Thursday, July 24, 2014

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள்

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள் 


தோழி: ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே தனியாக பார்ப்பதும், சிரிப்பதும் இருப்பதும்....உங்க கல்யாணம் பத்தி அவன் கிட்ட பேசுனியா ?

அவள்: ம்ம்ம்...இல்லடி...இனிமே தான் பேசணும்....

தோழி: ஏன் இன்னும் பேசாம இருக்க ?

அவள்: அவனே இந்த பேச்சை எடுப்பான்னு இருக்கேன்....

தோழி: உனக்கு இந்த ஆம்பிளைங்கள தெரியாது...இதை எல்லாம் பத்தி அவங்க யோசிக்கிறது கிடையாது...

அவள்: நானே எப்படிடி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்குறது ?

தோழி: ஐயோடா...இதுக்கு மட்டும் வெக்கமாக்கும்...இங்க பாரு, இன்னிக்கு கட்டாயம் இந்த பேச்சை எடு...காலா காலத்தில கல்யாணம் பண்ற வழியப் பாரு...என்ன சரிதான ? சரி சரின்னு இங்க மண்டைய ஆட்டு ...அங்க போய் ஒண்ணும் சொல்லாத  என்ன....

அவள்: புன்முறுவல் பூத்தாள் .....

பாடல்

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.

பொருள்

பொன் இணர் = பொன் போன்ற நிறம் கொண்ட

வேங்கை = வேங்கை மரங்கள் நிறைந்த

கவினிய = அழகான

பூம் பொழிலுள் = பூஞ்சோலையில்

நன் மலை நாடன் = மலை நாட்டில் உள்ள அந்த நல்லவன் (தலைவன்)

நலம் புனைய = உன்னுடைய நலன்களை இரசிக்க, பாராட்ட

மென்முலையாய்!- = மென்மையான முலைகளை கொண்டவளே

போயின, சில் நாள் = சில நாட்கள் போய் விட்டன

 புனத்து மறையினால் = புன்னை மரங்களின் மறைவில்

ஏயினர் இன்றி = தடை சொல்பவர் யாரும் இன்றி. யாரும் பார்க்காமல்

இனிது = இனிமையாக.


அதாவது கொஞ்ச நாள் நீங்கள் தனிமையில் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் நாட்கள் இனிமையாகப்  போகின்றன. ஏதாவது தப்பு  தண்டா  நடந்து இருக்கப் போகுது என்று தோழி கவலைப்  படுகிறாள்.

"உன் நலம் புனைந்து" உன் அழகை இரசித்து

"ஏயினர் இன்றி" = தடுப்பவர்கள் யாரும் இன்றி, தடை இன்றி

 "போயின சில் நாள் , இனிது" = சில நாட்கள் இனிமையாகப் போயின

"மென் முலையாய்" = மென்மையான முலைகளை கொண்டவளே

என்று சொல்வதின் மூலம் இலை மறை காயாக சொல்ல வேண்டியதை சொல்லி  விடுகிறாள் தோழி.

அவள் சொல்லாமல் விட்டதுதான் இந்த கவிதையின் சுவையான பகுதி.

எழுதாத கவிதை அது



கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?

கம்ப இராமாயணம் - எதுதான் கடவுள் ?


கடவுளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்த கம்பர் யுத்த காண்டத்தில் முத்தாய்பாக ஒன்று  சொல்கிறார்.

கடவுள் ஒன்று என்றால் ஒன்று, பல என்றால் பல, தன்மை இல்லாதது என்றால் அப்படித்தான், தன்மை உள்ளது என்றால் அதுவும் சரிதான், இல்லை என்றால் இல்லைதான், உள்ளது என்றால் உள்ளது, நம்பிக்கை தான் வாழ்க்கை என்று  முடிக்கிறார்.

கடவுள் இல்லை என்று சொன்னால் கடவுள் இல்லைதான். அப்படி ஒன்று இருந்து விட்டுப்  போகட்டுமே.இல்லாமல் இருப்பது என்ற ஒரு குணம் மட்டும் கடவுளுக்கு இல்லாமல் இருப்பானேன். அந்த குணமும் அவருக்கு உண்டு.

பாடல்

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம்,
    பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
    ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
    உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
    நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!

பொருள் 

ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம் = கடவுள் ஒன்று தான் என்று சொன்னால் ஒன்றுதான்.

பல என்று உரைக்கின் பல ஏ ஆம் = ஒன்றல்ல, பல என்று சொன்னால் அது பலவாக இருக்கும்


அன்றே என்னின் அன்றேயாம் = அதற்கு ஒரு குணமும் இல்லை என்று சொன்னால் ஒரு குணமும் இல்லை


ஆமே என்னின் ஆம் ஏ ஆம் = அதற்கு பல குணங்கள் உண்டு என்று சொன்னால் அதற்கு பல குணங்கள் இருக்கும்

இன்றே என்னின் இன்றேயாம் = கடவுள் இல்லை என்று சொன்னால் இல்லை தான்.

உளது என்று உரைக்கில் உளதேயாம் = கடவுள் உண்டு என்று சொன்னால் உண்டு

நன்றே நம்பி குடிவாழ்க்கை! = நல்லது நம் வாழ்க்கை

நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா! = நமக்கு வேறு என்ன பிழைப்பு

இந்த பல குணங்கள் உள்ள கடவுள் நம்மை மிகவும்  குழப்புகிறார்.

ஒவ்வொரு மதமும் ஒன்று சொல்கிறது. மதங்களுக்குள் உள்ள பிரிவுகள் மற்றொன்றைச்  சொல்கின்றன.

இதற்கு நடுவில் நாத்திகர்கள் புகுந்து கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.

பாமர மக்கள் குழம்பிப் போய்  விடுகிறார்கள்.

இதற்கு ஒரு தெளிவு உண்டா ? எதுதான் சரி ? எப்படி அது சரியா  தவறா என்று அறிந்து கொள்வது  ?

நாத்திகம் தவறா ? ஆத்திகம் தவறா ? நம்பிக்கை அறிவீனமா ? இது வரை கடவுள்  பற்றி சொன்ன பெரியவர்கள் அனைவரும் தவறான ஒன்றைச் சொல்லிச் சென்றார்களா ?

இதைப் பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திப்போம்.

  

Wednesday, July 23, 2014

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்


படை வீரர்கள் எதிரிகளை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும், அவர்கள் கை கால்களை வெட்ட வேண்டும் என்று வெறியோடு செயல்படுவார்கள். அவர்களிடம் அன்பையும், நேசத்தையும் எதிர் பார்க்க முடியாது. "ஐயோ, ஒரு உயிரை கொல்கிறோமே, அந்த உயிருக்கு எப்படி வலிக்கும் " என்ற பச்சாதாபம் இருக்காது.

அதிலும் அரக்கர் படை என்றால் எப்படி இருக்கும்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொருளுக்காக தங்கள் உடலை விற்கும் விலை மாதர்களின் மனம் போல அன்பும், அருளும், கருணையும் அற்று இருந்தது அந்த படை வீரர்களின் மனம் என்றார்.

விலை மகளிர் தங்கள் மேல் அன்பாக  இருப்பார்கள் என்று நினைப்பவர்களை சிந்திக்க வைக்கிறார் கச்சியப்பர். கொலையில் கொடியாரைப் போன்றது விலைமகளிர் மனம்.

பாடல்


வஞ்சம் நீடி அருள் அற்று மாயமே
எஞ்சல் இன்றி இருள் கெழு வண்ணமாய்
விஞ்சு தம் அல்குல் விற்று உணும் மங்கையர்
நெஞ்சம் ஒத்தனர் நீள் படை வீரரே.

பொருள்

வஞ்சம் நீடி = நீண்ட வஞ்சனையை கொண்டு

அருள் அற்று = அருள் எதுவும் இன்றி

மாயமே = மாயங்களை

எஞ்சல் இன்றி = எதுவும் மிச்சம் இல்லாமல்

இருள் கெழு வண்ணமாய் = எங்கும் இருள் சூழும் வண்ணம்

விஞ்சு = பெருத்த (விஞ்சிய)

தம் = தங்களுடைய

அல்குல் விற்று = உடலை விற்று

உணும் மங்கையர் = உண்ணும், அல்லது பொருள் பெறும்

நெஞ்சம் ஒத்தனர் = மனதை ஒத்து இருந்தனர்

நீள் படை வீரரே = பெரிய படையின் வீரர்கள் (சூரபத்மனின் படை வீரர்கள்)

படை வீரர்கள் இறுதியில் தங்கள் எதிரிகளை கொல்லுவார்கள். விலை மாதரும் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கச்சியப்பர்.

இலக்கியம் படிப்பதில், மனித மனதின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.




Tuesday, July 22, 2014

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே

கந்த புராணம் - தேவர்களை சிறை வைத்ததும் நல்லதே 


முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நீண்ட போர்.

முருகன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கிறான்.

அதை கண்டு மகிழ்ந்து, வியந்து அவன் சொல்கிறான் ...

"குற்றம் இல்லாத தேவர்களை நான் சிறை வைத்தது தவறு என்று அனைவரும் கூறினார்கள். அப்படி செய்ததும் நல்லதாய் போய் விட்டது. நான் தேவர்களை சிறை வைத்ததால்தானே இன்று முருகனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது "

பாடல்

ஏதம் இல் அமரர் தம்மை யான் சிறை செய்தது எல்லாம் 
தீது என உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே 
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா 
நாதன் இங்கு அணுகப் பெற்றேன் நன்றதே ஆனது அன்றே.

பொருள்

ஏதம் இல் = குற்றம் இல்லாத

அமரர் தம்மை = தேவர்களை

யான் சிறை செய்தது எல்லாம் = நான் சிறை செய்தது எல்லாம்

தீது என = குற்றம் என்று

உரைத்தார் பல்லோர் = பலர் சொன்னார்கள்

அன்னதன் செயற்கையாலே = அந்த செய்கையாலே

வேதமும் = வேதங்களும்

அயனும் = பிரமனும்

ஏனை விண்ணவர் பலரும் = மற்ற தேவர்கள் எல்லோரும்

காணா = காணாத

நாதன் = நாதனை (முருகனை )

இங்கு அணுகப் பெற்றேன் = இங்கு அருகில்  பெற்றேன்

 நன்றதே ஆனது அன்றே = நல்லது, ரொம்ப நல்லது



Sunday, July 20, 2014

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்

ஐந்திணை ஐம்பது - உருண்டோடும் வளையல்  


குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்ல பொருள் வேண்டும்.

அதே சமயம், கணவனும் கூடவே இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் அல்லாடும் இரண்டு பிரச்சனைகள் இவை. சங்க காலம் முதல் இன்று வரை இதற்கு ஒரு வழி தோன்றவில்லை.

பொருளும் வேண்டும், கணவனும் கூடவே இருக்க வேண்டும்...என்னதான் செய்வாள் அவள்.

அவர்கள் காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். அவளை செல்வ செழிப்போடு சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்காக வெளிநாடு சென்று பொருள் திரட்ட நினைக்கிறான்.

அவளுக்கோ, அவன் வெளிநாடு எங்கும் போகாமல், அவள் கூடவே இருக்க வேண்டும் என்று ஆவல்.

தன் தோழியிடம் சொல்கிறாள்.

பாலை நிலத்தில் கானல் நீர் தெரியும். அதை உண்மையான நீர் என்று நினைத்துக் கொண்டு யானைகள் கால் வெடிக்க ஓடி, பின் தளர்ந்து விழும். அது போல,  என் காதலன் பொருள் தேடி சென்று வாழ்வின் உண்மையான இன்பங்களை  இழக்க மாட்டான் என்று கூறுகிறாள்.

பாடல்

கடிதோடும் வெண்டேரை நீராமென் றெண்ணிப்
பிடியோ டொருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானஞ் சேர்வார்கொ னல்லாய் !
தொடியோடி வீழத் துறந்து.

பொருள்

கடிதோடும் = வேகமாக ஓடும்

வெண்டேரை  = கானல் நீரை

நீராமென் றெண்ணிப் = உண்மையான நீர் என்று எண்ணி

பிடியோ டொருங்கோடித் = பிடியோடு ஒருங்கு ஓடி = பெண் யானைகளோடு ஒன்றாக ஓடி

தாள் பிணங்கி வீழும் = கால்கள் (தாள்) தளர்ந்து வீழும்

வெடியோடும் = வெடிப்புகள் நிறைந்த

வெங்கானஞ் = வெம்மையான கானகம் 

சேர்வார்கொ னல்லாய்  ! = சேர்வார் என்று எண்ணாதே

தொடியோடி = தொடி என்றால் வளையல். வளையல் கழன்று ஓடி

வீழத் துறந்து = விழும்படி (என்னைத் ) துறந்து. என்னை விட்டு விட்டு

பொருள் என்பது கானல் நீர் போல. அதைத் தேடி தேடி திரியும்போது வாழ்கை முடிந்து  போகிறது. பொருள் எல்லாம் சேர்த்து வைத்த பின் , அனுபவிக்கலாம் என்றால்  அதற்குள் வயதாகி விடுகிறது. 

காலம் காலமாய் தொடரும் சிக்கல் இது. 

அவன் அவளை விட்டுப் பிரியப் போகிறான் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள்  உடல் மெலிந்து வளையல் கழண்டு கீழே விழுந்து உருண்டு  ஓடி விடுமாம். 

அந்த வளையல் உருண்டோடும் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா ?


Thursday, July 17, 2014

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதியது திருவரங்க அந்தாதி.

யமகம் என்ற யாப்பில் எழுதப்பட்டது. ஒரே வார்த்தை பல்வேறு பொருள் தாங்கி வரும்படி அமைப்பது.

அதில் இருந்து ஒரு பாடல்

இது என்ன வாழ்க்கை. ஒண்ணும் இல்லாதவனை இந்தரேனே சந்திரனே என்று புகழ் பாடி, விலை மாதரை மயில் என்றும் குயில் என்றும் புகழ்ந்து வாழ் நாளை எல்லாம் வீணாக்கிக் கொண்டு. இருக்கிற நாளில் பக்தர்களுக்கு அருள் வழங்க பலராமனுக்கு பின்னே தோன்றிய கண்ணனை வணங்குங்கள்.

பாடல்

தருக்காவலாவென்றுபுல்லரைப்பாடித்தனவிலைமா
தருக்காவலாய்மயிலேகுயிலேயென்றுதாமதராய்த்
தருக்காவலாநெறிக்கேதிரிவீர்கவிசாற்றுமின்பத்
தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே.

சீர் பிரித்த பின்

தரு காவலா என்று புல்லரைப் பாடித் தன விலைமா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்த்
தருக்கு அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றும் இன்பத் 
தருக்காவலாயுதன் பின் தோன்ற அரங்கர் பொற் தாளிணைக்கே.

பொருள்

தரு காவலா  = எனக்கு அதைத் தா , இதைத் தா

என்று = என்று

புல்லரைப் பாடித் = கீழானவர்களைப் பாடி, துதித்து

தன = அழகிய தனங்களைக் கொண்ட 

விலைமாதருக்கு = விலை மாதருக்கு

 ஆவலாய் = ஆவலாய், அவர்கள் மேல் விருப்பு கொண்டு

மயிலே குயிலே என்று = மயிலே குயிலே என்று அவர்களை வர்ணித்து 

தாமதராய்த் = தாமதம் செய்பவர்களாய்

தருக்கு = செருக்கு கொண்டு 

அலா = அல்லாத

நெறிக்கே= வழியில்

திரிவீர் = செல்வீர்கள்

கவி சாற்றும் = பாடுங்கள்

இன்பத் = இன்பம் தர

தருக்கா ஆயுதன் = கலப்பையை ஆயுதமாகக் கொண்ட (பலராமன்)

 பின் தோன்ற = பின் தோன்றிய, தம்பியான கண்ணன்

அரங்கர் பொற் தாளிணைக்கே = திருவரங்கத்தில் எழுந்து அருளியுள்ள அவன் பொன் போன்ற இரண்டு திருவடிகளையே




Tuesday, July 15, 2014

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

கம்ப இராமாயணம் - ஆண்பாலோ, பெண்பாலோ, அப்பாலோ, எப்பாலோ ?

இறைவன் இருக்கிறானா இல்லையா என்று தான் கேட்கிறோமே தவிர இருக்கிறாளா இல்லையா என்று கேட்பது இல்லை. ஆண்டவன், இறைவன், எல்லாம் ஆணைக் குறிப்பதாகவே அமைந்து இருக்கிறது.

காரணம் ஒருவேளை சமய இல்லக்கியயங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதாலோ என்னவோ.

அங்கொரு ஆண்டாள், இங்கொரு காரைக்கால் அம்மையார் என்பதைத் தவிர பெண்கள் பெரும்பாலும் மதங்களுக்குள் வருவது இல்லை.

பெண்களுக்கு மதம் பிடிக்காது போல் இருக்கிறது.

இறைவனை எப்படி அழைப்பது - அவன் என்றா ? அவள் என்றா ? அது என்றா ? அல்லது இவை அனைத்தையும் தாண்டிய ஒன்று என்றா ?

அவன் காண்பவர் மற்றும் காணப் படுபவை இரண்டுக்கும் கண்ணாக இருக்கிறான்.

அவன் எல்லா வற்றிலும் இருக்கிறான், அவனுக்குள் எல்லாம் இருக்கிறது.

அவன் உலகத்தில் இருக்கிறான். இந்த உலகம் முழுவதும் அவனுக்குள் இருக்கிறது.

அவன் ஆண்பாலா, பெண் பாலா , அவற்றைத் தாண்டி அப்பாலா ? எந்த பாலோ தெரியவில்லையே என்று கவந்தன் இராமனைத் துதிக்கிறான்.

பாடல்


“காண்பார்க்கும் காணப்படு பொருட்கும்
    கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால்,
    யாது ஒன்றும் பூணாதாய்!
மாண்பால் உலகை
    வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
    அப்பாலோ? எப்பாலோ? ‘‘

பொருள்

“காண்பார்க்கும் = கான்கின்றவர்களுக்கும்

காணப்படு பொருட்கும் = காணப் படுகின்ற பொருள்களுக்கும்

கண் ஆகிப் = கண் ஆகி  நின்றவன்.சாட்சியாக நின்றவன்.

பூண்பாய் போல் நிற்றியால் = பூணுதல் என்றால் சூடிக் கொள்ளுதல், உடுத்திக் கொள்ளுதல், அணிந்து கொள்ளுதல். அவன் எல்லாவற்றையும் சூடிக் கொண்டிருக்கிறான்.

யாது ஒன்றும் பூணாதாய்! = எதிலும் தொடர்பு இன்றி இருக்கிறான்

மாண்பால் = பெருமையால்

உலகை = இந்த உலகம் அனைத்தையும்

வயிற்று ஒளித்து வாங்குதியால் = தன்னுடைய வயிற்றிற்குள் அடக்கி பின் வெளிப் படுத்தி

ஆண்பாலோ?  = அது ஆண்பாலோ

பெண்பாலோ? = பெண் பாலோ ?

அப்பாலோ? = இரண்டையும் தாண்டி அதற்கு அப்பாலோ

எப்பாலோ?  = எந்தப் புறமோ ?

காண்பதும், காணப் படுவதும் வேறு வேறு அல்ல. எல்லாம் இறை தான் என்ற உயரிய  தத்துவத்தை கவந்தன் வாயிலாக கம்பர் நமக்குத்  தருகிறார்.

இரண்டும் ஒன்று என்றால் - ஆசை போகும், கோபம் போகும், பொறாமை போகும்...மனதில் உள்ள துன்பங்கள் போகும்.