Monday, October 3, 2022

திருக்குறள் - நாணுபவர்

  

 திருக்குறள் -  நாணுபவர்


மக்கள் ஏன் தவறு செய்யாமால் இருக்கிறார்கள்?


முதலில், தவறு செய்தால் சட்டம் தண்டிக்கும் என்ற பயம்.  காவலர்கள் பிடித்துச் சென்று விடுவார்கள். சிறையில் போடுவார்கள்.தண்டனை கிடைக்கும் என்ற பயம்.  இது மிக அடிப்படையான ஒன்று. சட்டத்துக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பது. 


இரண்டாவது, நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.  இது தர்மம் அல்ல, அறம் அல்ல. சரி அல்ல என்று நினைத்து தவறான ஒன்றைச் செய்யாமல் இருப்பது. பல சமயங்களில் சட்டம் ஒன்றும் சொல்லாது. ஒரு செயலை தண்டிக்க சட்டப் பிரிவு இருக்காது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்பார்கள். Loophole. அப்படி வழி இருந்தும், தவறு செய்யாமல் இருப்பது.  பழி பாவத்துக்கு அஞ்சி,தெய்வத்துக்கு பயந்து செய்யாமல் இருப்பது.  இது ஒரு படி மேலே.  


உதாரணமாக மாமிசம் உண்பது. மாமிசம் உண்டால் சட்டம் தண்டிக்காது.  இருந்தும், உயிர் கொலை பாவம் என்று எண்ணி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது. இதிலும் ஒரு படி மேலே போய் பால் , தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள்.  கன்றுக் குட்டிக்கு உள்ள பாலை நாம் எடுத்துக் கொண்டால், கன்று என்ன செய்யும் என்று நினைத்து அவற்றை ஒதுக்கி விடுவார்கள். 


இதில் கூட பாவம்,  புண்ணியம். சுவர்க்கம் நரகம் என்ற ஆசை, பயம் எல்லாம் உண்டு. 


இதற்கு மேலே ஒரு படி போய் வள்ளுவர் இன்னொரு பாதையைக் காட்டுகிறார். 


தவறு செய்ய நாணுவது.  வெட்கப் படுவது. 


சட்டம், நீதி, நேர்மை, பழி, பாவம், புண்ணியம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


சிலருக்கு, அறம் அல்லாத செயல்களை செய்ய வெட்கம் வருமாம். 


மனைவியை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது ஒன்றும் சட்ட விரோதம் அல்ல. அதில் பாவம் ஒன்றும் இல்லை. சாத்திரங்களும், தர்மங்களும் அனுமதிக்கிறது. இருந்தும்,  பொது இடத்தில் யாராவது மனைவியை கட்டி அணைத்து முத்தம் தருவார்களா? மாட்டார்கள். ஏன்? நாணம், வெட்கம். 


செய்ய அனுமதித்தாலும், செய்வது குற்றம் அல்ல என்றாலும், செய்ய முடியாது.  


"தனக்கு ஒரு பலன் கிடைக்கிறது என்று எண்ணி, பழி தரும் செயல்களை செய்ய மாட்டார்கள், நடு நிலைமையில் இருந்து விலக நாணம் கொண்டவர்கள்" 


பாடல் 


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


(Please click the above link to continue reading)


படுபயன் = பெரிய பயன், நன்மை 


வெஃகிப் = ஆசைப் பட்டு 


பழிப்படுவ = பழிதரும் செயல்களை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


நடுவன்மை = நடுவு + அன்மை = நடுவு நிலையில் இருந்து  விலகி இருப்பதற்கு 


நாணு பவர் = நாணம் கொள்பவர்கள் 


தொலைக் காட்சியில் பார்க்கிறோம். பெரிய பதவியில் உள்ளவர்களை கைது செய்து அழைத்துக் கொண்டு செல்லும் போது, சிரித்துக் கொண்டே கை அசைக்கிறார்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். 


சாதாரண திருடன் கூட முகத்தை மறைத்துக் கொள்கிறான், துணியால் முகத்தை மூடிக் கொள்கிறான், காமிராவை கையால் மறைக்கிறான், தலை குனிந்து முகம் காட்ட மறுக்கிறான். 


"நான் எப்படி இதைச் செய்வேன்...என்னால் முடியவே முடியாது" என்ற நாணம் வர வேண்டும். 


நாணம் தரும் செயலைச் செய்யும் போது உடல் கூசும், கூனி குறுகிவிடும். 


மாவலி சக்ரவர்த்தியிடம் ஏமாற்றி மூன்று அடி நிலம் யாசகம் கேட்க வந்த போது உலகளந்த பெருமாள் கூட கூனி குறுகி மூன்றடி உள்ள வாமனனாக வந்தார் என்று சொல்லுவார்கள். 


நடுவன்மை அஞ்சுபவர்/வேண்டாதவர்/பழிப்பவர் என்று சொல்லி இருக்கலாம். 


"நாணுபவர்" என்று சொல்கிறார். 


நாணம் என்ற உணர்ச்சி கொஞ்சம் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எதெல்லாம் ஒரு காலத்தில் மறைவாக செய்யக் கூட நாணம் கொண்டார்களோ, அவற்றை எல்லாம் பொது வெளியில் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். கால ஓட்டத்தின் மாற்றங்கள். 


இருந்தும் அந்த உணர்ச்சி முற்றும் மறைந்து விடவில்லை. 


பழிச் செயல் செய்ய நாணம் அடைவது என்பது ஒரு புதிய சிந்தனை. 


சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html

]


1 comment:

  1. Every minute waiting for கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 7

    ReplyDelete