Saturday, January 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை 


வெளியே எங்காவது போக வேண்டும் என்றால் நாம் எப்படி கிளம்புவோம் ?

தலை சீவி, கொஞ்சம் பவுடர் போட்டு, நல்ல உடை அணிந்து செல்வோம். பெரிதாக அலங்காரம் பண்ணாவிட்டாலும் பார்க்கும் படியாகவாவது செல்லுவோம் அல்லவா ?

பரதன், ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் கிளம்பி இராமனைப் பார்க்கப் போகிறான். மந்திரிகள் புடை சூழ, படை பின்னால் வர, மற்ற பெரியவர்கள், குல குரு , எல்லோரும் வருகிறார்கள். ஒரு அரசனுக்கு உரிய அலங்காரம் வேண்டும் அல்லவா. ஒரு பட்டு உடை, கிரீடம், இடுப்பில் வாள் , குளித்து முழுகி சுத்தமாக வந்திருப்பான் அல்லவா ?

இராமனைத் தேடி வரும் பரதனை , கங்கையின் மறு கரையில் உள்ள குகன் காண்கிறான்.

துணுக்குறுகிறான்.

மர பட்டையால் ஆன உடை அணிந்து இருக்கிறான். உடம்பு எல்லாம் ஒரே தூசி. உடம்பில் ஒரு ஒளி இல்லை.  முகத்தில் சிரிப்பு ஒரு துளியும் இல்லை. அவன் நிலையைப் பார்த்தால் கல் கூட கனிந்து விடும். அவனைப் பார்த்த குகன் மனம் நெகிழ்கிறான். அவன் கையில் உள்ள வில் அவனை அறியாமலேயே நழுவி விழுகிறது.

பாடல்

வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.


பொருள்

வற்கலையின் உடையானை = வற்கலை என்றால் மரவுரி.

மாசு அடைந்த மெய்யானை = உடல் எல்லாம் ஒரே அழுக்கு. தூசி.

நல் கலை இல் மதி என்ன = கலை என்றால் நிலவின் பிறை. பிறை இல்லாத சந்திரன் எப்படி ஒளி மழுங்கி இருக்குமோ அப்படி இருந்தான்.

நகை இழந்த முகத்தானைக் = சிரிப்பை தொலைத்த முகம்

கல் கனியக் = கல்லும் கனியும்

கனிகின்ற துயரானைக் = துன்பத்தினால் மனம் கனியை போல நெகிழ்ந்து நிற்க

கண் உற்றான் = குகன் கண்டான்

வில் கையின் நின்று இடைவீழ = வில் கையில் இருந்து கீழே விழுந்தது

விம்முற்று = விம்மலுற்று

நின்று ஒழிந்தான் = நின்றான்

இராமன் மர உரி அணைந்து சென்றான் என்று அறிந்த பரதன், தானும் மர உரி அணிந்து வருகிறான்.

ஒரு வேளை நல்ல பட்டு உடை அணிந்து வந்தால் , அதைப் பார்க்கும் இராமன், ஒருவேளை தனக்கு இந்த ஆடம்பரங்களில் ஆசை இருக்கும் என்று நினைத்து விடலாம் , அப்படி நினைத்து அரசை தன்னிடமே கொடுத்து விடலாம் என்று  நினைத்து பரதனும் மர உரி அணிந்து வந்தான்.

இதில் ஒரு பாடம் நமக்கு இருக்கிறது.

பெரியவர்களை பார்க்கப் போகும் போது , எளிமையாக போக வேண்டும்.

நம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடை, நகை நட்டுகளை போட்டுக் கொண்டு அவர்கள் முன் போய் நிற்கக் கூடாது. பெரியவர்களை சுற்றி உள்ளவர்கள் எளிமையாக இருப்பார்கள். நாம் மட்டும் படோபடமாக சென்றால் , தனித்துப் போவோம். நம் செல்வத்தை, செல்வாக்கை காட்டும் இடம் அது அல்ல.

இன்னும் சொல்லப் போனால், அலுவலகத்தில் ஒரு மேலதிகாரியை பார்க்கப் போனால், அவரை விட உயர்ந்த ஆடை, கைக்கடிகாரம் இவற்றை அணிந்து சென்றால் அவருக்கு என்ன தோன்றும் ? என்னை விட இவன் உயர்ந்தவன் என்று  என்னிடமே காட்டுகிறானா என்று நினைக்கலாம். அல்லது, ஏற்கனவே நிறைய வசதி இருக்கும் போல ...இவனுக்கு கொடுக்க வேண்டிய பதவி உயர்வை, சம்பள உயர்வை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.

கம்பர் அப்படிச் சொல்லவில்லை. நாம் சிந்திக்கலாமே.


"கல் கனியக் கனிகின்ற துயரானைக்"

பிறக்கும் போது மென்மையாக உள்ள மனம் நாளடைவில் கெட்டிப் பட்டுப் போகிறது. கல்லாய் போன மனதில் அன்பு, அருள், ஈரம், பக்தி என்று ஒன்றும்  இருக்காது. 

மனதில் இறைவன் திருவடி பாடியவேண்டும் என்றால் , மனம் மென்மையாக இருக்க வேண்டும். கல்லில் எப்படி எதுவும் படியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர் 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

மனம் உருக வேண்டும். 

இராமன் நிலை நினைத்து பரதனின் மனம் உருகுகிறது. கல்லும் கனியும் படி அவன் மனம் உருகுகிறது. 

வில் கையின் நின்று இடைவீழ,

அதைக் கண்ட குகனின் கையில் இருந்த வில் நழுவி விழுந்தது. மனம் வேறு ஒன்றைப் பற்றும் போது கை தானாகவே தன் பிடிப்பை நெகிழ விடும்.

சிவ பெருமானை காண்கிறார் மாணிக்க வாசகர். கை கூப்பி வணங்க வேண்டும். வணங்கவும் செய்கிறார். இருந்தும், அது ஒரு உண்மையான பக்தி அல்ல என்று அவர் நினைக்கிறார். கை கூப்பி வணங்க வேண்டும் என்றால் ஒரு முயற்சி வேண்டும். மனம் இறைவன் பால் இலயித்து விட்டால், கை நெகிழ்ந்து விடும். அதை உயர்த்தி இறைவனை வணங்க முடியாது. என்னால் அப்படி முடியவில்லையே என்று உருகுகிறார் மணிவாசகர். 


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 


ஆனால் குகன் ஒரு படி மேலே போகிறான். அவன் கை நெகிழ்ந்து வில் கையை விட்டு  விழுந்து விடுகிறது. 


மணிவாசகரால் கையை நெகிழ விட முடியவில்லை. குகன் கை நெகிழ்ந்தது. 


அப்படி நெகிழ்ந்த குகன் , பரதனை தவறாக நினைத்து விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். 

எப்படி தெரியுமா ?







Friday, January 13, 2017

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்


இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டான் என்று நினைத்து பரதன் மேல் போர் தொடுக்க தயாராக நிற்கிறான் குகன். இராமன் மேல் அன்பு கொண்டவன் குகன் என்று மந்திரியாகிய சுமந்திரன் சொல்லக் கேட்டு, குகன் மேல் அன்பு கொண்டு அவனைக் காண எழுகிறான் பரதன்.

அவன் எழுந்தவுடன் அவனுடன் சத்ருக்கணும் கிளம்புகிறான். அருகில் வரும் அவர்களைக் கண்டு துணுக்குறுகிறான் குகன்.

பாடல்

என்று எழுந்த தம்பியொடும்,
     எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
     குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
     நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
     துண்ணென்றான்.

பொருள்

என்று எழுந்த தம்பியொடும் = கூடவே எழுந்த தம்பியோடும் (சத்ருக்கனன்)

எழுகின்ற காதலொடும் = மனதில் எழுகின்ற காதலோடும்

குன்று எழுந்து சென்றது எனக் = பெரிய குன்று எழுந்து சென்றது போல

குளிர் = குழறிந்த

கங்கைக் கரை = கங்கையாற்றின் கரையை

குறுகி = அடைந்து, நெருங்கி

நின்றவனை நோக்கினான் = நின்ற பரதனை நோக்கினான்

திரு மேனி நிலை உணர்ந்தான் = பரதனின் உடல் இருக்கும் நிலையை உணர்ந்தான்

துன்று = நெருங்கிய

கரு = கருமையான

நறுங் = நறுமணம் வீசும்

குஞ்சி = தலை முடியை உடைய

எயினர் = வேடர்

கோன் = அரசன்

துண்ணென்றான் = துணுக்குறான்



என்று எழுந்த தம்பியொடும் - "நீயும் என்னுடன் வா" என்று சத்ருகனனிடம் பரதன்  சொல்லவில்லை. பரதன் எழுந்தவுடன், அவன் கூடவே சத்ருக்கனனும் எழுந்தான். குறிப்பறிந்து செய்தான். 

பிறர் உள்ளத்தில் இருப்பதை அறிபவனை தெய்வத்தோடு ஒப்பிட்டு கூறுகிறார் வள்ளுவர். 

ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

ஏன் என்றால், சொல்லாமலேயே, மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் தெய்வம் ஒன்றுக்குத்தான் உண்டு. அரசன், மேலதிகாரி, ஆசிரியர், துணைவன், துணைவி, பிள்ளைகள் , பெற்றோர் யாராயிருந்தாலும் அவர்களின் மனதில் உள்ளதை அறிந்து  செயல்படுபவன் உயர்ந்தவன். 

சொல்லாமலேயே செய்ய வேண்டும். 

சிலர் , சொன்ன பின் செய்வார்கள். 

வேறு சிலர் சொன்ன பின்னும் செய்ய மாட்டார்கள். 

உயர்வில் இருந்து தாழ்வுக்கு தர வரிசை அப்படியே. 

பரதனின் உள்ளக் குறிப்பை சத்ருக்கன் அறிந்தான். 

பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களிடம், உங்கள் மேல் அன்பு கொண்டவர்களிடம், நீங்கள் அன்பு செய்பவர்களிடம் அவர்கள் கேட்காமலேயே , சொல்லாமலேயே அவர்களின் மனதை அறிந்து ஏதாவது   செய்து பாருங்கள் . வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று தெரியும். 

"உனக்கு பிடிக்கும் என்று இதை வாங்கி வந்தேன்"

"உங்களுக்கு பிடிக்கும் என்று இதைச் செய்தேன் "

என்று செய்து பாருங்கள். 

"துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்"

இதில் துன் என்ற சொல் மிக சுவாரசியமானது.

துன் என்றால் நெருக்குதல்.

துன்னியார் = நண்பர்
துன்னார் = பகைவர்
துன்னர் = தையல்காரர். இரண்டு துண்டு துணிகளை ஒன்றாக சேர்ப்பதால்
துன்னு = உடம்போடு ஒட்டிய தசை

அருகில் வந்த பரதனைக் கண்டு குகன் துணுக்குற்றான்

ஏன் ?

Thursday, January 12, 2017

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்


கணவன் வெளியூருக்குப் போகிறான் என்றால், மனைவிக்கு ஒரு இனம் தெரியாத கவலையும் பயமும் வந்து விடும்.

நேரா நேரத்துக்கு சாப்பிடணுமே , மறக்காம மருந்து சாப்பிடணுமே ,நல்ல சாப்பாடு கிடைக்குமா, அங்கு குளிருமா ? ரொம்ப சூடா இருக்குமா ? பத்திரமா போயிட்டு பத்திரமா வரணுமே என்று ஆயிரம் சஞ்சலம் மனதுக்குள்.

இந்தக் கவலை இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே பெண்ணுக்கு இந்தக் கவலை தான்.

பொருள் தேடி தலைவன் வெளியூர் செல்ல  வேண்டும். பிரிவு அவளை வருத்துகிறது.

பிரிவு  மட்டும் அல்ல, அவன் படப் போகும் துன்பங்களும் அவளை நெகிழ வைக்கிறது. என்னால் தானே அவன் இவ்வளவு துன்பப் படுகிறான் என்று நினைத்து அவள் உருகுகிறாள்.

அவள் அதிகம் வெளிய போனவள் அல்ல.  உலகம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.எல்லாம் கேள்விப் பட்டதுதான்.

அவன் போகப் போகும் பாலைவனத்தைப் பற்றி அவள் மிரள்கிறாள்.

அந்தப் பாலைவனம் அவள் கண் முன்னே விரிகிறது.

அது ஒரு சுட்டெரிக்கும் மணல் வெளி. மருத்துத்துக் கூட ஒரு மரம் கிடையாது.

அங்கங்கே பெரிய பாறைகள்  இருக்கிறது. பாறைகளுக்குப் பின்னால் கள்ளர்கள்,  வழிப்பறி செய்பவர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

யாராவது அந்த வழியே போனால், உடனே ஒரு விசில் அடிப்பார்கள். அந்த விசில் சத்தத்தை கேட்டு  அங்கே அலைந்து கொண்டிருக்கும் சில காட்டு விலங்குகள் வெருண்டு  ஓடும். விசில் சத்தம் கேட்டு மற்ற கள்வர்களும் வந்து விடுவார்கள். எல்லோரும்  ஒன்று சேர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பொருளை பறித்துக்  கொள்வார்கள்.

அப்படிப் பட்ட கொடிய பாலைவனத்தின் வழியே அவன் போக வேண்டியது இருக்கும் என்று கேட்ட உடனையே  கண்களில் நீர் ததும்பி  விட்டது.

பாடல்

கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

பொருள்

கடுகி = விரைந்து

அதரலைக்குங் = அதர் என்றால் வழி.  வழியில் வருவோரை

கல்சூழ் = கற்கள் சூழ்ந்த

பதுக்கை = பதுங்கும் இடங்களைக் கொண்ட

விடுவி லெயினர்தம் =  விடு + வில் + எயினர் + தம் = வில்லில் இருந்து அமபை விடுகின்ற எயினர்களுடைய

 வீளையோர்த் தோடும் = வீளை  + ஓரத்து + ஓடும் = விசில் சப்தத்தை கேட்டு ஓடும்

நெடுவிடை = நெடு + விடை. விடை என்றால் காளை  மாடு. அஞ்சி நீண்ட தூரம் ஓடும் காளை மாடுகளைக் கொண்ட

அந்தம் = கடைசிவரை

செலவுரைப்பக் கேட்டே = செல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட உடனேயே

வடுவிடை = வடு மாங்காய் போன்ற கண்களை உடைய அவளின்

மெல்கின கண் = மெண்மையாக, மெளனமாக நீரை வெடித்தன . மெல்கின கண் என்றால் , கண்கள் மென்மையாகின என்று பொருள். எப்படி மென்மையாகும் ?

நாலு வரிக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டம். 

Wednesday, January 11, 2017

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்


இராமனை வழி அனுப்பிவிட்டு வந்த , கங்கை ஆற்றின் கரையில் நிற்கிறான். மறு கரையில் இராமனை நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த  பரதன் நிற்கிறான்.  படையோடு வந்த பரதனை , அவன் இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டானோ என்று தவறாக எண்ணிய குகன் பரதனை எதிர்த்து போர் புரிய துணிந்து விட்டான்.

பரதனின் அமைச்சன் சுமந்திரன் , குகனைப் பற்றி பரதனிடம் சொல்கிறான். இராமன் மேல் கரை காணா காதல் கொண்டவன் என்று குகனை அறிமுகம் செய்கிறான்.

"இந்த குகன் இராமன் மேல் அன்புகொண்டவனா, இராமனை தழுவிக் கொண்டவனா...அப்படி என்றால் அவனை நானே சென்று பார்ப்பது தான் முறையாக இருக்கும் " என்று நினைத்து எழுந்து குகனைப் பார்க்கச் செல்கிறான்.

பாடல்

தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.

பொருள்


தன் முன்னே = தனக்கு எதிரில்

அவன் = குகன்

தன்மை = தன்மைகளை

தந்தை துணை = தந்தையின் துணைவனான சுமந்திரன் (அவன் தசரதனின் மந்திரி)

முந்து உரைத்த = முன்பு உரைத்த

சொல் முன்னே = சொல் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்கு முன்னே

உவக்கின்ற = மகிழ்கின்ற

துரிசு இலாத் = குற்றமற்ற

திரு மனத்தான் = உயர்ந்த மனத்தைக் கொண்ட பரதன்

‘மன் = மன்னவனான இராமன்

முன்னே = முன்பே

தழீஇக் = தழுவிக்

கொண்ட= கொண்ட

மனக்கு = மனதுக்கு

இனிய துணைவனேல் = இனிய துணைவன் என்றால்

என் முன்னே = அவனுக்கு முன்னால்

அவற் காண்பென் = அவனைக் காண்பேன் என்று
,
யானே சென்று’ = நானே சென்று

என எழுந்தான் = என்று எழுந்தான்

பரதனின் இனிய மனதுக்கு , கம்பனின் வார்த்தைகள் வந்து விழுகிறது.

.
"சொல் முன்னே உவக்கின்ற" சொல்லி முடிக்கவில்லை அதற்குள் பரதனின்  ஆவல்  பொங்குகிறது. "இராமனுக்கு நண்பனா, உடனே போய் பார்க்க வேண்டும்" என்று கிளம்பி விட்டான். 

" துரிசு இலாத் திரு மனத்தான்"  குற்றமற்ற உயர்ந்த மனத்தைக் கொண்டவன். குகன் பரதனோடு போர் செய்ய தயாராக நிற்கிறான். அதெல்லாம் பரதனுக்கு தெரியவில்லை.  குகனின் கோபம் தெரியவில்லை. அவன் படைகள் போருக்கு தயாராக இருப்பது தெரியவில்லை. 

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் ஒரே மகழ்ச்சி பரதனுக்கு. 

"என் முன்னே அவற் காண்பென்"  

எனக்கு முன்னே அவனை போய் நான் காண்பேன் என்று சொன்னால் அர்த்தம் இடிக்கும். அவனுக்கு முன்னால் நான் போவேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு முன்னே நான் போவேன் என்பது எப்படி சரியாக இருக்கும் ?

உள் அர்த்தம் என்ன என்றால், "என் முன்னே" என்றால் எனக்கு முன்னவன், என்னுடைய  அண்ணன் என்று பொருள். 

இராமன் குகனிடம் என்ன சொன்னான் ?


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

இலக்குவன் உனக்குத் தம்பி என்றான். "இளவல் உன் இளையான்". இலக்குவனுக்கு அண்ணன் என்றால் பரதனுக்கும் அண்ணன் தானே. 

சரி, இராமன் குகனிடம் சொன்னது பரதனுக்கு எப்படித் தெரியும் ? 

என்னவென்று சொல்லுவது ? 

பால் நினைந்து ஊட்டும் தாய் என்று மணிவாசகர் சொன்னது போல, குழந்தை அழவில்லை, பால் வேண்டும் என்று கேட்க வில்லை, இருந்தும் தாய்க்குத் தெரியும்  குழந்தைக்கு என்ன வேண்டும் என்று. 

எப்படி ?

இராமன்   மனதில் இருந்ததை பரதன் அறிந்தான். 

அறிந்தது மட்டும் அல்ல...அதை செயல் படுத்தவும் செய்கிறான். 

குகன் அண்ணன் என்றால், அவனை தான் சென்று பார்ப்பதுதான் முறை என்று குகனைக் காண பரதன் எழுந்தான். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். 

பரதன் பெரிய சக்ரவர்த்தி. குகன் , ஒரு ஓடம் விடும் ஆள். நினைத்துப் பார்க்க முடியுமா ? ஒரு சக்கரவர்த்தி, ஓடக்காரனை காண தானே எழுந்து போவது ?

பரதனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இராமனின் அன்புக்குப் பாத்திரமானவன், அவ்வளவுதான். அது போதும் அவனுக்கு. 

இது இப்படி இருக்க, அந்தக் கரையில் குகனின் நிலை என்ன தெரியுமா ?


 

தேவாரம் - ஊஞ்சல்

தேவாரம் - ஊஞ்சல் 


ஊஞ்சல் !

ஊஞ்சல் ஆடி இருக்கிறீர்களா ? சிறு பிள்ளையாக இருக்கும் போது ஆடி இருப்பீர்கள். சில வீடுகளில் திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடும் வைபவம் இருக்கும். பெரிய வீடுகளில் இன்றும் கூட ஊஞ்சல் வைத்து கட்டுவார்கள்.

ஊஞ்சல் ஆடும்போது என்ன நிகழ்கிறது ? ஊஞ்சல் மேலே போகும். பின் கீழே வரும். பின் எதிர் திசையில் மேலே போகும். பின் மறுபடியும் கீழே வரும். இப்படி மாறி மாறி மேலே போவதும், கீழே வருவதும் நிகழும். ஆடி ஆடி ஒரு நாள் ஊஞ்சல் கயிறு அறுந்து போகும். ஊஞ்சல் பலகை தரையில் கிடக்கும்.

ஊஞ்சல் ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்குகிறது.

வாழ்க்கையில் நாம் சில சமயம் மேலே போவோம், கீழே வருவோம், மீண்டும் மேலே போவோம், கீழே வருவோம்....மேடு பள்ளங்கள் , உயர்வு தாழ்வுகள் வாழ்வின் மாறாத விதி.

மனிதன் ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு ஊஞ்சல் போல அலைகிறான்.

கார் வேண்டும் என்று ஆசைப் படுகிறான். கார் வாங்கிவிட்டால் , அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைப்பது இல்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறான். அடுத்த ஆசை தலை தூக்குகிறது. வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. வீடு வந்தால்  , சிறிது நாளில் அந்த சந்தோஷம் போய் விடுகிறது. அடுத்த ஆசை எழுகிறது.

மேலே போகும் போது மகிழ்ச்சி. கீழே வரும்போது துன்பம். இன்பம், துன்பம், இன்பம், துன்பம்....இதுதான் ஊஞ்சல்.

இப்படி ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு மனிதன் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருக்கிறான். மனம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது, அமைதி இல்லாமல்.

பாடல்

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே

சீர் பிரித்த பின் 

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி 
மறு கயிறு ஊசல் போல வந்து வந்து உலவு நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய் பாதத்

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே

பொருள் 

உறு = உறுதியான 

கயிறு ஊசல் போல = கயிற்றால் கட்டிய ஊசல் போல 

ஒன்று விட்டு ஒன்று பற்றி = ஒரு ஆசையை விட்டு , வேறொரு ஆசையை பற்றியதைப் போல 

மறு கயிறு = ஒரு பக்கம் போன ஊஞ்சல் மீண்டும் மறு பக்கம் சென்று வரும். அது மறு கயிறு 

ஊசல் போல = ஊஞ்சல் போல 

வந்து வந்து உலவு நெஞ்சம் = வந்து வந்து உலவும் நெஞ்சம் 

பெறு கயிறு ஊசல் போலப் = போவதும் வருவதையும் பெற்ற கயிறு போல 

 பிறை புல்கு சடையாய் = பிறையை தலையில் அணிந்த சிவனே 

பாதத் = பாதத்தில் 


அறு கயிறு = அறுந்து விழும் 

ஊசல் ஆனேன் = ஊஞ்சல் ஆனேன் 

அதிகை வீரட்டனீரே = திரு அதிகை என்ற தலத்தில் எழுந்து அருளும் வீரட்டனாரே 

ஊஞ்சலின் கயிறு அறுந்தால் , தரையில் விழும். 

மனம் என்ற ஊஞ்சல் அறுந்தால் இறைவன் திருவடியே அது சென்று தங்கும் இடம். 

அது சரி, ஊஞ்சல் மனம் என்றால், கயிறு எது ?

ஆசை, பாசம் என்பன கயிறுகள். கட்டப் பட்ட மரம் தான் வாழ்க்கை. 

ஆசையாலும், பாசத்தாலும் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். 

எவ்வளவு அலைந்தாலும், ஊஞ்சல் எங்கும் போவது இல்லை. அங்கேயேதான்  இருக்கும். ஆசையும் பாசமும் மனிதனை முன்னேற விடமால் கட்டிப் போடும். 

ஆடி ஆடி களைத்துப் போய் , கயிறு பிடி விடும் போது தாங்குகின்ற தரையாக இறைவன் திருவடி இருக்கிறது. 

மங்கையர் மையல் என்ற ஊஞ்சலில் இருந்து என்று விடுபடுவேன் என்று ஏங்குகிறார் அருணகிரிநாதர். இந்த பெண் நன்றாக இருக்கிறாள். அட, அவள் இவளை விட அழகாக இருக்கிறாளே. இவர்கள் இரண்டு பேரையும் விட மூன்றாமவள் சிறப்பாக இருக்கிறாளே என்று மனிதன் அலை பாய்கிறான்.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, "ஊசல்" படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே


 கூர்ந்து கவனியுங்கள். ஊஞ்சல் கூட பாடம் சொல்லித் தரும். 




Tuesday, January 10, 2017

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்


இராமனை சித்திரகூடம் அனுப்பிவிட்டு கங்கையின் மறு கரையில் குகன் நிற்கிறான். இராமனை அழைத்துச் சென்று நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தக் கரையில் பரதன் நிற்கிறான்.

எதிர் கரையில் நிற்கும் குகனைப் பற்றி பரதனிடம் சுமந்திரன் கூறுகிறான்.

பாடல்

“கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.

பொருள்

‘கல் காணும் திண்மையான் = கல் போன்ற வலுவான உடல் உடையவன்

கரை காணாக் காதலான் = இராமன் மேல் கரை இல்லாத அளவு அன்பு கொண்டவன்

அல் = இருட்டு, கருப்பு

காணில் = கண்டால்

கண்டு அனைய = சேர்ந்து இருந்த

அழகு அமைந்த = அழகு கொண்ட

மேனியான் = மேனியை உடையவன்

மல் = மல்யுத்தம்

காணும் = செய்யும்

திரு நெடுந்தோள் = சிறந்த பெரிய தோள்களை உடையவன்

மழை காணும் = மழை கொண்ட மேகம் போன்ற

மணி நிறத்தாய்! = நீல மணி போல ஒளி விடும் நிறம் கொண்டவனே

நின் காணும் உள்ளத்தான் = உன்னைக் காணும் உள்ளத்தோடு இருக்கிறான் (குகன்)
,
நெறி = வழியில்

எதிர் நின்றனன் ‘‘ என்றான் = எதிரில் நிற்கின்றான் என்றான்

இராமனும், குகனும், பரதனும் கரிய நிறம். அதுவும் ஒரு அழகுதான் என்று ரசிக்கிறான்  கம்பன்.

குகனுக்கு உடல் முரடு. கற் பாறை போன்ற  உருவம்.

கரிய நிறம்.

ஆனால், உள்ளம் எல்லாம் காதல். கரை காணா காதலான் என்கிறான் கம்பன்.
அளவிடமுடியாத காதல்.

"நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் "

இதற்கு இரண்டு விதத்தில் பொருள் கொள்ளலாம்.

ஒன்று, உன்னை காணும் நோக்கோத்தோடு எதிரில் நிற்கிறான் என்பது ஒரு பொருள்.

இன்னொன்று, உன்னை ஒரு கை பார்க்க, படையோடு உன்னை எதிர்த்து நிற்கிறான் என்பது இன்னொரு பொருள்.

எது எப்படியோ, பரதனுக்கு இது எல்லாம் காதில் விழவே இல்லை....அவனுக்கு கேட்டதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்....

அது .....

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?


யாரிடம் எப்படி பேச வேண்டும் தெரியாமல்தான் நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்.

கணவன்/ மனைவியிடம்  எப்படி பேச வேண்டும், பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும், நண்பர்களிடம், உறவினர்களிடம், மேலதிகாரிகளிடம், கீழே வேலை பார்ப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்.

அவை அறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். அவை என்றால் ஏதோ பெரிய கூட்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆள் இருந்தால் கூட அவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதற்கு அதில் குறிப்பு இருக்கிறது.

"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

பாடல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்


பொருள்

ஒளியார்முன்  =அறிவு ஒளி பொருந்தியவர் முன்

ஒள்ளிய ராதல் = அறிவோடு இருக்க வேண்டும்

வெளியார்முன் = ஒன்றும் அறியாதவர் முன்

வான்சுதை = வானம் போல சுண்ணாம்பு

வண்ணம் கொளல் = வண்ணம் கொள்ள வேண்டும்

என்ன ஒண்ணும் புரியலையே .... அறிவாளிங்க முன்னாடி அறிவோட பேசணும், மத்தவங்க முன்னாடி சுண்ணாம்பு மாதிரி இருக்கணும்னா என்ன அர்த்தம் ?

முதலாவது, நாம் யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். அவர்களின் தரம்  என்ன, அறிவின் ஆழம் என்ன, அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி சொன்னால் புரியும் என்று அறிந்து பேச வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

இரண்டாவது, அறிவுள்ளவர்கள் நாம் சொல்வதை வெகு எளிதாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்களின் நிலைக்கு நாம் இறங்கி வந்து பேச வேண்டும். "நான் சொல்வதை என் பிள்ளைகள் கேட்பதே இல்லை " என்று  பெரும்பாலான பெற்றோர்கள் குறை பட்டுக் கொள்வார்கள். காரணம், அவர்கள்  அந்த பிள்ளைகளின் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும்படி பேச வேண்டும்.

மூன்றாவது, சற்று அறிவு குறைந்தவர்களிடம் பேசும்போது அவர்கள் அறிந்து கொள்ளும்படி பேசாவிட்டால், நாம் சொல்வதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு வேறு விதமாக விதமாக நடக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே, அவர்களுக்கு புரியும்படி எளிமையாக பேச வேண்டும்.

நான்காவது, வான்சுதை வண்ணம் கொள்ளல் என்றால் என்ன ? சுதை என்றால் சுண்ணாம்பு. சுண்ணாம்பு போல இருக்க வேண்டும் என்பது நேரடி அர்த்தம். அது என்ன சுண்னாம்பு ? சுண்ணாம்பு போல வெண்மையாக இருப்பது மேகம். அந்த மேகத்திடம் நீர் இருக்கிறது. அந்த நீர் கீழிறங்கி வந்தால்தான் அதனால் ஒரு பயன் உண்டு. அது போல, நாம் எவ்வளவு கற்று இருந்தாலும், கல்வி அறிவு இல்லாதவர்களும்  அறிந்து கொள்ளும்படி கீழிறங்கி வந்து சொன்னால்தான் அதனால் ஒரு பயன் உண்டு.

ஐந்தாவது, மேகத்தில் உள்ள நீர் இருக்கிறதே, அது எந்த நிலத்தை சேர்கிறதோ அந்த நிறம் பெறும் . அது போல, யாரிடம் பேசுகிறோமோ அவர்களது தரம் அறிந்து , அவர்களோடு கலந்து பேச வேண்டும்.

மனைவியிடம் பேசும்போது ஒரு கணவனாக, பிள்ளைகளிடம் பேசும் போது ஒரு தகப்பனாக, அதிகாரியிடம் பேசும் போது ஒரு ஊழியனாக, ஊழியர்களிடம் பேசும் போது ஒரு அதிகாரியாக பேச வேண்டும்.

அதிகாரியிடம் போய் , "நான் சொல்வதை நீ கேள் " என்றால் அவர் கோபம் கொண்டு நம்மை வேலையை விட்டு தூக்கி விடுவார்.

ஊழியரிடம் "நீ சொல்வது போல நான் கேட்கிறேன் என்று சொன்னால்" வேலை ஆகாது.

ஒரு மருத்துவர், ஒரு நோயாளியின் நோயையை பற்றி இன்னொரு மருத்துவரிடம் பேசும் போது ஒரு மாதிரி பேசுவார், அதே நோயையை அந்த நோயாளியிடம் பேசும் போது வேறு மாதிரி பேசுவார், அந்த நோயாளியின் உறவினர்களிடம் பேசும்போது இன்னொரு மாதிரி பேசுவார்.

மாற்றி பேசினால் சிக்கல் தான்.

குறள் சொல்வது இருவரை பற்றி மட்டும்தான். அறிவுள்ளவர், இல்லாதவர்.

ஆனால், நாம் அதை நீட்டிக் கொள்ளலாம். யாரிடம் பேசுகிறோமோ, அவரைகளை நன்கு  அறிந்து பேச வேண்டும்.

சிந்தித்துப் பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

என்ன ? சரிதானே ?