Monday, March 17, 2014

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம்

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம் 


யுத்த காண்டம்.

மாலையில் இராமன் கடற் கரையில் தனிமையில் இருக்கிறான்.

யுத்தம் வரப் போகிறது. எப்படி சண்டை இட வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய இடம்.

இராமனை சீதையின் நினைவு வாட்டுகிறது.

அவளைப் பற்றி நினைக்கிறான்.   அவன் உடல் சோர்வு அடைகிறது. காமத்தில் மெலிகிரான் .

அவன் மார்பும் தோளும் எவ்வளவு வலிமை மிக்கவை ? மேரு மலையை மத்தாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மேரு மலை சாய்ந்தது. அதை பிடித்து நிறுத்த யாராலும் முடியவில்லை. அவர்களுக்கு வாலி உதவினான். அப்படிப்பட்ட பலம் கொண்ட வாலியின் நெஞ்சை ஒரே அம்பால் துளைத்த வலிமை கொண்டவன் இராமன்.

அது மட்டுமா ?

கரன் என்ற அரக்கனின் உயிரை கொண்டவன்.

அது மட்டுமா ?

ஏழு மரா மரங்களை ஒரே அம்பால் துளைத்த தோள் வலி கொண்டவன் இராமன்.

அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இராமனின் மார்பை மன்மதனின் அம்பு துளைத்தது.

அது மட்டும் அல்ல,

நிலவின் ஒளி என்ற வாளும் அவன் நெஞ்சில் பாய்ந்தது.

பாடல்

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய 
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன் 
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 

பொருள்

கரத்தொடும் = கையினால்

பாழி = வலிமையான, பெரிய

மாக் கடல் = பெரிய கடல்

கடைந்துளான் = கடைந்தவன் (வாலி)

உரத்தொடும் = அவன் வலிமையையும்

கரனொடும் = கரன் என்ற அரக்கனின் உயிரையும்

உயர ஓங்கிய = நீண்டு உயர்ந்து வளர்ந்த

மரத்தொடும் = மரா மரங்களையும்

தொளைத்தவன் மார்பில் = துளைத்தவன் மார்பில்

மன்மதன் = மன்மதன்

சரத்தொடும் = மலர் அம்புகளோடு

பாய்ந்தது = பாய்ந்தது

நிலவின் = நிலாவின்

தாரை வாள் = ஒளி என்ற வாள்

ஆணை செலுத்துவதும், அவனை சோர்வடையச் செய்வதும் - பெண் தான்.

எவ்வளவு பெரிய வலிமையான ஆளாக இருந்தாலும் (இராமன் உட்பட) பெண் மேல் கொண்ட  அன்பு / காதல் / காமம் ஆணை மென்மையாக்குகிறது.


பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத

 பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத 


அழுவது ஒரு அழகா ?

அழகுதான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

திரு ஞான சம்பந்த நாயனாரை அறிமுகப் படுத்தும் முதல் பாடல்.

ஞான சம்பந்தர் என்ற குழந்தை அழுததாம்.

எதற்கு அழுதது ?

பசித்து பாலுக்கு அழவில்லை....பின் எதற்கு அழுதது ?

வேத நெறி தழைத்து ஓங்கவும்,
சைவத் துறை விளங்கவும்,
பூதப் பரமபரை பொலியவும்

ஞான சம்பந்தர் என்ற குழந்தை வாய் மலர்ந்து அழுதது.

பாடல்

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 

பொருள்

வேத நெறி = வேதங்களில் சொல்லப் பட்ட நெறிகள்

தழைத்து ஓங்க = தழைத்து ஓங்க

மிகு = மிகுந்த

சைவத் துறை விளங்கப் = சைவத் துறை விளங்க

பூத பரம்பரை = பூதப் பரம்பரை என்றால் இந்த அனைத்து உயிர்களும்

பொலியப் = சிறப்புடன் வாழ

புனித வாய் = புனிதம் நிறைந்த வாய்

மலர்ந்து அழுத = மலர்ந்து அழுத

சீத = குளிர்ந்த

வள = வளமையுள்ள

வயல்= வயல்கள்

புகலித் = சீர்காழி என்ற ஊரில்

திருஞான சம்பந்தர் = திருஞான சம்பந்தர்

பாத மலர் = பாதம் என்ற மலரை

தலைக் கொண்டு = தலையில் சூடிக் கொண்டு

திருத் தொண்டு பரவுவாம் = உயர்ந்த தொண்டை பரப்புவோம்

 
வேத நெறி தழைத்து ஓங்க .....மனிதன் பொல்லாதவன். நல்லது எதைத் தந்தாலும்  அதை குழப்பி, தானும் குழம்பி, அதை தன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்  கொள்வான். இதனால், மற்றவர்கள் எது சரி எது தவறு என்று குழம்புவார்கள்.  குரங்கு கை பூமாலை போல, எதை தந்தாலும் தன் குற்றங்களை அதில்  ஏற்றி, தன் சாமர்த்தியத்தை காட்டுகிறேன் என்று பாலில் நஞ்சைக் கலக்கும்  வேலையில் அவன் தேர்ந்தவன். இதனால் , உயர்ந்த  கோட்பாடுகளில்  களைகள் சேர்ந்து விடுகின்றன. உண்மை எது பொய் எது என்று தெரியாத குழப்பம்  வருகிறது. களைகளை நீக்கி , வேத நெறிகள் தழைத்து ஓங்கவும். 



சைவத் துறை விளங்கவும்: சமயம் என்ற ஆறு இறைவன் என்ற கடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆற்றில் பல கிளைகள். ஒவ்வொரு  கிளைக்கும் பல துறைகள்  உள்ளன.அதில் சைவத் துறை விளங்க அவர்  மலர் வாய் திறந்து அழுதார். 

பூதப் பரம்பரை பொலிய : சைவத் துறை என்றால் அது சைவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் அது பொது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிர்களுக்கும்  பொது அது. எனவே பூதப் பரம்பரை பொலிய என்றார். எல்லா உயிர்களும்  சிறந்து வாழ வேண்டும் என்ற அளவற்ற கருணை. 

புனித வாய்: பார்வதியிடம் ஞானப் பால் உண்பதற்கு முன்பே அது புனித வாய் என்றார். விட்ட குறை தொட்ட குறை என முன் பிறப்பில் கொண்ட இறை உணர்வு  கொண்டு  பிறந்தார்.

Saturday, March 15, 2014

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி


இராமனும் சீதையும் வனத்தில் நடந்து செல்கிறார்கள். இராமன் இயற்கை காட்சிகளை சீதைக்கு காட்டிக் கொண்டே வருகிறான்.

"பெரிய யானைகளை அப்படியே விழுங்கும் மலைப் பாம்புகள், முனிவர்கள் மலையில் ஏறுவதற்கு எளிதாக படிகட்டுகள் போல வளைந்து வளைந்து கிடப்பதை பார் " என்று சீதைக்கு காட்டுகிறான்.

பாடல்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்! 

பொருள்

இடி கொள் = இடியை விழுங்கியதைப் போல் சப்தம் எழுப்பும்

வேழத்தை = யானைகளை 

எயிற்றொடும் =  எயிறு என்றால் பல். இங்கு தந்தம்.

எடுத்து = எடுத்து

 உடன் விழுங்கும் = அப்படியே விழுங்கும்

கடிய மாசுணம் = வலிமை மிக்க மலைப் பாம்புகள்

கற்று அறிந்தவர் = கற்று அறிந்தவர்கள்

என அடங்கிச் = போல அடங்கி

சடை கொள் சென்னியர் = சடை கொண்ட முனிவர்கள்

தாழ்வு இலர் = தாழ்வு இல்லாதாவர்கள்

தாம் மிதித்து ஏறப் = அவர்கள் மிதித்து ஏற

படிகளாம் = படிகளாக

எனத் தாழ்வரை = என தாழ்ந்து

கிடப்பன-பாராய் = கிடப்பதைப் பார்

கற்று - அறிந்தவர் என்று இரண்டு வார்த்தைகளை கம்பன் போடுகிறான்.

கல்வி வேறு , அறிவு வேறு.

கல்வி கற்று, பின் அறிவு பெற்றவர்கள் அடங்கி இருப்பார்கள்.

அடக்கம் இல்லாதவர்களைப் பார்த்தால், ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்  கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று.

அடக்கம் அறிவின் இலட்சணம்.

இரண்டாவது, அறிவு தவத்திற்கு ஒரு படி கீழே.

தவம், அறிவைத் தாண்டி மேலே போகிறது.

முதலில் கல்வி, பின் அறிவு, அதையும் தாண்டி தவம்.


திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?

திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?


நமக்கு வரும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், எதைச் செய்வது, எதை செய்யக் கூடாது என்று அறியாமல் குழம்புவதுதான்.

இந்த வேலையில் சேரலாமா வேண்டாமா ? இந்த course ஐ எடுக்கலாமா வேண்டாமா ? உடற் பயிற்சி மையத்தில் சேரலாமா வேண்டாமா ?

சரி எப்படியோ, பல பேரிடம் கேட்டு மண்டையை உடைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், எடுத்த முடிவை எப்படி செயல் படுத்துவது.

ஒரு மாதிரி மண்டையைக் குழப்பி ஒரு வேலையில் சேர்ந்து விட்டோம், அல்லது ஒரு course இல் சேர்ந்து விட்டோம், அடுத்து என்ன செய்வது ?

இத்தனை சிக்கலான கேள்விக்கு இரண்டே வரிகளில்  தருகிறார் வள்ளுவர்.....

முதலில் பாடலைப் பார்ப்போம்.


என்று மொருவுதல் வேண்டும் புகழொடு  
நன்றி பயவா வினை


சீர் பிரித்த பின்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழோடு நன்றி தரதா செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

அர்த்தம் என்னவோ அவ்வளவுதான். ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள் .

எந்த வேலையை செய்தாலும் பயனும் வர வேண்டும், புகழும் வர வேண்டும் . அப்படி பட்ட  வேலையைதத் தான் செய்ய வேண்டும். அப்படி புகழும் பயனும் தராத  வேலையைச் செய்யக் கூடாது.

அது என்ன பயன், புகழ் ?

எந்த வேலையை செய்தாலும், நமக்கு அதில் ஒரு பலன் கிடைக்கும்.

படித்து , பரீட்சை எழுதினால் அதற்கு தகுந்த மதிப்பெண் வரும்.

புகழ் வர வேண்டும் என்றால்  என்ன செய்ய வேண்டும் ?

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும்,  அகில இந்திய அளவில் முதலாவதாக வர வேண்டும்....

அதற்கு என்ன செய்ய வேண்டும்  ? அதிகமாக உழைக்க வேண்டும்.

கொஞ்சமாக உழைத்தால் பயன் கிடைக்கும்.

மிக மிகக்  கடினமாக உழைத்தால் புகழ் கிடைக்கும்.

அப்படி புகழும் பயனும் கிடைக்காத செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

எதையும் மிக மிக சிறப்பாக செய்து பழக வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், புகழ் பெற என்ன செய்ய வேண்டும் என்று.



நாலடியார் - ஊடலும் உப்பும்

நாலடியார் - ஊடலும் உப்பும் 


ஊடல் என்பது உப்பு போல.

அது இல்லாவிட்டால் உணவு சுவைக்காது.

சரி, அதுதானே உணவுக்கு சுவை சேர்க்கிறது என்று நினைத்து, சற்று அதிகமாக உணவில் உப்பை சேர்த்தால், உணவை வாயில் வைக்க முடியாது.

மிக மிக எச்சரிக்கையோடு உப்பை சேர்க்க வேண்டும்.

விலை மலிவு தான் என்று அள்ளிப் போடக் கூடாது.

ஊடல் கொள்வது எளிதுதானே என்று எப்ப பார்த்தாலும் துணைவன் அல்லது துணைவியோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

சமைப்பவர்களுக்குத் தெரியும், உணவில் உப்பு சற்று கூடி விட்டால் அதை சரி செய்வது எவ்வளவு கடினம் என்று. என்ன தான் சரி செய்தாலும் உணவில் நல்ல சுவை வராது. ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருக்கும்.

ஊடலும் அப்படித்தான். சற்று கூடி விட்டால் வாழ்க்கை நெருடத் தொடங்கிவிடும்.

எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சுவையின் அளவைப் பொருத்தது. சிலருக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும். சிலருக்கு கொஞ்சம் குறைய வேண்டும். சுவை அறிந்து உப்பை சேர்க்க வேண்டும்.

எனவே தான், இலையின் ஓரத்தில் உப்பை வைத்து விடுவார்கள். யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளட்டும் என்று.

ஊடலும் அது போலத்தான். சுவை அறிந்து சேர்க்க வேண்டும்.

"அவளை கண்டு , அவளை அணைக்கா விட்டால் அவள் வாடிப் போவாள். கண்ட பின், கொஞ்சம் ஊடல் கொள்வாள். அந்த ஊடல் காதலில் உப்பு போல. ஊடல், காதலில் ஒரு வழி"

பாடல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

பொருள்

முயங்காக்காற் = அவளை கண்டு அணைக்கா விட்டால் 

பாயும் = உடனே பாய்ந்து வரும் 

பசலை = பிரிவு துயரில், பெண்ணின் உடல் நிறம் மாறும் என்கிறார்கள். நிறம் மாறுமோ இல்லையோ, கொஞ்சம் வாடிப் போகும் என்று கொள்ளலாம்.

மற் றூடி = மற்று ஓடி = மற்ற படி ஊடல் கொண்டு

உயங்காக் கால் = உயங்குதல் என்றால் வாடுதல், மெலிதல், சோர்தல் என்று பொருள். ஊடல் கொண்டு வாடாவிட்டால் 

உப்பின்றாம் காமம் = காமம் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்


வயங்கு = வயங்குதல் என்றால் ஒளி வீதல். சிறந்து இருத்தல் 

கோதம் = ஓதம் = ஓதம் என்றால் கடலின் நீர் பெருக்கம். சில சமயம் கடல் நீர் பொங்கி ஆற்றில் உள் நோக்கி வரும். அந்த மாதிரி இடங்களுக்கு  ஓதம் பொங்கும் முகம் என்று பெயர்.  (Backwaters )

நில்லாத் =  நில்லாமல்

திரையலைக்கும் = திரை என்றால் அலை. அலை அடித்துக் கொண்டே இருக்கும்

நீள்கழித் = நீண்ட ஆற்றின் கரை

தண் = குளிர்ச்சி உடைய

சேர்ப்ப! = தலைவா

புல்லாப் = புல்லுதல் என்றால் அணுகுதல், அணைத்தல் 

புலப்பதோர் = புலத்தல் என்றால் ஊடுதல்

ஆறு = வழி

ஊடலும் கூட கூடலுக்கு ஒரு வழிதான் என்கிறது நாலடியார்.





 

Tuesday, March 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே

நீத்தல் விண்ணப்பம் - களையாய் களை ஆய குதுகுதுப்பே


நமக்கு ஏதாவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று நிகழ்ந்து விட்டால் நமக்கு தலை கால் புரியாது அல்லவா ? லாட்டரியில் ஒரு கோடி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்...எப்படி இருக்கும் நம் நிலை.

இறைவன் திருவருள் கிடைத்து விட்டாலோ ?

உன் கருணை என்ற தேனைப் பருகி தலை கால் தெரியாமல் களிப்பு கொண்டு கண்டதையும் செய்து  அலைகிறேன்.  நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் பித்து பிடித்து அலைகிறேன். அதுக்காக என்னை கை விட்டு விடாதே. முன்பு எனக்கு உன் திருவடிகளை தந்து அருள் செய்தது போல மீண்டும் உனக்கு பணி செய்ய என்னை கூவி அழைத்துக் கொள். சும்மா கூப்பிட்டால் எனக்கு காது கேக்காது. கூவி, சத்தம் போட்டு கூப்பிடு. அது மட்டும் அல்ல, அருள் பயிருக்கு நடுவே வளர்ந்துள்ள உலக இன்பம் என்ற களையை நீக்கி விடு என்று வேண்டுகிறார் மணிவாசகர்.

பாடல்

கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.


பொருள் 

கண்டது செய்து = கண்டதையும் செய்து.

கருணை மட்டுப் பருகிக் = மட்டு என்றால் தேன். கருணை என்ற தேனைப் பருகி

களித்து = இன்புற்று

மிண்டுகின்றேனை  = இன்பத்தில் தத்தளிக்கும் என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 நின் = உன்

விரை  = மணம் பொருந்திய

மலர்த் தாள் = மலராகிய திருவடி

பண்டு தந்தால் போல் = முன்பு தந்தது போல

பணித்து = என்னை பணி கொள்ளுமாறு செய்தது போல

பணிசெயக் கூவித்து = மீண்டும் என்னை பணி செய்யுமாறு கூவி அழைத்து

என்னைக் கொண்டு = என்னை கொண்டு (பணி செய்வித்து )

என் எந்தாய் = என் தந்தையே

களையாய் = களைந்து விடு

களை ஆய = களை ஆன

குதுகுதுப்பே = சிற்றின்பங்களையே



Monday, March 10, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை

நீத்தல் விண்ணப்பம் - ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை


ஒரு பெரிய கரிய யானை உங்களை நோக்கி வேகமாக வருகிறது. உங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும் ?

என்ன செய்யுமோ ? ஏது செய்யுமோ என்று  பயத்தில் வெல வெலத்துப்  போவீர்கள் தானே ?

ஒன்று அல்ல ஐந்து மதம் கொண்ட யானைகள் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும் ?

ஐந்து புலன்களும் ஐந்து யானைகள் போன்றவை.   அவற்றிற்கு கட்டாயம் பயப்பட வேண்டும். நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டவை அவை.

யாரால் அதை தடுத்து நிறுத்தி, அவற்றை  அடக்கி, அந்த யானைகளிடம் இருந்து வேலை வாங்க முடியும் ?

அப்படி செய்யும் தகுதி கொண்டவன் மிகப் பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

ஆலகால விஷத்தையே அமுதமாக்கியவனுக்கு, இந்த யானைகளிடம் இருந்து நம்மை காத்து அவற்றை நமக்கு அடிமை கொள்ளச் செய்வது ஒண்ணும் பெரிய காரியம்  இல்லை.

பாடல்


அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

பொருள் 

அடல் =  வலிமையான  (அடலருணை திருக் கோபுரத்தே அந்த வாசலுக்கு - கந்தர் அலங்காரம் )

கரி போல் = யானையைப் போல  இருக்கும்

ஐம் புலன்களுக்கு = ஐந்து புலன்களுக்கு

அஞ்சி = அஞ்சி

அழிந்த என்னை = அழிந்த என்னை

விடற்கு அரியாய் =  விட  முடியாதவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே

விழுத் = பெருமை மிகுந்த

தொண்டர்க்கு அல்லால் = தொண்டர்கள் அல்லாதவர்களுக்கு

தொடற்கு அரியாய் = தொட முடியாதவனே

சுடர் மா மணியே = ஒளி  வீசும் மணி போன்றவனே

சுடு தீச் சுழல = சுழன்று எழும் தீ சுழல

கடல் கரிது ஆய் = கடலில் இருந்து

 எழு நஞ்சு  = எழுந்த நஞ்சை

அமுது ஆக்கும் = அமுது ஆக்கும்

கறைக்கண்டனே = கழுத்தில் கறை உள்ளவனே

விஷத்தை அமுது ஆக்கியவனுக்கு இது எல்லாம் ஜுஜுபி....