Monday, January 31, 2022

திருக்குறள் - எது அணிகலன் ?

திருக்குறள் - எது அணிகலன் ?


நம்மை அழகு படுத்திக் கொள்ள நாம் உயர்ந்த ஆடைகள், நகைகள் இவற்றை அணிந்து கொள்கிறோம். முடியை திருத்தி, முகத்தில் பலவிதமான பொருள்களை பூசி மெருகு ஏற்றுகிறோம். 


அதெல்லாம் ஒரு அழகா? அதெல்லாம் எவ்வளவு நேரம் நிற்கும்? சில மணி நேரம் நிற்கும் அல்லது மிஞ்சி  மிஞ்சி போனால் சில நாள். 


எவ்வளவுதான் புற அழகை மெருகு ஏற்றினாலும், ஒருவன் பேச்சில், செயலில் அவன் உண்மை அழகு என்ன என்று தெரிந்து விடும். 


வள்ளுவர் சொல்கிறார் " பணிவும், இனிய சொல்லும் தான் ஒருவனுக்கு அழகு. மற்ற அழகு எல்லாம் அழகே அல்ல" என்று. 


பாடல் 


 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_31.html


(please click the above link to continue reading)


பணிவுடையன் = பணிவுடன் இருத்தல் 


இன்சொலன் ஆதல் =இனிய சொற்களை பேசுதல் 


ஒருவற்கு = ஒருவனுக்கு 


அணி = அணிகலன் ஆகும் 


யல்ல = அல்ல 


மற்றுப் பிற = மற்றவைகள் 


இப்படி நேரடி பொருள் கொண்டால் அனர்த்தம் தான் விளையும். எல்லோரிடமும் பணிவாக இருக்க வேண்டுமா? 


பிள்ளைகளிடம், பேரப் பிள்ளைகளிடம், தனக்கு கீழே வேலை பார்பவர்களிடம், அறிவற்ற முதலாளிகளிடம், பதவியில் இருக்கும் மோசமானவர்களிடம் எல்லாம் பணிவாக இருக்க வேண்டுமா? யாரைப் பார்த்தாலும், அவர் என்ன சொன்னாலும் பணிந்து போக வேண்டுமா? 


ஒரு கம்பீரம் வேண்டாமா? ஒரு ஆளுமை வேண்டாமா? ஒரு தன்னம்பிக்கை வேண்டாமா?


பரிமேலழகர் மிகத் துல்லியமாக பொருள் சொல்கிறார். 


"தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய்" என்று.


அதாவது, தன்னை விட உயர்ந்தவர்களிடம், வணங்கத் தக்கவர்களிடம், பெரியவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்கிறார். 


ஆசிரியர், பெற்றோர்,  அறிவில், ஒழுக்கத்தில்  சிறந்த பெரியோர் இவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும். 


பணிவு இவர்களிடம் இருக்க வேண்டும். 


ஆனால், இனிய சொல் பேசுவது எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. 


இந்த அதிகாரம் இன்சொல் பற்றியது. இதில் பணிவுடையன் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? வேண்டும் என்றால் அதற்கு ஒரு அதிகாரம் எழுதிக் கொள்ள வேண்டியது+ தானே?


பரிமேலழகர் சொல்கிறார், " இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார்"


இன் சொல் சொல்வதற்கு பணிவுடைமை என்பது அவசியம். பணிவு இல்லாமல் இனிய சொல் கூற முடியாது என்பதால், வணங்கத்தக்க பெரியவர்களிடம் பணிவோடு கூடிய இன் சொல் சொல்ல வேண்டும் என்கிறார். 


நம்மை விட பெரியவர் ஒருவர் வருகிறார் என்றால் "வாருங்கள், அமருங்கள்" என்று இனிமையாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொல்லக் கூடாது. 


"அணியல்ல" என்று எப்படி கூற முடியும். பணிவும், இன் சொல் இல்லாவிட்டாலும் தங்க நகை, தங்க நகைதானே? பட்டுப் புடவை பட்டுப் புடவைதானே? எப்படி அணி அல்ல என்று கூற முடியும்? 


நகையும், பட்டுப் புடவையும் அழகு தரும்தான் என்றாலும், பணிவும், இன் சொல்லும் போல பேரழகு தராது என்பதால், இதோடு ஒப்பிட்டால் அது அணி அல்ல என்று கூறினார் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


 எழுத்து எண்ணி எழுதி இருக்கிறார்கள். படித்து இருக்கிறார்கள். 


ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தும் மிக கவனமாக சொல்லப் பட்டு இருக்கிறது. 


அப்படி படிக்க வேண்டும். 


1 comment: