Friday, August 11, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர்

திருவிளையாடற் புராணம்  - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர் 



திருவிளையாடற் புராணம் இன்றைக்கு சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட நூல். ஆனால், அதில் வரும் கதைகள் , அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முற்பட்டது.

அப்படி ஒரு பழமையான மதுரையை நினைத்துக் கொள்ளுங்கள்.

கார் கிடையாது, மின்சாரம் கிடையாது, தார் ரோடு கிடையாது, செல் போன் கிடையாது, புகை இல்லை, சப்தம் இல்லை, மக்கள் தொகை மிக மிக குறைவு.  எங்கும் நெருக்கடி இல்லை. இயற்கை எழில் எங்கும் தங்கி இருந்த காலம்.

மதுரை மட்டும் அல்ல, எல்லா ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்.

அப்படி இருக்கும் போது , ஒரு நாள், ஒரு அழகிய வேதியன் , தன் மனைவியை அழைத்துக் கொண்டு பச்சிழம் பிள்ளையோடு திருப்பத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

திருப்பத்தூருக்கும் மதுரைக்கும் நடுவில் ஒரு காடு. நம்ப முடிகிறதா ?

மதுரையின் பரப்பு அவ்வளவுதான். ஊரை விட்டு கொஞ்ச தூரம் போனவுடன் காடு வந்து விடும்.

அந்த காட்டின் வழியே திருப்பத்தூரில் இருந்து மதுரை வருகிறான்....

பாடல்

செய்யேந்து திருப்புத்தூர் நின்றுமொரு செழுமறையோன்
பையேந்து மரவல்குன் மனைவியொடும் பானல்வாய்க்
கையேந்து குழவியொடுங் கடம்புகுந்து மாதுலன்பால்
மையேந்து பொழின்மதுரை நகர்நோக்கி வருகின்றான்.


பொருள்


செய்யேந்து = செழுமையான வயல்கள் நிறைந்த

திருப்புத்தூர் = திருப்பத்தூர்

நின்று = அங்கிருந்து

ஒரு = ஒரு

செழுமறையோன் = செழுமையான மறைகளை ஓதிய ஒரு வேதியன்

பையேந்தும் அரவு அல்குல் = படம் எடுத்து பாடும் பாம்பின் முகப்பை போன்ற அல்குலை உடைய

தன்  = தன்னுடைய

மனைவியொடும் =மனைவியோடும்

பானல்வாய்க் = பால் + நல் + வாய் = பால் வடியும் அழகான வாயை உடைய

கையேந்து குழவியொடுங் = கையில் ஏந்தும் குழந்தையோடும்

கடம்புகுந்து = கானகம் புகுந்து

மாதுலன்பால் = மாமன் வீட்டை நோக்கி

மையேந்து = கருமை ஏந்தி

பொழின்மதுரை = பொழியும் மேகங்கள் கொண்ட பொழில் நிறைந்த மதுரை

நகர்நோக்கி வருகின்றான் = நகர் நோக்கி வருகின்றான்

வரும்போது என்ன நிகழ்ந்தது ?

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் நோக்கி மகிழ் வேந்தன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் நோக்கி மகிழ் வேந்தன் 



வாழ்க்கைக்கு சுவை சேர்ப்பது கலை.

கலை என்று சொல்லும் போது  இயல்,இசை, நாடகம்,  இலக்கியம் என்று அனைத்தும் அதில் அடங்கும்.

கலை இல்லாத வாழ்க்கை மிகவும் சோகமானது.

வாழ்க்கை என்பது என்ன ?

ஏதோ ஒன்றை நோக்கி பயணப் படுவது, அதை அடைவது, அடைந்த பின் சிறிது நாள் மகிழ்வாக இருப்பது, பின் அது சலித்துப் போய் விடும், பின் வேறொன்றை நாடுவது.

திருப்தி என்ற ஒன்றை அடையவே முடியாது. ஒன்றில் திருப்தி அடைந்தால் , இன்னொன்று வந்து நிற்கும்.

இப்படி நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், கொஞ்சம் சுவை சேர்ப்பது இசை, இலக்கியம் போன்றவை.

இலக்கியங்கள் மனதை வருடிக் கொடுப்பவை, தலை கோதி விடுபவை, தாலாட்டி தூங்க வைப்பவை,  அழுந்திக் கிடக்கும் உணர்ச்சிகளை யாரையும் காயப் படுத்தாமல் வெளிக் கொண்டு வந்து மனதுக்கு அமைதி தருபவை .....

நல்ல இலக்கியம் , மனதோடு ஒட்டிக் கொள்ளும்.  எப்படி வாசனை திரவியத்தை மேலே பூசிக் கொண்டால் நாளெல்லாம் மணம் தந்து கொண்டே இருக்குமோ, அது போல , நல்ல பாடல்களை படித்தால், அந்த நாளெல்லாம் அந்த சுக உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு பாடல்


பாண்டிய மன்னனின் குமாரன் , படித்துக் கொண்டிருக்கிறான்.

பாடல்

கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல   கைவாள் 
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ்  வேந்தன் 
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள் 
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.

பொருள்


கலை பயின்று  = ஆடல், பாடல், இசை என்ற பல்வேறு கலைகளை பயின்று

பரி = குதிரை

நெடும் தேர் = நீண்ட தூரம் செல்லும் தேர்

கரி = யானை

பயின்று = என்று குதிரை ஏற்றம், யானை ஏற்றம், தேர் ஓட்டம் போன்றவற்றை பயின்று

பல   = பல் வேறுவிதமான

கைவாள் = வாள் வித்தை

சிலை பயின்று = வில் மற்றும் அம்பு செலுத்த பயின்று

வருகுமரர் = வளர்ந்து வரும் குமாரன்

திறல் நோக்கி = திறமையை பார்த்து

மகிழ்  வேந்தன் = மகிழ்ந்திருக்கும் வேந்தன்

அலை பயின்ற = அலை வீசும்

கடலாடை = கடலை ஆடையாக கொண்ட

நில மகளை = நில மகளை

அடல் = போர்

அணி தோள் = அணிந்த தோள்  (வெற்றி வாகை சூடிய தோள்கள்)

மலை பயின்று = மலையின் மேல் நடை பயின்று

குளிர் தூங்க = குளிர்ந்த தென்றல் தூங்க வைக்க

மகிழ்வித்து வாழும் நாள் =அந்த நில மகளை மகிழ்வித்து வாழ்கின்ற அந்த நாளில்


ஒரு பெண் சேலை உடுத்தி இருந்தாள் ,  சேலையின் முந்தானை, சேலையின் ஓரங்கள் காற்றில் லேசாக  அசைவதை காணலாம்.

நில மகள், கடலை சேலையாக உடுத்தி இருக்கிறாள். கடலின் அலைகள் அந்த  சேலையின் முந்தானை, ஓரம் (பல்லு ). அலை அடிப்பது சேலையின் ஓரங்கள் அசைவதைப் போல இருக்கிறது.

ஒரு ஆணின் ஆண்மை எங்கே இருக்கிறது என்றால் ,  மனைவியை சந்தோஷமாக வைத்துக்  கொள்வதில்.

இங்கே நிலமகளை அடைந்த அந்த பாண்டிய மன்னன், அவளை நன்றாக  வைத்துக் கொள்கிறான். அவன் சுகமாக உறங்குகிறாள்.


"மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்"

தூக்கத்தில் கூட மகிழ்ந்து தூங்குகிறாள்.

மனைவி அவ்வளவு சந்தோஷமாக இருந்தால் , அந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

சொர்கம் தேடி வேறு எங்கும் போக வேண்டாம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_11.html

Thursday, August 10, 2017

திருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம்

திருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம் 


நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால், ஐயோ எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் , எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அலுத்துக் கொள்கிறோம்.

இப்படி நமக்கு நடக்க என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். ஒரு வேளை போன பிறவியில் செய்த பாவமோ என்று சந்தேகப் படுகிறோம்.

வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதன் காரணமாக , நம் துன்பத்துக்கு என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். அந்த காரணத்தை விலக்கி விட்டால், சந்தோஷம் வந்து விடும் என்று நினைக்கிறோம்.

நமக்கு வந்த அந்தத் துன்பம் இல்லாதவன் எத்தனை பேர் இருக்கிறான் ? அவனெல்லாம் மகிழ்ச்சியாகவா இருக்கிறான் ? அப்புறம் நாம் மட்டும் காரணம் தேடி ஏன் அலைகிறோம் ?

விதி, கர்மா, பாவம் , புண்ணியம் என்று நாமே நினைத்துக் கொண்டு , சம்பந்தம் இல்லாத விஷயங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டுக் கொண்டு வாழ்கிறோம்.

இது சரிதானா என்ற கேள்வியை திருவிளையாடல் புராணத்தில் உள்ள பழிக்கு அஞ்சிய படலம் விளக்குகிறது.


பாடல்

ஈறிலான் செழிய னன்புக் கெளியவ னாகி மன்றுள்
மாறியா டியகூத் தென்சொல் வரம்பின தாமே கங்கை
ஆறுசேர் சடையான் றானோ ரரும்பழி யஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றுந் திருவிளை யாடல் சொல்வாம்.



சீர் பிரித்த பின்

ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் 
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை 
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன் 
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம்.


பொருள்

ஈறு இலான் = இறுதி என்று ஒன்று இல்லாதவன்

செழியன் = பாண்டிய நெடுஞ்செழியனின்

அன்புக்கு எளியவன் ஆகி = அன்புக்கு எளியவன் ஆகி

மன்றுள் = மன்றத்தில்

மாறி = கால் மாறி

ஆடிய = ஆடிய

கூத்து  = கூத்து

என்சொல் வரம்பினது ஆமே = என்னுடைய சொல்லின் (பாட்டின்) வரம்புக்குள் வரும்

கங்கை ஆறுசேர் சடையான் தான் = கங்கை ஆற்றை சடையில் கொண்ட அவன்

 ஓர் = ஒரு

அரும் = பெரிய

பழிக்கு அஞ்சித்  = பழிக்கு அஞ்சி

தென்னன் = பாண்டியன்

தேறலா மனத்தைத் = தெளிவில்லாத மனத்தை

தேற்றும்  = தேற்றுவித்த

திருவிளை ஆடல் சொல்வாம் = திருவிளையாடல் பற்றி சொல்வோம்


கால் மாறி ஆடிய கூத்து = அது என்ன கால் மாறி ஆடியது ? எல்லா ஊரிலும், நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்றபடி ஆடும் கோலத்தில் இருப்பார். ஒரு முறை , பாண்டிய மன்னன் ஒருவன், நடன கலை பயின்ற பின் , கோவிலுக்குப் போனான். அங்கே நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்ற கோலத்தைப் பார்த்தான்.

அவன், நடராஜரிடம் வேண்டினான் "நடனம் படிப்பதே மிக கடினமாக இருக்கிறது. நீயோ காலம் காலமாக வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி ஆடிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு கால் வலிக்காதா ? எனக்காக , காலை மாத்தி ஆடக் கூடாதா ? உன் வலது காலுக்கு கொஞ்சம் இளைப்பாறுதல் கிடைக்கும்  அல்லவா " என்று வேண்டினான்.

பாண்டியனின் அன்பை எண்ணி, நடராஜர், மதுரையில் மட்டும் இடது காலை ஊன்றி  வலது காலை தூக்கி ஆடிய கோலத்தில் காட்சி தருவார்.

பக்தர்களின் பக்திக்கு எளியவனாக வருவான்.


"செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் மாறி ஆடிய கூத்து "

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.


அவன் "ஈறு இல்லாதவன்"  முடிவே இல்லாதவன். பாண்டியனின் அன்புக்கு எளியவனாக வந்தது போல,  என் பாட்டுக்குள்ளும் வருவான் என்கிறார்.


"ஈறு இல்லாதவன்" - முடிவு இல்லாதவன்.

"ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே " என்பார் திருநாவுக்கரசர்

 "நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
 ஆறு கோடி நாராயண - ரங்ஙனே
 ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
 ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."


மேலும் சிந்திப்போம்.

தொடர்ந்து படியுங்கள். இது ஒரு தொடர் கதை மாதிரி.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post.html

Saturday, July 22, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும்

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும் 


மனு நீதி சோழனின் மகன், பட்டத்து இளவரசன், தேரில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது யாரும் காண்பதற்குள் ஒரு இளம் கன்று துள்ளி ஓடி வந்தது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அப்படி துள்ளி வந்த கன்று, தெரியாமல் தேர் செல்லும் வழியில் குறுக்கே வந்தது. அதனால், அந்தத் தேரின் பொன்னால் ஆன சக்கரம் அந்த கன்றின் மேல் ஏறியது. கன்று இறந்து போனது. இறந்த கன்றைக் கண்டு தாய் பசு வருத்தியது.

பாடல்

அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடுபோகிச்  
செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற் செல்லப்பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று வீழும்.

சீர் பிரித்த பின்

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி 
செம்பொனின் தேர் கால் மீது மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகும் தாய் அலமந்து ஓடி 
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுங்குற்று வீழும் 

பொருள்


அம்அ =அந்த

புனிற்று  = அப்போது தான் பிறந்த

ஆவின் = பசுவின்

கன்று = கன்று

ஓர் = ஒரு

அபாயத்தின் = அபாயத்தின்

ஊடு போகி = இடையே சென்று

செம்பொனின் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

தேர் கால் மீது = தேரின் சக்கரத்தின் மீது

விசையினால் = வேகமாக

செல்லப்பட்டே = செலுத்தப்பட்டே

உம்பரின் = தேவர் உலகை

அடைய கண்டு = அடையக் கண்டு

அங்கு  =  அந்த இடத்தில்

உருகும் = மனம் இறுகும்

தாய் = தாய் பசு

அலமந்து ஓடி = எ அங்கும் இங்கும் திசை தெரியாமல் ஓடி

வெம்பிடும் = மனம் வருந்திடும்

அலறும் = வாய் விட்டு அலறும்

சோரும் = சோர்ந்து இருக்கும்

மெய் = உடல்

நடுங்குற்று = நடுக்கம் கொண்டு

வீழும் = கீழே விழும்

ஒரு பசுவின் சோகத்தை சொல்ல எத்தனை வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உருகும் - அலமந்து - ஓடும் - வெம்பும்  - அலறும் - சோரும் - மெய் நடுங்குறும் - வீழும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை

என்பார் பேராசான் வள்ளுவர்.

பசுதானே, விலங்கு தானே என்று விட்டு விடவில்லை. புதிதாக கன்றை ஈன்ற பசு  , தன் கன்றை நாவால் நக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்காது.

"கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே" என்பார் மணிவாசகர்.

(கற்றா  = கன்றை ஈன்ற பசு )

விலங்குகளை வேட்டையாடுவதும், அவற்றை கொன்று தின்பதும் நிறைந்த இந்தக் காலத்தில், உயிர்கள் மேல் அருள் செலுத்தும் இது போன்ற நூல்கள் கட்டாயம் தேவை.


மனிதன் உணர்வுகள் நாளாக நாளாக மழுங்கி கொண்டே போகிறது. விலங்கை கொல்வது சரி , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கத் தொடங்கும் போது , நாளடைவில் மனிதர்கள் கொல்லப் படுவதும் பெரிய  விஷயம் இல்லை என்று ஆகி விடும்.

"அந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் ?"

"ஒரு நாலஞ்சு பேர் இருக்கும் "

"ஓ..அவ்வளவுதானா "

என்று கேட்டு விட்டு மேலே போய் கொண்டே இருக்கும் காலம் வந்து விட்டது.

மனித மனதில் ஈரத்தை கொண்டு வர, மனித மனதில் அன்பையும், அருளையும் கொண்டு  வர இது போன்ற உயரிய நூலகளை படிக்க வேண்டும்.

பொழுது போகாமல் அல்ல, ஒரு கன்னுக்குட்டி இறந்ததை பாட்டாக பாடி வைத்தது.

ஒன்றிப்  படித்தால்,நம் விழி ஓரம் ஈரம் கசியலாம்.

அது அருள். அந்த அருள் வீடு பேற்றை நோக்கி நம்மை செலுத்தும்.

இன்னொரு முறை பாடலை வாசித்துப் பாருங்கள்.

மனம் இலேசாக அதிர்ந்தால் , உங்களுக்குள்ளும் அன்பும், அருளும் இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_22.html

Wednesday, July 19, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி 


அருள் !

அருள் என்றால் என்ன ?

நம் பிள்ளை தடுக்கி கீழே விழுந்து விட்டால் , நம் மனம் பதறுகிறது. அது அன்பு.

அந்த பதற்றம் வேறு ஏதோ பிள்ளை விழும்போதும் வந்தால் அருள்.

தொடர்புடையவர் மேல் வருவது அன்பு. தொடர்பு இல்லாதவர் மேலும் வருவது அருள்.

டிவி யில் எங்கோ ஒரு தேசத்தில் பசித்த சின்ன குழந்தைகளை காட்டும் போது ஐயோ என்று மனம் கேவினால், அது அருள்.

எங்கேயோ குண்டு போட்டு, இடிபாட்டுக்கு இடையில் இருந்து அடிபட்ட பிள்ளையை தூக்கிக் கொண்டு வரும் அந்த பெயர் தெரியாத தந்தையை பார்த்து மனம் வருந்தினால், அது அருள்.

அந்த அருள் இன்னொரு மனிதன் மேல் வரலாம்.

விலங்கின் மேல் வரலாம் . சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தசையை அறுத்துக் கொடுத்தான். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்ற அரசன்.

அந்த அருள் மேலிடும் போது செடி கொடி மேலும் வரும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம்  வாடினேன் என்றார் வள்ளலார். அவர் அருளின் எல்லை அது.

உயிர் இல்லாத கல்லின் மேல் அருள் பிறந்தது கண்ணப்பருக்கு.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என்பார் வள்ளுவர்.

பசுவுக்கு அருள் செய்த மனு நீதி சோழனின் கதையை தெய்வப் புலவர் சேக்கிழார் கூறுகிறார்.

"தர்ம தேவதை , மனு நீதி சோழனின் உண்மையான  மனதை உலகுக்கு காட்ட நினைத்தான். அப்போது, யாரும் பார்ப்பதற்கு முன்னால் , ஒரு இளம் கன்று துள்ளி குதித்து தெருவின் குறுக்கே பாய்ந்தது "

பாடல்

தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன,
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.


பொருள்

தனிப் பெருந் தருமம் = தனி பெரும் தர்மம்

தான் = அது

ஓர் = ஒரு

தயா இன்றித் = கருணை இல்லாமல்

தானை = படை கொண்ட

மன்னன் = மன்னவனின்

பனிப்பு இல் =  நடுக்கம், அச்சம் இல்லாத

சிந்தையினில் = சிந்தனையினில்

உண்மைப் பான்மை = உண்மை தன்மையை

சோதித்தால் என்ன = சோதித்தால் என்ன என்று

மனித்தர் = மனிதர்கள்

தன் = தன்னுடைய

வரவு = வரவை

காணா வண்ணம் = காணாத வகையில்

ஓர் = ஒரு

வண்ணம் நல் = நல்ல வண்ணம் உள்ள

ஆன் = ஆவின், பசுவின்

புனிற்று இளம் கன்று = பிறந்த சில நாட்களே ஆன கன்று

துள்ளிப் போந்தது = துள்ளி போனது

அம் மறுகின் ஊடே. = அந்த தெருவின் ஊடே

எளிமையான பாடல் தான். சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.



"தனிப் பெருந் தருமம்" - உலகிலேயே பெரியது தர்மம்தான். அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அது தனித்துவமானது மட்டும் அல்ல எல்லாவற்றையும் விட உயர்ந்தது தர்மம்.


"தான் ஓர் தயா இன்றித்" = தர்மம் என்பது கருணையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு தாய் தன் பிள்ளையை அடித்து திருத்துவது மாதிரி. அதில் கோபம் இருந்தாலும், அருளே மிகுந்து நிற்கும்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே என்பார் குலசேகர ஆழவார்.


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே


அப்படி அருளோடு இருக்க வேண்டிய தர்மம் அருள் இன்றி , மன்னவனை சோதிக்க எண்ணி.


மனித்தர் தன் வரவு காணா வண்ணம் = கன்று வருவதை மக்கள் காண மாட்டார்களா ? அது என்ன சின்ன எறும்பா, கொசுவா மனிதர்கள் காணாமல் இருக்க ? கன்று வந்தது தெரியும். அது ஏன் வந்தது என்று தெரியாது. தர்மத்தின் செயல்பாடுகள் கண்ணுக்குத் தெரியாது.

யார் பார்க்கப் போகிறார்கள் என்றுதான் எவ்வளவோ தவறுகளை மனிதர்கள் செய்கிறார்கள். அறம் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

கன்று வருவது தெரிகிறது. அது வந்த காரணம் தெரியவில்லை. கண் முன்னால் நடப்பதற்கே காரணம் தெரியவில்லை. கன்னுக்குத் தெரியாமல் நடப்பவற்றை நாம் எவ்வாறு அறிவோம் ?

ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவ்வளவு அர்த்தம்.

கதையை மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_19.html

Sunday, July 16, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை 


நேற்று வரை இராமாயணத்தில் திருவடி சூட்டுப் படலம் என்பது பற்றி சிந்தித்தோம்.

தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு சில விஷயம் தெளிவில்லாமல் இருக்கலாம்.

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ? பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.

இதற்கு இரண்டு விடைகள் தரலாம்.

ஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் ? அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா ? அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நாம் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.

இவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.

அதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.

சரி, இன்னொரு காரணம் என்ன ?

வள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.

இந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.


சரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை ? அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ?

அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.

இங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று  படம் பிடித்து காட்டுகிறார்.

திருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.

திருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.

இராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.

ஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.  இராமனின் சில காரியங்களுக்கு   நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று  ஆகி விடாது.

ஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான்  இராமாயணம்.

வேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு   உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.

சரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால்  அந்த  வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.

இது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).

வாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.

முடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_16.html

Saturday, July 15, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த 


இந்தப் படலத்தின் இறுதிப் பாடல் இது.

இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். தேவர்கள் "இராமன் கானகம் போவதும், பரதன் அரசை ஆள்வதும் கடமை " என்று கூறி விட்டார்கள். பரதன் , இராமனின் இரண்டு பாதுகைகளை வாங்கிக் கொண்டு செல்கிறான்.

சில அருமையான பாடல்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி, இறுதி கட்டத்துக்கு வருவோம்.

நந்தியம்பதி என்ற இடத்தில் , இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு முடி சூட்டி, தன் புலன்களை எல்லாம் அடக்கி , அழுத கண்ணீரோடு அரசாட்சி செய்கிறான் பரதன்.

பாடல்


நந்தி அம் பதி இடை நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

பொருள்


நந்தி அம் பதி இடை = நந்தியம்பதி என்ற இடத்தில்

நாதன் = இராமன்

பாதுகம் = பாதுகைகளை

செந்  = செம்மையான

தனிக் = தனிச் சிறப்பான

கோல்  = செங்கோல் (அரசாட்சி)

முறை செலுத்தச்  = வழியில் செலுத்த

சிந்தையான் = சிந்தனை கொண்ட பரதன்

இந்தியங்களை அவித்து = இந்திரியங்களை அவித்து

இருத்தல் மேயினான் = இருக்கத் தொடங்கினான்

அந்தியும் = இரவும்

பகலும் = பகலும்

நீர்  = கண்ணீர்

அறாத = வற்றாத

கண்ணினான் = கண்களை கொண்டவன்


கல்லும் உருகும் கவி நயம் ஒரு புறம் இருக்க, மிக மிக ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பாடல் இது.

முதலாவது,  ஏன் நந்தியம்பதி ? அந்த பாதுகைகளை அயோத்திக்கு கொண்டு போய் , அங்குள்ள சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதா ?

வைக்கலாம். ஆனால், இராமன் இல்லாத அயோத்திக்குள் போவதற்கு கூட பரதனுக்கு  மனம் இல்லை.

சில சமயம் பிள்ளைகள் திருமணம் ஆகியோ, அல்லது மேற் படிப்புக்கோ, வேலைக்கோ  வீட்டை விட்டு போய் விடுவார்கள். அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறையை பார்க்கவே  மனதுக்கு வருத்தமாக இருக்கும். பிள்ளை எப்படி  இருக்கிறானோ / ளோ என்று. அந்த அறைக்கு போகவே மனம் வராது.

அது போல,  இராமன் இருந்த அயோத்தியில், அவன் இல்லாமல் இருக்க பரதனுக்கு மனம் இல்லை. எனவே, ஊருக்கு வெளியே , நந்தியம்பதி என்ற இடத்தில் இருந்து விட்டான்.


இரண்டு, "இந்திரியங்களை அவித்து ". அதாவது புலன்களை அடக்கி அரசு செலுத்தினான்.  பதவி என்றாலே சுகம் அனுபவிக்கத்தான் என்று ஆகிவிட்ட இந்நாளில் , சக்கரவத்தி பதவியில் சுகம் எதையும் அனுபவிக்காமல் இருந்தான் பரதன் என்கிறார் கம்பர்.  பதவி என்பது வேலை செய்யவே தவிர சுகம் அனுபவிக்க அல்ல.  ஒரு சக்கரவர்த்திக்கு எவ்வளவு சுகம், வசதி கிடைக்கும்? சின்ன கம்பெனியில் வேலை செய்பவர்கள் கூட, கார் கதவை ஓட்டுநர் திறக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.  தனது சுகத்தை நினைக்காமல்  மக்களின் சுகத்தை நினைத்து ஒவ்வொருவரும் பணியாற்றினால்  இந்த நாடும் உலகும் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.  எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வழிகாட்டி.  பிரிண்ட் பண்ணி அலுவலகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் ? கொஞ்சம் நெருடலாக இல்லை ? இராமன் படத்தை வைத்து , அதற்கு பட்டாபிஷேகம் செய்திருக்கலாமே ?

பதவி வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்தவனின் பாதுகைகளை சக்கரவர்த்தி  பட்டம் ! எல்லாம் துறந்தவனுக்கு, எல்லாம் கிடைக்கும்.  வேண்டும் வேண்டும்   என்று மேலும் மேலும் ஆசைப் படுபவன் பிச்சைக்காரனாகவே இருப்பான்.  ஒன்றும் வேண்டாம் என்று மர உரி உடுத்து கானகம் போனவன்  பாதுகைகளை மணி மகுடம்.


நான்காவது,  அரசை யார் செலுத்துகிறார்கள் ? இராமனா ? அவன் தான் கானகம் போய் விட்டானே. பாதுகைகளா ? அவற்றிற்கு என்ன தெரியும் ? பரதனா  ?  அவன் இராமனின் பொறுப்பாளனாக இருக்கிறான். (representative ).  பின் யார் தான்  அரசை செலுத்துகிறார்கள் ?

யார் செலுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம். அரசு என்பது ஒரு தனி மனிதன்  செலுத்த வேண்டிய ஒன்று அல்ல. பாதுகை என்பது ஒரு அடையாளம். ஒரு சின்னம். தர்மம், அறம்  , தர்மம் இவற்றின் வழியில் அரசு செலுத்தப் பட வேண்டும். பிரதம மாதிரி, முதல் மந்திரி என்பதெல்லாம் ஒரு குறியீடு. அவர்கள்தான் ஆட்சியை செலுத்த வேண்டும் என்றல்ல.

ஐந்தாவது, பரதனுக்கு தனி மனித சோகம் உண்டு. அண்ணனை பிரிந்த சோகம். இருந்தும் அது அரசை பாதிக்க விடாமல் . "செந் தனிக் கோல் முறை செலுத்தச்" என்பான் கம்பன். நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு  கடமையை செய்ய வேண்டும்.

இந்தப் படலத்தின் மணிமகுடமான பாடல் இது.


காலம் கருதி சில பாடல்களை விட்டு விட்டேன்.  மூல தேடி பிடித்து , அவற்றையும் படியுங்கள்.

இதுவரை பொறுமையாக அனைத்து பாடல்களையும் படித்து வந்த உங்களுக்கு ஒரு  ஒரு நன்றி.