Thursday, June 22, 2017

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள்

கம்ப இராமாயணம் - பெண்ணின் குணங்கள் 


பெண்ணின் குணங்களைப் பற்றி சொல்லும் போதெல்லாம் , அவளுக்கு அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

மற்ற குணங்கள் எல்லாம் இருக்கட்டும், அது என்ன மடம்  ?

மடம் என்றால் மடத்தனம்,  அறிவின்மை என்ற பொருளில் தான் பலர் உரை சொல்ல படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.

அது சரிதானா ?  பெண்களுக்கு மட்டும் ஏன் மடத்தனம் என்ற அந்த குணத்தை சொல்லி இருக்கிறார்கள் ? எல்லா பெண்களுமா அப்படி இருப்பார்கள் ?

எனக்கு வேறு ஒரு யோசனை தோன்றுகிறது.

பெண் என்பவள் தன் ஆற்றல் என்ன என்பதை அறியாமல் இருக்கிறாள்.

அவளுக்குள் மாபெரும் ஆற்றல் இருக்கிறது.

மன வலிமையிலும், உடல் வலிமையிலும் பெண் ஆணை விட பல மடங்கு உயர்ந்தவள் தான்.

ஆண் பார்ப்பதற்கு வேண்டுமானால் முரடாய், வலிமையானவனாக தோன்றலாம். உலகிலேயே மிகப் பெரிய  பலமான ஆண் கூட ஒரு நோஞ்சான் பெண் தாங்கும் பிரசவ வலியை தாங்க முடியாது.

மெலிந்து, வலுவிழந்து இருக்கும் ஒரு கடைக் கோடி பெண் கூட, அந்த பிரசவ வலியை பொறுத்துக் கொள்கிறாள்.

கல்யாண வீட்டில் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டால் மூச்சு முட்டிக் கொண்டு அலைகிறோம் . மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு அரை கிலோ எடை இருக்கும் உணவு. ஒரு சில மணி நேரங்களில் சீரணம் ஆகி விடும். அதை பொறுத்துக் கொள்வதே கடினமாக இருக்கிறது.

பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பதை ஒரு ஆணால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரசவம் அதற்கு அடுத்தபடி.

உடல் வலியில் பெண் ஆணை விட பல படிகள் மேல் என்பதில் சந்தேகமே இல்லை.

மன வலியிலும் பெண் உயர்ந்தே நிற்கிறாள். பிறந்த வீடு, பெற்றோர்,உற்றார், உறவு, உடன் பிறப்பு என்று அனைத்தையும் விட்டு விட்டு புகுந்த வீடு போய் ,    அனைவரையும் அணைத்துக் கொண்டு போய் , கணவன், குழந்தைகள் என்று அத்தனை போரையும் சமாளித்து கொண்டு போகும் அவளின் மன உறுதியும் பலமும் அசாதாரணமானது.

இவ்வளவு பலம் இருந்தும், தன்னிடம் பலம் இல்லை என்று நினைத்தே வாழ்கிறாள்.

ஆனால், சமயம் வரும்போது எவ்வளவு பெரிய சுமை, சிக்கல் , பிரச்சனை வந்தாலும் அவள் தன் பலத்தால் அவற்றை எதிர் கொண்டு சமாளிக்கிறாள். அவள் இல்லாமல் ஆணால் ஒன்றும் செய்ய முடியாது. தெரியாமலா சொன்னார் வள்ளுவர் "வாழ்க்கை துணை நலம் " என்று மனைவியை.

அவள் துணை இல்லாமல் , ஆண் ஒன்றும் சாதிக்க முடியாது.

அப்படி தன் வலிமை தெரியாமல் அவள் அடங்கி  போவதால், தன் பலம் அறியாத அந்த குணத்தை மடம் என்று சொல்லி இருக்கலாம்.

அது மடத்தனம் இல்லை. அவளின் இயற்கை குணம் , அவளின் ஆற்றலை அவள் அறியாமல் மறைக்கிறது.  அந்த மறை தன்மையை உலகம் மடத்தனம் என்று கூறுகிறது.

இது என் சொந்த கற்பனை அல்ல.

இராமாயணத்தில் சீதை.


அவள், வெகுளியாக இருக்கிறாள்.

இராமனும், இலக்குவனும் சீதையும் நகரத்தை விட்டு காடு நோக்கி போகிறார்கள்.

நகரின் வாசலை தாண்டியவுடன், இராமனிடம் சீதை கேட்கிறாள் "இதுதான் காடா ?" என்று. அவ்வளவு வெகுளி. ஒன்றும் தெரியாத பெண்ணாக இருக்கிறாள். நகர் வாசலை தாண்டியவுடன் காடு வந்துவிட்டது என்று எண்ணும் அளவுக்கு உலக அறிவே இல்லாமல் இருப்பதாக கம்பன் காட்டுகிறான்.


பாடல்


"நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை செல்வம்
பூண்டு, அதனை நீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய். 

பொருள்

"நீண்ட = நீண்ட நாள்

முடி வேந்தன் = முடி சூட்டி அரசாண்ட தயரதன்

அருள் ஏந்தி = கட்டளையை ஏற்று

நிறை செல்வம் = நிறைந்த செல்வத்தை

பூண்டு = = ஏற்று

அதனை நீங்கி = பின் அதை நீங்கி

நெறி போதலுறு நாளின் = (கானகம்) போகும் போது ,

ஆண்ட நகர் = ஆட்சி செய்த நகரமான அயோத்தி

ஆரையொடு வாயில் அகலாமுன் = வாசலை விட்டு விலகியவுடன்
,
யாண்டையது கான்?" = இதுதான் காடா ?

என = என்று

இசைத்ததும் இசைப்பாய் = என்று கேட்டதை (சீதையிடம் ) சொல்வாய் (என்று இராமன் சொல்லி அனுப்பினான்)

கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் ஆயிரம் அந்தரங்க பேச்சுகள், செயல்கள் இருக்கும். அதை, அனுமன் போன்ற மூன்றாம் மனிதனிடம் சொல்வது பண்பாடாக இருக்காது. அதே சமயம், அனுமன் , இராமனின் தூதன் தான் என்று உறுதி செய்ய இராமனுக்கும், சீதைக்கும் மட்டும் தெரிந்த சில செய்திகளை சொல்லவும் வேண்டும்.

தேர்ந்து எடுத்து சொல்கிறான் இராமன்.

அப்படி , ஒன்றும் தெரியாதா அப்பாவியாக இருந்த சீதையிடம் , அனுமன் சொல்கிறான்.

"அம்மா, மத்தது எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது என் தோள் மேல் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன் "

அதை கேட்ட சீதை சொல்கிறாள்.

"அனுமனே, எனக்கு தீங்கு செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும் என் சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன் . ஆனால் , அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு களங்கம் என்று நினைத்து செய்யாமல் இருக்கிறேன்"

என்று கூறுகிறாள்

பாடல்

'அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ? 
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் 
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் 
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்


பொருள் 


'அல்லல் = துன்பம் செய்யும்

மாக்கள் = விலங்குகளை போன்ற அரக்கர்கள் வாழும்

இலங்கையது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல

எல்லை நீத்த உலகங்கள் யாவும் = எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும்

என் சொல்லினால் சுடுவேன்; = என் சொல்லினால் சுடுவேன் , எரித்து சாம்பலாக்கி விடுவேன்

அது = அப்படி செய்தால்

தூயவன் = இராமனின்

வில்லின் = வில்லின்

ஆற்றற்கு = ஆற்றலுக்கு

மாசு  = களங்கம்

என்று, = என்று நினைத்து

வீசினேன் = அந்த எண்ணத்தையே வீசி விட்டேன்


இலங்கையை அழிக்க இராமனுக்கு அனுமன் போன்ற அறிவாளி, பலசாலி துணை வேண்டி இருந்தது, ஆயிரக்கணக்கான வானரங்களின் துணை, இலக்குவனின் வீரம்,  வீடணனின் ஆற்றல், அங்கதனின் போர் திறம் என்று பல துணைகள் தேவைப் பட்டது.

சீதைக்கு அது ஒன்றுமே வேண்டாம். ஒரே ஒரு சொல் போதும் என்கிறாள்.

அவ்வளவு ஆற்றல் அவளுக்கு உள்ளே இருக்கிறது.

அதை அறியாமல், "இது தான் காடா " என்று வெகுளியாக கேட்கிறாள். "பொன் மான்  வேண்டும் " சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறாள்.

ஏதோ ஒரு காரணத்துக்காக, இயற்கை அவளின் ஆற்றலை அவளிடம் இருந்து மறைத்து வைக்கிறது.

அவளும் அது தெரியாமல், ஆற்றல் இல்லாதவளாகவே வலம் வருகிறாள்.

அந்த குணத்தைத்தான் உலகம் தவறாக மடமை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது.

ஒரு விதத்தில் தன்னை தான் அறியாதது மடமை தான்.

அனுமனுக்கும் அவன் ஆற்றல் அவனுக்குத் தெரியாது என்று சொல்லுவார்கள்.  அது மடமை இல்லை. அது தேவையாக இருக்கிறது.

ஆசிரியர் மாணவனிடம் கேட்பார் , இரண்டும் இரண்டும் எத்தனை என்று ....அவருக்குத் தெரியாமல்  அல்ல அவர் கேட்பது. அது ஒரு உத்தி. மாணவன் பதில்  சொல்லுவான், அவனை பாராட்டுவார், அவன் மகிழ்வான், மேலும் மேலும்  பல சிக்கலான கணக்கை போட்டு ஆசிரியரிடம் பாராட்டு வாங்கி பெரிய ஆளாவான்.

அனைத்துக்கும் காரணம், ஒன்றும் தெரியாத மடையன் மாதிரி அவர் கேட்ட  இரண்டும் இரண்டும்   எத்தனை என்ற கேள்வி.

பெண் தன் ஆற்றலை மறைத்து, மறந்து ஆணை உயர்த்துகிறாள்.

தன் ஆற்றலை அடக்கி இராமனுக்கு பெருமை சேர்த்தாள் சீதை.

அது மடமையா ?

அது மடமை என்றால், அந்த மடமையை வணங்குவோம்.

இப்படி பெண் தன் ஆற்றலை மறைத்து ஆணை உயர்த்திய பல சம்பவங்கள் நம் இலக்கியம்  எங்கும் கொட்டிக் கிடக்கிறது.

சரியாக பார்க்காமல் இருந்து விட்டோம்.

இன்னும் கொஞ்சம் உதாரணங்கள் சொல்ல ஆசை, தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை இருந்தால்.


Wednesday, June 21, 2017

திருவாசகம் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

திருவாசகம் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் 


பாடல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

இந்த பாடல் அநேகமாக எல்லோரும் கேட்டு அறிந்தது தான். இதை பற்றி சொல்லும் பலரும், டார்வின் பரிணாம கொள்கையை சொல்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அதை சொல்லிவிட்டார் என்று கூறி இந்த பாடல் வரிகளை சொல்வார்கள்.

பரிணாம வளர்ச்சியில் புல் , பூண்டு, புழு , மரம், மிருகம், பறவை என்று ஆகி , பின் மனிதராய், பேயாய், கணங்களாய் , அசுரராகி, தேவராக ஆவோம் என்று அர்த்தம் சொல்லுவார்கள்.

அப்படி ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

அதில் ஒரு சின்ன சிக்கல் என்ன என்றால், பரிணாம வளர்ச்சியில் உயிர்கள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போவதைப் பார்க்கிறோம். புழுவில் இருந்து மரம் வருமா ? பாம்பில் இருந்து உயிரில்லாத கல் வருமா ?

வராது.

பின் மணிவாசகர் இந்த பட்டியலை எந்த வரிசையில் தந்திருப்பார் ?

ஒரு வரிசையும் இல்லை,  சும்மா செய்யுளின் இலக்கணத்திற்கு ஏற்ப பாடி  இருப்பார்   என்று சொல்லலாம்.

மணிவாசகர் போன்ற ஞானிகள் சும்மா அப்படி எழுதுவார்களா ? அவர்கள் ஒன்றும்  பணத்துக்கும், புகழுக்கும் எழுதியவர்கள் அல்ல. பின், இந்த பட்டியலின்  தர வரிசை என்ன ?

இப்படி யோசித்தால் என்ன ?

இது அத்தனையும் ஒரே பிறவியில் நாம் பிறந்து , மறைந்து , மறுபடியும் பிறந்து மறைந்து நிகழும் செயல் என்று சிந்தித்தால் என்ன ?

என்ன, குழப்புகிறதா ?

அது எப்படி, ஒரே பிறவியில் பல பிறவிகள் முடியும் ?

சிந்திப்போம்.

ஒரு நாள் ரொம்ப கோபம் வருகிறது. எல்லோர் மேலும் எரிந்து எரிந்து விழுகிறோம்.  வீட்டில் மனைவியோ, அம்மாவோ, "ஏன் இப்படி நாய் மாதிரி குலைக்கிற " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம்.

" ஏதாவது சொல்லு...இப்படி கல்லு மாதிரி இருந்தா என்ன அர்த்தம் "

"அவன் சரியான கழுவுற மீன்ல , நழுவுற மீன் "

" பாம்புக்காவது பல்லில்  மட்டும்  தான் விஷம் , அவனுக்கு உடம்பு பூரா விஷம் "


"பணம் பணம் என்று ஏண்டா இப்படி பேயா அலையிற "

" அந்த பெண்ணை இப்படி கெடுத்திருக்கானே , அவனெல்லாம் ஒரு மனுஷனா, சரியான மிருகம் "

" நல்ல நேரத்தில உதவி செஞ்சீங்க , நீங்க தெய்வம் சார் "

" தெய்வம் மனுஷ ரூபே னு சொல்லுவாங்க, கடவுள் போல வந்து எங்களை காப்பாத்துனீங்க "

என்று நாம் தான் சில சமயம் மரமாகவும், கல்லாகவும், மனிதனாகவும், தேவனாகவும்  இருக்கிறோம்.

இப்படி மாறி மாறி, நாளும் பிறந்து இறந்து கொண்டு இருக்கிறோம்.

நேற்று இருந்த தெய்வம் இன்று காணோம். குரங்கு புத்தி. ஒன்றில் இருந்து மற்றொன்றாக தாவிக் கொண்டே இருக்கிறது.

இதில் உண்மையான நாம் யார் ?


நல்லவனா ? கெட்டவனா ? மிருகமா ? தெய்வமா ?

புரியாமல் தவிக்கிறோம்.

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் " என்று தளர்ந்து சொல்கிறார் மணிவாசகர்.

சில உண்மைகள், சில வேஷங்கள், சில வேஷங்களை நாமே நம்பி விடுகிறோம்.

உண்மை எது , பொய் எது என்று தெரியாமல் போய் விடுகிறது.

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் "

என்கிறார் மணிவாசகர்.

இது ஒரு சிந்தனை.

ஒரு பிறப்புக்குள்ளே இத்தனை பிறப்புகள். மற்றவர்களை விடுங்கள். நம்மால் தாங்க முடியுமா ?

ஒரு நாளைக்கு பத்து வேடம் போட்டு நடிக்கிறோம்.

சில நாமே போட்டு கொள்வது. சில வேடங்கள் நம் மீது திணிக்கப் படுகிறது.

மனிதனாய் பிறக்கிறோம். கொஞ்ச நேரத்தில் மிருகமாய் உருவெடுக்கிறோம். பின் அது இறந்து, தேவனாய் பிறக்கிறோம்.

நாளுக்குள் ஆயிரம் முறை பிறந்து இறந்து பிறந்து ....

மெய் எது என்பதை அறிந்தால் வீடு பேற்றை அடையலாம்.

முயற்சி செய்வோம். 

திருக்குறள் - உலகை ஆளலாம்

திருக்குறள் - உலகை ஆளலாம் 


எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தால் கூட சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

மூன்று விடயங்களை கைக் கொண்டால் எந்த பெரிய காரியத்தையும் செய்து விடலாம்.

அது என்ன மூன்று ?

ஒன்று - காலம்
இரண்டாவது - இடம்
மூன்றாவது - செயல்

பாடல்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

பொருள்

ஞாலம் = உலகம்

கருதினும் = நினைத்தாலும்,

கைகூடும் = கிடைக்கும்

காலம் = காலம்

கருதி = தேர்ந்து

இடத்தான் = இடத்தால்

செயின் = செய்தால்

மேலோட்டமாக பார்த்தால் இடமும் காலமும் அறிந்து செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து.

சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.


ஞாலம் கருதினும் = இதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. ஞாலம் கருத்தின் கை கூடும் என்று சொல்லி இருக்கலாம். அப்படிச் சொல்லாமல், ஞாலம் கருதினும் என்று வலிந்து ஒரு  உம் மை சேர்க்கிறார். அப்படி என்றால், உலகை வெல்வது கடினம். ஆனால் , இடமும் காலமும் அறிந்து செய்தால் அதுவும் கூட  முடியும் என்று அர்த்தம். அப்படி என்றால்,  வேறு எல்லாமும் முடியும் என்றுதானே அர்த்தம். மலையையே தூக்கி விடுவான் என்றால், சின்ன கல்லை தூக்க மாட்டானா ?

கை கூடும் = கையில் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார். சந்தேகம் இல்லை.  கை கூடலாம் என்று சந்தேகமாகச் சொல்ல வில்லை.  கை கூடும் என்று  வரையறுத்துச் சொல்கிறார்.

காலம் கருதி இடத்தான் செய்யின் = காலம் புரிகிறது. அது என்ன இடம்.  இடம் என்றால் நிலத்தின் ஒரு பகுதியா ? பின்னால்  இடனறிதல் என்று ஒரு அதிகாரம் வருகிறது.  சொற் சிக்கனம் கொண்ட வள்ளுவர் ஒரே கருத்தை இரண்டு இடத்தில் சொல்வாரா ? அப்படி என்றால் காலமறிதல் என்ற இந்த அதிகாரத்தில்  இடத்தைப் பற்றி ஏன் கூறுகிறார் ?

இடம் என்றால் நிலை. தற்போதைய நிலை.

"நான் இப்போது சரியான இடத்தில் தான் இருக்கிறேன் " என்று ஒருவர் கூறினால், அவர் நல்ல நிலப் பகுதியில் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. இருக்கின்ற பதவி, அவருக்கு மற்றவரின் தொடர்பு, செல்வாக்கு,

"நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்று தெரியுமா ? இருக்கும் இடம் தெரிந்து பேசு "என்று சொல்வது இருக்கின்ற நிலை அறிந்து பேசு என்ற பொருளில்.

காலம் சரியாக இருந்தாலும், நாம் இருக்கும் நிலையை அறிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

நம்முடைய நிலை, மாற்றான் நிலை, துணைவர்களின் நிலை என்று அனைத்தையும் ஆராய்ந்து


"கருதி" = கணக்கில் கொண்டு. ஆராய்ந்து. எது சரி , எது தவறு என்று ஆராய்ந்து....

"செயின் "...இறுதியில் செய்ய வேண்டும். சில பேர் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். செயல் ஒன்றும் இருக்காது. அப்படி இருந்தால் வெற்றி வராது.

செயல் பட வேண்டும்.

காலம் - இடம் - ஆராய்ச்சி (planning ) - செயல் (execution )  என்று இருந்தால் வெற்றி நிச்சயம்.

அடுத்த முறை ஏதாவது பெரிய செயல் வரும்போது , சற்று நிதானமாக இவற்றை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்.

வெற்றியே வரும்.



Tuesday, June 20, 2017

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை 


கடினமான காரியம் என்று ஒன்று உள்ளதா ? கருவியோடு காலம் அறிந்து செய்தால் என்று கேட்கிறார் வள்ளுவர்.


பாடல்

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

பொருள்

அருவினை = கடினமான செயல், பெரிய செயல்

என்ப  =  என்று (ஒன்று)

உளவோ = உள்ளதா ?

கருவியான் = கருவியை உடையவன்

காலம் = காலம்

அறிந்து செயின் = அறிந்து செய்தால்


எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க இரண்டு இன்றியமையாதது - ஒன்று தகுந்த கருவிகள். மற்றொன்று செய்யத் தகுந்த காலம். 

காலம் என்பதற்கு தகுந்த காலம் என்று பொருள் சொல்லப் படுகிறது. ஒரு அரசன், தகுந்த காலத்தில் காரியத்தை செய்ய வேண்டும் என்பது பொதுப் பொருள். 

காலத்தை நாம் வேறு விதமாக பார்க்கலாம்.

எந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருள். எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் பட வேண்டும். 

சில மாணவர்கள், தேர்வுக்கு சில நாள் முன்னால் படிக்கத் தொடங்குவார்கள். இரண்டு அல்லது மூணு நாளில் மொத்த புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம் என்று காலத்தை தவறாக எடை போடுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள்  ஆரம்பத்தில் இருந்தே தினம் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டே வருவார்கள். அவர்களுக்குத் தெரியும் உயர்ந்த மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு காலம் , நேரம் படிக்க வேண்டும் என்று. 

அதே போல் விளையாட்டுத் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் வெற்றி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல் படவேண்டும். 

கருவியான் காலம் அறிந்து செயின்.....

சில காரியங்களை கருவி இல்லாமல் செய்தால் காலம் அதிகம் ஆகும். 

உதாரணமாக, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தே போவது என்றால்  காலம் அதிகம் ஆகும். பேருந்து, கார், ஆகாய விமானம் என்ற கருவியின் துணை கொண்டு செய்தால் காலம் மிச்சப்படும். 

எந்த கருவியை உபயோகப் படுத்தலாம், எந்த காலத்தில் செய்யலாம், எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் படவேண்டும்.

அது மட்டும் அல்ல, ஒவ்வொரு செயலும் , சரியானபடி முடிய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். 

சரியான காலம் பார்த்து விதை விதைத்து விட்டோம் என்பதற்காக அந்த விதை உடனே முளைத்து காய் கனி தராது. அது வளர்ந்து பலன் தர காலம் ஆகும். 

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களாயினும் , பருவத்தால் அன்றி பழா . 

அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது. 

குழந்தை பத்து மாதம் தாயின் கருவில் இருந்தால்தான் அது ஆரோக்கியமாக பிறக்கும். குறை பிரசவம் என்றால் ஆரோக்கிய குறைவுதான். 

அவசரப் படக்கூடாது. 

சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு (gym ) இரண்டு நாள் போவார்கள். மூன்றாம் நாள் எடை குறையவில்லை, தசைகள் நல்ல வடிவில் வரவில்லை என்று நிறுத்தி விடுவார்கள். இது எல்லாம் வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று. 

எனவே,

காலம் என்பது 

- எப்போது செய்ய வேண்டும் என்று அறிவது 
- எவ்வளவு காலம் தேவை என்று அறிவது 
- பலன் கிடைக்க எவ்வளவு காலம் என்று அறிவது 

நல்ல கருவிகள் காலத்தை மிச்சப் படுத்த உதவும். அதையும் அறிந்து செயல் பட வேண்டும். 

ஒரு காரியத்தை மற்றவர்களை விட முன்னால் செய்து முடிக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கருவி வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும். 

கருவி இருந்தால் மட்டும் போதாது, அதை சரியான முறையில் கையாளவும் தெரிய வேண்டும். 

ஓட்ட தெரியாமல் கார் வைத்திருந்து என்ன பலன். 


கருவி என்பதை இயந்திரம் என்று மட்டும் கொள்ளாமல் தொழில் நுட்பம் (டெக்னாலஜி) என்று கொள்ள வேண்டும். 

ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன், எந்த மாதிரி கருவிகள் வேண்டும், எவ்வளவு காலம் வேண்டும், என்று அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தானே ?











 




Monday, June 19, 2017

கந்தர் அநுபூதி - குறியை குறியாது

கந்தர் அநுபூதி  - குறியை குறியாது 


ஒரு ஊரில் இருந்து , இன்னொரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் செல்லும் ஊர் தாங்கிய பெயர் பலகைகள் இருக்கும். சில சமயம் அந்த பெயருக்கு பக்கத்தில் அந்த ஊர் இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் எழுதி இருக்கும்.

அதை காணும் போது , நாம் சரியான வழியில் தான் செல்கிறோம், வழி தவறி விடவில்லை என்று நமக்குத் தெரிய வரும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் "கன்னியாகுமாரி" என்று பெயர் பலகை இருக்கும்.

உடனே, "ஓ, இதுதான் கன்யாகுமாரியா " என்று அங்கேயே இறங்கி விடக் கூடாது. அப்படி இறங்கினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும். அப்படி இறங்கிய ஒருவரிடம், "இது கன்னியாகுமாரி இல்லை. இது விழுப்புரம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் " என்று கூறினால், "அப்ப ஏன் கன்னியாகுமாரி என்று இங்கே எழுதி இருக்கிறது " என்று சண்டை பிடித்தால், அந்த ஆளை நாம் என்னவென்று நினைப்போம்.

அவனை பித்தன், பேதை என்று சொல்வதற்கு முன்னால் , சற்று நிதானியுங்கள்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறைவனை அடைய பல குறியீடுகள், இருக்கின்றன. பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது,  அவன் மேல் உள்ள பாடல்களை படிப்பது, திருநீறு, திருமண்  இட்டுக் கொள்வது, விரதம் இருப்பது என்று பல இருக்கின்றன. இவை ஒரு குறியீடுகள் மட்டுமே. "கன்னியாகுமாரி " என்று பெயர் பலகை இருப்பது போல.

குறியீடுகளை தாண்டி அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொண்டு , மேலே செல்ல வேண்டும். கோவில் என்றால் என்ன, சிலைகள் ஏன், பாடல்கள் எதற்கு, சமய சின்னங்கள் எதற்கு என்று அறிந்து, அவை நம்மை எங்கே செலுத்த  முனைகின்றன என்று அறிந்து அங்கே செல்ல வேண்டுமே ஒழிய , குறியீடுகளையே  பற்றிக் கொண்டு இதுதான் முடிவு என்று இருக்கக் கூடாது.

கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால், அந்த பெயர் பலகை காட்டும் திசையில் செல்ல வேண்டும். அந்த பெயர் பலகையை கட்டிக் கொண்டு அங்கேயே இருந்து விடக் கூடாது.


மருத்துவர் ஒரு மருந்தை சீட்டில் எழுதி, "இதை மூன்று வேளை சாப்பிடுங்கள்" என்றால், அதில் உள்ள மருந்தை மூன்று வேளை சாப்பிட வேண்டும். எழுதிக் கொடுத்த  காகிதத்தை துண்டு துண்டாக்கி மூன்று வேளை சாப்பிடக் கூடாது.  மருந்து சீட்டு ஒரு குறியீடு. மருந்தை உண்டு, நோய் குணமாக வேண்டும் என்பது நோக்கம்.

பல பேர் மருந்து சீட்டை சாப்பிட்டு விட்டு, "டாக்டர்,  நீங்க சொன்னபடி சாப்பிட்டேன், நோய் குணமாகவில்லையே " என்று குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இத்தனை கோவில், உற்சவம், குடமுழுக்கு, பூஜை, புனஸ்காரம், விரதம், என்றெல்லாம் இருந்தும் ஒருவரும் தன்னை உணர்ந்து ஞானியான மாதிரி தெரியவில்லை.

ஏன் ? குறியீடுகளை புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் அருணகிரி நாதர் கூறுகிறார்,

"குறியை குறியாது குறித்து அறியும்" என்று. குறிகளை விட்டு விட வேண்டும். அதை எதை குறிக்கிறதோ அங்கே போக வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் தேவை தான். அதை பார்த்து விட்டு, மேலே போய் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள் 

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல் 

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு


அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


குறியை குறியாது, அது எதை குறிக்கிறதோ அதை குறித்துக் கொள்ள வேண்டும். 

அது எவ்வாறு நிகழ்ந்தது என்றால் , "வேலினால்" நிகழ்ந்தது என்கிறார். 

அது எப்படி வேல் நிகழ்த்தும் ?

வேல் என்பது ஒரு குறியீடு. 

வேல் என்பது ஞானத்தை குறிக்கும் குறியீடு. 

எப்படி ?

வேல் எப்படி இருக்கிறது = நீண்டு இருக்கிறது, முகப்பு அகன்று இருக்கிறது, நுனி கூர்மையாக இருக்கிறது. அறிவும் அது போல ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்க வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகர் திருவாசகத்தில். 

அது நிகந்ழ்த பின் என்ன ஆகும் ?

உலகியல் பற்றுகள் நீங்கும். 

அப்புறம் ?

பேச்சும், சிந்தனையும் அற்றுப் போய் விடும். 

அப்புறம் ?

அறிவும், அறியாமையும் அற்றுப் போய் விடும். 

அறிவும் , அறியாமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. 


செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

என்று கூறுகிறார்.

இங்கே கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

'உம்' என்ற இடைச் சொல்லுக்கு பல வேலைகள் இருக்கிறது. 



" உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்."


எதிர்மறை 
சிறப்பு 
ஐயம் 
எச்சம் 
முற்றும் 
எண்ணும் 
தெரிநிலை 
ஆக்கம் 

என்ற எட்டு பொருளைத் தரும்.

உதாரணம் தந்தால் நன்கு விளங்கும். 

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்பது குறள்.

பெற்ற தாய் பசித்து இருப்பதைக் கண்டால் கூட, ஒருவன் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யக் கூடாது. 

இங்கே, குறளை ஊன்றி கவனியுங்கள் 


காண்பானாயினும் என்று ஒரு உம் மை சேர்க்கிறார். 


ஈன்றாள் பசி காண்பாயின்  செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்று சொல்லி இருக்கலாம்.

காண்பானாயினும் என்று சொல்வதன் மூலம், அப்போது கூட செய்யக் கூடாது என்ற எதிர் மறை பொருளைத் தருகிறது 


களவு செய்யினும் கொலை செய்யற்க என்று கூறும் போது , களவும் செய்யக் கூடாது என்ற பொருள் வரும். 

இங்கு உம்மை எதிர் மறை பொருளில் வந்தது. 

பாரதனைப் பற்றி இராமனிடம் கூறும் போது கோசலை கூறுவாள், 

"நின்னினும் நல்லன்"  என்று. 

நின்னின் நல்லன் என்று சொன்னாலும் அதே பொருள் தான். 

நின்னிலும் என்று சொல்லும் போது , "இராமா, நீ நல்லவன். பரதன் உன்னை விட நல்லவன் " என்ற பொருள் வரும்.

உயர்வு சிறப்பு உம்மை.

அடுத்தது ஐயம்.

இறுதிப் போட்டியில், இந்தியா வென்றாலும் வெல்லும் என்று சொல்லும் போது , வெல்லுமா, வெல்லாதா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா. இதில் உள்ள "உம் " மை நீக்கி விட்டுப் படித்துப் பாருங்கள். இந்த சந்தேகம் வராது. எனவே இது ஐயத்தை கொண்டு வரும் உம்மை.

அடுத்தது, எச்சம்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்று கூறும் போது , மற்ற ஆசிரியர்கள் வந்திருந்தார்கள் என்பது தானாகவே புலப்படும். 

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வந்திருந்தார் என்று சொன்னால் , மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. 

தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்றால் மற்றவர்களும் வந்தார்கள் என்று புலப்படும். 

மற்றவர்கள் இங்கே எச்சம். மீதி. 

எனவே இது எச்ச உம்மை. 

அடுத்தது முற்றும்மை. 

இராமனும் பரதனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்று கூறினால், வேறு யாரும் வரவில்லை, அவர்கள் இருவர் மட்டும் தான் வந்திருந்தார்கள் என்று ஒரு புரியும். வேறு யாரும் இல்லை. அவர்கள் மட்டும் தான் . முழு பட்டியலும் வந்து விட்டது என்பதால் இது முற்றும்மை.

ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 

ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும். 

இதில் , முதலாவதில், நிறைய புலன்கள் இருக்கிறது, அதில் ஐந்து புலன்களை அடக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டது போல தோன்றும். 

இரண்டாவதில், மொத்தமே ஐந்து புலன்கள் தான். அந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்பது பெறப்படும். 

எனவே இது முற்றும்மை.

இங்கே அருணகிரி சொல்கிறார் 


"செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே."

உலகப் பற்று, சொல், சிந்தனை இந்த மூன்று தான் மொத்தமும். இதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. உலகியலில் பற்று விட்டாலும், உள்ளுக்குள் சொல் ஓடிக் கொண்டே இருக்கும். விட்டது சரிதானா, ஒரு வேளை சரி இல்லையோ என்ற வாதம் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். அது நின்றாலும், வார்த்தை இல்லாமல் சிந்தனை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.


சிந்தையும் அற்று என்று ஒரு முற்றும்மையை போடுவதின் மூலம் எல்லாம் அற்றது என்று தெரிய வருகிறது.

குறியை குறியாது, குறித்து அறிந்தால் அந்த ஞானத்தின் மூலம் உலகப் பற்று, சொல் மற்றும் சிந்தனை நிற்கும்.

அப்படி நிற்கும் போது அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விடும்.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக ஆழ்ந்த பொருள் செறிவு கொண்ட பாடல்.

மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

Saturday, June 17, 2017

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க 


இன்று ஆன்மீக உலகில் உள்ள பெரிய சிக்கல் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்கள் கொண்ட கொள்கை தான் உண்மையானது, மற்றது எல்லாம் தவறு என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றன. தங்கள் தெய்வம் தான் மற்ற எல்லா தெய்வங்களை விடவும் உயர்ந்தது என்று அடம் பிடிக்கிறார்கள். மதங்கள் மட்டும் அல்ல, மதங்களின் உட் பிரிவில் உள்ளவர்களும் தங்கள் பிரிவே உயர்ந்தது என்று சாதிக்கிறார்கள்.

இதனால்  பல சண்டைகள் , சச்சரவுகள். போர்கள். உயிரிழப்பு. சதா தொல்லை.

அது ஒரு புறம் இருக்க, எது உண்மையை கண்டறியும் வழி ? இறைவனை, இயற்கையை, பிரபஞ்ச சக்தியை அறிய எது வழி ?

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல வித மார்க்கங்களை சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று சாதாரண மனிதன் குழம்புகிறான்.

அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத் வைதம் என்று பல வித கோட்பாடுகளை சொல்கிறார்கள். இவற்றை படித்து, அறிந்து தெளிய நேரம் இல்லை.

யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது ? எதைப் படித்து அறிந்து கொள்வது ? யாரை நம்புவது ? நாட்டில் பல போலி சாமியார்கள் அலைகிறார்கள். யார் உண்மையானவர் , யார் போலி என்று எப்படி இனம் கண்டு கொள்வது ?

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் விடை தருவது பெரிய புராணம்.

ஒரு நூலை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்டால் அதை எழுதிய ஆசிரியனே ஒரு கணம் திகைப்பான்.

இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும் ? இராமாயணத்தில் ஆயிரம் செய்தி  இருக்கிறது. எதை என்று சொல்லுவது ? சற்று சிக்கலான காரியம்.

திருக்குறளை எதற்குப் படிக்க வேண்டும் ?

கீதையை எதற்குப் படிக்க வேண்டும் ?

என்றெல்லாம் கேட்டால், படித்தால் நல்லது, வழி காட்டும் என்று பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லலாம்.

சேக்கிழார் சொல்கிறார் - பெரிய புராணத்தை எதற்குப் படிக்க வேண்டும் என்று. ஒரே வரியில் சொல்கிறார்.

"அக இருளை நீக்க "

பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று.

எப்படி சூரியன் புற இருளை நீக்குமோ, அது போல , அக இருளை நீக்க இந்த நூல் உதவும் என்கிறார்.

பாடல்

 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்


 இங்கிதன் = இங்கு இதன் (இந்த புத்தகத்தின்)

 நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

 இவ் உலகத்து  = இந்த உலகில்

முன்னாள்  = முன்பு

 தங்கிருள் =தங்கிய இருள்கள்

இரண்டில் =  இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

இருளை = இருளை

ஏனைப் = மற்றைய

புற இருள் = வெளி இருளை

போக்கு கின்ற = நீக்கு கின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = நீக்கும்

திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்

என்பாம் = என்று சொல்லுவோம்

புற இருளை சூரியன் நீக்குவது போல, அக இருளை நீக்குவது இந்த புராணம்.

தங்கிய இருள் என்கிறார்.

இருள் ரொம்ப நாள் தங்கி இருக்கிறது.

சரி, ரொம்ப நாள் இருண்ட வீடாயிற்றே என்று அதில் வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என்றால், அதே போல ரொம்ப நாள் ஆகாது. ஒரு தீக்குச்சியை உரசிய மாத்திரத்தில் வெளிச்சம் வரும், இருள் விலகி விடும்.

அறிவு என்ற தீ பற்றிக் கொண்டால், அறிவீனம் என்ற இருள் உடனே விலகி விடும். எத்தனை நாளாக நாம் அறியாமையில் இருந்தோம் என்பதல்ல கேள்வி.

ஒரு நொடியில் அந்த அறியாமை விலகும்.

வெளியில் உள்ள இருளுக்கும், மனதுக்குள் இருக்கும் இருளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

"சிந்தையுள் சார்ந்து , நின்று, பொங்கிய" இருள் என்கிறார் சேக்கிழார்.

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

நமது மனதுக்குள் இருக்கும் இருள் இருக்கிறதே, அது நமது சிந்தனையை சார்ந்து நிற்கிறது. பற்றிக் கொண்டு நிற்கிறது. நிலைத்து நிற்கிறது. உள்ளேயே பொங்குகிறது. 

சற்று சிந்திப்போம். 

முதலில் நமது அறியாமை நமக்குத் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று  நாம் நினைக்கிறோம். நாம் அறிந்தவை தான் சரி என்று வாதிக்கிறோம். என் மதம், என் கடவுள்  என்று சொந்தம் கொண்டாடுகிறோம். அது நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. எத்தனையோ நாள்  இந்த அறியாமையில் மூழ்கி கிடந்ததால், அது பழகிப் போய் விடுகிறது. அசுத்தத்திற்கு நடுவில் வாழ்பவனுக்கு , அந்த துர் நாற்றம் பழகிப் போய் விடுவதைப் போல , அறியாமை நமக்கு பழகி போய் விடுகிறது. 


யாரவது நம் அறியாமையை சுட்டிக் காட்டினால் , அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவரை கொல்ல முயல்கிறோம். 

சாகரடீஸ், இயேசு கிறிஸ்து, முகமது நபி, புத்தர் என்று உண்மையை யார் கண்டு சொன்னாலும், அவர்கள் மேல் சாதாரண மக்கள் கோபம் கொள்கிறார்கள்.  காரணம், அவர்கள், அந்த மக்களின் அறியாமை வெளிச்சம் போட்டு  காட்டுகிறார்கள். 

"நின்று "  நம் அறியாமை வந்து வந்து போவது இல்லை. எப்போதும் நம்முடனையே நிலைத்து நிற்கிறது. 

"பொங்கிய" ...இந்த அறியாமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு முட்டாள் சொல்வதை , இன்னொரு முட்டாள் கேட்டு இப்படியே அது  பெரிதாகிக் கொண்டே போகும். 

இதை நீக்கி, அறிவை அடைய இந்த திருத் தொண்டர் புராணம் வந்தது என்கிறார். 

எப்படி என்று பார்ப்போம். 


Friday, June 16, 2017

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் 


இலக்கியங்களை எதற்கு படிக்க வேண்டும் ?

படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது - அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், கணிதம், நிர்வாகம், என்று எவ்வளவோ முக்கியமான துறைகள் இருக்கும் போது , அவற்றை எல்லாம் விட்டு விட்டு , எப்பவோ எழுதிய கதைகளை ஏன் படிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ?

இளையவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பெரியவர்கள் மத்தியிலும் இந்த கேள்வி இருக்கிறது.

இலக்கியம் படிக்க பல காரணங்கள் சொல்ல முடியும். அதில் ஒன்று, மன ஆறுதல் பெற.

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி போய்க் கொண்டு இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும் போது மகிழும் நாம் , துன்பத்தில் துவண்டு போகிறோம்.

துன்பத்தில் தவிக்கும் போது , ஒரு தாயின் மடியாய், மனைவியின் இனிய தோளாய், நண்பனின் ஆதரவான கரமாய் இலக்கியம் இருக்கிறது.

காலங்கள் தாண்டி , தன் கற்பனை விரல்களால் நம் கண்ணீரை துடைத்து விடும் இந்த இலக்கியங்கள்.

மனதுக்கு மருந்து தடவி , சுகம் அளிப்பவை.

நமக்கு துன்பம் வரும் போது , எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சோர்ந்து போகிறோம்.

அந்த சமயத்தில் இலக்கியங்களை புரட்டுங்கள். நம்மை விட ஆயிரம் மடங்கு துன்பப பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் கவலை, துயரம் இவற்றை பார்க்கும் போது , நம் துன்பம் ஒன்றும் பெரியதில்லை என்று ஒரு ஆறுதல் பிறக்கும். அவர்களே மீண்டு வந்து விட்டார்கள் , நம்மால் முடியாதா என்று ஒரு தைரியம் பிறக்கும்.  நம்பிக்கை துளிர்விட்டால் , போதும், அது தானே வளரும்.

இலக்கியங்கள் கை கொடுத்து தூக்கி விடும் அந்தக் காரியத்தை செய்கின்றன.

தர்மன், சூதில், நாடு நகரம் எல்லாம் இழந்து, தம்பிகளோடு காட்டில் இருக்கிறான்.

நினைத்துப் பார்க்கிறான். எப்படி இருந்த நான் , இப்படி ஆகி விட்டேனே என்று  மனம் வருந்துகிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

சக்கரவர்த்தி, ஆள், அம்பு, சேனை, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று இருந்த தர்மன் அனைத்தையும் இழந்து, காட்டில் தனியாக தவிக்கிறான். அவன் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரிய துன்பம் ?


அப்போது , அங்கு வந்த முனிவரிடம் கேட்கிறன், அறிவை இழந்து, சூது ஆடி, மண்ணை இழந்து,  கானகம் வந்து ,இப்படி துன்பப் படும் என்னை போல வேறு யாராவது உண்டா என்று கேட்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறான்.

அதை கேட்ட அந்த முனிவர், "தர்மா கவலைப் படாதே, துன்பம் வருவது இயல்பு. உன்னை விடவும் உயர்ந்த நிலையில் இருந்து , உன்னை விடவும் துன்பப் பட்ட நள மகாராஜாவின் கதையை சொல்கிறேன் கேள் " என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்ணை இழந்து

மாயக் கவறாடிக் = மாயமான சசூது ஆதி

காவலர்தம் மண்ணிழந்து = காவல் செய்யும் (அரசு செய்யும்) மண்ணை இழந்து

போந்து = போய்

வனம்நண்ணி = காட்டினை அடைந்து

விண்ணிழந்த = விண்ணில் இருந்து வந்த

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூன்மார்பா  = நூல் +  மார்ப = பூணூலை அணிந்தவனே

மேதினியில்  = உலகில்

வேறுண்டோ = வேறு ஒருவர் உண்டா?

என்போ லுழந்தா ரிடர். = என் + போல் + உழந்தார் + இடர் = துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்

கண் இழந்து என்றால் இரண்டு கண்ணையும் இழந்து குருடாகி என்று அர்த்தம் அல்ல.

அதே போல் மண் இழந்து என்றால் ஏதோ கட்டிடம் கட்ட வாங்கி வைத்து இருந்த  இரண்டு வண்டி மணலை இழந்த மாதிரி என்று கொள்ளக் கூடாது. பின் என்ன ?

பின் என்ன அர்த்தம் என்று கேட்டால்,  கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

நிமிர்ந்து உட்காருங்கள்.

ஒரு நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.

விட்டாச்சா ? இப்ப படிப்போம்.

ஆகு பெயர், ஆகு பெயர் என்று ஒன்று உண்டு தமிழ் இலக்கணத்தில்.


ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது , ஆகு பெயர்.

உதாரணமாக,

ஊரே தூங்கிருச்சு என்றால் ஊர் தூங்குவது அல்ல. ஊரில் உள்ள மக்கள் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.


ஊர் என்ற இடம், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது.

அரிசி எவ்வளவு  என்று கடை காரரிடம் கேட்கிறோம். அவர் படி அம்பது ரூபாய் என்கிறார். அரிசி என்ன விலை என்று கேட்டல் படிக்கு விலை சொல்கிறாரே என்று  நினைப்பது இல்லை. படி அம்பது ரூபாய் என்றால் ஒரு படி அரிசியின் விலை அம்பது ரூபாய் என்று அர்த்தம்.

படி இங்கே அரிசிக்கு ஆகி வந்தது.

நல்ல தமிழ் படிக்க வேண்டுமா , கம்பனை  வாசி என்று சொல்கிறோம். கம்பன்  என்ற ஒரு கவிஞனின் பெயர் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஆகி வந்தது.

புரிகிறது அல்லவா.

இந்த ஆகு பெயர்  18 வகைப்படும் என்று சொல்கிறது நன்னூல்

பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"

அவையாவன


  1. பொருளாகு பெயர் = சந்தனம் போல மணம் = சந்தன மரக் கட்டைக்கு பதிலாக சந்தனம் என்ற பொருள் வந்தது
  2. சினையாகு பெயர் = கூட்டத்துக்கு வருவது என்றால் , தலைக்கு நூறு ரூபாய், ஒரு பிரியாணி பொட்டலம் தர வேண்டும் என்றால் தலைக்கு தருவது அல்ல. தலை உள்ள ஆளுக்கு தருவது (தலை , சினை )
  3. காலவாகு பெயர் = கோடை வாட்டுகிறது. கோடை காலத்தில் உள்ள வெப்பம் வாட்டுகிறது
  4. இடவாகு பெயர் = இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியா என்ற இடத்தில் இருந்து சென்ற அணி வென்றது
  5. பண்பாகு பெயர் = என்ன மாதிரி துண்டு வேண்டும் ? அந்த சிவப்புல ஒண்ணு , பச்சையில ஒண்ணு குடு 
  6. தொழிலாகு பெயர் = அந்த பணத்தை அப்பவே நம்ம கணக்கு கிட்ட குடுத்து அனுப்பி விட்டேனே (கணக்கு = கணக்க பிள்ளை) 
  7. எண்ணலளவையாகு பெயர் = இரண்டு போட்டா எல்லாம் சரியா போகும் 
  8. எடுத்தலளவையாகு பெயர் = கத்தரிக்காய் எவ்வளவு வாங்கட்டும். மூணு கிலோ வாங்கிட்டு வா 
  9. முகத்தலளவையாகு பெயர் = இரண்டு லிட்டர் வாங்கிட்டு வா, ஒரு குவாட்டர் போட்டா சரியாயிரும் 
  10. நீட்டலளவையாகு பெயர் = ஒரு மீட்டர் போடு 
  11. சொல்லாகு பெயர் = அபிராமி அந்தாதி எனக்கு மனப்பாடம். அதில் உள்ள பாடல்கள் எனக்கு மனப்பாடம் என்பதற்கு ஆகி வந்தது 
  12. காரியவாகு பெயர் = நான் நல்லா type அடிப்பேன் (எனக்கு type writer என்ற இயந்திரத்தை நன்றாக இயக்க வரும் )
  13. கருத்தாவாகு பெயர் = அவரு கம்பன்ல பெரிய ஆளு. (கம்ப இராமாயணம் நன்றாக கற்றவர் )
  14. உவமையாகு பெயர் = மயில் வந்தாள் 
  15. அடை அடுத்த ஆகுபெயர் = மா நட்டான்.
  16. தானியாகுபெயர் = தானி என்றால் இடம். விளக்கு முறிந்தது என்றால் , விளக்கின் தண்டு முறிந்தது என்று பொருள். 
  17. இருபடியாகு பெயர் =  முகில் வந்தது என்றால் மேகத்தை தாண்டி அதற்கு பின் உள்ள மழையை குறிப்பது. 
  18. மும்மடியாகு பெயர் = கார் வந்தது என்றால், கருமையான நிறத்தைத் தாண்டி, அதை உள்ள மேகத்தைத் தாண்டி, மழை வந்தது என்பதை குறிப்பது. 

இங்கே கண்ணிழந்து , மண்ணிழந்து என்றால் எப்படி கண் எது எப்படி என்று காட்டுமோ அதுபோல் காட்டும் அறிவை இழந்து என்று பொருள். 

மண் என்பது அதில் வாழும் மக்களை குறிப்பது. இடவாகு பெயர் 


இன்னும் கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம். இன்று இவ்வளவு போதும். 

மேலும் நாளை சிந்திப்போம் 

சரியா ?