Sunday, November 10, 2013

இராமாயணம் - யமனின் கருணை

இராமாயணம் - யமனின் கருணை 




‘ “உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக் 
     கருதல் ஆகுமோ?

உண்மை இல்லாத பிறவிகள் கோடிக் கணக்கில் உண்டு. அவை ஒன்றை ஒன்று தழுவி நின்றன. இந்த கூற்றுவன் இருக்கிறானே அவனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா

என்று தசதரன் இறந்த துக்கத்தில் இருக்கும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல்  கூறுகிறான்.

உண்மை இல் பிறவிகள் = உண்மை இல்லாத பிறவிகள். இந்த பிறவிகள் இன்று இருக்கும் நாளை  இருக்காது. மின்னேர் வாழ்க்கை என்று சொல்லும்  பிரபந்தம். நீர் கோல வாழ்வை என்பார் கம்பர் பிறிதோர் இடத்தில். இந்த பிறவிகளை உண்மையானவை என்று கொள்ள முடியாது. உண்மை  சாஸ்வதமானது.பொய் இன்றிருக்கும் நாளை இருக்காது.


உலப்பு இல் கோடிகள் = உலப்பு என்றால் முடிவு,  இறுதி.கணக்கில் அடங்கா கோடி கோடி இந்த உண்மை இல்லாத பிறவிகள்.

உலபில்லா ஆனந்த மாய தேனினை சொரிந்து 
புறம் புறம் எனத்  திரிந்த செல்வனே சிவனே 
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் 

என்பார் மணி  வாசகர்.



தண்மையில் வெம்மையில் தழுவின = தண்மை என்றால் குளிர்ச்சி. வெம்மை என்றால் சூடு. இந்த உயிரனங்கள் ஒன்றை ஒன்று அன்போடும் , போட்டி போட்டு ஒன்றை ஒன்று சண்டை இட்டும் சார்ந்து நிற்கின்றன


எனும் = என்னும்

வண்மையை நோக்கிய = வல்லமை கொண்ட

அரிய = சிறந்த

கூற்றின்பால் = யமனிடம். கூற்றுவன் என்பவன் உயிரையும் உடலையும் கூறு படுத்துபவன்


கண்மையும் = கண்மை என்றால் ஏதோ கண்ணுக்கு போடும் மை  அல்ல. கண்மை என்றால் கருணை.

உளது எனக் கருதல் ஆகுமோ? = யமனிடம் கருணை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா ? முடியாது

யமன் கருணை  இல்லாதவன்...நாள் கிழமை பார்க்க  மாட்டான், அன்பின் ஆழம் அறிய மாட்டான், பிரிவின் துயரம் அறியான், கண்ணீரின் சோகம் அறியாதவன் ....அவனிடம் கருணையை எதிர் பார்க்க முடியாது ....

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?

பிரபந்தம் - பேசுவதால் ஆவதென்ன ?


புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப் படும் ஒரு  சம்பவம்.

ஞானம் பெற்ற பின் புத்தர் மிக மிக அமைதியாக  இருந்தார். அவரை பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது - எவர் ஏதோ அறிந்திருக்கிறார் என்று. அவர் கண்ணில் தெரியும் ஒளி, அவரின் நிலை அவற்றை கண்ட மக்கள் அவரிடம் கேட்டார்கள் ...

"நீங்கள் ஏதோ ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ...அதை என்ன என்று எங்களுக்குச் சொல்லக் கூடாதா "

புத்தர் சிரித்துக் கொண்டே சொன்னார் "முதலில் அதை சொல்வது  கடினம்.அப்படியே சொன்னாலும் நீங்கள் அதை  மாட்டீர்கள். நான் சொல்வதை அல்ல நீங்கள் கேட்பது. நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றைதான் கேட்பீர்கள்...எனவே பேசாமல் இருபதே நலம் என்று நினைக்கிறேன் "

பின் மிகவும்  அவரை பேச வைத்தார்கள்.

ஞானிகள் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

"சும்மா இரு" என்று முருகன் உபதேசம் செய்ததாக அருணகிரி சொல்கிறார்.

"பேசுவதால் பயனிலை" என்கிறார் பாரதியார் .

Sitting silently
Doing nothing
Grass grows by itself

என்கிறது ஜென் பாடல்.

இங்கே தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்


"பெரியவர்கள் சொன்னதை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர நாம் ஒன்றும் புதிதாக உணர இயலாது. ஆசை அற்றவர்கள் அன்றி மற்றவர்கள்  அவனை அறிய முடியாது. குற்றமற்றவர்கள் மனதில் இருப்பவனை வணங்கி இருப்பதை விட்டு விட்டு பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் "

பாடல்


பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

சீர் பிரித்த பின்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் அறியலாவானும் அல்லன்
மாசு அற்றார் மனத்து உள்ளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தால் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்


பொருள் 

பேசிற்றே பேசல் அல்லால் = பேசியதையே பேசுவதைத் தவிர

பெருமை ஒன்று உணரல் ஆகாது  = (அவன்) பெருமை ஒன்றையும் நம்மால் உணர முடியாது

ஆசு அற்றார் தங்களுக்கு அல்லால் = ஆசு என்பதற்கு விரைவு என்று ஒரு பொருள் உண்டு. ஆனால் ஆசை என்பது சரியாக இருக்கும். ஆசை அற்றவர்களுக்கு இல்லாமல்

அறியலாவானும் அல்லன் = அவன் அறிய முடியாதவன்

மாசு அற்றார் மனத்து உள்ளானை = குற்றம் அற்ற உள்ளத்தில் இருப்பவனை

வணங்கி நாம் இருப்பது அல்லால்  = வணங்கி நாம் இருப்பதைத் தவிர

பேசத்தால் ஆவது உண்டோ = பேசுவதால் ஆவது உண்டோ ?

 பேதை நெஞ்சே நீ சொல்லாய் = பேதை நெஞ்சே நீ சொல்




Saturday, November 9, 2013

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம்

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம் 


கழுதை அழுக்கு மூட்டையை சுமந்தாலும் குங்கும பூ மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வித்தியாசமும்  தெரியாது.

ஏதோ பொதி சுமந்து போகிறோம் என்று தான் அதற்குத்  தோன்றும்.

அல்லது குங்கும பொதியை சுமந்ததால் அந்த கழுதைக்கு பெரிய பேரும் புகழும் கிடைக்கவா  போகிறது.

அது போல காரண காரியம் தெரியாமல் மக்கள் பல பேர் பல இறை காரியங்களை செய்து  கொண்டிருகிறார்கள்.

கற்பூரம்  காட்டுவது,மணி அடிப்பது, மத சின்னங்களை அணிந்து கொள்வது, தூக்கம்  முழிப்பது, சாப்பிடாமல் இருப்பது என்று எண்ணற்ற காரியங்களை செய்து  கொண்டிருக்கிறார்கள். ஏன்  செய்கிறாய் என்று கேட்டால் தெரியாது....எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று  .பதில் வரும். அர்த்தம் தெரியாமல் பாடல்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்க்கலாம்....

கழுதை சுமந்த குங்குமம்...

உள்ளன்போடு உருகி அவனை நினையாமல் இந்த சடங்குளினால் என்ன பயன் என்கிறார் சுந்தரர் ....

பாடல் 

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே


பொருள் 

கழுதை = கழுதை 

குங்குமம் = குங்குமம் 

தான் சுமந்து எய்தால் = அது சுமந்து சென்றால் 

நகைப்பர் = நகைப்பார்கள் 

பாழ் புக மற்றது போலப் = ஒரு பலனும்  அதற்கு இல்லாதது போல 

பழுது = தவறி 

 நான் = நான் 

உழன்று = தவித்து  

உள் தடுமாறிப் = உள்ளம் தடுமாறி 

படு = பெரிய 

சுழித் தலைப் பட்டனன் = சுழலில் அகப்பட்டுக் கொண்டேன் 

எந்தாய் = என் தந்தையே 

அழுது = அழுது 

நீ = நீ 

இருந்து என் செய்தி மன்னனே = இருந்து என்ன செய்யப் போகிறாய் மனமே
 
அங்கணா அரனே என  மாட்டாய் = அங்கணா அரனே என்று  மாட்டாய் 

இழுதை = இழுக்கு 

எனக்கு = எனக்கு 

ஓர் = ஒரு 

உய்வகை = உய்யும் , வாழும் வகை 

அருளாய் = அருள் செய்வாய் 

இடை மருதுறை = இடை மருது என்ற ஊரில் உறையும் 

எந்தை பிரானே = என்னை என்றும் பிரியாதவனே 


பூஜை புனஸ்காரங்களில் புண்ணியம்  இல்லை.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்க வாசகர். அது போல உள்ளன்போடு  உருகினால் வாழும் வழி கிடைக்கும் என்கிறார் சுந்தரர் 



திருக்குறள் - வையத்தின் வானம்

திருக்குறள் - வையத்தின் வானம் 



ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

ஐயத்தை நீங்கி தெளிந்தவர்களுக்கு இந்த வையமும் வானமும் அருகில் இருக்கும்.


ஐயத்தின் = ஐயத்தில் இருந்து

நீங்கித் = நீங்கி

தெளிந்தார்க்கு = தெளிவு பெற்றவர்களுக்கு

வையத்தின் = உலகின்

வானம் = வானமும்

நணிய = அருகில்

உடைத்து = இருக்கும், கிடைக்கும்


இது திருக்குறள். 

நாம் எதையும் அறிந்து கொள்ள முயலும் போது மூன்று நிலைகள் நிகழும். 

ஐயம், திரிபு, தெளிவு. 

ஐயம் திரிபற கற்றல்   என்று சொல்லுவார்கள்.

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம் 

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைப்பது. சந்தேகம் இல்லை, மாற்றி , தவறாக கொள்வது. 

இரவில் வழியில் நெளிவாக ஒன்று கிடக்கிறது 

பாம்பா , கயிறா என்று சந்தேகம் கொள்வது ஐயம். 

பாம்பை கயிறு என்றோ, கயிறை பாம்பு என்றோ மாற்றி உறுதியாக எண்ணுவது திரிபு. தவறுதான் இருந்தாலும்  அறிவு  அப்படி ஒரு முடிவை எடுக்கிறது. 


ஐயம் நீங்கி தெளிவு பெற்றவர்கள் அதாவது ஐயமும், திரிபும் நீங்கியவர்கள் இந்த உலகத்தில் இருக்கும்போதே வீடு பேறு என்று சொல்லும் அந்த மறு உலகத்தையும் அருகில் காண்பார்கள். 

பரிமேல் அழகர் உரை 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. 

(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)








இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும்

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும் 


நாம் அன்பு கொண்டவர்களின் மரணம் மிகப் பெரிய துக்கம். நம் மரணம் துக்கம் அல்ல பயம்.

நிலையாமை பற்றி எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் நம் நெருங்கியவர்களின் மரணம் உலுக்கித்தான் போடுகிறது.

தசரதன் இறந்து போனான் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். அரசு போனதற்கு கலங்கவில்லை. காடு போ என்று சொன்னபோதும் கலக்கம் இல்லை. ஆனால் , தந்தை இறந்தான் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை.

பாசம் அந்த பரமனையும் விடவில்லை.

கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி கூறுகிறான்.

நம் வாழ்விலும் பிரிவுகள் நிகழலாம். அந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஞானிகளின் வாசகங்கள் உதவலாம்.

மிக மிக ஆழமான, சிந்திக்க வேண்டிய பாடல்கள்...அதில் ஒன்று


பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

     வரம்பு கண்ட நீ?

பொருள்

"துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும்  இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் "

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான்  அர்த்தம்.

கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம்.

பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு....இந்த கோணத்தில் நாம்  பார்க்கிறோம். இறப்போடு  எல்லாம் முடிந்து விடுகிறது.

வசிட்டர் கொஞ்சம் வேறு விதமாக சொல்கிறார்.

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை " முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை  என்கிறார்.

தசரதன் இறந்து போனான். "இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் " என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறான்.

பிறந்தது இறக்கும் என்பது கண்  கூடு.

இறந்தது பிறக்குமா  என்பது தெரியாது. சந்தேகம்  இருக்கிறது அதில்.

பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டன் அதையும் மாற்றிப் போடுகிறான்.

"துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது" முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல்  அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறான்.

இது வசிட்டன் சொன்னான் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறான் என்று   இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம்.

எனவே வசிட்டன் சொல்கிறான் "மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ"


மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று அவனுக்கு ஞாபகப் படுத்துகிறான்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை   கண்டவன்.அவற்றின் முடிவை  அறிந்தவன். அவை சொல்வதின்  அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ?

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே    
யொழுக்க முடையார்வாய்ச் சொல்


வாழ்வில் இழுக்கம் வரும்போது உயர்ந்தவர்களின் சொற்கள் வழுக்கும் நிலத்தில் ஊன்று கோல் போல உதவும் என்பது வள்ளுவம்.

வசிட்டனின் வார்த்தைகளை இன்னும் எடுத்துச் சொல்வேன்


Friday, November 8, 2013

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம்

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம் 



கிழம் இப்படித்தான் படுத்துது என்று மகளோ மருமகளோ அலுத்துக் கொள்வது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் காதில் விழுவது பற்றி அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாள் என்று தாத்தாவும் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கிறார்...கண்ணோரம் ஈரம்...

பக்கத்து மேஜையில் மருந்துகள் குமிந்து கிடக்கின்றன.....சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது என்று தாத்தா தலையை திருப்பிக் கொள்கிறார்

பாடல்


உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

சீர் பிரித்த பின்

உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்து எதிரே காட்டிய கால் - பைய
எழுந்து இருமி யான் வேண்டேன் என்னா முன் நெஞ்சே
செழுந் திரு மயானமே சேர்


பொருள் வேண்டுமா என்ன ?


Thursday, November 7, 2013

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல்

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல் 




 மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!


முதல் இரண்டு வரி எல்லோருக்கும் தெரியும்....

அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ....

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள்  வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது ? அவள் பால் நினைத்து ஊட்டும் தாய். 


பெண்மையின் சிறப்பை கவி மணி மிக அழகாகப் பாடி  இருக்கிறார்.படித்து இன்புறுங்கள்.


741 அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
     அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
     கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

742 ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
     உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
     கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

743 சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
     ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்
     அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

745 நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
     நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
     உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?

746 ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
     அன்போ டகலா திருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
     பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?

747 ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த
     ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்
     சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?

748 சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
     சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
     உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?

749 மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம்
     மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
     வேண்டிய போதனை செய்பவர் ஆர்?

750 அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
     ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
     இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?

751 இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு
     ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
     வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?