Wednesday, January 11, 2017

தேவாரம் - ஊஞ்சல்

தேவாரம் - ஊஞ்சல் 


ஊஞ்சல் !

ஊஞ்சல் ஆடி இருக்கிறீர்களா ? சிறு பிள்ளையாக இருக்கும் போது ஆடி இருப்பீர்கள். சில வீடுகளில் திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடும் வைபவம் இருக்கும். பெரிய வீடுகளில் இன்றும் கூட ஊஞ்சல் வைத்து கட்டுவார்கள்.

ஊஞ்சல் ஆடும்போது என்ன நிகழ்கிறது ? ஊஞ்சல் மேலே போகும். பின் கீழே வரும். பின் எதிர் திசையில் மேலே போகும். பின் மறுபடியும் கீழே வரும். இப்படி மாறி மாறி மேலே போவதும், கீழே வருவதும் நிகழும். ஆடி ஆடி ஒரு நாள் ஊஞ்சல் கயிறு அறுந்து போகும். ஊஞ்சல் பலகை தரையில் கிடக்கும்.

ஊஞ்சல் ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்குகிறது.

வாழ்க்கையில் நாம் சில சமயம் மேலே போவோம், கீழே வருவோம், மீண்டும் மேலே போவோம், கீழே வருவோம்....மேடு பள்ளங்கள் , உயர்வு தாழ்வுகள் வாழ்வின் மாறாத விதி.

மனிதன் ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு ஊஞ்சல் போல அலைகிறான்.

கார் வேண்டும் என்று ஆசைப் படுகிறான். கார் வாங்கிவிட்டால் , அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைப்பது இல்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறான். அடுத்த ஆசை தலை தூக்குகிறது. வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. வீடு வந்தால்  , சிறிது நாளில் அந்த சந்தோஷம் போய் விடுகிறது. அடுத்த ஆசை எழுகிறது.

மேலே போகும் போது மகிழ்ச்சி. கீழே வரும்போது துன்பம். இன்பம், துன்பம், இன்பம், துன்பம்....இதுதான் ஊஞ்சல்.

இப்படி ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு மனிதன் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருக்கிறான். மனம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது, அமைதி இல்லாமல்.

பாடல்

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே

சீர் பிரித்த பின் 

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி 
மறு கயிறு ஊசல் போல வந்து வந்து உலவு நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய் பாதத்

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே

பொருள் 

உறு = உறுதியான 

கயிறு ஊசல் போல = கயிற்றால் கட்டிய ஊசல் போல 

ஒன்று விட்டு ஒன்று பற்றி = ஒரு ஆசையை விட்டு , வேறொரு ஆசையை பற்றியதைப் போல 

மறு கயிறு = ஒரு பக்கம் போன ஊஞ்சல் மீண்டும் மறு பக்கம் சென்று வரும். அது மறு கயிறு 

ஊசல் போல = ஊஞ்சல் போல 

வந்து வந்து உலவு நெஞ்சம் = வந்து வந்து உலவும் நெஞ்சம் 

பெறு கயிறு ஊசல் போலப் = போவதும் வருவதையும் பெற்ற கயிறு போல 

 பிறை புல்கு சடையாய் = பிறையை தலையில் அணிந்த சிவனே 

பாதத் = பாதத்தில் 


அறு கயிறு = அறுந்து விழும் 

ஊசல் ஆனேன் = ஊஞ்சல் ஆனேன் 

அதிகை வீரட்டனீரே = திரு அதிகை என்ற தலத்தில் எழுந்து அருளும் வீரட்டனாரே 

ஊஞ்சலின் கயிறு அறுந்தால் , தரையில் விழும். 

மனம் என்ற ஊஞ்சல் அறுந்தால் இறைவன் திருவடியே அது சென்று தங்கும் இடம். 

அது சரி, ஊஞ்சல் மனம் என்றால், கயிறு எது ?

ஆசை, பாசம் என்பன கயிறுகள். கட்டப் பட்ட மரம் தான் வாழ்க்கை. 

ஆசையாலும், பாசத்தாலும் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். 

எவ்வளவு அலைந்தாலும், ஊஞ்சல் எங்கும் போவது இல்லை. அங்கேயேதான்  இருக்கும். ஆசையும் பாசமும் மனிதனை முன்னேற விடமால் கட்டிப் போடும். 

ஆடி ஆடி களைத்துப் போய் , கயிறு பிடி விடும் போது தாங்குகின்ற தரையாக இறைவன் திருவடி இருக்கிறது. 

மங்கையர் மையல் என்ற ஊஞ்சலில் இருந்து என்று விடுபடுவேன் என்று ஏங்குகிறார் அருணகிரிநாதர். இந்த பெண் நன்றாக இருக்கிறாள். அட, அவள் இவளை விட அழகாக இருக்கிறாளே. இவர்கள் இரண்டு பேரையும் விட மூன்றாமவள் சிறப்பாக இருக்கிறாளே என்று மனிதன் அலை பாய்கிறான்.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, "ஊசல்" படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே


 கூர்ந்து கவனியுங்கள். ஊஞ்சல் கூட பாடம் சொல்லித் தரும். 




Tuesday, January 10, 2017

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்


இராமனை சித்திரகூடம் அனுப்பிவிட்டு கங்கையின் மறு கரையில் குகன் நிற்கிறான். இராமனை அழைத்துச் சென்று நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தக் கரையில் பரதன் நிற்கிறான்.

எதிர் கரையில் நிற்கும் குகனைப் பற்றி பரதனிடம் சுமந்திரன் கூறுகிறான்.

பாடல்

“கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.

பொருள்

‘கல் காணும் திண்மையான் = கல் போன்ற வலுவான உடல் உடையவன்

கரை காணாக் காதலான் = இராமன் மேல் கரை இல்லாத அளவு அன்பு கொண்டவன்

அல் = இருட்டு, கருப்பு

காணில் = கண்டால்

கண்டு அனைய = சேர்ந்து இருந்த

அழகு அமைந்த = அழகு கொண்ட

மேனியான் = மேனியை உடையவன்

மல் = மல்யுத்தம்

காணும் = செய்யும்

திரு நெடுந்தோள் = சிறந்த பெரிய தோள்களை உடையவன்

மழை காணும் = மழை கொண்ட மேகம் போன்ற

மணி நிறத்தாய்! = நீல மணி போல ஒளி விடும் நிறம் கொண்டவனே

நின் காணும் உள்ளத்தான் = உன்னைக் காணும் உள்ளத்தோடு இருக்கிறான் (குகன்)
,
நெறி = வழியில்

எதிர் நின்றனன் ‘‘ என்றான் = எதிரில் நிற்கின்றான் என்றான்

இராமனும், குகனும், பரதனும் கரிய நிறம். அதுவும் ஒரு அழகுதான் என்று ரசிக்கிறான்  கம்பன்.

குகனுக்கு உடல் முரடு. கற் பாறை போன்ற  உருவம்.

கரிய நிறம்.

ஆனால், உள்ளம் எல்லாம் காதல். கரை காணா காதலான் என்கிறான் கம்பன்.
அளவிடமுடியாத காதல்.

"நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் "

இதற்கு இரண்டு விதத்தில் பொருள் கொள்ளலாம்.

ஒன்று, உன்னை காணும் நோக்கோத்தோடு எதிரில் நிற்கிறான் என்பது ஒரு பொருள்.

இன்னொன்று, உன்னை ஒரு கை பார்க்க, படையோடு உன்னை எதிர்த்து நிற்கிறான் என்பது இன்னொரு பொருள்.

எது எப்படியோ, பரதனுக்கு இது எல்லாம் காதில் விழவே இல்லை....அவனுக்கு கேட்டதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்....

அது .....

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?


யாரிடம் எப்படி பேச வேண்டும் தெரியாமல்தான் நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்.

கணவன்/ மனைவியிடம்  எப்படி பேச வேண்டும், பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும், நண்பர்களிடம், உறவினர்களிடம், மேலதிகாரிகளிடம், கீழே வேலை பார்ப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்.

அவை அறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். அவை என்றால் ஏதோ பெரிய கூட்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆள் இருந்தால் கூட அவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதற்கு அதில் குறிப்பு இருக்கிறது.

"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

பாடல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்


பொருள்

ஒளியார்முன்  =அறிவு ஒளி பொருந்தியவர் முன்

ஒள்ளிய ராதல் = அறிவோடு இருக்க வேண்டும்

வெளியார்முன் = ஒன்றும் அறியாதவர் முன்

வான்சுதை = வானம் போல சுண்ணாம்பு

வண்ணம் கொளல் = வண்ணம் கொள்ள வேண்டும்

என்ன ஒண்ணும் புரியலையே .... அறிவாளிங்க முன்னாடி அறிவோட பேசணும், மத்தவங்க முன்னாடி சுண்ணாம்பு மாதிரி இருக்கணும்னா என்ன அர்த்தம் ?

முதலாவது, நாம் யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். அவர்களின் தரம்  என்ன, அறிவின் ஆழம் என்ன, அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி சொன்னால் புரியும் என்று அறிந்து பேச வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

இரண்டாவது, அறிவுள்ளவர்கள் நாம் சொல்வதை வெகு எளிதாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்களின் நிலைக்கு நாம் இறங்கி வந்து பேச வேண்டும். "நான் சொல்வதை என் பிள்ளைகள் கேட்பதே இல்லை " என்று  பெரும்பாலான பெற்றோர்கள் குறை பட்டுக் கொள்வார்கள். காரணம், அவர்கள்  அந்த பிள்ளைகளின் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும்படி பேச வேண்டும்.

மூன்றாவது, சற்று அறிவு குறைந்தவர்களிடம் பேசும்போது அவர்கள் அறிந்து கொள்ளும்படி பேசாவிட்டால், நாம் சொல்வதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு வேறு விதமாக விதமாக நடக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே, அவர்களுக்கு புரியும்படி எளிமையாக பேச வேண்டும்.

நான்காவது, வான்சுதை வண்ணம் கொள்ளல் என்றால் என்ன ? சுதை என்றால் சுண்ணாம்பு. சுண்ணாம்பு போல இருக்க வேண்டும் என்பது நேரடி அர்த்தம். அது என்ன சுண்னாம்பு ? சுண்ணாம்பு போல வெண்மையாக இருப்பது மேகம். அந்த மேகத்திடம் நீர் இருக்கிறது. அந்த நீர் கீழிறங்கி வந்தால்தான் அதனால் ஒரு பயன் உண்டு. அது போல, நாம் எவ்வளவு கற்று இருந்தாலும், கல்வி அறிவு இல்லாதவர்களும்  அறிந்து கொள்ளும்படி கீழிறங்கி வந்து சொன்னால்தான் அதனால் ஒரு பயன் உண்டு.

ஐந்தாவது, மேகத்தில் உள்ள நீர் இருக்கிறதே, அது எந்த நிலத்தை சேர்கிறதோ அந்த நிறம் பெறும் . அது போல, யாரிடம் பேசுகிறோமோ அவர்களது தரம் அறிந்து , அவர்களோடு கலந்து பேச வேண்டும்.

மனைவியிடம் பேசும்போது ஒரு கணவனாக, பிள்ளைகளிடம் பேசும் போது ஒரு தகப்பனாக, அதிகாரியிடம் பேசும் போது ஒரு ஊழியனாக, ஊழியர்களிடம் பேசும் போது ஒரு அதிகாரியாக பேச வேண்டும்.

அதிகாரியிடம் போய் , "நான் சொல்வதை நீ கேள் " என்றால் அவர் கோபம் கொண்டு நம்மை வேலையை விட்டு தூக்கி விடுவார்.

ஊழியரிடம் "நீ சொல்வது போல நான் கேட்கிறேன் என்று சொன்னால்" வேலை ஆகாது.

ஒரு மருத்துவர், ஒரு நோயாளியின் நோயையை பற்றி இன்னொரு மருத்துவரிடம் பேசும் போது ஒரு மாதிரி பேசுவார், அதே நோயையை அந்த நோயாளியிடம் பேசும் போது வேறு மாதிரி பேசுவார், அந்த நோயாளியின் உறவினர்களிடம் பேசும்போது இன்னொரு மாதிரி பேசுவார்.

மாற்றி பேசினால் சிக்கல் தான்.

குறள் சொல்வது இருவரை பற்றி மட்டும்தான். அறிவுள்ளவர், இல்லாதவர்.

ஆனால், நாம் அதை நீட்டிக் கொள்ளலாம். யாரிடம் பேசுகிறோமோ, அவரைகளை நன்கு  அறிந்து பேச வேண்டும்.

சிந்தித்துப் பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

என்ன ? சரிதானே ?

Sunday, January 8, 2017

தேவாரம் - அஞ்சி ஆகிலும்

தேவாரம் - அஞ்சி ஆகிலும் 


மனிதன் இறைவனை தொழ ஆரம்பித்தது பயத்தினால்தான். இடி இடித்தால் பயம், மின்னல் வெட்டினால் பயம். வெள்ளம், நில நடுக்கம், கிரகணம் , கொள்ளை நோய் என்று பலவற்றை கண்டு மனிதன் பயந்தான். தனக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்து கொண்டான். அந்த சக்தியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதன் தயவைப் பெற, அதை வழி படத் துவங்கினான்.


மனிதனின் பயம் இடம் மாறியது. இடி மின்னலில் இருந்து , பாவம், புண்ணியம், சொர்கம் , நரகம் என்று நினைக்கத் தொடங்கினான். தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்று நினைத்தான். எண்ணெய் கொப்பரை பயம் பற்றிக் கொண்டது.

நாள் ஆக ஆக , அறிவு வளர்ந்தது. அறிவியல் பலவற்றை கண்டு சொல்லியது.


மழையும், இடியும், மின்னலும், நோயும் , கிரகணமும் எப்படி வருகிறது என்று கண்டு சொல்லியது. மனிதனின் பயம் குறையத் தொடங்கியது. நோய் என்றால்    தெய்வ  குத்தம் என்று கோவிலுக்குப் போவதில்லை, மருத்துவமனைக்குப் போகிறான்.

பயம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் ஆண்டவனை தொழுவது குறையவில்லை. எதற்கு தொழ வேண்டும் ? எதெல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருந்தானோ, அது எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்று புரிந்த பின் ஏன் ஆண்டவனைத் தொழ வேண்டும் ?

நாளடைவில் , ஆண்டவன் மேல் அன்பு வரத் தொடங்கியது. பயம் , அன்பாய் மலர்ந்தது.

பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு முதலில் பயம் இருக்கும். வளர்ந்து பெரிய ஆளானபின் அந்த பயமே அன்பாக மாறுவது போல.....

"அச்சத்தின் காரணமாகவேனும், அன்பினாலாவது இறைவனை நினை " என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

சீர் பிரித்தபின்

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும் 
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் இமையோர் தொழ 

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

பொருள்

அஞ்சி ஆகிலும் = அச்சத்தின் காரணமாகவேனும்

அன்பு பட்டாகிலும்  = அன்பினாலாவது

நெஞ்சம் வாழி = நெஞ்சே நீ வாழ்க

நினை  = நினைப்பாயாக

நின்றியூரை நீ = திரு நின்ற ஊர் என்ற தலத்தில் உள்ள

இஞ்சி மாமதில்= காவலை உடைய பெரிய மதில்களைக் கொண்ட

இமையோர் தொழ = கண் இமைக்காத தேவர்களும் தொழ


குஞ்சி = தலை முடியில்

வான்பிறை = வானில் உள்ள பிறையை

சூடிய கூத்தனே = சூடிய கூத்தனே

வாழ்க்கை என்ற மிகப் பெரிய இன்பத்தைக் கொடுத்த இறைவனிடம் அன்பு செலுத்தச் சொல்கிறார்  நாவுக்கரசர். ஆரோக்கியமான உடல், அளவான செல்வம், அன்பான குடும்பம், அமைதியான நாடு...இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகளைத் தந்த ஆண்டவனை அன்போடு நினைக்கச் சொல்கிறார் அப்பர்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/01/blog-post_12.html




இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்

இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்


இராமனைக் கொல்லவே பரதன் வந்திருக்கிறான் என்று குகன் நினைத்து விட்டான். நினைத்தது மட்டுமல்ல, பரதன் மேல் சண்டை போட தன் படைகளை தயார் விட்டான். குகனும், அவன் படைகளும் போருக்கு தயாராக நிற்கின்றனர். பரதனுக்கு இது எதுவும் தெரியவில்லை. இராமன் சென்ற திசை பார்த்து நிற்கிறான். பரதனின் அமைச்சன், நிலைமையை எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘கங்கை இரு கரை உடையான்;
     கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
     உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
     வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
     குகன் என்னும் குறி உடையான்.


பொருள்


‘கங்கை = கங்கை ஆற்றின்

இரு கரை = இரண்டு கரைகளையும்

உடையான் = ஆட்சி செய்பவன்

கணக்கு இறந்த = கணக்கில் அடங்காத

நாவாயான் = படகுகளை உடையவன்

உங்கள் = உங்கள்

குலத் = குலத்தில் தோன்றிய

தனி நாதற்கு = தனிச் சிறப்பு வாய்ந்த நாயகனான இராமனுக்கு

உயிர்த் துணைவன்; = உயிர் போன்ற துணைவன்

உயர் தோளான் = பரந்த தோள்களை உடையவன்

வெங்கரியின் ஏறு அனையான் = மதம் கொண்ட ஆண் யானை போன்றவன்

வில் பிடித்த வேலையினான் = விற்களைப் பிடித்திருக்கும் சேனையை கடல் போலக் கொண்டவன்

கொங்கு அலரும் = மொட்டு மலரும்

நறுந் தண் = மணம் வீசும் குளிர்ச்சியான

தார்க் = மாலை அணிந்தவன்

குகன் என்னும் குறி உடையான் = குகன் என்ற பெயரைக் கொண்டவன்

எப்படி பேச வேண்டும் என்று கம்பன் பாடம் நடத்துகிறான்.

சில பேர் பேச ஆரம்பித்தால் எப்படா முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறான் என்று  பொறுமை அத்துப்  போகும்.தேவை இல்லாத விஷயங்களை எல்லாம்   முதலில் சொல்லி விட்டு கடைசியில் சொல்ல வந்ததை  சொல்லுவார்கள்.

அது தவறு.

முதலில் சொல்ல வந்ததை,  எது முக்கியமானதோ, எது கேட்பவர்ககு தேவையோ  அதை முதலில் சொல்ல வேண்டும்.

பரதனுக்கு என்ன வேண்டும் இப்போது ?

கங்கை கரையை கடக்க வேண்டும், அதற்கு படகு வேண்டும். இராமன் இருக்கும் இடம் தெரிய  வேண்டும். ....

சுமந்தரன் சொல்லுகிறான்...

' கங்கை கரையை உடையவன்'

'கணக்கில் அடங்காத படகுகளை கொண்டவன் '

பரதனுக்கு  புரிந்திருக்கும், கங்கையை கடக்க குகனின் துணை வேண்டும் என்று.

அது மட்டும் அல்ல, இந்த குகன் உங்கள் இராமனின் நண்பன் என்றும் அறிமுகப் படுத்துகிறான். எனவே அவனுக்கு இராமன் இருக்கும் இடம் தெரியும்  என்பதும் பாரதனுக்குப் புரிந்திருக்கும்.

அது மட்டும் அல்ல, குகன் பெரிய பலசாலி என்று சொல்கிறான்.

சுமந்திரன் பாடு சங்கடமான ஒன்று.

குகன் நினைக்கிறான் பரதன் இராமனை கொல்ல வந்திருக்கிறான் என்று. எப்படியாவது  பரதனை அழிக்க வேண்டும் என்று படையை தயார் செய்து விட்டான்.

பரதனுக்கு குகன் மேல் பகை இல்லை. குகன் தன் மேல் கோபம் கொள்ள காரணம்  எதுவும் இல்லை என்ற நினைப்பு அவனுக்கு இருக்கும்.

என்ன செய்வது. மேலே போனால், குகன் பரதன் மேல் அம்பு எய்வது உறுதி.
மேலே போகவும் வேண்டும். குகனைப் பற்றி பரதனிடம் சொல்லவும் வேண்டும்.

எப்படிச் சொன்னான் என்று பார்ப்போம்




Saturday, January 7, 2017

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே 


பக்தி என்பது உணர்வின் உச்சம்.

அது நம்பிக்கையில் பிறப்பது. அங்கே தர்க்கமும் அறிவும் விடை பெற்று போய் விடுகின்றன.

இராமனைக் கண்டு, அவனிடம் அரசை தர வேண்டும் என்று பரதன் தன்னுடைய மந்திரிகள் மற்றும் படையோடு வருகிறான். வந்த பரதன் கங்கையின் கரையில் காத்திருக்கிறான். ஆற்றைக் கடக்க வேண்டும்.

நமெக்கெல்லாம் கடலைக் கடக்க வேண்டும், அவனுக்கு ஆற்றைக் கடந்தால் போதும் , ஆண்டவனை அடைய.

மறு கரையில் குகன் இருக்கிறான்.

படையோடு வந்த பரதனைக் கண்ட குகன், அவனை தவறாக எடை போடுகிறான். இராமன் மேல் படை எடுத்தது வந்துவிட்டான் பரதன் என்று நினைக்கிறான் குகன். பரதன் மேல் சண்டை போட்டு அவனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்  என்று கோபத்தோடு நினைக்கிறான்.

"என் ஆருயிர் நாயகன் இராமனிடம் இருந்து வஞ்சனையாக அரசைப் பறித்துக் கொண்ட பரதன் இப்போது அவன் மேல் படை எடுத்து வந்திருக்கிறான். இவனைப் போக விட்டு விட்டால் இந்த உலகம் என்னை "நாய்" என்று இகழும் " என்கிறான்.

பாடல்

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
     உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
     மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
     உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
     என்று, எனை ஓதாரோ?


பொருள்

அஞ்சன வண்ணன் = கரிய நிறம் கொண்ட

என் = என்னுடைய

ஆர் உயிர் நாயகன் = அருமையான உயிர் போன்ற நாயகன் (இராமன்)

ஆளாமே = ஆளாமல்

வஞ்சனையால் = சூழ்ச்சியால்

அரசு எய்திய = அரசை பெற்றுக் கொண்ட

மன்னரும் வந்தாரே! = மன்னனாகிய பரதனும் வந்தாரே

செஞ் சரம் என்பன = சிவந்த அம்புகள்

தீ உமிழ்கின்றன = தீயை கக்குகின்றன

செல்லாவோ? = சொல்ல மாட்டார்களோ ?

உஞ்சு இவர் போய்விடின் = தப்பி இவர்கள் போய் விட்டால்

“நாய்க்குகன்” = நாய் குகன்

என்று, எனை ஓதாரோ? = என்று என்னைச் சொல்ல மாட்டார்களா ?

குகனுக்கு இராமன் மேல் , இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இராமன் என்ற உருவத்தின் மேல் அவ்வளவு காதல்.

இராமனுக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். குகனுக்குத் தெரிந்தது எல்லாம், 'கரிய நிறம் ' மட்டும்தான். அவன் உருவ அழகில் உருகியவன் குகன்.

எல்லோராலும் தவறாக புரிந்து கொள்ளப் படுவதே பரதனின் நிலையாக இருக்கிறது.

ஈன்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. வரத்தின் மூலம் அரசைப் பெற்றுக் தந்தால்  பரதன் ஏற்றுக் கொள்வான் என்று கைகேயி தவறாக எண்ணின்னாள் .

அவன் எனக்கு மகனே இல்லை என்று தசரதன் கூறினான்.

இலக்குவன் அவனை புரிந்து கொள்ளவில்லை.

கோசலை கூட ஒரு கணம் பரதனை தவறாக நினைத்தாள்.

இப்போது குகன் அவனை தவறாக நினைக்கிறான்.

அறத்தின் வழியில் செல்பவர்களை உலகம் எளிதாக புரிந்து கொள்வதில்லை என்பதற்கு பரதன் ஒரு  உதாரணம்.

உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்பதற்காக பரதன் ஒரு இடத்திலும் தன்  நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

பரதனை முழுமையாக புரிந்து கொண்டவன் ஒருவன் மட்டுமே - அது இராமன்.

யாருக்குப் புரிய வேண்டுமோ அவருக்குப் புரிந்தது.

அற வழியில் செல்பவர்களை உலகம் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஆண்டவன் புரிந்து கொள்வான்.

Friday, January 6, 2017

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?


செல்வம் எது என்று என்னிடம் கேட்டால் - பணம், காசு, வீடு, மனை, பங்கு பத்திரங்கள், கார், நிலம் , நகை என்று அடுக்கிக் கொண்டே போவேன்.

இன்னும் சில பேர், இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை. கல்விச் செல்வம்தான் பெரிய செல்வம் என்று சொல்லுவார்கள்.

இன்னும் சில பேர், ஆரோக்கியம்தான் சிறந்த செல்வம் என்பார்கள். என்ன இருந்து என்ன பயன், நல்ல உடல் ஆரோக்கியம் இல்லை என்றல் எதையும் அனுபவிக்க முடியாது. எனவே உடல் ஆரோக்கியம்தான் உள்ளதிற்குள் சிறந்த செல்வம் என்பார்கள்.

இன்னும் சிலரோ, இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை, முக்தி அல்லது வீடு பேறு பெறுவதுதான் சிறந்த செல்வம் என்பார்கள்.

வள்ளுவரைக் கேட்டால் இது எதுவுமே பெரிய செல்வம் இல்லை...எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் "வேண்டாமை" என்ற எண்ணம் தான் என்கிறார்.

பாடல்

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை 
யாண்டு மஃதொப்ப தில்.


சீர் பிரித்த பின்

வேண்டாமை அன்ன விழுச்  செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அது ஒப்பது இல்

பொருள்

வேண்டாமை = வேண்டாம் என்று சொல்லும் மனம் அல்லது எண்ணம்

அன்ன = போன்ற

விழுச்  செல்வம் = சிறந்த செல்வம்

ஈண்டு இல்லை  = இங்கு இல்லை

யாண்டும் = மற்றவற்றில்

அது ஒப்பது இல் = அதற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை

வள்ளுவர் ஏன் வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் என்று சிந்திப்போம்.

வள்ளுவர் சொன்னார் என்பதற்க்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

வேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் மேலும் மேலும் உயர்கிறோம், சம்பாதிக்கிறோம்..வேண்டாம் என்று வைத்தது விட்டால் பின் உழைப்பு ஏது, செல்வம் ஏது ?

பின் ஏன், வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் ?

நமக்கு எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், நமக்கு மேலே ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்களை விட நம் செல்வம் ஒன்றும் பெரியது இல்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இருக்கும் வீட்டை விட பெரிய வீடு, பெரிய கார், பெரிய சேமிப்பு, பெரிய பட்டங்கள் என்று மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்றே அலைந்து கொண்டு இருப்போம். எவ்வளவு சேர்த்தாலும் , பற்றாக் குறைதான். சேர்த்ததை அனுபவிக்க  முடியாது. சேர்த்த செல்வத்தை வேறு யாராவது கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம்.

எவ்வளவு சேர்த்தாலும், நிறைவு , திருப்தி என்பதே கிடையாது. மனம் அமைதி அடையாது.

வேண்டாம் என்று வைத்து விட்டால், ஓட்டம் நிற்கும். அலைச்சல் நிற்கும். நம்மை விட அவன் அதிகம் வைத்து இருக்கிறான். அவனைப் போல நமக்கும் வேண்டும் என்ற பொறாமை, போட்டி, எல்லாம் நிற்கும்.

கேட்க நல்லா இருக்கு. அப்படி யாராவது இருந்திருக்கிறார்களா ? அப்படி இருக்க முடியுமா ?

முதலில் மாணிக்க வாசகர்....


உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

வேண்டேன் , வேண்டேன் என்று  உருகுகிறார்.

அடுத்தது, தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

இந்திர லோகமே கிடைத்தாலும் வேண்டேன் என்று இருக்கிறார்.

அடுத்தது திருமூலர்

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

கடவுளே கிடைத்தாலும் , அதற்கு ஆசைப் படாதீர்கள் என்கிறார்.

நம்ம ஆட்கள் எப்போதும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு போனாலும், அதற்கும் மேல் ஏதாவது உண்டா என்று ஆசைப் படுவார்கள்

பரமபதம் போனாலும், அதற்கு மேல் நித்ய சூரிகளாக இருக்க ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு வாலி போனான் என்பார் கம்பர்

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்பது கம்பர் வாக்கு.

அங்கேயும் போய் , அதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்று தேடாதீர்கள்....அங்கும் "வேண்டாமையைப்" போல சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்

யாண்டு மஃதொப்ப தில்...எப்போதும் அதைப் போல சிறந்த செல்வம் இல்லை என்கிறார்.

வேண்டாமை என்பது ஒரு செல்வம் என்று நினைத்தாவது பார்த்து இருக்கிறோமா ?

நினைத்துப் பார்ப்போம்.