Monday, April 21, 2014

இராமாயணம் - இராமன்தன் யாவருக்கும் இறைவன்

இராமாயணம் - இராமன்தன் யாவருக்கும் இறைவன்


இராவணனன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

பிரமனும், சிவனும் கொடுத்த வரங்கள் எல்லாம் உன் பத்துத் தலையோடு பொடியாக உதிர்ந்து போய் விட்டன. இராமன் தான் எல்லோருக்கும் கடவுள் என்று சீதையை தூக்கி வந்த அன்று நீ உணரவில்லை. இன்று வைகுந்தம் போகும் போதாவது உணர்வாயா ?

என்று புலம்புகிறான்.

பாடல்

'மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் யாவருக்கும் இறைவன் ஆதல்? 

பொருள்


'மன்றல் = மணம் பொருந்திய

மா மலரானும் = பெரிய தாமரை மலரில் வாழும் பிரம தேவனும்

வடி = வடிவான

மழு = மழுவும்

வாள் படையானும் = வாளை படையாகக் கொண்ட சிவனும் 

வரங்கள் ஈந்த = வரங்கள் தந்த போது

ஒன்று அலாதன = ஒன்று அல்லாமல் (பத்துத் தலை)

உடைய முடியோடும் = உடைய தலைகளோடும்

 பொடி ஆகி உதிர்ந்து போன = பொடிப் பொடியாக உதிர்ந்து போய் விட்டன 

அன்றுதான் = அன்று (சீதையை தூக்கி வந்த அன்று )

உணர்ந்திலையே ஆனாலும் = உணரவில்லை என்றாலும்

அவன் நாட்டை  = அவனுடைய நாட்டை (இராமனின் நாடு, வைகுண்டம்)

அணுகா நின்ற = அணுகி நின்ற

இன்றுதான் உணர்ந்தனையே = இன்று உணர்ந்திருப்பாய்

இராமன்தன் = இராமன் தான்

யாவருக்கும் இறைவன் ஆதல் = எல்லோருக்கும் இறைவன் ஆவதை



Tuesday, April 15, 2014

பழமொழி - எப்படி படிக்க வேண்டும்

 பழமொழி - எப்படி படிக்க வேண்டும் 


எப்படி நாம் பல விஷயங்களை அறிந்து கொள்வது ?

புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாம். அது ஒரு வழி. அதை விட சிறந்த வழி, அப்படி புத்தகங்களைப் படித்து அறிந்து, தங்கள் அனுபவமும் கூடச் சேர்த்த அறிஞர்களை கண்டு அவர்கள் பேசுவதை கேட்டு அறிவது.

கற்றலை விட கேட்பது சிறந்தது.

வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தருவதை கவனமாக கேட்டாலே போதும், பலமுறை படிப்பதை விட அது சிறந்தது.

அது மட்டும் அல்ல,

நாம் வாசித்து அறியும் அறிவு மிக மிக சொற்பமாக இருக்கும். நாம் படித்தது மட்டும் தான் உலகம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் மொத்தம் ஒரு பத்து பதினைந்து புத்தகங்களை வாசித்து விட்டு, எல்லாம் அறிந்தவர் போல் பேசுவார்கள்.  தாங்கள் அறிந்தது மட்டும்தான் அறிவு. அதைத் தாண்டி வேறு இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.

கற்றறிந்த பெரியவர்கள் பேசுவதைக் கேட்கும் போது அறிவின் வீச்சு புரியும்.  நாம்  அறிந்தது  ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். அகந்தை அழியும். பேச்சு குறையும். மேலும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளை, தான் இருக்கும் கிணற்றைத் தவிர உலகில் வேறு தண்ணீர் கிடையாது என்று நினைப்பது போல நாம் படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு அறிவின் அகலம், கல்வியின் கரை இதுதான் என்று நினைக்கக் கூடாது.

அறிஞர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.


பாடல்


உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.


பொருள் 

உணற்(கு) = பருகுவதற்கு

இனிய இன்னீர் = இனிமையான நல்ல நீர்

பிறி(து)உழிஇல் = உலகில் வேறு எங்கும் இல்லை

என்னும் = என்று சொல்லும்

கிணற்(று)  அகத்துத் = கிணற்றின் உள்ளே உள்ள

தேரை போல் = தவளை போல

ஆகார் = ஆக மாட்டார்கள்

கணக்கினை = அற நூல்களை

முற்றப்  = முழுவதும்

பகலும்  = நாள் முழுவதும்

முனியா(து) = சிரமம் பார்க்காமல்

இனிதோதிக் = இன்பத்துடன் கற்று

கற்றலிற் கேட்டலே நன்று = கற்பதை விட கேட்பதே நல்லது

படிப்பு ஒரு இனிமைதான். அதை விட கேட்பது மிக இனிது.

யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

கல்வி என்பது வெளியே இருந்து உள்ளே போவது.

அறிவு என்பது உள்ளே இருந்து வெளியே வருவது.

சில பேர் பிறவியிலேயே அறிவை கொண்டு வருவார்கள். அவர்கள் படிக்க படிக்க உள்ளிருந்து ஞானம் வெளியே வரும்.

அதை கேளுங்கள்.



Monday, April 14, 2014

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை

சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை   


அனுமன் இலங்கைக்கு கடலைத் தாவிப் போனான் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகலாம் தானே ? அதை விட்டு விட்டு ஏன் இவ்வளவு நீட்டி முழங்க  வேண்டும் ?

அதில் ஏதோ  காரணம் இருக்க வேண்டும் ? ஏதோ செய்தி இருக்க வேண்டும்.

அது என்ன செய்தி என்று நாம் சிந்தித்து அறிய வேண்டும்.

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் சில தடைகள் வரத்தான் செய்யும்.

இராம காரியமாக அனுமன் செல்கிறான். அவனுக்கே தடை வந்தது என்றால் நம் காரியங்கள் எம்  மாத்திரம், அனுமனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மாத்திரம் ?

நமக்குத் தடைகள் வரதா ? வரும்.

ஐயோ தடைகள் வந்து விட்டதே என்று நினைத்து ஓய்து விடக் கூடாது. அவற்றை முறியடித்து எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பது ஒரு செய்தி.

மைநாக மலை கடலின் நடுவே உயர்ந்து எழுந்தது.

எப்படி எழுந்தது தெரியுமா ? ஒரு நொடியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றது.

ஒரு கண்ணாடியின் மேல் உழுந்தை உருட்டி விட்டால் அது எவ்வளவு சீக்கிரம் உருண்டு ஓடுமோ அவ்வளவு நேரத்தில் அது வளர்ந்து நின்றது.

அனுமன் "என்னடா இது " அயர்ந்து நின்றான்.

பாடல்

எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க,
     இலங்கும்ஆடி
உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின் 
     உம்பர்ஓங்கிக்
கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை 
     வியந்துநோக்கி,
அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்'
     எனாஅயிர்த்தான்.

பொருள்

எழுந்து ஓங்கி = எழுந்து ஓங்கி

 விண்ணொடு மண் ஒக்க = விண்ணும் மண்ணும் ஒன்றாகும் படி நின்ற. அதாவது அதை தாண்டி குதித்துப் போக முடியாது. விண் வரை உயர்ந்து நின்றது.

இலங்கும் = ஒளி வீசி பிரகாசிக்கும்

ஆடி = கண்ணாடி

உழுந்து ஓடு காலத்திடை = ( அதன் மேல் ) உழுந்து உருண்டு ஓடும் காலத்தில்

உம்பரின் உம்பர் ஓங்கிக் = மேலும் மேலும் வளர்ந்து

கொழுந்து ஓடிநின்ற = அதன் சிகரங்கள் உயர்ந்து வளர்ந்து நின்ற

கொழுங் குன்றை = அதன்  குன்றங்களை 
   
வியந்துநோக்கி = வியப்புடன் பார்த்து

அழுங்கா மனத்து = புலன் இன்பங்களில் அழுந்தாத மனம் கொண்ட

அண்ணல்  = அனுமன்

'இது என்கொல்' = இது என்ன

எனாஅயிர்த்தான். = என்று அதிசயப்பட்டான்



Saturday, April 12, 2014

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?

அகநானூறு - இதுவோ மற்று நின் செம்மல் ?


பெரிய எரி. பரந்த நீர் பரப்பு.  அதன் மேல் சிலு சிலுவென வீசும் காற்று.

அந்த ஏரியின் கரையில் பெரிய மூங்கில் காடு. அங்குள்ள மூங்கில் மரங்களில் (மூங்கில் ஒரு வகை புல் இனம்) வெள்ளை வெள்ளையாக பூக்கள் பூத்து இருக்கின்றன. அது ஏதோ பஞ்சை எடுத்து ஒட்டி வைத்தது மாதிரி இருக்கிறது.

அந்த மூங்கில்களை ஒட்டி சில பெரிய மரங்கள். அந்த மரங்களில் உள்ள இளம் தளிர்களை காற்று வருடிப் போகிறது.

ஏரியில் உள்ள மீன்களை உண்டு குருகு என்ற பறவை அந்த மர நிழலில் இளைப்பாறுகின்றன. உண்ட மயக்கம் ஒரு  புறம்.தலை வருடும் காற்று மறு பக்கம். சுகமான மர நிழல். அந்த குருகுகள் அப்படியே கண் மூடி உறங்குகின்றன.

ஊருக்குள் கரும்பும் நெல்லும் செழிப்பாக விளைந்திருகின்றன.

அந்த ஊரில் ஒரு விலைமாது, தலைவனைப் பற்றி இகழ்வாகப் பேசிவிட்டு சென்றாள் . அது மட்டும் அல்ல அவனை நோக்கி ஒரு பார்வையை  வீசிவிட்டு,அவன் அணிந்திருந்த மாலையை பறித்துச் சென்றாள் . அவள், தலைவி இருக்கும் வீதி வழியே சென்றாள். இதைத் தலைவி , தலைவனிடம் கூறுகிறாள்.



பெரும்பெயர் மகிழ்ந பேணா தகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
5. ஆர்குரு குறங்கும் நீர்சூழ் 1வளவயற்
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை யொருத்தி
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் 2பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்தெம்
15. மணன்மலி மறுகின் இறந்திசி னோளே.

Thursday, April 10, 2014

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை 



சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லோரும் சுந்தர காண்டம் படித்தால் போதுமே. எல்லா துன்பங்களும் விலகி விடுமே. வேறு ஒன்றும் செய்ய வேண்டாமே !

அப்படி அல்ல.

சுந்தர காண்டம்  படிப்பது,  நாம் முயற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும். (Motivation ).

சும்மா உக்காந்து கொண்டு "ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று உறைந்து போய் விடாமல், முயன்று துன்பங்களைப் போக்க சுந்தர காண்டம் வழி காட்டுகிறது.

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.

சீதையைத் தேடிப்  போகிறான். முன் பின் தெரியாத ஊர். இராவணன் பெரிய அரக்கன். மாயாவி. எங்கே சீதையை மறைத்து வைத்திருப்பான் என்று தெரியாது. அந்த ஊரில் யாரிடமாவாது போய் கேட்க முடியுமா ? தானே கண்டு பிடிக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நடுவில் பெரிய கடல். பெரிய தடை.

தனி ஆளாகப் போகிறான். ஒரு துணையும் கிடையாது. வழி தெரியாது. ஊர் தெரியாது. பயங்கரமான எதிரி.

கிட்டத்தட்ட நம் நிலை மாதிரியே இருக்கிறது  அல்லவா.

கவலையில், துன்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் நிலை இதுதான்.

என்ன செய்ய வேண்டும் தெரியாது. எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஆயிரம் தடைகள் வேறு.

அனுமன் என்ன செய்தான் என்று ஒரு உதாரணம் தருகிறது  இராமாயணம். அதில் இருந்து  நம்பிக்கையும், உற்சாகமும் பெற.

அனுமன் பலசாலி, அறிவாளி...நாம் அப்படி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

அவன் சமாளிக்க வேண்டிய சவால்களும்  அப்படித்தானே.கடலைக் கடக்க வேண்டும். உங்களால முடியுமா ?

அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அவர்களின் சவால்களும் அமைகிறது.

உங்களாலும் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். செயல் படத் தொடங்குங்கள்.

அப்படி செய், இப்படிச் செய் என்று சொன்னால் "வந்துட்டானுக, அறிவுரை சொல்ல " என்று அலுத்துக்  கொள்வோம்.

அனுமன் என்ற  ஒருவன் இப்படிச் செய்தான் என்று கூறுவதன்  மூலம்,நீங்களும்  முயன்றால் வெற்றி பெறலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இராமாயணம்.


அனுமனின் வழியில் மைநாகம் என்ற மலை ஒன்று குறிக்கிடுகிறது. அவனைத் தடுத்து, இங்கு இளைப்பாறி விட்டு போ  என்கிறது.

அது பற்றி அடுத்து வரும் சில தினங்களில் பார்ப்போம்.

முதல் பாடல்


உந்தாமுன் உலைந்து உயர்வேலை
     ஒளித்தகுன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும்
     தீர்வில்அன்பால்
வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு
     மானிடவேடம்ஆகி
எந்தாய்இதுகேள்என இன்ன
     இசைத்ததுஅன்றே.

பொருள்

உந்தாமுன் = உந்தி வருவதற்குள்

உலைந்து  = அச்சம் கொண்டு

உயர் = உயர்ந்த

வேலை = கடலில்

ஒளித்த குன்றம் = ஒளிந்து இருந்த மலை

சிந்தாகுலம் உற்றது = சிந்தனையில் மயக்கம் உற்றது

பின்னரும் = பின்னால்

தீர்வில்அன்பால் = எல்லையற்ற அன்பால்

வந்துஓங்கி = அனுமனின் முன் வந்து ஓங்கி நின்று

ஆண்டு  = அங்கு

ஓர் சிறு = ஒரு சிறிய

மானிடவேடம்ஆகி = மானிட உரு கொண்டு

எந்தாய் = என் தந்தை போன்றவனே

இது கேள் என = இதைக் கேள் என்று

இன்ன இசைத்ததுஅன்றே = சொல்லத் தொடங்கியது

இந்திரனுக்கு பயந்து  கடலில் ஒளிந்து இருந்தது மைநாகம் என்ற அந்த மலை.

என்ன ஆயிற்று என்று மேலும் பார்ப்போம்.


நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்

நீத்தல் விண்ணப்பம் - வலையில் சிக்கிய மானிடம் சிக்கியவன்  


மானின் கண்கள் அழகானவை. பயந்த தன்மையை காட்டுபவை. மருண்ட பார்வை கொண்டவை.

அந்த மான், வலையில் சிக்கிக் கொண்டால், அதன் பார்வை எப்படி இருக்கும் ? மேலும் பயந்து, மேலும் மருட்சியை காட்டும் அல்லவா ?

பெண்களின் கண்கள் அந்த வலையில் அகப்பட்ட மானின் விழியைப் போல இருக்கிறது.

அந்த பார்வை எனும் வலையில் விழுந்தால் அதில் இருந்து வெளியே வர முடியாது.

அப்படிப்பட்ட வலையில் சிக்கிய என்னை கை விட்டு விடாதே - கருணாகரனே, கயிலை மலையின் தலைவா, மலைமகளின் தலைவனே என்று இறைவனை நோக்கி கசிந்து உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை

பாடல்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.


பொருள்

வலைத்தலை = வலையில் அகப்பட்ட

மான் அன்ன = மான் போன்ற

நோக்கியர் = பார்வை உடைய பெண்கள்

நோக்கின் வலையில்= பார்வை வலை (நோக்கின் வலை என்பது நல்ல சொற் பிரயோகம் )

பட்டு = அகப்பட்டு

மிலைத்து அலைந்தேனை  =  மயங்கி அலைந்தேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

 வெள் மதியின் = வெண் மதியின்

ஒற்றைக் கலைத் தலையாய் = பிறையை சூடிய தலைவனே

கருணாகரனே = கருணைக்கு இருப்பிடமாக இருப்பவனே

கயிலாயம் என்னும் மலைத் தலைவா = கைலாயம் என்ற மலைக்குத் தலைவனே

மலையாள் மணவாள = மலை மகளான உமாதேவியின் மணவாளனே

என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு முதலாக இருப்பவனே




Wednesday, April 9, 2014

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள்

பழமொழி - பொருள் கொடுத்து கொள்ளார் இருள் 


இளமையில் படிக்க வேண்டும் என்று சொல்லியாச்சு.

எப்படி படிக்க வேண்டும் என்றும் விளக்கியாகி விட்டது.

எதைப் படிக்க வேண்டும் ? அதைச் சொல்ல வேண்டும் அல்லவா ?

நாம் எதற்காக ஒரு விளக்கை வாங்குவோம்?

அது நல்ல வெளிச்சம்  தரும்.அந்த வெளிச்சத்தில் நாம் மற்ற பொருள்களைத்   தெளிவாக பார்க்கலாம் என்று தானே விளக்கை வாங்குகிறோம்.

இன்றைய நடை முறையில் சொல்வது என்றால், எதற்க்காக பல்பை, டியூப் லைட்டை வாங்குகிறோம் ?

அந்த விளக்கு வெளிச்சம் தராமால், மங்கலாக எரிந்து, அணைந்து அணைந்து எரிந்து கண்ணுக்கு எரிச்சல் ஊட்டும் என்றால் அதை வாங்குவோமா ? அடிக்கடி கெட்டுப் போய் , நமக்கு வேண்டிய நேரத்தில் வெளிச்சம் தராது என்றால் அதை வாங்குவோமா ?

அது போல, வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும், அற நூல்களை, நீதி நூல்களை, பொருள் தேடித் தரும் பயனுள்ள நூல்களை படிக்க வேண்டும். கண்ட குப்பைகளை படிக்கக் கூடாது.

பாடல்

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

பொருள் 

விளக்கு = விளக்கை

விலைகொடுத்துக் = பொருள் கொடுத்து

கோடல் = வாங்குதல்

விளக்குத் = அந்த விளக்கானது

துளக்கம்இன்(று) = குழப்பம் இன்றி

என்றனைத்தும்  = எப்போதும், அனைத்தையும்

தூக்கி விளக்கு = தெளிவாக விளங்கச் செய்யும்  என்று

மருள் படுவதாயின் =  மயக்கம்,குழப்பம் தருவதாக இருந்தால்

 மலைநாட = மலை நாட்டின் அரசனே

என்னை = எதற்கு

பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் = விலை கொடுத்து   யாராவது இருளை வாங்குவார்களா ?

இது படிப்புக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கு பயனில்லாதவற்றை பொருள் கொடுத்து  வாங்குவது மதியீனம்.

சிகரெட், மது, அளவுக்கு அதிகமான உணவு என்று இப்படி எத்தனையோ தேவையில்லாத , பயன்  இல்லாத,துன்பம் தரக் கூடிய பொருள்களை விலை கொடுத்து வாங்கி துன்பப் படுகிறோம்.

சிந்திப்போம்.