Monday, May 6, 2013

தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும்


தேவாரம் - துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதும் 


வாழ்க்கையில் மிக கொடுமையான விஷயம் எது என்றால் இறக்கும் நேரம் முதலிலேயே தெரிவது. ஒவ்வொரு நாளும் அதை நினைத்தே வருந்த வேண்டி வரும். அதனினினும் கொடிது, நமக்கு நெருங்கியவர்களின் இறுதி நாளை அறிவது...பெற்றோர், கணவன் , மனைவி, பிள்ளைகள் என்று நமக்கு மிக மிக அன்பானவர்களின் இறுதி நாள் அறிந்தால் எப்படி இருக்கும் ?

மார்க்கண்டேயனின் இறுதி நாள் எது என்று அவனுக்கும் தெரியும். அவன் பெற்றோருக்கும் தெரியும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவது எல்லா பெற்றோர்க்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. ஆனால் , மாரகண்டேயனின் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் வருந்தினார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் நம் வாழ்க்கையில் சுத்தமாக நம்பிக்கை இழக்கும் தருணங்கள் சில வரலாம். தீவிரமான வியாதி, விபத்தில் அடிபட்டு கிடப்பது (நாமோ, நமக்கு வேண்டியவர்களோ), மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் - இனி பிழைப்பது கடினம் என்று. என்ன செய்வது ? மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவும் ஒரு எல்லை தாண்டி வருவது இல்லை.

என்ன செய்வது, என்ன செய்வது ? யாரை போய் கேட்பது,

முதல் போட்ட தொழில் மூழ்கும் தருவாயில் இருக்கிறது. நடுத் தெருவுக்கு வந்து விடுவோம் போல் இருக்கிறது. மனைவி பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது....

இப்படி முற்றுமாய் நம்பிக்கை இழக்கும் தருணங்கள் வரலாம்.

மார்கண்டேயனுக்கு வந்த மாதிரி....

அப்படி முற்றுமாய், வேறு வழியேயில்லை என்ற தருணத்திலும் கை கொடுத்தது இறை நம்பிக்கை.

நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு வழியை தந்தது...என்றென்றும் பதினாறு என்ற வரத்தை தந்தது....

கட்டாயம் இறப்பான் என்ற நிலை மாறி எப்போதுமே இறக்க மாட்டான் என்ற சிரஞ்சீவி நிலை தந்தது  இறை நம்பிக்கை.

அவனால் முடியாதது எது ? உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் எட்டாத பதில்கள் அவனிடம் இருக்கும்.

திருஞான சம்பந்தர் உருகுகிறார்.....

பாடல்



துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

சீர் பிரித்த பின்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் 
நெஞ்சகம் நைந்து நினை மின் நாள் தோறும் 
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று 
அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே 

பொருள்






துஞ்சலும் = தூங்கும் போதும்

துஞ்சல் இல்லாத போழ்தினும் = தூக்கம் இல்லாத போதும்

நெஞ்சகம் = நெஞ்சு + அகம் = மனதில்

நைந்து நினை மின் = நைந்து நைந்து நினையுங்கள்

நாள் தோறும்  = தினமும்

வஞ்சகம் அற்று = நெஞ்சில் வஞ்சகம் அற்று. நம்புங்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள். ஒரு பக்கம் இறை நம்பிக்கை. மறு புறம் இது எல்லாம் நடக்குமா என்ற சந்தேகம். அது வஞ்சகம். உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யாதீர்கள். மொத்தமாக நம்புங்கள்.

அடி வாழ்த்த = அவன் திருவடியை வாழ்த்த

 வந்த கூற்று = உயிரை எடுக்க வந்த கூற்றுவனை

அஞ்ச உதைத்தன = அஞ்சும்படி காலால் எட்டி உதைத்தது

அஞ்சு எழுத்துமே = அஞ்சு எழுத்துகளே

வெறும் அஞ்சு எழத்து மரணத்தை மாற்றிப் போட்டது. 

நம்புங்கள். அது தான் வாழ்க்கை.

நம்முடைய அத்தனை சாமர்த்தியங்களும், மனித குலத்தின் அத்தனை அறிவும் கை விரிக்கும் காலம் வரலாம். 

நம்பிக்கை இழக்காதீர்கள். எல்லோரும் அஞ்சும் காலனை அவன் அஞ்சும்படி காலால் உதைத்தது அஞ்சு எழுத்தே.

நம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்கு சொல்லுங்கள்..இதை தொடர்ந்து வரும் பத்துப் பாட்டையும் படிக்கச் சொல்லுங்கள்.

 





3 comments:

  1. "ஒரு வாசகத்துக்கும் உருகார் திருவாசகத்துக்கு உருகார்" என்பது சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை, ஆனாலும் உருகி விட்டேன்.

    ReplyDelete
  2. மன்னிக்கவும். இது தேவாரம் என்று இப்போதுதான் கண்டேன்.

    ReplyDelete
  3. Arumai..Nandri..om namasivaya

    ReplyDelete