Saturday, October 22, 2016

இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம்

இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம் 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை கூறினான் வீடணன். இராவணன் கேட்டான் இல்லை.  பின்,அவனை விட்டு பிரிந்து வந்து, தன்னுடைய மந்திரிகளிடம் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டான். அவர்களும், இராமனிடம் போய் சேர்வோம் என்று கூறினார்கள்.

வீடணனும், "நல்லது சொன்னீர்கள். இராமனைச் சேர்ந்து இந்த பிறவியை போக்கிக் கொள்ளலாம் " என்று கூறுகிறான்.

இங்கே சற்று நிறுத்தி யோசிப்போம்.

இராவணன் செய்த செய்கை சரி இல்லை என்றால், அவனுக்கு உதவி செய்யாமல் தனித்து நின்றிருக்கலாம். பரசுராமன், விதுரன் போன்றோர் துரியோதனன் செய்தது தவறு என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் பாண்டவர் பக்கம் போக வில்லை. துரியோதனனுக்கு துணை செய்யவில்லை. அவ்வளவுதான். எப்படியோ போ என்று விட்டு விட்டார்கள்.

அதே போல வீடணனும் செய்து இருக்கலாம். எதற்காக இராமன் பக்கம் சேர்ந்து, இராவணனுக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் ? அது சரியா என்று  வீடணனை ஆழ்வார் என்று கொண்டாடுபவர்கள் கூட மனதுக்குள் சங்கடப்படுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஏன் அப்படி செய்தான் ?

இந்தப் பாடலில் விடை தருகிறான்.

பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்

'நல்லது சொல்லினீர்; = (மந்திரிகளே ) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு இனி

அல்லது செய்துமேல் = மற்றயது எது செய்தாலும்

அரக்கர் ஆதுமால் = அது அரக்க செயலே ஆகும் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் = இராமனின்

தாள் = திருவடிகள்

இணை = இரண்டையும்

புல்லுதும் = அடைவோம்

புல்லி = அடைந்து

இப் பிறவி போக்குதும் = இந்த பிறவியைப் போக்குவோம்

இராமன் திருவடிகளை  சேராமல் வேறு எதைச் செய்தாலும், அது அரக்க குணமே என்று வீடணன் நினைக்கிறான். இராவணனை விட்டு விலகிப் போய் , இராமன் கூட சேராமல் தணிந்து நின்றாலும் அது அரக்க குணமே என்பது அவன் எண்ணம்.

தவறு என்று தெரிந்தால் அதை எதிர்க்க வேண்டுமே அல்லால், நமக்கு என்ன , அவன் பாட்டுக்கு  செய்து விட்டுப் போகட்டும், நம்மை பாதிக்காதவரை நல்லது என்று  ஒதுங்கிப் போகக் கூடாது. அப்படி செய்தால், அது அரக்க குணமே.

அது மட்டும் அல்ல,  வீடணனின் எண்ணம் எல்லாம், இராவணனை தண்டிப்பதோ, சீதையை விடுவிப்பதோ அல்ல.

அவன் இராமனை சேர வேண்டும் நினைத்தது,  அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக  அல்ல.

இந்தப் பிறவி என்னும்  சூழலில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு இராமனின்  திருவடிகளே துணை என்று நினைத்து போய் சேர்ந்தான். இராவணனுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதோ, இராவணன் இறந்தால் தனக்கு  அந்த அரசு கிடைக்கும் என்பதோ அவன் எண்ணம் அல்ல. இந்தப் பிறவி பிணியை போக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

அதற்காக இராமனை சென்று சேர்கிறான்.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும். சலனங்கள் வரும். சூழ்நிலைகள் மாறும். நினைப்பது நடக்காது. நினையாதது நடக்கும்.

என்ன நடந்தாலும், நமக்கு வாழ்வில் என்ன குறிக்கோள் என்பதை மறந்து விடக் கூடாது. அதை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

அலைகள் போல் மேலும் மேலும் எழும் பிறவிகள் நீங்கள் வேண்டும்...ஆர்த்து எழும் பிறவி துயர் நீங்க வேண்டும் என்பார் மணிவாசகர்.


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 



பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பது வள்ளுவம்.

இந்த பிறவி என்ற பெருங்கடலில் நம்மை தூக்கி போட்டு இருக்கிறார்கள். சும்மா  போடவில்லை, பந்த பாசம், ஆசை, கோபம், பொறாமை போன்ற கற்களை சேர்த்து  கட்டி தூக்கி போட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து நீந்தி கரை சேர  துணையாய் இருப்பது "நமச்சிவாய" என்ற மந்திரமே என்பார் அப்பரடிகள்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

என்பது தேவாரம்.

"எல்லை இல் பெருங்குணம்" எல்லை இல்லாத பெரிய குணங்கள். இராமனுக்கு  இவ்வளவு தான் உயர்ந்த குணங்கள் என்று ஒரு பட்டியல் போட்டுக் காட்ட  முடியாது. எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும், அதையும் தாண்டி அவன் பெரிய குணங்கள் நீளும்.

இவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் என்று சொல்ல முடியாது , உயர்வு அற உயர் நலம் உடையவன் அவன் என்பார் நம்மாழ்வார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

என்பது பிரபந்தம்.

அவன் திருவடிகளை பற்றினால் இந்த பிறவி என்ற பெருங்கடலை தாண்டலாம்.



Friday, October 21, 2016

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

நன்மைகளை உடையவனை. தீமைகள் இல்லாதவனை. உமையை தன்னுடைய இடப் பாகம் கொண்டவனை. வெண்மையான எருது ஒன்றைக் கொண்டவனை.  சம்பாதிக்காத செல்வம் உடையவனை. திருச்சிராப்பள்ளியில் உள்ள மலை மேல் இருப்பவனை பற்றி பேச என் உள்ளம் குளிரும் என்கிறார் ஞான சம்பந்தர்

பாடல்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

சீர் பிரித்த பின்

நன்று உடையானைத் தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானை
சென்று அடையாத  திரு உடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

பொருள்

நன்று உடையானைத் = நல்லவைகளை, நன்மைகளை உடையவனை

தீயது இலானை = தீமைகள் இல்லாதவனை

நரை வெள்ளேறு= வெண்மையான எருது

ஒன்று உடையானை = ஒன்றை உடையவனை

உமை ஒரு பாகம் உடையானை = உமையை ஒரு பாகத்தில் கொண்டவனை

சென்று அடையாத  = அவனை சென்று அடையாத

திரு உடையானைச் = செல்வம் உடையவனை

சிராப்பள்ளிக் = திருச்சிராப்பள்ளி

குன்று உடையானைக் = மலையை உடையவனை

கூற = பற்றி பேச

என் உள்ளம் குளிரும்மே = என் மனம் குளிரும்

சிவனுக்கு சில அடையாளங்களை கூறி, அவனை பற்றி நினைக்க என் உள்ளம் குளிரும் என்கிறார்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? நாம் அதில் இருந்து பெறும் செய்தி என்ன ?

நன்று உடையானை என்று சொன்னால் மட்டும் போதாதா ? உடனே ஏன் தீயது இல்லானை என்கிறார் ?

மற்ற சமயங்களில் உள்ள கடவுள்கள் , கோபம் உள்ளவர்கள். பழி வாங்கும் குணம் உள்ளவர்கள். தண்டிக்கும் நோக்கம் உள்ளவர்கள். தன்னை வணங்காதவர்களை, தன் சொல் கேளாதவர்களை கொல்லச் சொல்லும் குணம் வாய்ந்தவர்கள். தன்னை சேர்ந்தவர்களுக்கு நல்லதும், சேராதவர்களுக்கு தீமையும் செய்யும்  குணம் கொண்டவர்கள்.

சிவன் அப்படி அல்ல.

நல்லது உள்ளவன். நல்லது இருக்கு சரி. அதோடு கொஞ்சம் தீய குணமும் இருக்குமோ என்றால். இல்லை.   தீய குணங்கள் எதுவும் கிடையாது அவனிடம். கருணையே வடிவாகக்  கொண்டவன். அன்பு நிறைந்தவன். நல்லது மட்டுமே உள்ளவன்.

அவன் எல்லோருக்கும் பொதுவானவன். தன்னை மதிக்காதவர்களுக்கும் அருள்  செய்வான்.  நல்லவர்களுக்கும்,கெட்டவர்களுக்கும் சம தூரத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

நரை வெள்ளேறு ஒன்று உடையானை - வெள்ளையான ஒரு எருது வச்சிருக்காரு. நிறைய பேர் கிட்ட இருக்கு. எல்லா விவசாயிகிட்டயும் இருக்கு. இது ஒரு பெரிய விஷயமா ?

எருதுக்கு , விடை என்று ஒரு பெயர் உண்டு.

"விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி" என்பார் ஞான சம்பந்தர்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விடை என்றால் , தீர்வு , முடிவு. கேள்விக்கு என்ன விடை என்று கேட்போம் அல்லவா ?

உலகில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லை. இராமர் கூட சீதை போனாள் , இலக்குவன் கூட ஊர்மிளை ஏன் போகவில்லை.

முருகன் ஏன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை ?

நாலு முகம், ஆறு முகம், பத்து முகம் என்றெல்லாம் இருந்தால் எப்படி படுத்து உறங்குவது ?

நல்லவன் துன்பப் படுகிறான். கெட்டவன் இன்பமாக இருக்கிறான் - ஏன் ?

இப்படி ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடையை கொண்டிருப்பவன் அவன்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து போகும். அறம் மட்டும் அழியாது. அது விடையின் வடிவில் நிலைத்து நிற்கும் என்று நம் தமிழ் வேதம் பேசுகிறது.

பொருள்களால் ஆன உலகம் அழியலாம். அவற்றை செலுத்தும் தத்துவங்கள் அழியாது. அவை சாஸ்வதமானவை.

அந்த விடையை தன்னிடம் கொண்டவன் அவன்.


உமை ஒரு பாகம் உடையானை.

நாம் , நம்முடைய தந்தை மற்றும் தாய் இருவரின் கலப்பில் பிறக்கிறோம்.  தந்தையின்  குணமும், தாயின் குணமும் எல்லோரிடமும் இருக்கும். ஒவ்வொரு  ஆணுக்குள்ளும், ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. இந்த சமுதாயம் , ஒரு ஆணிடம் உள்ள பெண்ணை  மழுங்க அடிக்கிறது. "என்னடா, பொம்பள புள்ள மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்து கேலி செய்து பெண் உணர்ச்சிகளை மழுங்க அடித்து  விடுகிறது.அதே போல் பெண் கொஞ்சம் கம்பீரமாக நடந்தால் "என்ன இப்படி  திம்மு திம்மு னு ஆம்புள புள்ள மாதிரி நடக்குற. மெல்லமா நட  " என்று பெண்ணுக்குள்  இருக்கும் ஆணை மழுங்க அடிக்கிறது.

இப்படி மழுங்க அடிக்கப் பட்டதால், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை இழந்து விட்டு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே இருக்கும் பெண் போல   வெளியே ஒன்று  தெரிந்தால் அவள் பால் காதலில் விழுகிறான் ஆண். பெண்ணும் அதே போல் தான்.

தனக்கு வந்த மனைவி, அவனுக்குள்  இருக்கும் பெண்ணை போல இல்லை என்றால்  அவன்   தேடல் தொடர்கிறது.

தனக்குள் இருக்கும் பெண்ணோடு ஆண்  சேர்வதும், தனக்குள் இருக்கும் ஆணோடு பெண் சேர்வதும் தான்  உண்மையான திருமணம். அதுவே முழுமையைத்  தரும்.வெளியே உள்ள ஆணும் பெண்ணும் ஒரு காலத்திலும் உள்ளே இருக்கும் ஆண் மற்றும் பெண் போல வராது.

இதை புரிந்து கொண்ட நம் முன்னவர்கள்  அர்த்த நாரி என்று  வைத்தார்கள்.

அர்த் என்றால் பாதி.

உமை வெளியில் இருந்தால் சரி வராது. ஒன்றாக கலக்க வேண்டும். பாதி பாதியாக.

உமை ஒரு பாகம் உடையானை

சென்று அடையாத திரு உடையானை.

நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் நம்மிடம் வந்தது. உழைத்து சம்பாதித்து வந்தது  அல்லது முன்னோர்கள் தேடி சேர்த்து வைத்து விட்டுப் போனது. எப்படியோ  நம்மிடம் வந்தவை. நாம் வரும்போது ஒண்ணும் கொண்டு வரவில்லை.

வந்தவை , கட்டாயம் போகும்.

அதன் பெயரே 'செல்வம்' . எப்போது வேண்டுமானாலும் செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இறைவனிடம் இருப்பது வெளியில் இருந்து வந்தது அல்ல. உள்ளேயே இருப்பது.

உண்மையான , நிரந்தரமான செல்வம் உள்ளே இருப்பது.

அதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

  என்னமோ தெரியல ...ரேவா, இந்து, உஷா ...எல்லோரும் இதே போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.


உடம்பு எப்போது சூடாகும் ? கோபம் வரும்போது, காமம் வரும் போது , பொறாமை வரும் போது...இரத்தக் கொதிப்பு என்கிறோம். பொறாமை தீயில் வேகிறான் என்கிறோம். கோபத்தில் கண்ணில் கனல் பறக்கிறது என்கிறோம்.

அப்படி கொதித்த மனம் குளிர  என்ன செய்ய வேண்டும்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்,

"சீராப்பள்ளி குன்றுடையானை சொல்லுங்கள்" உள்ளம் குளிரும் என்கிறார் ஞானசம்பந்தர்.


 அரி என்ற பேரரவம் உள்ளத்தில் புகுந்தால் குளிரும் என்கிறாள் ஆண்டாள்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

சொல்லிப் பாருங்கள். குளிரும். 

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?



அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

அரப்பள்ளியானும் = அரவணையில், பாம்பு அணையில் துயிலும் திருமாலும்

அலர் உறைவானும் = மலரின் மேல் வாழும் பிரம்மாவும்

அறியாமைக் = அறியாமல்

கரப்பு = மறைந்து இருப்பதை

உள்ளி = எண்ணி

நாடிக் = தேடி

கண்டிலரேனும் = காணவில்லை என்றாலும்

கல் சூழ்ந்த = கற்கள் நிறைந்த

சிரப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

மேய = வாழும்

வார்சடைச் = நீண்ட சடை முடியை கொண்ட

செல்வர் = செல்வர்

மனைதோறும் = வீடு வீடாக சென்று

இரப்பு உள்ளீர்;= பிச்சை பெற்று கொண்டு இருந்தால்

உம்மை  = உன்னை

ஏதிலர் = மற்றவர்கள்

கண்டால் = பார்த்தால்

இகழாரே? = பரிகாசம் செய்ய மாட்டார்களா

ஏதிலார் என்றால் மற்றவர்கள் என்று பொருள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் திருவள்ளுவர்.

மற்றவர்கள் குற்றத்தைப் பார்க்கும் போது , தன்னுடைய குற்றத்தையும் சிந்தித்தால்  இந்த உலகில் எந்த தீமையும் நிகழாது என்கிறார் வள்ளுவர்.

 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

எல்லோரும் இருக்கும் போது, காதலனும் காதலியும் எதோ மற்றவரக்ளை பார்ப்பது போல  பார்த்துக் கொள்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப் படுத்த மாட்டார்கள்.

ஏன் ஏதிலார் என்றார் ?

சிவ பெருமான் பெரிய ஆள். எல்லாம் வல்லவர் என்று அவரை வணங்குபவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரை வணங்காத மற்ற சமயத்தவர்களுக்கு  என்னடா இவர் பெரிய ஆள் என்கிறார்கள் வீடு வீடாக போய்  பிச்சை வாங்குகிறாரே என்று பரிகாசம் செய்வார்கள் அல்லவா. அதனால் ஏதிலார் என்றார்.

சிவனுக்கு பெரிய மலை கோட்டையே இருக்கிறது. அவ்வளவு பெரிய வீடு இருக்கும் ஆள் எதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று நகைப்பார்கள்.

திருமாலும், பிரமனும் ஆண்டவனின் அடியையும் முடியையும் காணச் சென்றார்கள். காணமுடியாமல் வந்தார்கள் என்ற இந்த கதையை வைத்துக் கொண்டு  சிவனா, திருமாலா யார் பெரியவன் என்ற சர்ச்சை தொடங்கி விட்டது.

இந்த கதைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன ?

முதலாவது, திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகளின் கணவன். ப்ரம்மா அறிவுக்கு அதிபதி. காலை மகளின் கணவன். இறைவனை அறிவினாலோ, செல்வத்தாலோ  காண முடியாது , பக்தி ஒன்றே அவனை அறியும் வழி என்று சொல்லுவது  முதல் அர்த்தம்.

இரண்டாவது, மாலும் அயனும் ஏன் அடி முடி தேடிச் செல்ல வேண்டும் ? சிவன் எங்காவது சென்று  ஒளிந்து கொண்டு எங்கே என்னை கண்டு பிடியுங்கள்  என்று சொல்லி இருக்கலாமே ? அடி முடி காணச் சென்றார்கள் என்றால், இறைவன் என்பவன் இவ்வளவுதான் என்று வரையறை செய்யச் சென்றார்கள் என்று அர்த்தம். இங்கே தொடங்கி, இங்கே முடிவது தான் இறை என்று  வரையறை செய்யச் சென்றார்கள்.


இறைவன் நம் சிந்தனைக்கு உட்பட்டவன் அல்ல. இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

என்பார் மணிவாசகர். 

 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே


இராமனைக்

இராமனைப் பற்றி சொல்ல வந்த கம்பர் சொல்கிறார்,

"யாரே முடியக் கண்டார் " என்று. யாரும் இராமனை முழுமையாக காணவில்லை என்று.

மிதிலை நகர் பெண்கள் எல்லாம் இராமனின் தோளைக் கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள், அவன் திருவடியைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள்

தோள் கண்டார். தோளே கண்டார்.
   தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
   தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
   வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்.
.
ஏன் இறைவனை முழுமையாக அறுதியிட்டு சொல்ல முடியாது ?

வெளியே இருக்கும் ஒன்று என்றால் அதை பார்த்து, தொட்டு உணர்ந்து, இது இப்படி இப்படி  இருக்கிறது என்று சொல்லி விடலாம். உள்ளே இருக்கும் ஒன்றை எப்படி அறிந்து கொள்வது. உள்ளே இருக்கும் ஒன்றே வெளியே தேடினால் எப்படி கிடைக்கும் ?

இறைவன் உள்ளே இருக்கிறான்.

"கரப்பு உள்ளி"

அப்படி என்றால் ஏன் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படித்தான் தெரிந்து கொள்வது.

நாவுக்கரசர் சொல்கிறார்.

பாலில் நெய் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிகிறதா ? தெரியவில்லை.

கன்னுக்குத் தெரியவில்லை என்பதால் பாலில் நெய் இல்லை என்று  சொல்ல முடியுமா ?

விறகின் உள்ளே தீ இருக்கிறது. தொட்டுப் பார்த்தால் சுடுமா என்றால் சுடாது. தீ என்றால்  சுட வேண்டுமே ? எனவே விறகில் தீ இல்லை என்று சொல்ல முடியுமா ?

பின் எப்படி நெய்யும், தீயும் இருக்கிறது என்று நாம் அறிகிறோம்.

பாலை காய்ச்சி, உறை விட்டு, அதை தயிராகச் செய்து, பின் அதை கடைந்து எடுத்தால்  வெண்ணை வரும். அந்த வெண்ணையை உருக்கினால் நெய் வரும்.

அதை போல, விறகை கடைந்தால் தீ வரும்.

அது போல இறைவனை எப்படி காண்பது ?

உறவு கோல் நாட்டு, உணர்வு கயிற்றினால் முறுக  வாங்கி கடைய முன்

நிற்கும் என்கிறார் நாவுக்கரசர்.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே





Thursday, October 20, 2016

திருவாசகம் - யானை மாதிரி

திருவாசகம் - யானை மாதிரி

மனிதன் என்றால் மனதால் செலுத்துப் படுபவன், மனம் வேலை செய்யும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்.

குழந்தை பிறந்த சில காலம் வரை, நாம் அந்தக் குழந்தையை "அது" என்று தான் சொல்லுவோம். "அது அப்படித்தான், பசிச்சா ஒரே சத்தம் போடும்" "அது படுக்கையை நனைக்கும்" என்று சொல்கிறோம்.

அது என்பது விலங்குகளுக்கு போடும் சொல். ஏன் மனிதக் குழந்தைக்கு அதை போடுகிறோம் ?

ஏன் என்றால் குழந்தைகளுக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

அதே போல், மிக வயதாகி, ஞாபகம் தவறி, புலன்கள் தடுமாறி மனம் சரியாக வேலை செய்யாமல் இருக்கும் வயதானவர்களை "அதுக்கு வேற வேலை இல்லை , ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

மனம் சரியாக வேலை செய்யும் வரைதான் மனிதன். இல்லை என்றால் அவன் மனிதன் இல்லை.

மாணிக்க வாசகர் தன்னை யானை என்று உருவகித்து பாடல் தருகிறார்.

யானையைப் போல இருந்தேன். என் மனம் என்ன என்று நான் அறிய மாட்டேன். கண்டதெல்லாம் துன்பமே. வருக என்று என்று என்னை கட்டளை இட்டாய். வலிமையில்லாதவன் நான். புலன் இன்பங்களை அனுபவிக்க என்றே பிறந்த நான்என்கிறார்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இரு கை யானையை ஒத்திருந்த என் உள்ளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உள்ளோருக்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இரு கை = இரண்டு கைகளை உடைய

யானையை = யானையை

ஒத்திருந்த = போல் இருந்த

என் = என்னுடைய

உள்ளக் = உள்ளத்தின்

கருவை = உள் நிலையை

யான் = நான்

கண்டிலேன் = காணவில்லை

கண்டது = கண்டது எல்லாம்

எவ்வமே = துன்பமே

வருக என்று = என்னை வா என்று

பணித்தனை = கட்டளை இட்டாய்

வான் உள்ளோருக்கு = வானில் உள்ள தேவர்களுக்கு

ஒருவனே = சிறந்தவனே

கிற்றிலேன் = வலிமை இல்லாதவன் நான்

கிற்பன் உண்ணவே = உண்பதற்கு மட்டும் வலிமை உள்ளவன்

சரி, இதில் எதற்கு யானையை குறிப்பிட்டு மாணிக்க வாசகர் கூறுகிறார் ?

யானைக்கும் நமக்கும்  பல ஒற்றுமை உண்டு.

யானை என்நேரமும் எதையாவது தின்று  கொண்டே இருக்கும். யானைக்கு வயறு தான் எல்லாம். வாயில் ஒன்றை வைத்துக் கொண்டே தும்பிக்கையில் இன்னொன்றை பற்றிக் கொண்டு இருக்கும். "இரு கை " என்று   கூறியது,இரு பக்கம்  என்ற பொருளில். சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்களில் பலர் அப்படித்தான். காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் காப்பி  , டீ குடிப்பது. அப்புறம் சிற்றுண்டி, அப்புறம் பதினோரு மணிக்கு இரு காப்பி அல்லது டீ....என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

யானை, தன்னை கட்டுவதற்கு சங்கிலியை எடுத்து யானை பாகன் கையில் தரும்.

நாமும் அப்படித்தானே, இருவினை என்ற சங்கிலியை எடுத்து நாமே பூட்டிக் கொள்கிறோம்.

யானை, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். மனிதர்களும் அப்படித்தான். அவரக்ளை பாவம் செய்யச் சொல்லி தூண்டுவது யார். அவர்களே வலியச் சென்று செய்வார்கள்.

யானைக்கு தனக்கு மேல் ஒரு பாகன் அமர்ந்து இருக்கிறான் என்று தெரியாது.  அது போல மனிதர்களும் , தனக்கு மேல் ஒன்று உண்டு என்று அறிவது  இல்லை என்கிறார் மணிவாசகர்.

எனவே யானைக்கு தன்னை உதாரணமாகச் சொன்னார்.

இறை அருள் என்பது ஏதோ நாம் தேடிப் போய் அடைவது அல்ல. அதற்கு உரிய நேரமும், பக்குவமும், முன் முயற்சியும் இருந்தால் அல்லாது நிகாழாது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மணிவாசகர்.

தவமும் தவம் உடையவர்க்கே ஆகுமாம் என்பார் வள்ளுவர். தவம் செய்வதற்கு தவம் செய்திருக்க வேண்டும்.

எனவே தான் :"வருக என்று பணித்தனை" என்கிறார் மணிவாசகர்.

 
"என் உள்ளக் கருவை யான் கண்டிலேன்"

நான் யார். நம் உள்ளம் என்ன. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நம் ஆசைகள், அச்சங்கள் என்ன ? நம்மை தூண்டுவது எது ? இதெல்லாம் நமக்குத் தெரியாது.  சாவி கொடுக்கப் பட்ட  பொம்மை போல இயங்குகிறோம். பிறந்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளை பெற்றோம் என்று இயந்திர கதியில் வாழ்க்கையை நடத்துகிறோம்.

உள்ளே சென்று ஆராய வேண்டும். நம்மை நாம் அறிய வேண்டும். நாம் அறிந்தது எல்லாம் யார் யாரோ சொன்னது. நம் சொந்த அனுபவம், ஆராய்ச்சி என்று ஒன்றும் கிடையாது.  இவற்றை தாண்டி நான் யார் என்று அறிய வேண்டும்.

நான் யார் என்ற அறிவு வரும் வரை, வாழ்க்கை துன்பம் நிறைந்தே இருக்கும். நம்மை நாம் அறியும் போது , துன்பம் விலகி இன்பம் பிறக்கும்.

அதை அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.

வீட்டில் தாய்மார்கள் சூடான பொருட்களை தூக்க  கிடுக்கியை உபயோகப் படுத்துவார்கள். அது அனைத்து பாத்திரங்களையும் தூக்கப் பயன்படும். ஆனால், தன்னைத் தானே அதனால் தூக்க முடியாது. அதற்கு இன்னொரு கிடுக்கி வேண்டும்.

அது போல, நாம் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நம்மை நாம் அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.


புலன் இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு எதற்கும் எனக்கு சக்தி இல்லை. நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.


Wednesday, October 19, 2016

திருக்குறள் - நட்பு

திருக்குறள் - நட்பு 


நண்பர்கள் என்றால் ஒருவரோடு கூடி மகிழ்வது , பேசி, பாடி, ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது நண்பன் துன்பத்தில் இருந்தால், அவனை மகிழ்ச்சி படுத்துவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டும் அல்ல, நண்பனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது, முடிந்த வரை அவனுக்கு பணமோ அல்லது ஆறுதலோ சொல்லி அவனைத் தேற்றுவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது எல்லாம் நண்பர்களின் கடமை அல்ல என்கிறார் வள்ளுவர்.

நட்புக்கு புது இலக்கணம் வகுக்கிறார்.

பாடல்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற் பொருட்டு

பொருள்


நகுதற் = சிரித்தல் அல்லது மகிழ்தல்

பொருட்டன்று = அதற்காக அல்ல

நட்டல் = நட்பு கொள்வது

மிகுதிக்கண் = அதிகமான இடத்தில்

மேற்சென்று = மேலே சென்று

இடித்தற் பொருட்டு = தடுத்து நிறுத்துவதற்கு

நண்பர்களோடு சேர்ந்து  மகிழ்வதற்காக அல்ல நட்பு என்பது. அவர்கள் வரம்பு மீறிச் செல்லும் போது  அவர்களை கடிந்து தடுத்து நிறுத்துவதே நட்பின் இலக்கணம் என்கிறார் வள்ளுவர்.

சற்று சிந்திப்போம்.

"நகுதற் பொருட்டன்று"....சந்தோஷத்திற்காகவே அல்ல என்று ஒரே போடாக போடுகிறார்.  ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது, சினிமா, பீச், என்று சுத்துவது என்பதற்காக அல்ல நட்பு.  நாம் ஒருவர்க்கு நண்பராக இருக்கிறோம் என்றால் அது சந்தோஷத்திற்காக அல்ல. பின் எதற்காக ?

மிகுதிக் கண் - மிக மிக யோசித்து எந்த வார்த்தையை கையாள்கிறார் வள்ளுவர். வரம்பு மீறி போகும் போது என்று கூறும் போது அது சட்ட வரம்பு மட்டும் அல்ல அது எந்த வரம்பாக இருந்தாலும் , அதை தாண்டினால் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு நண்பன் அதிகமாக உணவு உட்கொள்கிறான் என்று  வையுங்கள் அதனால் யாருக்கும் ஒரு துன்பமும் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமான உணவு அவனுக்கே கேடாய் முடியும். எனவே, எந்த விதத்தில் அளவை மீறினாலும், என்று பொருள் கொள்ள வேண்டும். அதிகமாக உடற் பயிற்சி செய்தாலும் தவறு தான். எதையும் ஒரு அளவுக்குள் வைக்க வேண்டும். சரி அப்படி என்றால், இரண்டு மூணு கிளாஸ் மது அருந்திய பின், அல்லது ஒரு நாளைக்கு பத்து சிகரெட் பிடித்த பின் என்று கொள்ளலாமா என்றால் அதற்கு அடுத்த சொல்லில் விடை தருகிறார். 

"மேற் சென்று" மேற் சென்று என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் என்று அர்த்தம். அதாவது, அவன் வரம்பு மீறிய செயல்களை செய்த பின், அவனை திருத்துவது சரி அல்ல. அவன் அதை செய்ய ஆரம்பிக்கும் முன்னே அவனை தடுத்து நிறுத்த வேண்டும். தண்ணி அடிக்கிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்னேயே சென்று நிறுத்தி விட வேண்டும். ஒரு பெக் தானே என்று  இருக்கக் கூடாது. நண்பன் சூதாடப் போகிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்பே நிறுத்தி விடவேண்டும்.


"இடித்தற் பொருட்டு" - அன்பாக , நட்பாக சொன்னால் சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  "வேண்டாண்டா, அது நல்லது இல்லை " என்று மென்மையாகச் சொன்னால்  கேட்க மாட்டார்கள். ஒரு ரவுண்டு தானே , என்று சொல்லுவார்கள். அவர்களை திட்டி, ஏன் , தேவை என்றால் இரண்டு அடி கூட போட்டு  அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.  இடித்தற் பொருட்டு என்றால் கடிந்து சொல்லி , முரட்டுத் தனமாக தோன்றினாலும் பரவாயில்லை என்று   கடினமான   முறைகளை கையாண்டு என்று பொருள்.

நண்பர்கள் என்ன செய்கிறார்கள் , என்ன செய்ய நினைக்கிறார்கள் என்று அறிந்து, அது தவறான வழி என்று தோன்றினால், உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி செய்யா விட்டால் அது நட்பே அல்ல.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அவனுக்கு நல்ல நண்பர்கள் இல்லை என்று அர்த்தம்.

அது மட்டும் அல்ல, நம்மை தவறு செய்வதில் இருந்து தடுத்து நிறத்த வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்று தெரிய வேண்டும் அல்லவா ? அப்படி, நல்லது கெட்டது தெரிந்த நண்பர்களை தேர்ந்து எடுங்கள்.  உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.


அப்படி செய்தால் என்ன ஆகும் ?

நம்மால் , நம் நண்பர்கள் தவறு செய்வது தடுத்து நிறுத்தப் படும்.

நம் நண்பர்களால் நாம் தவறு செய்வது செய்வது தடுத்து நிறுத்தப் படும்

தவறு செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமுதாயம்  மிக அமைதியாக,  இன்பமாக இருக்கும்.

இப்படி நட்பின் மூலம், ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறார் வள்ளுவர்.


Tuesday, October 18, 2016

திருக்குறள் - ஈன்ற பொழுதினும்

திருக்குறள் - ஈன்ற பொழுதினும் 


திருக்குறள் போன்ற நூல்களை படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

பாடல்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் 

பொருள்

ஈன்ற பொழுதிற் = பிள்ளையை பெற்ற நேரத்தை விட

பெரிதுவக்கும் = மிகவும் மகிழும்

தன்மகனைச் = தன் மகனை

சான்றோன்= சான்றோன்

எனக்கேட்ட தாய் = என கேள்விப் பட்ட தாய்

பிள்ளையை பெற்ற போது மகிழ்ததை விட அவன் சான்றோன் என்று மற்றவர்கள் கேட்ட பொழுது தாய் மிக மகிழுவாள்.


இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? இது எல்லோருக்கும் தெரிந்தது தான். தன் பிள்ளை பெரிய ஆளாகி விட்டான் என்றால் எல்லா  தாயும் மகிழ்ச்சி கொள்வது இயற்கை தானே. இதைச் சொல்ல ஒரு வள்ளுவர்   வேண்டுமா ? என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம். ஒவ்வொரு வார்த்தையாக சிந்திப்போம்.

ஈன்ற - ஏன் ஈன்ற என்ற சொல்லை போட்டார் ? பெற்ற பொழுதின் என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஈதல் என்றால் கொடுத்தல். பெறுதல் என்றால்  பெற்றுக் கொள்ளுதல். ஒரு தாய் மகனை தருகிறாள். யாருக்குத் தருகிறாள் ? அவளுடைய குடும்பத்துக்கு, அவன்  வாழும் சமுதாயத்துக்கு, அவன் வாழும் நாட்டுக்குத் தருகிறாள்.  தருகிறாள் என்றால் ஏதோ விலைக்கு தருவது இல்லை. ஈதல் என்றால் கொடையாகத் தருதல் என்று பொருள். பெரிய செல்வந்தர்கள்  தங்கள் சொத்தில் கொஞ்சத்தை நன்கொடையாக தருவது ஈதல்.  

தாய் ஒரு மகனைப் பெறுவது சுயநலத்தால் அல்ல. அவனால் வீடும், நாடும்  சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தால். அவள் அவ்வளவு துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு , இந்த நாடும், மனித குலமும் சிறக்க  ஒரு மகனைப் பெற்றுத் தருகிறார்கள்.

உலகத்தில் உள்ள அத்தனை பெரியோர்களையும் பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே ?

ஒரு இராம கிருஷ்ண பரம ஹம்சரை, ஒரு நியூட்டனை, ஒரு வள்ளுவரை, ஒரு கம்பரை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசனை, காந்தியை , மாணிக்க வாசகரை என்று அத்தனை பெரியவர்களையும்  பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே. அவள் தந்த கொடை தானே. அவள் வலி பொறுக்காமல் இருந்திருந்தால், நமக்கு  அவர்கள்  கிடைத்து இருப்பார்களா ?

எனவே "ஈன்ற" என்ற சொல்லை போடுகிறார் வள்ளுவர். ஒவ்வொரு தாயும்   இந்த உலகுக்கு ஒரு கொடையாளி தான்.

பிள்ளை பெற்றாள் என்று சொல்லக் கூடாது. பிள்ளை ஈன்றாள் என்று சொல்ல  வேண்டும்.

பொழுது  - ஒரு பிள்ளை பிறந்து, தவழ்ந்து, பேசி, பள்ளிக்கூடம் போய் , இப்படி அவன் செய்யும் ஒவ்வொவரு செயலும் தாய்க்கு மகிழ்ச்சி  தருவது தான் . இருந்தாலும், ஏன், அந்த ஈன்ற பொழுதை மட்டும்  வள்ளுவர் குறிப்பாகச் சொல்கிறார் ? மற்றைய பொழுதுகள்  சிறந்தவை இல்லையா ?

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பிள்ளை பிறக்கும் அந்த கணம் வரை அவள் தாய் அல்ல. அவள் மகளாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கலாம். தாய் என்ற  நிலை பிள்ளை பெறும் அந்த கணத்தில் நிகழ்வது. அது மட்டும் அல்ல,  மற்ற அனைத்து நிலைகளும் அவளால் நிகழ்ந்தவை அல்ல.  அவள் யாருக்கோ மகளாகப் பிறந்தாள், சகோதரியாக ஆனால்,  வாழ்க்கைப் பட்டு மனைவியானாள். அவளுடைய செயல் இதில்  மிகக் குறைவு.

ஆனால் , தாய் என்ற ஒரு நிலைக்கு வர, முழுக்க முழுக்க அவள் செய்த அர்பணிப்புகள்  ஏராளம்.

தூக்கம் போகும், பசி போகும், உணவை கண்டால் குமட்டும், சாம்பல், மாங்காய் போன்ற சுவை அற்ற உணவு பிடிக்கும், தலை சுத்தும், வாந்தி வரும்...இப்படி எத்தனையோ துன்பங்களை தாங்கி அவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள்.  ஈனுகிறாள்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஒரு தலைவலி, பல் வலி, கண் வலி என்றால்  அந்த அவயம் மட்டுமே வலிக்கும். பிள்ளை பேறு என்றால் உடம்பில் அத்தனை அவயங்களும் வலிக்கும்.

"அங்கமெல்லாம் நொந்து" என்பார் பட்டினத்தார். அத்தனை அங்கமும்  வலிக்கும்.

எனவே, அந்த ஒரு கணம் பிள்ளை மட்டும் தோன்றவில்லை. ஒரு தாயும்  தோன்றுகிறாள். மனைவி என்று இருந்தவள், தாயாக மாறும் தருணம்  அந்த பொழுது. எனவே அதை சிறப்பித்துக் கூறுகிறார்.

இன் : ஈன்ற பொழு தின்  என்று ஒரு "இன்' என்ற வார்த்தையைப் போடுகிறார்.  போடாவிட்டால் குறள் எப்படி இருக்கும் ?

ஈன்ற பொழுது பெரிது உனக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று அமையும்.

அதாவது, மகன் சான்றோன் என்று ஆகி விட்டால், அவன் பிறந்த அந்த நேரத்தை எண்ணி பெரிதும் மகிழுவாள் என்று அர்த்தம் ஆகும். அப்படி என்றால், வேறு எந்த நேரத்தை நினைத்தும் மகிழ மாட்டாள் என்று ஆகும்.

இன் அந்த வார்த்தையால், பொழுதினும் என்று அமைகிறது. மற்ற பொழுதும் மகிழ்தாள் . மற்ற எல்லா நேரங்களை விடவும் ஈன்ற பொழுதில் மகிழ்ந்தாள். ஆனால், சான்றோன் எனக் கேட்ட போது , ஈன்ற பொழுதை விட மிக  மகிழ்ந்தாள் என்று ஆகிறது. இன் என்ற ஒரு வார்த்தை  செய்யும் மாயம்.

பெரிது - என்ற இந்த வார்த்தை இல்லாவிட்டால் என்ன ஆகும் ? ஈன்ற பொழுதின் உவக்கும் என்று இருக்கும். அப்படி என்றால் மகனின் வாழ்வில் இரண்டே இரண்டு மகிழ்ச்சியான தருணங்கள் தான் இருக்க முடியும். பிறந்த பொழுது, சான்றோன் என்று கேட்ட பொழுது. பெரிது என்ற வார்த்தையால், மற்ற நிகழ்வுகளும் உண்டு, அதை விட  பெரிய நிகழ்வு ஈன்ற பொழுது என்று ஆகும்.

உவக்கும் - உவக்கும் என்ற சொல்லுக்கு அளவற்ற மகிழ்ச்சி என்று பொருள்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

என்பார் தொல்காப்பியர்.

கட்டற்ற மகிழ்ச்சி. அன்பு கலந்த மகிழ்ச்சி.

தன் மகனை - அது என்ன தன் மகனை ? வெறுமனே மகனை என்று சொல்லி இருந்தால் போதாதா ?

அவன் சான்றோனாகும் போதுதான் அவனை தன் மகன் என்று ஒரு தாய் நினைப்பாள். பெருமை படுவாள். ஒருவன் களவாணியாக, காமுகனாக,  பித்தலாட்டம் செய்பவனாக, தீவிர வாதியாக இருந்தால், அவனை தன்னுடைய மகன் என்று சொல்ல ஒரு தாய்  வெட்கப் படுவாள். சொல்லாமல் இருப்பதே நலம் என்று நினைப்பாள். தன்னால், தான் பெட்ற மகனால் இப்படி ஒரு கேடு வந்து விட்டதே என்று  நினைத்து வருந்துவாள் . இப்படி ஒரு பிள்ளையை பெறாமலேயே  இருந்திருக்கலாம் என்று நினைப்பாள் அல்லவா ? தான் ஒரு மலடியாகவே இருந்து விட்டுப் போய்  இருக்கலாம், இப்படி ஒரு பிள்ளையை பெற்றதை விட என்று ஒரு தாய்  நினைப்பது இயல்பு தானே.

எனவே தான், "தன் மகனை " என்றார்.

"மகனை" - அது என்ன மகனுக்கு மட்டும் தான் சிறப்பா ? மகள் என்றால் இல்லையா ? மகள் என்பவள் அவளுடைய இளமையான வயதில் திருமணம் முடித்து இன்னொரு வீட்டுக்குப் போய்  விடுவாள். அதற்குப் பின் , அவளுடைய சாதனைகள் புகுந்த வீட்டைப் பொறுத்தே அமையும் . அவள் பிறந்த வீட்டார் பங்கு அதில் அதிகம் இருக்காது. ஆனால், மகன் என்பவன் தாயின் இறுதிக் காலம் வரை  அவளுடனேயே இருப்பவன். எனவே, மகன் என்றார்.

"சான்றோன்" ஒருவரை புகழ வேண்டும் என்றால் , அவரை சான்றோன் என்று சொன்னால் போதும். அதற்கு மேல் ஒரு உயர்ந்த வார்த்தை கிடையாது. சான்றோன் என்பவன் யார் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை

என்ற இந்த ஐந்து குணங்களும் நிறைந்தவனே சான்றோன் ஆவான்.  அதிலும், முதலில் அன்பைச் சொன்னார் வள்ளுவர்.

"கேட்ட தாய்" ...தன் மகன் பெரிய ஆள் என்று எல்லா தாய்க்கும் ஒரு அபிப்ராயம் உண்டு. அப்படி மற்ற தாய்மார்களும் நினைப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அவன் உண்மையிலேயே சான்றோன் தானா , அல்லது தனது தாய்மை என்ற அன்பினால் அப்படி தோன்றுகிறதா  என்ற அவளுக்குத் தெரியாது. எனவே, மற்றவர்கள்  உன் மகன் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் மகிழ்வாள் என்றார்.

அது மட்டும் அல்ல, ஒரு மகன் எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும், தாய்க்கு அவன் சின்ன பிள்ளை தான்...நல்லா சாப்பிடு, பார்த்து சாலையை கட என்று அவனுக்கு சின்ன பிள்ளைக்கு சொல்லுவதைப் போல  சொல்லுவாள். அது தாய்மையின் குணம். அவன்  பெரிய ஆள் என்பதெல்லாம் ஊருக்கு. அவளை பொறுத்தவரை  அவன் சிறு பிள்ளை தான். எனவே, மற்றவர்கள் சொல்லும்போது  அவளுக்கு  மகிழ்ச்சி உண்டாகிறது.

மேலும், ஒரு மகன் தானே சான்றோன் ஆகி விட முடியாது. "அவையத்து முந்தி இருப்பச் செயல்" தந்தையின் கடமை. எனவே, மகன் சான்றோன் என்றால், கணவன் தன் கடமையை சரி வர செய்திருக்கிறான் என்று பொருள். அவன் அப்படி செய்ய வாழ்க்கை துணைவியான  தானும் உறுதுணையாக இருந்திருக்கோம் என்று அவள் நினைப்பாள். ஒரு பெற்றோராக தங்களது கடைமையை தாங்கள்  ஒழுங்காக செய்து விட்டோம் என்று மகிழ்வாள்.

ஒரு குறளுக்கு இவ்வளவு அர்த்தம், ஆழம். இப்படி 1330 குறள்.

சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் அர்த்தம்.

நம் முன்னவர்கள் நமக்காக தேடி சேர்த்து வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். 


 

Friday, October 14, 2016

திருக்குறள் - குற்றமற்றவர் செயல்

திருக்குறள் - குற்றமற்றவர் செயல் 


எப்படி பேச வேண்டும் ? எப்படி கேட்க வேண்டும் ?

பேசத் தெரியாமல் பேசி, பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம், நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம், உறவுகளை துன்பப் படுத்தி விடுகிறோம்.

அதே போல, யார் சொல்வதை கேட்பது, எப்படி கேட்பது, என்று தெரியாமல் கண்டதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். டிவி இல் பேசுவதை, whatsapp ல் பலர் உளறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்படி பேச வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

பாடல்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற்பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்

வேட்பத்தாஞ் = விரும்பும்படி

சொல்லிப் = சொல்லி

பிறர் = மற்றவர்கள்

சொற் = சொல்லுவதில்

பயன் = பயன்களை

கோடன் = கண்டு பிடித்து கொள்வது 

மாட்சியின் = பெருமை உடையவர்களின்

மாசற்றார் = குற்றமற்ற

கோள் =  முடிவு , உறுதி

மற்றவர்கள் விரும்பும்படி  பேச வேண்டும். மற்றவர்கள் சொல்வதில் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்.

கொஞ்சம் ஆழ்ந்து பொருள் தேடுவோம்.

மற்றவர்கள் விரும்பும் படி என்றால்,

முதலாவது, அவர்கள் நாம் சொல்வதை , சொல்லும் போது விருமப வேண்டும்.

இரண்டாவது, மீண்டும் நம்மிடம் வந்து கேட்க விரும்ப வேண்டும். அவர் கிட்ட போய் பேசுனா ஏதாவது நல்லது சொல்லுவார், புதுமையான ஏதாவது சொல்லுவார் என்று விரும்பி கேட்க வர வேண்டும்.

அப்படி நிகழ வேண்டும் என்றால், யாரிடம் பேசுகிறோமோ, அவர்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை, அதற்கு என்ன தீர்வு,  அந்த தீர்வை செய்வதில் என்ன சிக்கல்கள் , அந்த சிக்கல்களை எப்படி  தாண்டுவது என்று சிந்தித்து, அதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி  எளிமையாக சொல்ல வேண்டும். அவர்கள் மனதை  உறுத்தாமல், அவர்கள் சங்கடப் படாமல் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். நல்லதைப் பேச வேண்டும். நம்பிக்கை ஊட்டும்  படி பேச வேண்டும்.

அப்படி பேசினால் அவர்கள் நாம் பேசுவதை விரும்புவார்கள்.

அதற்கு , ஆழ்ந்த படிப்பும், நல்ல  சிந்தனையும்,உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமும்   வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நலம்.

இரண்டாவது, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ நம்மிடம் சொல்கிறார்கள். சில சமயம் அது நமக்கு உபயோகமாக இருக்கும். சில சமயம் அபத்தமாக இருக்கும்.

அவர்கள் சொல்வதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாததை விட்டு விட வேண்டும். சொன்னவர்களை கோபிக்கக்  கூடாது.

அதே நேரத்தில், சொல்பவர் பெரியவர், வயதில் மூத்தவர் , ஒரு நிறுவனத்தின் தலைவர் என்பதால் அவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அவர்கள் சொல்வதில் நமக்கு என்ன பயன் என்று அறிந்து , அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசுவது உயர்ந்த கருத்துகளாக இருக்கலாம். அதனால் நமக்கு என்ன பயன் என்று அறிந்து அதை கேட்க வேண்டும்.


உண்மையா பொய்யா என்று ஆராய  வேண்டாம். பயன் உள்ளதா, பயன் அற்றதா என்று ஆராய வேண்டும். பயன் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள  வேண்டும். பயன் இல்லாதவற்றை விட்டு விட வேண்டும்.

காரண காரியம் இல்லாமல் பேசுவதும், கேட்பதும் கூடாது.

வெட்டிப் பேச்சு,  திண்ணைப் பேச்சு, வம்புப் பேச்சு இவற்றை தவிர்ப்பது நலம்.


பேசுவதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும். இப்படி பேசினால் கேட்பவர்களுக்கு பிடிக்குமா என்று.

கேட்பதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும், எதற்காக அந்த பேச்சை கேட்கப் போகிறோம் என்று.

நல்லதைப் பேசுவோம். பயனுள்ளவற்றை கேட்போம்.

வாழ்கை பயனுள்ளதாக இருக்கும். இருக்கட்டும்.