழக்கு = அற நெறியில் நின்றவர்களின் வழி


யாரோ சொன்னார்கள் என்பதற்காக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

இப்படி ஒரு நூல் யாருக்குக் கிடைக்கும் ? நான் சொல்கிறேன் என்பதற்காக  நீ இவற்றை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீயே ஆராய்ந்து பார்த்து  சரி என்றால் ஏற்றுக் கொள் என்று சொல்லும் துணிவும் நம்பிக்கையும் உள்ள புத்தகம் அறநெறிச்சாரம்.

அதைப் படிக்க வேண்டுமா இல்லையா ?


நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்