Monday, March 4, 2013

இராமாயணம் - அலகி லாவிளையாட்டுடையார்


இராமாயணம் - சரண் நாங்களே



உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
     நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
     அலகி லாவிளையாட்டுடையார் அவர்
     தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.





கூறியது கூறல் பிழை.

இந்த பாடலை இதற்க்கு முன்பே எழுதினேன். இருந்தாலும், பயில் தொறும் நூல் நயம் போலும் படிக்க படிக்க புது புது அர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

"அலகிலா விளையாட்டு உடையார் "

ஒருவரை ஒருவர் யுத்தத்தில் அடித்துக் கொண்டு சாவது, மக்கள் ஆயிரக் கணக்கில் நோயில், வெள்ளத்தில், பூகம்பத்தில் இறப்பது ஒரு விளையாட்டா என்று ஒரு கேள்வி எழலாம்.

சிந்திக்கப் படவேண்டிய கேள்வி.

நீங்கள் ஒரு டென்னிஸ் விளையாட்டை பார்த்துக் கொண்டு இருகிறீர்கள். இரண்டு பக்கமும் நன்றாக விளையாடுகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்று தெரியவில்லை. கடைசி கேம். ஒருவர் வென்று மற்றவர் தோற்கிறார்.

தோல்வி அடைந்தவருக்காக நீங்கள் அழுவீர்களா ? வெற்றி பெற்றவருக்காக நீங்கள் பாராட்டு விழா எடுப்பீர்களா ?

தோற்றவன் அழுவான். வென்றவன் சிரிப்பான். ஆனால் நீங்கள் ?


அது ஒரு விளையாட்டு. வெற்றியும் தோல்வியும் சகஜம். விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் வெற்றி தோல்வி பெரிதாகத் தெரியாது. sportsmaship என்று சொல்வார்கள். விளையாடுவது முக்கியம் வெற்றி தோல்விமுக்கியம் அல்ல.

வாழ்க்கை என்றால் இறப்பும் பிறப்பும் இருக்கும். சண்டை சச்சரவு இருக்கும். மேடு பள்ளம் இருக்கும்.

அடித்தவன் சிரிக்கிறான். அடி வாங்கியவன் அழுகிறான்.

வெளியே இருந்து பார்க்கும் நீங்கள், அவனுகளை விடு, இதே வேலையா போச்சு அவனுகளுக்கு என்று சிரித்துவிட்டு நகர்கிறீர்கள்.....

அலகிலா விளையாட்டு உடையார் அவர்....


தொடரும்

இராமாயணம் - முட்டாள் செய்த தீமை போல்


இராமாயணம் - முட்டாள் செய்த தீமை போல்


சீதை மேல் கொண்ட காதல் இராவணன் மனதில் வளர்ந்து கொண்டே போகிறது. எப்படி வளர்ந்தது என்று சொல்ல வேண்டும்.

வாமனனுக்கு மாபலி தந்த கொடை நல்லார்க்கு செய்த நன்மை போல் வளர்ந்தது என்றான்.

அது நல்லவனுக்கு செய்த நன்மை.

இங்கு தீயவன் இராவணனுக்கு ஏற்பட்ட பொருந்தா காமம் பற்றி சொல்ல வேண்டும்.

கம்பனுக்கு உவமைக்கா பஞ்சம் ? முட்டாள் மறைவாகச் செய்த தீமை போல் வளரந்தது அந்த காமம்.

அது என்ன முட்டாள் செய்த தீமை, கற்றவன் செய்த தீமை ? கற்றவன் தீமையே செய்ய மாட்டானா ?

செய்வான். அவனக்குத் தெரியும், என்றாவது நாம் மாட்டிக் கொள்வோம் என்று. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தானே வரும் என்று வள்ளுவர் சொன்ன மாதிரி, படித்தவன் தப்பு செய்தாலும் அதன் விளைவு வரும் என்று அவனுக்குத் தெரிந்து இருப்பதால் ஏதோ கொஞ்சம் தயங்கி தயங்கி செய்வான்.  முட்டாள் அப்படி அல்ல. மனதில் பட்டதை செய்து கொண்டே போவான்

தேவர் அனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் என்பார் வள்ளுவர்.

அதுவும் முட்டாள் யாருக்கும் தெரியாது என்று மேலும் மேலும் செய்து கொண்டே போவான். அப்படி அவன் செய்யும் தீமை போல இராவணன் மனதில் சீதை மேல் கொண்ட காமம் வளர்ந்து கொண்டே போயிற்று

பாடல்



விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே.



பொருள்

Sunday, March 3, 2013

இராமாயணம் - இதயச் சிறையில் வைத்தான்


இராமாயணம் - இதயச் சிறையில் வைத்தான் 


மயில் போன்ற சாயலை உள்ள சீதையை வஞ்சிப்பதற்கு முன், நீண்ட மதிலை உள்ள இலங்கையின் வேந்தன் அவளை தன் மனச் சிறையில் வைத்தான்.

வைத்தபின் என்ன ஆயிற்று என்றால், வெயிலில் வைத்த வெண்ணை போல் அவன் மனம் மெல்ல மெல்ல உருகிற்று.

பாடல்


மயிலுடைச் சாயலாளை வஞ்சியாமுன்னம், நீண்ட
எயிலுடை இலங்கை நாதன், இதயம் ஆம் சிறையில் வைத்தான்;
அயிலுடை அரக்கன் உள்ளம், அவ் வழி, மெல்ல மெல்ல,
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல், வெதும்பிற்று அன்றே


பொருள்


மயிலுடைச் சாயலாளை = மயில் போன்ற சாயலை உள்ள சீதையை

வஞ்சியாமுன்னம் = வஞ்சனையால் கவர்தர்க்கு முன்

நீண்ட எயிலுடை இலங்கை நாதன் = நீண்ட மதிலை உள்ள இலங்கையின் அரசனாம் இராவணன்

இதயம் ஆம் சிறையில் வைத்தான் = தன்னுடைய இதயம் என்ற சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் = வேல் படை கொண்ட அந்த அரக்கனின் உள்ளம்

அவ் வழி, மெல்ல மெல்ல = அந்த வழியில் மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற = வெயில் நாளில் வைத்த


வெண்ணெய்போல் வெதும்பிற்று அன்றே = வெண்ணை போல் வெதும்பலாயிற்று. வெதும்புதல் என்றால் சூட்டால் அவிந்து போதல், அழுகிப் போதல் என்று பொருள். காமம் மனதில் வந்த பின், அந்த சூட்டில் அவன் மனம் அழுகத் தொடங்கியது. கெட்டுப்  போகத் தொடங்கியது.

மனதிற்குள் என்ன வருகிறது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

மனம் பால் போன்றது. ஒரு துளி விஷம் விழுந்தால் எல்லா பாலும் கெட்டு போகும். திரிந்து போகும்.

ஒரு துளி தயிர் விழுந்தால் எல்லா பாலும் தயிராகப் போகும்.

நம் மனதில் மட்டும் அல்ல, நம் குழந்தைகளின் மனத்திலும் நல்லதே விழும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.










திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற

திருக்குறள் - அத்தனையும் ஒன்றாகப் பெற 



நம்முடைய ஆசைகள் தான் எத்தனை எத்தனை. அதற்க்கு ஒரு அளவே இல்லை.

நாம் ஆசை பட்டது அத்தனையும் ஒரு வேளை நமக்கு கிடைக்கலாம். ஆனால் அது எல்லாம் ஒன்றாகக் கிடைக்குமா ? இன்னைக்கு கொஞ்சம் நாளைக்கு கொஞ்சம்..அடுத்த வருடம், ஒரு அஞ்சு பத்து வருடம் கழித்து என்று கொஞ்ச கொஞ்சமாக கிடைக்கலாம்.

எல்லாம் ஒன்றாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? அப்படி கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒண்ணே  ஒண்ணு இல்லாமல் இருந்தால் போதும். அந்த ஒண்ணே  ஒண்ணுதான் சோம்பல்.

சோம்பல் இல்லா விட்டால், உலகளந்த பெருமாள் அளந்த அத்தனையும் நீங்கள்  பெறுவீர்கள்.

சரி, எல்லாம் பெறுவோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்....வயதான காலத்தில், ஒன்றையும் அனுபவிக்க முடியாத காலத்தில் கிடைத்தால் என்ன பயன் ? சீக்கிரம் கிடைத்தால் தேவலை என்று நீங்கள் கேட்கலாம்.


உலகை அளக்க திருமாலுக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்  ? அவர் ஒவ்வொரு அடியாய் அளக்க வில்லை. ஒரு அடி பூலோகத்தில், அடுத்து ஒரே தாவு மேல் உலகம் எல்லாம் அளந்து விட்டார்.

அது போல் சோம்பல் இல்லாமல் இருந்தால், அவர் பெற்ற உலகம் எல்லாம் அதே மாதிரி உங்களுக்கும் கிடைக்கும்.



மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு

சீர் பிரித்த பின்



மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

பொருள் 


மடி இலா =சோம்பல் இல்லாத

மன்னவன் = மன்னவன்,அதாவது நீங்கள்

எய்தும் = அடையும்

அடி அளந்தான் = திருவடியால் அளந்தான்

தாஅயது = தாவியது. நடந்ததோ ஓடியதோ இல்லை. ஒரே தாவு. 

எல்லாம் = அனைத்தையும். இந்த உலக சுகம் மட்டும் அல்ல, சொர்க்கம் , வைகுண்டம் என்று மறு உலகில் உள்ளதும் கூட ....எல்லாம் அடைவீர்கள் 

ஒருங்கு = ஒன்றாக. தவணை முறையில் அல்ல. ஒன்றாக. 

இது எல்லாம் கொஞ்சம் ஓவரா படல ? வள்ளுவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் போயிருவாரு. இது எல்லாம் நடக்குமா ? சும்மா உசுபேத்தி விட்டுட்டு போறாரா 

என்னால எவ்வளவு செய்ய முடியும் ? என்னால ஒரு ஆகாய விமானம் வாங்க முடியுமா ? ஒரு கப்பல் வாங்க முடியுமா ? 

என்று நீங்கள் மலைக்கலாம். அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார் 

If I get at least 5 g+ click, I will write about that also...:)

 

Saturday, March 2, 2013

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள்

திருக்குறள் - ஒளியை மறைக்கும் இருள் 


எவ்வளவு இருள் இருந்தாலும், எத்தனை காலம் அந்த இருள் கவிந்து இருந்தாலும், ஒரு விளக்கை எடுத்துச் சென்றால் அந்த இருள் விலகி விடும் அல்லவா ?

ஒளியை மழுக்க அடிக்கும் ஒரு இருள், ஒரு மாசு இருக்கிறது என்கிறார் வள்ளுவர்

அது என்ன மாசு ?



குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு 
மாசூர மாய்ந்து விடும்

குடிமை என்ற குன்றில் இட்ட விளக்கு மடி என்ற மாசு ஊர மாய்ந்து விடும்

குடிமை என்றால் சுற்றத்தாரோடு ஒன்றாக சிறப்பாக வாழ்வது. சுற்றமும் நட்பும் சூழ வாழ்வது குடிமை.

நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் 
இல்லை என மாட்டார் இசைந்து என்பது நல்வழி கூறும் குடிமை.

நல்ல குடி என்பது குன்றில் மேல் இட்ட விளக்கு போன்றது. சட்டென்று தெரியும். ரொம்ப தூரத்திற்கு தெரியும். வழி காட்டும்.

அப்படிப்பட்ட விளக்குகூட மடி என்ற மாசு ஊர  மாய்ந்து விடும்.

மடி என்றால் சோம்பல். வேலை செய்யாமல் இருப்பது. வேலைகளை தள்ளிப் போடுவது. காலம் தாழ்த்தி செய்வது.

அப்படி பட்ட சோம்பல் என்ற மாசு, குற்றம் வந்து விட்டால், அது அவனை மாட்டோம் அல்ல அவன் குடும்பத்தையே, குடியையே அழித்து விடும். மாய்த்து விடும்.


குன்றா விளக்கம் என்பதை குன்றில் மேல் இட்ட விளக்கு என்றும் கூறலாம்...குறையாத விளக்கு என்றும் கூறலாம். ஒளி குறையாத விளக்கு இந்த மடி என்ற மாசு ஏற ஏற மறைந்தே போகும்.

சோம்பலை துரத்துவோம். சுறு சுறுப்பாய் இருப்போம். குன்றா விளக்கு மேலும் மேலும் ஒளி வீசி ஜொலிக்கட்டும்....

Friday, March 1, 2013

இராமாயணம் - இரண்டு மனம் வேண்டும்


இராமாயணம் - இரண்டு மனம் வேண்டும் 


எத்தனை படித்தாலும், எத்தனை பட்டம் பெற்றாலும் மனிதன் காமத்தை வெல்ல முடிவதில்லை.

காமம் தலைக்கு ஏறும் போது எல்லாம் மறக்கிறது.

காதலால், காமத்தால் முடி துறந்த மன்னர் எத்தனை, உயிர் துறந்த மனிதர்கள் எத்தனை எத்தனை....

காமம் வரலாற்றின் போக்கை மாற்றி இருக்கிறது....மேதைகளை மண்டியிட வைத்திருக்கிறது, இரத்த ஆற்றில் ரோஜா செடி நட்டிருக்கிறது, உயிர் பறித்து உடல் கருக்கி சோகப் புன்னகை சிந்தி இருக்கிறது....

காமம் யாரை விடவில்லை .... இந்திரனை, சந்திரனை, விச்வாமிதிரனை, சந்துனுவை, இராவணனை ... யாரையும் விடவில்லை...

சீதையின் நினைவால் இராவணன் உருகுகிறான் .....


சிற்றிடச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ?



பொருள்

சீதையின் பெயர் அவன் மனதில் ஆழப் படிந்து .விட்டது. எவ்வளவு ஆழம் என்றால் ஒன்றிலிருந்து  ஒன்றைப் பிரிக்க முடியவில்லை. அவ்வளவு தூரம்
அவளுடைய பெயர் அவன் மனத்தில் கலந்து விட்டது. அவள் இல்லாத மனம் என்று ஒன்று உண்டா என்று கேட்கிறான்.அவளை மறந்து இருக்க இன்னொரு மனம் வேண்டும் என்கிறான்.

காமம் அவனை வாட்டுகிறது.

கம்பன் கேட்க்கிறான்.....கற்றவர்கள், ஞானம் இல்லாவிட்டால் காமத்தை கடக்க முடியுமா என்று. படிப்பு அறிவு இருந்தால் மட்டும் போதாது. ஞானம் வேண்டும்.

இராவணனிடம் கற்ற அறிவு இருந்தது. ஞானம் இல்லை


இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன்


இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன் 


இதற்கு முந்தைய இரண்டு பாசுரங்களில் பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் மறையோடு தமிழ் சேர்த்து திருவிளக்கை ஏற்றினார்கள் என்று பார்த்தோம்.

ஞான விளக்கை ஏற்றிய பின் அஞ்ஞான இருள் விலகி ஓட வேண்டியதுதானே.

அந்த ஞான விளக்கில் திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன் என்று பாடினார் பேயாழ்வார்.




அப்படி கண்ட பேயாழ்வாரை "தமிழ்த் தலைவன்" என்று பட்டம் தந்து கொண்டாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

அப்படிப்பட்ட பேயாழ்வாரின் திருவடிகளைப் போற்றும் இராமானுசரிடம் அன்பு பூண்டவர்களின்  திருவடிகளை தலையில் சூடுபவர்கள் என்றும் சிறப்பு உடையவர்கள்.

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.

பொருள்