Sunday, March 24, 2013

சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத


சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத 


பெரிய கடல். எப்போதும் அலை அடிக்கும் கடல். சிலு சிலு என்று காற்று தலை கலைக்கும் கடற்கரை. 

காலோடு இரகசியம் பேசும் பொடி மணல்.

அந்த ஊரில் அவ பெரிய ராங்கிக்காரி. அவ நடையே பெரிய இராணி மாதிரி இருக்கும். கடல் மணலில் அவ கால் படித்து நடப்பதை பார்த்தால் என்னவோ  அவதான் இந்த கடல் பூராவையும் வாங்கிட்ட மாதிரி ஒரு மிதப்பு. 

அவ நடந்து போகும் போது , அவ பின்னாடி ஒரு சில அன்னங்கள் நடந்து போகும். அவ நடக்கிற மாதிரியே நடந்து  பழகிக் கொள்ளலாம் என்று....

நடக்குமா ? நடையாய் நடந்தாலும் நடக்காது....

ஏய், அன்னமே, அவ பின்னாடி போகாத. அவ பின்னாடி போனேனா, அவ நடைய பார்த்துட்டு உன் நடையை எல்லோரும் கேலி பண்ணுவார்கள்.

அவ நடைய பாரு, என்னமோ இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி, என்ன ஒரு இராணி மாதிரி நடந்து போறா...அவ பின்னாடி போனா உன் நடைய யாரு பாக்கப் போறா...சொல்றத சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம்....

பாடல் 


சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்

பொருள் 

Saturday, March 23, 2013

பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும்


பெரிய புராணம் - ஏங்குவதும் இரங்குவதும் 


திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர். 

அந்த ஊரில் சில வருத்ததோடு இருந்தன. சில பரிதாபமாக இருந்தன. இன்னும் சில ஊரை விட்டே ஓடி விட்டன. 

என்ன ஊரு இது இல்ல ? இப்படி ஊரா ?

கொஞ்சம் பொறுங்கள்...அதெல்லாம் எது எதுன்னு பார்த்துரலாம்....

அந்த ஊரில் வருந்துவன பெண்களின் இடைகள். அந்த ஊரில் உள்ள பெண்களின் மார்புகளின் பாரம் தாங்காமல்  அவர்களின் சின்ன இடைகள் ரொம்ப வருத்தப் பட்டனவாம்....இவ்வளவு பெரிய பாரத்தை எப்படி சுமப்பது என்று....

அவர்கள் இடையில் புனையும் மேகலைகள் பாவமாய் இருந்தனவாம்....நாளும் மெலியும் இடையில் தொங்கிக் கொண்டு இருப்பதால்.....

அந்த ஊரை விட்டு தீமை விலகி ஓடி விட்டதாம்...

பாடல் 

 ஆங்குவன முலைகள்சுமந் 
   தணங்குவன மகளிரிடை
ஏங்குவன நூபுரங்கள் 
   இரங்குவன மணிக்காஞ்சி 
ஓங்குவன மாடநிரை 
   யொழுகுவன வழுவிலறம்
நீங்குவன தீங்குநெறி 
   நெருங்குவன பெருங்குடிகள். 


பொருள் 

ஆங்கு = அங்கு 

வன = வனப்பான 

முலைகள் = மார்பகங்களை 

சுமந்தணங்குவன = சுமந்து + அணங்குவன = அணங்குதல் என்றால் வருந்துதல். 

மகளிரிடை = பெண்களின் இடை 

ஏங்குவன = சப்த்தம் போடுவன 

நூபுரங்கள் = அவர்கள் அணிந்த காலில் உள்ள கொலுசுகள் 
 
இரங்குவன = பரிதாபத்திற்கு உரியன 

 மணிக்காஞ்சி  = அவர்கள் இடையில் அணியும் மேகலை போன்ற ஆபரணம். 

ஓங்குவன = உயர்ந்து இருப்பன 

மாட = மாடங்கள் 

நிரை  யொழுகுவன = சிறந்தபடி செல்வது 

வழுவிலறம் = வழு இல்லாத அறம் 

நீங்குவன = அந்த ஊரை விட்டு செல்பவை 

தீங்குநெறி = தீய நெறிகள் 
 
நெருங்குவன = நெருங்கி இருப்பவை 

பெருங்குடிகள். = உறவினர்கள் 

பெண்களின் இடையைத் தவிர யாருக்கும் கவலை இல்லை. 

அவர்களின் மணிமேகலை தவிர யாரும் பரிதாபப் படும் நிலையில் இல்லை. 

அது ஊரு . அங்க போவோமா ? அந்த ஊரில் தீ சைட்டுகள் இருக்கும் போல இருக்கே...ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா ?


Friday, March 22, 2013

இராமாயணம் - செம்மை சேர் நாமம்


இராமாயணம் - செம்மை சேர் நாமம் 


வாலியின் உடலில் இராமனின் அம்பு பாய்ந்தது. தன்  மேல் அம்பு எய்தது யார் என்று அறிய வாலி அந்த பாணத்தை தன் வாலினால் தடுத்து நிறுத்துகிறான். அம்பில் "இராம" என்று எழுதி இருந்தது.  

இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான். வாலி ஆயிரம் கேள்விகள் கேட்கப் போகிறான்.

அதன் தொடக்கத்திலேயே கம்பன் எய்தது யார் சொல்கிறான்....வாலியின் பார்வையில் இருந்து.....


மும்மை சால் உலகுக்கு எலாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராம என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.


இந்த பாடலை இந்த ப்ளாகில் முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.

கடைசி வரியை மட்டும் எடுத்துக் கொள்வோம்


செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.

அது என்ன செம்மை சேர் நாமம் ?

அம்பு வாலியின் உடலில் புகுந்தது ? அவன் அதை இழுத்தான்...அதில் வாலியின் இரத்தம் இருந்தது...எனவே அந்த அம்பு சிவப்பாக இருந்தது...

அதனால் செம்மை சேர், சிவப்பு சேர்ந்த என்று பொருள் கூறுவார் உள்ளர்.




வாயினால் உண்மை சொல்வது வாய்மை எனப்படும்
மெய்யால் உண்மையை செய்வது மெய்மை எனப்படும்
உள்ளத்தால் உண்மையை நினைப்பதும் சொல்வதும்  உண்மை எனப்படும் 

மனம் வாக்கு காயம் மூன்றும் சேர்ந்து உண்மையை சொல்வது செம்மை.

அந்த செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.

மனதாலும் வாக்காலும் மெய்யாலும் தவறு செய்யாதவன் இராமன் என்பதை முதலிலேயே  சொல்லாமல் சொல்லி விடுகிறான் கம்பன்.

செம்மை சேர் நாமம்


திருக்குறள் - நன்றாம் பணிதல்


திருக்குறள் - நன்றாம் பணிதல் 


பணிவுடைமை. அடக்கம்.

இது பற்றி கூறவந்த வள்ளுவர்,

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

பணிதல் எல்லார்க்கும் நல்லது. அதிலும் செல்வர்களுக்கு அது இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி

என்றார்


சரி, இதில் என்ன புதியதாய் இருக்கிறது. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

யோசித்துப் பாருங்கள், விடை தெரியாத கேள்விகள் எத்தனை இந்த பாடலில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன என்று.

- செல்வம் என்றால் எது எல்லாம் செல்வம். செல்வர்க்கு செல்வம் தகைத்து என்றால், பணம் காசு தவிர வேறு ஏதோ இருக்கிறது...அது என்ன செல்வம் ?

- எல்லார்க்கும் என்றால் யார் எல்லாம். ஒன்றும் இல்லாத பிச்சைகாரன் பணிவாய் இல்லாமல் எப்படி இருப்பான் ? அவனிடம் போய்  நீ பணிவாய் இரு என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?

- செல்வர்கே செல்வம் தகைத்து என்றால் மற்றவர்கள் யார் ...செல்வர்களுக்கு சமமாக கருதப்படும்  மற்றவர்கள் யார் ?

- ஏன் செல்வர்களுக்கு மட்டும் செல்வம் தகைத்து ? ஏன் மற்றவர்களுக்கு பணிதல் இன்னொரு செல்வமாக இருக்காது ?

பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இதற்க்கெல்லாம் நாம் எங்கு போய் விடை காண்பது ?


இங்கே செல்வம் என்பது பெருமை, சிறப்பு என்ற பொருளில் வந்தது.

ஒருவனுக்கு பெருமை, சிறப்பு மூண்டு வழியால் வரும்.

கல்வி
குலம்
பொருள்

இந்த மூன்றினால் ஒருவன் சிறப்படைவான். கல்விச் சிறப்பு சொல்லவே வேண்டாம். நமகெல்லாம் தெரியும்.

நல்ல குலத்தில் பிறப்பதும் ஒரு சிறப்பு, ஒரு மதிப்புதான். அந்த குலத்தின் மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் அந்த குலத்தில் பிறந்தவனுக்கும் கிடைக்கும்.

பொருள் - பணம், காசு, சொத்து, வீடு வாசல் என்ற இவற்றால் ஒருவனுக்கு பெருமையும், சிறப்பும் வரும்.

இந்த மூன்றில், முதல் இரண்டை விட்டு விட்டு மூன்றாவதாக வரும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்று சொல்லுவானேன் ?

கல்வியும், குலமும் அடக்கத்தை தானே தரும். ஒருவன் மேலும் மேலும் படிக்க படிக்க அவனுக்கு அடக்கம் தானே வரும்...நமக்குத் தெரியாதது எவ்வளவு இருக்கிறது என்ற பிரமிப்பு வரும். அது அடக்கத்தை தானே தரும். அடக்கம் இல்லாமல் அழிந்தவர்கள் பற்றிய வரலாறு இது எல்லாம் அவர்களுக்கு  அடக்கத்தை தானே தரும்.

அதேபோல் நல்ல குலத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள் நல்ல சொல் சொல்லி அவர்களை திருத்துவார்கள்.

ஆனால், செல்வம் படைத்தவர்களுக்கு அந்த வசதி இல்லை. இன்னும் சொல்லப் போனால் செல்வம் படைத்தவர்களை சுற்றி உள்ளவர்கள் செல்வந்தர்களின் செல்வத்தை கண்டு, பயந்து, அவர்களின் அகந்தையை மேலும் வளர்த்து விடுவார்கள். எனவே செல்வர்கள் பணிவாக இருப்பது அவர்கள் மேலும் ஒரு செல்வம் பெற்றது போல. மேலும், செல்வர்கள் பணிவாக இல்லாமல்  அகந்தையோடு செயல்பட்டால் அவர்களுக்கு கீழே உள்ளவர்கள், அந்த செல்வர்களின் மேல் வெறுப்படைந்து அவர்களுக்கு எதிராக வேலை செய்யலாம். அதே சமயம், செல்வர்கள் பணிவாக இருந்தால், அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களிடம் மேலும் விஸ்வாசமாக இருந்து அவர்களின் செல்வத்தை பெருக்க உதவுவார்கள். எனவே, பணிவு செல்வர்களுக்கு இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி என்றார்.

தகைத்து என்ற சொல்லுக்கு அழகு படுத்துதல், பிணைத்தல்,கட்டுதல், என்று பொருள்.

இன்னொரு மறை பொருள் கல்வி பணிவைத் தரவேண்டும். அகந்தை இருக்கிறதென்றால் கல்வி சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

 தம்மின்   மெலியாரை நோக்கித் தமதுடைமை

 அம்மா !  பெரிதென்று அகமகிழ்க
 தம்மின் கற்றாரை நோக்கிக் கருத்துஒழிக
 எற்றே இவர்க்கு நாம் என்று



என்ற நாலடியார் சிந்தித்து நோக்கத் தக்கது.

குலமும், கல்வியும் பணிவைத் தரவேண்டும். பணிவில்லாதவன் நல்ல குலத்தில் தோன்றியவனாக இருக்க முடியாது.

சிந்திக்க சிந்திக்க ஆழமான பல அர்த்தங்களை தரும் நூல். திருக்குறள்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் குறள் படியுங்கள்.


திருக்குறள் - அகர முதல - 2

திருக்குறள் - அகர முதல - 2


அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

அது என்ன பகவன் ? இதற்கு முன்னால் பகவன் என்று கேட்டு இருக்கிறீர்களா ?

பகவன் என்பது பகு என்ற வேர்ச்சொல்லில் வந்தது.

பகுப்பவன் - உயிர்களின் நல் வினை, தீவினை அவற்றை அறிந்து அவற்றிற்கு பலன்களை பகுத்து கொடுப்பவன் என்பதால் பகவன். இது ஒரு பொருள்.

இன்னொரு பொருள்

இன்றைய அறிவியல் உயிர்கள் எப்படி தோன்றின என்றால் பரணாம வளர்ச்சியின் மூலம் தோன்றின  (Evolution ). ஒன்று பலவாக பிரிந்து, உரு மாறி, உரு மாறி இத்தனை உயிர்களும் தோன்றின என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆதி அணுவில் இருந்து வெடித்துச் சிதறி, இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறது. இப்படி பகுக்கப் பட்டு வந்ததால் பகவன். அவனில் இருந்து வந்ததுதான் எல்லாம். (பகுத்து உண்டு பல்லோர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதும் வள்ளுவம் )

அப்படி என்றால், உடனே நம்ம ஆளு "எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்றால், அந்த பகவன் எங்கிருந்து வந்தான் " என்று கேட்ப்பான். கேட்பான் என்று வள்ளுவருக்கும் தெரியும்.

எனவே வெறும் பகவன் என்று சொல்லவில்லை, "ஆதி பகவன்" என்று கூறினார். அவன் ஆதி. அவன் மூலம்.

ஆதல் , ஆகுதல் என்ற தொழிற்பெயரில் இருந்து வந்த சொல் தான் "ஆதி". அவனில் இருந்து எல்லாம்  ஆகி வந்ததால் அவன் ஆதி பகவன்.


இன்று நாம் பல தெய்வங்களை கூறுகிறோம்...அல்லா, ஏசு, புத்தர், பெருமாள் சிவன், பிள்ளையார், காளி, என்று பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. வடிவங்கள் எத்தனை இருந்தாலும், எல்லாம் ஒரே ஒரு தெய்வத்தைத்தான்  குறிக்கும்...அது தான் "ஆதி பகவன்". அந்த ஆதியில் இருந்து வந்ததுதான்  இத்தனை தெய்வங்களும், மனிதர்களும், விலங்குகளும், பொருள்களும்.. எனவே, ஆதி பகவன்.

அருவில் இருந்து உருவாகவும், உருவில் இருந்து பல்வேறு வடிவாகவும் ஆனவன் . உருவாய், அருவாய், உளதாய், இலதாய் என்பார் அருணகிரி.


ஒரு குறளில் இவ்வளவு அர்த்தம். 1330 குறள் இருக்கிறது.

மேலும் அறிவோம்.

Thursday, March 21, 2013

அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்


அபிராமி அந்தாதி - எமக்கு என்று வைத்த செல்வம்

நமக்கு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில் என்று கேட்டால் பணம், பொருள், புகழ், ஆரோக்கியம் என்று நாம் அடுக்கிக்கொண்டே போவோம்...அபிராமி பட்டர் சொல்கிறார்.


நமக்கு என்ன வேண்டும்...அவளோட பாதங்கள், அவளுடைய கைகள், அழகான அவள், அப்புறம் அவளோட பெயர், ...எல்லாத்துக்கும் மேல அவளோட கண்கள் ...இதுக்குமேல வேற என்ன வேணும் ....

அவஅணியும் ள் வேண்டும், அவளோட கைகள் , பாதம் , பெயர், கண்ணு எல்லாம் அவருக்குன்னு கிடைத்த பொக்கிஷமாம்....

 பாடல்


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே


பொருள்



திருக்குறள் - அகர முதல


திருக்குறள் - அகர முதல 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ " எழுத்துக்கு எல்லாம் முதல். அது போல் இறைவன் உலகத்திற்கு எல்லாம் முதல். 

வள்ளுவர் எந்த அளவிற்கு யோசித்து எழுதி இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதை உணர்ந்து உரை எழுதி இருக்கிறார் பரிமேல் அழகர்.

இந்த குறளில் அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்போம்.

மாணவன்: ஐயா, இறைவன் இருக்கிறானா ? 

வள்ளுவர்: இறைவன் இருக்கிறான்.. 

மா: இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ?

வ: நீக்கமற எல்லா இடத்திலும் இருக்கிறான்.

மா: அப்படிஎன்றால் அவன் எல்லா உயிர்களிலும், பொருள்களிலும் இருக்கிறான்...அப்படிதானே ?

வ: அப்படித்தான். 

மா: அப்படி என்றால், அவன் தனித்து இருக்க மாட்டானா ? ஏதோ ஒன்றை சார்ந்துதான் இருப்பானா ?

வ: நான் அப்படி சொல்லவில்லையே ...அவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான், அவன் தனித்தும் இருக்கிறான். 

மா: குழப்பமாக இருக்கிறதே...அது எப்படி ஒரு ஆள் எல்லாவற்றிலும் இருப்பான், தனித்தும் இருப்பான் ? ஒரு பொருள் ஒன்றில் இருக்கிறது என்றால் அது மற்றவற்றில் இல்லை என்று தானே பொருள்....நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாவற்றிலும் இருக்கும், தனித்தும் இருக்கும் என்பது மாதிரி ஒன்றை உதாரணமாக காட்ட முடியுமா ? அப்படி ஒன்று இருக்க முடியுமா ? நீங்கள் அப்படி ஒன்றை காட்டினால், எனக்கு இறைவனை நீங்கள் சொல்வது மாதிரி புரிந்து கொள்ள முடியும்....

வ: ஓ, காட்டலாமே....நீ இந்த "அ " என்ற எழுத்தைப் பார்த்து இருக்கிறாயா ? 

மா: ஆம். தெரியும். பார்த்திருக்கிறேன். 

வ: அதில் இருந்துதான் எல்லா எழுத்தும் வருகிறது என்று தெரியுமா ? 

மா: இல்லை ஐயா. தெரியாதே. அது எப்படி..

வ: தொல்காப்பியம் என்ற நூலைப் படித்துப் பார். எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றன என்று தொல்காபியர் சொல்லி இருக்கிறார். 

மா: ஐயா, நீங்களே சொல்லுங்களேன்....

வ: சுருக்கமாகச் சொல்லுகிறேன்...மேலே வேண்டுமானால் நீ தொல்காப்பியம் படித்து தெரிந்து கொள்....அ, ஆ  இந்த இரண்டு எழுத்தும் விகாராம் இல்லாமல் பிறக்கும். அதாவது உராய்வு இல்லாமல் பிறக்கும். அதாவது, மூச்சை எழுத்து வாய் வழியே விட்டால் அ, ஆ என்ற இரண்டு சொல்லும் பிறக்கும். "ஹ" என்ற சப்த்தம் பிறக்கிறது அல்லவா ? அந்த அ என்ற எழுத்துதான் உயிர் நாடி. 

மா: சரி ஐயா, மத்த எழுத்துகள் எப்படி வருகின்றன ?

 வ: இந்த அ என்ற எழுத்தில் இருந்து வரும் ஒலியை நாக்கு, பல், அன்னம், உதடு இவற்றின் மூலம் நெருக்கியும், நீட்டியும், சுருக்கியும் மத்த எழுத்துகள் உருவாகின்றன. தொல்காப்பியர் சொல்கிறார் ....

இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன;
அவைதாம்
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.  உரை
   
உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
இப்படி, எல்லா எழுத்துகளும் அ என்ற எழுத்தில் இருந்து பிறக்கின்றன. மெய் எழுத்திற்கும் அடி நாதம் அ என்ற ஒலி தான். 

மா: சரி ஐயா...அ  என்ற ஒலி எல்லாவற்றிற்கும் மூல ஒலி என்று வைத்துக் கொள்வோம்...அதற்க்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் ?

வ: அ என்ற எழத்து தனித்தும் நிற்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் வரும். இது புரிகிறதா ?

மா: புரிகிறது. 

வ: அ என்ற எழுத்திற்கு வேறு எந்த எழுத்தும் மூல எழுத்து கிடையாது. ஆனால், எல்லா எழுத்திற்கும் அ என்ற அந்த எழுத்துதான் மூல எழுத்து. புரிகிறதா ?

மா: ம்ம்...புரிகிறது

வ: அது தான் நீ கேட்ட உதாரணம். எல்லாவற்றிற்கும் மூலம், அதுக்கு முன்னால் எதுவும் கிடையாது, தானாக தனித்து இயங்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்...இறைவனுக்கு உதாரணம் அ  என்ற அந்த எழுத்து. 

மா: புரிகிறது ஐயா...ஆனால் , அ  என்ற அந்த எழுத்து தமிழுக்கு மட்டும்தானே முதலில் வருகிறது ...அப்படி என்றால் இறைவனும் தமிழனுக்கு மட்டும்தானா ?

வ: இல்லையப்பா...அ  என்ற அந்த ஒலி எல்லா மொழிகளிலும் அதுதான் முதல் எழுத்து ...அதனால் தான்...அகர முதல எழுத்து எல்லாம் என்று கூறினேன்...எல்லாம் என்றால் எல்லா மொழிகளுக்கும் என்று அர்த்தம். 

அனைத்து உலகங்களும் அவனில் இருந்து பிறக்கின்றன, அவன் எதில் இருந்தும் பிறப்பது இல்லை, அவன் தனித்தும் இருக்கிறான், உயிர்களோடு கலந்தும் இருக்கிறான் ...

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 


வ: புரிகிறதா  ?

மா: மிக நன்றாக புரிகிறது ஐயா...நன்றி ....