Saturday, January 22, 2022

திருக்குறள் - அறத்தை எப்படி தொடங்குவது?

திருக்குறள் - அறத்தை எப்படி தொடங்குவது?


இரண்டு வழிதான் இருக்கிறது நமக்கு. ஒன்று இல்லறம், மற்றொன்று துறவறம். இரண்டுமே அறம் தான். அறம் அல்லாத வழியே இல்லை. 


அறத்தை எங்கிருந்து தொடங்குவது? எப்படி ஆரம்பிப்பது? 


ஒரு பெரிய செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு பயிற்சி வேண்டும் அல்லவா?  மருத்துவம், பொறியியல், விளையாட்டு, இசை, சமையல் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அதில் சிறப்பாக இருக்க பயிற்சி வேண்டும். பயிற்சி என்றால் முதலில் சில அடிப்படை பாடங்கள் இருக்கும். அ ஆ படிப்பது போல. அடிப்படை சரியாக இருந்தால் அதில் இருந்து மேலும் மேலும் படிப்படியாக முன்னேறலாம்.


அறத்திற்கு எது அடிப்படை? எது தொடக்கம் என்றால், "இனிய சொல்" என்கிறார் வள்ளுவர். 


அது ஒரு எளிமையான தொடக்கம். 


பாடல்  


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனதே அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_22.html


(please click the above link to continue reading)


முகத்தான் = முகம் கண்ட போது, நேரில் பார்த்த போது 


அமர்ந்து = விரும்பி 


இனிது நோக்கி = இனிமையுடன் நோக்கி 


அகத்தானாம் = மனதில் இருந்து 


இன்சொல் = இனிய சொல் சொல்லுவதே 


இனதே அறம் = கண்ணதே அறம், சார்ந்ததே அறம், வழியதே அறம் 


இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.


முதலாவது, முகம் மலர்ச்சியோடு இருக்க வேண்டும். இன் சொல் சொல்கிறேன் பேர்வழி என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொல்லக் கூடாது. "இனிது நோக்கி" என்றார்.


இரண்டாவது, மனதில் இனிமை வேண்டும். சில பேர் இனிக்க இனிக்க பேசுவார்கள். உள்ளுக்குள் எல்லாம் நஞ்சு. அப்படி இருக்கக் கூடாது. மனந்திலும் இனிமை வேண்டும். 


முகம் மலர்ந்து, மனதில் இனிமை கூட்டி, இனிய சொல்லை சொல்ல வேண்டும். 


அறம் என்பது அதுதான், அதன் வழி தான், "இனதே அறம்" என்றார். 


ஏதோ எளிமையான ஒன்று போல் தெரிகிறது. 


முயன்று பாருங்கள். கோபம் காட்டாமல், அதை அடக்கிக் கொண்டு நல்ல சொல் சொல்லுவது அல்ல. மனதில் கோபமே இருக்கக் கூடாது. முடியுமா?


பொறாமை, கோபம், வெறுப்பு, உயர்வு / தாழ்வு மனப்பான்மை இவை எல்லாம் இல்லாமல், மலர்ந்த முகத்தோடு இனிய சொல்லை சொல்ல வேண்டும். 


மன மாசுக்களை நீக்கி, மலர்ந்த முகத்தோடு இனிய சொல் சொல்லிப் பழக வேண்டும். 


இதை மட்டும் செய்தால் போதும். வேறு என்ன அறம் வேண்டும்?


செய்தால் நல்லது தானே? பின் என்ன யோசனை? இன்றே தொடங்க வேண்டியது தானே?




No comments:

Post a Comment