Monday, January 22, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

ஒன்றி இருந்து நினைமின்கள்: எது ஒன்ற வேண்டும் ? எதோடு ஒன்ற வேண்டும் ?


கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


ஐந்து புலன்களும் ஒவ்வொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. 

கை பூ போடுகிறது. 
விழி பிரகாரத்தில் போகும் அந்த சிவப்பு சேலையை பார்க்கிறது 
மனம், இன்று அலுவலகத்தில் என்ன மீட்டிங் என்று யோசிக்கிறது 
நாக்கு ஏதோ பொய் சொல்கிறது 
உடம்பு வேறொன்றில் நாட்டம் கொள்கிறது 
செவியோ அருகில் இருப்பவர்கள் பேசுவதை கேட்கிறது 

இப்படி இருந்தால், நான் செய்யும் பூசையை எவ்வாறு ஏற்றுக் கொள்வாய் ஈசனே என்று புலம்புகிறார் பட்டினத்தார். 

ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அதோடு மனமும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றி இருந்து நினைமின்கள். 


கன்றிய காலனை காலால் கடிந்தவன் : என்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடுவில் காலனை காலால் உதைத்தவர் என்று ஒரு வரியைப் போடுகிறார் திருநாவுக்கரசர் என்று தோன்றுகிறதா ?

அவர், நாவுக்கு அரசர். அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்வாரா ?

ஐந்து புலன்களும் மனமும் ஒன்றி இருந்தால் என்ன ஆகும் ? ஏன் ஒன்ற வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அது. 

மாக்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் என்பது அவர் விதி. அவர் ஆயுள் முடிந்ததும் , அவர் உயிரை எடுக்க காலன் வந்தான். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை  கட்டி பிடித்துக் கொண்டார். அதற்காக விட முடியுமா ? காலன் அவன் கடமையை செய்ய முயன்றான். அவனை காலால் எட்டி உதைத்து அவன் கடமையை செய்ய விடமால் செய்தது எந்த விதத்தில் நியாயம் ? அந்த சிவனின் செயல் போற்றுதலுக்கு உரியதா ? 

தன் பக்தன் என்பதற்காக அவனுக்கு விதியில் இருந்து விலக்கு அளிப்பதா ? சரி, அப்படியே விதிவிலக்கு அளித்தாலும், அதற்கு முன்னும், பின்னும் அப்படி யாருக்கும்  விதி விலக்கு அளித்த மாதிரி தெரியவில்லை. மார்க்கண்டேயர் மட்டும் தான் உண்மையான பக்தரா ? 

அது அல்ல கதையின் அர்த்தம். 

மார்க்கண்டேயர் மனம் ஒன்று பட்டு இறைவனை வழிபட்டார். அவர் காலத்தை  கடந்து விட்டார். காலம் என்பது அவருக்கு இல்லை. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்றெல்லாம் ஒன்று இல்லை. நிகழ் காலம் மட்டும்தான் உண்டு.  இறந்த காலம் , எதிர் காலம் என்பதை காட்ட முடியுமா ? இறந்த காலம், இறந்து போய் விட்டது. இனிமேல் அதை காண முடியுமா. எதிர் காலம் வரவே வராது. கானல் நீர் போல அது ஒரு கற்பனை. நம்மால் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது. இருப்பது ஒரே ஒரு காலம்தான். அது தான் நிகழ் காலம். இது புரியாத சாதாரண மனிதர்கள் இறந்த காலம், எதிர் காலம் இவற்றிற்கு இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள். 

யோகிகளுக்கு இறந்த காலமும் இல்லை. எதிர் காலமும் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் உண்டு. அப்படி என்றால் அவர் காலத்தை கடந்து சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை காலம் என்பது இல்லை. அவர் என்றும் பதினாறு என்பதின் தத்துவம், யோகிகள் கால தத்துவத்தை கடந்து சென்று விடுகிறார்கள். 


சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவ யோகிகளே  காலத்தை வென்று இருப்பார். மரிப்பார் வெறும் கர்மிகளே என்பார் அருணகிரிநாதர். 

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.


காலத்தை வென்று இருக்கலாம். 

பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
 மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?

என்பார் பத்திரகிரியார். 

பிறப்பும் இறப்பும் அற்ற இடம், காலம் நின்று போன இடம். 

தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் : தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் நாடுகிறான். 

சிற்றம்பலம் - சின்ன அம்பலம். அம்பலம்என்றால் பொது இடம். மேடை மாதிரி. 

சிற்றம்பலம் என்று ஒன்று இருந்தால், பேரம்பலம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? எது பேரம்பலம் ? இந்த உலகம் , பிரபஞ்சம் தான் பேரம்பலம். இந்த பேரம்பலம் ஏன் இருக்கிறது ? எதற்காக இத்தனை நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள்...இவை எல்லாம் ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கின்றன. இப்படி சுத்தி சுத்தி அடையப்போவது என்ன ?

ஒன்றும் இல்லை. உலகம் இருப்பதற்கு ஒரு காரணம் இல்லை. நம் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் இல்லை. 

இது ஒரு பெரிய விளையாட்டு. லீலா. ரொம்ப சீரியஸ் ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். இறைவனே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறான். நடனம் என்பது  ரொம்ப சீரியஸ் ஆன வேலையா ?

நடனம் ஆடி எதை சாதிக்க முடியும் ?

ஒன்றும் இல்லை. 

மகிழ்ச்சியாக இருங்கள். சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லம். பாடுங்கள். ஆடுங்கள். 

இந்த உலகம் ஒரு மகிழ்ச்சி பிரவாகம். மனமும் புலன்களும் பிரிந்து கிடந்தால் இந்த  மகிழ்ச்சி கிட்டாது. அவை ஒன்றும் போது , காலம் கடந்த இன்பம்  பிரவாகமா ஓடும். 

இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, இரவு , பகல் என்ற எல்லாம் இருமைகளும் மறைந்து  நிர்மலமான நிலை வரும். 

மேலோட்டமான பாடலுக்கு உள்ளே , எவ்வளவு ஆழ்ந்த பொருள் செறிவு. 

நேரம் உண்டாக்கி, தேவாரம் முழுவதும் படியுங்கள். கொட்டிக் கிடக்கிறது. 

Saturday, January 20, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1 


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

இறைவன் நடனமாடுவது , "எப்பப்பா வந்தாய் " என்று கேட்பது போல இருக்கிறதாம்.

மேலோட்டமாய் பார்த்தால் , இந்த பாட்டில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றும். மார்கண்டேயருக்காக , காலனை காலால் உதைத்தார்.  சரி, அதுதான் நமக்குத் தெரியுமே.

தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிறார்....அதுவும் தெரியும்.

போய் பார்த்தால், எப்போது வந்தாய் என்று கேட்பது போல இருக்கும் என்கிறார். சரி , இருந்து விட்டு போகட்டும்.

இதையெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ? இதை போய் வேலை மெனக்கெட்டு  ஏன் எழுதி இருக்கிறார். அதை இத்தனை காலம் பொக்கிஷமாக  பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன. இதை விட சில சினிமா பாடல்கள் அர்த்தம் நிறைந்ததாகவும், இனிமையாகவும் இருக்கும் போல் இருக்கே.

வைரம் கூட பார்ப்பதற்கு கூழாங்கல் மாதிரித்தான் இருக்கும். சில சமயம் கூழாங்கற்கள் வைரத்தை விட  அழகாகக் கூடத் தோன்றும்.

பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். கூழாங்கல் கரைந்து மண்ணாகிப் போய் விடும்.

சரி, பாடலுக்கு வருவோம்.

தொழுமின்கள் : பிற மதங்களில் தொழுகை உண்டு. மற்ற மதங்கள் தான் தொழுகையை கண்டு பிடித்தன என்று நினைக்கக் கூடாது. தொழுகை என்பது சைவ மற்றும் வைணவ மதத்தின் அடிப்படை கோட்பாடு.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

தொழுது எழு என் மனமே என்பது பிரபந்தம்.

தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே என்பது அபிராமி அந்தாதி.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

என்பார் அபிராமி பட்டர்.

தொழுவார்க்கு இரங்கி அருள் செய் , என்பார் அப்பர்.


புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே 
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே 
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் 
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!


 

கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம் .

தொழுதல் என்பது செயப்படு பொருள் குன்றா  ஏற்கும் வினைப்.

இது என்ன புதுசா இருக்கே. அப்படி என்றால் என்ன ?

வினைச் சொற்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். செயப்படு பொருளை ஏற்கும் வினைச் சொல், செயப்படு பொருளை ஏற்காத வினைச்சொல் என்று.

யாரை அல்லது எதை என்ற கேள்விக்கு விடை தரும் என்றால் அது செயப்படு பொருள் குன்றா  வினைச் சொல்.

உதாரணம்.

தந்தான் - எதைத் தந்தான் ? அறிவை, செல்வத்தை, பொருளை
உண்டான் - எதை உண்டான் ? உணவை உண்டான்

எனவே இவை செயப்படு பொருள் குன்றா வினை.

செயப்படு பொருள் குன்றிய வினை என்றால் என்ன ?

எதை அல்லது யாரை என்று கேள்வி கேட்க முடியாது.

உதாரணம்.

படுத்தான் = எதைப் படுத்தான் ? யாரைப் படுத்தான் என்ற கேள்வி அபத்தமாக இருக்கும்.

தொழுதான் என்ற வினைச்சொல் எதை அல்லது யாரை என்ற கேள்விக்கு விடை தரும்.  செயப்படு பொருள் குன்றா வினை அது.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/1.html



Thursday, January 18, 2018

வினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை

வினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை 


சமயங்கள் பல வித செய்திகளை சொல்லுகின்றன. இறைவன், ஆத்மா, வீடு பேறு , புலன்களின் மாயத் தன்மை, கர்ம வினை, பாவம், புண்ணியம் என்று பலவிதமான விஷயங்களை பற்றி கூறுகின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதை காணலாம். அந்த முரண்களை விலக்க மேலும் பல விதிகளை சமயம் படைக்கிறது. சட்டத்தில் ஓட்டைகளும், அந்த ஓட்டைகளை சரி செய்ய மீண்டும் ஒரு சட்ட திருத்தம் வருவதும் போல இவை முடிவு இல்லாமல் போய் கொண்டே இருக்கின்றன.

ஒன்றிலிருந்து ஒன்றாக, மீண்டும் மீண்டும் சுத்திக் கொண்டே இருக்கும்.

ஒரு கால கட்டத்தில் இவை எல்லாம் சரியா ? இல்லை நம்மை போட்டு குழப்பும் உத்திகளா என்ற சந்தேகம் நமக்கு வரலாம்.

பெரும்பாலோனர் இதற்குள்ளே போவது இல்லை . கோவிலுக்குப் போனோமா , சாமி கும்பிட்டோமா, அர்ச்சனை பண்ணினோமா, பிரசாதம் வாங்கினோமா என்று வந்து விடுகிறார்கள். இந்த தர்க்க சிக்கலுக்குள் எல்லாம் போய் மண்டைய உடைத்துக் கொள்வது இல்லை.

இதையெல்லாம் கேட்டு, நம் அறியாமையை நாம் ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி போய் விடுவார்கள்.

வினா வெண்பா என்ற சைவ சிந்தாந்த நூல், இந்த அடைப்படை சித்தாங்களை கேள்வி கேட்கிறது. கேள்வி கேட்பது மட்டும் அல்ல, சில சமயம் கேலியும் செய்கிறது.

பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன.

அதில் இருந்து ஒன்று

பாடல்

ஒன்றி நுகர்வதிவன் ஊணும் உறுதொழிலும்
என்றும் இடையில் இடமில்லை - ஒன்றித்
தெரியா அருள்மருதச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.


பொருள்

ஒன்றி = ஒன்றாக

நுகர்வதிவன் = நுகர்வது இவன்

ஊணும் = உடலும்

உறுதொழிலும் = செய்யும் பெரிய தொழிலும்

என்றும் = எப்போதும்

இடையில் = இரண்டுக்கும் இடையில்

இடமில்லை  = இடம் இல்லை

ஒன்றித் = ஒன்றாகத்

தெரியா = தெரியாத

அருள்மருதச் சம்பந்தா = சம்பந்தனே

சேர்ந்து = சேர்ந்து

பிரியா = பிரியாமல்

வாறு எவ்வாறு = இருப்பது எவ்வாறு

பேசு = சொல்

அதாவது,

இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறான் என்றால், எனக்குள்ளும், நான் அனுபவிக்கும்  பொருள்களின் உள்ளும் அவன் இருக்கிறான் அல்லவா.

அப்படி என்றால், புலன்கள் எவ்வாறு எதையும் அனுபவிக்க முடியும் ? அனுபவம் என்பது  அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது என்று என்ற இரண்டு  வேண்டும் அல்லவா. இரண்டுமே இறைவன் தான் என்றால், பின் அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?


"ஊணும் உறுதொழிலும்" : ஊன் என்பது இந்த உடல். உறு தொழில் என்பது அனுபவம்.

"என்றும் இடையில் இடமில்லை ": இரண்டுக்கும் இடையில் இடைவெளி இல்லை. அனுபவம் பெறுபவனுக்கும், அனுபவத்துக்கும் இடையில் இடைவெளி இல்லை . இரண்டுமே ஒன்றுதான் என்றால், அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றான் என்றால், அவனை நாம் ஏன் வணங்க வேண்டும். வணங்குவது யார், வணங்கப் படுவது யார் ? எல்லாமே இறைவன் இறைவன் தான் என்றால் , இறைவனே ஏன் இறைவனை வணங்க வேண்டும் ?

இல்லை..இல்லை...இது ஜீவாத்மா, அது பரமாத்மா என்று வேறு வேறானவை என்றால், இப்படி இது வேறானது ? யார் இந்த வேற்றுமையை தோற்றுவித்தது.

சரி, வேற்றுமை எப்படியோ வந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். பின் எப்படி  இரண்டும் ஒன்றாகும் ? யார் சேர்த்தது வைப்பது ?

"சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு"- சேர்ந்து இருந்தது எப்படி பிரிந்தது ? பிரிந்தது பின் எப்படி சேரும், சொல்லு என்று கேட்கிறார்.

இந்த தத்துவ விசாரங்கள் எல்லாம் மனிதனே உண்டாக்கியவை. இதில் கிடந்து உழலாதே  என்கிறார். இவை எல்லாம் மனிதர்களின் கற்பனையில் உதித்தவை. இவற்றில் இருந்து உண்மையை கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்.

எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. கேள்வி கேள். ஆராய்ச்சி பண்ணு என்கிறது.

இதில் உள்ள சிறப்பு என்ன என்றால், சைவ சித்தாந்தங்களை கேள்வி கேட்ட , கேலி செய்த இந்த வினா வெண்பாவை திருமுறை என்று கொண்டாடுகிறது சைவம். அது சைவத்தின் சிறப்பு. கேள்வி கேட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவது அல்ல சமயம். கேள்வி கேள். தேடு. கிண்டல் செய். ஆனால், தேடும் முயற்சியை விடாதே என்று சொல்வதாக, இந்த வினா வெண்பாவை திருமுறையாக ஏற்றுக் கொண்டது.

சைவ சமயத்தின் உன்னதம் அது.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனை, நக்கீரத் தேவர் என்று கொண்டாடியது.

சிவனை சைவ சமயத்தில் இருந்து தள்ளி வைக்கிறேன் என்று சொன்னவரை நாயன்மார் வரிசையில் வைத்து அழகு பார்த்தது சைவம்.

கேள்வி கேளுங்கள் . எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

அதுவே உண்மையான ஞானத்தின் முதல் படி.

ஞானம் விடுதலை தரும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_18.html



Wednesday, January 17, 2018

கருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் கெழுமியும்

கருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் 


பலர் நிறைய நல்ல புத்தகங்களை வாசிப்பார்கள். வாசிப்பது புரியவும் செய்யும். அதில் உள்ளவை நல்லது என்று அவர்கள் மனம் சொல்லும். இருந்தாலும், நல்லவற்றை வாழ்க்கையில் கடை படிக்க மாட்டார்கள். "நல்லதுதான்...இருந்தாலும் இது எல்லாம் நமக்கு ஒத்து வராது ...நடை முறைக்கு சரி வராது ... இதெல்லலம் சாமியார்களுக்குத் தான் சரி " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, அடுத்த புத்தகத்தை வாசிக்கப் போய் விடுவார்கள்.

என்னவென்று சொல்வது அவர்களின் அறிவீனத்தை.

கருவூர் தேவர் சொல்கிறார், தக்கை எவ்வளவு காலம் நீரில் மிதந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட அதன் உள்ளே போகாது. தண்ணீரிலேயே கிடக்கும். சுற்றிலும் தண்ணீர். இருந்தும் ஒரு சொட்டு கூட உள்ளே போகாது. அது போல சிலர். நிறைய படிப்பார்கள். நிறைய கேட்பார்கள். படித்தவர்களோடு பழுகுவார்கள். இருந்தாலும், ஒண்ணும் உள்ளே போகாது.

நான் அப்படி இருக்கிறேன். இருந்தும் நீ எப்படியோ என் நெஞ்சில் புகுந்து விட்டாய் , என்று இறைவனை குறித்து வியக்கிறார் கருவூர் தேவர்.

பாடல்

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
    கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
    பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
    மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
    நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே 
.
பொருள்

கேடிலா = கேடு இல்லாத

மெய்ந்நூல் = உண்மையான நூல்கள்

கெழுமியுஞ் = பழகியும்

செழுநீர்க் = செழுமையான அல்லது நிறைந்த நீருக்கு

இடையான உடைய =  இடையில் இருக்கும் தக்கை போல

என் னெஞ்சிற் = என் மனதில்

பாடிலா = குற்றமற்ற

மணியே = மணியே

மணியுமிழ்ந் தொளிரும் = மணி உமிழ்ந்து ஒளிரும்

பரமனே = பரமனே

பன்னகா = பாம்பை

பரணா = அணிந்த பரணா

மேடெலாஞ் = மேடு எல்லாம்

செந்நெற் = செம்மையான நெல்

பசுங்கதிர் விளைந்து = பசுமையான கதிரை விளைத்து

மிகத்திகழ் = சிறந்து விளங்கும்

முகத்தலை = முகத்தலை என்ற

மூதூர் = பழமையான ஊரில்

நீடினா யெனினும் = இருந்தாய் என்றாலும்

உள்புகுந் தடியேன் = உள் புகுந்து அடியேன்

நெஞ்செலாம் = நெஞ்சமெல்லாம்

நிறைந்துநின் றாயே = நிறைந்து நின்றாயே


மெய்ந்நூல் கெழுமியுஞ் : நண்பர்களோடு பழகுவோம். காதலன்/காதலியோடு பழகுவோம். நிதம் சென்று பார்ப்போம் . அவர்களோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. எவ்வளவு நேரம் செலவழித்தாலும், இன்னும் கொஞ்ச நேரம் என்று மனம் ஏங்கும். அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் கூட, அவர்கள் நினைவு கூடவே இருக்கும். அவர்களை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும். 

அது போல நல்ல நூல்களோடு பழக வேண்டுமாம். அடிக்கடி அவற்றைப் படிக்க வேண்டும். நினைத்து மகிழ வேண்டும்.  கனவிலும் அந்த நூல்கள் வர  வேண்டும்.  

நூலை வாசித்தால் போதாது. அவற்றோடு பழக வேண்டும். 

மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து: நீர் பள்ளம் நோக்கி பாயும். அங்கே நெல் விளையும். ஆனால் இந்த ஊரில் மேட்டில் நெல் விளைகிறதாம். என்ன அர்த்தம் ?

அவ்வளவு நீர் வளம். பள்ளம் நிரம்பி, மேட்டுக்கும் நீர் வருகிறது. அங்கே நெல் விளைகிறது. 

அது ஒரு அர்த்தம். 

இறைவன் கருணை அவனை அன்போடு விரும்பும் பக்தர்களுக்கு கிடைக்கும். நான் அங்கு இல்லை. எனக்கு எப்படி கிடைத்தது ? மேட்டில் இருக்கும் நெல்லுக்கு நீர் கிடைத்தது போல, இறைவன் கருணை அவ்வளவு நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறார். 

நீரில் கிடந்தாலும், நீரை உள்ளே விடாத தக்கை போல் இல்லாமல், நல்ல விஷயங்களை உள்ளே அனுமதியுங்கள். அவை உங்களை மேன் மேலும் சிறந்தவர்களாக ஆக்கும்.

ஆக வாழ்த்துக்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_17.html






Tuesday, January 16, 2018

திருக்குறள் - பின் நோக்காச் சொல்

திருக்குறள் - பின் நோக்காச் சொல் 


புறங்கூறாமை.

ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது. அது கூடாது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல் 

பொருள்

கண்நின்று = கண் முன்னால் நின்று

கண்ணறச் = கண் அற . கருணை இல்லாமல் சுடு சொல்

சொல்லினும் = சொன்னாலும்

சொல்லற்க  = சொல்லாமல் இருக்க

முன்இன்று = முன்னின்று

பின்நோக்காச் = பின்னால் நோக்க முடியாத

சொல் = சொல்லை

முன் பாதி புரிகிறது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

அது சரி. அது என்ன

முன்இன்று பின்நோக்காச் சொல் ?

முன்னால் சென்ற பின் , அவன் பின்னால் சொல்லக் கூடாது என்று பொருள் சொல்லலாம். ஆனால், "நோக்கா" என்ற சொல் இடிக்கிறது.

நாம் மற்றவர்களைப் பற்றி பிறரிடம் பேசும் போது , ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் இப்போது சொல்வதை , அந்த குறிப்பிட்ட நபரின் முன்னால் சொல்லுவோமா என்று. சொல்ல முடியாது என்றால், அந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

அவரின் முன் நின்று , பின்னால் ஒரு நாளில் சொல்லுவோமா ? இது ஒரு பொருள்.

நாம் ஒருவரை பற்றி மற்றவரிடம் ஏதோ சொல்லி விடுகிறோம். அந்த விஷயம் எப்படியோ கசிந்து கசிந்து அந்த குறிப்பிட்ட நபரின் காதுகளுக்கு சென்று அடைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நாம் தான் அதை சொன்னோம் என்பது அவருக்கு தெரிந்து விட்டது. அவருக்கு தெரிந்து விட்டது என்று நமக்கும் தெரிந்து விட்டது.

அதற்குப் பின்னால், அவரை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியுமா ?

அவர் முன் நின்று , பின்னாளில் முகம் பார்த்து பேச முடியுமா ?

முன்னின்று பின்நோக்கா சொல். பின்னடையக் கூடாது.

 எனவே,ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் போது , பேசும் விஷயத்தை அந்த குறிப்பிட்ட நபரின் முகத்துக்கு நேரே கூற முடியுமா ? என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை நாம் இரகசியமாக சொல்வது அவர் காதுக்குப் போய் சேர்ந்து விட்டால், நாம் அவர் முகத்தில் விழிக்க முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும்.

இந்த இரண்டு கேள்விக்கும் முடியும் என்று பதில் சொல்ல முடிந்தால் அதைப் பற்றி பேசலாம். இல்லை என்றால் பேசக் கூடாது.

பேசப்படும் விஷயம் உண்மையா பொய்யா எனப்பதல்ல கேள்வி.

அவர் முன்னால் அதை சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வி.

பொதுவாக , ஒருவரின் குறையை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. அவர்களின் சிறப்பை  மற்றவர்களிடம் சொல்லலாம்.

சிலரை நம்பி நாம் எதையாவது சொல்லுவோம். அவர்கள் , யாரிடம் அதை சொல்லக் கூடாதோ அவர்களிடம் போய் சொல்லி நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள். பல உறவுகள் இதனால் முறிந்தது உண்டு. நாள் வாய்ப்புகள் கை நழுவிப்  போனது உண்டு.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேச வேண்டும்.

நல்லது அல்லாததை அவர்கள் முன் , அவர்களிடம் கூற வேண்டும். அதை கூட வள்ளுவர் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

கண்ணற என்றால் கண்ணோட்டம் இல்லாமல் என்று அர்த்தம். கண்ணோட்டம் என்றால் கருணை, இரக்கம் , அன்பு என்று பொருள். அன்பில்லாத சொற்களை சொல்லக் கூடாது.

அப்படியே சொல்ல வேண்டி வந்தால் ....என்று சொல்ல வந்தார் ...

"சொல்லினும்" என்று ஒரு ' ம் ' சேர்க்கிறார்.

சொன்னால் கூட என்ற அர்த்தத்தில்.

கருணை இல்லாத சொற்களை சொன்னால் கூட, முன்னின்று பின் நோக்காச் சொல்லை சொல்லக் கூடாது.

எதைச் சொல்லலாம் என்றால், கண்ணோட்டம் உள்ள சொற்களை கூறலாம்.

மற்றவர்கள் மேல் கருணை கொண்டு, அன்பு கொண்ட நல்ல வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும்.

இனிமேல் வேறு யாரையாவது பற்றி பேச வேண்டும் என்றால், இந்தக் குறளை சிந்தித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_62.html


Sunday, January 14, 2018

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா



முன் பின் தெரியாத ஒரு ஊருக்குப் போய் , அங்குள்ள ஒரு ஆட்டோவில் ஏறி வழி கேட்டால், போகிற வழியில் ஆளுக்கு ஒரு வழி சொல்வார்கள். முன்னும் பின்னும், வடக்கும் தெற்கும் அலைவோம். ஆட்டோ கூலி வேறு ஏறிக் கொண்டே போகும். நமக்கோ வழி தெரியாது. கேட்பவர்களும் சரியாகாத் தெரியாமல் நம்மை அலைக் கழிப்பார்கள்.

வழி தெரிந்த ஆள் என்று ஒருவரை எப்படி அடையாளம் காண்பது ? அதுவும் சிக்கல்தான்.

இறைவனை அடைய வேண்டும். வீடு பேறு பெற வேண்டும். உண்மை எது என்ன என்று கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறோம். யாரிடம் கேட்பது ? எதையெதையோ படிக்கிறோம். யார் யார் சொல்வதெல்லாமோ கேட்கிறோம். எங்கு போகிறோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் வாழ்க்கையை நடத்த நமக்கு உதவி செய்வது நமது புலன்கள். அவை நமக்கு உதவி செய்கின்றனவா ? கண் ஒரு பக்கம் இழுக்கிறது. காது ஒரு பக்கம் இழுக்கிறது. நாக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. அங்கும் இங்கும் அழைக்கிறோம்.

வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

புலன்களை விட்டு விடலாமா என்றால், அதுவும்  முடியாது. அவற்றை நம்பலாமா என்றால்  அதுவும் முடியாது.
'
பின் என்னதான் செய்வது ?

இந்தத் திகைப்பு நமக்கு மட்டும் அல்ல, சுந்தரருக்கும் இருந்திருக்கிறது.

" இறைவா,இந்த புலன்களை என்னை பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கின்றன. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன். நான் உய்யும் வழியை நீ தான் காட்ட வேண்டும் "என்று அலறுகிறார்.

பாடல்


ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்
அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா
தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.

பொருள்

ஐவகை = ஐந்து வகையான

அரையர்அவர் ஆகி = அரசு செய்யும் அதிகாரிகளாக ஆகி

ஆட்சி கொண்டு = என்னை ஆண்டு கொண்டிருக்கும் அவர்கள்

ஒருகால் = ஒரு காலத்திலும்

அ வர் நீங்கார் = அவர்கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள்

அவ்வகை =   அந்த வகையில்

அவர்வே = அவர்கள் (புலன்கள்)

வேண்டுவ தானால் = வேண்டுவதனால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து = அந்தந்த புலன்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நான் சென்று

செய்வகையறியேன் = செய்வது என்ன என்று அறிய மாட்டேன்

சிவலோகா = சிவலோகத்தில் உள்ளவனே

தீவணா = தீ போன்ற வண்ணம் கொண்டவனே

சிவனே = சிவனே

எரியாடீ = கையில் அனலைக் கொண்டு ஆடுபவனே

எவ்வகை = எந்த வகையில்

எனக்கு = எனக்கு

உய்வகை= உய்யும் வகை

அருளாய் = அருள் செய்வாய்

இடைமருதுறை = திருவிடை மருதூர் என்ற தலத்தில் உள்ள

ஏந்தை = என் தந்தையே

பிரானே = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

சுந்தரர் பாடு அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_48.html

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி 


கம்பன் தன் காவியப் போக்கில் சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விடுகிறான்.

அதற்கு காரணம் பல இருக்கலாம்.

பெரிய காப்பியம் செய்யும் போது , சில சில விஷயங்கள் விட்டுப் போவது இயல்பு. எல்லாவற்றையும் நுணுக்கமாக சொல்லுவது என்றால் காப்பியத்தின் சுவை குன்றும். இது ஒரு ஒரு காரணம்.

இரண்டாவது, சில விஷயங்களை இல்லை மறை காயாகத்தான் சொல்ல முடியும். இராமாயணம் போன்ற காவியத்தை பல தரப்பட்ட மக்கள் படிப்பார்கள். எனவே, எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

மூன்றாவது, அவை நாகரிகம் கருதியும் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கலாம்.

நமக்குத் தெரியாது. இருந்தும், விட்டதற்கான காரணம் தெரிந்தால், அதிலும் ஒரு பாடம் இருக்கும்.

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் முடிந்து விட்டது. எல்லோரிடமும் ஆசி வாங்க வருகிறார்கள். மூன்று தாய்மார்களும் இருக்கிறார்கள்.

கோசலை, கைகேயி, மற்றும் சுமித்திரை.

யாரிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும் ? பெற்ற தாய் கோசலை , அவளிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும்.

அல்லது, மூத்த பட்டத்து இராணி என்று பார்த்தாலும், கோசலை தான் முதலில் வந்தவள்.

ஆனால், இராமன், கோசாலையிடம் முதலில் ஆசி வாங்கவில்லை.

கைகேயிடம் முதல் ஆசி பெறுகிறான்.

பாடல்


கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

பொருள்


கேகயன் = கேகய நாட்டின் அரசனின்

மா மகள் = சிறந்த மகள்

கேழ்  கிளர் பாதம். = ஒளி பொருந்திய திருவடி

தாயினும் = தாயை விட

அன்பொடு = அன்பு கொண்ட

தாழ்ந்து வணங்கா = (அவளின் அடிகளை) தாழ்ந்து வணங்கி

ஆய = பின்பு

தன் அன்னை அடித் துணை சூடி = தன் அன்னையான கோசலையின் பாதங்களை வணங்கி

தூய சுமித்திரை = தூய்மையான சுமித்தரையின்

தாள் தொழலோடும் = அடிகளை தொழுதான்


முதலில் கைகேயி காலில் விழுந்தான், பின் கோசலை பின் சுமித்திரை. அவ்வளவுதான் கம்பன் சொன்னது.

கம்பன் சொல்லாமல் விட்டது என்ன ?

வீட்டில் ஏதோ ஒரு சிக்கல்.  மனைவிகளுக்குள் ஏதோ ஒரு பனிப் போர் நடக்கிறது. ஆயிரம் தான் கைகேயி இராமன் மேல் அன்பு கொண்டிருந்தாலும்,  திருமணம் நடந்து முடிந்த கையோடு பெற்ற தாயிடம்  முதலில்  ஆசி வாங்குவதுதான் யாரும் எதிர் பார்த்த ஒன்று.

கைகேயிடம் முதலில் ஆசி பெற்றது, சீதைக்கு இராமன் சொல்லாமல் சொல்லும் பாடம். யாருக்கு வீட்டில் அதிகாரம் அதிகம் இருக்கிறது என்று சீதைக்கு  உணர்த்துகிறான்.


திருமணம் ஆன கையோடு , சீதைக்கு இதை எல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இராமன் சொல்ல முடியாது என்பது மட்டும் அல்ல, கம்பனும் சொல்ல முடியாது.

எனவே, சொல்லாமல் சொல்கிறான்.

சீதை புரிந்து கொள்கிறாள்.  அவளுக்குப் புரிந்திருக்கும். பின்னால், பரதன் நாட்டை  ஆள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று அறிந்த போது , "சரி வா போகலாம் " என்று சீதை கிளம்பி விட்டாள்.  காரணம், அவள் அதை  எதிர்பார்த்திருக்க வேண்டும். இராமன் முன்பே கோடி காட்டியிருக்கிறான்.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது, குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை , சிக்கல்களை புதிதாக வந்த மனைவியிடம்  சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

சொன்னால் என்ன ஆகும் ?

"எங்க அப்பா கொஞ்சம் சரி இல்லை. எப்ப பாரு , கைகேயி வீட்டிலேயே கிடப்பார் " என்று சொன்னால், தயரதன் மேல் சீதைக்கு மதிப்பு குறையும். அது குடும்பத்துக்கு நல்லதல்ல.

"என் அம்மா கொஞ்சம் ஒரு மாதிரி. நீ பாத்து நடந்துக்க " என்று மனைவியிடம் சொன்னால்  , மாமியார் மருமகள் சண்டைக்கு அங்கே விதித்திடப் படுகிறது என்று அர்த்தம்.

எப்படி கணவன் இவற்றை எல்லாம் இல்லை மறை காயாக சொல்ல வேண்டுமோ, மனைவியும் அவற்றை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு  , குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும்.

எல்லாவற்றையும் தோண்டி துருவி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

குடும்பம் என்றால் அப்படித்தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.

தன் குடும்பத்தைப் பற்றி கணவன் மனைவியிடம் தரம் தாழ்த்தி பேசக் கூடாது.

கணவன் செய்கையில் இருந்து மனைவி புரிந்து கொண்டு குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இதுவும் , கம்பன் சொல்லாத இராமாயணம்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_14.html