Wednesday, January 12, 2022

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல்

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல் 


நமக்கு வந்த சிக்கல்கள் பெரும்பாலானவற்றிற்கு காரணம் நமது பேச்சாக இருக்கும். தவறாக பேசி விடுவது, கோபத்தில் எதாவது பேசி விடுவது, தகாத வார்த்தைகள், பொய், திரித்து கூறுவது, புறம் சொல்லுவது, வெட்டிப் பேச்சு என்று அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம் நாம் சொல்லிய சொலாக இருக்கும். அது மட்டும் அல்ல பேசத் தெரியாமல் பேசி நமக்கு வரவேண்டிய அருமையான வாய்ப்புகளை நாமே கெடுத்து கொண்டிருப்போம். 


அதிகாரிகளிடம், கணவன்/மனைவியிடம், பிள்ளைகளிடம், சில சமயம் நண்பர்கள் மத்தியில், தவறான சொற் பிரயோகங்கள் நம்மை சிக்கலில் ஆழ்த்தி இருக்கும். 


இனிமையாக பேசத் தெரிந்து கொண்டால், வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும். முன்னேற்றம் வரும். வாய்புகள் நம்மைத் தேடி வரும். உறவுகள் பலப்படும். 


இனிமையாக பேசுவது என்றால் என்ன? எல்லோரிடமும் பல்லைக் காண்பிப்பதா? எல்லோர் சொல்ல்வதற்கும் ஆமாம் சாமி போடுவதா? உண்மையை மறைத்து பூசி மெழுகுவதா?


இல்லை. 


இனிமையாக பேசுவது என்பது ஒரு கலை. 


அதை வள்ளுவர் கற்றுத் தருகிறார். 


மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய, வாழ்வில் கடை பிடிக் வேண்டிய அதிகாரம். 



பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_12.html

(Please click the above link to continue reading)


இன்சொலால் = இன்சொல் + ஆல் = இனிய சொல் என்பது. (ஆல் என்பது அசை நிலை) 


ஈரம்   = அன்பு  


அளைஇப் = கலந்து 


படிறிலவாம் = வஞ்சனை இல்லாத 


செம்பொருள் = செம்மையான பொருளைக் 


கண்டார்வாய்ச் சொல் = கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொற்கள் 


மிக ஆழமான குறள். 


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


முதலாவது, நாம் சொல்கின்ற சொற்களில் அன்பு இருக்க வேண்டும். ஒருவர் மேல் அன்பு இல்லாமல் பேசக் கூடாது. அவர் மேல் அன்பு இருந்தாலும், சொல்லில் அன்பு இருக்க வேண்டும். அன்போடு பேச வேண்டும். 


நம்மிடம் உள்ள குறை என்ன என்றால், அன்பு இருக்கும், ஆனால் அது சொல்லில் வராது. உதாரணமாக, பிள்ளை மேல் அளவு கடந்த அன்பு இருக்கும். ஆனால், "எருமை, படிக்காம ஊர் சுத்திக் கொண்டு இருந்தால் நீ மாடு மேய்க்கத் தான் போற" என்று சொல்லுவோம். மனதில் அன்பு இருக்கும். சொல்லில் இல்லை. எனவே, அது இனிய சொல் இல்லை. 


வீட்டில் பெரும்பாலான ஆண்கள் சொல்வது, "நான் யாருக்காக உழைக்கிறேன். இந்த குடும்பதுக்காகத்தானே உழைக்கிறேன். ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்பது. அவர்கள் நினைப்பது, கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தால் அது அன்பின் வெளிப்பாடு என்பது. 


போதாது. அன்பு என்பது சொல்லில் வர வேண்டும். மனைவிடம், குழந்தையிடம் அன்பாக பேச வேண்டும். மனைவிக்கும் தான். கணவனிடம் அன்பாக பேசி பழக வேண்டும். 


இரண்டாவது, படிறு இலவாம். சொல்லில் வஞ்சனை இருக்கக் கூடாது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது. அதற்காக மனதில் உள்ள வெறுப்பை சொல்லில் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது. மனதில் அன்பு இருக்க வேண்டும். அது சொல்லில் வெளிப்பட வேண்டும். 


"செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்". இது மிக முக்கியம். எது செம்மையான பொருள்? உயர்ந்த பொருள்கள். இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் பொருள்கள். அதை எப்படி அறிந்து கொள்வது. பரிமேலழகர் உரை செய்யும் போது கூறுவார் "அறநெறி கண் நிற்பவர்களுக்கு மனதில் தோன்றுவது எல்லாமே செம்பொருள் " என்று.  அதாவது, எப்போதும் அறநெறியை கடைப் பிடித்தால், செம்பொருள் காண முடியும். அப்படி செம்பொருளை கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொல் இனிய சொல். 


எனவே, நாம் இனிய சொல்லை பேச வேண்டும் என்றால் முதலில் அறநெறியில் நாம் நிற்க வேண்டும். செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்றால் இனிய சொல் எப்படி வரும். அப்படியே வந்தாலும், அதில் வஞ்சனை கலந்து இருக்கும். அற நெறியில் நின்றால் வஞ்சன தானே போய் விடும். பின், சொல்லில் அன்பு கலந்தால் போதும். 


அது "வாய்ச் சொல்". சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. மூக்கில் இருந்தா வரும். "செம்பொருள் கண்டார் சொல்" என்று சொல்லி இருக்கலாமே?


நமது வாயில் இனிய சொல்லும் வரலாம், இனிமை இல்லாத சொல்லும் வரலாம். ஆனால், செம்பொருள் கண்டவர்கள் வாயில் இருந்து தீச் சொல் வராது என்பதால் "வாய்ச் சொல்" என்று கூறினார் என்று பரிமேலழகர் உரை செய்வார். 


"தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு."


இனிய சொல் என்றால் என்பதற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர். 


அன்பு கலந்து 

வஞ்சனை இல்லாமல் 

அறநெறி நிற்பவர்கள் 


வாய்ச் சொல்லே இனிய சொல் என்று. 


அப்படி என்றால் நாம் பேசுவது எவ்வளவு இனிமை என்று நாம் அறிந்து கொள்ளலாம். 


இனிய சொல் பேசுவது என்பது ஒரு தவம். 


பயில வேண்டும். 



Monday, January 10, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர் 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்ப்போம்.


நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதுவரை என்ன செய்தோம்?


அதே சாப்பாடு, அதே தூக்கம், அதே வேலை, அதே அரட்டை, அதே உறவுகள், அதே உடை...


அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ புதிதாக வரலாம்...நாளடைவில் அதுவும் பழசாகி விடும். இதில் ஒரு அலுப்பு வரவில்லை நமக்கு. 


ஒரு தளர்ச்சி வரவில்லை. 


ஏன் இதை திருப்பி திருப்பி செய்து கொண்டிருக்கிறோம்? என்ன சாதிக்கப் போகிறோம்? என்ன கிடைத்தது இதுவரை. 


நமக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ புதிதாக இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக யோசித்தால் தெரியும், ஒரு புதுமையும் இல்லை என்று. நாம் யோசிப்பது இல்லை. 


மறந்து விடுகிறோம். 


மணிவாசகர் இன்னும் ஆழமாக யோசிக்கிறார். நேற்று, போன மாதம், போன வருடம் என்று இல்லாமல், இப்படி பிறந்து, வளர்ந்து, இறந்து, பிறந்து என்று போய்க் கொண்டே இருக்கிறதே, இதற்கு ஒரு முடிவு, எல்லை இல்லையா என்று தளர்கிறார். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார். 


"தளர்ந்தேன் என்னை தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார். என்னால் முடியவில்லை, என்னைக் தூக்கிக் கொள் என்று குழந்தை தாயயைப் பார்த்து கெஞ்சுவதைப் போல, கெஞ்சுவார். 


சரி, இதை விட்டு விட்டு என்ன செய்வது? எப்படி செய்வது? நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த சாப்பாடு, தூக்கம், அரட்டை, டிவி, கை பேசி, இவ்வளவு தான். வேறு என்ன செய்வது?


அதையும் அவரே சொல்கிறார் ....


"புலன்கள் பின்னால் போவதை விடுங்கள். இறைவன் திருவடியை நினையுங்கள். யார் என்ன சொன்னாலும், சிரித்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கு உதவி செய்ய இறைவன் காத்துக் கிடக்கிறான். அவன் திருவடியை நினைந்தால் நம் தளர்ச்சி எல்லாம் நீங்கும்" என்கிறார். 


இறைவன் நமக்கு உதவி செய்ய வருகிறானாம். அப்போது மற்றவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து கேலி செய்கிறார்களாம். "அவனுக்கு போயா உதவி செய்யப் போகிறாய்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன், அவனுக்கு உதவி செய்வதும் ஒண்ணு தான் உதவி செய்யாமல் இருப்பதும் ஒண்ணு தான்..." என்று இறைவனை கேலி செய்வார்களாம். இருந்தும், அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல், அவன் நமக்கு உதவி செய்ய வருகிறான் என்கிறார். 


பாடல் 



புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட

தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_10.html


(click the above link to continue reading)


புகவே வேண்டா = நுழைய வேண்டாம் 


புலன்களில்நீர் = நீங்கள் புலன்கள் செல்லும் வழியில் 


புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த பெருமாள் 


பூங்கழல்கள் = திருவடிகளை 


மிகவே நினைமின் = எப்போதும் நினையுங்கள் 


மிக்கவெல்லாம் வேண்டா = மத்தது எல்லாம் வேண்டாம் 


போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள் 


நகவே = பிறர் நகை செய்ய, கேலி செய்ய 


ஞாலத் துள்புகுந்து = தன் இருப்பிடம் விட்டு, இந்த உலகத்துள் வந்து 


நாயே அனைய= நாய் போன்ற 


நமையாண்ட = நம்மை, ஆட்கொண்ட 


தகவே உடையான் = பெருமை உடையவன் 


தனைச்சாரத் = அவனை சார்ந்து இருக்க 


தளரா திருப்பார் = தளர்ச்சி இல்லாமல் இருப்பார்கள் 


தாந்தாமே. = அவரவர்கள் 


ஆழ்ந்து யோசித்தால் நாம் செய்யும் அர்த்தமற்ற காரியங்கள் புரியும். 


என்னதான் சொன்னாலும், "என் பிள்ளையை நான் எப்படி விட முடியும்?  என் கணவனை/மனைவியை/பெற்றோரை" என்று ஏதோ ஒன்றில் பிடிப்பு அதிகம் இருக்கும். அதை விடுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார் 


"மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்"


இறைவனைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். அவை எல்லாம் உங்களை விட்டுப் போக துடித்துக் கொண்டு இருக்கின்றன. நீங்கள் தான் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விட்டால் அவை போய் விடும். அவை உங்களை பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் தான் அவற்றை பிடித்துக் கொண்டு இருகிறீர்கள். 


போக விடுங்கள். அவை போய் விடும். 


அது உங்களுக்கும் நல்லது, அவற்றிற்கும் நல்லது. 


சிந்திப்போம். 




Saturday, January 8, 2022

திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம்

 திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம் 


அனிச்சம் மலர் என்று ஒரு மலர் இருந்ததாம். அந்த மலரை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தால் வாடிவிடுமாம். அவ்வளவு மென்மையான மலர். மூச்சு சூடு பட்டாலே வாடி விடும் மென்மை கொண்டது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"விருந்தினர்கள் அனிச்சம் மலரினும் மென்மையானவர்கள். அனிச்ச மலராவாது முகர்ந்தால் தான் வாடும். விருந்தினர்களோ, முகம் மாறு பட்டு நோக்கினாலே வாடி விடுவார்கள்" என்கிறார்.


பாடல் 


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_8.html


(please click the above link to continue reading)


மோப்பக் =முகர்ந்து பார்த்தால் 


குழையும் = வாடும் 


அனிச்சம் = அனிச்சம் மலர் 


முகந்திரிந்து = முகம் மாறுபட்டு 


நோக்கக் = பார்த்தால் 


குழையும் விருந்து. = விருந்தினர் வாடி விடுவர் 


இதற்கு பரிமேலழகர் உரை மெய் சிலிர்க்க வைக்கக் கூடியது. 


இந்தக் குறளுக்கு இதற்கு மேல் என்ன இருக்க முடியும் என்று நாம் நினைக்க முடியும். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


அது அவர் செய்த உரை. சற்று இறுக்கமான உரை. 


பிரித்துப் படிப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர்": ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர். அனிச்சம் மலரின் மென்மையை அனிச்சம் என்று கூறினார். எனவே அது ஆகு பெயர். அனிச்சம் என்பது மென்மைக்கு ஆகி வந்தது. 


விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறார். 


முதலில் அவர்கள் தூரத்தில் வரும் போதே இன் முகம் காட்ட வேண்டும். எனவே தான் "முகம் திரிந்து நோக்க" என்றார். விருந்தினரைக் கண்டவுடன் நம் முகம் மலர வேண்டும். அவர்கள் வருவது நமக்கு மகிழ்ச்சி என்று முகத்தில் காட்ட வேண்டும். இல்லை என்றால், தூரத்தில் இருந்து அப்படியே போய் விடுவார்கள். 


அதைத்தான் 


"சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும்" என்றார். சேய்மை என்றால் தூரம் என்று பொருள். அண்மைக்கு எதிர்பதம். 


அடுத்தது, விருந்தினர் அருகில் வருகிறார். நாம் பேசுவது, சொல்வது அவருக்கு கேட்கும். அப்போது இன்சொல் சொல்லி வரவேற்க வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், "


நண்ணுதல் என்றால் அருகில் வருதல். அருகில் வரும்போது இன் சொல் கூற வேண்டும். 


சரி, அருகில் வந்து விட்டார். வீட்டுக்குள் வந்து விட்டார். அப்புறம் என்ன செய்வது?


அவர்கள் மனம் மகிழும்படி செயல்கள் செய்ய வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும்": நன்றாற்றல் என்பது ஒரு செயல்.நல்ல செயல். 


இன்முகம் காட்டி, இனிய சொல் கூறி, இனியவை செய்து விருந்தினரை உபசரிக்க  வேண்டும். 


இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளில் இன்முகம் காட்டுவது பற்றி கூறியிருக்கிறார். 


அப்படி என்றால் அடுத்த அதிகாரம் என்னவாக இருக்கும்?


"இனியவை கூறல்"


எப்படி அதிகாரம் ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து வருகிறது. ஆச்சரியமான விடயம். இப்படி கூட ஒரு மனிதனால் யோசித்து எழுத முடியுமா என்று. 


பரிமேலழகர் அதை எடுத்துச் சொல்கிறார் 


"விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


முதற்கண் இன்முகம் கூறப்பட்டது என்பதால் இனி இன்சொல்லும், இனிய செயலும் வரப் போகிறது என்று நாம் அறிந்து கொள்ளாலாம். 


இதற்கு மேலும் இதை தெளிவாக கூற முடியுமா? இதற்கு வெளியில் விருந்தோம்பல் பற்றி என்ன இருக்க முடியும்? 


வள்ளுவம் என்ற பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. 


இதை எல்லாம் படிக்க என்ன புண்ணியம் செய்தோமோ....






Sunday, January 2, 2022

திருக்குறள் - உடைமையுள் இன்மை

திருக்குறள் - உடைமையுள் இன்மை 


சிலர் தாங்கள் செய்யாதவற்றை, செய்ய முடியாதவற்றை "அதில் எல்லாம் ஒன்றும் இல்லை, அதில் என்ன இருக்கிறது, அது எல்லாம் வெட்டி வேலை" என்று அதை இகழ்ந்து அதை செய்யாமல் இருபதற்கு காரணம் சொல்லி விடுவார்கள். 


தாங்கள் செய்யாதது மட்டும் அல்ல, செய்பவர்களையும் இகழ்வார்கள். 


உதாரணமாக, எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை என்றால் "...ஆங்கிலம் என்ன பெரிய மொழியா? ஆங்கிலம் படித்தவன் எல்லாம் மேதையா? தமிழில் இல்லாதது ஆங்கிலத்தில் என்ன இருக்கிறது? ஆங்கிலம் ஒரு சரியான இலக்கணம் இல்லாத மொழி" என்று அதைப் பற்றி ஏளனம் செய்து விட்டு ஏதோ நான் ஒரு பெரிய மேதாவி போல் காட்டிக் கொள்வது. 


விருந்தோம்பல் பற்றி கூறினால், "விருந்தோம்பல் எல்லாம் வெட்டி வேலை, காசுக்கு பிடித்த கிரயம், இந்த விருந்தாளிகளால் ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை, விருந்தோம்பலில் நேரமும் பணமும் தான் விரயம் ஆகிறது "  என்று தான் செய்யாமல் இருப்பதற்கு ஞாயம் கற்பிப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "...எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது இல்லாத மாதிரிதான். எப்போது என்றால் அது விருந்தோம்பலை செய்யாமல் இருக்கும் மடத்தனத்தால். அந்த மடத்தனம் அறிவுள்ளவர்களிடம் இருக்காது" என்கிறார். 


பாடல் 


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post.html


(please click the above link to continue reading)


உடைமையுள் = செல்வம் உடமையில் 


இன்மை  = இல்லாமல் இருந்தல் 


விருந்தோம்பல் ஓம்பா மடமை  = விருந்தோம்பலை செய்யாத மடத்தனம் 


மடவார்கண் உண்டு. = அது மடையர்களிடம் இருக்கும் என்கிறார்.


"உடைமையுள் இன்மை" என்றால் என்ன? 


இருக்கு, ஆனால் இல்லை. செல்வம் இருந்தால் அதை அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதன் பயனை நுகரத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் அது இருந்து என்ன பலன். செல்வம் இல்லாதவனும் அனுபவிப்பது இல்லை, இருப்பவனும் அனுபவிப்பது இல்லை என்றால் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 


அதற்காக இருக்கும் பணத்தை எல்லாம் நித்தம் ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பார்ட்டி என்று விரயம் செய்யத் தேவை இல்லை. விருந்தோம்பல் என்பது நம் செல்வதை வெளிச்சம் போட்டு காண்பிக்க அல்ல. நம் அன்பை வெளிப்படுத்த. 









Thursday, December 30, 2021

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்


செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என்ற மூன்றையும் திறம்பட செய்பவர்கள் வெகு சிலரேhi.


சிலர் பணம் சம்பாதிப்பதில் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அதை சரிவர பாதுக்காக, முதலீடு செய்து அதை விருத்தி செய்ய, நல்ல வழியில் செலவழிக்க...அதெல்லாம் தெரியாது.


சிலர் நன்றாக செலவழிப்பார்கள். சில சமயம் கடன் வாங்கிக் கூட செலவழிப்பார்கள். செல்வம் சேர்க்க, முதலீடு செய்யத் தெரியாது. 


அதெல்லாம் சரி, 


வள்ளுவர் சொல்கிறார், " பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து, அதை மேலும் துன்பப்பட்டு காவல் செய்து பின்னால் எனக்கு யாரும் துணை இல்லை என்று வருந்துவார்கள். யார் வருந்துவார்கள்? பணத்தை விருந்தோம்பலில் செல்வழிக்காதவவ்ர்கள்" என்று.


பாடல் 


 பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_30.html


(Please click the above link to continue reading)



பரிந்தோம்பிப்  = வருந்தி, பாதுகாத்து 


பற்றற்றெம் = துணை இல்லை 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


விருந்தோம்பி = விருந்தைப் போற்றி 


வேள்வி தலைப்படா தார் = விருந்து என்ற அந்த வேள்வியை செய்யாதவர்கள். 


பணம் இருக்கும் போது நண்பர்களையும், சுற்றத்தையும் அழைத்து, அவர்களோடு ஒன்றாகக் கலந்து, அளவளாவி, உண்டு மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள், இருக்கின்ற பணத்தை எல்லாம் எதெதிலோ முதலீடு செய்து, இறக்கும் தருவாயில், அல்லது இறுதிக் காலத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து வருந்துவார்கள். 


பணம் இருக்கும் போது சுற்றமும் நட்பும் சூழ வாழாவிட்டால், இறுதிக் காலத்தில் யார் கூட இருப்பார்கள்? 


விருந்தோம்பலில் ஒரு சுயநலமும் இருக்கிறது. 




Wednesday, December 22, 2021

திருக்குறள் - வேள்விப் பயன்

 திருக்குறள் - வேள்விப் பயன் 


விருந்தைப் போற்றுவதால் இம்மை மறுமை பயன்கள் பற்றி கூறினார். 


பயன் என்றால் எவ்வளவு என்று சொல்ல வேண்டும் அல்லவா. சம்பளம் தருகிறேன் என்றால் எவ்வளவு சம்பளம் என்று சொல்ல வேண்டும் அல்லவா? 


வள்ளுவர் சொல்கிறார், "விருந்தின் பயன் இவ்வளவு என்று அறுதி இட்டு கூற முடியாது. அது சொல்லில் அடங்காத அளவுக்கு பெரியது" என்கிறார்.


பொதுவாக வள்ளுவர் பெரியது என்றால் மலை போன்றது, கடல் போன்றது, பனை போன்றது என்று கூறுவார். விருந்தின் பயன் என்பது இவ்வளவு என்று கூற முடியாது, மிகப் பெரியது, அதற்கு ஒரு உதாரணம் கூட சொல்ல முடியாது என்கிறார். 


பாடல் 




இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_22.html


(Please click the above link to continue reading)


இனைத் = இன்ன, இவ்வளவு 


துணைத்து = அளவுடையது 


என்பது ஒன்று இல்லை = என்று சொல்லும் அளவுக்கு ஒன்று இல்லை. உதாரணம் சொல்ல ஒன்றும் இல்லை 


விருந்தின் = விருந்தைப் பேணுவதின் 


துணைத்துணை = உதவிய அளவு 


வேள்விப் பயன் = வேள்வியின் பயன் 


நமக்கு பொதுவாக வேள்வி என்றால் ஏதோ பூஜை சம்பந்தப் பட்டது என்றுதான் தெரியும்.  


ஐந்து விதமான வேள்விகள் இருக்கின்றன. 

கடவுள் வேள்வி, 

பிரம வேள்வி, 

பூதவேள்வி, 

மானிட வேள்வி, 

தென்புலத்தார் வேள்வி


வேள்வி என்றால் இன்னொரு உயிருக்கு பலன் தருவது. 


கடவுள் வேள்வி - இறைவனுக்கு செய்வது 


பிரம வேள்வி - வேதம் முதலிய அறிவு பொக்கிஷங்களை நமக்குத் தந்த ரிஷிகள், பெரியவர்களுக்கு செய்யும் நன்றி. வள்ளுவருக்கு நீங்கள் ஒரு பூ போட்டால் அது பிரம வேள்வி. 


பூத வேள்வி - பஞ்ச பூதங்களுக்கு செய்யும் வேள்வி. நீர், ஆகாயம், தீ போன்ற பூதங்களுக்கு நன்றி சொல்வது. அவற்றின் உதவியை நாடுவது. அவற்றின் மூலம் தீங்கு வரமால் இருக்க பிரார்த்தனை செய்வது. இரண்டு மூணு வருடம் மழை என்றால் எவ்வளவு பூஜை செய்கிறார்கள்?  பக்கத்து ஊரில் நில நடுக்கம் வந்தால் "ஆண்டவா, என் பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது" என்று  பிரார்த்தனை செய்வது பூத வேள்வி. 


மானிட வேள்வி - மனிதர்களுக்கு செய்வது. 


தென் புலத்தார் வேள்வி - நம் முன்னோர்களுக்கு செய்வது. 


விருந்தோம்பல் என்பது மனித வேள்வி. அந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று உதாரணம் கூற முடியாது என்கிறார். 




Sunday, December 19, 2021

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி 


சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விரும்பாதார் யார்? அல்லது நரகத்துக்கு போக வேண்டும் என்று விரும்புவர் யார்? 


இதை எல்லாம் நம்பாதவர்களை விட்டு விடுவோம். நம்புபவர்களைப் பற்றி பேசுவோம். 


எப்படி சொர்க்கம் போவது?


நிறைய சாமி கும்பிடணுமா? கோயில், குளம் னு திரியனுமா? பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்யனுமா? இருக்கிற ஆன்மீக புத்தகம் எல்லாம் படிக்கணுமா?  எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு. அது போதுமா? 


"நீ செஞ்ச புண்ணியத்துக்கு ஒரு அஞ்சு ஆறு வருஷம் சொர்கக்த்தில இருந்திட்டு போ" ன்னு சொல்லிட்டா என்ன பண்றது? திருப்பியும் வந்து பிறக்கனுமா? 


சரி, எப்படியோ தத்தி முத்தி போய் விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மை அங்கே ஏற்றுக் கொள்வார்களா? நம்மை விட பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அங்கே இருப்பார்கள். நம்மை யார் மதிக்கப் போகிறார்கள். 


பெரிய ஞானிகள், சமூக சேவகர்கள், நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள், பிறர் துன்பம் தீர்த்தவர்கள் என்று எவ்வளவோ பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். நாம் ஒரு மூலையில் போய் இருந்து கொள்ள வேண்டியது தான். 


அது தேவையா நமக்கு? 


வள்ளுவர் சொல்கிறார், சொர்கத்திற்கு போகும் வழி மட்டும் அல்ல. அங்கே போகும் போது தேவர்கள் எல்லாம் சொர்கத்தின் வாசலில் நின்று நம்மை வரவேற்கவும் செய்வார்கள். அதுக்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார். 


மிக மிக எளிமையான வழி. 


"வீட்டுக்கு வந்து பின் செல்கின்ற விருந்தினர்களை போற்றி வழி அனுப்பிவிட்டு, அடுத்த விருந்தினர் எப்போது வருவார் என்று எதிர் பார்த்து காத்திருப்பவன் சொர்க்கம் கட்டாயம் போவது மட்டும் அல்ல, அவன் போகும் போது அவனை அங்குள்ள தேவர்கள் ஒரு விருந்தினனை போல வரவேற்பார்கள்" என்கிறார். 


பாடல் 


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_19.html


(Please click the above link to continue reading)



செல்விருந்து ஓம்பி = செல்கின்ற விருந்தை போற்றி வழி அனுப்பிவிட்டு 


வருவிருந்து = இனி அடுத்து எப்போது விருந்து வரும் என்று 


பார்த்திருப்பான் = காத்து இருப்பவன் 


நல்விருந்து = நல்ல விருந்தினன் ஆவான் 


வானத் தவர்க்கு = தேவர்களுக்கு 


"நல் விருந்து" என்றால் மிக முக்கியமான விருந்தினர் என்று பொருள். நம் வீட்டுக்கு இந்த நாட்டின் பிரதமர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம், அது "நல் விருந்து".  அது போல சென்ற விருந்தை போற்றி, வரும் விருந்துக்காக காத்திருப்பவன், வானில் உள்ள தேவர்களுக்கு "நல் விருந்து". 


காத்து கிடப்பார்களாம். ஒரு பிரதம மந்திரி வருகிறார் என்றால் வீட்டை எப்படி அலங்கரிப்போம். எப்படி பரபரப்பாக இருக்கும்.  அது போல நாம் வருவதை எதிர் பார்த்து அவர்கள் இருப்பார்களாம்.


எவ்வளவு எளிமையான வழி. 


இது விருந்தின் மறுமைப் பயன் பற்றி கூறியது. 


வள்ளுவர் எதைக் கூறினாலும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறுவார். 


முந்தைய குறள்களில் இம்மைப் பயன் பற்றி கூறினார்.


இந்தக் குறளில் மறுமை பயன் பற்றிக் கூறுகிறார். 


விருந்து அவ்வளவு உயர்ந்தது.