Friday, August 10, 2012

சித்தர் பாடல்கள் - எதைத்தான் இழுக்கிறார்களோ ?


சித்தர் பாடல்கள் - எதைத்தான்  இழுக்கிறார்களோ ?


சிவவாக்கியார் மூட பழக்க வழக்கங்களையும், அர்த்தமற்ற சமய சம்பிரதாயங்களையும் சாடியவர்.

அவர் தெய்வம் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் கல்லிலும், செம்பிலும் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறது என்றார்.

ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, இருக்கிற வேலை எல்லாம் விட்டு விட்டு, ஒரு சின்ன செப்புச் சிலையை தேரில் வைத்து இழுத்துக் கொண்டு போகிறார்களே...இது எவ்வளவு அபத்தம்.

வேண்டுமானால் அந்த சிலையை இரண்டு மூணு பேர் மட்டும் எளிதாக தூக்கி கொண்டு போகலாமே...இது என்ன வெட்டி வேலை...இத்தூனுண்டு சிலையை அவ்வளவு பெரிய தேரில் வைத்து இழுத்துக் கொண்டு, எவ்வளவு நேரமும், முயற்சியும் வீணாகப் போகிறது. 

அதை விட்டு விட்டு இறைவனை உங்களுக்குள் தேடி காணுங்கள் என்கிறார். 


ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே


Thursday, August 9, 2012

முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


முத்தொள்ளாயிரம் - கூடு காத்த அன்னை


ஒரு வேடன் காடை என்ற பறவையை பிடிக்க அதனை துரத்தி சென்றான்.

அந்தப் பறவை அங்கு எங்கு அவனை அலைக்கழித்து கடைசியில் ஒரு மரப் பொந்தில் நுழைந்து கொண்டது.

வேடன் விடவில்லை. எப்படியும் வெளியே தானே வரணும்..வரும் போது பிடித்துக் கொள்ளாலாம் என்று இருந்தான்.

ஆனால் அந்தப் பறவையோ வேறு வழியில் சென்று விட்டது. அது போல....

அவளுக்கு அவன் மேல் ரொம்ப காதல். அவனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறாள்.

ஆனால் அவளுடைய தாயோ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைக்கிறாள். 

அவளுக்குத் தெரியாது, அவள் பூட்டி வைத்தது வெறும் உடம்பை மட்டும் தான், மனம் எப்பவோ அவனிடம் சென்று விட்டது.

Wednesday, August 8, 2012

தேவாரம் - மருண்ட குரங்கு


தேவாரம் - மருண்ட குரங்கு 


திரு ஞானசம்மந்தர் சிறு வயதிலேயே ஞானம் பெற்று இறைவன் மேல் பாடத் தொடங்கியதாக வரலாறு.

சிறு வயதில் பாடினார் என்றால், அவர் பாடிய பாடலுக்கும் மாணிக்க வாசகர், நாவுக்கரசர் போன்றவர்கள் வயதான காலத்தில் பாடியதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

இருக்கிறது.

அது ஒரு அழகிய கோயில்.

மாலை நேரம். 

வானெங்கும் மழை மேகங்கள்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவன் மேல் பாடல்களை பாடிக் கொண்டே போகிறார்கள்.

கோவிலில் மாலை பூஜை தொடங்கும் நேரம்.

மணி அடிக்கிறது. தம  தம மத்தளம் முழங்குகிறது.

கோவிலில் நந்தவனத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன.
குரங்கில்லாத மரமா ?

மணி சத்தையும், மத்தள சத்தத்தையும் கேட்ட குரங்குகள் இடி இடித்து மழை வரப் போகிறதோ என்று மரங்களில் உச்சியில் ஏறி பார்க்கின்றன.

ஞான சம்பந்தர் சின்ன பையன். இந்த குரங்குகள் இப்படி மரமேறி முகில் பார்ப்பது அந்த பாலகனின் மனதை கொள்ளை கொள்கிறது.

பாடல் பிறக்கிறது. கொஞ்சு தமிழ்...அருவி போல் சல சலக்கும் வார்த்தைகள்...

படித்துப் பாருங்கள், உங்கள் மனத்திலும் மழை அடிக்கலாம்....


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


அவனுக்காக அவள் காத்து இருக்கிறாள். இன்று அவன் வரும் நேரம்.

தலைக் குளித்து, விரித்த கூந்தலுக்கு அகில் புகை போடுகிறாள்.

அப்படி விரிந்த கூந்தல் புகையோடு கூடிய பின்னணியில் அவள் முகம் கரிய மேகங்களுக்கு பின்னே உள்ள நிலவு போல் தெரிகிறது.

அலை பாயும் கூந்தல், புகை சூழ்ந்த நேரம்...புன்னகை கொண்ட அவள் முகம்...குளிர் நிலவு போல் இருக்கிறது...

அந்த குளிர் முகத்தில் வில் போல இரண்டு புருவங்கள்...

அந்த புருவங்களுக்கு கீழே...அவன் பிரிவால் உறங்காமல் சிவந்த இரு விழிகள்...

அந்த விழிகள் மீன் கொடி கொண்ட மன்மதனின் வில்லை துறந்த அம்பு போல் என்னிடம் தூது வந்து என் பிரிவின் வேதனையை அதிகப் படுத்தியது.

அதே கண்கள் என்று அந்த வேதனைக்கு மருந்தாவும் உள்ளது .



அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும்
மருந்தும் ஆயது இம்மாலை…

அகில் உண விரித்த = அகில் புகை சூழ விரிந்த


அம் மென் கூந்தல் = அந்த மென்மையான கூந்தல்

முகில்நுழை = மேகத்தின் உள்ளே நுழையும்

மதியத்து = நிலவு போல

முரி = தோற்கச் செய்யும்

கரும் = கரிய

சிலைக்கீழ் = வில்லின் கீழ் (வில் போன்ற புருவம்)

மகரக் கொடியோன் = மீன் கொடி கொண்ட மன்மதன்

மலர்க்கணை = மலர் அம்புகள்

துரந்து = துரத்த

சிதர்  = சிதற, அலைபாயும் கண்கள்

அரி பரந்த = செவ்வரி ஓடிய (சிவந்த கண்கள், தூங்காத கண்களோ ?)

செழும்கடைத் தூதும் = என்னிடம் தூது வந்து என்னை துயர் படுத்தின

மருந்தும் ஆயது இம்மாலை…= அதே கண்கள் இப்போது, இந்த மாலை நேரத்தில் அந்த நோய்க்கு மருந்தாக உள்ளன

Tuesday, August 7, 2012

அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை


அபிராமி அந்தாதி - நெகிழும் புடவை



அபிராமி அந்தாதியை படிக்க வெறும் பக்தி மட்டும் போதாது. கொஞ்சம் காதல், கொஞ்சம் அன்பு, கொஞ்சம் நட்பு, எல்லாம் வேண்டும்.

அபிராமி கட்டிய புடவை தளர்ந்து, நெகிழ்ந்து இருக்கிறது. அவள் இடை மெலிந்தது. அதில் கட்டிய புடவை தளர்ந்து அசைகிறது.

நூல் போன்ற இடையாளை; சிவனின் இடையாளை...வஞ்சகர் நெஞ்சம் அடையாளை....

என்ன ஒரு அருமையான பாடல்...படித்து படித்து இரசிக்கும் படியான பாடல்....


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


அறியாத தெரியாத பருவத்தில் கண்டவர்களோடு சேர்ந்து நாம் சில நல்லது அல்லாத காரியங்களை செய்து இருக்கலாம்.

அந்த கெட்ட பழக்கங்கள் நம்மை விடாமல் தொடர்ந்தும் வரலாம். 

அவற்றில் இருந்து எப்படி விடு படுவது ?

எப்படி கெட்டவர்களோடு சேர்ந்த போது கெட்ட பழக்கம் வந்ததோ, அது போல் நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம் தானே வரும்...அப்படி நல்ல பழக்கம் வரும்போது கெட்ட பழக்கங்கள் மறைந்து போகும்.

இரவில், புல்லின் மேல் பனி படர்ந்து இருக்கும். அதுவே காலையில் சூரியன் வந்தவுடன், மறைந்து போய் விடும். அது போல கெட்ட பழக்கங்கள் நல்லவர்கள் தொடர்பால் நீங்கி விடும். 

Monday, August 6, 2012

ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும்


ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும் 


இரவு நிசப்தமாக இருக்கிறது...குளிர்ந்த காற்று சிலு சிலுவென்று தலை கலைத்துப் போகிறது....தூரத்தில் கடல் அலையின் சப்தம்...

ஒருவேளை இந்த கடலுக்கும் என்னை போல் தூக்கம் வரவில்லையோ ? அந்த கடலின் இதயத்தையும் யாரவது கொண்டு போய் இருப்பார்களோ, என் இதயத்தை அவள் கொண்டு போன மாதிரி...