Saturday, June 15, 2019

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம்  - மங்கல வாழ்த்து 


சொற்களுக்கு வலிமை உண்டு என்று நம் முன்னவர்கள் நம்பினார்கள்.

தமிழில் மங்கல சொற்கள், அமங்கல சொற்கள் என்று உண்டு.

எப்போதும் அமங்கல சொற்களை தவிர்த்து மங்கல சொற்களையே பயன்படுத்த வேண்டும். அமங்கல சொற்களை சொல்லுவதை விடுங்கள், அது காதில் கூட விழக் கூடாது என்று தான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கெட்டி மேளம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் அதற்குத்தான். யாராவது, அக்கம் பக்கத்தில் ஏதாவது சொல்லுவார்கள். அது பூஜை செய்யும் போது நம் காதில் விழும். மனம் அந்த சொல்லைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னேயே போய் விடும். அதைத் தவிர்க்கத்தான், மணி அடிப்பது.

கோவிலிலும், பூஜை நடக்கும் போது பெரிய மணியை அடிப்பார்கள். காண்டா மணி என்று அதற்குப் பெயர்.

கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.

கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி நூலை தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.

சிக்கல் என்ன என்றால், எந்தக் கடவுளை வாழ்த்தினார் என்று ஆராய புறப்பட்டுவிடும் ஒரு கும்பல்.  அந்தக் கடவுள் அவர்கள் வணங்கும் கடவுள் இல்லை என்றால், அந்த நூலையே புறக்கணித்து விடுவார்கள்.

அது சைவ நூல், அது வைணவ நூல் என்று பேதம் காணத் தொடங்கி விடுவார்கள்.

திருவள்ளுவர் "ஆதி பகவன்", "வாலறிவன்" , "எண் குணத்தான் " என்று சொன்னார்.  அது எல்லாம் சமண சமயக் கடவுள். எனவே திருவள்ளுவர் ஒரு சமணர் என்று  முத்திரை குத்தி விட்டார்கள்.

திருவள்ளுவருக்கே அந்தக் கதி.

இளங்கோ அடிகள், மரபில் இருந்து சற்றே விலகுகிறார் .

காலத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல, அதிரடியாக  முதல் பாடலிலேயே புரட்சியை ஆரம்பிக்கிறார்.

கடவுளை விட்டு விட்டு, இயற்கையை வாழ்த்துகிறார்.

நிலவை, சூரியனை, மழையை, கதை தொடங்கும் நிலத்தை போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொது தானே. என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே?

பாடல்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

பொருள்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! = நிலவை போற்றுவோம், நிலவை போற்றுவோம்

கொங்கு = தேன் ("கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ..." பாடல் ஞாபகம் வருகிறதா?)

அலர் = நிறைந்த

தார்ச் = மாலை

சென்னி = தலை

குளிர் = குளிர்ந்த

வெண்குடை போன்று, = வெண் கொற்ற குடை போல

இவ் அம் கண் உலகு அளித்தலான். = இந்த உலகை பாதுகாத்தலால்



ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- = சூரியனை போற்றுவோம், சூரியனை போற்றுவோம்

காவிரி நாடன் = காவிரி நாடன், சோழன்

திகிரிபோல் = ஆணைச் சக்கரம் போல

பொன்  கோட்டு  = பொன்  மலை

மேரு வலம் திரிதலான். = மேருவை சுற்றி வருவதால்


மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- = சிறந்த மழையை போற்றுவோம், மழையை போற்றுவோம்

நாம = பயத்தை தருகின்ற

நீர் = நீர்

வேலி = வேலி போல (கடல் நீர் உலகிற்கு வேலி போல இருக்கிறது)

உலகிற்கு = உலகிற்கு

அவன் = சோழ மன்னன்

அளி = கொடை , ஈகை

போல் = போல

மேல நின்று = மேலே நின்று

தான் சுரத்தலான் = அது சுரத்தலால்



பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! = பூம்புகாரை போற்றுவோம்

வீங்கு நீர் = நிறைந்த நீர்

வேலி உலகிற்கு = வேலி போல் அமைந்த உலகிற்கு

அவன் குலத்தோடு = சோழன் குலத்தோடு

ஓங்கிப் = உயர்ந்து

பரந்து = விரிந்து

ஒழுகலான். = இருப்பதால்

நிலவும், சூரியனும், மழையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவு, சூரியன், மழை - இது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை, காய்வதில்லை நிலவும் சூரியனும்.

அது போல, அனைத்து குடி மக்களுக்கும் அரசன் நடு நிலையாக இருப்பான், இருக்க வேண்டும்  என்று முதல் பாட்டிலேயே எடுத்து வைக்கிறார் அடிகளார்.


அரசன் சிறந்த கொடையாளனாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வரி விதிப்பதும், போர் செய்வதும் மட்டும் அரசன் கடமை அல்ல. மழை போல பலன் கருதாமல்  உதவ வேண்டும். 

அரசன் இரக்கம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிலவு எப்படி குளிர்ந்து, சுகமாக இருக்கிறதோ அப்படி  இதமாக இருக்க வேண்டும். கொடுங்கோலனாக, மக்களை வாட்டி வதைப்பவனாக இருக்கக் கூடாது. 

அரசாங்கம் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிச்சத்தில், அனைவரும் காணும்படி  , ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும். சூரிய ஒளி எப்படி அனைத்தையும்  மறைக்காமல் காண உதவுகிறதோ அப்படி. 

மங்கல வாழ்த்து முடிந்து, காப்பியத்துக்குள் நுழைவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_15.html

Friday, June 14, 2019

சிலப்பதிகாரம் - இலக்கிய நோக்கம்

சிலப்பதிகாரம் -  இலக்கிய நோக்கம் 


ஒரு நூல் செய்வதானால் அதற்கு என்ன நோக்கம் இருக்க வேண்டும் என்று பவணந்தி முனிவர் நன்னூலில் கூறுகிறார்.

அவர் கூறுவது இருக்கட்டும். நம் இலக்கிய கர்த்தாக்களை கேட்டால் என்ன சொல்லுவார்கள் ?

"என் மனதில் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள"

"பேரும் புகழும் சம்பாதிக்க"

" பணம் சம்பாதிக்க"

"மொழியை வளர்க்க என்னால் ஆன சிறிய பங்களிப்பு"

"சிறுமை கண்டு பொங்க , அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க"

என்று காரணம் கூறுவார்கள்.

அவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாம் எதற்கு புத்தகங்களை வாசிக்கிறோம் ?

பரீட்சையில் தேற, நல்ல மதிப்பெண்கள் வாங்க, நல்ல வேலை கிடைக்க, பொழுது போக, என்னதான் சொல்லி இருக்கு என்று அறிந்து கொள்ள என்று பல காரணங்கள் இருக்கலாம்.

இவை அனைத்துமே காரணங்கள் அல்ல என்கிறார் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே"

ஒரு நூலை எழுதுவதற்கும், அதை படிப்பதற்கும் காரணம் அறம் , பொருள், இன்பம், வீடு இவற்றை அடையவே என்கிறார்.

நீங்கள் எதை வாசிக்கத் தொடங்கினாலும் இந்த நாலில் எது உங்களுக்கு கிடைக்கிறது  என்று அறிந்து கொண்டு வாசிக்க வேண்டும்.

மாத நாவல்கள் , டிவி சீரியல்கள், whatsapp துணுக்குகள் படிக்கும் போது "இன்பம்"  கிடைக்கிறதே...அதுவும் ஒரு பலன் என்றுதானே பவணந்தியார் கூறி இருக்கிறார்.  எனவே, அதில் தவறு என்ன என்று கேட்கலாம்.

அதையே இன்னும் கொஞ்சம் நீட்டிப்போம். கொள்ளை அடித்தால் பொருள் கிடைக்குமே,  அதுவும் ஒரு பலன் என்று தானே நன்னூல் சொல்கிறது? கொள்ளை அடிக்கலாமா ? ஒரு பெண்ணை கெடுப்பது ஒருவனுக்கு இன்பம் தரலாம்,  செய்யலாமா?

அதற்குத்தான் முதலில் அறத்தை வைத்தார்கள்.

அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அதன் படி பொருள் ஈட்ட வேண்டும்,  அதன் படி இன்பம் துய்க்க வேண்டும், அதன் படி வீடு பேற்றை அடைய வேண்டும்.

அறமே அனைத்துக்கும் அடிப்படை.

சிலப்பதிகாரம் மூன்று அறங்களை வலியுறுத்தி  சொல்கிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

"கற்புடைய பெண்ணை தெய்வமும் வணங்கும்"


இந்த மூன்று அறங்களை வைத்து பின்னப் பட்டதுதான் சிலப்பதிகாரம் என்ற  காப்பியம்.

சிலப்பதிகாரத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.  ஒரு இராவணன், ஒரு துரியோதனன் போன்ற  வில்லன்கள் யாரும் கிடையாது. கதாநாயனுக்கு  சண்டை போடும்  வாய்ப்பே இல்லை.

சண்டை போடும் அளவுக்கு அவன் வீரனும் அல்ல.

வீட்டை வெளியே அதிகம் வராத கதாநாயகி

"வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்"

என்பார் இளங்கோ அடிகள்.

கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்ற வழக்கமான பார்முலாவை உடைத்து எறிந்த  இலக்கியம் சிலப்பதிகாரம்.

நல்லது வெல்லும், தீமை அழியும் என்ற சித்தாந்தத்தையும் உடைத்து எறிகிறது  சிலப்பதிகாரம்.

கோவலன் ஒரு அப்பாவி. மனைவியின் சிலம்பை விற்க வந்தவனை போட்டு தள்ளி விட்டார்கள்.  அவனுக்கென்று யாரும் இல்லை.

ஒரு அனுமன், ஒரு கிருஷ்ணன் என்று யாரும் இல்லை.

அனாதையாக, முன் பின் தெரியாத ஊரில் வெட்டுப் பட்டு சாகிறான்.

இளங்கோவுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை.

தான் சொல்ல வந்த அறத்தை வலியுறுத்துவது மட்டுமே அவருக்கு நோக்கமாக இருந்து இருக்கிறது.

அதை எப்படி செய்கிறார் என்று பார்க்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_14.html

Thursday, June 13, 2019

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம்

சிலப்பதிகாரம் - ஒரு முன்னோட்டம் 


ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று.

மற்ற காப்பியங்களில் இருந்து மிக மாறுபட்டது சிலப்பதிகாரம்.

இராமாயணமும், பாரதமும் வேற்று மொழியில் எழுதப்பட்டு பின் தமிழில் மடை மாற்றம் செய்யப்பட்டது.

அதில் உள்ள கதா பாத்திரங்கள் நமக்கு அந்நியமானவர்கள். அவர்கள் பெயர், அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நம்மில் இருந்து வேறுபட்டது.

கடவுள்கள் அவதாரங்களாக வந்து காப்பியத்தை வழி நடத்திப் போனார்கள்.

சிலப்பதிகாரத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது.

நம்ம ஊர் மதுரை, திருச்சி, பூம்புகார் என்று நம்மைச் சுற்றி நிகழ்ந்த கதை. கோவலன், கண்ணகி, மாதவி, என்ற கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராய் உள்ள கதா பாத்திரங்கள்.

பலவீனமான கதாநாயகன். வரம் வாங்கி, போர் செய்து, பெரிய தாதா கிடையாது. பணக்கார வீட்டுப் பையன். விலை மகள் பின் போனவன். சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு வெறும் கையோடு வருகிறான். ஒரு கொல்லன் போட்டுக் கொடுக்க, வெட்டுப் பட்டு சாகிறான்.

பூவாக இருந்த கதாநாயகி, எரிமலையாக வெடிக்கிறாள். ஊரையே எரித்து சாம்பலாக்குறாள்.

இராமாயணத்தில் சீதை, மிகுந்த ஆற்றல் உள்ளவள் தான்.

இந்த உலகை எல்லாம் என் சொல்லால் சுட்டு எரித்து விடுவேன் ஆனால் அது இராமனின்   வில்லாற்றலுக்கு மாசு என்று விட்டு விட்டேன் என்கிறாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆக்கமோ
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்

தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு இருந்து விடுகிறாள்.

அதற்கு முன்னால் , இராமனைக் காணாமல் தூக்கு போட்டு தற்கொலை கூட செய்யத் துணிகிறாள். அவ்வளவு பலவீனமாக காட்டுகிறான் கம்பன் அவளை.

பாரதத்தில், திரௌபதி, துரியோதனன் தொடையில் இருந்து வந்த இரத்தத்தை தடவித் தான் என் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததோடு சரி.  மற்றபடி அரண்மனையில் தங்கி விட்டாள்.

ஆனால், கண்ணகியோ, வெகுண்டு எழுந்து நீதி கேட்டாள் , ஊரை எரித்தாள்.

இன்று feminism , equal rights என்று பேசுபவர்களுக்கு முன்னால் கண்ணகி நிற்கிறாள். போராடினாள்.

மிக மிக சுவையான கதைப் போக்கு, சட்டு சட்டென்று மாறும் கதைப் போக்கு, கதைத் தளம், அடி நாதமாய் ஓடும் கணவன் மனைவி உறவு, அதில் ஏற்படும் சிக்கல்,  அரசியலும் , தனி மனித வாழ்வும் கலந்து நிற்கும் ஒரு வினோத கலவை.

இவற்றிற்கு மேலாக மிக முக்கியமான மூன்று அறங்களை வலியுறுத்தி, அதை சுற்றியே  கதையை நகர்த்தி, முடிவில் அந்த அறங்களின் வலிமையை நிலை நிறுத்திப் போகிறது இந்த காப்பியம்.

அது என்ன மூன்று அறம் ?

மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_13.html

Wednesday, June 12, 2019

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?

கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டிய சூர்ப்பனகையின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, இராமன் பர்ணசாலைக்குள் சீதையோடு போய் விட்டான்.

வெளியே நின்ற சூர்ப்பனகை புலம்புகிறாள்.

"நீல மலரோ, மீனோ என்று சொல்லும் படி இருக்கும் சீதை , இலக்குமி போல இருக்கிறாள். அவளைப் பார்த்த இராமனின் கண்கள் என்னையும் பார்க்குமா" என்று ஏங்குகிறாள். காதலில், காமத்தில், அவளின் உயிர் ஓய்கிறது, ஆனாலும் ஆசை ஓயவில்லை என்கிறான் கம்பன்.


பாடல்



‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.


பொருள்


‘காவியோ = நீல மலரோ

கயலோ  = மீனோ

எனும் = என்று எண்ணும்படி இருக்கும்

கண் இணைத் = இரண்டு கண்கள் கொண்ட

தேவியோ = இராமனின் தேவியான சீதையோ

திருமங்கையின் = திருமகளைவிட

செவ்வியாள்; =  சிறந்தவளாக இருக்கிறாள்

பாவியேனையும் = பாவியாகிய என்னையும்

பார்க்கும் கொலோ? ‘எனும் = பார்ப்பானா என்று

ஆவி ஓயினும் = உயிர் ஓய்ந்தாலும்

ஆசையின் ஓய்வு இலாள். = ஆசை ஓய்வு இல்லாதவளான சூர்ப்பனகை

பாட்டு என்னவோ, மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாகத்தான் தெரியும்.

தான் பெரிய ஆள், மன்மதனும், மும்மூர்த்திகளும், தேவர்களும் என்னை அடைய  தவம் கிடக்கிறார்கள் என்று தற்பெருமை பேசிய சூர்ப்பனகை, தான் பெரிய ஆள் இல்லை என்று உணர்கிறாள்.  காதல் என்று வந்து விட்டால், இந்த ஆணவம் போய் விடுகிறது. யாரை காதலிக்கிறோமோ, அவர்களே உலகம் என்று ஆகிப் போகிறது.  நீ இல்லாமல் என் வாழ்வு பூரணமாகாது என்ற நிலைக்கு காதலர்கள் வந்து விடுகிறார்கள்.   நீ  இல்லாமல் எனக்கு சந்தோஷம் இல்லை  என்பது எதை காட்டுகிறது   என்றால், நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நீ இருந்தால் தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்  என்று காதலிப்பவருக்கு  அனைத்து முக்கியத்துவமும் போகிறது. தன்னைத் தானே  தாழ்த்தி, காதலிப்பவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பது காதல்.

தற்பெருமை பேசிய சூர்ப்பனகை "பாவியேனையும் பார்க்கும் கொலோ?" என்று  தன்னை ஒன்றும் இல்லாதவளாக உணரத் தலைப் படுகிறாள்.


எவ்வளவு பெரிய ஆணவக் காரனையும், காதல் நாய் குட்டிப் போல மென்மை படுத்தி விடுகிறது.

தெரியாமலா சொன்னான் பாரதி "ஆதலினால் காதல் செய்வீர்" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அது என்ன "ஆவி ஓயினும் ".

ஆவி எப்படி ஓயும்? ஆவி என்ன ஓடி ஆடி வேலை செய்கிறதா, களைப்பு அடைய?

உடல் ஓயும். நமக்குத் தெரியும்.

உள்ளம் ஓயும். அதுவும் நமக்குத் தெரியும்.

உயிர் ஓயுமா?

ஓயும். அது நமக்குத் தெரிவதில்லை.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் " என்பார் மணிவாசகர். இளைத்தது யார்? உடலா? உள்ளமா ? இல்லை, இந்த உயிர் ஒவ்வொரு பிறவியாக எடுத்து களைத்து, சலித்துப், இளைத்துப் போய் விடுகிறது.


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


உயிரும் இளைக்கும்.

பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்

பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!

பிறந்து அலுத்தேன் நான் என்பார் பட்டினத்தார்.  உயிரும்  அலுக்கும்.

உடலையும், உள்ளத்தையும் தாண்டி உயிரைப் பற்றும் காதல்.


புலம்புவது சூர்ப்பனகை.


பக்திப் பாடல்களைப் பார்த்தால் தெரியும், பாடுபவர்கள், "நான் ஒரு பாவி, நான் ஒரு அறிவிலி,  நான் ஒரு முட்டாள், ஆண்டவா என்னை காப்பாற்று" என்று   தன்னைத் தாழ்த்தி இறைவனை போற்றுவார்கள்.

"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு 
தாயிற் சிறந்த தயவான தத்துவனே "

என்பது திருவாசகம்.

"நம்மையும் ஒரு பெருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து" 

என்பதும் மணிவாசகம்.

சூர்ப்பனகை சொல்லுகிறாள், "இந்த பாவியை அவன் பார்ப்பானா"  என்று.

சிந்திக்கலாம்தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_12.html


Monday, June 10, 2019

திருக்குறள் - பணத்தை எப்படி செலவழிக்கலாம் ?

திருக்குறள்  - பணத்தை எப்படி செலவழிக்கலாம் ?


நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி எல்லாம் செலவழிக்கலாம்?

நமக்கு வேண்டிய பொருள்கள் வாங்கலாம். பெரிய டிவி, பெரிய கார், ஒரு வீடு, நகை, கொஞ்சம் நிலம், என்று ஏதாவது வாங்கிப் போடலாம்.

பொருள்கள் நிறையவே இருக்கிறது என்றால், அனுபவங்களை வாங்கலாம். அயல்நாடுகளுக்கு ஊர் சுற்றப் போகலாம், வீட்டுக்கு இன்னும் ஒரு வேலை ஆளை வைக்கலாம், புது புது உணவு வகைகளை உண்டு மகிழலாம், இப்படி அனுபவங்களை சேகரிக்கலாம்.

இரண்டும் வேண்டாம் என்றால், பேசாமல் வங்கியிலோ, அல்லது shares, mutual பியூன்ட்ஸ், என்று பிற்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்கலாம்.

அவ்வளவுதானே செய்ய முடியும்.

இவற்றை எல்லாம் விடுத்து, வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார். மிக மிக இன்பம் தரக் கூடிய வழியில் உங்கள் பணத்தை செலவிட ஒரு வழி சொல்கிறார்.

கொஞ்சம் தானம் செய்து பாருங்கள். அதில் வரும் இன்பம் அளப்பரியது என்கிறார் வள்ளுவர்.

தானம் செய்து நமக்கு பழக்கம் இல்லை. எனவே, அதில் உள்ள இன்பம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

"ஆமா, இதெல்லாம் ஒரு அறிவுரையா ? நமக்கே பணம் பத்தவில்லை. இதில் எங்கிருந்து  தானம் செய்வது. தனக்கு மீறியதுதான் தானம் என்று சொல்லுவார்கள். இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும். நடை முறையில் சாத்தியம் இல்லை "

என்று நாம் நினைக்கலாம்.

நம்மிடம் பணம் இல்லை அல்லது போதாது என்று நினைக்கும் நாமே எவ்வளவு  வெட்டி செலவு செய்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு ஒரு புதுத் துணி, அவளின் பிள்ளைகளுக்கு  நோட்டு புத்தகம், வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது பசித்தவர்களுக்கு அன்ன தானம், யாருக்கோ மருத்துவ செலவுக்கு முடிந்த அளவு  நன்கொடை, அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேளை  வயிறார உணவு ....

இப்படி எவ்வளவோ செய்யலாம்.

ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் தானம் செய்தாலே போதும், உலகில் எவ்வளவு  துன்பங்கள் மறைந்து விடும்.

நாம் தானம் செய்வதைப் பார்த்து, நம் பிள்ளைகள் படிக்கும்.

முன்பெல்லாம், வங்கி , stock exchange இதெல்லாம் கிடையாது. பணத்தை பெட்டியில் , குடத்தில் போட்டு புதைத்து வைப்பார்கள். வயதான காலத்தில் நினைவு தவறி விடும். வைத்த இடம் மறந்து போகும்.  சேமித்த பணம் எல்லாம் யாருக்கும் பயன் படாமல் போய் விடும்.

இப்போது தான் நிறைய வசதி வந்து  விட்டதே. நாமினேஷன் வசதி எல்லாம் இருக்கிறதே  என்று  சொல்லலாம்.

ஆனால், பங்கு சந்தையில் போட்ட பணம் நட்டத்தில் முடியலாம். வீட்டில் போட்ட பணம் , சில சமயம் நட்டத்தில் முடியலாம். யார் கண்டது ?

எனவே, இருக்கிற போதே கொஞ்சம் தானம் செய்யுங்கள்.

அதில் மிகப் பெரிய இன்பம் இருக்கிறது.

பாடல்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்


பொருள்

ஈத்துவக்கும் = ஈந்து உவக்கும். கொடுப்பதினால் வரும் சந்தோஷம்.

இன்பம் = இன்பம்

அறியார்கொல்  = அறிய மாட்டார்களா ?

தாம்உடைமை = தங்களுடைய சொத்தை

வைத்து = யாருக்கும் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொண்டு

இழக்கும்  = பின் அவற்றை இழக்கும்

வன்க ணவர் = கொடியவர்கள்

யாருக்கும் தராமல், தானே அனுபவிப்பர்களை கொடியவர்கள் என்கிறார் வள்ளுவர்.

எவ்வளவு கஷ்டப் பட்டு ஏழு வார்த்தையில் வள்ளுவர் சொன்னதை, இரண்டே வார்த்தையில் கிழவி  சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

ஈவது விலக்கேல் 

என்று.

தானம் செய்வதை விட்டு விடாதே என்றாள். விடாமல் செய்து கொண்டே இரு.

அறம் செய்ய விரும்பு 

என்று அதற்கு முன்னால் சொன்னாள். விருப்பம் வந்தால், அதை திருப்பி திருப்பி செய்வோம் அல்லவா.


சரி, தானம் கொடுப்பது என்றால் எவ்வளவு கொடுப்பது? பத்து பைசா பிச்சை காரனுக்கு போட்டால்  போதுமா ? மிஞ்சிப் போன பழைய சாதத்தை வேலைக் காரிக்கு கொடுத்தால் போதுமா ?

எவ்வளவு தானம் செய்ய வேண்டும் என்றும் சொல்லி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.

என்னதான் சொல்லவில்லை.

எவ்வளவு தானம் செய்ய வேண்டும் தெரியுமா ?......

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_10.html

Sunday, June 9, 2019

கம்ப இராமாயணம் - நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்

கம்ப இராமாயணம் - நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் 


சூர்பனகையை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு, சீதையுடன் பர்ணசாலைக்குள் போய் விட்டான் இராமன்.

வெளியே நின்ற சூர்ப்பனகை காமத்தால் தவிக்கிறாள். கம்பன் பல பாடல்களால் சூர்ப்பனகையின் காமத்தை விவரிக்கிறான்.

சூர்ப்பனகைக்கு இராமன் போனது கூடத் தெரியவில்லை. நேரில் நிற்பது போலவே தெரிகிறது.

அவனிடம் பேசுகிறாள்...அவன் எதிரில் நிற்பதாக நினைத்துக் கொண்டு...


"கண் மையால் மலை செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருப்பவனே, இராமா, என் மனதில் வஞ்சனையும், மாயையும் இருக்கிறது. அவற்றை நீ நீக்கி அருள் புரிவாய்"

என்று வேணுகிறாள். நஞ்சை தெரியாமல் குடித்தவர்கள் எப்படி தவிப்பார்களோ அப்படித் தவிக்கிறாள்.

மிக மிக ஆச்சரியமான பாடல். இது சூர்ப்பனகை சொல்லியது என்று சொல்லாமல், ஏதோ ஒரு பெரிய பக்தர் சொல்லியது என்று நினைத்துப் பார்த்தால், அப்படியே பக்தி இரசம் பொங்கும்.

என் மனதில் உள்ள அழுகை எல்லாம் நீக்கி எனக்கு அருள் புரிவாய், அஞ்சன வன்ணனனே  என்று வேண்டுகிறாள்.

பாடல்

'வஞ்சனைக் கொடு மாயை‘ 
     வளர்க்கும் என் 
நெஞ்சு புக்கு, எனது ஆவத்தை 
     நீக்கு' எனும்; 
'அஞ்சனக் கிரியே! 
     அருளாய்' எனும்; 
நஞ்சு நக்கினர் போல 
     நடுங் குவாள்.

பொருள்

'வஞ்சனைக்  = வஞ்சனை

கொடு மாயை = கொடுமையான மாயை

வளர்க்கும் = இவற்றை வளர்க்கும்

என் = என்னுடைய

நெஞ்சு புக்கு = எனது நெஞ்சில் புகுந்து

எனது ஆவத்தை  = எனக்கு வந்த ஆபத்தை

நீக்கு = நீக்குவாய்

எனும்;  = என்று வேண்டுவாள்

'அஞ்சனக் கிரியே! = அஞ்சனம் என்றால் கண்ணுக்கு இடும் மை. அஞ்சன கிரியே என்றால், மையால் ஆன மலை போன்றவனே என்று அர்த்தம். இராமன் அவ்வளவு கருப்பு.

அருளாய்' எனும்;  = எனக்கு அருள் செய்வாய் என்று வேண்டுவாள்

நஞ்சு நக்கினர் போல = நஞ்சை உண்டவர் போல

நடுங் குவாள். = நடுங்குவாள்


விஷத்தை தெரியாமல் உண்டுவிட்டால் என்ன ஆகும். சாவு நிச்சயம். வெளியே  துப்பி விட வேண்டும். துப்பவும் முடியவில்லை. சரி, உள்ளேயே வைத்து  ஜீரணம் பண்ணி விடலாம் என்றால் அதுவும் முடியாது.

இராமன் மேல் கொண்ட காதலை விடவும் முடியவில்லை. உள்ளே வைத்துக் கொள்ளவும்  முடியவில்லை.

தவிக்கிறாள்.

பலருக்கு, காமம் என்றால் ஏதோ அசிங்கம், அது ஒரு தேவை இல்லாத ஒன்று, உடல் சார்ந்த   ஒரு தேடல், பசி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சூர்ப்பனகை மூலம் கம்பன் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுகிறான்.

காமத்தின் உச்சியில் பக்தி பிறக்கிறது.

சூர்ப்பனகை தன் தவறுகளை உணர்கிறாள். தன் மனதில் உள்ள குற்றங்களை  வாய் விட்டு ஒப்புக் கொள்கிறாள்.

இராமனிடம் சரணாகதி அடைகிறாள்.

என் மனதில் உள்ள குற்றங்களை நீக்கி அருள் புரிவாய் என்று வேண்டுகிறாள்.

"அஞ்சன கிரியே அருள் புரிவாய்"

என்று அரற்றுகிறாள்.

காமம் ஒரு படிக்கட்டு. அதில் ஏறி மேலே சென்று விட வேண்டும். படியிலேயே நின்று கொண்டு இருக்கக் கூடாது.

சூர்ப்பனகை செய்த தவறு, அங்கேயே நின்றது.

அடுத்து வரும் சில பாடல்களில் சூர்ப்பனகை காதலாகி கசிந்து, நெகிழ்ந்து உருகுவதை  கம்பன் காட்டுகிறான். படிக்கும் நமக்கே அவள் மேல் ஒரு பரிதாப  எண்ணம் எழும்.

அதையும் படிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_9.html

Friday, June 7, 2019

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள்

கம்ப இராமாயணம் - பெண் மேல் அம்பு எய்த ஆடவர்கள் 


தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திய சூர்பனகையை பார்த்து அது முடியாது என்று சொல்லி விட்டு இராமன், சீதையுடன் குடிலுக்குள் போய் விட்டான்.

தனித்து விடப்பட்ட சூர்ப்பனகை தவிக்கிறாள்.

இராமன் கொஞ்சம் ஆசை வார்த்தைகள் பேசிவிட்டு, பின் அவளை தவிக்க விட்டு போய் விட்டான்.

காமத்தில் தவிக்கிறாள் சூர்ப்பனகை.

தாடகை மேல் இராமன் மேல் விட்ட அம்பு போல, மன்மதன் விட்ட அம்பால் நலிந்து மெலிகிறாள்.

பாடல்


தாடகைக் கொடி யாள் 
     தட மார்பிடை, 
ஆடவர்க்கு அரசன் அயில் 
     அம்பு போல், 
பாடவத் தொழில் மன்மதன் 
     பாய் கணை 
ஓட, உட்கி, உயிர் 
     உளைந்தாள் அரோ!

பொருள்

தாடகைக்  = தாடகை

கொடி யாள்  = என்ற கொடியவன்

தட மார்பிடை,  - பரந்த வலிமையான

ஆடவர்க்கு = ஆடவர்களுக்கு

அரசன் = அரசனான

அயில்  = கூரிய

அம்பு போல்,  = அம்பைப் போல

பாடவத் = வல்லமை

தொழில் = தொழில் செய்யும்

மன்மதன்  = மன்மதன்

பாய் = பாய்ந்த

கணை  = கணையைப் போல

ஓட = ஓடும்படி

 உட்கி = அஞ்சி

 உயிர்  உளைந்தாள் அரோ! = உயிர் வருந்தினாள்


இராமன் , தாடகை மேல் அம்பு எய்தான்.

இங்கே, மன்மதன் அம்பு எய்கிறான். 

இரண்டு ஆடவர்கள், பெண்கள் மேல் அம்பு எய்ததை கம்பன் காட்டுகிறான். 

காமம் படுத்திய பாடு. காப்பியத்தை எங்கெல்லாம் கொண்டு சென்றது என்று நாம் பார்ப்போம்.