Tuesday, May 14, 2013

இராமாயணம் - இராம சம்பந்தம்


இராமாயணம் - இராம சம்பந்தம் 


சுக்ரீவன் வாலியை போருக்கு அழைத்தான். வாலி போருக்கு புறப்பட்டு விட்டான்...தாரை தடுக்கிறாள் "இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் " என்று சொல்லி தடுக்கிறாள்.

இராமன் என்ற சொல் வாலியின் காதில் விழுந்தது.

கடல் கடைந்த கைகளால் அவன் உடல் கடைந்து வருகிறேன் என்று கிளம்பியவன், இராமன் என்ற வார்த்தையை கேட்டவுடன் என்ன சொல்கிறான்   ......

வல் வினையால் துன்பப்பட்டு அயர்கின்ற உலக மக்களுக்கு அறத்தின் வழி நின்றவனை, அவனுடைய இயல்பு அல்லதாதை பேசுகிறாய்....பிழைத்தனை உன் பெண்மையால் என்று கூறுகிறான்.

ஆழ்வார்கள் கூறும் அளவுக்கு வாலி இராமனைப் பற்றி பேசுகிறான் - பேரை கேட்ட மாத்திரத்திலேயே....

அது இராம நாம மகிமை...



பாடல்

உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான்.



பொருள்






உழைத்த = துன்பப்படுத்தும்

வல் இரு வினைக்கு = கொடுமையான இரு வினைகளுக்கு

 ஊறு காண்கிலாது = முடிவு காண முடியாமல்

அழைத்து = அவனை (இறைவனை) அழைத்து

அயர் உலகினுக்கு = அயர்வுறும் உலகத்தினருக்கு

அறத்தின் = அற  நெறியின்

ஆறு எலாம் = வழி எல்லாம்

இழைத்தவற்கு = வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் - இராமனுக்கு

இயல்பு அல = இயல்பு அல்லதாவற்றை

இயம்பி என் செய்தாய்? = சொல்லி, என்ன காரியம் செய்துவிட்டாய்

பிழைத்தனை; = நீ என்று பிழைத்தாய்

பாவி! உன் பெண்மையால்' என்றான். = நீ பெண் என்பதால்

பாடலை இரசிக்கும் போது பாடல் காட்டும் சில நல்ல விசயங்களை மறந்து விடக்கூடாது

ஒன்று, வல் வினை வருத்தும். கெட்ட வினை மட்டும் அல்ல...நல்ல வினையும் வருத்தும்.

இரண்டு, அந்த வினையின் வருத்தத்தில் இருந்து விடுபட முடியாமல் மக்கள் அல்லாடுகிறார்கள்.

மூன்று, அற வழி ஒன்றே அந்த அல்லலை தீர்க்கும் வழி.

நான்கு, அறம் எவ்வளவு சொன்னாலும் புரியாது. சிக்கலானது. முன்னுக்கு பின் முரணாக உள்ளது போல் தோன்றும் (ஐயம் இட்டு உண் , ஏற்பது இகழ்ச்சி போன்ற அற உரைகள் மாதிரி). அறத்தை புரிய வைக்க உதாரணம் சொன்னால் புரியும். இராமன் வாழ்கை அற வழிக்கு ஒரு உதாரணம். அவன் செய்ததை அப்படியே செய்தால் போதும்...தனியா அற நூல்களை படித்து மண்டைய உடைத்துக் கொள்ள வேண்டாம்.

இராமன் வழி நடப்பது என்றால், இராமன் தவறே செய்யாதவனா ? தாடகை என்ற பெண்ணை கொன்றானே, வாலியை மறந்து நின்று கொன்றானே என்று கேட்கலாம்....

அதுக்கு விடை சொல்ல வேண்டுமா இல்லையா ?







3 comments:

  1. கம்ப ராமாயணம் மாதிரி இன்னொரு காவியம் யாராலாவது எழுத முடியுமா என்ன? ஒவ்வொரு பாடலும் ek se badkar ek.

    ReplyDelete
  2. மாரீச்சன் ராமரைப்பற்றி "ராமோ விக்ரஹான் தர்ம: " என்று தர்மத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது ராமராக இருக்குமாம் என்று சொல்லுகிறான். இப்படி வாலி, மாரீசன் போன்ற எதிரிகளாலும் புகழப் படுகிற ராமர் வாலியை ஏன் மறைந்து இருந்து கொன்றார் என்று அறிய ஆவலாக இருக்கிறது .

    ReplyDelete
  3. இராமன் செய்தது எல்லாமே அறவழி என்று இந்தப் பாடல் சொன்னாலும், வாலியைக் கொன்ற விதத்துக்கு நியாயமான காரணம் (justification) என்று என்ன கம்பர் எழுதுகிறார்?

    ReplyDelete