Friday, September 30, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 


வீடணன்  படித்தவன்.அறிஞன். ரொம்ப படித்தவர்களுக்கு சரணாகதி என்பது அவ்வளவு எளிது அல்ல. அறிவு  தடுக்கும்.  அறிவு ஆயிரம் கேள்வி கேட்கும். ஆயிரம் சந்தேகம் எழுப்பும்.     எல்லாவற்றையும் விட்டு விட்டு நீயே சரண் என்று போக முடியுமா ?

வீடணன் போனான். அவன் பெரிய  மேதை. மிக்க படித்தவன்.

போவதற்கு முன்னால் , இராவணனுக்கு அறிவுரை சொல்லுகிறான்.

பாடல்

'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,

வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,

அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; இதன்மேல்

விசையம் இல்' எனச் சொல்லினன்-அறிஞரின் மிக்கான்.


பொருள்


'இசையும் = புகழும்

செல்வமும் = செல்வமும்

உயர் குலத்து = உயர்ந்த குலத்து

இயற்கையும் = தன்மையும்

எஞ்ச = இருக்க

வசையும்  = வசைச் சொற்களும்

கீழ்மையும் = கீழான செயல்களும்

மீக்கொள,= மேலோங்கி நிற்க

கிளையொடும் = உறவினர்களோடும்

மடியாது = இறந்து போகாமல்

அசைவு இல் கற்பின் = உறுதியான கற்பு உடைய

அவ் அணங்கை = அந்தப் பெண்ணை, சீதையை

விட்டருளுதி;= விட்டு அருளுதி

இதன்மேல் = இதைவிட

விசையம் இல்' = உயர்ந்தது ஒன்றும் இல்லை

எனச் சொல்லினன் = என்று சொல்லினான்

அறிஞரின் மிக்கான் = அறிவுள்ளவர்களில் சிறந்தவனான வீடணன்

உன்னுடைய புகழும், செல்வமும், உயர் குடி பிறப்பும் எல்லாம் போய் விடும். சீதையை விட்டு விடு என்கிறான்.

வீடணனுக்கு கம்பன் ஒரு அடை மொழி தருகிறான் - அறிஞரின் மிக்கான் என்று. அறிவுள்ளவர்களில் தலை சிறந்தவன் என்று.

அவன் மேலும் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்.





திருக்குறள் - உதவியின் அளவு

திருக்குறள் - உதவியின் அளவு 


பாடல்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

பொருள்

தினைத்துணை = தினை அளவு

நன்றி = நல்லது

செயினும் = செய்தாலும்

பனைத்துணையாக் = பனை அளவாகக்

கொள்வர் = கருதுவார்கள்

பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அடைந்தவர்கள்

ஒரு சிறு உதவி செய்தால் கூட, அதை பெரிதாக நினைப்பார்கள் அந்த உதவி அடைந்தவர்கள் என்பது பொருள்.


அவ்வளவுதானா ? அல்லது இதற்கு மேலும் இருக்கிறதா ?

சிந்திப்போம்.

பெரிய அளவு என்று சொல்வதற்கு ஏன் பனையை சொல்கிறார் வள்ளுவர் ? பனை மரத்தை விட தென்னை மரம் உயரமாக வளரக் கூடியது.   பனை மரத்தை விட உயரமானவை வேறு எவ்வளவோ இருக்கின்றன. கோபுரம் என்று சொல்லி இருக்கலாம், வான் அளவு என்று சொல்லி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் பனை மரத்தை  சொல்கிறார் ?

தென்னை மரம் போன்றவை உயரமாக வளரும். அதிக பலன் தரும். அதன்  தேங்காய், இளநீர், தென்னை மட்டை போன்றவை நமக்கு நிறைய  பயன் பாடு உள்ளவை தான். பனை மரத்தில் இருந்து நுங்கு கிடைக்கும். பனை மட்டை அவ்வளவு சிறப்பானது அல்ல. மேலும் பனை மரம்  தென்னை மரத்தைப் போல பழுத்த மட்டைகளை ஒவ்வொரு வருடம்  உதிர்ப்பது இல்லை.

பின் ஏன் பனை மரம் ?

காரணம் இருக்கிறது.

தென்னை மரத்துக்கு நிறைய நீர் விட வேண்டும். பலன் அதிகம் என்றாலும்  அதற்கு நிறைய நீர் தேவை. நீர் அதிகம் உள்ள கடற்கரை அல்லது  கழிவு நீர் போகும் இடம் என்ற இடங்களில் தான் தென்னை வளரும்.  அது மட்டும் அல்ல, அதற்கு தென்னங்கன்றுகளை நட்டு, அதை மண்ணோடு இன்னொரு இடத்துக்கு மாற்றி, அந்த இடத்தில் குழி தோண்டி, உப்பிட்டு, உரம் இட்டு  நிறைய வேலை செய்ய வேண்டும்.

பனை அப்படி இல்லை.  பனங் கொட்டையை சும்மா அப்படி தூக்கிப் போட்டு, கொஞ்சம் மண்ணை போட்டு மூடினால் போதும். எந்த  கரடு முரடான இடத்திலும் வளரும். வெகு சொற்பமான மழை போதும்.  மிகக் குறைந்த உதவியில் அதிகம் பலன் தருவது பனை.

கொஞ்சம் உதவி செய்தாலும் அதிக பலன் தருவது பனை. எனவேதான் பனை அளவு என்றார்.

மேலும்,

ஒரு குவளை நீர் என்ன மதிப்பு இருக்கும் ? ஒரு பாட்டில் மினரல் நீர்   இருப்பது முப்பது  ரூபாய் இருக்கும்.  அவ்வளவுதானே ?

ஒரு பாலைவனத்தில் நீங்கள் சிக்கி கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  வெயில் சுட்டு பொசுக்குகிறது. கால் சுடுகிறது. நாக்கு வறள்கிறது.  கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அந்த சமயத்தில் ஒரு குவளை  நீருக்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் ? உங்கள் சொத்து முழுவதையும்  தரச் சொன்னாலும் தந்து விடுவீர்கள் அல்லவா ?

உதவி என்பது உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த பயனை பெற்றவர்களைப்  பொறுத்தது.

எனவே தான் வள்ளுவர்  "பயன் தெரிவார்" என்றார்.

அது மட்டும் அல்ல, சில உதவிகள் அந்த நேரத்துக்கான உதவியாக இருக்கும். சில உதவிகள் காலம் பூராவும் கூடவே வரும்.

ஒரு ஏழை மாணவனுக்கு பள்ளிக் கூட கட்டணம் காட்டினால் அவன் தொடர்ந்து படிக்க முடியும். அவன் படித்து , பெரிய ஆளாகி விடலாம். அவன் மூலம் இந்த உலகம் பல பலன்களை பெறலாம்.  அன்று அவனுக்கு  கட்டிய கட்டணம் தொடர்ந்து பல நல்ல பலன்களை தருகிறது. காட்டியது என்னவோ ஒரு வருட கட்டணம் தான்.  பலன் வாழ் நாள் பூராவும் வரும்.

ஒரு ஏழை பெண்ணுக்கு திருமணம் நடத்த உதவி செய்தல், சாகும் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்தம் தந்து அவர் உயிரை காப்பாற்றுதல்  போன்ற உதவிகள், ஒரு முறை செய்தாலும், அதன்  தொடர் பலன்கள் வந்து கொண்டே இருக்கும்.

"பயன் தெரிவார்" பயனை தெரிந்து கொண்டவர்கள் சின்ன உதவியைக் கூட பெரிதாக நினைப்பார்கள்.


நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு சிறியதாக இருக்கலாம். அந்த
உதவியின் பயனை பெற்றவர்கள் அதை பெரிதாக நினைப்பார்கள். எனவே, சின்ன உதவி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். யாருக்குத் தெரியும், சூப்பிப் போட்டா பனங் கொட்டை பெரிய மரமாக வளர்ந்து பலன் தருவது போல, உங்களுடைய சின்ன உதவி எங்கேனும் பெரிய அளவில் பயன் தரும்.

சின்ன சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து செய்து கொண்டே  இருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?









Thursday, September 29, 2016

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா

பாரதியார் பாடல்கள் - ஓடி விளையாடு பாப்பா 


கவிஞர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது கவிதையாக வெளிப் படுகிறது. உண்மையான கவிஞர்களின் கவிதைகள் காலம் கடந்து நிற்கின்றன. இன்றும் எத்தனையோ கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். பெரிய பெரிய ஆட்களைக் கொண்டு அணிந்துரை எழுதச் செய்து, பெரிய விளம்பரங்கள் செய்து, அழகான விலை உயர்ந்த காகிதத்தில் அச்சடித்து விற்கிறார்கள். சில ஆண்டுகள் கூட நிற்பதில்லை. காணாமல் போய் விடுகின்றன.

பனை ஓலையில், இரும்பு கம்பி கொண்டு எழுதிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றன.

திருக்குறளும், தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எப்படியோ காரியங்களுக்கும், தீக்கும் , வெள்ளத்திற்கும் தப்பி காலத்தை வென்று நிற்கின்றன.

எப்படி ?

உண்மை, சத்தியத்தின் சக்தியாக இருக்குமோ ?

பாரதியின் பாப்பா பாட்டு.

அவன் என்ன நினைத்து எழுதினானோ தெரியாது. இன்றும் நமது வாழ்க்கையில்  அது மிக மிக அர்த்தம்  உள்ளதாக இருக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சொல்லுவதைப் போல சொல்லி இருக்கிறான் அந்த மகா கவி.

இன்று செல் போன் , லேப்டாப் கம்ப்யூட்டர், டிவி என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவது என்பது மிக மிக குறைந்து  விட்டது. வெளியில் சென்று விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் ?

முதலாவது, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட படிக்கலாம். Social skills வளரும்.

 இரண்டாவது,  அப்படிச் இப்படிச் செய் என்று சொல்லுவதிலும், அப்படி மற்ற குழந்தைகள் சொல்வதை கேட்பதிலும் ஒரு தலைமை பண்பு வளர வழி இருக்கிறது.

 மூன்றாவது, வெளியில் விளையாடும் போது வெயில் பட்டு, வைட்டமின் டி கிடைக்க வழி  பிறக்கும்.

 நான்காவது, ஓடி விளையாடினால் தசைகள் வலுப் பெறும்.

ஐந்தாவது, ஓடி விளையாடும் போது மூச்சு  வாங்கும். அதிகமான பிராண வாயு உள்ளே செல்லும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படும். அது மட்டும் அல்ல உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு  அதிகமாக கிடைத்து அவை நல்ல நிலையில் செயல்  படும்.

வீட்டுக்குளே இருந்து கொண்டு செல் போன், டிவி, லேப்டாப்  என்று அடைந்து  கிடந்தால், இது ஒன்றிற்கும் வழி  இல்லை.

 எனவே தான் அவன் சொன்னான்

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு

ஓடி விளையாடு என்றால் தான் மட்டும் ஓடிக் கொண்டிருப்பது இல்லை. மற்ற பிள்ளைகளையும் சேர்த்து விளையாடு என்றான்.

அப்படி மற்ற குழந்தைகளோடு விளையாடும் போது , சண்டை சச்சரவு  வரலாம். அதற்காக ஒருவரையும் திட்டாதே என்றான்

குழந்தையை வையாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,


குருவி போல அங்கும் இங்கும் பறந்து  திரி.ஒரு இடத்தில் இருக்காதே என்றான்.


வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.


இயற்கையை இரசிக்கப்  பழகு. மனதில் பறவைகள் மேல் மகிழ்ச்சி வந்தால் அவற்றை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்  வராது. அவை குடி இருக்கும்  மரத்தை வெட்ட மனம் வராது.


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,

பிள்ளைகளை மட்டும் அல்ல, மற்ற உயிர்கள் மேலும் அன்பு செலுத்து. கோழியையும் கூட்டி வைத்து விளையாடு.  இப்போதெல்லாம் கோழி எங்கே இருக்கிறது ? கடையில்தான் தொங்குகிறது.


எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

சமுதாயத்தில் பசித்தவர்கள்  இருப்பார்கள்.பசிக்காக திருடிவிட்டால் அவர்களை  வெறுக்காதே. அவர்கள் மேல் இரக்கம் கொள்.  திருடும் காக்கை மேல் இரக்கம் கொள் என்றான். அதை அடித்து விரட்டாதே என்று சொல்லிக்  கொடுத்தான்.


பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.


 பசுவையும்,நாயையும் நேசிக்கக் கற்று கொடுத்தான்.


வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

வீட்ட்டில் வேலைக்கு இருப்பவர்களை சில எஜமானி அம்மாக்கள் அடிமைகளை போல  நடத்துவார்கள்.ஒரு மரியாதை இல்லாமல்  பேசுவார்கள். தினம் ஒரு வசவு தான். அவர்களும் மனிதர்கள் தான். நமக்கு கீழே வேலை செய்பவர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான்.  குதிரையும்,மாட்டையும், ஆட்டையும் ஆதரித்துப் பழகி விட்டால் பின்னாளில் தனக்கு கீழே வேலை செய்பவரகளின் உழைப்பை மதிக்கும் மனம் வளரும்.


காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு


படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால்  மனம் மரத்துப் போய் விடும்.  மனம் பண் பட வேண்டும் என்றால்  பாட்டு, நாடகம், இசை என்று இரசிக்கப் பழக வேண்டும்.   மனம் மென்மையாகும்.


மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும்.  அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும்.  உடலுக்கும் வேலை கொடுத்தான் பாரதி.


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

பொய்யும், புறஞ் சொல்லுதலும் கூடாது என்றான்.



தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே. மற்றவர்கள் மேல் பழி சொல்லி நீ தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே.

உண்மை சொல். பொறுப்பை ஏற்றுக் கொள். துன்பம் வரலாம். தீங்கு வராது. உண்மை சொல்லி வாழ்ந்தால் தெய்வம் உனக்கு துணையாக இருக்கும். பயப்படாதே என்று தைரியம் சொல்லித் தருகிறான்.

பெண்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் ஒரு ஆணின் துணியை நாடுபவர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் பயந்து ஒதுங்காதே. சண்டை போடு அவனிடம். அவனை அவமரியாதை செய். அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது. துணிந்து நில் என்று தைரியத்தை விதைக்கிறான்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

வாழ்வில் எப்போதும் இன்பமே இருக்காது. எப்போதாவது துன்பம் வரும். துன்பம் வரும் போது துவண்டு விடாதே. சோர்ந்து விடாதே. நமக்கு அன்பான தெய்வம் துணை  உண்டு.துவண்டு விடாதே என்று ஆறுதல் சொல்லுகிறான்.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

வாழ்வில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அதை போக்க ஒரே வழி சோம்பல் இல்லாமல் உழைப்பதுதான். சோம்பலில்லாமல் உழைக்க வேண்டும் என்றான்.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - 

தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

தாயார் சொன்னதை அப்படி கேள் என்றான். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காதே. அம்மா சொன்னால் அப்படியே கேள் என்றான்.



தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


உடல் ஊனம் கண்டு வருந்தாதே. போராடு. வெற்றி அடைவாய் என்று சொல்லித்தருகிறான்.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,

தாய் நமக்கு பால் தந்து, உணவு தந்து நம்மை பாதுகாக்கிறாள். அதே போல் நாம் பிறந்த மண்ணும் நமக்கு உணவும், இருக்க இடமும் தருகிறது. அதை தாய் என்று கும்பிடச் சொன்னான். தாய் நாட்டின் மேல் பற்று இருந்தால், அதை குப்பையாகச் சொல்லாது, அதன் பெயருக்கு களங்கம் வரும் படி எதுவும் செய்யத் தூண்டாது. அதன் வளங்களை சுரண்டச் சொல்லாது.


அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

நம் முன்னோர்கள் தேசம் அமிழ்தை விட இனியது.



சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;

மொழியின் மேல் மதிப்பு வேண்டும். நாட்டையும், மொழியையும் மதிக்காதவன் வேறு எதைத்தான் மதிப்பான்.

தமிழில் நமக்கு நூல்களை தந்தவர்கள் மகான்கள். வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், ஆழவார்களும், நாயன்மார்களும் நாம் உய்ய வேண்டும் என்று தாங்கள் தேடிக் கண்ட உண்மைகளை பாட்டாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். நன்றி வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக , தமிழை தொழுது படித்திடச் சொன்னான்.


செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

இந்த நாடு செலவச் செழிப்பான நாடு. இங்கு என்ன இல்லை என்று மற்ற நாடுகளுக்கு போகிறார்கள். நீ எங்கும் போகாதே. இங்கேயே இரு என்கிறான்.


வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

இந்த பொருள் வளம் குறைந்து இருக்கலாம். வாழ்க்கை வசதிகள் குறைவாக இருக்கலாம். வேதம் உடையது இந்த நாடு. இதை விட வேறு என்ன வேண்டும்.  நீதிக்காக போராடும் உள்ளம் கொண்ட வீரர்கள்  உள்ள நாடு. இதை தெய்வம் என்று கும்பிடச் சொன்னான்.


சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

சாதிகள் இல்லையடி பாப்பா. உயர்ந்த குலம் , தாழ்ந்த குலம் என்று சொல்லுவதே கூட பாவம் என்றான். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று நினைக்கச் சொன்னான்.



நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

படிப்பறிவு, கல்வி , என்று இருந்து விட்டால் மட்டும் போதாது. அன்பு நிறைய  இருக்க வேண்டும்.  அவர்கள்தான் மேலோர். அன்பு இல்லாதோர் எல்லாம்  கீழோரே.  படைத்தவனை மேலோர் என்று நினைக்காதே.  உள்ளத்தில் அன்பு இல்லாதவன் எவ்வளவு உயர்ந்தவனாக  இருந்தாலும் பெரியவன் இல்லை.



உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;

உயிர்களிடம் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று அறிதல் வேண்டும்.

அன்பாக இருப்பவர்கள். தெய்வ பக்தி கொண்டவர்கள் ஏதோ கோழைகள் அல்ல.


வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.


வைரம் போன்ற உறுதியான மனம் வேண்டும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றான்.

சொல்லித் தருவோம் - அடுத்த தலைமுறைக்கு, அதற்கடுத்த தலைமுறைக்கும்.

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 



இராமாயணத்தில் இன்னொரு சிக்கலான பகுதி வீடணன் சரணாகதி.

வீடணன் செய்தது சரியா ,  தவறா என்ற கேள்வி இன்று வரை பேசப் பட்டுவருகிறது.

விடைதான் கிடைத்தபாடில்லை.

 சரி என்று சொல்லுபவர்கள் , வீடணன் அறத்தின்பால் நின்றான், இராமன் என்ற கடவுளின் பக்கம் நின்றான் என்று வாதிடுகிறார்கள்.

தவறு என்று சொல்லுபவர்கள், என்ன இருந்தாலும் அண்ணனை காட்டி கொடுத்திருக்கக்  கூடாது, தவறு என்று வீடணன் நினைத்தால் ஒதுங்கி போய் இருக்க  வேண்டும்.மாறாக இராமனிடம் போய் ,இராவணனின் இரகசியங்களை சொல்லி இருக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.

எது சரி, எது தவறு என்று அறிய சரியான அளவு கோல் இல்லை.

அது நம் வேலையும் இல்லை.

இதில் இருந்து நமக்கு என்ன பாடம் என்று நாம் பார்ப்போம்.


இராமன் மூன்று பேரை தன் தம்பியர் என்றான்.

குகன், சுக்ரீவன், வீடணன்.

ஏன் மூன்று பேர் ?  இன்னும் கொஞ்ச பேரை தம்பி என்று சொல்லி இருந்தால் என்ன  குறைந்து போய் விடும்.

அதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது.

குகன், அன்பே வடிவானவன். "தாயின் நல்லான்"  என்பான் கம்பன்.   இராமனை  காண வரும்போது தேனும் மீனும் கொண்டுவந்தான் (பிரசாதம்). இராமன் பசித்து இருக்கக் கூடாது என்ற அன்பில் கொண்டுவந்தான். படிப்பு அறிவு இல்லை. அன்பு மட்டுமே அவனிடம்  இருந்தது. அது ஒரு பக்தி  மார்க்கம்.

சுக்ரீவன் - அன்பால் கரைந்தவன் இல்லை. இராமனுக்காக வேலை செய்தான். சீதையை கண்டு பிடிக்க உதவி செய்தான். சண்டை போட்டான். அது கர்ம மார்க்கம்.


வீடணன் - அன்பு இல்லை, பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் அறிவில்  சிறந்தவன். சாத்திரங்கள் அறிந்தவன். நல்லது கெட்டது அறிந்தவன். அறம் எது என்று அறிந்தவன். பெரிய அறிவாளி என்று கம்பன்  கூறுவான். இது ஞான மார்க்கம்.

பக்தி, கர்ம, ஞான மார்கத்தில் இறைவனை அடையலாம் என்று கம்பன்  சொல்லாமல் சொன்ன சூத்திரம் இது.

பக்தி கொண்ட குகன் , உன்னுடனையே இருந்து  விடுகிறான். அந்த  'இன்னலின் இருக்கை ' நோக்கி போக மாட்டேன் என்கிறான். உனக்கு  வேண்டிய காய் கனிகளை கொண்டு தருவேன். வழி அமைத்துத் தருவேன் என்று  பாகவத கைங்கரியம் பற்றி பேசுகிறான்.

சுக்ரீவன், நடுவில் கொஞ்சம் மறந்தாலும், பின் இராமனுக்கு உதவினான்.

வீடணன் - இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். இராவணன் கேட்க வில்லை.  தன் மந்திரகளிடம் கலந்து ஆலோசித்து , இராமனை  வந்து அடைகிறான். உணர்ச்சி வசப்பட்டு அல்ல. அறிவினால்  ஆராய்ந்து, விசாரித்து கொண்டு வந்து  சேர்கிறான்.

பக்தி, கர்மா மற்றும் ஞானத்தின் உச்சம் இறைவனை அடைவதுதான். தானே அங்கே இழுத்துக் கொண்டு போய் விடும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார்  வள்ளுவர்.

அறிவு , ஆண்டவனிடம் கொண்டு போய் சேர்க்கும் என்பது வள்ளுவரின் முடிவு.

வீடணனை கொண்டு சேர்த்தது எப்படி என்று பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_29.html

Wednesday, September 28, 2016

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி 


காதல் என்பது இனிமையான விஷயம் தான். காதல் புரியும் போது காதலர்கள் இருவரும் மிக மிக இனிமையாக பேசுவார்கள். நன்றாக உடுத்துவார்கள். ஒரு எதிர்பார்ப்பு  இருந்து கொண்டே இருக்கும்.

இவளோடு வாழ் நாள் எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனுக்கு ஒரு கற்பனை. இவனோடு வாழ் நாள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்  அவளுக்கு ஒரு கற்பனை.

உணர்ச்சிகள் தூண்டப் பட்ட நிலையில் இருவரும் இருப்பார்கள்.

கதைகள் கற்பனைகள், சினிமாவில் பார்த்தது, என்று எல்லாம் கலந்து கலர் கலராக கனவுகள் வரும்.

கவிதை வரும். படம் வரையத் தோன்றும். உலகம் அழகாகத் தெரியும். காரணம் இல்லாமல் சிரிப்பு வரும். தூக்கம் போகும். மண்ணிலே விண் தெரியும். கால்களுக்கு சிறகு முளைக்கும்.

கடைசியில் திருமணம் ஆகும்.

திருமணம் ஆன சிறிது நாளிலேயே , பெரும்பாலான காதல் கசக்கத் தொடங்கும். பொருளாதார நெருக்கடி. எதிர்பார்ப்புகள் தீர்ந்த பின் ஒரு ஏமாற்றம் -  இவ்வளவுதானா என்று.  இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு வெறுப்பு.

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி காதலுக்கு முன் இருந்த அந்த பாசம், நேசம், பிரியம், அன்யோன்யம் திருமணத்திற்கு பின்னும் அப்படியே தொடர்வதில்லை - பெரும்பாலான நேரங்களில்.

இது ஏதோ இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல.

சங்க காலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது.

குறுந்தொகை பாடல்.

தலைவனிடம் , தோழி சொல்லுகிறாள்...

"அந்தக் காலத்தில் (காதல் செய்யும் காலத்தில்) தலைவி வேப்பங் காயைத் தந்தாலும் வெல்லக் கட்டி என்று சொல்லி அதை சுவைத்தாய். இப்போது அவளே குளிர்ந்த இனிய நீரைத் தாந்தாலும் சுடுகிறது , கசக்கிறது என்கிறாய் ...எல்லாம் அன்பு குறைந்ததனால் வந்தது " என்று சொல்லுகிறாள்.

அந்த கசக்கும் உண்மையை படம் படித்து காட்டும் பாடல்

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே’


பொருள்


வேம்பின் =  வேப்ப மரத்தின்

பைங்காய் = பசுமையான காய். வேப்பம் பழம் இனிக்கும். காய் வாயில் வைக்க முடியாது.

என் தோழி தரினே = என் தோழி (தலைவி) தந்த போது

தேம்பூங்கட்டி = இனிமையான வெல்லக் கட்டி

என்றனிர் = என்று கூறினாய்

இனியே = இன்றோ

பாரி பறம்பிற் =பாரியின் இந்த மலையில்

பனிச்சுனைத் = பனி போல சில் என்று இருக்கும், ஊற்றின்

தெண்ணீர் = தெளிந்த நீரை

தைஇத் திங்கள் = தை மாதமான இந்த மாதத்தில்

தண்ணிய = குளிர்ந்த அவள்

தரினும் = தந்தாலும்

வெய்ய = சூடாக இருக்கிறது

உவர்க்கும் = உப்பு குறிக்கிறது

என்றனிர் = என்று கூறுகிறீர்கள்

ஐய = ஐயனே

அற்றால் = அற்று விட்டதால்

அன்பின் பாலே = அன்பு மனதில்

மார்கழி அடுத்து வரும் தை மாதம் குளிர்ந்த மாதம். மலையில் இருக்கும் நீர் மிக சுவையாக இருக்கும். அதில் உப்பு வர வழியில்லை.

இருந்தும், அவன் சொல்கிறான்.

சூடா இருக்கு, உப்பு கரிக்கிறது என்று.

அன்பு இருந்தால்  குளிரும்,இனிக்கும்.

அன்பு இல்லாவிட்டால் சுடும், கசக்கும்,  கரிக்கும்.

வாழ்க்கை எரிச்சலாக இருக்கிறதா. கசக்கிறதா, கரிக்கிறதா, அன்பைக் கொண்டு  வாருங்கள். கசப்பு கூட இனிக்கும்.

வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் மனதில் அன்பு இல்லாமையே.

அன்பை கொண்டு வாருங்கள். வசந்தம் வரும்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_28.html







Tuesday, September 27, 2016

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ 


பகழிக் கூத்தர் பாடியது. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். இசையோடு கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.

பிள்ளைகளை , குழந்தைகளை கொண்டாடியது நம் தமிழ் சமுதாயம். பெரிய ஆள்களையும் பிள்ளைகளாக ஆக்கி , பாராட்டி, சீராட்டி, பாலூட்டி பார்த்து மகிழ்ந்தது நம் தமிழ் இலக்கியம்.

மீனாட்சி அம்மன் பிள்ளைத்  தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், என்று பலப் பல பிள்ளைத் தமிழ் பாடல்கள் உண்டு.

கண்ணனை பிள்ளையாகவும் தன்னை யசோதையாகவும் நினைத்து பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் பாடி இருக்கிறார். அத்தனையும் தேன் சொட்டும் பாசுரங்கள்.

பகழிக் கூத்தர் திருச்செந்தூர்  முருகன் மேல் பாடிய பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடல்.

பாடல்

பாம்பால் உததி தனைக்கடைந்து
        படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
        பசுக்கள் வெருவிப் பதறாமற் 

காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும் 

பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந் 

தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ. 

 பொருள்

பாம்பால் = வாசுகி என்ற பாம்பால்

உததி = கடல் (பாற்கடல்)

தனைக்கடைந்து = தனை கடைந்து

படருங் = விரியும்

கொடுங்கார் = கொடுமையான கார் கால

 சொரிமழைக்குப் = பொழியும் மழைக்கு

பரிய வரையைக்  = பெரிய மலையை

குடைகவித்துப் = குடையாகப் பிடித்து

பசுக்கள் = பசுக் கூட்டங்கள்

வெருவிப் = பயந்து

பதறாமற் = பதறி ஓடாமல்

காம்பால் = மூங்கில் காம்பால்

இசையின் தொனியழைத்துக் = நல்ல தொனியோடு இசைத்து

கதறுந் தமரக் காளிந்திக் = கதறுகின்ற காளிங்கம் என்ற பாம்பின் மேல் ஆடிய

கரையில் = யமுனைக் கரையில்

நிரைப்பின் னே = பசுக்கள் பின்னே

நடந்த = நடந்த

கண்ணன் = கண்ணனின்

மருகா = மருமகனே

முகையுடைக்கும் = மொட்டு மலரும் (முகை = மொட்டு)  

 பூம் பாசடை = பூக்கள் நிறைந்த , பசுமையான இலைகள் கொண்ட குளத்தில்

பங்கயத்தடத்திற் =   தாமரை பூத்த குளத்தில்

புனிற்றுக்கவரி = இளைய எருமை

முலைநெரித்துப் = தன்னுடைய முலையில் இருந்து

பொழியும் = பொழியும்

அமுதந் தனைக் = பாலினை

கண்டு =கண்டு

புனலைப் பிரித்துப் = நீரைப் பிரித்து

பேட்டெகினந் = பெண் அன்னம்

தீம்பால் = சுவையான பாலை

பருகுந் = பருகும், குடிக்கும்

திருச்செந்தூர்ச் = திருச்செந்தூரில் உள்ள

செல்வா = செல்வா

தாலோ தாலேலோ = தாலோ தாலேலோ

தெய்வக் களிற்றை = தெய்வ யானையை

மணம் புணர்ந்த = மணந்து கொண்ட

சிறுவா = சிறுவனே

தாலோ தாலேலோ.  = தாலோ தாலேலோ


மழையில் இருந்து மாடுகளை காப்பாற்றினான், அவை வழி தப்பித் போகாமல் இருக்க  அவற்றின் பின்னே போனான். பசித்திருக்கும் அன்னப் பறவைகளுக்கு  , எருமையின் மூலம் பாலூட்டச் செய்தான்....விலங்குகளுக்கே அவ்வளவு உதவி செய்து அவற்றை காப்பான் என்றால்  உங்களை என்ன விட்டு விடவா போகிறான். 

நம்புங்கள். 

நம்புகிறீர்களா இல்லையோ, இன்னொரு தரம் பாட்டைப் படித்துப் பாருங்கள். கொஞ்சும் தமிழ்.


Monday, September 26, 2016

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே 


தவறான தீர்ப்பினால் கோவலன் மாண்டு போனான். கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள்.

வாழும் நாள் எல்லாம் கணவனை பிரிந்து இருந்தவள். கோவலன் மாதவி பின்னால் போய் விட்டான். மனம் திருந்தி வாழலாம் என்று வந்தவனுடன் மதுரை வந்தாள். வந்த இடத்தில் , விதியின் விளையாட்டால் கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகிக்கு தாங்க முடியவில்லை. இது வரை அமைதியாக இருந்த பெண், ஏரி மலையாக வெடிக்கிறாள்.

வாழ்க்கையின் மேல் உள்ள மொத்த கோபமும் பொங்கி எழுகிறது.

பாண்டியன் அரண்மனைக்கு வருகிறாள்.

வாசலில் நிற்கும் காவலனைப் பார்த்து சொல்கிறாள்...

அறிவில்லாத அரசனின் மாளிகைக்கு காவல் நிற்கும் காவலனே, கையில் ஒரு சிலம்புடன், கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய் சொல் என்கிறாள்.

பாடல்

வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள்


வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

அறிவறை போகிய = ஞானம் இல்லாத

பொறியறு = புலன்கள் அறிவோடு தொடர்பு அற்ற

நெஞ்சத்து = மனதைக் கொண்ட

இறைமுறை = அரச முறை

பிழைத்தோன்= பிழைத்த அரசனின்

வாயி லோயே = வாயில் காப்பாளனே

இணையரிச் = இணை + அரி = இணையான அரிய

சிலம்பொன் றேந்திய கையள் = சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = அறிவிப்பாயே, அறிவிப்பாயே என்றாள்


உணர்ச்சியின் உச்சத்தில் இளங்கோவடிகள் வடிக்கும் கவிதையின் ஆழத்தை  நாம் சிந்திக்க வேண்டும்.

வாயிலோயே, வாயிலோயே,
அறிவிப்பாயே, அறிவிப்பாயே

என்று ஏன் இரண்டு முறை கூறுகிறாள் ?

இந்த மன்னனுக்கு எதுவும் ஒரு முறை சொன்னால் புரியாது. அவசர புத்திக்காரன். ஒண்ணுக்கு இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று  நினைத்து இரண்டு முறை கூறுகிறாள்.

நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின்  மேலதிகாரி எப்படி இருப்பானோ அப்படி தான் , அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று உலகம்  எடை போடும்.

அரசன் மோசமானவன் , அப்படிபட்ட அரசன் கீழ் வேலை பார்க்கும் வாயில் காப்பாளனே என்று அவனையும் ஏசுகிறாள் கண்ணகி.


அரசன் மேல் மூன்று குற்றங்களை சுமத்துகிறாள் கண்ணகி.


அறிவறை போகிய = மனத்  தெளிவின்மை

பொறியறு நெஞ்சத்து = பொறி என்றால் புலன்கள். கண் காது மூக்கு
போன்ற புலன்கள் , புத்தியோடு சேர்ந்து வேலை
செய்யவில்லை.காதால் கேட்டதை அப்படியே உண்மை என்று நம்பிவிட்டான்  பாண்டியன். சிந்திக்கவில்லை . அறிவுக்கு வேலை தரவில்லை.

இறைமுறை பிழைத்தோன் = அரசனை இறைவனுக்கு இணையாக வைத்துப் பார்த்தவர்கள்  நம்  முன்னோர்கள். ஏன் என்றால், இறைவனுக்கு  மூன்று தொழில். படைத்தல், காத்தல், அழித்தல் என்று.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

இறைவா என்னை படைத்து விடு என்றா ? இல்லை. அது தான் ஏற்கனவே படைத்து  விட்டானே.

இறைவா என்னை அழித்துவிடு என்றா - யாரும் அப்படி கேட்க மாட்டார்கள்.

என்னை காப்பாற்று என்றுதான் வேண்டுவார்கள்.

காப்பதுதான் இறைவனின் தொழில்களில் நாம் விரும்பி வேண்டுவது.

அரசனுக்கும் தன் குடிகளை காக்கும் கடமை இருப்பதால், அரசனை  இறைவனுக்கு ஒப்பிட்டு கூறினார்கள்.

இறை மாட்சி என்று ஒரு அதிகாரமே  வைத்தார் வள்ளுவர்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.


இருப்பதோ மன்னர் ஆட்சி. மன்னனின் அதிகாரம் வானளாவியது. அவன் ஒன்று  செய்தால் அவனை யாரும் ஏன் என்று தட்டிக் கேட்க முடியாது.

கண்ணகியோ ஒரு அபலைப் பெண். உலகம் அறியாதவள். கணவனை இழந்தவள். புரியாத, தெரியாத ஊர்.

நேரே அரண்மனைக்கு சென்று மன்னனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனையும் தருகிறாள்.

ஆட்சி எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முடியுமா இன்று ? தவறு செய்யும் ஒரு அரசியல்வாதியை குடிமக்கள் தட்டிக் கேட்க முடியுமா ?

அருகில் வர விடுவார்களா ?

அரசன், நீதிக்கு கட்டுப் பட்டான். குடிகளின் குறை கேட்டான். தான்  குடி மக்களுக்கு கட்டுப் பட்டவன் என்று நினைத்தான்.

ஒரு கடைக் கோடி பெண் கூட , மாளிகையைத் தட்டி நீதி கேட்க முடிந்தது.

அப்படி இருந்தது ஒரு  காலம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம், இது சொல்லும் வாழ்க்கை நெறி முறை.

தவறை யார் செய்தாலும் தட்டி கேட்க வேண்டும். அந்த போராடும் மனோ நிலை வேண்டும்.  அரசன் என்ன செய்வானோ, ஒரு வேளை என்னையும்  வெட்டி விடுவானோ என்று கண்ணகி பயப் படவில்லை. துணிந்து போராடினாள் . இன்று , ஞாயம் தன் பக்கம் இருந்தால் கூட  போராட தயாராக இல்லை யாரும். பயந்து பயந்து வாழப் பழகி விட்டோம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மற்றவர்களை மாட்டி விட நினைப்பார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்  நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வினாடி நிதானம் தவறினான் பாண்டியன். ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

பாடம் படிக்க வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_74.html