Saturday, January 21, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான்

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான் 


பரதனைக் காண குகன் வருகிறான். முதலில் ஏதோ இராமன் மேல் கோபம் கொண்டுதான் பரதன் வந்து விட்டான் என்று நினைத்தான். பின், பரதனின் தவ வேடம் கண்டு, தான் நினைத்தது தவறு என்று அறிந்து, பரதனைக் காண குகன் தனியே வருகிறான்.

வரும் குகனை நானே சென்று பார்ப்பேன் என்று பரதன் எழுந்து செல்கிறான்.

குகனை நோக்கி கை கூப்பிய படி வருகிறான் பரதன். அப்படி வந்த பரதனை குகன் வணங்கினான்.  வணங்கிய குகனின் கால்களில் பரதன் விழுந்தான். விழுந்த பரதனை ஒரு தந்தை மகனை எடுத்து அணைப்பது போல எடுத்து அணைத்துக் கொண்டான்.

பாடல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்

    வீற்றிருக்கும் சீர்த்தியான்.


பொருள்


வந்து = தனியாக வந்து (வந்தது குகன்)

எதிரே தொழுதானை = எதிரில் தொழுத படி நிற்கும் பரதனை

வணங்கினான் = (குகன்) வணங்கினான்

மலர் இருந்த அந்தணனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

தனை வணங்கும் = தன்னை வணங்கும்படி இருக்கும்

அவனும் = பரதனும்

அவனடி வீழ்ந்தான் = குகனின் காலில் விழுந்தான்

தந்தையினும் களி கூரத் = ஒரு தகப்பனைவிட மிக மகிழ்ந்து

தழுவினான் = தழுவிக் கொண்டான் குகன்

தகவு உடையோர் = தகுதி உடையவர்கள்

சிந்தையினும் = சிந்தனையிலும்

சென்னியினும் = தலையிலும்


வீற்றிருக்கும் சீர்த்தியான் = எப்போதும் இருக்கும் பெருமை கொண்ட குகன்


பரதன் குகனைத் தொழுதான்

குகன் பரதனை வணங்கினான்

பரதன் குகன் காலில் விழுந்தான்

குகன் பரதனை தழுவிக் கொண்டான்

என்ன நடக்கிறது இங்கே ?

பரதன் ஒரு பேரரசின் மன்னன். குகன் ஒரு ஓடம் ஓட்டுபவன்.  ஒரு சக்கரவர்த்தி  ஓடம் ஓட்டுபவனின் காலில் விழுவதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா ?

பரதன் விழுந்தான்.

பரதனுக்குத் தெரியாதா ?

தெரியும்.

பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்து இருக்கிறது.

முதலாவது, இறைவனின் முன்னால் எல்லோரும் சமம். உருவம் இராம பக்தர்கள். இதில் பெரியவன் என்ன சிறியவன் என்ன. யாரை யார் தொழுதால் என்ன ? யார் காலில் யார் விழுந்தால் என்ன ? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இரண்டாவது, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். குகன் பரதனை தழுவிக் கொண்டான்.  வீட்டுப் பெண்மணிகள், தங்கள் வீட்டில் வேலை பார்க்கும்  பெண்களை தழுவிக் கொள்வதை நம்மால் சிந்திக்க முடியுமா ?  வீட்டு வாசலில் காவல் நிற்கும் அந்த காவலாளியை நம்மால் கட்டி அணைக்க முடியுமா ?  கையாவது கொடுப்போமா ?  வியர்வையில் நனைந்து, மீன் வாடை அடைக்கும் குகனை பரதன் தழுவிக் கொண்டான். அன்பும் பக்தியும் வந்து விட்டால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சின்னவன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. எல்லோரும் சமம். இது வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது, பக்தர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று பக்தர்களுக்குள்ளேதான் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. அவர் பெரியவர். இவர்  பெரியவர். அவர் இத்தனை முறை அந்த கோவிலுக்குப் போய் இருக்கிறார், அவர் மடாதிபதி, சன்னிதானம், தலைவர், குரு , என்று ஆயிரம் பாகுபாடுகள். இதெல்லாம் போக வேண்டும். ஒரே ஒரு முறை பார்த்த குகனும், கூடவே பிறந்த பரதனும் ஒருவருக்கு ஒருவர் சமமாக பழகினார்கள். பக்தியில்  சீனியாரிட்டி எல்லாம் கிடையாது.


நான்காவது, இராமன் குகனை தம்பி என்றான். குகனோ பரதனை மகனாக நினைக்கிறான். ஒரு தந்தை தன் மகனை அணைத்துக் கொண்டாள் எவ்வளவு மகிழ்வானோ , அதை விட மகிழ்ந்தான் குகன். அவ்வளவு அன்பு, வாஞ்சை. பக்தி என்று வந்து விட்டால், அன்புக்கு அளவே இல்லை.

பக்தி செலுத்துவோருக்கு ஒரு பாடம் இந்த பாடல்.



Thursday, January 19, 2017

குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து

 குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து 


பெண்கள் எதையும் நேரடியாகத் சொல்வது இல்லை. கொஞ்சம் சுத்தி வளைத்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பொருள் தேடி வெளியூர் போகப் போகிறான் தலைவன். மனைவியைப் பிரிந்து , அவள் தரும் அன்பை பிரிந்து பொருள் தேடுவதுதான் உயர்ந்தது என்று செல்லும் அவர்தான் அறிவுள்ளவர் என்றால் அவர் அறிவுள்ளவராகவே இருந்து விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்திவிட்டுப் போகிறேன்.

மனைவி மற்றும் உறவுகளை விட்டு விட்டு அயல் நாட்டுக்குப் போகாதே. அது முட்டாள்தனம் என்று நேராகச் சொல்லி விடலாம். சொல்லவில்லை.

அப்படிச் செய்ற நீதான் புத்திசாலி. நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் இந்த குறுந்தொகை கால மனைவி.

பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் போல....

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. 


சீர் பிரித்த பின்

அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோராக
மடவமாக மடந்தை நாமே.

பொருள்


அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

நீங்கி = விட்டுப் பிரிந்து

துணை = மனைவியைத்

துறந்து = விட்டு விலகி

பொருள்வயிற் = பொருள் தேடி

பிரிவோர் = பிரிந்து செல்வோர்

உரவோராயின் = வலிமை உள்ளவர் என்றால்  (உரம் = வலிமை). இங்கே புத்திசாலி, அல்லது அறிவாளி

உரவோர் = புத்திசாலி

உரவோராக = புத்திசாலியாகவே இருந்துவிட்டு போகட்டும்

மடவமாக = மடத்தனம் கொண்ட

மடந்தை நாமே = பெண்கள் நாமே

இதில் உள்ள நுணுக்கமான செய்திகளை பார்க்க வேண்டும்.

அன்பு என்பது நம்மிடம் உறவு உள்ளவர்களிடம் தோன்றும் இரக்கம்.

அருள் என்பது நம்மிடம் உறவு இல்லாதவரிடத்தும் தோன்றும் இரக்கம்.


அருளும் அன்பும் நீங்கி ....

என்கிறாள். மனைவி என்ற அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பெண் துன்பப படுகிறாளே  என்ற அருளாவது இருக்க வேண்டாமா என்பது அவள் கேள்வி.


"துணை துறந்து  பொருள்வயிற் பிரிவோர்....."

பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்வின் குறிக்கோளா ? பணம் வேண்டும்தான். அதற்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோம் என்று  சிந்திக்க வேண்டும் ?

ஆரோக்கியம் ? அன்பு ? உறவு ? அறிவு தேடல் ? என்று எத்தனையோ நல்ல விஷயங்களை  இழந்து விடுகிறோம்.

அயல் நாடு தான் போக வேண்டும் என்று இல்லை.

வீட்டையும், உறவுகளையும் , உடல் ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப் படமால் பணம் பணம்   என்று ஓடி ஓடி சம்பாதிப்பது அறிவான செயல்தானா ?

பொருள் அவசியம் தேவைதான். அதற்காக கொடுக்கும் விலை என்ன என்று யோசிக்கச் சொல்கிறாள். பணம் எல்லாம் சம்பாதித்து விட்டு வந்து பார்த்தால் வயது போயிருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை என்று போயிருப்பார்கள். ஆரோக்கியம் போயிருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அவள் முடிக்கும் போது , "நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லவில்லை.

"மடவமாக மடந்தை நாமே"

நாமே என்று சொல்கிறாள். யார் இந்த "நாம்" ? எல்லா பெண்களும் அப்படித்தான்  நினைப்பார்கள்.

அருளும், அன்பும், துணையும் அவர்களுக்கு பணத்தை விட முக்கியம்.

அப்படி நினைக்கும் எங்களை உலகம் முட்டாகள் என்று சொல்கிறது. அப்படியே இருந்து விட்டு  போகட்டும். நீங்கள் எல்லாம் புத்திசாலியாகவே இருங்கள் என்கிறாள்.

யார் புத்திசாலி ? யார் முட்டாள் ?

விவாதம் தொடர்கிறது. இன்று வரை விடை கிடைக்கவில்லை.

கொஞ்சம் நிறுத்தி , யோசிப்போம். 


Wednesday, January 18, 2017

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே 


தமயந்தி தனித்து இருக்கிறாள் நளனை நினைத்தபடி. இரவு அவளுக்கு துன்பம் தருகிறது. இரவு முடிகிற பாடாக இல்லை. நீண்டு கொண்டே இருக்கிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். நிலவு மட்டும்தான் இருக்கிறது.

அதனிடம் பேசுகிறாள்.

"ஏய் குளிர்ந்த நிலவே. இளைய நிலவே ! என் குழலின் மேல் விடமால் ஏன் உன் குளிர்ந்த ஒளியை விடாமல் செலுத்துகிறாய் ? இந்த மன்மதன் என் மேல் போர் தொடுக்க உனக்கு இந்த விடியாத இரவை ஆயுதமாக கொடுத்து அன்பினானா " என்று கேட்கிறாள்.

பாடல்


ஈர மதியே ! இளநிலவே ! இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று.


பொருள்

ஈர மதியே ! = குளிர்ந்த நிலவே

இளநிலவே ! = இளமையான நிலவே

இங்ஙனே = இப்படி

சோர்குழலின் = அவிழ்த்து விடப்பட்ட குழலின்

மீதே = மீது

சொரிவதெவன் = பொழிவது ஏன் ?

மாரன் = மன்மதன்

பொரவளித்தான் = போர் அளித்தான். போருக்கு அனுப்பினான்

கண்ணி உனக்குப் = கன்னியாகிய உனக்கு

புலரா = விடியாத

இரவளித்தான்  = இரவை அளித்தான்

அல்லனோ = அல்லவா

இன்று = இன்று

நிலவே நீ  குளிர்ந்த கதிரை பாய்ச்ச வேண்டியவள். என் மேல் மட்டும் ஏன் தீயை  அள்ளி தெளிக்கிறாய் , அப்படிச் செய்யாதே. எனக்கும் குளிர்ச்சியைத் தா  என்று சொல்ல "குளிர்ந்த நிலவே" என்கிறாள்.

நீயும் என்னைப் போல இளமையானவள் தானே. காதலின் பிரிவு என்ன என்று உனக்கும்  தெரியும்தானே. பின் ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய். போய் விடு என்று சொல்லுவதைப் போல , இளைய நிலவே என்று சொல்லுகிறாள்.


போருக்கு என்னென்னெவோ ஆயுதங்கள் உண்டு. கத்தி, வில், அம்பு என்று. இங்கே மன்மதன் , நிலவை போருக்கு அனுப்புகிறான், இரவு என்ற ஆயுதத்தை  கொடுத்து.

என்ன ஒரு கற்பனை !!

Tuesday, January 17, 2017

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும் 


பணிவு இல்லாதது. ஆணவம் கொள்வது. தான் தான் உயர்ந்தவன் என்று எப்போதும் எண்ணிக் கொள்வது இறைவனின் குணம் என்று நேற்றுப் பார்த்தோம். அது ஒரு அரக்க குணம்.

அப்படியானால் பணிவது தெய்வ குணமா  என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதற்கு அருணகிரிநாதர் விடை தருகிறார்.

வள்ளியின் பாதங்களை பிடிக்கிறான் முருகன். அது மட்டும் அல்ல, "நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்கிறேன்" என்று கூறுகிறான். அவள் மீது கொண்ட மோகத்தால் அதுவும் தணியாத மோகத்தால் என்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்



 திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பொருள்


திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே

என் மனம் கடினமானது. கல் போன்றது. அதில் உன் திருவடித் தாமரை மலருமா ?

மலராது.

ஆனால், நீ நினைத்தால் முடியும் . ஏன் என்றால் நீ உன் அடியவர்களிடத்தில்  அன்பும்,  கருணையும் கொண்டவன். நீ நினைத்தால் உன் திருவடிகள் என் மனதில் பதியும் என்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிகிறான் . பணிந்து, நீ எனக்கு இட்ட வேலை என்ன  என்று கேட்கிறான்.

தனக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டவள் அவள் என்று நினைக்கிறான்.

காடு மேடெல்லாம் அலைந்து அவள் கால் வலிக்காதா ? கல்லும் முள்ளும் குத்தி  அவள் கால் நோகாதா என்று நினைத்தது அவள் பாதங்களை பிடிக்கிறான்.

நீ கஷ்டப் பட்டது எல்லாம் போதும். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல் என்று  அவளை வேண்டி நிற்கிறான்.

ஒவ்வொரு வீட்டிலும் இது நடந்தால் குடும்பம் எப்படி இருக்கும் ?

மனைவியின் தியாகங்களை, துன்பங்களை கணவன் அறிந்து அவள் மேல் கருணை கொண்டு, அவள் பாதங்களை பிடித்து , அவள் மேல் காதல் கொண்டால்  தாம்பத்தியம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மனைவியின் காலை நான் பிடிப்பதா என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் இனி வரும் தலை முறைகளுக்கும்  அருணகிரிநாதர் பாடம் சொல்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிந்தான். அவள் இட்ட கட்டளையை கேட்டான். அவள் மேல் தீராத மோகம் கொண்டான்.

ஒரு புறம்  இராவணன்....படுக்கை அறையிலும் வணங்கா முடி.

இன்னோரும் புறம் முருகன்...வள்ளியின் பாதம் பணியும் , அவளின் ஆணையை கேட்கும் முருகன்.

இலக்கியம் படிப்பதில் உள்ள இன்பம் இதுதான்.

பணிந்து பாருங்கள்.  சொர்கம் தெரியும்.



இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான்

இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான் 


இராமனை கண்டு அவனை மீண்டும் அழைத்து வந்து மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க என்னை பரதன் அவனைத் தேடி வருகிறான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் தோற்றத்தைக் கண்டு தன் தவற்றை உணர்ந்து கொள்கிறான்.

"பரதனுக்கு ஏதோ ஒரு துன்பம் இருக்கிறது. அவனுக்கு இராமன் மேல் கொண்ட அன்பு குறையவில்லை. அவனைப் போலவே இவனும் தவ வேடம் கொண்டு இருக்கிறான். படை வீரர்களே , நீங்கள் இங்கு வழியை பத்திரமாக பார்த்துக் கொண்டு இருங்கள். நான் மட்டும் போய் அவனைப் போய் பார்த்து விட்டு வருகிறேன் " என்று குகன் தனியே கிளம்பினான்.

பாடல்

உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.

பொருள்


உண்டு இடுக்கண் ஒன்று; உடையான் = துன்பம் ஒன்று உடையான்

உலையாத அன்புடையான் = மாறாத அன்பு உடையான்

கொண்ட தவவேடமே = இராமன் கொண்ட தவ வேடமே

கொண்டிருந்தான் = இவனும் கொண்டிருக்கிறான்

குறிப்பு எல்லாம் = இந்த குறிப்பை எல்லாம்

கண்டு = பார்த்து

உணர்ந்து  = உணர்ந்து

பெயர்கின்றேன் = செல்கிறேன் (அவனைக் காண)

காமின்கள் நெறி; = வழியைப் காவல் காத்துக் கொண்டு இருங்கள்

“ என்னாத் = என்று தன் படைகளிடம் கூறி விட்டு

தண் துறை = குளிர்ந்த துறையில்

ஓர் நாவாயில் = ஒரு படகில்

ஒரு தனியே தான் வந்தான் = தனியே தான் மட்டும் வந்தான்


வாழ்க்கையை அறிவின் மூலமே அறிந்து செலுத்தி விட முயல்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு  அறிவியல் பூர்வமான, தர்க ரீதியான வாதம் செய்கிறோம்.  வாழ்வில் சில விஷயங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, அறிவியலுக்கு அப்பாற்பட்டு, தர்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. 

அன்பு, துன்பம், காதல், பக்தி, பாசம், போன்றவை அறிவுக்கு அப்பாற்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், இவற்றை அறிவு கொண்டு ஆராய முற்பட்டால் தவறாகவே முடியும். 

முதலில் பரதனை தவறாக எடை போடுகிறான். படையோடு வந்திருக்கிறான், இராமனோடு சண்டை போடவே வந்திருக்கிறான் என்று அவன் அறிவு  சொல்கிறது. சண்டைக்குத் தயாராகி விட்டான். 

பின் , அவனைக் கண்டதும் அவன் எண்ணம் மாறுகிறது. தான் பரதனை பற்றி  நினைத்தது தவறு என்று எண்ணுகிறான். 


"கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்" 

என்கிறான். 

கண்டு அறிந்து பெயர்கிறேன் என்று சொல்லவில்லை. கண்டு உணர்ந்து செல்கிறேன் என்கிறான். 

அன்பை உணர முடியும். அறிய முடியாது.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பார் மணிவாசகர் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து

என்பது திருவாசகம்.

பரதனின் உலையாத அன்பை குகன் உணர்ந்தான்.

அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் உள்ள வீரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை போருக்கு தயாராக்கி விட்டான் குகன். ஒரு வேளை அவர்கள் பரதனுக்கு ஏதாவது தீங்கு செய்து விட்டால் என்று அஞ்சி, அவர்களை "நீங்கள் வழியை பார்த்துக் கொண்டு இங்கே இருங்கள் " என்று சொல்லிவிட்டு தான் மட்டும் போகிறான். 


குகன் கண்ட பரதனை மற்ற வீரர்களும் கண்டார்கள். குகனுக்கு மட்டும் பரதனின் நிலையை உணர முடிந்தது. மற்றவர்களால் முடியவில்லை. 

உலகத்தில் உள்ள பொருள்களும் சம்பவங்களும் ஒன்று தான் என்றாலும், பார்ப்பவரின்  பக்குவத்தில் இருக்கிறது எல்லாம். 

கல்லென்று நினைப்பவனுக்கு கல். அதைத் தாண்டி ஏதோ இருக்கிறது என்று உணர்பவனுக்கு  , ஏதோ இருக்கிறது. 

என்ன இருக்கிறது , காண்பி, விளக்கு என்றால் முடிவது இல்லை. 

உணரலாம். அறிய முடியாது. 

Sunday, January 15, 2017

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்


இராவணனிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தன. இருந்தாலும், அவனை அரக்கன் என்று தான் உலகம் கூறுகிறது. அவன் தம்பி வீடணனை விபீஷண ஆழ்வார் என்று உலகம் கொண்டாடுகிறது. குலம் ஒன்றுதான். ஒருவன் அரக்கன், இன்னொருவன்   சிறந்த பக்திமான். இவை பிறப்பினால் வருவது இல்லை.

பின் எதனால் வருகிறது ? ஏதோ சில குணங்களால் வருகிறது. அவை என்னென்ன குணங்கள் ? அந்த குணங்கள் இருப்பவர்கள் அரக்கர்கள் தான் அவர்கள் பிறப்பால் எந்த குலமானாலும்.

அப்படி என்றால் அந்த குணங்களை கட்டாயம் தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து வாழ வேண்டும் அல்லவா ?

அவற்றை தவிர்த்து வாழ்ந்தால் தான் நாம் அரக்கர்களாக மாட்டோம்.

முதல் அரக்க குணம்...அன்பை காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது. இராவணனுக்குள் அன்பு இருக்கிறது. மகன் இறந்த போது கல்லும் கறையும்படி அழுகிறான். இருந்தும் அதை அவன் வெளிப் படுத்துவதில்லை. எப்போதும் ஒரு முரட்டுத்தனம். ஒரு  நெகிழ்வு கிடையாது, நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுப்பது கிடையாது. அது கூட ஒரு தோல்வி என்று நினைப்பது.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன் ஆடை
    புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
    யாவர் இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள்,
    சேய் அரிக்கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
    மகுடம் நிரை வயங்க, மன்னோ.


பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை அணிந்த சிவனும்

பொன் ஆடை புனைந்தானும் = பொன் ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இராவணனை நலிய வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல

தேவரின் = தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர் இனி நாட்டல் ஆவார்? = யார் அவனை வெற்றி கொள்ள முடியும்

மெலியும் இடை = நாளும் மெலிகின்ற இடை

தடிக்கும் முலை = நாளும் பூரிப்படையும் மார்பகங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள்

சேய் அரிக்கண்,= சிவந்த வரிகளைக் கொண்ட கண்கள்

வென்றி மாதர் = எவரையும் வெல்லும் பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட புணர்ச்சியிலும்

வணங்காத மகுடம் = வணங்காத மகுடம்

நிரை = வரிசை

வயங்க = ஒளிவீசும்

மன்னோ = அசைச் சொற்கள்

படுக்கையிலும், பெண்களிடம் வணங்காத முடி கொண்டவன்.

தான் தான் பெரிய ஆள். சக்ரவர்த்தி. வீரன் என்று மனைவியோடு தனித்து இருக்கும் போதும்  வணங்காத முடி.

படுக்கை அறையிலேயே விட்டு கொடுக்காதவன் மற்ற இடத்தில் பணிந்து விடுவானா ?

தான் தான் பெரிய ஆள், எல்லோரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம்.

சரி, பணியாதது, விட்டுக் கொடுக்காதது அரக்க குணம் என்றால், விட்டு கொடுப்பது, மனைவியிடம் தனிமையில் பணிவது தெய்வ குணமா ?

ஆம் என்கிறார் அருணகிரிநாதர்.

ஒரு முறை அல்ல பல முறை...

அவை என்ன என்று அடுத்த பிளாக்கில் பார்ப்போமா ?



இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?

இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?


இராமனை மீண்டும் அழைத்து வந்து ஆட்சியை ஒப்படைக்க நினைத்து பரதன் வருகிறான். அவன் ஏதோ இராமன் மேல் படை எடுத்து வருவதாக எண்ணி பரதன் மேல் போர் தொடுக்க துணிகிறான் குகன். பரதன் அருகில் வந்த பின், அவனுடைய தோற்றத்தைக் கண்டு தான் நினைத்தது தவறென்று நினைக்கிறான் குகன்.

"பரதனைப் பார்த்தால் இராமனைப் போல இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் சத்ருகன் , இலக்குவனைப் போல இருக்கிறான். பாரதனோ ஒரு முனிவன் போல தவ வேடம் கொண்டு நிற்கிறான். துன்பத்தில் தோய்ந்த முகம். இராமன் இருக்கும் திசை பார்த்து தொழுகிறேன். இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா ?"

என்று எண்ணுகிறான்.

பாடல்

நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.

பொருள்

நம்பியும் = ஆடவர்களில் சிறந்தவனான பரதனும்

என் நாயகனை = என் நாயகனான இராமனை

ஒக்கின்றான்; = போல இருக்கிறான்

அயல் நின்றான் = அருகில் நிற்கும் சத்ருக்கனன்

தம்பியையும் ஒக்கின்றான் = இலக்குவனைப் போல இருக்கின்றான்

தவம் வேடம் தலைநின்றான் = தவ வேடம் புனைந்து நிற்கின்றான்

துன்பம் ஒரு முடிவு இல்லை = அளவற்ற துன்பத்தில் இருக்கிறான்

திசை நோக்கித் தொழுகின்றான்= இராமன் இருக்கும் திசையைப் பார்த்து வணங்குகிறான்

எம்பெருமான் = என்னுடைய பெருமானாகிய இராமனின்

பின்பிறந்தார் = பின்னால் பிறந்தவர்கள்

இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான் = தவறு இழைப்பார்களா ? (மாட்டார்கள்)


குகன் பரதனை பற்றி தவறாக நினைத்து இருந்தான். என்னதான் இராமன்  என்னை  தம்பி என்று சொன்னாலும், நான் தவறு செய்து விட்டேனே. பரதனை தவறாக  நினைத்து விட்டேனே. இராமனுக்குப் பின் பிறந்தவர்கள் எப்படி தவறு செய்வார்கள். நான் இராமானுக்குப் பின் பிறக்கவில்லை. அதனால் தான்  இந்த தவற்றை செய்து விட்டேன் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.

இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றால் என்ன  அர்த்தம் ?

ஒன்று, இராமனின் நல்ல குணங்களை பார்த்து அவர்களும் அதைப் பின் பற்றுவார்கள் என்று ஒரு பொருள்.. இராமாயணம் என்றாலே அது தானே. இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று  சூரியனின் பாதையை சொல்லுவதைப் போல.  இராமன் பின் பிறந்தவர்கள் இராமன் வழி நடப்பார்கள். தவறு செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது, தவறு செய்தால் இராமானுக்குப் பிடிக்காது. அவன் மனம் வருந்தும் என்று  நினைத்து தவறு செய்ய மாட்டார்கள். கானகம் செல்லும் படி தசரதன் ஆணை இட்டதும், இராமன் கிளம்பி விட்டான். இலக்குவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கோபம் கொள்கிறான். கொந்தளிக்கிறான். இராமன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை.

இறுதியாக, பெரியவர்கள் சொல்வதை கேட்பது என் கொள்கை. உனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை என்று வருந்திச் சொன்னவுடன், தன் சினத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இராமன் பின்னாலேயே கிளம்பி விடுகிறான்  இலக்குவன்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம் இங்கே நடக்கிறது.

தவறு செய்யும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வரும். பொய் சொல்ல, பிறர் பொருளை  எடுத்துக் கொள்ள, கோபம் கொள்ள, இன்ன பிற தீய செயல்களில் ஈடுபட  சந்தர்ப்பம் வரும்.

பிள்ளைகள் இரண்டு விதமாய் தங்களை தடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று, பெற்றோருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், அடி பின்னி விடுவார்கள் எனவே   செய்யக் கூடாது என்பது ஒரு வழி.

இரண்டாவது, நான் இதைத் செய்தால் என் பெற்றோர்கள் வருந்துவார்கள். அவர்களை நான் வருத்தம்  கொள்ளச் செய்யக் கூடாது என்று நினைத்து செய்யாமல் இருப்பது இரண்டாவது வழி.

இரண்டாவது வழி எப்போதும் துணை நிற்கும். எத்தனை நாள் பிள்ளையை அடிக்க முடியும் ?

ஆனால்,பிள்ளைகள் அப்படி நினைக்க வேண்டும் என்றால் பிள்ளைகள் மேல் அன்பைக் கொட்டி வளர்க்க வேண்டும். எப்போதும் கண்டிப்பு என்றால், பிள்ளைகள் சலித்துப் போவார்கள்.

இராமனின் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அந்தத் தவறு இராமனுக்கு வருத்தம் தரும் என்ற காரணத்தால்.

இராமனின் ஆளுமை, அவன் தோற்றம், அவன் நடத்தை எல்லாம் அவனைச் சேர்ந்தவர்களை  அவன் மேல் அன்பு கொள்ளச் செய்கிறது. எனவே, அவர்கள் தவறு செய்யய மாட்டார்கள்.

இந்த 'பின் பிறந்தார்' என்பதை சற்று விரித்து பொருள் கொண்டால் , இராமனை பின் பற்றப் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

இராமனை வணங்குபவர்கள், அவன் காட்டிய வழியைப் பின் பற்றுபவர்கள் தவறு செய்ய  மாட்டார்கள் என்பது முடிவு.

அப்படியே தவறு செய்தாலும், உணர்ந்து வருந்தி திருத்திக் கொள்வார்கள். குகனைப் போல.

பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ?