Saturday, December 21, 2013

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே

திருப் புகழ் - வந்தித்து அணைவோனே 


அவன்: உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா ?

அவள்: ம்ம்..என்ன கேட்கப் போற ?

அவன்: சரின்னு சொல்லணும் ...மாட்டேன்னு  சொல்லக் கூடாது...

அவள்: ஆத்தாடி, அது எல்லாம் முடியாது...நீ பாட்டுக்கு ஏதாவது எசகு பிசகா கேட்டேனா ?

அவன்: அப்படி எல்லாம் கேப்பனா ? கேக்க மாட்டேன்...சரின்னு சொல்லு...

அவள்: ரொம்ப பயமா இருக்கு...

அவன்: சரின்னு சொல்லேன்...என் மேல நம்பிக்கை இல்லையா ? ப்ளீஸ்...என் செல்ல குட்டில, என் கண்ணு குட்டில...சரின்னு சொல்லு

அவள்: ம்ம்ம்...சரி...என்னனு சொல்லு

அவன்: ஒரே ஒரு தடவை உன்னை கட்டி பிடிக்கணும் போல இருக்கு...கட்டிக்கவா ?

அவள்: ம்ம்ம்ம்....

-------------------------------------------------------------------------------------------------

என்னடா ஏதோ திருப்புகழ்னு தலைப்பை போட்டுட்டு ஏதேதோ எழுதிக் கொண்டு போறானே  என்று நினைக்கிறீர்களா "

இல்லை....அருணகிரி நாதர் சொல்கிறார்....

வள்ளியை வணங்கி, பின் அவளை அணைத்துக் கொண்டானாம் முருகன்.

முருகன், வள்ளியை வணங்கினான் என்கிறார் அருணகிரி. வணங்கிய பின் அணைத்துக் கொண்டானாம். எதற்கு வணங்கி இருப்பான் ?

பாடல்

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே

     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

சீர் பிரித்த பின் 

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி 
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே 

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே 

மயில் தகர் கல் இடையர் அந்தத் திணை காவல் 
வனச குற மகளை வந்தித்து அணைவோனே 

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே 
கரி முகனுக்கு இளைய கந்தப் பெருமாளே 


பொருள் 

இயல் இசையில் = அழகான பேச்சிலும், இனிமையான இசையிலும். இசை என்று சொன்னால் நான் குரல் என்று கொள்வேன். பெண்களின் குரலுக்கே ஒரு இனிமை உண்டு. அவர்கள் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும். 

உசித = சிறந்து விளங்கும் 

வஞ்சிக்கு = பெண்களிடம் 

அயர்வாகி = சோர்ந்து 
 
இரவு பகல் = இரவும் பகலும், அவர்களையே நினைத்து மனம் சோர்ந்து போய் . 

மனது சிந்தித்து = எந்நேரமும் அவர்கள் நினைவாகவே இருந்து  

உழலாதே = உழலாமல் 

உயர் கருணை  புரியும் = உயர்ந்த கருணையை புரியும் 

இன்பக் கடல் மூழ்கி = இன்பமாகிய கடலில் மூழ்கி 
 
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே = இறைவன்  என்பவன் வெளியில் இருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிறான். நாம் அறிவது இல்லை. அந்த அறிவைத் தருவாயே என்று  வேண்டுகிறார்.இறைவனின் அருள் வேண்டாமாம். அன்பு வேண்டுமாம்.  

மயில் = மயில்கள் ஆடும் மலை 

தகர் = ஆடுகள் இருக்கும் மலை 

கல் இடையர் = கல் என்றால் மலை. மயில்களும் ஆடுகளும் இவற்றிற்கு இடையே வாழும் வேடுவர்கள்  

அந்தத் திணை காவல் = அந்தத் திணைக்கு காவல் இருக்கும் 
 
வனச குற மகளை= திருமகள் போல அழகு கொண்ட வள்ளியை 

வந்தித்து  = கும்பிட்டு, வணங்கி 

அணைவோனே = அனைத்துக் கொள்பவனே 

கயிலை மலை அனைய = கயிலை மலை போன்ற 

செந்தில் பதி வாழ்வே = திரு செந்தூரில் வாழும் முருகனே 

கரி = யானை 

முகனுக்கு = முகத்தை உடைய விநாயகருக்கு 

இளைய = தம்பியான 

கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே 

இது எனக்குத் தோன்றிய பொருள். 

இந்த பாடலுக்கு உரை எழுதிய பல பெரியவர்கள், பரமாத்மா கருணை கொண்டு ஜீவாத்மாவை ஏற்றுக் கொண்டது என்று "வனச குற மகளை வந்தித்து அணைவோனே" என்ற வரிக்கு பொருள் தந்திருக்கிறார்கள். 

மகான்களின் பாடல்களுக்கு சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். 

உங்கள் சிந்தனைக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். 
 

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் - 2

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்  - 2



இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ?

இது பிழை இல்லையா ?

======================================================================

இந்திரசித்து ஏன் இறந்தான் ?

இராவணன் சீதையின் மேல் கொண்ட காதலால் விளைந்த சண்டையில் இறந்தான்.

இராவணன் ஏன் சீதையின் மேல் காதல் கொண்டான் ?

மண்டோதரி அழகாய் இருந்திருந்தால் ஒரு வேளை இராவணன் சீதையின் மேல்  காதல் கொண்டிருக்க மாட்டானோ என்று சந்தேகம் எழலாம்.

இல்லை.

மண்டோதரி பேரழகி.

கரு கரு என்ற கூந்தல். பாதம்  நீண்ட கூந்தல்.

இல்லை என்று சொல்லும்படி உள்ள இடுப்பு.

அழாகான உடல் அமைப்பு.

அவள் கைகள் சிவந்து  இருக்கின்றன.

ஏன் ?

அவள் மார்பில் அடித்துக் கொண்டு அழுததால்.

அவள் மார்புகள் அவ்வளவு இளமையாய் உறுதியாய் இருக்கிறது. அதில் அடித்துக் கொண்டு அழுததால் அவள் கைகள் சிவந்து போய் விட்டன.

அவள் அழகுக்கு ஒரு குறைவும் இல்லை.

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், ஒரு சோகமான நிலையில் அவளைப் பார்க்கும் போது "ஐயோ பாவம்" என்று தான் தோன்றும்.

அந்த நிலையிலும் அவளின் அழகு தெரிய வேண்டும் என்றால் அவளின் அழகு   மிக பிரமிபுட்டுவதாக இருந்திருக்க வேண்டும்.

இறந்து கிடக்கும் மகனைக் காண வரும்போதும் கம்பனுக்கு அவளின் அழகு தான்  தெரிகிறது.

இராவணின் காதலுக்கு , மண்டோதரி அழகில்லாமல் இருந்ததல்ல காரணம்.

விதி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல ?



Sunday, December 15, 2013

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல்

இராமாயணம் - மண்டோதரியின் புலம்பல் 


இந்திரசித்து இறந்து விட்டான். இலக்குவன் அவன் தலையை கொண்டு சென்று விட்டான். இராவண யுத்த களத்திற்கு வந்து தலையில்லாத மகனின் உடலை நாட்டுக்கு கொண்டு செல்கிறான்.

செய்தி கேட்டு மண்டோதரி ஓடி வருகிறாள்.

கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பாடல் ஒன்று கம்பனிடம் இருந்து வருகிறது.

மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வருகிறாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுகிறது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்து  கிடக்கிறது. துக்கம் தாளாமல் அவள் கைகளால் தன் மார்பின் மேல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி அடித்ததால் திண்மையான முலைகளின் மேல் அடித்ததால் அவள் கைகள் சிவந்து போயின. அவள் மார்புகள் பெரியதாய் இருந்தன. அவள் இடையோ சிறுத்து இருந்தது.

பாடல்

கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, அருங் கலச் சும்மை தாங்க, 'அகல் அல்குல் அன்றி, சற்றே 
மருங்குலும் உண்டு உண்டு' என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள்.

பொருள்


கருங் குழல் = கரிய  குழல்

கற்றைப் = அடர்த்தியான

பாரம் = பாரம் கொண்ட

கால் தொட = காலைத் தொட (அவ்வளவு நீளம்)

கமலப் பூவால் = சிவந்த கைகளால்

குரும்பையைப் = தேங்காய் முளை விடும் போது உள்ள நிலைக்கு குரும்பு என்று பெயர்

புடைக்கின்றாள்போல் = அடிப்பதைப் போல

கைகளால் முலைமேல் கொட்டி = கைகளால் முலையின் மேல் அடித்து

 அருங் கலச் சும்மை தாங்க = அருமையான அணிகலன்களைத் தாங்க 

 'அகல் அல்குல் அன்றி = அகன்ற அல்குல் மட்டும் அல்ல ,

சற்றே  மருங்குலும் உண்டு உண்டு' என்ன = சிறிய இடையும் உண்டு

மயன் மகள்  = மயனின் மகள்

மறுகி வந்தாள் = மனம் கலங்கி வந்தாள்


இறந்து கிடக்கும் மகனைக் காண கதறிக் கொண்டு வரும் ஒரு தாயை வர்ணிக்கும்  இடமா இது ? கம்பன் இப்படிச் செய்யலாமா ?

அவலச் சுவை இருக்க வேண்டிய இடத்தில் சிருங்காரச் சுவை வரலாமா ? 

இது பிழை இல்லையா ?

என்ன காரணம் என்று அடுத்த ப்ளாகில் சிந்திப்போம் 


நன்னெறி - அழும் கண்

நன்னெறி - அழும் கண் 


உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.

வள்ளுவர் சொன்ன மாதிரி,

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை

பாடல்

பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

பொருள்

பெரியவர் = கற்றறிந்த பெரியவர்கள்

தம்நோய் போல் = தனக்கு வந்த நோய் போல

பிறர் நோய் = பிறரின் நோயை

கண்டு உள்ளம் =  கண்டு உள்ளம்

எரியின் இழுது ஆவர் என்க = நெருப்பில் இட்ட வெண்ணை போல உருகுவர்.

 தெரி இழாய் = தேர்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

மண்டு பிணியால் =  அதிகாமான நோயால்

வருந்தும் பிற உறுப்பைக் = வருந்தும் மற்ற உறுப்புகளை

கண்டு = கண்டு

கலுழுமே கண் = கலங்கும் கண்




Saturday, December 14, 2013

வில்லி பாரதம் - விஸ்வரூபம்

வில்லி பாரதம் - விஸ்வரூபம் 


கர்ணன் தன்னுடைய எல்லா புண்ணியங்களையும் தாரை வார்த்து கொடுத்த பின், கர்ணனுக்கு கண்ணன் விஸ்வ ரூப தரிசனம் தருகிறான்.

அந்த இடத்தில் சில அற்புதமான பாடல்கள்.

கர்ணன் வணங்கியவுடன் அவன் கண்கள் களிக்கும்படி, நீர் கொண்ட கரிய மேகம் வெட்கிப் போகும்படி கரிய நிறம் கொண்ட அவன் ஐந்து ஆயுதங்களை கைகளில் ஏந்தி, அன்று முதலை வாய் பட்ட கஜேந்திரன் என்ற யானைக்கு எப்படி காட்சி கொடுத்தானோ, அப்படியே தொண்டிர்நான் தோற்றமும் முடிவும் இல்லாத அவன்

பாடல்

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

பொருள்

போற்றிய = வணங்கிய

கன்னன் = கர்ணன். இரண்டு சுளி ன் போட்டால் அது கர்ணனைக்  குறிக்கும்.மூன்று சுளி ண் என்றால் அது கிருஷ்ணனை குறிக்கும்

கண்டு = கண்டு

கண் களிப்பப் = கண்கள் மகிழும் படி

புணரி = கடலில்

மொண்டெழுந்த = மொண்டு எழுந்த = முகர்ந்து எழுந்த

 கார்  முகிலை = கரிய மேகத்தை

மாற்றிய = விஞ்சிய

வடிவும் = அழகும்

பஞ்சவாயுதமும் = பஞ்ச + ஆயுதமும்

வயங்கு கைத் தலங்களுமாகிக் = விளங்குகின்ற கைத் தளங்களும் ஆகி

கூற்றுறழ்கராவின் = கூற்று + உழல் + கராவின் = கூற்றுவனை போல வந்த முதலையின்

வாயினின்றழைத்த = வாயினால் அழைத்த

 குஞ்சரராசன் = யானைகளின் அரசன் (கஜேந்திரன் )

முனன்று = முன் அன்று

தோற்றிய படியே தோற்றினான் = அன்று தோன்றியபடியே தோன்றினான்

முடிவுந் தோற்றமு மிலாத = முடிவும் தோற்றமும் இல்லாத

பைந்துளவோன் = துளசி மாலையை அணிந்தவன்

யானை அழைத்த போது வந்தவன் என்றால் என்ன அர்த்தம் ? அதில் என்ன சிறப்பு ?

இறைவன் என்பவனே மனிதர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு.

மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றும் முன், மனித மொழிகள் தோன்றும் முன், விலங்குகள் மட்டுமே இந்த பூமியில் அலைந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு யானை துன்பத்தில் அலறியபோது அதை காத்தவன் என்றால் இறைவன் மனித கற்பனையில் உதித்தவன் அல்ல என்பது கருத்து.

மனிதர்கள் தோன்றும் முன்பே இறைவன் இருந்தான், அவன் உயிர்களின் துயர் துடைத்தான் என்பது கதையின் பொருள்.



Wednesday, December 11, 2013

வில்லி பாரதம் - செய் புண்ணியம்

வில்லி பாரதம் - செய் புண்ணியம் 


போரில் அர்ஜுனனின் அம்பால் தாக்கப்பட்டு அயர்ந்து கிடக்கிறான் கர்ணன். அப்போது வேதியர் உருவில் வந்த கண்ணன் , "நீ செய்த புண்ணியம் அனைத்தையும் எனக்கு தானமாகத் தா " என்று கேட்டான்.

கர்ணனும் மகிழ்ந்து கொடுக்கிறான்.

"வேதியரே, என் உயிர் தன் நிலையில் இருந்து கலங்கி நிற்கிறது. அது என் உடலின் உள்ளே இருகிறதா , வெளியே இருகிறதா என்று தெரியவில்லை. நான் வேண்டுவோருக்கு வேண்டிய பொருளை கொடுக்கும் காலத்தில் நீர் வரவில்லை. நான் இது வரை செய்த புண்ணியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உமக்குத் தானமாகத் தருகிறேன். நீ அந்த பிரமனை போன்ற உயர்ந்தவன்..உமக்கு இதை தருவதை விட வேறு புண்ணியம் எதுவும் இல்லை "

பாடல்

ஆவியோநிலையிற்கலங்கியதியாக்கையகத்ததோபுறத்துதோ
                                      வறியேன்,
பாவியேன்வேண்டும்பொருளெலாயக்கும்பக்குவந்தன்னில்வந்
                                    திலையால்.
ஓவிலாதியான்செய்புண்ணியமனைத்துமுதவினேன்கொள்க
                                    நீயுனக்குப்.
பூவில்வாழயனுநிகரலனென்றாற்புண்ணியமிதனினும்
                                     பெரிதோ.


சீர் பிரித்த பின்


ஆவியோ நிலையில் கலங்கியது அது ஆக்கையின் அகத்தோ புறத்ததோ அறியேன் 

பாவியேன் வேண்டும் பொருள் எல்லாம் பயக்கும் பக்குவம் தன்னில் வந்தில்லையால் 

ஒவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு 

பூவில் வாழும் அயனும் நிகரில்லை என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  


பொருள்

ஆவியோ = என் உயிரோ

நிலையில் கலங்கியது = தான் இருக்கும் நிலையில் கலங்கியது

அது = அது, அந்த உயிர்

ஆக்கையின் = உடலின்

அகத்தோ = உள்ளேயோ

புறத்ததோ =வெளியேயோ

அறியேன் = அறியேன்.

வாலி இருந்து கிடக்கிறான். தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை 
தத்துறும் உயிரென புலன்கள் தள்ளுரும் 
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை  
எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ 

மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் வந்து வந்து செல்வது போல உயிர் என் உடலுக்குள் வந்து வந்து வெளியே போகிறது என்றாள் .



பாவியேன் = பாவியாகிய  நான்

வேண்டும் பொருள் = யார் என்ன பொருள் வேண்டினாலும்

எல்லாம் பயக்கும் = அவற்றை தரும்

பக்குவம் = நிலையில் இருந்த

 தன்னில் வந்தில்லையால் = அந்த நாட்களில் நீ வர வில்லை. 

ஒவிலாது = முடிவில்லாது, கொஞ்சம் கூட மிச்சமில்லாமல்

யான் = நான்

செய் புண்ணியம் = செய் புண்ணியம். செய் புண்ணியம் என்பது வினைத் தொகை. செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யப் போகும் புண்ணியம். கர்ணனை சாக விடாமல் அவன் செய்த புண்ணியங்கள் அவனை காத்து வந்தன. தர்மம்  தலை காக்கும் என்பார் போல. அப்படி அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாகத் தந்து விட்டால், அப்படி தானம் தந்ததும் ஒரு புண்ணியம்  தானே,அது ஏன் அவனை காக்கவில்லை என்று ஒரு கேள்வி எழும் அல்லவா.  வில்லிபுத்துரார் தமிழ் விளையாடுகிறது . செய் புண்ணியம் என்ற ஒரு   வார்த்தையை போடுகிறார். 

அனைத்தும் உதவினேன் = எல்லாவற்றையும் தந்து விட்டேன். தனக்கென்று கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு மீதியை தரவில்லை. எல்லாவற்றையும் கொடுத்து விட்டான்.

கொள்க நீ = நீ ஏற்றுக் கொள்

உனக்கு பூவில் வாழும் அயனும் நிகரில்லை  = பூவில் வாழும் அந்த பிரமனும் உனக்கு நிகர் இல்லை.

என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  = உனக்கு தானம் தருவதை விட பெரிய புண்ணியம் இல்லை.


தன்னிடம், தான் செய்த அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்ற வேதியன் மேல் அவனுக்கு  கோபம் இல்லை. வேதியனை அவன் தாழ்வாக  நினைக்க வில்லை.

"நீ பிரமனை விட உயர்ந்தவன் " என்று அவனை புகழ்கிறான்.

பிறர்க்கு உதவும் அந்த குணம்...அதில் ஒரு சிறு துளியாவது நமக்குள் வரட்டும்.




Tuesday, December 10, 2013

திருக்குறள் - வினையும் மனமும்

திருக்குறள் - வினையும் மனமும் 


அவன் நல்ல பள்ளிக் கூடத்தில் படித்தான், அதனால் நிறைய மார்க்கு வாங்கினான்.

அவனுக்கு நல்ல வாத்தியார்  கிடைத்தார்,எனக்கும் அந்த மாதிரி கிடைத்தால், நானும் தான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்.

அவனுக்கு நல்ல பெண்டாட்டி கிடைத்தாள் , எனக்கும் ஒண்ணு வந்து வாய்த்ததே....

அவனுக்கு அவங்க அப்பா நாலு காசு சேர்த்து வச்சிட்டு போனாரு, அவன் அதை வச்சு முன்னுக்கு வந்துட்டான்... எங்க அப்பா எனக்கு என்னத்த வச்சிட்டு போனாரு...

இப்படி தான் வாழ்வில் முன்னேறாததற்கு எதை எல்லாமோ காரணம் சொல்லுவார்கள்.

மனிதனின் வெற்றிக்கு முதல் காரணம் அவனின்  உறுதியான மனமே...

எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற உறுதியான மனமே வெற்றிக்குக் காரணம்.

அப்பா, அம்மா, சொத்து, பள்ளிக் கூடம், வாத்தியார், மனைவி, அதிர்ஷ்டம் என்று  இவைஎல்லாம் அதற்க்குப் பின்னால் தான்.

இவையும் தேவை தான். ஆனால், மன உறுதி இல்லா விட்டால், இவை இருந்தும் பயன் இல்லை. மன உறுதி இருந்து விட்டால் , இவை இல்லாவிட்டாலும் மேலே வந்து விடலாம்.


பாடல்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்


வினைத்திட்பம்  என்ப = வினையை செய்து முடிக்கும் திண்மை என்பது

ஒருவன் = ஒருவனின்

மனத்திட்பம் = மன உறுதியை பொறுத்து அமைவது

மற்றைய எல்லாம் பிற = மற்ற விஷயங்கள் எல்லாம் , அதற்க்கு அடுத்தது தான்.

பிற என்றால் "secondary " என்று கொள்ளலாம்.

காரியத்தை செய்து முடிக்க முதலில் வேண்டியது - மன உறுதி.

மனதில் உறுதி வேண்டும் என்றான் பாரதி.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்பதும் அவன் வாக்கே.