Thursday, September 24, 2020

திருக்குறள் - மையாத்தி நெஞ்சே

 திருக்குறள் - மையாத்தி நெஞ்சே 


அவளைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது. ஆனால், உடனே பார்க்க முடியாது. 

என்ன செய்வது?

அவள் கண்களை மட்டுமாவது பார்க்க முடியுமா என்று அவன் தவிக்கிறான். 

சரி, அவள் கண்களை பார்க்க முடியாவிட்டால் என்ன, இந்த மலர்களை பார்த்தால் அவள் கண் போலத்தான் அழகாக இருக்கும். அதைப் பார்த்தால் போதாதா என்று ஒரு சோலையில் சென்று அங்குள்ள மலர்களை பார்க்கிறான். 
அப்புறம்தான் தெரிகிறது, அந்த மலர்களும் அவன் கண்ணும் ஒன்றல்ல என்று. 

அழகு என்று பார்த்தால் ஒன்று தான். 

ஆனால், அவள் கண் சொல்லும் செய்தி அவனுக்கு மட்டும் தான் தெரியும். 

இந்த பூவை எல்லோரும் பார்ப்பார்கள். 

என் காதலியின் கண்களை எல்லோரும் பார்த்தாலும், அதில் உள்ள காதலை, அன்பை நான் மட்டும் தான் அறிவேன். 

என்னைக் காணும் போது அவள் கண்கள் மாறும். அது சொல்லும் செய்தி மாறும். மற்றவர்கள் பார்க்கும் போது அது சாதாரணமாக இருக்கும். 

எனவே, என் நெஞ்சே, இந்த மலர்கள் என் காதலியின் கண்களைப் போல இருக்கின்றன என்று   நினைத்து மயங்காதே. அது வேறு, இது வேறு என்று காதலியின்  கண்களை, அதில் மலரும் காதலை சிறப்பித்துக் கூறுகிறான் காதலன். 

பாடல் 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

பொருள் 

(pl click to continue reading)


மலர்காணின் = மலர்களைப் பார்த்து 

மையாத்தி = மயங்காதே 

நெஞ்சே = நெஞ்சே 

இவள்கண் = இவளுடைய கண் 

பலர்காணும்  = பல பேர் காணும் 

பூவொக்கும் என்று = பூவைப் போல இருக்கிறது என்று 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் இரண்டாவது குறள் 


1 comment:

  1. காதலர்க்குத் தெரியும் கண்களின் செய்தி!

    ReplyDelete