Wednesday, October 13, 2021

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?


சின்னக் கேள்வி. விடை தெரியுமா?


ஏன் பிறந்தோம், எதற்குப் பிறந்தோம், என்ன சாதிக்கப் பிறந்தோம், பிறந்ததின் நோக்கம் என்ன? 


தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை. 


வள்ளலார், விடை காணாமால் தவிக்கிறார். 


எல்லாம் வல்ல இறைவன், ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னைப் படைத்து இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அவன் எதையும் செய்ய மாட்டான். அப்படியானால், என்னை ஏன் படைத்தான் என்று விடை காணாமல் தவிக்கிறார். 


"ஒரு சின்னக் குழந்தை. நடக்கும் பருவம் வரவில்லை. தவழும். திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. அருகில் யாரும் இல்லை. அந்தக் குழந்தை என்ன செய்யும். பயத்தில் அழும். வேறு என்ன செய்ய முடியும்? 


அந்தக் குழந்தையை விட சிறியவனாக இருக்கிறேன். இந்த அஞ்ஞான இருளில் கிடந்து தவிக்கிறேன். இருள் மட்டும் அல்ல, கரை காண முடியாத கடலில் கிடந்து தவிக்கிறேன். ஏதோ இப்ப கப்பல் உடைந்து கடலில் விழவில்லை. பல காலமாய் இந்தக் கடலில் கிடக்கிறேன். கடலில் தவிக்கும் திரும்பு போல கிடக்கிறேன். எத்தனையோ கொடுமைகள் எல்லாம் செய்து விட்டேன். நான் எதற்காகப் பிறந்தேன் என்று சொல்வாய்" என்று இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கிறார். 


பாடல் 


 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்

அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்

கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்

களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_13.html


(Click the above link to continue reading)



விளக்கறியா = விளக்கு எங்கு இருக்கிறது, சுவிச் எங்கு இருக்கிறது என்று அறியாத 


இருட்டறையில் = இருண்ட அறையில் 


கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற = கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற 


 குழவியினும் = குழந்தையை விட 


மிகப்பெரிதும் சிறியேன் = ரொம்ப ரொம்ப சிறியவன் 


அளக்கறியாத் = அளவிட முடியாத 


துயர்க்கடலில் = துயரம் என்ற கடலில் 


விழுந்துநெடுங் காலம்  = விழுந்து, நெடுங் காலம் 


அலைந்தலைந்து = அலைந்து அலைந்து 


மெலிந்த = மெலிந்த 


துரும் பதனின் = துரும்பை விட 


மிகத் துரும்பேன் = கீழான துரும்பானேன் 


கிளக்கறியாக்  = சொல்ல முடியாத 


கொடுமை எலாம் = கொடுமைகள் எல்லாம் 


கிளைத்த = விளைந்த 


பழு மரத்தேன் = பழுத்த மரம் போன்றவன் 


கெடுமதியேன் = கெட்ட மதி கொண்டவன் 


கடுமையினேன் = கடுமையானவன் 


கிறிபேசும் = பொய் பேசும் 


வெறியேன் = வெறி கொண்டவன் 


களக்கறியாப் = குற்றம் அற்ற 


புவியிடை = பூமியில் 


நான் ஏன் பிறந்தேன்  = நான் ஏன் பிறந்தேன் 


அந்தோ = ஐயோ 


கருணை = கருணை உள்ள 


நடத் தரசே = நடனத்துக்கு அரசனே (நடராஜன்) 


நின் கருத்தைஅறி யேனே. = உன் கருத்தை நான் அறிய மாட்டேனே 



ஒரு வரி பட்டினத்தாரை மாற்றியது.


ஒரே ஒரு கேள்வி போதும், வாழ்கையின் திசையை மாற்ற.






2 comments:

  1. அற்புதமான உணர்ச்சியான பாடல். நன்றி.

    ReplyDelete
  2. நாம் எல்லாம் ஒரு இடத்தில் பிறந்து விடுகிறோம். நம் வாழ்வில் எத்தனையோ பலவும் நடக்கின்றன. அவற்றின் நடுவில், நாம் வாழும் வாழ்க்கைக்கு சரியான பாதை எப்படி வகுப்பது? "இறைவனை நினையுங்கள்" என்ற பொருள் சும்மா அர்த்தமில்லாமல் இருப்பதாக எண்ணுகிறேன். அதைவிட "எத்தனைதான் சோதனை வந்தாலும், உனக்குள் இருக்கும் நீதிப்படி நட" என்ற பதில் எத்தனையோ சிறப்பாக இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

    வள்ளலாரின் புலம்பலுக்கும், தேடுதலுக்கு அதுவே பதில். "உன் வாழ்க்கையை நீதியோடு நடத்து" என்பதே பதில். "யாரோ ஒரு சிவன் வந்து பதில் சொல்லப் போவதில்லை" என்பதே உண்மை. (ஏதோ என் சிறிய அறிவிற்குத் தோன்றியது, அவ்வளவே.)

    நன்றி.

    ReplyDelete