Thursday, September 23, 2021

திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்

 திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்


குழந்தைக்கு சோறு ஊட்டுவது இன்பம். குழந்தை ஒவ்வொரு கவளமாக உண்ணும் அழகே அழகு. அதன் சிறிய வாய், பல் இல்லாத அந்த பொக்கை வாய் அல்லது பல் முளைக்க இருக்கும் அந்த எயிறு, வாயின் ஓரம் வழியும் அந்த எச்சில்...எல்லாமே அழகுதான்.


சில சமயம் பிள்ளைக்கு சோறு ஊட்டும் போது, குழந்தையும் சோற்றில் கை வைத்து எடுத்து உண்ண பார்க்கும். அது கூட பரவாயில்லை. உணவு தோய்ந்த கையை நமக்கு ஊட்ட முயற்சி செய்யும். அதன், அந்த சின்ன கையில் ஒட்டியிருக்கும் ஓரிரண்டு பருக்கைகள்...அதற்கு அமுதமும் ஈடாகாது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்



பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_23.html


(Please click the above link to read further)



அமிழ்தினும் = அமுதத்தை விட 


ஆற்ற இனிதே = கொல்வதற்கு இனிதானது 


தம் மக்கள் = தங்கள் பிள்ளைகள் 


சிறுகை  = சிறிய கையில் 


அளாவிய கூழ் = விரவிய சோறு 



மூன்று விடயங்களை நாம் உன்னிப்பாக கவனித்தால், இன்னும் இரசிக்கலாம். 


முதலாவது, "தம் மக்கள்". நம்ம பிள்ளை கையில் அளாவிய சோறு தான் அமுதை விட இனிமையாக இருக்கும். பக்கத்து வீட்டு பிள்ளை சோறு நமக்கு இனிமையாக இருக்குமா? 


இரண்டாவது, "சிறு கை": கை அளாவிய என்று சொல்லவில்லை. சிறு கை என்று சொல்கிறார். நம் பிள்ளைதான் என்றாலும் முப்பது வயதில், சோற்றை அளாவித் தருகிறேன் என்றால் சுவைக்குமா? அந்த வயதில் அது சுவையாக இருக்கும். 


மூன்றாவது, "கூழ்". கூழ் என்பதற்கு சோறு என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். அதாவது மிக எளிமையான ஒரு உணவு கூட, குழந்தையின் கை பட்டால் அமுதம் மாதிரி இருக்கும் என்கிறார். 


அனுபவித்தால் அன்றிப் புரியாது. 


அனுபவித்தவர்கள், ஒரு முறை அதை நினைத்து புன்னகை பூக்கலாம். 


மற்றவர்கள், அந்த அனுபவத்துக்காக காத்து இருக்கலாம். 



Wednesday, September 22, 2021

மணிமேகலை - அறவிலை பகர்வோர்

 மணிமேகலை - அறவிலை பகர்வோர் 


சமயம் சார்ந்த பண்டிகைகள், திருமண நாள், பிறந்த நாள் போன்ற நல்ல தினங்களில் வீட்டில் விசேடமாக பலகாரங்கள் செய்து அக்கம் பக்கம், தெரிந்தவர், உறவினர், நண்பர்களுக்கு வழங்குவது வழக்கம். அது நல்ல பழக்கம்தான். 


ஆனால், அது ஏதோ பெரிய அறச் செயல், புண்ணிய காரியம் என்று நினைக்கக் கூடாது. "நாலும் கிழமையும்னா நாலு பேருக்கு வீட்டுல செஞ்ச பலகாரங்களை தவறாமல் அனுப்பி விடுவேன்" என்பதில் பெருமை கொள்ளக் கூடாது. 


மணிமேகலை சொல்கிறது, "பொருள் உள்ளவர்களுக்கு நாம் அளிக்கும் எதுவும் அறத்தை விலை பேசுவது மாதிரித்தான்" என்று. 


ஒரு வியாபாரி மற்றவருக்கு ஒரு பொருளை கொடுக்கிறான் என்றால் அதற்கு காரணம் அதில் அவனுக்கு ஒரு இலாபம் வரும் என்ற எதிர்பார்ப்பு தான். அது ஒரு அறச் செயலா? இல்லையே. அது இலாபம் நோக்கிய வாணிபம். 


அது போல பொருள் உள்ளவர்களுக்கு செய்வது, அவர்களால் பின்னால் நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. அது அறத்தை விலை பேசி விற்பது போல என்கிறது மணிமேகலை. 


பாடல் 


ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_22.html


(click the above link to continue reading)


ஆற்றுநர்க் களிப்போர் = ஆற்றுனற்கு அளிப்போர் = பொருள் உள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள் 


அறவிலை பகர்வோர் = அறத்தினை விலை கூறுபவர்கள் 


ஆற்றா = ஆற்ற முடியாத 


மாக்க ளரும் = மக்களின் கொடிய 


பசி களைவோர் = பசியை போக்குபவர் 


மேற்றே = அவர்கள் கண்ணதே 


யுலகின் = இந்த உலகின் 


மெய்நெறி = உண்மையான வழியில் செல்லும் 


வாழ்க்கை = வாழ்கை 


மண்டிணி = மண்ணால் திணித்து அடர்நத 


ஞாலத்து = உலகில் 


வாழ்வோர்க் கெல்லாம் = வாழ்வோருக்கு எல்லாம் 


உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே = உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - உணவு கொடுத்தவர், உயிரை கொடுத்தவருக்கு சமம். 


உணவைக் கொடுப்பது, உயிரைக் கொடுப்பது மாதிரி. 


உணவு கொடுக்கும் போது ஏதோ உணவைக் கொடுக்கிறோம் என்று நினைக்கக் கூடாது. ஒருவருக்கு உயிரைக் கொடுக்கிறோம் என்று நினைக்க வேண்டும்.  


ஏதோ நாம் கொடுத்த உணவால் அவர் உயிர் பிழைத்தார் என்று அல்ல. நம்மால் அவர் இன்னும் சிறிது காலம் வாழ்வார்  என்று நினைக்க வேண்டும். 


செல்வர்களுக்கும், பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தருவது, அறவிலை பகர்வதுதான்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள் நம்மவர்கள்!



Monday, September 20, 2021

நாலடியார் - பெரியார் வாய்ச் சொல்

 நாலடியார் - பெரியார் வாய்ச் சொல் 


எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியமலேயே, ஏதோ மனதுக்கு சரி என்று பட்டதை செய்து கொண்டும், சரி அல்ல என்று பட்டதை முடிந்த வரை தவிர்த்தும் வாழ்கிறோம். ஆனால், நாம் செய்பவை சரி தானா, செய்யாமல் விட்டது உண்மையிலேயே தீமைதானா ? தெரியாது நமக்கு. 


அது போன்ற குழப்பங்கள் வரும் போது, நம் அற நூல்கள் வழி காட்டுகின்றன. அவை நம் சிக்கல்களை முழுவதுமாக தீர்த்து விடாது. வழி காட்டும். 


அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று நாலடியார். 


"எதை அறிய வேண்டும் ? எதற்கு அஞ்ச வேண்டும்? எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் ? எதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் ? எதை வெறுக்க வேண்டும் ? எதை எப்போதும் கை விடக் கூடாது?"


இந்தக் கேள்விகளை கேட்டு, பதிலும் தருகிறது கீழே உள்ள நாலடியார் பாடல் . 


பாடல் 


அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_20.html


(Please click the above link to continue reading)


அறிமின் அறநெறி = அறம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்


அஞ்சுமின் கூற்றம்: = எமனுக்கு அஞ்ச வேண்டும்.  மரணம் எப்போதும் வரும் என்ற பயத்தில் நல்லது செய்ய வேண்டும், நல்லவற்றை படிக்க வேண்டும், தீயவற்றில் இருந்து விலகி நடக்க வேண்டும். 

பொறுமின் பிறர்கடுஞ்சொல் = பிறர் சொல்லும் கடிய சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். 


போற்றுமின் வஞ்சம் = வஞ்சம் மனதில் புகுந்து விடாதபடி மனதை போற்றி பாதுகாக்க வேண்டும். 


வெறுமின் வினைதீயார் கேண்மை = தீய செயல் செய்பவர்களின் நட்பை வெறுக்க வேண்டும் 


எஞ்ஞான்றும் = எப்போதும் 


பெறுமின் பெரியார்வாய்ச் சொல். = பெரியவர்கள் சொல்லும் சொற்களை 


மற்றவற்றில் சில சமயம் நாம் வழுவினாலும் வழுவுவோம். பெரியார் சொல்வதை கேட்பதில் இருந்து ஒரு காலும் வழுவக் கூடாது என்பதற்காக "எஞ்ஞான்றும்" என்ற சொல்லைப் போட்டு இருக்கிறார்.


ஒரு போதும் அவர்கள் சொல்வதை கேட்காமல் இருக்கக் கூடாது. 


அறிவிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்களை கண்டு பிடிப்பதுதான் சிரமமாக இருக்கிறது. 


இரண்டும் ஒரு சேர அமையப் பெற்றவர்கள் நாளும் அருகி வருகிறார்கள். 


தேடி கண்டு பிடிக்க வேண்டும். 


உயர்ந்த நூல் ஆசிரியர்கள்தான் எனக்குப் பெரியவர்கள். எப்போதும் உயர்ந்த விடயங்களை சொல்லித் தர தயாராக இருப்பார்கள். 


எடுக்கணும். படிக்கணும். அவ்வளவுதான். 




Sunday, September 19, 2021

ஒன்பதாம் திருமுறை - கொண்டும் கொடுத்தும்

 ஒன்பதாம் திருமுறை  - கொண்டும் கொடுத்தும் 


கடவுளை நம்புகிறவர்கள், நம்பி விட்டுப் போக வேண்டியது தானே. கடவுளை நம்பாதவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்ய வேண்டியது. இவர்கள் நாலு கேள்வி கேட்க, அவர்கள் நாற்பது பதில் சொல்லுவார்கள். அந்த பதிலில் இருந்து நூறு கேள்வி பிறக்கும். இறுதியில் இருவரும் தங்கள் கொள்கைகளில் இருந்து மாறப் போவது இல்லை. மாறாக, அனாவசியமான சண்டையும், சச்சரவும், மனக் கசப்பும் மட்டுமே மிஞ்சும். 


ஆசிரியர் சொல்கிறார் "நீ கடவுளை நம்பவில்லையா, தள்ளிப் போ" என்று எதுக்கு அனாவசியமான தர்க்கம். நம்புகிறவர்கள் வாருங்கள். நம்பாதவர்கள் போய் விடுங்கள் என்கிறார். 


மேலும், நம் பண்பாட்டில், எந்த உறவாக இருந்தாலும், அது கொடுத்து வாங்கித்தான் பழக்கம். 


இறைவனாகவே இருந்தாலும், அவனிடம் எல்லாம் இருந்தாலும், நம்மிடம் இருப்பது எல்லாம் அவன் தந்தது என்றாலும், பக்தர்கள் இறைவனிடம்ஒன்று கேட்பதற்கு முன்னால், அவனுக்கு ஒன்றைத் தந்துவிட்டுத் தான் கேட்பார்கள். 


பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் 

இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய் 

துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா 


என்பது ஔவையின் பாட்டு. 


நான் உனக்கு நாலு தருகிறேன், நீ பதிலுக்கு மூன்று தா என்று வேண்டுகிறாள். 

கேட்பது, வாங்குவது எல்லாம் கேவலம் என்று நினைக்கிறார்கள். 


அல்ல. கேட்டு, வாங்கிப் பாருங்கள். உறவு பலப்படும். நான் கொடுத்துக் கொண்டே இருப்பேன், கேட்க மாட்டேன். கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்றால் உறவு பலவீனப் பட்டு விடும். 



கணவன், மனைவி உறவு என்றால் கூட, அன்பை கேட்டுப் பெற வேண்டும். நான் கேட்க மாட்டேன், நீயாகத் தர வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு நின்றால் அன்பு ஒருகாலும் கிடைக்காது. 



சில பேர் கொடுத்தால் கூட வாங்குவது இல்லை. 



திருமணம், அல்லது வேறு ஏதாவது விசேடம் என்றால், அழைப்பிதழில் "நன்கொடை ஏற்றுக் கொள்ள பட மாட்டாது" (gifts not accepted) என்று அச்சடிக்கிறார்கள். 



அது சரி அல்ல. நான் தருவதை நீ ஏற்றுக் கொள்ளவிட்டால், நீ தரும் உபசரிப்பை நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? 



இறைவனுக்கு ஒரு பழம், ஒரு வெற்றிலை, ஒரு ரூபாய் உண்டியலில் போடுவது என்று ஏதோ ஒன்றை கொடுக்கும் குணம் உள்ளவர்கள் நம்மவர்கள். 



இறைவனோடு அப்படி ஒரு அன்யோன்ய உறவு.  ஒன்றும் இல்லை என்றால், முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். நம் முடியை வைத்து இறைவன் என்ன செய்யப் போகிறான்? அது அல்ல கேள்வி. 


நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அடையாளம். என்னையே உன்க்குத் தருகிறேன் என்பதன் குறியீடு. மொட்டை அடித்தால் அடையாளம் மாறிப் போய் விடுகிறது அல்லவா?



"கொண்டும் கொடுத்தும் வழி வழியாக இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள்" என்கிறார். 


பாடல் 


மிண்டு மனத்தவர் போமின்கள்

    மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்

    செய்மின் குழாம்புகுந்

தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்

    ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

    பல்லாண்டு கூறுதுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_19.html


(Please click the above link to continue reading)




மிண்டு = எதிர் வாதம் பேசுபவர்கள். இன்றும் கூட மலையாளத்தில் "நீ மிண்டாதிரு" என்று கூறுவார்கள். நீ எதிர் பேசாமல் இரு என்று பொருள். 


மனத்தவர் = எதிர்வாதம் பேசும் மனம் உள்ளவர்கள். 


போமின்கள் = போய் விடுங்கள். உங்களோடு பேச எங்களுக்கு ஒன்றும் இல்லை 


மெய்யடியார்கள் = உண்மையான அடியவர்கள் 


விரைந்து வம்மின் = விரைந்து வாருங்கள் 


கொண்டும் = பெற்றுக் கொண்டும் 


கொடுத்தும் = கொடுத்தும் 


குடிகுடி = வழி வழியாக 


யீசற்காட் செய்மின் = ஈசனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்யுங்கள் 


 குழாம்புகுந்து  = கூட்டமாகச் சென்று 


அண்டங் கடந்த பொருள் = அண்டங்களை கடந்த அந்தப் பரம் பொருள் 


அள வில்லதோர் = அளவிட முடியாத 


ஆனந்த வெள்ளப்பொருள் = ஆனந்த வெள்ளமான அந்தப் பொருள் 


பண்டும் = பழம் காலம் தொட்டும் 


இன்றும் = இன்றும் 


என்றும் = என்றும் 


உள்ளபொருள் = நிரந்தரமாய் உள்ள பொருள் 


என்றே = என்று 


பல்லாண்டு கூறுதுமே  = பல்லாண்டு கூறுங்கள். 



ஆழ்ந்த கருத்துகள் கொண்ட பாடல்களை கொண்டது ஒன்பதாம் திருமுறை. பல அடியார்கள் எழுதியவற்றின் தொகுப்பு. 


மூல நூலை தேடி படித்துப் பாருங்கள். 


அத்தனையும் தேன்.


Friday, September 17, 2021

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள்

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள் 


பிள்ளைகளை எதற்கு பெற்றுக் கொள்ள வேண்டும்? இல்லறம் சரி. அதை நடத்த ஒரு துணை வேண்டும் சரி. பிள்ளைகள் எதற்கு ?


இதற்கு பரிமேலழகர் வழியில் சென்று அறிவோம். 


எந்த ஒரு செயலுக்கும் ஒரு பயன் வேண்டும். பயனில்லாத காரியத்தை செய்யவே கூடாது. 


திருக்குறள் முழுவதிலும் இரண்டு விதமான பயன்களைப் பற்றி வள்ளுவர் கூறுவார். 


ஒன்று இம்மைப் பயன். மற்றது மறுமைப் பயன். 


ஒன்று இந்தப் பிறவியில் பயன் தர வேண்டும். அல்லது மறு பிறவியில் பயன் தர வேண்டும். இரண்டிலும் தந்தால் ரொம்ப நல்லது. 


குறள் 


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_56.html


(Please click the above link to continue reading)



தம்பொருள் = ஒருவருடைய பொருள்


என்ப  = என்று கூறுவார்கள் 


தம் மக்கள் = ஒருவருடைய பிள்ளைகளை 


அவர் பொருள் = அந்தப் பிள்ளைகளின் பொருள் 


தம்தம் = அவர்கள் செய்யும் 


வினையான் வரும் = வினையால் வரும் 


ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா? 


பெரும் பெரும் உரை ஆசிரியர்களும் குழம்பி இருக்கிறார்கள் இந்தக் குறளில். பல் வேறு விதமான உரைகள் இருக்கின்றது இந்தக் குறளுக்கு. 


நாம் பரிமேலழகரை பிடித்துக் கொள்வோம். 


ஒருவனுக்கு பொருள் என்று சொன்னால் அது அவனது பிள்ளைகள் தான். இங்கே பொருள் என்பது ஏதோ திடப் பொருள் அல்ல. இங்கே பொருள் என்பது அர்த்தம் என்று கொள்ள வேண்டும். 


"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே "


என்பார் மணிவாசகர். 


அது வரை புரிகிறது. 


"அவர் பொருள் தம் தம் வினையான் வரும் " 


என்றால் என்ன அர்த்தம்?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதெல்லாம் புரியாது. 


"அவர் பொருள்" என்றால் அந்தப் பிள்ளைகளின் பொருள் 


அந்தப் பிள்ளைகளின் பொருள் அவர்கள் செய்யும் நல் வினையால் ஒருவனுக்கு வந்து சேரும் என்கிறார்.


ஒரு தந்தை இருக்கிறார். அவருக்குப் பின், அவரது மகன் பல நல்ல காரியங்களைச் செய்கிறான். அந்த நல்ல காரியத்தின் பலன் தந்தைக்கும் வந்து சேரும் என்கிறார். 


அவர் பொருள் (மகனின் பொருள்)

தம் தம் வினையான் (அவர்கள் செய்யும் நல் வினையால்)

வரும் (தகப்பனிடம் வரும்)


என்று பொருள் கொள்ள வேண்டும். 


தந்தை இறந்து பின் மறு பிறவி எடுத்து இருக்கலாம். அந்தத் தந்தையின் மகன் தற்போது செய்யும் நல்ல வினைகளின் பலன், மறு பிறவியில் உள்ள தந்தைக்குப் போய்ச் சேரும் என்கிறார். 


இது மறுமைப் பயன். 


இதற்கு முந்தைய குறளில் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.


என்றார். ஏழு பிறப்பும் தீமை தீண்டாது என்று அங்கும் மறுமைப் பயன் பற்றிக் கூறினார். 


எனவே இந்த இரண்டு குறளிலும், நன் மக்களைப் பெறுவதின் மறுமைப் பயன் பற்றிக் கூறி உள்ளார் என்று கொள்க. 


இது என்னய்யா பெரிய ரீல் ஆக இருக்கிறது. 


மறு பிறவி, நல் வினை, ஏழு பிறப்பு...இதெல்லாம் நம்பும் படியே இல்லையே.  திருக்குறள் ஏதோ மூட நம்பிக்கையின் இருப்பிடம் மாதிரி தெரிகிறதே என்று சிலர் நினைக்கலாம். 


நம்ப வேண்டாம். 


பெற்று வளர்த்த பெற்றோரின் நினைவாக ஒரு சில நல்ல காரியம் செய் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளலாமே. பலன் பெற்றோருக்கு கிடைக்கிறது, கிடைக்காமல் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லது செய்தால் என்ன குறைந்து விடப் போகிறோம்?


என்ன சரிதானே?



நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?

 நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?


சில சமயம் நமக்கு சில செயல்களை செய்வதில் ஒரு தயக்கம் இருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா, இதைச் சொல்லலாமா கூடாதா என்று ஒரு தயக்கம் இருக்கும்.  சரி போலவும் தெரியும், தவறு போலவும் தெரியும். செய் என்று ஒரு மனம் கூறும். செய்யாதே என்று இன்னொரு மனம் கூறும். 


எப்படி முடிவு எடுப்பது?


அந்த நேரத்தில், ஒரு நொடியில் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். 


அது பற்றி முன்பே சிந்தித்து இருந்தால், பழக்கம் இருந்தால் முடிவு எடுப்பது எளிதாக இருக்கும். இல்லை என்றால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு, அது சரிதானா என்று குழம்பிக் கொண்டே இருப்போம். 


அந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவி செய்ய தமிழில் ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. அவற்றை நன்றாகப் படித்து இருந்தால், தேவையான சமயத்தில் குழப்பம் இல்லாமல் முடிவு எடுக்க முடியும். 


நம்முடைய நண்பர் ஒருவர், அவருடைய நண்பரின் வீட்டு விசேடத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பரின் நண்பரோ பெரிய அரசியல் செல்வாக்கு உள்ள நபர். போன இடத்தில் நமக்கு ஒரு பெரிய பரிசு தருகிறார். அதை ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா? 


அலுவலகத்தில் கீழே வேலை பார்ப்பவர். ஏதோ ஒரு நெருக்கடியில் நம்மைப் பற்றி கொஞ்சம் தரக் குறைவாக பேசி விட்டார். அவரோடு சண்டை போட்டு, அவரை வேலையை விட்டு தூக்கி விடலாமா?


நமக்கு, நம்முடைய நண்பரின் பையனைப் பற்றி ஒரு செய்தி வருகிறது. அது நல்ல செய்தி அல்ல. அந்த செய்தி சரியா தவறா என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை. அந்தச் செய்தியை நண்பரிடம் சொல்லலாமா கூடாதா? 


பாடல் 



எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_17.html


(Please click the above link to continue reading)



எள்ளற்க = கேலி பேசாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் றென்பெறினும் = நம்மை விட எளியவர் ஏதாவது சொன்னாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா  = பெறக் கூடாதவர்கள் கையில் இருந்து 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க  = கோபம் கொள்ளக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = வறுமை உள்ள குடும்பத்தில் பிறந்தவரை 


கூறற்க = சொல்லாமல் இருக்க 


கூறல் லவற்றை விரைந்து = எதைச் சொல்லக் கூடாதோ அதை அவசரப் பட்டு 


நம்மை விட வலிமை குன்றியவர்களை பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. பணத்தில், பதவியில், படிப்பில் நம்மை விட கீழே உள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 


தீயவர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. இன்று ஒரு பொருளைக் கொடுப்பான். நாளை அதற்கு பதிலாக சட்டத்துக்கு புறம்பான காரியம் ஒன்றைச் செய்யச் சொல்வான். எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத பொருளாக இருந்தாலும், தீயவர்கள் கையில் இருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. விலை மதிக்க முடியாத பொருளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றால், அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கள் கையை எதிர் பார்க்கலாமா? தீயவர்கள் எதையாவது கொடுத்து மயக்கி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வறுமையில் பிறந்தவர்கள் தங்கள் ஆற்றாமையில் ஏதாவது சொல்லி விடலாம். அதை பெரிது படுத்திக் கொண்டு அவர்களோடு மலுக்கு நிற்கக் கூடாது.  பாவம், அவன் வறுமை அவனை அப்படி பேசச் சொல்கிறது என்று பரிதாப்பட்டு மேலே சென்று விட வேண்டும். 


நல்ல செய்தி இல்லை என்றால் அதை அவசரப்பட்டு சொல்லக் கூடாது. ஆற அமர யோசித்து, அதன் தன்மை அறிந்து, தெளிவாக சொல்ல வேண்டும். மோசமான செய்திகளை யாரும் விரும்புவது இல்லை. 


இப்படி ஒரு நூறு பாடல்கள் இருக்கின்றன. 


மெனக்கெட்டால் ஓரிரு மணியில் படித்து முடித்து விடலாம். 


படித்து விடுவீர்கள்தானே ?



Thursday, September 16, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத் தழும்பு ஏறி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத்  தழும்பு ஏறி 


தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டு இருந்தால், செய்யும் உறுப்பு காய்த்துப் போகும். 


சிலருக்கு பேனா பிடித்து எழுதி எழுதி விரல் காய்த்துப் போகும். 


சிலருக்கு வண்டியில் ஸ்டீரிங் வீலை பிடித்து பிடித்து கை காய்த்துப் போகும். 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், கடவுள் நாமத்தைப் நாக்கு தழும்பு  ஏற பாடி, கை கொண்டு மலர் தூவும் நாள் எந்நாளோ என்று உருகுகிறார். 


நாக்கில் தழுப்பு ஏறுவது என்றால் எவ்வளவு தரம் ஒரே நாமத்தை திருப்பி திருப்பி சொல்ல வேண்டி இருக்கும். 


அது பக்தி. 


ஏதோ அவசரத்தில், வாயில் முணு முணு என்று சொல்லிவிட்டுப் போவதா பக்தி. 


இதெல்லாம்  பக்தியின் வேறு தளம். இப்படி நினைக்கக் கூட நம்மால் முடியாது. 


பாடல் 


மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி


ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்


பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_16.html


(Please click the above link to continue reading)


மாவினைவாய் = குதிரை வடிவில் வந்த ஒரு அரக்கனின் வாயை 


பிளந்துகந்த = பிளந்து + உகந்த = பிளந்து மகிழ்ந்த 


மாலை = திருமாலை 


வேலை வண்ணணை = வேலை என்றால் கடல். கடல் வண்ணனை 


என் கண்ணணை = என் கண்ணனை 


வன் = பெரிய, கடினமான 


குன்ற மேந்தி = மலையை கையில் ஏந்தி 


ஆவினை = பசுக் கூட்டங்களை 


யன் றுயக்கொண்ட = அன்று உய்யக் கொண்ட = அன்று காப்பாற்றிய 


ஆய ரேற்றை = ஆயர்களின் தலைவனை 


அமரர்கள்தந் = தேவர்களின் 


தலைவனை = தலைவனை 


அந் தமிழி னின்பப் = அந்த தமிழ் இன்பப்


பாவினை = பாடலை 


அவ் வடமொழியைப் = அந்த வட மொழியை 


பற்றற் றார்கள் = பற்று இல்லாதவர்கள் 


பயிலரங்கத் தரவணையில் = இருக்கும், திருவரகத்தில் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 



கோவினை = தலைவனை 


நா வுறவழுத்தி = நாக்கு தழும்பு ஏற பாடி 


என்றன் = என்னுடைய 


கைகள் = கைகள் 


கொய்ம்மலர்தூய் = கொய்த மலரை தூவி 


என்றுகொலோ  = எப்போதோ 


கூப்பும் நாளே = கூப்பும் நாள் ?


இறை அனுபவம் எப்படி இருக்கும் என்று கேட்டால், ஒரு இனிமையான தமிழ் பாடலை கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


தமிழின் இனிமை, வட மொழியின் இனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


பாட்டின் இனிமை என்பது உணர்வு சார்ந்தது. அது இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாது. 


இசையின் இன்பத்தைப் போல. 


சிலருக்கு இசையை கேட்கும் காது வாய்த்து இருக்கும். அவர்களுக்கு இசையின் இன்பம் புரியும். இசை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது. 


பல பாட்டுப் போட்டியில் நடுவர்கள் "..அங்கங்கே கொஞ்சம் சுருதி விலகி இருந்தது" என்று சொல்லுவார்கள். நமக்கு எங்கே சுருதி விலகியது என்றே தெரியாது. எல்லாம் சரியாக இருப்பது போலவே தெரியும். (பெரும்பாலானவர்களுக்கு).  அந்த சுருதியை அறியும் செவி வாய்க்கவில்லை. 


அது போல, பக்தி இன்பம் என்கிறார். 


எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.