Sunday, January 23, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி 


கணவன்/மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உற்றார், உறவு, நட்பு என்று நாம் பலபேரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் உண்மையா?  இந்த உலகில் நம்மைத் தவிர நமக்கு வேறு எந்த சுற்றமும் கிடையாது. எல்லா உறவும் ஒரு எல்லை வரைதான்.  


பட்டினத்தார் சொன்னது போல, "கொட்டி முழக்கி அழுதிடுவார். மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே". 


ஆற்றில் போட்ட மரக் கட்டைகள் ஆற்று வெள்ளத்தில் சில சமயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு சிறிது தூரம் செல்லும். பின் வெள்ளம் அந்த இரண்டு மரத் துண்டுகளையும் வேறு இடத்துக்கு இழுத்துச் சென்று விடும். 


நாமும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுகிறோம். உறவுகள் வரும், போகும். நம்மைத் தவிர நமக்கு எதுவும் நிரந்தர உறவு அல்ல.


சொல்வது, மணிவாசகர். 


உறவு மட்டும் அல்ல. நாம் சேர்த்து வைத்த பொருளும் நமது அல்ல. நாம் நினைத்தாலும் அவற்றை பிடித்து வைக்க முடியாது. அது போகின்ற காலத்தில் போகும். எத்தனை அரசர்கள் எத்தனை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள். எங்கே அந்த அரண்மனைகள் எல்லாம்? அரன் மனைகள் இருக்கிறது. அரண்மனைகள் இல்லை. 


நமக்கு வரும் நன்மை தீமைகள் பிறர் நமக்குச் செய்வது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லை. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் நாமே பொறுப்பு. நாம் செய்த வினை நமக்கு வந்து சேர்கிறது. ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நிகழ்ந்த ஒவ்வொன்றிற்கும் நாமே காரணம் என்று புரியும். 


உறவு வெளியில் இல்லை.பொருள் வெளியில் இல்லை. நன்மை தீமைகள் வெளியில் இருந்து வருவது இல்லை. 


ஆனால், நடைமுறையில் அப்படித் தெரியவில்லையே. என் கணவன்/மனைவி என் மேல் உயிரையே வைத்து இருக்கிறார்/ள். நான் என் கணவன்/மனைவி மேல் உயிரையே வைத்து இருக்கிறேன். பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம்...என்றெல்லாம் தோன்றும். 


காரணம், நமக்கு உண்மை புரியாத மாயை. அது ஒரு பொய்த் தோற்றம். 


பாடல் 


தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_23.html


(please click the above link to continue reading)


தாமே தமக்குச் சுற்றமுந் = ஒருவற்கு சுற்றம், நட்பு எல்லாம் அவரே தான் 


தாமே தமக்கு விதிவகையும் = ஒருவற்கு நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவர் செய்த வினையின் பலனே விதியாக வந்து சேர்கிறது. 


யாமார் = நான் யார்? 


எமதார் = என்னுடையது எது ?


பாசமார் = பாசம் என்றால் என்ன? 


என்ன மாயம் = இவை எல்லாம் என்ன மாயம், மாயை 


இவைபோகக் = இதெல்லாம் போய்  (மாயை விலகி) 


கோமான் = தலைவன் (சிவன்) 


பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும் 


அவன்றன் = அவனுடைய 


குறிப்பே = மனக் குறிப்பை 


குறிக்கொண்டு = குறியாகக் கொண்டு 


போமா றமைமின் = போகும் + ஆறு + அமைமின் = போகின்ற வழியை அறிந்து கொண்டு 


பொய்நீக்கிப் = பொய்யானவற்றை நீக்கி 


புயங்கன் = பாம்பணிந்த கைகளை உடைய 


ஆள்வான் = நம்மை ஆளும் அவன் 


பொன்னடிக்கே. = திருவடிகளுக்கே 



மற்றது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


எது உண்மை, எது பொய் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 


பொய் என்று தெரிந்தால் அதை விட்டு விட வேண்டாமா?


கவரிங் நகையை உண்மையான நகை என்று நினைத்து அதை காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியுமா?


நல்ல நகையை கவரிங் நகை என்று அலட்சியமாக போட்டு விட முடியுமா? 


எது உண்மையான உறவு, எது நம் பொருள், எது பாசம் என்றெல்லாம் அறிய வேண்டும். 


ஞான இருள், மாய இருளை போக்கும். 


அந்த ஞானத்தைத் தேடும் பயணத்தை இன்றே தொடங்க வேண்டும். 


யாத்திரைப் பத்து. 


திருச்சிற்றம்பலம். 




No comments:

Post a Comment