Sunday, May 26, 2013

இரணியன் வதம் - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி


இரணியன் வதம்  - மேதாவிகட்கு எல்லாம் மேதாவி  


இராம இராவண யுத்தம் நிகழப் போகிறது.

இராவணன் மந்திர ஆலோசனை செய்கிறான்.

அதில் விபீடணன் இராவணனிடம் சொல்கிறான்....எவ்வளவு வர பலம், ஆள் பலம், உடல் பலம் இருந்தாலும் அறத்தின் பலம் இல்லாவிட்டால் அழிந்து போவாய் என்று. ஆணவம், இறைவனை பணியாத குணம் இருந்தால் அழிவு வரும் என்று சொல்கிறான்.

அப்படி இருந்த இரணியன் எப்படி அழிந்தான் என்று விபீடணன் விளக்குகிறான்.

இரணியன் வதையை படிக்கும் போது, கம்பன் கம்ப இராமாயணத்தை இதற்காகவே எழுதினான் போல இருக்கும்.

அத்தனை கவி நயம் அத்தனை ஆழ்ந்த தத்துவங்கள். பக்தி பிரவாகம் பொங்கி வழியும் பாடல்கள்.

மொத்தம் 175 பாடல்கள்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

வீரம். பக்தி. ஆக்ரோஷம். பிரமாண்டம். எல்லாம் கலந்த பாடல்கள்.

அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

பாடல்


'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான் ! என்
மாற்றம் யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச்
செப்பினான் - மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்.

பொருள் 

Saturday, May 25, 2013

வாலி வதம் - கால் தரை தோய நின்று


வாலி வதம் - கால் தரை தோய நின்று 


சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது. நேரடியாக ஒவ்வொருவரும் உணர முடியும்.

தெரியாமல் விரலை சுட்டுக் கொண்டால், ஹா என்று உதறுகிறோம். அந்த சூடு எப்படி இருந்தது என்று சொல் என்றால் எப்படி சொல்லுவது ?

லட்டை வாயில் போட்டால் இனிக்கிறது. இனிப்பை உணரலாம். சொல்லிக் காட்ட முடியாது.

கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லுவார்

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே

என்ன, படிச்சு நாக்கு சுளுக்கிக் கொண்டதா ?....:)

சந்தக் கவி அரசு அருனைகிரியின் பாடல் என்றால் சும்மாவா. பதம் பிரிப்போம்.

செவ் வான் உருவில் திகழ் வேலவன் அன்று 
ஒவ்வாதது என உணர்வித்ததுதான் 
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் 
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 

முருகனை கண்டார் அருணகிரி. அந்த அனுபவம் என்ன என்று சொல்ல முடியவில்லை. அதற்கு இணையான (ஒப்புமை ) ஒன்று இல்லை.

உணர்ந்தார், ஆனால் உரைக்க முடியவில்லை.

நீங்களும் அவ்வாறே அறிந்து கொள்ளுங்கள். வேறு எப்படி சொல்லுவது (இசைவிப்பது ?) என்கிறார்.

இறை அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

அருணகிரி கோபுரத்தின் மேல் இருந்து குதித்து விட்டார். முருகன் அவரை கையில் ஏந்தி ஆட்கொண்டார்.

மாணிக்க வாசகருக்கு குரு வடிவில் வந்து திருபெருந்துறையில் காட்சி தந்தார். பின் திருக்கழுகுன்றிலே "கணக்கிலா வடிவம் நீ காட்டி வந்து என்ன ஆண்டு கொண்டாய் கழுக் குன்றிலே" என்றார்

அப்பருக்கு உலகம் எல்லாம் அம்மை அப்பனாக தெரிந்தது. கண்டேன் அவர் திரு பாதம், கண்டரியாதன கண்டேன் என்று உருகினார்.

இங்கே வாலி, இறைவனை காண்கிறான். உயிர் போகும் சமயம் உண்மை தெரிகிறது. மரண வாக்கு மூலம் என்று சொல்லுவார்களே அது சத்ய வாக்கு. அவன் பொய் சொல்ல   வேண்டிய அவசியம் இல்லை.

கோவம் கொண்டவன், மாறி இறை உணர்வு பெறுகிறான்.

அவன் உள்ளத்தில் நன்றி உணர்வு பொங்குகிறது.

தனக்கு மேல் ஒரு பொருள் இல்லாத அந்த மெய் பொருள், கையில் வில் ஏந்தி,
கால் தரை தோய நின்று, கண்ணின் பாரவைக்கு தெரியும்படி வந்தது. மயக்கம் தரும் இந்த பிறவி பிணிக்கு மருந்து அது, அதை நீ வணங்கு என்று தன்  மகன் அங்கதனிடம் சொல்கிறான்

பாடல்


'பாலமை தவிர் நீ; என்
      சொல் பற்றுதிஆயின், தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
     மெய்ப்பொருள், வில்லும் தாங்கி,
கால் தரை தோய நின்று,
      கட்புலக்கு உற்றது அம்மா!
''மால் தரும் பிறவி நோய்க்கு
      மருந்து'' என, வணங்கு, மைந்த!


பொருள்



Friday, May 24, 2013

திருக்குறள் - ஒப்புரவு அறிதல்


திருக்குறள் - ஒப்புரவு அறிதல்  


ஒப்புரவு என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். உலகின் வழி அறிந்து அதன் படி வாழ்தல்.

நாம் வாழ்வில் பார்க்கலாம், நிறைய பேர் நிறைய படித்திருப்பார்கள், நிறைய நல்ல குணம் இருக்கும். இருந்தாலும் மற்றவர்கள் அவர்களோடு சேர்ந்து இருக்க சங்கடப் படுவார்கள்.

சரியாக பேசத் தெரியாது. எப்ப என்ன சொல்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து வைப்பார்கள்.

எல்லோரிடமும் சண்டை. ஏதாவது சச்சரவு.

யாருடனும் ஒத்து போக மாட்டார்கள். எதிலும் ஒரு அதீத எதிர்பார்ப்பு. அது நடக்காதபோது ஒரு கோபம், எரிச்சல்.

எதுக்கு எடுத்தாலும் ஒரு வாதம். பிடிவாதம்.

அதே சமயம் வேறு சில பேரை பார்த்தால், மிக இனிமையாக இருப்பார்கள். பேச்சில் ஒரு நளினம். பிறருக்கு உதவும் குணம். பிறர் துன்பங்களை அறிந்து உதவும் குணம். உலக இயல்போடு ஒத்து வாழ்வார்கள்.

இதை சொல்வதற்கு வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் -  ஒப்புரவு  அறிதல்.

உலக அறிவு என்பது படிப்பு அறிவு கிடையாது. அனுபவ அறிவு. எப்படி பழக வேண்டும் , எப்படி பேச வேண்டும், எப்படி ஊரோடு ஒத்து போவது என்று சொல்கிறார் இந்த அதிகாரத்தில்.

உயிருள்ள மனிதனுக்கும், உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம். பிணம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று  அறியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தன்னையும் பார்த்துக் கொள்ளாது, பிறரையும் பார்க்காது. தன்னால் பிறருக்கு வரும் துன்பங்களையும் (நாற்றம், சுகாதாரக் கேடு ) அது உணராது.

உலக அறிவு இல்லாதவன் அந்த பிணத்திற்கு ஒப்பானவன் என்கிறார் வள்ளுவர்.. விலங்கு கூட இல்லை, பிணம் என்கிறார்.

பாடல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.


பொருள்


வாலி வதம் - அவதார நோக்கம்

வாலி வதம்  - அவதார நோக்கம் 


திருமால், இராமனாக அவதாரம் எடுத்தது எதற்காக ?

இரண்டு நோக்கம்.

ஒன்று , இராவணனை அழிப்பது.

இரண்டாவது, நல்ல வாழ்கை நெறி முறைகளை காட்டி, இங்குள்ளவர்களை வீடு பேறு பெற உதவுவது.

அவதாரம் என்றாலே அதுதான் அர்த்தம்.

அப்படி யாரை இராமன் வீடு பேறு பெற உதவினான் ?

ஒரு மனிதனைக் கூட அல்ல, ஒரு விலங்கை மனிதனாக மாற்றி, பின் அந்த மனிதனை தேவர்களுக்கும் உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றான்.

வாலி - குரங்காக இருந்து, மனிதனாக மாறி, தேவர்களுக்கும் எட்டாத இடத்திற்கு சென்றான்.

வாலி - தான் ஒரு குரங்கு என்று அவனே கூறுகிறான். தம்பியை கொல்வேன் என்று கிளம்புகிறான். பாசம் என்பது இல்லை. பரிவு இல்லை. மன்னிக்கும் குணம் இல்லை.



கொல்லல் உற்றனை, உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும், இரங்கலை;
"அல்லல் செய்யல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்" என்னவும், புல்லலை, பொங்கினாய். 

என்கிறான் இராமன். கொல்லல் உற்றனை. தவறு அவன் மேல் இல்லை என்று அறிந்தும். அவனுக்கு நீ இரக்கம் காட்டவில்லை. உனக்கு அபயம் என்று வந்தவனை காப்பாற்றாமல் கோபித்தாய் என்று வாலி பற்றி இராமன் கூறுகிறான்.

அப்படிப்பட்ட வாலி, இராம நாமம், இராம பாணம் இந்த இரண்டின் சம்பந்தம் ஏற்பட்ட பின் மனிதனாக மாறுகிறான்.

அறம் பற்றி பேசுகிறான். நல்லது கெட்டது எது என்று அலசுகிறான். விலங்கில் இருந்து  மனிதனாக மாறுகிறான்.

பின், இராமனை கண்ட உடன், அவன் தரிசனம் கிடைத்தவுடன், அவன் குணங்கள்  மெல்ல மெல்ல மாறி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போகிறான்.

- கொல்லுவேன் என்று வந்தவன் , சுக்ரீவன் தவறு செய்தால் அவனை தண்டிக்காதே என்று இராமனிடம் வரம் கேட்க்கிறான்.

- இராமனிடம் தான் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க்கிறான் - தருமமும், தகவும், சால்பும் நீ என்று இராமனை உணர்கிறான்

- ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய் என்று நன்றியோடு கூறுகிறான்.

- நீயே தருமம் என்று புகழ்கிறான்

- அனுமனை புகழ்கிறான்

- அங்கதனை தேற்றுகிறான்

- சுக்ரீவனை மன்னிக்கிறான்

இப்படி விலங்காக இருந்து, மனிதனாக மாறி, "பின்   வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான் ". வானுலகையும் தாண்டி அதற்கு மேலும் உள்ள ஒரு  உலகத்துக்கு  போனான் என்கிறான் கம்பன்....ஒரு தெய்வ நிலை எய்தினான்.

விலங்காக, மனிதனாக, தெய்வமாக மாறினான் வாலி.

அவதார நோக்கம் அங்கே நிறைவேறியது. 

அவ்வளவு கோபம் கொண்ட வாலி எப்படி மாறினான் ? எது அவனை மாற்றியது ? வாலியின் கேள்விகளுக்கு இராமனும் இலக்குவனும் தந்த பதில்கள்  எதுவும் ஆழமானவை அல்ல. ஒத்துக் கொள்ள முடியாத பதில்கள்.

இருந்தும்  ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அது வாலியை மாற்றி இருக்கிறது.

என்னை கேட்டால் இராமனின் சாநித்தியம் - அருகாமை - ஏதோ    வேண்டும்.

 பேசாமல் நிகழ்ந்த ஏதோ ஒன்று.

அருகில் இருந்த சுக்ரீவனுக்கோ, இலக்குவனுக்கோ , அனுமனுக்கோ தெரியாமல்   இராமனுக்கும் வாலிக்கும் இடையில் நடந்த ஏதோ ஒன்று வாலியை மாற்றி இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வில் அந்த மாதிரி நிகழ்ந்திருக்கிறதா ?

பேசாமலே பேசி இருக்கிறீர்களா ?

கண் அசைவில் ? விரல்களின் நெருக்கத்தில் ? அருகருகே அமர்ந்திருந்தும் ஒரு வார்த்தை கூட  பேசாமல் மணிகணக்காக அமர்ந்து இருந்து ஏதோ ரொம்ப நேரம்  பேசியது போல் உணர்ந்து இருகிறீர்களா ?

நான் உணர்ந்து இருக்கிறேன்.

"பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ" என்கிறான் கம்பன் இராமனை பற்றி வாலியின்  வாயிலாக.

நமக்கு அங்கு நடந்தது என்ன என்று இன்றுவரை  புலப்படாமல் இருக்கிறது.

பொய் அடைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த அடைப்பு விலகும்போது புலப்படும்.




Thursday, May 23, 2013

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம்

வாலி வதம் - தவறுக்கு பிரயாசித்தம் 


வாலியின் மேல் அம்பு எய்த பின், இராமன் வாலியின் முன் வந்து  நின்றான் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

வாலிக்கும் இராமனுக்கும் வாக்கு வாதம் நிகழ்கிறது.

வாலி கேட்ட கேள்விக்கு எல்லாம் இராமன் பதில் சொல்கிறான் - கடைசி ஒரு கேள்வியைத் தவிர.

கடைசியில் வாலி கேட்க்கிறான் - ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் ? என்று.

அந்த கேள்விக்கு இராமன் பதில் சொல்லவில்லை.

இலக்குவன் பதில் சொல்கிறான்.

உன் தம்பி சுக்ரீவன் அடைக்கலம் அடைந்து விட்டான்...நீயும் சரண் என்று வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தான் என்று சொல்கிறான்.



முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, "முறை இலோயைத்
தென் புலத்து உய்ப்பென்" என்று செப்பினன்; செருவில், நீயும்,
அன்பினை உயிருக்கு ஆகி, "அடைக்கலம் யானும்" என்றி
என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 



மறைந்து நின்று அம்பு எய்ததில் சந்தேகம் ஒன்றும் இல்லை. இலக்குவனே அதற்கு வாக்கு மூலம் அளிக்கிறான்.

நீயும் வந்து "அடைக்கலம் யானும்" என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கருதி  அண்ணல் மறைந்து நின்று அம்பு எய்தான் என்று கூறுகிறான்.

இது ஏற்புடையதா ?

சரணாகதியில் இவனை ஏற்ப்பேன், இவனை ஏற்க மாட்டேன் என்று சொல்லுவது  சரியா ?

இராவணனே வந்தாலும் அபயம் அளிப்பேன் என்று சொல்லியவன் இராமன். வாலிக்கு  அபயம் அளித்தால் என்ன ?

இப்போது இராமன் என்ன செய்யப் போகிறான் என்பதுதான் கேள்வி.

இராமன் இரண்டு விஷயங்கள் செய்தான்.

ஒன்று செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்...யாரிடம் ? வாலியிடம் கூட அல்ல, வாலியின் மகன், பொடியன் அங்கதனிடம் இராமன் மன்னிப்பு கேட்டான்.

ஹா...அப்படியா சங்கதி...இதுதான் இராமன் காட்டிய வழியா...தவறு செய்தால் மன்னிப்பு கேட்டால் போதுமா ? ரொம்ப சுலபமான வழியாக இருக்கிறதே என்று  நீங்கள் ஆரம்பிக்கு முன்....

நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். போகும் போது ஒரு மிதிவண்டி காரன் குறுக்கே வந்து விடுகிறான். அவனை இடித்து விடக்கூடாதே என்று வேகமாக வண்டியை வளைக்கிறீர்கள் ....ஓரமாய் ஒழுங்காக நடை பாதையில் சென்று கொண்டிருந்தவன் மேல் வண்டியை மோதி விடுகிறீர்கள்.

நடை பாதையில் போகிறவனை கொல்வது உங்கள் நோக்கம் அல்ல. மிதி வண்டி காரனை காப்பாற்ற நினைத்தீர்கள்...

வாலியை கொல்ல வேண்டும் என்று இராமன் அயோத்தியை விட்டு கிளம்பவில்லை. சுக்ரீவனை காப்பாற்ற நினைத்தான், வாலி அடி பட்டான்.

இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போகக் கூடாது - முதல் விதி. 

நடை பாதையில் சென்று அடிபட்டவனிடம் மன்னிப்பு கேட்கிறான் - இது இரண்டாவது விதி.

இதோடு விட்டிருந்தால், பெரிய விஷயம் இல்லை.

மூன்றாவதாக இராமன் ஒரு காரியம் செய்கிறான். யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு காரியம்.

தவறுக்கு பிரயாச்சித்தம் செய்கிறான்.

அந்த நேரத்தில், இராமனுக்கு பிள்ளை இல்லை. வாரிசு இல்லை. வாலியின் மகனை தன்  வாரிசாக  ஏற்றுக் கொள்கிறான்.

தன் உடைவாளை அங்கதனிடம் கொடுத்து, " நீ இதை பொறுத்தி " என்றான். பொறுத்தி என்றால் பெற்றுக் கொள் என்று அர்த்தம் அல்ல. இதற்க்கு முன்னால் இராமனை காட்டுக்கு அனுப்பமாட்டேன் என்று தசரதன் சொன்ன போது , விச்வாமித்ரன் கோபம் கொண்டபோது, வசிட்டன் " நீ இதை பொறுத்தி " என்கிறான். மன்னித்துக் கொள் என்ற அர்த்தத்தில் தான் கம்பன் அந்த வார்த்தையை கையாளுகிறான்.

தான் செய்த தவறுக்கு, இராமன் செய்த பிரயாசித்தம் அது.

அவன் அப்படி செய்ததும், உலகம் எல்லாம் அவனை வாழ்த்தியது.

வெறும் மன்னிப்பு அல்ல.  கொஞ்சம் செல்வத்தை கொடுத்து சரி   பண்ண முயற்சி செய்யவில்லை. வாலியின் மகனை தன் மகனாக அங்கீகாரம் செய்கிறான்.

இது ஏதோ அந்த நேரத்து உணர்ச்சியில் செய்யவில்லை.

இராமனிடமே இராஜ்ஜியம் இல்லை. இதில் அங்கதனை வாரிசாக அறிவித்த் என்ன பயன் ?


பின்னால் இராவண வாதம் முடிந்து, முடி சூட்டிக் கொள்ளும் போதும் " அங்கதன் உடை வாள் ஏந்த" என்று அந்த இடத்திலும் தன் அரசின் வாரிசாக அறிவிக்கிறான் இராமன்.

 தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன்

முதலில், ஓடி ஒளியாமல் தவறு இழைக்கப் பட்டவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

இரண்டாவது - தவறுக்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும்

மூன்றாவது - தவறுக்கு பிரயாசித்தம்  தேட வேண்டும்.

 நான்காவது - அந்த தவறில் இருந்து பாடம் படிக்க வேண்டும். மீண்டும் அந்த தவறு  நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்காவது விஷயம் எப்ப நடந்தது என்று நாளை பார்ப்போம் ....

இன்றைய பாடல்


தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங் கணானும்,

பொன் உடைவாளை நீட்டி, 'நீ இது பொறுத்தி' என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்


பொருள்


Wednesday, May 22, 2013

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வாலி வதம் - தவறு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?


இராமாயணம் என்றால் இராமனின் வழி என்று பார்த்தோம்.

நாம் வாழ்வில் தவறே செய்ய மாட்டோமா ? தவறு நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது ? அதற்க்கு என்ன பிரயாசித்தம் செய்வது ?

இராமன் வாழ்வில் இதற்க்கு முன் உதாரணம் ஏதாவது இருக்கிறதா ? இராமன் காட்டிய வழி என்ன ?

வாலி வதை தவறு என்றே வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

இராமன் என்ன செய்தான் ?

முதலில், யாருக்கு தவறு இழைக்கப் பட்டதோ அவர்கள் முன் போய் நின்றான். ஓடி ஒளியவில்லை .

பாடல்


'இறை திறம்பினனால்; என்னே, இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான், வந்து தோன்ற, 


பொருள்


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே 


நீங்கள் யாரையாவது ரொம்ப ரொம்ப ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்...நீங்கள் ஏதோ வேலையாக போய்  கொண்டிருகிறீர்கள்...அந்த வழியில் உங்கள் மனம் கவர்ந்தவரின் பெயர் உள்ள பெயர் பலகையோ, அந்த பெயரை சொல்லி யாரோ அழைத்தாலும் உடனே உங்கள் மனதில் அந்த மனம் கவர்ந்தவரின் முகம் தென்றலாய் வருடி  போகும் அல்லவா ? அவர்களுக்கு பிடித்த ஒரு பூவோ, ஒரு பாடலோ நீங்கள் செல்லும் வழியில் கேட்டால் அவர்கள் நினைவு மனதுக்குள் மழை தூறி போகும் தானே ? அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுமே? இப்போது என்றால், உடனே கை பேசியை தட்டி அவர்களை கூப்பிட்டு பேசி விடலாம்...

ஆண்டாள் காலத்தில் அது எல்லாம் முடியுமா ? அதுவும் அந்த திருமாலுக்கு எந்த எண்ணுக்கு போன் செய்வது.

சும்மா இருக்க மாட்டாமல் இந்த குயிலும், மயிலும்,  களாப் பழங்களும், கருவிளம் பூக்களும் அந்த திருமாலின் நிறத்தில் தோன்றி, அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு என்னை பாடாய் படுத்துகின்றன என்று அவற்றின் மேல் செல்ல கோபம் கொள்கிறாள் ஆண்டாள்.

பாடல்



பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 

பொருள்