Sunday, October 30, 2016

தேவாரம் - காம்பில்லா மூழை போல்

தேவாரம் - காம்பில்லா மூழை போல் 


ஒரு ஊரில் ஒரு தவளை இருந்தது. அந்தத் தவளைக்கு பல ஆசைகள். தான் இருக்கும் அந்தச் சின்ன குளத்தை விட்டு வேறு ஒரு பெரிய குளத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள தாமரை, அல்லி போன்ற மலர்களின் நறுமணத்தை நுகர வேண்டும். அங்குள்ள மற்ற தவளைகள் எப்படி வாழ்கின்றன என்று அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள நல்ல முறைகளை தானும் கடை பிடிக்க வேண்டும் என்று பலப் பல எண்ணங்கள்.

இந்த எண்ணங்கள் எப்போது என்றால், அந்தத் தவளையை ஒரு பாம்பு தன் வாயில் பிடித்துக் கொண்ட பின்.

முட்டாள் தவளை.

பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டால் பிழைக்க முடியுமா ? இருக்கப் போவதோ சில நிமிடங்கள்தான். அதற்குள் , எப்படி பிழைப்பது என்று சிந்திக்காமல் , வேறு எதை எதையோ நினைத்து பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

முட்டாள் தவளை.

தவளை மட்டுமா அப்படி ?

நாம் மட்டும் என்ன வித்தியாசம்.

மரணம் என்ற பாம்பு நம்மை பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் என்று பிறந்தோமோ அன்றே மரணம் நம்மை பிடித்துக் கொள்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது. அந்த இடைப் பட்ட நேரத்தில் என்னவெல்லாம் கனவு காண்கிறோம்....

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், திருமணம், பிள்ளைகள், அவர்கள் படிப்பு,  புகழ், செல்வாக்கு, மதிப்பு என்று ஆயிரம் சிந்தனைகள்....

பாம்பின் வாய் தேரைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சிந்திக்கிறார் நாவுக்கரச ஸ்வாமிகள்.

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

சீர் பிரித்த பின்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளது ஓர்  கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின் வாய் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே .

பொருள்

ஓம்பினேன் = பாதுகாத்தேன்

கூட்டை = இந்த உடல் என்ற கூட்டை

வாளா = அலட்சியமாக

உள்ளது = மனதில்

ஓர்  கொடுமை வைத்துக் = பல தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு

காம்பிலா = காம்பு இல்லாத

மூழை போலக் = அகப்பையைப் போல

கருதிற்றே = கருதினாலும், நினைத்தாலும்

முகக்க மாட்டேன் = முடக்க முடியாததைப் போல

பாம்பின் = பாம்பின்

வாய் = வாயில் அகப்பட்ட

தேரை போலப் = தவளையைப் போல

பலபல = பலவிதமான

நினைக்கின் றேனை = எண்ணங்களை நினைகின்றவனை

ஓம்பி = காத்து

நீ = நீ

உய்யக் கொள்ளாய் = காப்பாற்றி கொள்வாய்

ஒற்றியூர் = திரு ஒற்றியூர் என்ற தலத்தை

உடைய கோவே = உடமையாக கொண்ட அரசனே

அகப்பைக்கு பெரிய காம்பு இருக்கும். சூடானவற்றை அகப்பையில் எடுக்கும் போது , நம் கையில் சூடு அடிக்காமல் இருக்க அந்த நீண்ட கைப்பிடி தேவை. கைப் பிடி இல்லை என்றால் அந்த அகப்பை என்னதான் நினைத்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் , என்ன தான் முயற்சி செய்தாலும், படித்தாலும், பெரியவர்கள் பேசுவதைக் கேட்டாலும், இறைவன் திருவருள் என்ற ஒன்று இல்லாவிட்டால் (கைப்பிடி) ஒன்றும் நடக்காது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லை என்றால், அவன் தாளை வணங்குவதும் நிகழாது.

தவம் உடையவர்க்கே தவம் செய்ய முடியும் என்பார் வள்ளுவர்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 

புத்தகத்தை படித்து விட்டு நானும் தவம் செய்யப் போகிறேன் என்றால் நடக்காது என்கிறார் வள்ளுவர். தவம் என்பது பிறவி தோறும் சேர்த்துக் கொண்டே வருவது என்பது அவர் முடிவு.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது அழுதார். பார்வதி வந்து பால் தந்தாள் என்கிறது பெரிய புராணம். நம் வீட்டுப் பிள்ளைகளும் தான் தினம் அழுகிறது. ஏன், பார்வதி வந்து பால் தரவில்லை ?

முன்பே உன்னை நான் பணிந்து போற்றினேன். நீ அருள் புரிந்தாய், இப்போது என்கிறார் திரு ஞான சம்பந்தர்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


"வாளா உள்ளது". அது என்ன வாளா ? வாளா என்றால் அலட்சியம். ஒரு நோக்கம் இன்மை. குறிக்கோள் இல்லாமல் இருத்தல். அவசரம் தெரியாமல் , முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருத்தல்.

"வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் " என்பார் மணிவாசகர்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

என்பது திருவெம்பாவை

ஒற்றியூர் உடைய கோவே என்று உருகி உருகி நாவுக்கரசர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தேடித் பிடித்துப் படியுங்கள்.

சமயம் தாண்டி, இறை பக்தி தாண்டி, நம்பிக்கைகளைத் தாண்டி, தமிழின் சுவைக்காக படிக்கலாம். படியுங்கள்.






Saturday, October 29, 2016

இராமாயணம் பரதன் 4 - பங்கமில் குணத்து நம்பி

இராமாயணம்  பரதன்  4   - பங்கமில் குணத்து நம்பி 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தீர்மானம் ஆனது. மந்தரை செய்த சூழ்ச்சியால் , கைகேயி வரம் கேட்டு, இராமனுக்கு முடி இல்லை என்று தீர்மானம் ஆகி விட்டது. காட்டுக்குப் போ என்று கைகேயி சொல்லி விட்டாள் . இராமனும் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். கௌசலையை பார்க்க வருகிறான்.

கோசலை கேட்கிறாள் "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உள்ளதோ " என்று. மிக மிக நுணுக்கமான இடங்கள். அதை எல்லாம் விட்டு விடுவோம்.

இராமன் சொல்கிறான், "முடி புனைய ஒரு தடையும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம், நான் முடி புனையவில்லை, பரதன் முடி சூட்டப் போகிறான்" என்கிறான்.

அப்படி சொல்லும் போது , பரதனுக்கு ஒரு அடை மொழி தருகிறான் இராமன்..."ஒரு குற்றமும் இல்லாத குணங்களைக் கொண்ட , என் தம்பி பரதன்" என்கிறான்.

பாடல்


மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி “நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான்“ என்றான்.

பொருள்

மங்கை = கோசலை

அம்மொழி கூறலும் = அந்த மொழி கூறலும். அதாவது முடி சூட்டிக் கொள்ள தடை ஏதும் இருக்கிறதா என்ற மொழியை கூறவும்

 மானவன் = உயர்ந்தவன் (இராமன்)

செங்கை = சிவந்த கைகளை

கூப்பி = கூப்பி, வணங்கி

“நின் = உன்னுடைய

காதல் = அன்பான

திரு மகன் = சிறந்த மகன்

பங்கம் இல் = குற்றம் இல்லாத

குணத்து = குணங்களை கொண்ட

எம்பி = என் தம்பி

பரதனே = பரதனே

துங்க மா = பரிசுத்தமான

முடி சூடுகின்றான் = முடி சூட்டுகிறான்

என்றான் = என்றான்.

ஒரு காப்பியத்தில், அதன் கதாநாயன் இன்னொரு பாத்திரத்தை உயர்த்தி பேசுவது என்பது சற்று வித்தியாசமான  விஷயம் தான்.

அதுவும் எப்போது, தனக்கு வர வேண்டிய அரசை பரதனிடம் இழந்து, காட்டுக்கும் போக   வேண்டிய சூழ்நிலையில், இராமன் ,  பரதனைப் பற்றி குற்றமே இல்லாத குணத்தவன் என்று சொல்கிறான் என்றால் பரதனின் குணம் எப்படி இருந்திருக்க வேண்டும்.

பரதன் நல்லவனாகவே இருந்தாலும், இராமனின் இழப்பு மிகப் பெரிய இழப்பு. அரசு  போனது மட்டும் அல்ல, காட்டுக்கும் வேறு போக வேண்டும். கோபம் வருவது  இயற்கை. பரதன் முடி சூட்டப் போகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தாலும் யாரும் இராமன் மேல் குறை காண  முடியாது.

"பங்கமில் குணத்து எம்பி" என்கிறான்.

நல்ல குணங்கள் உள்ள பரதன் என்று சொல்லி இருந்தால் கூட சின்ன சந்தேகம் வரும். நல்ல குணங்கள் இருக்கிறது, அது கூடவே கொஞ்சம்  கெட்ட  குணமும் இருக்குமோ  என்ற சந்தேகம் வரும். எனவே இராமன் சொல்கிறான் "குற்றமே இல்லாதவன்" என்று.

அது மட்டும் அல்ல, 'என் தம்பி' என்று பாசம் காட்டுகிறான்.

"உன் காதல் திருமகன்" என்று தாயிடமும் சொல்கிறான். எங்கே கோசலை பரதன் மேல் கோபித்து விடுவாளோ என்று  நினைத்து,"உன் காதல் மகன்" என்று  சொல்கிறான்.

குற்றமில்லாதவன் என்று இராமன் தரும் முதல் சான்றிதழ். இராமனால் பாராட்டப் பட்டவன் பரதன்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் , என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவன் பரதன்.

மேலும் பார்ப்போம்.



Friday, October 28, 2016

நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்

 நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்  


காமம் பற்றி பேசுவது என்பது இன்றும் ஒரு சங்கடமான விஷயமாகவே இருக்கிறது. பிள்ளைகள் எந்த வலை தளத்தில் , எதைப் பார்த்து கெட்டுப் போவார்களோ என்ற பயப்படாத பெற்றோர்கள் இல்லை. பிள்ளைகள் சில வலை தளங்களுக்குச் செல்லாமல் தடுக்கவும் எத்தனையோ வழி முறைகள் , மென் பொருள்கள் வந்துள்ளன.

எல்லாம் எதனால் ?

காதல், காமம் பற்றி சரியான ஒரு அணுகுமுறை இல்லாததால்.

திருக்குறள், நாலடியார் போன்ற நூல்கள், காமத்தை எவ்வளவு அழகாகச் சொல்கின்றன.

ஒரு தாயும் மகனும் ஒன்றாக அமர்ந்து , முகம் சுளிக்காமல் அவற்றை படிக்க முடியும்.

ஒரு தந்தையும், மகளும் ஒன்றாக படித்து இன்புற முடியும்.

அப்படி ஒரு பாடல்.

ஒரு பெண் பிரிவுத் துயரால் வாடுகிறாள். அவள் காதலன் பொருள் தேடி வெளியூர் சென்றிருக்கிறான். தன் துயருக்கு நான்கு  பேரை அவள் குற்றம் சாட்டுகிறாள்.

சிவன், காகம், பாம்பு, தாய்.

இந்த மூன்று பேரும்தான் தன்னுடைய துயருக்கு காரணம் என்கிறாள்.

எப்படி ? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே ?

பாடல்

கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

பொருள்

கண்மூன் றுடையானும் = மூன்று கண்கள் உடைய சிவனும்

காக்கையும் = காக்கையும்

பையரவும் = அரவு என்றால் பாம்பு. படம் எடுத்து ஆடும் பாம்பும்

என்னீன்ற யாயும் = என்னை ஈன்ற தாயும்

பிழைத்ததென் = எனக்கு பிழை செய்தார்கள்

பொன்னீன்ற = பொன் போன்ற

கோங்கரும் = முளை விடும் அரும்பு

அன்ன = போன்ற

முலையாய் = மார்பை உடையவளே

பொருள்வயிற் = பொருள் சேர்க்க வேண்டி

பாங்கனார் = தோழர்

சென்ற நெறி = சென்ற வழி

என்ன இது ஒண்ணுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா ?


சிவன், முன்பு ஒரு முறை மன்மதனை எரித்தான் . அப்படியே விட்டிருக்கலாம். ரதியின் மேல் பரிதாபம் கொண்டு, அவனை மீண்டும் உயிர்பித்தான். அப்படி உயிர்ப்பிக்காமல் இருந்திருந்தால், அவன் இப்படி என் மேல் மலர் அம்புகளை ஏவி என்னை  இப்படி வதைக்க மாட்டான் அல்லவா. எனவே, சிவன் முதல் குற்றவாளி.

இந்த காகம் , தன் கூட்டில் உள்ள குயிலின்   முட்டையை அடை காத்து குயிலாக  வெளிக் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தக் குயில் இப்படி இனிமையாகக்  கூவி என் பிரிவுத் துயரை மேலும் துன்பம் உள்ளதாக மாற்றாமல் இருந்திருக்கும். 

பாம்பு. இராகு கேது என்ற பாம்பு , சந்திரனை கிரகணத்தன்று விழுங்கியது. அப்படியே இருந்திருக்கலாம். ஏனோ மீண்டும் வெளியில் விட்டு விட்டது. அப்படி  விட்டதால் தானே இந்த நிலவு என்னை இப்படி சுட்டு எரிக்கிறது. 


தாய். எல்லாவற்றிற்கும் மேல், என் தாய் என்னை பெண்ணாக பெறாமல் இருந்திருந்தால்  எனக்கு இந்த துயர் வருமா என்று கேட்கிறாள். 

யாரிடம் ? தன் தோழியிடம். அவளை எப்படி வருணிக்கிறாள் ? தென்னை மரத்தில்  சின்ன குருத்து வரும். அது போல இளமையான மார்பகங்களை கொண்டவளே  என்று. தானும் அவ்வளவு சின்னப் பெண் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இளமையான, காதல் வயப்பட்ட பெண். பிரிவு அவளை மிகவும் வாட்டுகிறது. 

எவ்வளவு கண்ணியமாகச் சொல்கிறாள். 

பிரிவிலும் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. 


இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு

இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு


பரதன் பிறந்து தொட்டிலில் குழந்தையாக கிடக்கிறான்.

குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டும். யார் பெயரிடுவது ?

பெற்றோர் பெயரிடலாம், தாத்தா பாட்டி பெயரிடலாம். சில இடங்களில் மாமன் மடியில் வைத்து பெயரிடுவார்கள்.

இப்போதெல்லாம், அரசியல் தலைவர்களை பெயரிடச் சொல்கிறார்கள்.

தசரதன், குல குருவான வசிட்டரிடம் சொல்லி அவரை பெயரிடச் சொல்கிறான். குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. மதிப்பு.

வசிட்டன் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரிடுகிறான். மற்ற பிள்ளைகளின் பெயரிட்ட பாடல்களை விட்டு விடுவோம்.

பரதனுக்கு பெயரிட்ட பாடலை பார்ப்போம்.

தன்னுடைய தவத்தினால் வேதங்களின் உட்பொருளை அறிந்த வசிட்டன், உள்ளங்கை நெல்லிக் கனி போல ஒளி விடும் அவனுக்கு பரதன் என்று பெயர் தந்தான்.

பாடல்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரம் = கை , உள்ளங்கை

தலம் = இடத்தில்

உற்று = சேர்ந்து

ஒளிர் = ஒளிரும் , விளங்கும்

நெல்லி = நெல்லிக் கனியைப்

கடுப்ப = போல , ஒத்த

விரதம் = விரதத்தினால், தவத்தினால்

மறைப் = வேதம் போன்ற உயர் நூல்களின்

பொருள் = பொருளையும்

மெய்ந் நெறி = அவை சொல்லும் உண்மையான வழிகளையும்

கண்ட = கண்ட, அறிந்த

வரதன் = வசிட்டன்

உதித்திடும் = தோன்றிடும்

மற்றைய ஒளியைப் = வேறு ஒளியை

‘பரதன் ‘ = பரதன்

எனப் = என்று

பெயர் =பெயர்

பன்னினன் அன்றே = பண்ணினான் , தந்தான்

சற்று ஆராய்வோம்.

உள்ளங்கை நெல்லிக் கனி - அது என்ன உள்ளங் கை நெல்லிக் கனி போல என்ற தொடர் ? மற்ற கனிகள் உள்ளங்கையில் இருந்தால் தெளிவாகத் தெரியாதா ? மாங்கனி இருந்தால் தெரியாதா ? ஏன் நெல்லிக் கனியை மட்டும்
குறிப்பாகச் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

நெல்லிக் கனியைப் பார்த்தால் தெரியும், அதில் சில வரிகள் இருக்கும். மேலிருந்து கீழாக செல்லும். அந்த வரிகளின் மேல் கத்தியை வைத்து வெட்டிப் பார்த்தால்  , அந்த வரிகளுக்கு நேர் உள்ளே உள்ள விதையிலும் அதே போல  வரிகள் இருக்கும். அதாவது விதையில் எப்படி இருக்கிறதோ அதே போல வெளியிலும் இருக்கும்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அப்படியே வெளியிலும் இருக்கும். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும்.

உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேறுபாடு கிடையாது.

பரதனுக்கு மனமும் செயலும் ஒன்றாக இருந்தது. அல்லது இருக்கும் என்று முதலிலேயே கம்பர் காட்டுகிறார்.

யோசித்துப் பார்ப்போம். நாம் நினைப்பது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா ? நமக்கு மிக மிக நெருங்கியவர்களிடம் கூட நம் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாது.

மனதில் ஒன்றை நினைப்போம், வெளியில் ஒன்றைச் சொல்வோம், செய்வோம்.  கணவன், மனைவி, பிள்ளைகளிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்போம் என்று சொல்லவே வேண்டாம்.

உள்ளும் புறமும் பிரிந்து கிடக்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  இராமலிங்க அடிகளார் .


ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

என்பது திருவருட்பா.

எப்போது உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ?

மனம் தூய்மையாக இருந்தால் , அது அப்படியே வெளிப்படுவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. மனத் தூய்மை இல்லாவிட்டால் தான், அது வெளிப் படுவதை மறைக்க  வேண்டி இருக்கும்.

வள்ளுவரிடம் ஒரு மாணவன் கேட்டான், ஐயா உங்கள் 1330 குறளையும் படித்து அதன் உள் அர்த்தங்களை புரிந்து அதன் படி நடப்பது என்பது இயலாத காரியம்.

குறள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் உள்ள அறங்களை  தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டான்.

வள்ளுவரும், "சொல்லுகிறேன் , நாலே வார்த்தைகளில் சொல்கிறேன் குறித்துக் கொள் " என்றார்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"

அவ்வளவுதான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்பது வள்ளுவம்.

மனதில் எந்த விதமான குற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்து அறங்களும் சேர்ந்த ஒன்று என்றார்.

மனம் தூய்மையாக இருந்து விட்டால் , தவறு எப்படி நிகழும் ?

மனம் செயல் படுவதால் , மனிதன் என்று முன்னொரு பிளாகில் பார்த்தோம்.

மனம் சரியாகச் செயல் பட்டால் , சிறந்த மனிதனாக முடியும்.

அப்படி மனம் உயர்ந்ததால், தான் உயர்ந்தவன் பரதன்.

எப்படி என்று காப்பியத்துக்குள் சென்று பார்ப்போம்.


"உதித்திடும் மற்றைய ஒளியை" - உதித்தல் என்றால் முன்பே இருந்த ஒன்று மீண்டும் வெளிப்படுவது. சூரியன் உதித்தான் என்று சொல்ல வேண்டும். சூரியன் தோன்றினான் என்று   சொல்லக் கூடாது. சூரியன் எப்பவும் உள்ளது. இரவில் மறைந்து  இருந்தது. பகலில் உதித்தது.

ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எப்போதும் உள்ளவன். நெற்றிக் கண்ணில் உதித்தான். எனவே தான் முருக ஜெயந்தி ஒன்று கிடையாது.



அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
    பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்

என்பது கந்த புராணம். ( சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் அடங்கியது இந்தப் பாடல் என்பது பெரியவர்களின் கருத்து).

இராம , இலக்குவன , பரத  மற்றும் சத்ருக்கனன் என்போர் அவதாரம். எப்போதும் உள்ளவர்கள். இங்கு வந்து உதித்தனர் என்ற அவதார இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்லிப் போகிறான் கம்பன்.


"மற்றைய ஒளியை"....இராமனை மெய் பொருள் என்ற கம்பர், பரதனை "மற்றைய ஒளி" என்றார். மெய் பொருளில் இருந்து பிறக்கும் ஞான ஒளி பரதன்.  அஞ்ஞானத்தை இருள் என்று ஞானத்தை ஒளி என்றும் சொல்லுவது மரபு. பரதனை "மற்றைய ஒளி" என்றார்.

அவன் வாழ்க்கையைப் பற்றி மேலும் சிந்திப்போம்.







Thursday, October 27, 2016

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு 


நல்லவர்கள் துன்பத்தில் , வறுமையில் வாடுவதும், கெட்டவர்கள் செலவச் செழிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதும் நாம் தினமும் காணும் காட்டுச்சியாக இருக்கிறது.

அறம் , நீதி, நேர்மை, கடின உழைப்பு என்று இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாமல் கையால் ஆகாதவன், ஒண்ணுக்கும் உதவாதவன் என்று பட்டம் பெற்று ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் தவிப்பார்கள்.

கயவர்களோ பெரும் செல்வத்துடன், எல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்வார்கள்.

நாலடியார், இதற்கு ஒரு தீர்வு சொல்லவில்லை. அடுத்த ஜென்மத்தில் அல்லது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் அவரவர்களின் செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள் என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

உலகம் அப்படித்தான் இருக்கிறது. எல்லாமே தலைகீழாக இருக்கிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணம் படைத்த செல்வந்தர்களும், படித்த சான்றோரும் கெட்டு கீழ் நிலையில் இருக்கவும். வேசிகளும், தீயவர்களும் உயரிய இடத்தில் இருப்பதும் நாளும் நடக்கிறது. குடையில், பயன்படும் துணிப் பகுதி கீழும், கைப்பிடி மேலும் இருப்பதைப் போல என்று  யதார்த்தைப் பேசிச்  செல்கிறது.



பாடல்

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருக்கிக்
கடைக்கால் தலைக்கண்ணதாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு!

பொருள்

உடைப் = உடைய. மற்றவர்களுக்கென்று உடைய 

பெருஞ் செல்வரும் = பெரிய செல்வந்தர்களும் 

சான்றோரும் = சான்றோரும்

கெட்டுப் = கெட்டு , கீழ் நிலை அடைந்து

புடைப்பெண்டிர்  மக்களும் = விலை மகளிரும் 

கீழும் = கீழான கயவர்களும்

பெருக்கிக் = செல்வம் புகழ் இவற்றைப் பெருக்கி

கடைக்கால் =    கீழே உள்ள குச்சி

தலைக்கண்ணதாகிக் = தலைப் பக்கம் வந்து

குடைக்கால்போல் = குடையில் உள்ளது போல

கீழ்மேலாய் = கீழே உள்ளது மேலேயும், மேலே உள்ளது கீழேயும்

நிற்கும் உலகு! = இருக்கும் இந்த உலகம்


உடைப்பெருஞ் செல்வரும் - அறிவுள்ளவர்களிடம் சேர்ந்த செல்வம் , ஊருக்கு பொதுவில் இருக்கும் ஊருணியில் நீர் நிறைந்தால் எப்படி எல்லோருக்கும் பயன் தருமோ அது போல எல்லோருக்கும் பயன் தரும் என்பார் வள்ளுவர்.

ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.

என்பது குறள்


இராமாயணம் - பரதன் 2

இராமாயணம் - பரதன் 2 


இராமாயணம் என்பதே தவறான தலைப்பு. பரதாயணம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏன் ?

உலகில் இந்த ஒரு கதையோ, நாவலோ, இலக்கியமோ அதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் அதில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மேலான குண நலன்கள் உள்ளவர்களாக கட்டுவது இல்லை - இராமாயணத்தைத் தவிர.

ஒரு இடத்தில் அல்ல, மூன்று இடத்தில், மூன்று வெவ்வேறு முக்கியமான பாத்திரங்கள் மூலம் பரதன் இராமனைவிட பல மடங்கு உயர்ந்தவன் என்று சொல்ல வைக்கிறான் இராமன்.

கம்பனுக்கு இராமன் மேல் அளவு கடந்த வாஞ்சை உண்டு. இருந்தும், பரதன் இராமனைவிட மிக மிக உயர்ந்தவன் என்று சொல்கிறான்.

சொல்வது யார் ? இராமனின் தாய்.

இராமனின் செயல்களைக் கூட சரியா தவறா என்று வாதம் செய்யலாம்.

தாடகை என்ற பெண்ணைக் கொன்றது,  வாலியை மறைந்து நின்று கொன்றது, சீதையை தீ குளிக்க  சொன்னது, கும்பகரணனோடு சண்டை போடும் போது கை நடுங்கியது,  தந்தை சொன்னார் என்பதற்காக அரச கடமையை துறந்து  கானகம்  சென்றது என்று இராமனின் சில செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது.

பரதனின் ஒரு செயல் கூட , ஒரு நூல் கூட பிறழாதது. அதை பற்றி விரிவாக பார்க்கப்  போகிறோம்.

அதற்கு முன்னால் , ஒரு சின்ன முன்னுரை.

பரதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டு அவனைப் பற்றி படிப்போம்.

ஒரு நாள், வள்ளுவரிடம் ஒரு மாணவன் சென்று

மாணவன்: ஐயா, நீங்கள் எதையும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வீர்கள் தானே.

வள்ளுவர்: ஆமாம்

மா: அப்படியானால், வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் ? எந்தத் துறையானாலும்.....மாணவப் பருவம் ஆனாலும், வேலை செய்தாலும், தொழில் முனைந்தாலும், ஆன்மீகத் துறையில் சென்றாலும், பொது வாழ்வில் ஈடு பட்டாலும் ....முன்னேற என்ன வழி.

வ:  அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னால் , என்னோடு கூட நடந்து வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு குளத்தைக் காண்பித்தார்.

பார்த்தாயா, எவ்வளவு தாமரை மலர்கள் இருக்கின்றன.

மா: ஆமாம் ஐயா..அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே

வ: புன்னகைத்துக் கொண்டே, தம்பி, அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன ?

மா: ஐயா அது தண்ணீரில் மிதக்கின்றன...எனவே அவை நீரின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமே இருக்கும்

வ: சரி, அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் ..செய் பார்ப்போம் என்றார்.

மா: இது என்ன பிரமாதம் என்று குளத்தில் இறங்கி, ஒரு மலரை பிடித்து தூக்கிப் பிடித்தான்...அந்தோ, அது தண்டில் இருந்து பிரிந்து வந்து விட்டது.  சரி, இது சரி வராது என்று ஒரு உயரமான குச்சியை நட்டு, ஒரு தாமரை மலரை பிடித்து  உயர்த்தி, அந்த குச்சியின் மேலே வைத்து கட்டினான். பிடித்து இழுத்து கட்டியதில் தாமரை மலரின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்து அது வாடிப் போய் விட்டது.....

மாணவன் குழம்பிப் போய் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே...சரி நாளை வா உன் கேள்விக்கு விடை தருகிறேன் என்றார்.

அன்று இரவு நல்ல மழை பொழிந்தது.   குளத்தின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து இருந்தது.

மாணவனை அழைத்து வந்து வள்ளுவர் காண்பித்தார்....பார்த்தாயா நேற்று பெய்த மழையில் நீர் மட்டம் உயர்ந்து இருக்குறது என்றார்.

மா: ஆமாம் ஐயா.

வ: பார்த்தாயா, தாமரை மலரின் உயரமும் உயர்ந்து இருக்கிறது .

மா: ஆமாம் ஐயா. அதற்கு என்ன இப்போ. மழை வந்தால் குளம் நிறைவதும், அதனால் பூக்கள் உயர்வதும் இயற்கை தானே என்றான்.

வ: அது தான் உன் கேள்விக்கு விடை.

எப்படி மலரின் உயரம் நீர் மட்டத்தைப் போல இருக்கிறதோ, வாழ்வில் நீ அடையும் உயரம் உன் மனத்தைப் பொறுத்து இருக்கிறது.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

உன்னுடைய உயரம் , உன் உள்ளத்தின் உயரம்.

யோசித்துப் பார், ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னாலும், நீ அந்தக் காரியத்தைப் பற்றி யோசிப்பாய் , அதை எப்படி செய்வது, எவ்வளவு காலம் ஆகும், என்ன என்ன இடையூறு வரும், யார் துணை செய்வார்கள் என்று எல்லாம்  யோசிப்பாய் அல்லவா. உன் மனம் அந்த வேலையை முடிப்பதைப் பற்றை  சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் முதலில் உயர்ந்து விடுகிறது. பின் வேலை நடக்கிறது. நீ எவ்வளவு நினைத்தாயோ, அவ்வளவு செய்கிறாய்.

மா: ஐயா புரிந்த மாதிரி இருக்கு. முழுவதும் புரியவில்லை.

வ: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளியில் சேர்கிறான். அவன் மனம் எப்படி இருக்கும் ? நல்லா படிக்கணும், நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும், வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும், நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்க வேண்டும் என்றெல்லாம்யோசிப்பான் அல்லவா ? பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். சந்தேகம் இருக்கும். இருந்தும், மனம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறது அல்லவா ? நினைத்தால் மட்டும் நடந்து  விடாது. ஆனால், நினைக்காவிட்டால் நடக்கவே நடக்காது.

மனிதனின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயர்கிறதோ, அவ்வளவுக்கு அளவு அவன் உயர்வான்.

கூர்ந்து சிந்தித்தால் ஒன்று தெரியும்.

வள்ளுவர், மனிதன் எவ்வளவு படிக்கிறானோ, எவ்வளவு உழைக்கிறானோ, எவ்வளவு  மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானோ அவ்வளவு உயர்வான் என்று சொல்ல வில்லை. உயர வேண்டுமானால், மனம் உயர வேண்டும். அவ்வளவு தான்.

பரதன் , உயர்ந்தான், உயர்ந்தான், உயர்ந்து கொண்டே போனான். காப்பியம் பூராவும் அவன் உயர்வை காட்டுகிறது.

பரதனின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம்.

என்னென்ன பாடங்கள் ?





Wednesday, October 26, 2016

இராமாயணம் - பரதன் - 1

இராமாயணம் - பரதன் - 1


இராமாயணத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு குடும்பச் சண்டை. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு, மூத்த மகனுக்கு சேர வேண்டிய நாட்டை அவனுக்குத் தராமல், இளைய மனைவியின் மகனுக்கு ஒரு அரசன் தந்து விட்டான். அரசன் சொன்னான் என்பதற்காக , அந்த மூத்த மகன் கானகம் போனான். போன இடத்தில் அவனுடைய மனைவியை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். தூக்கிப் போனவனோடு சண்டை இட்டு, மனைவியை மீட்டு வந்தான்.

இவ்வளவுதான் கதை.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதை விட அருமையான கதைகள் எவ்வளவோ இருக்கிறது. இருந்தும் இராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது ?

அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போது இருப்பதை போலத்தான் இருக்கிறது. நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. நல்லவர்களிடமும் சில  தவறுகள் உண்டு. தீயவர்களிடமும் சில நல்ல குணங்கள் உண்டு.

நல்லவர்கள் பாதையில் போகலாம் என்றால் அவர்களும் அங்கங்கே சில சந்தேகத்து  இடமான காரியங்களை செய்து இருக்கிறார்கள். அது சரியா , தவறா என்ற சர்ச்சை இன்று வரை நீள்கிறது.

தீயவர்கள் போன பாதையில் போகக் கூடாது என்று நினைத்தால் , அவர்களும் பல நல்ல  குணங்களுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள்.

எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க.

இராமாயணம் என்பது , என்றோ எப்போதோ ஒரு அரசனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

இராமாயணம் முடிந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டது. சூழ் நிலைகள் மாறி விட்டது.  சமுதாயம், அதன் விதி முறைகள், சட்ட திட்டங்கள் மாறி விட்டன. இன்றும், இராமாயணம் படித்து, அதன் படி வாழ நினைத்தால் சரியாக இருக்குமா ?  சுவாரசியமான கதை என்று படிக்கலாமே தவிர அது நடைமுறைக்கு  வழி காட்டுமா ?

இதை எல்லாம் படிப்பது ஒரு கால விரயம். இராமன் நல்லவன், வல்லவன் என்றே இருந்து விட்டு ப் போகட்டும். ஒவ்வொரு கதையிலும் கதாநாயகன் நல்லவன் வல்லவனாகவே  இருப்பான். செய்ய முடியாத காரியங்களை செய்வான்.  அதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை சம்பவங்கள் . எனவே ஒரு கதையைப் படித்து விட்டு, அதன் படி வாழ நினைப்பது  யதார்த்தத்துக்கு ஒவ்வாத செயல் என்ற நினைப்பது வரும்.

அது இன்னொரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் முன்னேற, மிக உயர்ந்த நிலையை அடைய,  சிறப்பாக வாழ இராமாயணம்  வழி காட்டுகிறது என்பது உண்மை. சத்தியம்.

என்ன ஒரு சிக்கல் என்றால் அதை நேரடியாகச் சொல்லவில்லை.

கதையோடு, கதை மாந்தர்களோடு அதை பிணித்து வைத்திருக்கிறது.

மண்ணில் புதைந்து கிடைக்கும் வைரம் போல அது கிடக்கிறது. கொஞ்சம்  தோண்டித்தான் எடுக்க  வேண்டி இருக்கிறது.

வாருங்கள். இராமாயணம் தரும் வைரங்களை தோண்டி எடுப்போம்.

வாழ்வில் முன்னேற, மிக மிக உறுதியான வழியை பரதன் என்ற பாத்திரத்தின் மூலம் இராமாயணம் சொல்லுகிறது.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான் ? சண்டை போட்டானா ? அரக்கர்களை அழித்தானா ? மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ததாக குறிப்பு ஏதேனும் இருக்கிறதா ?  நாட்டை விரிவு படுத்தினானா ?

அப்படி என்ன தான் பெரிதாக  செய்து விட்டான் ?

வாழ்வின் மிகப் பெரிய இரகசியங்களை உள்ளடக்கியது பரதன் பாத்திரம்.

வாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிவோம்.