Tuesday, May 7, 2013

தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம்


தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம் 

தாயுமானவர் - மிகப் பெரிய ஞானி.

1452 பாடல்கள் எழுதி உள்ளார். மிக மிக எளிமையான பாடல்கள்.

வல்லாருக்கும், பாரதியாருக்கும் இவர் பாடல்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்துணை எளிமை.

வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்து, இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தார்.

ஒரு பொருளின் மேல் முதலில் ஆசை வரும். அது கையில் கிடைத்துவிட்டால் ஆணவம் வரும். என்னை போல் இந்த உலகில் யார் உண்டு ? நினைத்ததை முடிப்பவன் நான் என்ற ஆணவம் வரும். கிடைக்க வில்லையென்றால் ஆங்காரம் வரும். அந்த ஆங்காரம், ஆணவத்தை விட மோசமானது.

அறிவை மயக்கும் நாடு நிலை தவற வைக்கும். எதை எடுத்தாலும் அதுவாய் மாறிடும். வாயில் வந்த படி பேசும். மும்மூர்த்திகளும் நான் தான் என்று சொல்லும்.....

இப்படி சொல்லிக் கொண்டே தாயுமானவர் இந்த பட்டியலுக்கு முடிவு வேண்டுமே என்று முடிவில் இராவணாகாரமாகி விடும் என்றார்

அது என்ன இராவணாகாரம் ?

வீரத்திலும், பக்தியிலும் சிறந்தவன் இராவணன்.

சீதை மேல்  ஆசைப் பட்டான். புத்தி வேலை செய்வது நின்றது. வீரம் போய் குறுக்கு புத்தி வந்தது. கள்ளமாய் அவளை கவர்ந்து வந்தான். இராமனோடு சண்டை போட்டான். தன் சொந்த மகனை போரில் இழந்தான்.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதை தானே, அவளை கொன்று விடுகிறேன் என்று புறபட்டான்.

அவள் வேண்டும் என்று தானே தூக்கி வந்தான். அவளுக்காகத்தானே இத்தனை  போர். மகனையும் இழந்தான். இப்போது அவளை கொல்லுவேன் என்கிறான். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆங்காரம்.

பாடல்

ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
       ஆணவத் தினும்வலிதுகாண்
    அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
       யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
       தம்மொடு சமானமென்னுந்
    தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
       தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
       திராவணா காரமாகி
    இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
       திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
       மௌனோப தேசகுருவே
    மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
       மரபில்வரு மௌன குருவே.


பொருள்:

திருவாசகம் - தேனுந்து செந்தீ


திருவாசகம் - தேனுந்து செந்தீ


தீ நல்லதுதான். உணவு சமைக்க உதவும். மழை பொழிய, பயிர் விளைய, இப்படி பலப் பல நல்ல காரியங்களுக்கு தீ உதவுகிறது. இருந்தும் அதில் ஒரு சங்கடம்...சுடும். தொட்டால் பொசுக்கி விடும். கருக்கி விடும்.

திருப் பெருந்துறையில் ஒரு தீ இருக்கிறது. அதுவும் எரிக்கும். எதை தெரியுமா ? உங்கள் இரு வினைகளை. உங்கள் பாவ புண்ணியம் என்ற இரண்டு வினைகளை எரித்து சாம்பாலாக்கி விடும்.

உங்கள் வினைகளை எரிக்கும் ஆனால் உங்களுக்கு தேன் போல தித்திக்கும். உங்கள் வினைகளை எரிக்கும். உங்கள் உடலை காக்கும்.

தேனைப் பொழியும் செந்தீ அது.

வாழ்க்கையில் பொய் ஆனவற்றை எல்லாம் பொடி பொடியாக்கி விடும். பொய் போன பின் நிற்பது மெய் தானே.

இத்தனையும் நடக்கும், எப்போது என்றால் அந்த திருபெருந்துறையானை மனதால் நினைத்தால்.

அது கூட முடியவில்லையே என்று உருகுகிறார் மாணிக்க வாசகர்.

அவருக்கே அந்த நிலை என்றால்.....

பாடல்


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


பொருள்


இராமாயணம் - நீள் கரம் பற்றிய கையினள்


இராமாயணம் - நீள் கரம் பற்றிய கையினள் 


இராமன் கனகம் போவேன் என்று சொன்னவுடன் நானும் உன்னுடன் வருவேன் என்று சீதை வாக்குவாதம் பண்ணுகிறாள். நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம் என்று கேள்வி கேட்கிறாள். என்னை விட்டு விட்டு போவதுதான் உனக்கு இன்பமா என்று இராமனை மடக்குகிறாள்.

இராமன் யோசிக்கிறான்.

சீதை பார்த்தாள். இது சரி வராது என்று நேரே அரண்மனையின் உள்ளே போனாள் . தான் உடுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை களைந்தாள் . மர உரியை புனைந்தாள் . இராமனுக்கு பின் வந்து நின்று, அவன் கையை பற்றிக் கொண்டு "வா போகலாம்" என்று சொல்லுவதை போல நின்றாள்.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், மனைவி "நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற சொன்னால் அந்த அன்பு, அந்த காதல் ஒரு ஆண்மகனை எந்த துன்பத்தையும் எதிர்த்து போராடும் ஆற்றலை தரும்.

நினைத்துப் பாருங்கள். சீதை, எப்படி வாழ்ந்தவள். ஜனகனின் ஒரே பெண். எவ்வளவு செல்லமாக வாழ்திருப்பாள். பட்டத்து இராணியாக வேண்டியவள்.

எல்லாவற்றையும் விடுத்து, மர உரி அணிந்து வந்து நின்றாள் என்றால் அவள் இராமன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும்.

அவள் அந்த அளவு தன் மேல் அன்பு செய்ய இராமனும் எப்படி இருந்திருக்க வேண்டும் ?

கண்ணில் நீர் வர வைக்கும் அந்த பாடல்



அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.


பொருள்


Monday, May 6, 2013

திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு


திருக்குறள் - படித்தாலும் வராத அறிவு 


ஒரு புத்தகத்தை பல பேர் படிக்கிறார்கள். அதில் எழுதப் பட்டிருப்பது மாறுவது இல்லை. அப்படி இருக்க, அதை படிக்கும் ஒவ்வொருவரும் வேறு வேறு அர்த்தம் காணுகிறார்கள்.

எப்படி ?

ஏன் அப்படி நிகழ்கிறது ?

ஒருவன் என்னதான் புத்தகங்களைப் படித்தாலும், அவனுக்கென்று ஒரு இயற்க்கை அறிவு இருக்கிறது. அந்த அறிவே படித்த புத்தகங்களை தாண்டி நிற்கும்.

படிக்கும் புத்தகங்கள் ஒருவனை அப்படியே மாற்றி விடுவது இல்லை.

ஒரு ஆத்திகனின் கையில் ஆயிரம் நாத்திக புத்தகங்களை கொடுத்து பாருங்கள். அவன் மனம் மாறுவது இல்லை.

நாத்திகனுக்கும் அப்படியே.

புத்தகங்கள் எழுத்து மூலம் எண்ணங்களை தெரிவிக்கும் ஒரு சாதனம். எண்ணங்களை மற்ற வழியிலும் வெளிப் படுத்தலாம். வாய் மூலம் சொல்லலாம். புத்தகத்திற்கு நேர்ந்த கதி தான் வாய் மொழிக்கும் நேரும்.

புத்தகங்களின் மூலமோ, பேசியோ மனிதர்களை மாற்றி விட முடியாது.

இந்த கருத்தை ஊழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வைத்து இருக்கிறார்.

முன் செய்த வினையே அறிவாய் நிற்கும் என்பது கருத்து.

சற்று ஜீரணிக்க முடியாத கருத்து.

சட்டென்று ஒத்துக் கொள்ள முடியாத கருத்து.

சிந்திக்க வேண்டிய கருத்து.

பாடல்


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.


பொருள் 


தேவாரம் - இடரினும் தளரினும்


தேவாரம் - இடரினும் தளரினும் 


நல்லது நடக்கும் போது பொதுவாக யாரும் இறைவனை நினைப்பது இல்லை. கஷ்டம் வந்தால் இறைவனை திட்டி தீர்ப்பார்கள் - இந்த ஆண்டவனுக்கு கண்ணு இல்லை, நான் எவ்வளவு பூஜை செய்தேன், எவ்வளவு காணிக்கை போட்டேன், இது சாமியே இல்லை, இந்த கடவுளை கும்பிடுவதில் ஒரு புண்ணியமும் இல்லை என்று இறை நம்பிக்கை குறைவதை காண்கிறோம்.

சுந்தரர்.

இறைவனிடம் ரொம்ப நடப்பு உணர்வோடு பழகியவர்.

எதையும் இறைவனிடம் உரிமையோடு கேட்பார், ஏதோ கொடுத்து வைத்தது மாதிரி.

ஒரு தந்தையிடம் மகன் எப்படி உரிமையோடு கேட்பானோ, அப்படி கேட்பார். தரவில்லை என்றால் சண்டை பிடிப்பார்.

அப்படி ஒரு அன்யோன்யம். உன்னிடம் எனக்கு இல்லாத உரிமை யாருக்கு என்று.

பாடல்



இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள்


இராமாயணம் - கடல் கடையும் தோளினான் - வாலி - 2


ஒரு முறை தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற் கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.

முடியவில்லை. கை சலித்து, உடலும் மனமும் சலித்தார்கள்.

வாலி அங்கு வந்தான் ....

"எல்லாரும் தள்ளுங்க...இது கூட முடியல" என்று அந்த வாசுகியின் தலையை ஒரு கையால் பிடித்தான், வாலை  இன்னொரு கையால் பிடித்தான்...கட கட என்று கடைந்தான். வாசுகி வலி தாங்காமல் வயறு கலங்கி நெருப்பாக மூச்சு விட்டாள்....மந்திர மலை தேய்ந்து உருக் குலைந்தது...அதை பற்றியெல்லாம் அவன் கவலைப் படவில்லை...பாற்  கடலை கடைந்து அமுதம் எடுத்து அவர்களுக்குத் தந்தான்....

அப்பேற்பட்ட வலிய தோள்களை உடையவன்....

நினைத்து பாருங்கள் மலையைக் கொண்டு கடலை கடைபவனின் தோள் ஆற்றல் எப்படி இருக்கும் என்று.....

பாடல்


கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு தீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்;


பொருள்


தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும்


தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும் 


வாழ்க்கையில் மிக கொடுமையான விஷயம் எது என்றால் இறக்கும் நேரம் முதலிலேயே தெரிவது. ஒவ்வொரு நாளும் அதை நினைத்தே வருந்த வேண்டி வரும். அதனினினும் கொடிது, நமக்கு நெருங்கியவர்களின் இறுதி நாளை அறிவது...பெற்றோர், கணவன் , மனைவி, பிள்ளைகள் என்று நமக்கு மிக மிக அன்பானவர்களின் இறுதி நாள் அறிந்தால் எப்படி இருக்கும் ?

மார்க்கண்டேயனின் இறுதி நாள் எது என்று அவனுக்கும் தெரியும். அவன் பெற்றோருக்கும் தெரியும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவது எல்லா பெற்றோர்க்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. ஆனால் , மாரகண்டேயனின் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் வருந்தினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் நம் வாழ்க்கையில் சுத்தமாக நம்பிக்கை இழக்கும் தருணங்கள் சில வரலாம். தீவிரமான வியாதி, விபத்தில் அடிபட்டு கிடப்பது (நாமோ, நமக்கு வேண்டியவர்களோ), மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் - இனி பிழைப்பது கடினம் என்று. என்ன செய்வது ? மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவும் ஒரு எல்லை தாண்டி வருவது இல்லை.

என்ன செய்வது, என்ன செய்வது ? யாரை போய் கேட்பது,

முதல் போட்ட தொழில் மூழ்கும் தருவாயில் இருக்கிறது. நடுத் தெருவுக்கு வந்து விடுவோம் போல் இருக்கிறது. மனைவி பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது....

இப்படி முற்றுமாய் நம்பிக்கை இழக்கும் தருணங்கள் வரலாம்.

மார்கண்டேயனுக்கு வந்த மாதிரி....

அப்படி முற்றுமாய், வேறு வழியேயில்லை என்ற தருணத்திலும் கை கொடுத்தது இறை நம்பிக்கை.

நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு வழியை தந்தது...என்றென்றும் பதினாறு என்ற வரத்தை தந்தது....

கட்டாயம் இறப்பான் என்ற நிலை மாறி எப்போதுமே இறக்க மாட்டான் என்ற சிரஞ்சீவி நிலை தந்தது  இறை நம்பிக்கை.

அவனால் முடியாதது எது ? உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் எட்டாத பதில்கள் அவனிடம் இருக்கும்.

திருஞான சம்பந்தர் உருகுகிறார்.....

பாடல்



துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

சீர் பிரித்த பின்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் 
நெஞ்சகம் நைந்து நினை மின் நாள் தோறும் 
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று 
அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே 

பொருள்