Monday, June 12, 2017

பெரிய புராணம் - அறிமுகம்

பெரிய புராணம் - அறிமுகம் 


பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

63 நாயன்மார்களின் வரலாறுகளை கூறுவது.

பெரிய புராணத்தை பலர் , பல வழிக்களில் பார்த்தது, இரசித்து, வணங்கி எழுதி இருக்கிறார்கள்.

பிள்ளை பாதி, புராணம் மீதி என்று சொல்லுவார்கள். மொத்த பாடலில் , திருஞான சம்பந்தரைப் பற்றிய பாடல்கள் பாதி பாடல்கள். மீது 62 நாயன்மார்களின் புராணங்களும் மற்றொரு பாதி.

பெரிய புராணம் ஒரு புராணமே இல்லை. இது பல்வேறு நாயன்மார்களின் வாழ்க்க்கை வரலாற்று தொகுப்பே என்று கூறுவாரும் உள்ளனர்.

அதை மறுத்து, இல்லை, சுந்தரர் என்ற ஒரு நாயனாரின் வாழ்வை மையமாக வைத்து எழுதப் பட்டதுதான் இந்த பெரிய புராணம் என்று கூறுவாரும் உள்ளனர்.

இந்த பெரிய புராணம் தோன்றிய வரலாறே சுவாரசியமானது.

அநபாய சோழன் என்ற ஒரு சோழ அரசன் பல சிற்றின்ப நூல்களை படிப்பதில் காலம் செலவழித்து வந்தான்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது போல, மக்களும் அந்த வழியில் சென்று கெட்டு விடுவார்களே என்று அறிந்த , அமைச்சரான சேக்கிழார் , அரசனை  நல்ல நூல்களை படிக்கும் படி அறிவுரை வழங்கினார்.

நல்ல நூலகள் என்றால் எது என்று கேட்டான்.

திருத் தொண்டர்களின் வரலாற்றை படிக்கும்படி கூறினார்.

அது எங்கு இருக்கிறது என்று கேட்டான்.

"அது தொகுக்கப்படாமல் இருக்கிறது" என்றார் சேக்கிழார்.

"சரி, அப்படி என்றால் நீரே அந்த நூலை எழுதும் " என்று சொல்லிவிட்டான் அநபாய சோழன்.

அரச கட்டளை ஆயிற்றே , மீற முடியுமா ?

முதலமைச்சர் பதவியை துறந்து விட்டு, புராணம் எழுத முற்பட்டார் சேக்கிழார்.

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பினார்.

நேரே சிதம்பரம் சென்று நடராஜரிடம் முறையிட்டார்.

"உலகெல்லாம் " என்று ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க , பெரிய புராணம்  பாடத் தொடங்கினார்.

பெரிய புராணத்தில் அப்படி என்ன சிறப்பு ? அது சொல்லும் சேதி என்ன ? ஒரு கம்ப இராமயணமோ , சிலப்பதிகாரமோ மக்களை சென்று அடைந்த மாதிரி பெரிய புராணம் சென்று அடைந்ததா ?

சிந்திப்போம்




Friday, June 9, 2017

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் 



அரசை ஏற்றுக் கொள் என்று பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் உடன் படவில்லை.

பரதனிடம் இராமன் சொல்கிறான் ,  " பரந்த கேள்வி அறிவும் , குற்றமற்ற ஞானமும், கொண்ட ஒழுக்கமும்,  செய்யும் தொழிலின் மேன்மையும் , வணங்கத் தக்க தேவர்களும் , நமது பெரியவர்களே "

அதனால், நீ படித்த அறங்களும், நமது குல வழக்கமும், மனு நீதியும், எல்லாம் என் தந்தையான தயரதன் சொல்லுக்கு அப்புறம் என்று சொல்லி விடுகிறான்.

பாடல்



‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும் -
உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும்,
“குரவரே”எனப் பெரிது கோடியால்.


பொருள்


‘பரவு கேள்வியும் = புகழ் பெற்ற கேள்வி அறிவும்

பழுது இல் ஞானமும் = குற்றம் அற்ற ஞானமும்

விரவு சீலமும் = கடை பிடிக்கும் ஒழுக்கமும்

வினையின் மேன்மையும் = செயலின் மேன்மையும்

உர விலோய்! = உறுதியான வில்லைக் கொண்டவனே

தொழற்கு உரிய தேவரும் = தொழுதற்கு உரிய தேவர்களும்

“குரவரே”எனப் = பெரியவர்களே

பெரிது கோடியால் = பெரிதும் மனதில் கொள்வாய்

இதில் குரவர் என்றால் யார் என்று முதலில் பார்த்து விடுவோம்.

குரவர் என்றால் பெரியவர், முன்னோர், என்று கொள்ளலாம். ஆசாரக் கோவை என்ற நூல் ஐந்து பேரை  குரவர் என்று சொல்கிறது.

யார் அந்த ஐந்து பேர் ?

அரசன்,
ஆசிரியன் ,
தாய்,
தந்தை,
தனக்கு முன் பிறந்த சகோதரன், சகோதரி (அண்ணன் /அக்காள்)

இவர்களுக்கு இணையான குரவர் அல்லது பெரியவர்கள்  .யாரும் இல்லை. எனவே இவர்களை தினம் தொழ வேண்டும் என்று சொல்கிறது. 

அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே-
யாவரும் கண்ட நெறி.


இராமனைப் பொறுத்தவரை, அறிவு , ஞானம், தேவர்கள், ஒழுக்கம், நெறி எல்லாம்  அவனுடைய தந்தை சொல்லுக்குப் பிறகுதான்.

இதை இந்த இடத்தில் மட்டும் அல்ல, இராமாயணத்தில் அத்தனை சிக்கலான  இடத்திலும் , எங்கெல்லாம் நடைமுறை சிக்கல்கள் வருகின்றனவோ , அங்கெல்லாம்  யாரோ ஒரு பெரியவரின் சொல் கேட்டுத்தான் நடக்கிறான்.

எனக்குத் தெரியும், நான் அறிந்த அறத்தின் படி நடக்கிறேன் என்று சொல்லவில்லை.

மாறாக, பாரதனோ, அம்மா சொன்னால் என்ன, அப்பா சொன்னால் என்ன, அறம்  இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது. அதன் படி நடக்க வேண்டும் என்று  கூறுகிறான்.

எது சரி, எது தவறு என்று பின்னால் கம்பன் கூறுகிறான்.

அதுவரை அவர்களின் பேச்சை கவனிப்போம்.

Wednesday, June 7, 2017

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு


மணற் கேணியில் எவ்வாறு தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்க படிக்க அறிவு வளரும்.

குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு. 

பொருள்

தொட்டனைத்து = தோண்டிய அளவில்

ஊறும் = ஊற்று எடுக்கும்

மணற்கேணி = மணற் கேணி

மாந்தர்க்குக்  = மக்களுக்கு

கற்றனைத்து = கற்ற அளவு

ஊறும் அறிவு. = ஊறும் அறிவு

சரி இது என்ன புது விஷயமா ? இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

சிந்திப்போம்.

கல்வி என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது. கல்வி பற்றி சொல்ல வந்து வள்ளுவர் இந்த உதாரணத்தை சொல்கிறார்.

அது என்ன மணற் கேணி ? அதில் என்ன சிறப்பு ?

கேணியை மூன்று இடங்களில் தோண்டலாம்.

நிலத்தில் தோண்டும் கேணி - நிலக் கேணி

பாறையில் அல்லது மலையில் தோண்டும் கேணி = கற் கேணி

மணலில் தோண்டும் கேணி = மணற் கேணி.

இதில் , மணற் கேணியை ஏன் தேர்ந்தெடுத்தார் ?

மணல் கேணியில் , தோண்டிய பின், சிறிது காலத்தில்  மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும்.  அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம் , அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது.

படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும்.  வற்றி விடாது.

அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.

படித்ததை பகிர வேண்டும்.


நீர் என்பது குளம், குட்டை, ஆறு, கடல் என்று விரிந்து கிடக்கிறது. மணற்கேணியில் உள்ள நீர் உலகில் உள்ள நீரில் மிகச் சொற்பமானது. எவ்வளவுதான் தோண்டினாலும் அது கடல் நீர் அளவுக்கு ஆகி விடாது. கல்வி கற்று  வரும் அறிவு கொஞ்சம் தான். அந்த அடக்கம் வேண்டும்.

கல்லாதது கடலளவு.

முக்கியமாய் கவனிக்க வேண்டியது , தோண்டுதல் என்பது கற்பதற்கு சமம். நாம் தோண்டி நீரை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊற்றுவது இல்லை. நீர் உள்ளுக்குள் இருந்து வெளியே வருகிறது.

நாம் படிக்க படிக்க , நமக்குள் இருந்து அறிவு வெளியே வர வேண்டும்.


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும்  கல்வி.

என்று சொல்லவில்லை.

சொல்லி இருக்கலாம்.

கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது.

அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.

கற்க கற்க உள்ளே இருந்து வெளியே வர வேண்டும்.

விஷயங்களை உள்ளே திணிப்பது அல்ல கல்வி. அதை ஒரு கணிப்பொறி மிகச் சிறப்பாக செய்யும்.

கற்றது உள்ளே போய் , உள்ளே இருக்கும் அறிவை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு குறளுக்கு பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. நிதானமாக சிந்திக்க வேண்டும்.

Monday, June 5, 2017

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர


நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது ,மற்றது கூம்பும்.

நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

இரண்டு கைகளையும் சேர்த்து , குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது , உள்ளத் தாமரை மலரும்.

அதற்கு மாறாக,

எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி , குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

மணிவாசகர் சொல்கிறார்

"கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,"

கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

போற்றித் திரு அகவல்.

இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறு புறம் , தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்துகிறது.

மணிவாசகர் குழைகிறார்.

பாடல்


தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!


பொருள் 

தப்பாமே = விடாமல்

தாம் பிடித்தது சலியா = தான் பிடித்த கொள்கையில் இருந்து விலகாமல்

தழல் அது கண்ட மெழுகு அது போல = தீயில் விழுந்த மெழுகு போல

தொழுது = வணங்கி

உளம் உருகி = உள்ளம் உருகி

அழுது = அழுது

உடல் கம்பித்து =  உடல் நடுங்கி

ஆடியும் = ஆடி

அலறியும் = அலறி

பாடியும் = பாடி

பரவியும் = போற்றி

`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் = இது ஒரு பழ மொழி. கொடிறு என்பது குறடா போன்ற சாதனம். வீட்டில் சூடான பொருள்களை அடுப்பில் இருந்து இறக்க பயன் படுத்துவோமே , கிடுக்கி என்று சொல்லுவார்கள். அதுவும் , முட்டாளும் பிடித்ததை விட மாட்டார்கள்.  என்பது போல

படியே ஆகி = அப்படியே ஆகி

நல் இடை அறா அன்பின் = நல்ல , இடை விடாத அன்பின்

பசு மரத்து ஆணி அறைந்தால் போல = பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எப்படி இறுக பற்றிக் கொள்ளுமோ அது போல பற்றி

கசிவது பெருகி = கண்ணீர் பெருகி

கடல் என மறுகி = கடல் அலை போல அங்கும் இங்கும் அலைந்து

அகம் குழைந்து = உள்ளம் குழைந்து

அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து = அதற்கு ஏற்ப உடல் நடுங்கி

சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப = ஊரில் உள்ளவர்கள் (சகம் ) எல்லாம் என்ன இவன் இப்படி பேய் போல அலைகிறானே என்று சொல்லும் படி

நாண் அது ஒழிந்து = அதற்காக வெட்கப் படாமல்

நாடவர் பழித்துரை = நாட்டில் உள்ளவர்களின் பழிச் சொற்களையே

பூண் அதுவாக = அணிகலனாக கோட்னு

கோணுதல் இன்றி = குறைவு இன்றி

சதிர் இழந்து = திறமை இழந்து

அறியாமல் கொண்டு  சாரும் = தன்னை அறியாமல் கொண்டு போய் சேர்க்கும்

கதியது = உயர்ந்த கதியான அது

பரம அதிசயம் ஆக = பெரிய அதிசயமாக ,

கற்றா மனம் எனக் கதறியும் = கன்றை ஈன்ற பசுவைப் போல கதறியும்

பதறியும் = பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது = மற்ற வேறு ஒரு தெய்வத்தையும் கனவிலும் நினைக்காமல்

அரு பரத்து ஒருவன் = அரிய மேலான ஒருவன்

அவனியில் வந்து = உலகில் வந்து

குருபரன் ஆகி - உயர்ந்த குருவாகி

அருளிய பெருமையை = அருள் செய்த பெருமையை

சிறுமை என்று இகழாதே = சிறியது என்று இகழாமல்

திருவடி இணையை = இரண்டு திருவடிகளையும்

பிறிவினை அறியா நிழல் அது போல = உடலை விட்டு பிரிந்து அறியா நிழல் போல

முன் பின் ஆகி = முன்னும் பின்னும் ஆகி

முனியாது = கோபம் கொள்ளாமல்

அத் திசை = அந்தத் திசை நோக்கி

என்பு நைந்து உருகி = எலும்பு நைந்து உருகி

நெக்கு நெக்கு ஏங்கி = தேம்பி தேம்பி ஏங்கி

அன்பு எனும் ஆறு கரை அது புரள = அன்பென்ற ஆறு இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓட

நன் புலன் ஒன்றி = நல்ல புலன்கள் எல்லாம் ஒன்றாக

`நாத' என்று அரற்றி, = தலைவனே என்று அரற்றி

உரை தடுமாறி = பேச்சு தடுமாறி

உரோமம் சிலிர்ப்ப = மெய் கூச்சம் அடைந்து

கர மலர் மொட்டித்து, இருதயம் மலர = இரண்டு கரங்களும் கூப்பி, இருதயம் மலர்ந்து

கண் களி கூர, =  கண்கள் ஆனந்தத்தை வெளிப் படுத்த

நுண் துளி அரும்ப = வியர்வை அரும்ப

சாயா அன்பினை = தளராத அன்பினை

நாள்தொறும் தழைப்பவர் = தினமும் வளரச் செய்பவர்களுக்கு

தாயே ஆகி = தாய் போல இருந்து

வளர்த்தனை போற்றி! = வளர்த்தனை போற்றி

இறைவன் தாய் போல கருணை செய்வான்.

அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா ?


முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும் , அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

பத்து மாதம் , படாத பாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை  கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ள மாட்டாள். முடியுமா ?

இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை  சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல் , அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும் , கோபத்திற்கும் அளவு இருக்காது.

சூர்பனகையை மூக்கையைம், காதையும், முலையையும் அரிந்தான் இலக்குவன். அவளால் தாங்க முடியவில்லை. எந்தப் பெண்ணாலும் சகிக்க முடியாது.

ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும்.  வயிற்றில்  வரி வாரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

இருந்தும் அந்தப் பிள்ளையை  தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள் .

மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா , பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா , சிவப்பா, ஒல்லியா, குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வ்ளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள் . குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள் . குழந்தைக்கு வலிக்கும் என்று   ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும் , வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான் , ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள் ஒரு தாய்.


அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர். 

Thursday, June 1, 2017

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும்

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும் 


அரசை நீ ஏற்றுக் கொள் என்று இராமனிடம் பரதன் சொல்கிறான். அதை மறுத்துச் சொல்கிறான் இராமன்.

மிக மிக முக்கியமான கட்டம்.


அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. ஆனால், எது சரியோ அதைச் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

தந்தை சொல் கேட்க வேண்டும் என்பது இராமனின் வாதம்.

யார் என்ன சொன்னாலும், அறம் தான் முக்கியம். அதற்கு எதிராக யார் சொன்னாலும் அதை கேட்கக் கூடாது என்பது பரதனின் வாதம்.

இங்கே இராமன் வாதத்தைத் தொடங்குகிறான்....அண்ணன் தம்பிக்குள் நடக்கும் வாதத்தைப் பார்ப்போம். எது சரியான வழி என்று நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

"சரியான வழியும், உண்மையும், நீதியும், மேலான அறமும் இவை யாவும் எல்லாம் படித்த தந்தை சொல்லில் அடங்கும் " என்கிறான் இராமன்.


பாடல்

‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.


பொருள் 


முறையும் = ஒழுக்கமும்

வாய்மையும் = உண்மையும்

முயலும் நீதியும் = அடைய நினைக்கும் நீதியும்.

அறையும் = சொல்லப் படும்

மேன்மையோடு அறனும் = மேலான அறங்களும்

ஆதியாம் துறையுள் = தொன்மையான வழிகள்

யாவையும் = அனைத்தும்

சுருதி நூல் விடா = வேத நெறிகளை விட்டு விலகாத

இறைவர் = அரசர் (தயரதன்)

ஏவலால் = செய்யச் சொன்ன செயல்களால்

இயைவ காண்டியால் = சேர்ந்திருக்க காண் .


இராமானுக்குத் தெரியும் , பரதன் நீதி, நேர்மை, அரம் , அரச குல வழக்கம் என்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறான் என்று. அதற்கு முன்பே, சொல்லி விடுகிறான், அவை எல்லாம் தயரதன் சொன்ன சொல்லில் இருக்கிறது என்று.

தயரதனுக்குத் தெரியாத, அவன் அனைத்தையும் அறிந்தவன் எனவே அவன் சொல்லில் எல்லாம் அடங்கி இருக்கிறது என்கிறான் இராமன்.

புத்தக அறிவா, சான்றோர் சொல்லும் மொழிகளா - எதை கடை பிடிக்க வேண்டும் ?

தந்தையும் , ஆசிரியரும் சொல்லவதை கேட்பதா அல்லது தான் படித்து அறிந்தவற்றை பின் பற்ற வேண்டுமா ?

விடை வருகிறது....


Monday, May 29, 2017

இராமாயணம் - கவிதையும் ஆறும்

இராமாயணம் - கவிதையும் ஆறும் 


கவிதை என்பது ஒரு ஆறு போல இருக்க வேண்டும் என்கிறார் கம்பர்.

இன்று யார் யாரோ கவிதை எழுதுகிறார்கள்.  கவிதை எழுத முதல் தகுதி காதல் தோல்வி என்று வைத்திருக்கிறார்கள்.

எப்படி ஆறு இருக்கிறதோ அது போல கவிதை இருக்க வேண்டும் என்கிறார்.

ஆறு எப்படி இருக்கும் ?

பாடல்

புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

பொருள்


புவியினுக்கு அணியாய் = நிலமகள் கழுத்தில் கிடக்கும் ஒரு சங்கிலி போல, இடுப்பில் உள்ள ஒரு ஒட்டியாணம் போல அணிகலனாக

ஆன்ற பொருள்தந்து = வரும் வழியில் உள்ள நல்ல பொருள்களை எல்லாம் ஏந்தி கொண்டு வந்து

புலத்திற்றாகி = புலன்களையும் தாண்டி மகிழ்ச்சி தருவதை போல

அவி அகத் துறைகள் தாங்கி =  மனதுக்கு குளிர்ச்சி தந்து

ஐந்திணை நெறி அளாவி = ஐந்து திணைகளையும் தொட்டுக் கொண்டு

சவி உறத் தெளிந்து = தெளிந்த நீரோடையாக

தண்ணென்று = குளிர்ந்து

ஒழுக்கமும் தழுவிச் = கரைகளுக்குள், ஒரு கட்டுப்பாட்டோடு

சான்றோர் கவி எனக் = பெரியவர்கள் சொன்ன கவிதை போல

கிடந்த = சென்ற

கோதாவரியினை = கோதாவரி  ஆற்றினை

வீரர் கண்டார் = வீரர்களான இராமனும் இலக்குவனும் கண்டார்கள்

அவ்வளவுதானா ?

ஆழ்ந்து சிந்திப்போமா ?

ஆற்றினை பார்த்து இருக்கிறீர்களா ?

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு அடி எடுத்து வைத்தால் சில் என்று இருக்கும். கரையில் ஆழம் இல்லை என்று இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், திடீரென்று ஆழமாக இருக்கும். இழுத்து விடும்.  நதியின் ஆழம் எவ்வளவு என்று  மேல் இருந்து பார்த்து சொல்ல முடியாது.

சில கவிதைகள் அப்படித்தான். பார்க்க ஏதோ மேலோட்டமாக சாதாரண கவிதை போல இருக்கும். உள்ளே போக போக இழுத்துக் கொண்டே போகும். அவ்வளவு  பொருள் ஆழம் இருக்கும்.

ஆறு மலையில் இருந்து வரும் போது வரும் வழியில் உள்ள பல மலர்கள் அதன் மேல் விழும். அத்தனை மலர்களையும் சுமந்து வரும். சந்தனம் போன்ற  மரத்தை உரசிக் கொண்டு வருவதால் அந்த மணமும் சேர்ந்து இருக்கும்.

தள்ளி நின்று பார்த்தால் மிதக்கும் பூ தெரியும். நீரில் இறங்கினால் தான் மணம் புரியும்.

கவிதையும் அப்படித்தான். சும்மா வாசித்துக் கொண்டு போனால் ஏதோ அழகு தெரியும். உள்ளே இறங்கி அனுபவிக்கும் போது தான் அதன் மணம் புரியும்.

"புவியினுக்கு அணியாய்"  ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் ஆறு ஏதோ  ஒரு அணிகலன் போல வளைந்து நெளிந்து மின்னும்.

அது போல கவிதை என்பது வாழ்க்கைக்கு ஒரு அணிகலன் போல அழகு சேர்க்க வேண்டும்.


"புலத்திற்றாகி" - புலத்து + இற்று + ஆகி

புலன்களை கடந்து செல்ல வேண்டும். ஏதோ கிளர்ச்சிக்கு மட்டும் பாடல் இருக்கக் கூடாது. ஆற்றில் குளித்தால் புலன்களுக்கு இன்பம் தருவது மட்டும் அல்ல, ஒரு மன நிறைவும் இருக்கும். அது போல ஒரு பாடலைப் படித்தால் மன நிறைவு இருக்க வேண்டும்.

"அகத் துறைகள் தாங்கி" - ஆறு என்பது உயிர் வாழ உதவுகிறது.  உணவு அளிக்கிறது.  ஆறு எப்படி உயிரை தாங்கிப் பிடிக்கிறதோ, அது போல கவிதையும் உள் மனதை தாங்கிப் பிடிக்க வேண்டும். .துக்கம் வந்த நேரத்தில், சோகம் வரும் போது , மனம் சோர்வு அடையும் போது அதை தாங்கிப் பிடிக்க வேண்டும்.  நல்ல கவிதை என்பது மனதுக்கு ஆறுதல் தரும். அகத்துறை என்பது ஆண் பெண் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கை. அதை தாங்கிப் பிடிக்க வேண்டும். துறை என்றால் கரை என்றும் பொருள்.

ஐந்திணை நெறி அளாவி = ஆறு மலை, காடு, நிலம், கடல் என்று பாய்ந்து ஓடுகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு ஒழுக்கம் உண்டு. மனித வாழ்வின் ஒழுக்கம் அவன் இருக்கும் இடத்தைப் பொறுத்து அமைகிறது. கவிதை எல்லா வாழ்க்கை முறைகளையும் தொட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.


ஆறு கடைசியில் கடலைப் போய் சேரும். அது போல நல்ல கவிதையும் ஒரு ப்ரமாண்டத்ததில் கலக்க வேண்டும். உண்மை, அழகு, அறம் , ஒழுக்கம் , கடவுள் , மனித நேயம் , காதல் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மை விட பெரிய ஒன்றில் அது நம்மை கொண்டு சேர்க்க வேண்டும்.

சான்றோர் கவி என கிடந்த கோதாவரி என்கிறான் கம்பன்.

ஒரு கவிதையை படித்தால் இதில் உள்ளவை எத்தனை அதில் இருக்கிறது என்று பாருங்கள்.

அழகு
பொருள் செறிவு
மன நிறைவு
மன அமைதி
ஒழுக்கம், வாழ்க்கை நெறி

இதெல்லாம் கலந்திருக்க வேண்டும்.

இன்றும் வரும் புதுக் கவிதைகளையும், சினிமா பாடல்களையும் படிக்கம் போது  , நல்ல கவிதைக்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது.

நல்ல கவிதைகளை தேடிப் பிடித்து படியுங்கள்.


Saturday, May 27, 2017

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் , அந்தப் பெற்றோருக்குத் தெரியும்....

என்னைக்கும் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிறவள் தானே, இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்று அந்த பெண் பிள்ளைக்கு கொஞ்சம் அதிகமாகவே அன்பு காட்டுவார்கள். அதிலும் அப்பாக்கள் ரொம்பத் தான் செல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் செல்லம் கொடுத்தாலும், அம்மாவுக்கு கொஞ்சம் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

போகிற இடத்தில் இந்த பெண் எப்படி சமாளிக்கப் போகிறாளோ ?  போகிற இடத்தில் இந்த சௌகரியம் எல்லாம் இருக்குமா ? இவ்வளவு சுதந்திரம் இருக்குமா ?  என்றெல்லாம் கவலைப் படுவாள். அதற்காக இப்போது இருந்தே அந்த பெண்ணை கஷ்டப் படுத்த வேண்டுமா ? அதுவும் முடியாது.

இப்போது உள்ள அம்மாக்களுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இந்த பெண் எப்படி விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பாள் ? பிடித்த உணவு கிடைக்குமா ? எப்படி துணி துவைப்பாள் ? வேலைக்குப் போகிற இடத்தில் எங்கு தங்குவாள் ? எப்படி இந்த உலகை எதிர் கொள்ளுவாள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த கவலை இன்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே இருக்கிறது.

செல்லமாக வளர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீடு போகிறாள்.

போன இடம் அவ்வளவு பெரிய இடம் இல்லை. அவளின் பிறந்த வீடோ பெரிய பணக்கார வீடு. பால் சோறு தான், தங்கக் கிண்ணம் தான், பெரிய வீடு, வீட்டை அடுத்த தோட்டம் , தோட்டத்தில் மல்லிகையும், முல்லையும் பூத்து குலுங்குகிறது.

போன இடத்தில் சரியான சாப்பாடு கூட கிடையாது.

கட்டிக் கொடுத்த பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வர செவிலித் தாய் போகிறாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இந்தப் பெண் நம் வீட்டில் இருக்கும் போது தேனும் பாலும் கலந்த உணவை பொற் கிண்ணத்தில் ஏந்தி சாப்பிடு சாப்பிடு என்று பூ சுற்றிய குச்சியை வைத்து அவளை விரட்டிக் கொண்டு சென்றோம், பொற் சிலம்பு ஒலிக்க அங்கும் இங்கும்  பூ பந்தலுக்கு கீழே ஓடுவாள். சரியான விளையாட்டுப் பெண்ணாக இருந்தாள் . நீரோடும் இடத்தில் பரல் கற்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நீர் சோறுதான் இருக்கிறது. அது கூட மூன்று  வேளையும் இல்லை. ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்கிறாள். அப்போது கூட தந்தை வீட்டில் இருந்த செல்வச் செழுமையை நினைத்து வருந்தவில்லை. இந்த அறிவையும், கற்பையும் இவள் எங்கு கற்றுக் கொண்டாள் என்று அந்த செவிலித் தாய் வியக்கிறாள். பாடல்
   


பாடல்

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே


பெண்ணைப் பெற்ற அம்மாக்களே, கவலைப் படாதீர்கள். உங்கள் பெண்  எந்த சிக்கலையும் எதிர் கொண்டு சமாளிப்பாள். நீங்கள் சமாளிக்கவில்லையா ? வழி வழியாக இப்படித்தானே செய்து கொண்டு  வந்து இருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள். விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் உங்கள் மகள் , அது விடுதியாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் இடமாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி  , நல்ல படி எதிர் கொண்டு சமாளிப்பாள்.

ஐயோ, நான் அவளுக்கு ஒண்ணுமே சொல்லித் தரவில்லையே என்று பயப்படாதீர்கள். 

இந்தப் பாடலில் செவிலி வியக்கிறாள் - அறிவும்,  ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்  என்று.

எப்படி இவற்றை படித்துக் கொண்டாள் ? யார் இவளுக்குச் சொல்லித் தந்தார்கள் ? நானோ அவளின் தாயோ சொல்லித் தரவில்லை. தானே கற்றுக் கொண்டு விட்டாளே என்று வியக்கிறாள்.

அது தான் பெண்.

மகா சக்தி.  அவள் அனைத்தும் நடத்துவாள். கவலையை விடுங்கள்.