Tuesday, November 1, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦32 - நெறிமையால் நினைய வல்லார்


தாண்டகம் என்று ஒரு செய்யுள் வடிவம். அது பற்றிய சர்ச்சைகள் நிறைய இருக்கின்றன. அது எத்தனை சீர், எத்தனை எழுத்து என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. 


தாண்டுதல் என்பதால் தாண்டகம் என்று பெயர் வந்தது என்று ஒரு ஒரு குறிப்பு உண்டு. பாடல், முடியாமல் தொடர்ந்து கொண்டே போய், இறுதிச் சொல்லில் முடியும். 


திருமங்கையாழ்வார் இருபது பாடல்கள் அருளி இருக்கிறார். 


அவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


கற்கண்டு பற்றி எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அது புரியாது. ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டால் பின் விளக்கம் ஒன்றும் தேவையில்லை. எல்லாம் தானே விளங்கி விடும்.


அது போல, முதலில் பாசுரத்தைப் படித்து விடுவோம். பின் சிந்திப்போம். .



பாடல் 


 நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,

மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,

விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html


(Please click the above link to continue reading)


நிதியினைப் = செல்வத்தை 


பவளத் தூணை = பவள பாறையால் ஆன தூணை 


நெறிமையால் = ஒழுக்க நெறியில் நின்று 


நினைய வல்லார், = நினைக்க முடிந்தவர்களின் 


கதியினைக் = விதியினை 


கஞ்சன் = கம்சன் 


மாளக் கண்டு = இறந்த பின் 


முன் ஆண்ட மாளும், = அண்டத்தை ஆளும் 


மதியினை  = நிலவு போன்றவனை 


மாலை = திருமாலை 


வாழ்த்தி = வாழ்த்தி 


வணங்கி = வணங்கி 


யென் = என்னுடைய 


மனத்து வந்த = மனதில் வந்து அமர்ந்த 


விதியினைக் = விதியினை 


கண்டு கொண்ட  = கண்டு கொண்ட 


தொண்டனேன் = தொண்டனாகிய நான் 


விடுகி லேனே! = விட மாட்டேன் 


பாசுரம் எப்படி போகிறது என்று பாருங்கள். 


 நிதியினை

பவளத் தூணை

நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் 

ஆண்ட மாளும் மதியினை

மாலை 

மனத்து வந்த  விதியினைக்


என்று நீண்டு கொண்டே போய், இறுதியில் விடுகிலேனே என்று முடிகிறது. 



இரண்டாவது, 


"நிதியினைப்" - நிதியை என்ன செய்வோம்? முன்பெல்லாம் புதைத்து வைப்பார்கள். அது போல இறை நினைவை மனதுக்குள் புதைத்து வைக்க வேண்டும். வெளியே தெரியும்படி காட்டிக் கொண்டு திரியக் கூடாது. மனதின் ஆழத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தி செய்வதே பெரிய விளம்பரமாகப் போய் விட்டது. 


"பவளத் தூணை": தூண் என்ன செய்யும். பெரிய பாரத்தை தான் தாங்கிக் கொண்டு, தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நிழல் தரும், பாதுகாப்பு தரும். அது போல இறைவன் தன்னை அண்டியவர்களை காப்பான். 


"நெறிமையால் நினைய வல்லார்" =  சும்மா நினைய வல்லார் என்று சொல்லி இருக்கலாம். நெறிமையால் என்றால் ஒரு வழி, முறைப் படி வழிபட வேண்டும் என்கிறார். மனம் ஒப்பி, மனம் ஒன்றி நினைக்க வேண்டும். அது கடினம் என்பதால், "வல்லார்" என்றார். 



கதியினைக் = கதி என்றால் வழி. அவன் தான் சென்று சேரும் இடம். சேர்க்கும் வழியும் அவன் தான். 



மனத்து வந்த விதியினைக் = அவன் மனதுக்குள் வர வேண்டும் என்பது விதி. நெறிமையால் நினைக்க வல்லார் மனத்துள் அவன் வந்தே தீர்வான். சந்தேகம் வேண்டாம். அதுதான் விதி. 


 கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே! = கண்டு கொண்டேன், விட மாட்டேன் என்கிறார். நல்ல விடயங்களைக் கூட, நாம் விட்டு விடுகிறோம். முதலில் தொடங்குவோம். பின் விட்டு விடுவோம். "விட மாட்டேன்" என்கிறார் ஆழ்வார். அப்படி ஒரு உறுதி வேண்டும். வைராக்கியம் வேண்டும் 


மேலும் சிந்திப்போம். 








No comments:

Post a Comment