Monday, July 10, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_10.html

No comments:

Post a Comment