Saturday, October 16, 2021

திருக்குறள் - அடைக்கும் தாழ்

 திருக்குறள் - அடைக்கும் தாழ் 


அழுவது என்பது ஒரு பலகீனம் என்று ஒரு எண்ணம் பரவலாக உண்டு. 


ஆண் என்றால் எது வந்தாலும் அழக் கூடாது. பெண் என்றால் எதற்கு எடுத்தாலும் அழலாம் என்று ஒரு கோட்பாடு நம் மத்தியில் உலவுகிறது. 


சிறு வயதில் பையன்கள் அழுதால், "என்னடா இது பொம்பள புள்ளை மாதிரி அழுகிற" என்று கேலி பேசுவார்கள். அப்படி சொல்லி சொல்லி ஆண்கள் அழக் கூடாது. அது ஆண்மைக்கு அழகு அல்ல என்று செய்து விட்டோம். அப்படி சொல்லி சொல்லி வளர்த்து அவர்களை முரடர்களாக்கி விட்டோம். 


கண்ணீர் என்பது உணர்வின் வெளிப்பாடு. அது துக்கத்தில் வரும், அளவு கடந்த மகிழ்ச்சியில் வரும், எதிர் பாராத ஆச்சரியத்தில் வரும், மிக இனிமையான இசையைக் கேட்டால் வரும், பக்தியில் வரும், பிறர் துன்பம் கண்டு வரும். 


வள்ளுவர் கூறுகிறார், "கண்ணீர் அன்பின் வெளிப்பாடு. அன்பு கொண்டவர்களுக்கு ஒரு துன்பம் வந்தால், உடனே நம் கண்ணில் நீர் வரும். ஐயோ பாவம் அவன்/அவள் எப்படி இதை தங்குகிரானோ/ளோ என்று மனதின் அடியில் இருந்து ஒரு கேவல் பிறக்கும். அதில் இருந்து வரும் கண்ணீர் , மனதில் உள்ள அன்பை காட்டிவிடும். அதை அடைத்து வைக்க முடியாது" என்கிறார். 


பாடல் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_16.html


(Please click the above link to continue reading)



அன்பிற்கும் உண்டோ  = அன்பிற்கு உண்டா 


அடைக்கும்தாழ் = அடைத்து வைக்கும் தாழ்பாள் (இல்லை) 


ஆர்வலர் = மிகுந்த அன்பு கொண்டவர் 


புன் = துன்பம் கண்டு பிறக்கும் 


கணீர் = கண்ணீர் 


பூசல் தரும் = ஆராவரம் தரும். அறிவிக்கும் 


ஒருவர் மேல் செலுத்தும் அன்பு அதிகமானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


"அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு " - குறள் 


அளவு கடந்த அன்பு. தாய்க்கு பிள்ளை மேல் உள்ள அன்பு போல, சில அழ்ந்த நட்பு போல்...ஆர்வம் உண்டானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


யார் மேல் ஆர்வம் உள்ளதோ, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நமக்கு கண்ணீர் வரும். அதை அடைத்து வைக்க முடியாது. 


உண்மையான அன்புக்கு அடையாளம், கண்ணீர். 


அன்பின் அடையாளம் கூறப்பட்டது. 


மேலும் சிந்திப்போம். 




Friday, October 15, 2021

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்

 திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்


எந்தத் தீயும் சிறிது நாளில் ஆறிவிடும். பெரிய பெரிய எரிமலை கூட வெடித்துச் சிதறி, நெருப்பைக் கக்கினாலும், சில பல மாதங்களில் குளிர்ந்து விடும். 


என்றும் ஆறாத கனல் என்பது காமக் கனல்தான். உடல் உள்ள அளவும், உயிர் உள்ள அளவும் எரிந்து கொண்டே இருக்கும் கனல் அது.


ஏன் அப்படி எரிகிறது? தொடர்ந்து எரிய வேண்டும் என்றால், யாரவது அதில் மேலும் மேலும் எரியும் பொருட்களைப் போட வேண்டும், ஊதி விட வேண்டும் அல்லவா?


ஐந்து புலன்களும் அந்தக் காமக் கனலை அணையவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. 


பார்வையில் காமம், தொட்டால் சுகம், கேட்டால் இனிமை, அருகில் சென்றால் மணம் காமத்தைத் தூண்டும்...ஐந்து புலன்களும் காமம் என்ற தீ அணைந்து விடாமல் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. 


இப்படி ஒரு தீ எரிந்து கொண்டே இருந்தால், அந்த உடம்புதான் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போய் விடும் அல்லவா? அப்படி வெந்து நீராகாமல், காம உணர்வுகளை அகற்றி, உன்னை நினைக்கும் அருள் தந்து, என்னைக் காத்தாய் என்று திருக்கருவை என்ற ஊரில் உறையும் சிவ பெருமானே என்று அதி வீர ராம பாண்டியர் பாடுகிறார். 



பாடல் 


ஆறாக் காமக் கொடியகனல்

        ஐவர் மூட்ட அவலமனம்

    நீறாய் வெந்து கிடப்மேனை,

        நின்தாள் வழுத்த நினைவுதந்து

    மாறா நேயத் திரவுபகல்

        மறவா திருக்க வரமளித்தாய் ;

    சீறா டரவம் முடித்தசடைக்

        கருவை வாழும் செழுஞ்சுடரே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_15.html


(Pl click the above link to continue reading)


ஆறாக் = தீராத, அணையாத 


காமக்  = காமம் என்ற 


கொடியகனல் = கொடிய தீயை 


ஐவர் = ஐந்து புலன்களும் 


மூட்ட = பற்ற வைக்க 


அவலமனம் = கீழான மனம் 


நீறாய் = சாம்பலாய் 


வெந்து கிடப்மேனை, = வெந்து கிடக்கும் என்னை 


நின்தாள்  = உன் திருவடிகளை 


வழுத்த = போற்றும் படி, வணங்கும் படி 


 நினைவுதந்து = நினைவு தந்து 


மாறா நேயத் = மாறாத அன்பினால் 


திரவுபகல் = இரவும் பகலும் 


மறவா திருக்க வரமளித்தாய் ; = மறவாமல் இருக்க வரம் அளித்தாய் 


சீறா டரவம் = சீரும் அரவத்தை (பாம்பை) 


 முடித்தசடைக் = முடித்த சடையில் கொண்ட 


கருவை = திருக்கருவை என்ற தலத்தில் 


வாழும் செழுஞ்சுடரே ! = எழுந்து அருளி இருக்கும் உயர்ந்த சுடரே, ஒளியே 


காமத்தில் இருந்து நாமே எங்கு வெளி வருவது.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் அருளியது போல, காமத்தை மாற்றி அவனை நினைக்க அவன் தான் அருள் புரிய வேண்டும். 


மேலும், அதிவீரராம பாண்டியர் கூறுகிறார்,  ஒரு தீய எண்ணம் போக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதை மாற்ற முடியாது. அதோடு போராட முடியாது. தீய எண்ணங்களை மாற்ற எளிய வழி நல்லதை நினைப்பதே. 


whatsapp பார்க்கக் கூடாது என்று நினைத்தால் முடியாது. மனம் அங்கு தான் போகும். அதற்குப் பதில் நல்லதை எதையாவது படிக்க வேண்டும். மனம் நல்லதில் போகும். 


தவறான இடத்துக்குப் போகக் கூடாது என்று சொன்னால் மனம் கேட்காது. அந்த நேரத்தில் கோவிலுக்குப் போய் விட வேண்டும். 


காம எண்ணம் வருகிறதா, அது தவறு என்று தெரிந்தால், அதை மாற்ற மனதை வேறொன்றின் மேல் செலுத்த வேண்டும். 


இதை யோக சாத்திரத்தில் ப்ரத்யாகாரம் என்று சொல்லுவார்கள். 


மனதை மடை மாற்றும் வேலை.


மிக எளிய பாடல்கள் . 


நூறு பாடல்கள் பாடி அருளி இருக்கிறார். 


மூல நூலை படித்துப் பாருங்கள். 


Thursday, October 14, 2021

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம் 


வாழ்வின் நோக்கம் அன்பின் விரிவாக்கம். 


அவ்வளவுதான். 


எப்படி பார்த்தாலும், அடிப்படை அன்பு மேலும் மேலும் விரிந்து கொண்டே போவதுதான் நோக்கம். 


குழந்தையாக, சிறுவனாக இருக்கும் போது, அதன்  அன்பு எல்லாம் தன் மேலேயே இருக்கிறது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று குழந்தை நினைக்கும். 


வளர்ந்து, திருமணம் ஆன பின், தனக்கென்று ஒருத்தி (வன்) வந்த பின், அவள் மேல் அன்பு பிறக்கிறது. அவளுக்கு பிடிக்கும் என்று சிலவற்றை செய்கிறான். அவளுக்கென்று நேரம் ஒதுக்குக்கிறான். 


ஆனால், கணவன் மனைவி அன்பு பரிமாற்றத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் எனக்கு இன்பம் தருகிறாள், எனக்கு உதவி செய்கிறாள் எனவே நான் அவள் மேல் அன்பு செய்கிறேன் என்று அன்பு செலுத்துவதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 


பிள்ளை வந்த பின் அந்த அன்பு மேலும் விரிகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிள்ளை மேல் அன்பு பிறக்கிறது. பிள்ளையை பார்க்கும் போது அன்பு, அது பேசும் போது, அதை தழுவிக் கொள்ளும் போது இன்பம் பிறக்கிறது. அன்பு வருகிறது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_14.html


(Please click the above link to continue reading)



இல்வாழ்க்கை, 

வாழ்க்கைத் துணைநலம், 

புதல்வர்களைப் பெறுதல் 


என்று மூன்று அதிகாரங்களை பார்த்தோம்.


அடுத்தது, அன்பு, குடும்பத்தைத் தாண்டி, சமுயாத்தின் மேலும் பரவுகிறது. தன் பிள்ளையை போல் மற்ற பிள்ளைகள் மேலும் அன்பு பிறக்கும். அடுத்த வீட்டுக் காரன், அயல் வீட்டுக் காரன், நட்பு, சுற்றம் என்று அன்பு மேலும் விரிகிறது. 


பிள்ளை வந்த பின் தான் அன்பு என்றால் என்ன என்றே ஒருவனுக்கு புலப்படுகிறது.  அந்த அன்பு சமுதாயத்தின் மேலும் விரியும். 


எனவே அடுத்த அதிகாரம் 


"அன்புடைமை"


அன்பு அருளாக வேண்டும். 


தொடர்புடையார் மாட்டு செய்வது அன்பு. 


தொடர்பிலார் மாட்டும் செய்வது அருள். 


அன்பு அருளாக வேண்டும். 


இனி, அன்புடைமை பற்றி காண இருக்கிறோம். 



Wednesday, October 13, 2021

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?


சின்னக் கேள்வி. விடை தெரியுமா?


ஏன் பிறந்தோம், எதற்குப் பிறந்தோம், என்ன சாதிக்கப் பிறந்தோம், பிறந்ததின் நோக்கம் என்ன? 


தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை. 


வள்ளலார், விடை காணாமால் தவிக்கிறார். 


எல்லாம் வல்ல இறைவன், ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னைப் படைத்து இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அவன் எதையும் செய்ய மாட்டான். அப்படியானால், என்னை ஏன் படைத்தான் என்று விடை காணாமல் தவிக்கிறார். 


"ஒரு சின்னக் குழந்தை. நடக்கும் பருவம் வரவில்லை. தவழும். திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. அருகில் யாரும் இல்லை. அந்தக் குழந்தை என்ன செய்யும். பயத்தில் அழும். வேறு என்ன செய்ய முடியும்? 


அந்தக் குழந்தையை விட சிறியவனாக இருக்கிறேன். இந்த அஞ்ஞான இருளில் கிடந்து தவிக்கிறேன். இருள் மட்டும் அல்ல, கரை காண முடியாத கடலில் கிடந்து தவிக்கிறேன். ஏதோ இப்ப கப்பல் உடைந்து கடலில் விழவில்லை. பல காலமாய் இந்தக் கடலில் கிடக்கிறேன். கடலில் தவிக்கும் திரும்பு போல கிடக்கிறேன். எத்தனையோ கொடுமைகள் எல்லாம் செய்து விட்டேன். நான் எதற்காகப் பிறந்தேன் என்று சொல்வாய்" என்று இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கிறார். 


பாடல் 


 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்

அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்

கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்

களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_13.html


(Click the above link to continue reading)



விளக்கறியா = விளக்கு எங்கு இருக்கிறது, சுவிச் எங்கு இருக்கிறது என்று அறியாத 


இருட்டறையில் = இருண்ட அறையில் 


கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற = கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற 


 குழவியினும் = குழந்தையை விட 


மிகப்பெரிதும் சிறியேன் = ரொம்ப ரொம்ப சிறியவன் 


அளக்கறியாத் = அளவிட முடியாத 


துயர்க்கடலில் = துயரம் என்ற கடலில் 


விழுந்துநெடுங் காலம்  = விழுந்து, நெடுங் காலம் 


அலைந்தலைந்து = அலைந்து அலைந்து 


மெலிந்த = மெலிந்த 


துரும் பதனின் = துரும்பை விட 


மிகத் துரும்பேன் = கீழான துரும்பானேன் 


கிளக்கறியாக்  = சொல்ல முடியாத 


கொடுமை எலாம் = கொடுமைகள் எல்லாம் 


கிளைத்த = விளைந்த 


பழு மரத்தேன் = பழுத்த மரம் போன்றவன் 


கெடுமதியேன் = கெட்ட மதி கொண்டவன் 


கடுமையினேன் = கடுமையானவன் 


கிறிபேசும் = பொய் பேசும் 


வெறியேன் = வெறி கொண்டவன் 


களக்கறியாப் = குற்றம் அற்ற 


புவியிடை = பூமியில் 


நான் ஏன் பிறந்தேன்  = நான் ஏன் பிறந்தேன் 


அந்தோ = ஐயோ 


கருணை = கருணை உள்ள 


நடத் தரசே = நடனத்துக்கு அரசனே (நடராஜன்) 


நின் கருத்தைஅறி யேனே. = உன் கருத்தை நான் அறிய மாட்டேனே 



ஒரு வரி பட்டினத்தாரை மாற்றியது.


ஒரே ஒரு கேள்வி போதும், வாழ்கையின் திசையை மாற்ற.






Monday, October 11, 2021

திருக்குறள் - மகன் தந்தைக்கு செய்யும் உதவி

திருக்குறள் - மகன் தந்தைக்கு செய்யும் உதவி 


இதுவரை பிள்ளைகளை பெறுவதனால் உள்ள பயன், அவர்களால் பெற்றோருக்கு கிடைக்கும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறினார். பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றியும் கூறினார். 


கடைசியில், மகன் தந்தைக்கு செய்யும் கடமை பற்றி கூறுகிறார். 


"தன்னை கல்வி , ஒழுக்கங்களில் உயர்ந்தவனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு என்பது, இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும்படி வாழ்வது" என்கிறார். 



பாடல் 


மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



மகன் = கல்வி ஒழுக்கங்களில் உயர்ந்தவனாகிய மகன் 


தந்தைக்கு = அவ்வாறு உயர வழி செய்த தந்தைக்கு 


ஆற்றும்உதவி = செய்யும் கைம்மாறு 


இவன்தந்தை = இவனுடைய தந்தை 


என்னோற்றான் = என்ன தவம் செய்தானோ 


கொல் = அசைச் சொல் 


எனும் சொல் = என்று ஊரார் சொல்லும் பேச்சு 


இதில் சில விடயங்களை கவனிக்க வேண்டும். 


முதலாவது, பிள்ளை நிறைய சொத்து சேர்பதோ, பெரிய பதவி அடைவதோ கைம்மாறு அல்ல. இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று ஊர் சொல்ல வேண்டும். 


இரண்டாவது, மிக முக்கியமானது, பிள்ளை வளர்ப்பது என்பது நம் கையில் மட்டும் அல்ல.  பெற்றோர்கள் நினைக்கலாம், நம் சாமர்த்தியத்தில் பிள்ளைகளை நன்றாக வளர்த்து விடலாம் என்று. அப்படி அல்ல. முன் செய்த தவத்தால் தான் நல்ல பிள்ளைகள் வருவார்கள். 


"இவன் தந்தை எப்படி வளர்த்தான் எனும் சொல் " என்று சொல்லவில்லை. 


நல்ல பிள்ளைகள் வேண்டும் என்றால் தவம் செய்ய வேண்டும். 


இப்போது செய்தால் அடுத்த பிறவியில் நல்ல பிள்ளைகள் வருவார்கள். 


மூன்றாவது, மகன், தந்தைக்கு ஆற்றும் உதவி என்றுதான் இருக்கிறது. மகள், தாய் எல்லாம் இல்லை.  சிந்திக்க வேண்டிய விடயம்.  பிள்ளைகளை வளர்ப்பது என்பது தந்தையின் கடமை என்று இருந்தது. பிள்ளை எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், தாய் அவனை விட்டுக் கொடுக்க மாட்டாள். என் பிள்ளை அப்படி செய்திருக்க மாட்டான் என்று அவனுக்கு வேண்டித்தான் பேசுவாள். கண்டிப்பு இல்லாத இடத்தில் ஒழுக்கம் நிற்காது. தாய்மை என்பது உணர்ச்சி மிகுந்தது. அது பிள்ளையை அறிவுக் கண் கொண்டு பார்க்காது. 


பெண்கள் பிள்ளைகளை வளர்க்கத் தலைப்பட்டார்கள். தன் பிள்ளை எல்லாவற்றிலும், முதலாவதாக வர வேண்டும் என்று அழுத்தம் தரத் தொடங்கினார்கள். விளையாட்டு, பாட்டு, இசை, நடனம், படிப்பு, என்று எதை எடுத்தாலும் என் பிள்ளை முதலில் வர வேண்டும் என்று தாய்மை விரும்பும். முடியுமா? 


ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


என்கிறது புறநானுறு. 


ஈன்று புறந்தருதல் = பிள்ளையை பெறுவது என்னுடைய தலையாய கடமை 

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடமை 

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்கு கடமை 


அது ஒரு காலம். 





Sunday, October 10, 2021

கந்தர் அநுபூதி - பாடும் பணியே

கந்தர் அநுபூதி - பாடும் பணியே 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். நீண்ட நாளாக அந்த ஊரில் பிச்சை எடுத்து வந்தான். அவன் மேல் பரிதாபப்பட்ட அந்த ஊர் பணக்காரர் ஒருவர், "சரி, இனி மீதி இருக்கும் நாட்களிலாவது அவன் சந்தோஷமாக இருக்கட்டும்" என்று எண்ணி, அவனுக்கு நிறைய பணம் கொடுத்தார்.  நிறைய என்றால் நிறைய. வாழ் நாள் முழுவதும் இருந்து சாப்பிடும் அளவுக்கு. 



சில நாள் கழித்து அவன் எப்படி இருக்கிறான் என்று வந்து பார்த்தார். 


அவர் கொடுத்த பணத்தில் ஒரு நல்ல நாற்காலி, ஒரு குடை, ஒரு செருப்பு, நல்ல பிச்சை பாத்திரம் எல்லாம் வாங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 


 அப்படி சிலர் இருக்கிறார்கள். 


என்ன உயர்ந்த நூல்களைப் படித்தாலும், என்ன சொற்பொழிவு கேட்டாலும், மீண்டும் மனம் பழைய வேலைக்குத்தான் போகும். 


கோடி கொடுத்தாலும், பிச்சைக்காரன் புத்தி பிச்சையில்தான் இருக்கும். 


அது கூடப் பரவாயில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு, நேரம் செலவழித்துப் படிப்பார்கள். தங்களை முன்னேற்றிக் கொள்ள அல்ல, அந்த நூலில் என்ன தவறு கண்டு பிடிக்கலாம்? அதில் என்ன பிழை இருக்கிறது என்று கண்டு சொல்ல. 


அதைக் கண்டு பிடித்து சொல்வதால் அவனுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அதில் ஒரு சந்தோஷம். 



சில அரக்கர்கள் இருந்திருக்கார்கள். நல்லவர்களை, முனிவர்களை, யோகிகளை தேடி கண்டு பிடிப்பார்ர்கள். எதற்கு? அவர்களிடம் இருந்து அறிவைப் பெற அல்ல. அவர்களை கொன்று தின்ன. எங்கே வேள்வி நடக்கிறது, எங்கே நல்ல காரியம் நடக்கிறது என்று தேடிப் போய், அதில் குழப்பம் விழைவிப்பது. 



வேள்வியில் மாமிசம், இரத்தம் இவற்றை கொட்டுவதுதான் வேள்வியை தடை செய்வது என்று நினைக்காதீர்கள். ஒரு நல்ல புத்தகத்தை படித்துவிட்டு அதை பற்றி தவறாக புரிந்து கொள்வதோ, தவறாக பேசுவதோ அதற்கு சமமானதுதான். 



அருணகிரிநாதர் சொல்கிறார் 


" தேடும் கயமா முகனைச் செருவிற் சாடும்"


கயமுகன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் முனிவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களை கொன்று தின்று விடுவான். அந்த அரக்கனை விநாயகப் பெருமான் கொன்றார். 


பாடல் 


ஆடும் பரிவே லணிசே வலெனப்

 பாடும் பணியே பணியா வருள்வாய்

 தேடும் கயமா முகனைச் செருவிற்

 சாடுந் தனியானை சகோதரனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_62.html


(please click the above link to continue reading)



ஆடும் பரி = ஆடி ஆடி நடக்கும் குதிரை 


வேல் = வேல் 


அணி சே வலெனப் = சேவல் என்று அணி வகுத்து நிற்கும் உன்னை 


 பாடும் பணியே = பாடி துதிக்கும் வேலையையே 


 பணியா வருள்வாய் = நான் எப்போதும் செய்யும் பணியாக அருள்வாய் 


 தேடும்= கொன்று தின்பதற்காக முனிவர்களை தேடும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற் =போரில் 


 சாடுந் = சண்டையிட்டு வென்ற 


தனியானை சகோதரனே! = தனித்துவம் மிக்க யானை முகம் கொண்ட விநாயகனின் சகோதரனே, முருகனே 


முருகனுக்கு மயில் தானே வாகனம். குதிரை எங்கிருந்து வந்தது?


குதிரை போல நடக்கும் மயில் என்று பொருள்.


ஆடும் என்ற வார்த்தைக்கு கி.வா.ஜா அற்புதமான விளக்கம் எழுதி இருக்கிறார். 


ஓம் என்பது பிரணவ மந்திரம்.


அது அகர, உகர, மகர சம்மேளனம் என்று சொல்லுவார்கள். 


அதாவது அ + உ + ம் சேர்ந்தால் ஓம் என்ற சப்தம் வரும். 


அ உ ம் என்று திருப்பி திருப்பி வேகமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது ஓம் என்ற ஒலியைத் தரும்.


ஒலி பிறக்கும் இடம் அ 


பிறந்த ஒலியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் உ என்று கூற வேண்டும். 


அ என்றால் அதோடு நின்று விடும். 


உ என்றால் நீட்டிக் கொண்டே போகலாம். 


ம் என்றால் முடிந்து விடும்.


அதாவது பிறப்பு, நிலைத்தல், மறைதல் என்ற முத்தொழிலையும் உள்ளடக்கியது பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். 


ஆடும் என்ற சொல்லைப் பிரித்துப்  பார்ப்போம். 


அ (ஆ என நீண்டது) + 

ட் + உ = டு  +

ம் 


அகர உகர மகர சம்மேளனம் வந்து விட்டது அல்லவா? 


அதை மறை பொருளாகக் கூறினார் என்கிறார் கி. வா. ஜா 


எழுத்து எண்ணிப் படித்தவர்கள். 







திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய்

திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய் 


பெண் விடுதலையாளர்கள் தங்கள் கொடிகளை எடுத்துக் கொள்ளலாம். கொடி பிடிக்கும் நேரம் இது. 


"தன்னுடைய புதல்வனை மற்றவர்கள் சான்றோன் என்று சொல்லக் கேட்டத் தாய், அவனை ஈன்ற பொழுதை விட மிக மகிழ்வாள்" 


என்கிறது அடுத்த குறள். 


அது என்ன தாய்க்கு மட்டும் தனியாக சொல்லுவது? அவளுக்கே தெரியாதா? மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? 


ஆணாதிக்கம். பெண்ணடிமை...என்று கொடி பிடிப்பவர்கள் ஒரு புறம் பிடிக்கட்டும். 


நாம் குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_53.html


(Please click the above link to continue reading)



ஈன்ற பொழுதிற் = பெற்றெடுத்த நேரத்தை விட 


பெரிதுவக்கும் = மிக மகிழும் 


தன்மகனைச் = தன்னுடைய மகனை 


சான்றோன் = சான்றோன் 


எனக்கேட்ட தாய் = என்று சொல்லக் கேட்டத் தாய் 


இதன் ஆழமும், நுணுக்கமும் பரிமேலழகர் இல்லாமல் புரியாது. 


முந்தைய குறளில் 


தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

மன்னுயிர்க்கெலாம் இனிது 


என்று கூறினார். 


மாநிலத்து மன்னுயிரில் தாய் கிடையாதா? சொன்னதையே ஏன் திருப்பி திருப்பிக் கூற வேண்டும்? கூறியது கூறல் குற்றம் இல்லையா?


பரிமேலழகர் விளக்கம் சொல்கிறார். 


"தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது"


என்கிறார். 


எல்லோரும் மகிழ்வார்கள். ஆனால், ஒரு தாயின் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. அவளின் மகிழ்ச்சி அளவிடமுடியாத தனி மகிழ்ச்சி என்பதால் அதற்கென்று ஒரு தனிக் குறள் வைக்கிறார் வள்ளுவர்.  பெண்ணடிமை? 


சொல்லக் கேட்டத் தாய் - "பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். "


ஒரு தாய்க்கு, தன் மகன் என்ன பெரியவன் ஆனாலும் அது தெரியாது. அவளுக்கு அவன் பிள்ளை. அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு. தன் மடியில் படுத்து பால் அருந்திய பிள்ளையாகத் தான் அவன் தெரிவான். மற்றவர்கள் வந்து சொல்லும் போது தான் "அட, இவனா இவ்வளவு பெரியவனாகி விட்டான்...பார்ரா" என்று மகிழ்வாளாம். அவன் என்ன சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் அவளுக்கு அவன் எப்பவுமே "ராசா" தான். மற்றவர்கள் சொல்லும் போது தான் தெரியும், அவன் உண்மையிலேயே 'ராசா" என்று.  அதனால்தான் "கேட்ட தாய்" என்றார்.   ஆணாதிக்கம்? 


"பெரிதுவக்கும்" - சான்றோன் என்று கேட்டால் பெரிதாக மகிழ்வாள். அப்படி என்றால் சாதரணமாக மகிழ்ந்த தருணம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அது எது? அது ஈன்ற பொழுது.  பிள்ளையை பெற்ற அந்தக் கணத்தில் மகிழ்ந்தாள். அவனை சான்றோன் என்று கேட்ட போது அதனினும் மகிழ்ந்தாள் என்கிறார். 


"சான்றோன்" - பிள்ளை கோடீஸ்வரன் ஆகி விட்டான், பட்டம் பெற்று விட்டான் என்பதில் எல்லாம் மகிழ்ச்சி கிடையாது. சான்றோன் என்பது ஒரு மனிதனுக்கு தரும் அதிகபட்ச உயர்வு அடை மொழி. கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்த ஒருவனைத்தான் சான்றோன் என்று உலகம் கூறும். படித்தால் மட்டும் போதாது, பணம் சேர்த்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் வேண்டும்.  நிறைய படித்து, நிறைய பணம் சம்பாதித்து இப்போது உன் மகன் சிறையில் இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் எந்தத் தாய் மகிழ்வாள்? 


"மகனை" என்று இருக்கிறது. மக்களை என்று இல்லை. சான்றோன் என்று இருக்கிறது. சான்றோர் என்றோ சான்றோள் என்றோ இல்லை. என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது கொடி. பிடிக்க வேண்டியதுதான். 


"சான்றோன் எனக் கேட்ட தாய்": சான்றோன் என்று யார் சொல்லக் கேட்டத் தாய்?  யார் வேண்டுமானாலும் சொல்லலாமா? பரிமேலழகர் சொல்கிறார் "தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்" என்று. 


ஏன்? 


ஒருவன் சான்றோனா இல்லையா என்பது அறிவுடையாற்குத் தான் தெரியும் என்பதால்.  


உலகம், தந்தை என்று எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, தாய்க்கு என்று ஒரு தனிக் குறள் வைத்து சிறப்பிக்கிறார் வள்ளுவர். 


தாய் தந்தை என்ற பாகுபாடெல்லாம் மறைந்து வரும் காலம் இது. பெண்கள், ஆண்களாக மாற படாத பாடெல்லாம் படுகிறார்கள். வரும் காலங்களில் மீசை, தாடி எல்லாம் கூட வைத்துக் கொண்டு வருவார்கள் போலத் தெரிகிறது. 


ஏன், நாங்கள் மீசை வைக்கக் கூடாதா? எங்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று கேட்கும் காலம் வரலாம். கூந்தலை குறைத்தாகி விட்டது. மீசையும் வளர்த்து விட்டால் என்ன ஆகி விடும். 


ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை 

சான்றோன் எனக் கேட்ட தாய்