Wednesday, October 19, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குன்ற மெடுத் தானே

        

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   குன்ற மெடுத் தானே


ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் இந்திரன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். கண்ணன் அவர்களிடம் "சிறு தெய்வங்களை வழிபட வேண்டாம், இனி என்னை வழிபடுங்கள்" என்றான். அவர்களும் இந்திர வழிபாட்டை நிறுத்தினார்கள். அதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியின் மேல் பெரு மழை பெய்ய வைத்தான். அப்போது கண்ணன் கோவர்தணகிரி என்ற மலையை குடை போல் பிடித்து அந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காத்தான். 


இது கதை. 



கேட்டிருக்கிறோம். வண்ண ஓவியமாக பார்த்தும் இருக்கிறோம். 



அந்தக் காட்சியை நம்மாழ்வார் போல் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


அவர் காட்டும் அந்த பிரமாண்ட காட்சியைக் காண்போம். 


இப்போது நாம் ஆயர்பாடியில் இருக்கிறோம். 



மழை அடித்து ஊத்துகிறது. நிற்காத மழை. எங்கும் வெள்ளம். மக்கள் தவிக்கிறார்கள். ஒண்ட இடம் இல்லை. குளிர் நடுங்குகிறது. ஆடு மாடுகள் எல்லாம் நீரில் நடுங்குகின்றன. தின்ன புல் பூண்டு இல்லை. முன்பு தின்றதை அசை போடுகின்றன. 



கண்ணன் வருகிறான்.கோவர்தன மலையை தன் கைகளால் தூக்குகிறான். 



மலையை தூக்குவது என்றால் சாதரணமா?


தூக்கும் போது ஒரு பக்கம் உயர்கிறது. மறுபக்கம் தாழ்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கையை உள்ளே தள்ளி மேலும் தூக்குகிறான். மலை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைகிறது. 



அப்போது அந்த மலையில் உள்ள குளங்களில் உள்ள நீர் வழிந்து ஓடுகிறது. மலையை விட்டு கீழே அருவி போல் கொட்டுகிறது. அது மலை நீரை உமிழ்வது போல இருக்கிறது. 


அந்த மலையில் உள்ள விலங்குகள் தட்டு தடுமாறி விழுந்து புரள்கின்றன. 



மலையை தூக்கிய பின், அதன் அடியில் ஆடு மாடுகள் ஓடி வந்து தங்கிக் கொள்கின்றன. 


பின் மக்களும் வந்து அதன் கீழ் நின்று கொள்கிறார்கள்.




பாடல் 




மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.



பொருள் 




(pl click the above link to continue reading)




மேய் நிரை கீழ்புக = ஆடு மாடுகள் கீழே புகுந்து கொள்ள 


மாபுரள  = மலையில் உள்ள விலங்குகள் தட்டுத் தடுமாறி புரண்டு விழ 


சுனை = குளம் 


வாய் நிறை நீர்பிளிறிச் சொரிய = வாயில் நீரை கொண்டு யானை பிளிறி உமிழ்வது போல நீரை அருவி போல் கொட்ட 



இன ஆநிரை  = பசுக்களை மேய்க்கும் இனமான ஆயர்கள் 


பாடியங் கேயொடுங்க  = பாடி அங்கே ஒடுங்க 


அப்பன் = திருமால் 


தீமழை காத்துக் = தீமை தரும் பெருமழையில் இருந்து காக்க 


குன்ற மெடுத் தானே. = குன்றை கையில் எடுத்த்தானே 


வைணவர்கள் "பெருமாளை அனுபவிப்பது" என்பார்கள். 


அப்படி அணு அணுவாக இரசித்து அனுபவிக்கிறார்கள். 


தாங்கள் அனுபவித்ததை பாசுரமாக நமக்கு தந்துவிட்டு போய் இருக்கிறார்கள். 


படித்தால் புரிய வேண்டும். புரிந்த பின் அந்தக் காட்சி மனதில் ஓட வேண்டும். பின், அதை இலயித்து இரசிக்க வேண்டும். 


முடியும் என்றே நினைக்கிறேன். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 




)


No comments:

Post a Comment