Sunday, January 2, 2022

திருக்குறள் - உடைமையுள் இன்மை

திருக்குறள் - உடைமையுள் இன்மை 


சிலர் தாங்கள் செய்யாதவற்றை, செய்ய முடியாதவற்றை "அதில் எல்லாம் ஒன்றும் இல்லை, அதில் என்ன இருக்கிறது, அது எல்லாம் வெட்டி வேலை" என்று அதை இகழ்ந்து அதை செய்யாமல் இருபதற்கு காரணம் சொல்லி விடுவார்கள். 


தாங்கள் செய்யாதது மட்டும் அல்ல, செய்பவர்களையும் இகழ்வார்கள். 


உதாரணமாக, எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை என்றால் "...ஆங்கிலம் என்ன பெரிய மொழியா? ஆங்கிலம் படித்தவன் எல்லாம் மேதையா? தமிழில் இல்லாதது ஆங்கிலத்தில் என்ன இருக்கிறது? ஆங்கிலம் ஒரு சரியான இலக்கணம் இல்லாத மொழி" என்று அதைப் பற்றி ஏளனம் செய்து விட்டு ஏதோ நான் ஒரு பெரிய மேதாவி போல் காட்டிக் கொள்வது. 


விருந்தோம்பல் பற்றி கூறினால், "விருந்தோம்பல் எல்லாம் வெட்டி வேலை, காசுக்கு பிடித்த கிரயம், இந்த விருந்தாளிகளால் ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை, விருந்தோம்பலில் நேரமும் பணமும் தான் விரயம் ஆகிறது "  என்று தான் செய்யாமல் இருப்பதற்கு ஞாயம் கற்பிப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "...எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது இல்லாத மாதிரிதான். எப்போது என்றால் அது விருந்தோம்பலை செய்யாமல் இருக்கும் மடத்தனத்தால். அந்த மடத்தனம் அறிவுள்ளவர்களிடம் இருக்காது" என்கிறார். 


பாடல் 


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post.html


(please click the above link to continue reading)


உடைமையுள் = செல்வம் உடமையில் 


இன்மை  = இல்லாமல் இருந்தல் 


விருந்தோம்பல் ஓம்பா மடமை  = விருந்தோம்பலை செய்யாத மடத்தனம் 


மடவார்கண் உண்டு. = அது மடையர்களிடம் இருக்கும் என்கிறார்.


"உடைமையுள் இன்மை" என்றால் என்ன? 


இருக்கு, ஆனால் இல்லை. செல்வம் இருந்தால் அதை அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதன் பயனை நுகரத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் அது இருந்து என்ன பலன். செல்வம் இல்லாதவனும் அனுபவிப்பது இல்லை, இருப்பவனும் அனுபவிப்பது இல்லை என்றால் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 


அதற்காக இருக்கும் பணத்தை எல்லாம் நித்தம் ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பார்ட்டி என்று விரயம் செய்யத் தேவை இல்லை. விருந்தோம்பல் என்பது நம் செல்வதை வெளிச்சம் போட்டு காண்பிக்க அல்ல. நம் அன்பை வெளிப்படுத்த. 









2 comments:

  1. உண்மை, நன்றி

    ReplyDelete
  2. Very nice briefing on extending Hospitality as conceived by Deiva Pulavar Thiruvalluvar.
    Thanks & Good Luck.

    ReplyDelete